Tuesday, April 29, 2014

திரையிசையில் பாரதிதாசன்


திரையிசையில் பாரதிதாசன்
தேமொழி


பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) மறைந்து ஐம்பது ஆண்டுகளாகிவிட்டன.  புரட்சிக் கவிஞரின் பாடல்கள் திரையிசையிலும் வெளிவந்துள்ளன.

திரைப்படம் எடுக்க விரும்பி சென்னை வந்தாலும், திரையிசைப் பாடல்கள் எழுதுவதில் பங்கு பெற்றாலும் திரைத்துறை பாரதிதாசன் விரும்பிய, அவர் ஆர்வத்தைக் கவரும் ஒரு துறையாக இல்லாது போனது.

தனது சுயமரியாதைக்கு ஊறு விளைவிக்கிறது என்று எண்ணிய பொழுது பெருந் தொகையையும், நல்ல பல படங்களின் ஒப்பந்தங்களையும் துச்சமென மதித்து, புறக்கணித்து, அவற்றைத் தூக்கி எறிந்து வெளிநடப்புச் செய்தார். 

வளையாபதி என்ற திரைப்படத்தில் அவர் எழுதியதை மாற்றி அமைத்த திரைத்துறையினரின் செயல் அவரது தன்மானத்திற்கு இழுக்கு என்று அவர் கோபம் கொண்டதாகச் சொல்வர். 

திரைபடத் துறையை விரும்பாத அவரது கருத்தை எதிரொலிக்கும் பாடல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.  


பாரதிதாசன் அன்றைய தமிழ்த் திரைப்படத் துறையின்  நிலையைப் பற்றி  எழுதிய ஒரு கவிதை இது .

    என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
    எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
    ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
    உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
    ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
    ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
    ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
    ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

    வட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
    மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
    வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
    வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
    அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
    அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

    கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
    கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
    பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
    பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
    சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
    சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
    வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
    மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
    இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம்
    இதனால்ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!​


திரைப்படத் துறையை அவர் புறக்கணித்தாலும், திரைப்படத் துறை அவரைப் புறக்கணிக்க விரும்பியதில்லை.  அவர் மறைந்த பிறகும் அவரது பாடல்களை தக்க காட்சியமைப்பிற்கு ஏற்பப்  பயன்படுத்தி வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.  அதிலும் அவர் சார்ந்திருந்த திராவிடக் கழக கட்சியின் வழி வந்த கலையுலக மக்கள், அவரது எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் இதனை அவ்வப்பொழுது செய்து வந்தார்கள்.

எனவே, அவர் திரைப்படத் துறையை புறக்கணித்தாலும், திரை இசையில் அவரது பாடல்கள் அவர் கருத்தை முழங்கி வந்தன.  

அவற்றில் மக்களின் கருத்தைக் கவர்ந்த சில பாடல்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. 



தமிழுக்கும் அமுதென்று பேர்
[http://youtu.be/39LJ3tcafB8] 



தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
பயிருக்கு வேர் .

தமிழ் எங்கள் இளமைக்குப்  பால்
ஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்குப்  பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்
சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்....




சங்கே முழங்கு
[http://youtu.be/tpvOyMEPfOw]

சங்கே முழங்கு , சங்கே முழங்கு , சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு ...சங்கே முழங்கு!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்,
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!
சங்கே முழங்கு, சங்கே முழங்கு, சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்,
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே!
சங்கே முழங்கு

வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல்
கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து
வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!
தமிழ் எங்கள் மூச்சாம்!




 துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

[http://youtu.be/kLV7EQJULdY]


பெற்றோர் ஆவல்
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...




குலிங்கிடும் பூவிலெல்லாம்  
[http://youtu.be/PIUTLcyYeP4]



குலிங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால்
நாதா தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே
ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய்
கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குளிருடன் மாலை வேளை
கொள்ளும் நேரம் என்ன சொல்வேன்
மணமும் தென்றல் காற்றும்
ஒன்றை ஒன்று மருவிடுதே

அளாவி வானத்தையே
தாவும் ஒரு மாமுரசை
அன்பால் முல்லை கொடி ஓடித் தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே

[குலிங்கிடும் பூவிலெல்லாம்]

அதலால் இன்ப வாழ்வு
கை கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே காதலால் நாமிருவர்
சேர்ந்தே இன்பமெல்லாம்
வாழ்ந்தே வாழ்ந்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாமே வாழ்ந்திடுவோம்

என் போல் பாக்கியவதி
யாரும் இல்லை உலகினிலே
இன்பம் இன்பம் நம்
இரண்டு மனம் ஒரு மனமே

[குலிங்கிடும் பூவிலெல்லாம்]




சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்த இப்பாரினிலே ...
[http://youtu.be/BAe7us5Q5yY]



இப்பாடல் "நீங்களே சொல்லுங்கள்" என்ற தலைப்பில் பாரதிதாசனால் எழுதப்பட்டப் பாடல், கொட்டை எழுத்துக்களிள் உள்ள வரிகள் திரையிசைப் பாடலில் இடம்பெற்றன......

நீங்களே சொல்லுங்கள்

சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே -- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!  உங்கள் வேரினிலே....


நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு
நெல்விளை நன்னிலமே! -- உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்த அக் காலத்திலே -- எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.


மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம்வகுத்தார் -- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! -- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? -- நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்ததுமெய் அல்லவோ?


கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் -- எங்கள்
சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பில்
சிதைந்த நரம்புகள் தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! -- உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!

தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? -- பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?


எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ -- இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை -- சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.





  புதியதோர் உலகம் செய்வோம்!

 புதியதோர் உலகம் செய்வோம்!

என்றாலே பாரதிதாசன்தான் நினைவு வருவார்.

இவர் "புதியதோர் உலகம் செய்வோம்!" என்பதை இரு பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். 

வேறு யாரும் இச்சொற்றொடரை பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஒரு பாடல் கீழே.

முன்னேறு!

சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்
பேசு சுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்!
ஈதேகாண்! சமுகமே, யாம்சொன்ன வழியில்
ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.

அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற
அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ?
கொண்டு விட்டோம் பேரறிவு, பெருஞ்செயல்கள்
கொழித்து விட்டோம் என்றிங்கே கூறுவார்கள்.
பண்டொழிந்த புத்தன், ராமாநு ஞன்,
முகம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச்
சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை!
சமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே!


புதியதோர் உலகம் செய்வோம்!
என்ற தலைப்பில் மேலும் இரு பாடல்கள் உள்ளன.
அந்த இரு பாடல்களுமே திரையிசையில் வெளி  வந்துள்ளது.

புதிய உலகு செய்வோம் 
[http://youtu.be/zZXfePZSFv4]
[இந்தப் பாடல்தான் 'புதிய உலகு செய்வோம்' என்ற தலைப்பிலேயே பாரதிதாசனால் எழுதப் பெற்ற  பாடல்]


புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
புதியதோர் உலகம் ...

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனதெ ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் ...

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனி எனும் மனிதரைச் சிரிப்போம்!
புதியதோர் உலகம் ...

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் ...

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...



மற்றொரு பாடல் 'சந்திரோதயம்' என்ற படத்தின்  தலைப்புப் பாடல்.  இதில் ...

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் செய்வோம்...

என்ற வரிகளை  'புதிய உலகு செய்வோம்'  என்ற பாடலில் இருந்து எடுத்து
பிறகு அவருடைய 'பத்திரிகை' என்ற பாடலில் வரும் சில வரிகளுடன் கலந்து (கதை நாயகன் கதையின்படி பத்திரிகை நடத்தும் தொழிலில் உள்ளவர்)
மேலும் சில வரிகளையும் இணைத்து கீழ் வரும் பாடலாக வெளிவந்தது.

கடைசியில் வரும் சில வரிகள் பாரதிதாசன் கவிதை நூல்களில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.

பாரதிதாசனின் எழுத்து என்பது  எப்படி இருக்க வேண்டும் என்று கொண்டிருந்த கொள்கையை வெளிப்படுத்தும் வரிகள் அந்த இறுதியில் வரும் வரிகள்.


புதியதோர் உலகம் செய்வோம்
[http://youtu.be/uaLXjhMwfjE]


புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...

[பத்திரிகை]
அறிஞர் தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்
நறுமண இதழ்ப்பெண் ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...

[திரையிசைப் பாடலுக்கான சிறப்பு வரிகள்]
பொது மக்கள் நலம் நாடி
புது கருத்தைச் சொல்க
உன் கருத்தை சொல்லுவதில்
ஆயிரம் வந்தாலும்
அதற்கொப்ப வேண்டாமே
அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும்
ஏடு பல வாழ்ந்தால்...
எதிர்ப்பதன்றோ தமிழர்களின்
எழுதுகோல் வேலை...
ஏற்ற செயல் செய்தற்கும்
ஏன் அஞ்ச வேண்டும்...




எங்கெங்குக் காணினும் சக்தியடா!
பாடல் இடம் பெறுவது  2 மணி நேரம் 7 நிமிடங்கள் என்ற இடத்தில்
[http://youtu.be/t_HQg0gkTaM?t=2h7m]


எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீநினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!







1 comment: