Sunday, January 17, 2016

வள்ளுவர் காட்டும் உலகு


-- இரெ. சந்திரமோகன்.முன்னுரை:
உலக  பொதுமறையாம் திருக்குறளில்  ‘உலகம்’ ‘உலகு’  எனும் சொல் பல பொருட்களில் கையாளப்படுவதை பல குறட்பாக்களின் மூலம் அறியலாம். “வையம் போற்ற வாழும் கலை” கற்பிக்கவே தமிழ் மறைகள் தோற்றுவிக்கப் பெற்றுள்ளன. “உலகத்தோடு ஒட்டொழுகல்” வேண்டும் எனில் உலகம் யாது என்று உணர்தல் வேண்டும். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என சேக்கிழார் பெருமான் சிவபிரானின் பெருமையைப் பேசுவார். “உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக” என்ற உணர்வில் வாழ்பவர்கள் நம்பிக்கை ஊட்டுபவர்களாக தலைவர்களாக உருவாகின்றனர். வள்ளுவர் “உலகம் பழிப்பதை ஒழித்துவிடு” என்று கூறுகின்றார். அவரது பல குறட்பாக்களில் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற செய்தியும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற செய்தியும் எங்கும் மிளிர்கின்றது. கம்பனின் உலகம் யாவையும் தாமுளவாக்களும்” என்ற பாடலும் நக்கீரர் தம் திருமுருகாற்றுப்படையை ‘உலகம் உவப்ப ….’ எனத் தொடங்குவதும், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” – என்ற தொல்காப்பியர்கூற்றும்ஒத்த செய்தியைத் தருகின்றன. இவ்வழி “நல்லோர்கள் நிறைந்தது உலகம்” என்பது வள்ளுவரின் கூற்றாக இருப்பதை பல குறட்பாக்கள் மெய்ப்பிக்கின்றன.

“குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்” (504)

எனும் குறட்பாவில் ஒவ்வொரு மனிதனிடமும் “குணமே மிகும்” எனும் செய்தியும் மறைந்திருப்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். இவை வள்ளுவர் காட்டும் உலகு என நாம் தொல்காப்பியம் வழி தீர்மானிக்க வாய்ப்பு இருந்தாலும், அதனினும் நுட்பமான செய்திகளை வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பதை நிறுவ முயற்ச்சிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதற்குறட்பாவில் உலகம்:
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு." (1)

கடவுள் வாழ்த்து முதல் பாடல் மிக ஆழமான கடலை ஒத்த பாடாலாகும். இதனை ஆராய முற்படுகையில்;பாற்கடலைக் கடைந்த கதையே நினைவுக்கு வருகின்றது. இனி இக்குறட்பாவில் கூறப்படும் “உலகு” எனும் சொல் தொல்காப்பியம் காட்டும் ‘உயர்ந்தோர்’ எனும் நோக்கில் இல்லாமல் அண்டத்தின ;பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பேசுவதாகக் கொள்ளலாம்.

‘அகரம்’ என்பது ‘அ’ என்ற எழுத்தின் ஒலி. முதலில் ஒலி எழுப்பின் உயிர்கள். இன்றும் மனிதனைத் தவிர ஏனைய உயிர்கள் ஒலியினாலே தொடர்பு கொள்கின்றன. ஒலிகளின் தலைவன் ‘அகரம்’. ஒலி வடிவத்திற்குப் பின்  ‘வரி வடிவம்’  உருவானது. அது போன்ற இந்த பிரபஞ்சமான உலகும் தோன்றியதற்கான அடிப்படை ஒலியாகும். ஆதியில் தோன்றிய ““Big Bang”” என்ற அதிர்வே உலகம் (பேரண்டம், அண்டம், பால்வெளி, நட்சத்திரங்கள், சூரியன், கிரகங்கள், பூமி, நிலா, வின்கற்கள்) தோன்றுவதற்கு அடிப்படை எனவே எழுத்துகளைப் போன்றே, உலகம் தோன்றுவதற்கும் காரணம் ஒலியே, அதிர்வே, என்றும் பொருள் உணரலாம்.  “அண்டப் பிளக்கத்து உண்டைப் பிறக்கம்”என்ற மணிவாசகர் வாக்கும், திருமூலரின் தமிழ்வேதத்தின்  உட்கிடக்கையான “அகர உகர மகர” உட்சேர்க்கையை ‘ஓம்’ எனும் மந்திர ஒலியாகக் குறிப்பதை ஈண்டு நினைத்துப்பார்க்கலாம்.

கிருத்துவத்திருமுறை  1:1 ன் படி
“Your words create world:
In the beginning was the word and the word was with GOD, and the word was GOD!
இத்திருமறைச் செய்தியைஉற்றுநோக்கின் நம் உலகம் நம் வார்த்தைகளே என்றாகிறது.

