-செல்வன்.
பேரா. யூகோ: இதனால் தான் 1990க்கு பிறகு உருவான இயக்கங்கள் தேர்தலை புறக்கணித்தும், மக்களை ஒரு புரட்சிகரமான முறையை கையாண்டும் திரட்ட முற்பட்டனவா?
சன்னா: ஆம். தேர்தலில் என்ன நடக்கிறது என பார்த்தோமானால் தலித்துகளால் தங்களுக்கு உரிய பங்கை பெறமுடியாத சூழலே நிலவுகிறது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று 1932ல் வந்த அரசு உத்தரவால் 1935 முதல் அவர்களால் இரட்டை தொகுதிகளை பெற முடியவில்லை. இரட்டை தொகுதிமுறைக்கு பதில் ரிசர்வ் தொகுதிகளை பெற்றார்கள். இதன் விளைவு என்னவெனில் இத்தொகுதிகளின் பிரதிநிதி தலித்தாக இருக்கவேண்டும் என ஆனாலும், அனைத்து கட்சிகளும் இத்தொகுதிகளில் நிறுத்தும் தலித் வேட்பாளர் கட்சி பிரதிதிநியாக செயல்படுகிறாரே ஒழிய இனப்பிரதிநிதியாக செயல்படுவதில்லை. ஆக தலித்துகளுக்கு கிடைத்த இந்த அரசியல் உரிமை தலித் அல்லாதவருக்கே முதன்மையாக பயன்படும் சூழல் இதனால் உருவாகிறது. இந்த அரசியல்முறை மேல் தலித்துகளுக்கு இருந்த நம்பிக்கையை குறைத்து தலித்களின் வலிமையை வேறு வழிகளில் அதிகரிக்கவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியது. அடிப்படையில் தலித் மக்கள் தேர்தல்களில் தொடர்ந்து மனசோர்வையும், ஏமாற்றத்தையுமே கண்டு வருகிறார்கள். குறிப்பாக இது தலித் இளைஞர்களிடையே எந்த கட்சியும் தங்களுக்கான பிரதிநிதியாக இல்லை என்றும் எக்கட்சியுமே அவர்களின் குரலாக ஒலிக்கவில்லை என்ற எண்ணத்தையுமே மேலோங்க வைத்தது. இந்த சூழலில் தேர்தல் புறக்கணிப்பை விடுதலை சிறுத்தைகள் முன்வைத்தபோது அது பெருத்த உற்சாகத்துடனும், புரட்சியாகவும் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும் கருதப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தேர்தல் புறக்கணிப்பு தமிழகத்தில் இன்றும் கூட ஒரு உணர்ச்சிகரமான விஷயமாகவே தொடர்ந்து வருகிறது.
இரண்டாவது காரணம் ஜாதி ஒடுக்குமுறைகள் ஆகும். 1990ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து பெருமளவில் முக்குலத்தோர் சமுதாயவர்க்கு முன்னுரிமை வழங்கினார். இது தேவர் சமுதாய மக்களிடையே ஆண்ட பரம்பரை என்ற எண்ணத்தையும், தமக்கு தலித்துகளை அடக்கி ஆள உரிமை உண்டு என்ற எண்ணத்தையும் வளர்த்தது. தலித்துகள் இதை ஏற்க மறுத்ததால் பெருமளவில் ஜாதி மோதல்கள் நிகழ்ந்தன. இச்சூழலிலும் ரிசர்வ் தொகுதி தலித் எம்.எல்.ஏக்கள் பேசாமடைந்தைகளாக சட்டசபையில் அமர்ந்திருந்தார்களே அன்றி ஜாதிரீதியான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. தலித் மக்களிடையே, குறிப்பாக தலித் இளைஞர்களிடையே இது பெருத்த மனச்சோர்வை ஏற்படுத்தி தற்போதைய தேர்தல் முறை தங்களை காப்பாற்றாது எனும் எண்ணத்தையுமே உருவாக்கியது. ஆக அவர்கள் இயல்பாகவே தேர்தல் புறக்கணிப்பாலும், தலித் சிறுத்தைகள் முன்வைத்த புரட்சிகர மனப்பான்மையாலும் கவரப்பட்டார்கள். இதுவே இதன் சமூக பின்புலன் ஆகும்
பேரா யூகோ: ஜாதி முறையின் தீய விளைவுகள் இப்போது குறைந்து, சாதி இந்துக்களின் அடக்குமுறைகள் குறைந்துவிட்டனவா?
சன்னா: இல்லை. இது சாத்தியமில்லை. இவ்வடக்குமுறை இன்னமும் உயிருடன் தான் உள்ளது. இப்போதும் தினமும் பல அடக்குமுறைசம்பவங்கள் நிகழ்ந்தவண்ணமே உள்ளன.
பேரா யூகோ: கல்வியால் தீண்டாமையை ஒழிக்க இயலுமா? அதிகரிக்கும் கல்வியால் ஜாதி அடையாளத்தை பாதுகாக்கும் எண்ணமும், தீண்டாமையை பின்பற்றுவதும் குறையுமா? கல்வி இதை ஒழிக்க உதவும் என நம்புகிறேன்
சன்னா: இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் சாதி இந்துக்கள் இப்போது படித்த சாதி-இந்துக்களாகவே இருக்கிறார்கள். ஜாதிமுறையால் தங்களுக்கு கிடைத்த சலுகைகளை இழக்க அவர்கள் எப்படி முனைவார்கள்? தம்முடைய அடையாளத்தை பாதுகாக்கவே அவர்கள் தீண்டாமையை வலியுறுத்துகிறார்கள். அத்துடன் இருவிதமான தீண்டாமைகள் நிலவுகின்றன. ஒன்று வெளிப்படையான தீண்டாமை, இரண்டாவது நுட்பமான வெளிப்படையாக தெரியாத மறைமுகமான தீண்டாமை.
பேரா யூகோ: இதன் பொருள் என்ன?
சன்னா: எதிர்காலத்தில் இருக்கும் பெரிய சவாலே நுட்பமான, மறைமுக தீண்டாமையின் வெளிப்பாடுகளை கண்டறிவதே. இத்தகைய தீண்டாமை நகரங்களில் நிலவுகிறது. இத்தகைய மறைமுகமான தீண்டாமையை கண்டறிந்து அரசியல் சூழலில் இது உருவாக்கும் காரணிகளையும், தாக்கங்களையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க கல்வியாளர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்
பேரா யூகோ: இது இருப்பதே கூட நமக்கு தெரியாமல் இருக்கலாம்
சன்னா: ஆமாம். ஜாதி ஒழிப்பை பற்றி பேசினால் இதை கண்டறிந்துவிடலாம். ஜாதி ஒழிப்பை பற்றி பேசினால் உடனே அவர்கள் "இதோ பாருங்கள். நான் (ஜாதியால்) பெரியவன். பழைய எண்ணங்களை துறந்து தலித்துகளுடன் அமர்ந்து உண்ணவும், டீ குடிக்கவும் செய்கிறேன்" என்பார்கள். இப்படி சொல்லுவதே ஒருவித ஜாதிய உயர்வு மனப்பான்மை ஆகும். இப்படித்தான் எல்லா சமயங்களிலும் நடக்கிறது. அதன்பின் நீங்கள் சென்னைக்கு வருவீர்கள். வந்து அங்கிருக்கும் அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருப்பீர்கள். அதன்பின் நான் தலித் உரிமையைப்பற்றி பேசுவேன் என்பீர்கள். ஆனால் உங்கள் வீட்டுக்கு அருகே குடிசைகள் இருக்கும். அவர்களை பற்றி வாயை திறக்க கூட மாட்டீர்கள். கேட்டால் "அவர்கள் மோசமானவர்கள்" என்பீர்கள். இது மாதிரியான உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனப்பான்மையே அறிவுஜீவிகளிடம் நிலவுகிறது
பேரா யூகோ: இதுமட்டுமல்ல. தலித்துகளின் வரலாற்றை புறக்கணிக்கும் மனப்பான்மையும் காணப்படுகிறது. உதாரண்மாக - சபால்டர்ன் ஸ்டடிஸ் எனும் பெயரில் ஒடுக்கபட்ட மக்கலின் வரலாற்றை ஆராயும் உலகப்புகழ் பெற்ற வரலாற்றுத்துறை ஆசிரியர்கள் கூட தலித்களைப்பற்றி பேசியதில்லை
சன்னா: ஆம். அவர்கள் பேசவில்லை
பேரா யூகோ: ஆனால் தலித்துகள் தானே ஒடுக்கப்பட்ட மக்களில் முக்கியமானவர்கள்?
சன்னா: நிச்சயமாக. இம்மாதிரி குற்றசாட்டுக்களை அவர்கள் மேல் நாம் சுமத்தியபின்னரே அவர்கள் அமைதியாகி, விலகினார்கள். சில காலம் கழித்து அவர்கள் மனதில் "என்னை இப்படி இவர்கள் திட்டுகையில் இவர்களது பிரச்சனையை நான் ஏன் பேசவேண்டும்?" என்ற எண்ணமே வந்தது. இதன் காரணமாக தான் அறிவுசார் வட்டங்களில் தலித் அல்லாத சிந்தனையாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இல்லையெனில் அவர்கள் இந்நேரம் தங்கள் குரலை எழுப்பி இருக்க வேண்டும் அல்லவா?
பேரா யூகோ: வி. கீதா போன்ற பலரும் தலித் இயக்கங்களை பற்றி எழுதிக்கொண்டு வருகிறார்கள் அல்லவா?
சன்னா: இது நாங்கள் எழுப்பும் குற்றசாட்டுகளை எதிர்கொள்ள அவர்கள் கடைபிடிக்கும் பாதுகாப்பு உத்தியாகும். ஆக ஓரிரவில் 1990ல் தலித் இயக்கம் எழுந்தது என சொல்வதை விட நீண்ட-கால நோக்கில் மக்களை திரட்டும் முயற்சியே நிகழ்ந்தது என கூறலாம். 1990களில் அம்முயற்சிக்கு வழியும், ஆற்றலும் கிடைத்தபின்னர் தலித் அரசியல் வீறுகொண்டு எழுந்தது. அரசிடம் இது எத்தகைய அச்சத்தை உருவாக்கியது என கேட்டால், அப்போது இத்தகைய புரட்சிகர அமைப்புகள் தேர்தலை புறக்கணித்தும், தலித் மக்களை ஒருங்கிணைத்தும் வந்தன. அவை நக்சல்பாரி இயக்கங்களாக ஆகலாம் எனும் அச்சம் அப்போது அரசிடம் நிலவியது. தம் இருப்புக்கு இத்தகைய சோதனை வந்ததை உணர்ந்த திராவிட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தலித் இயக்கங்களுக்கு நெருக்கடி கொடுத்தன. தலித் மக்கள் மேல் அவர்கள் வழக்குகளை தொடர்ந்தும், கலவரங்களை தூண்டியும் அழுத்தம் கொடுத்து பாராளுமன்ற அரசியலுக்கு கொண்டுவர முயன்றார்கள். அதே சமயம் நாம் 1990 முதல் 1998 வரை தேர்தல் புறக்கணிப்பு செய்ததால் விளைந்த விளைவுகள் என்ன என கேட்க வேண்டும். இதனால் இவர்களால் மக்களை திரட்ட முடிந்தது. அவர்களின் துயரங்களுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க முடிந்தது. தாக்கபடுகையில் திருப்பி அடிக்கவும் முடிந்தது. ஆனால் இது மட்டுமே ஒரு அரசியல் கட்சியின்முழுமையான பணியாக இருக்க முடியாது.
(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்..)
செல்வன்
holyape@gmail.com