எனவே ‘அ’ என்ற எழுத்தைப் போல் எழுத்துக்களும், வார்த்தைகளும் ‘அகரம்’ அடிப்படை. இறைவனே உயிர்களின் தலைவன். இன்சொற்கள் வழியாக இறைவனை அடையலாம் என்றோ இறைவனுக்கு ஒப்பான தலைவன் ஆகலாம் என்பதும் இதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி. எனவே தான் “ தான் போற்றி, கழல் வெல்க, என்று மணிவாசகரும், எண்ணியவர் திண்ணியராகப்பெரின்” என்று உயர் எண்ணத்தால் எதையும் பெறலாம் என்றும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.

முதற்குறட்பாவில் பேர அண்டத்தின் பிளவைப்பாடி  அதன்பின் “நிலமிசை நீடுவாழ்வார்” என்ற குறட்பாவிற்குப்பின் “பூமி”, உயிர்கூட்டம், உயர்ந்தோர், எனும் பொருளில் உலகம் என்ற சொல்லைக் கையாளுகின்றார் என்றும் தெளிவாகிறது.

அகரம் இறைவனுக்கும், உயிர்க்கும் பொது. சொற்களே உலகம் - எனில் சொல்லுக சொல்லில் என்று அதன் பொருளை விரித்து பல குறட்பாக்களைச் செய்துள்ளார்.
“கற்றிலன் ஆயினும் கேட்க”
“சான்றோன் எனக் கேட்டதாய்”
“என்னோற்றான் கொல் எனும் சொல்”

நாகாக்க!
புறங்கூறாமை, வாய்மை, இனியவை கூறல்… போன்ற அதிகாரங்கள் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்….
என்று சொற்கள், கேட்டல் ஆகியவற்றின் உயர்வை விளக்க என்று சொற்கள், கேட்டல் ஆகியவற்றின் உயர்வை விளக்க பல குறட்பாக்களை சமைத்துள்ளார்.

முதற் குறளிலேயே இன்றைய விஞ்ஞான உலகத்தின் அடிப்படைத் தேடலின் விடையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எம் ஐயன் வள்ளுவன் தந்திருக்கின்றான் என்ற செய்தி கரும்பாய் இனிக்கின்றது.

படைக்கப்பட்ட உலகம்:
இனி உலகம் தானாய் தோன்றியதா? படைக்கப்பட்டதா? இந்தக் கேள்வி இன்றும் சர்சைக்குரிய கேள்வி. ““Standard model”” என்ற கொள்கை பேரண்டப் பிளவு வெற்றிடத்திலிருந்து தோன்றியது என்றும், பேரண்டப்பிளவின் சில நுண்துளி வினாக்களில் சமச்சீர்கேடு உருவாகி, அதிலிருந்து கடவுள் துகள், மற்றும் நுண்துகள்கள் உருவாகி, அதனின்று இன்றைய அண்டம், விண்வெளி, பால்வெளி, நமது சூரியகுடும்பம் மற்றும் பூமி, உயிர்கள், தோன்றியது என்றும் நிருவ முயற்சி மேற்கொண்டு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது.

“ஆதிபகவன்” என்ற சொல்லாட்சி மூலம் இறைவன் என்ற சக்தியையே குறிக்கின்றார். “விச்சதன்றியே விளைகு செய்குவான்” என்ற மணிவாசகர் “விண்ணும் மண்ணும் வைத்து வாங்குவான்” என்று சொல்வதைப் போல் “பேரண்ட உலகைப் படைத்தவனே…… உலகையும் படைக்கின்றான்” அகரத்தைத் தலைவனாகக் கொண்டது போல், இறைவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்பவன் நல்லுலகமாகி உயர்ந்த நெறிகளுக்கு வழி வகுக்கின்றான்.

“நெருநர் உளன் ஒருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு”

என்று காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வரும் பெருமை உடையதே இப்பூமி என்று வள்ளுவம் பகர்கின்றது.

முடிவுரை:
“செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகம் ஆற்றல் அரிது”.
என்ற குறட்பா கூறுவது போல் வள்ளுவர் காட்டும் உலகம் பெரும்பான்மையாக மற்றும் வானுலகம் மண்ணுலகமாகும்.

“கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லா உலகு”.  (211)

“இருமை வகை தெரிந்து ஈண்டாரம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு” – (23)

“சுவை ஒளி உறு ஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.” (27)

போன்ற குறட்பாக்களில் மண்ணுலகைச் சுட்டும் குறட்பாக்கள் என்று கொள்ளலாம்.

“பெற்றால் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு.” (58)

என்ற குறட்பா வானுலகைச் சுட்டும் குறட்பா. ஆயின்

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு.” (1)

என்ற குறட்பா குறிப்பிடும் உலகு  எனும் சொல் “பேரண்டமான பிரபஞ்சமாகும்” என்பதும் அதன் உள்ளிடக்கை அறிவதே “கற்றதனால் ஆய பயன்” என்பதே வள்ளுவரின் வாக்கு என்றும் அறிந்து இன்புறுவோம்.

வாழிய திருக்குறள் வாழிய இவ்வுலகு.

___________________________________________________________
இரெ. சந்திரமோகன்
முதல்வர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக்கல்லூரி,
தேவகோட்டை-630303. தமிழ் நாடு, இந்தியா.
___________________________________________________________

இரெ. சந்திரமோகன்
rathinam.chandramohan@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment