Wednesday, April 15, 2015

நடுவட்ட சீனர்கள்

நடுவட்ட சீனர்கள்

- செல்வன்

19ம் நூற்றாண்டில் மலேயாவிலும் ப்ரிட்டிஷ் ஆட்சி இருந்தது. இந்திய கைதிகளை அந்தமானுக்கும், பர்மாவுக்கும் நாடுகடத்தியது போல மலேயாவில் போராடிய சீனர்கள் சிலரை இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள் ப்ரிட்டிஷார். அவர்களை நீலகிரியில் சிறையில் அடைத்தார்கள்.

1868ம் ஆண்டு நீலகிரி ஜெயிலில் இருந்த சீனர்கள் சிலர் ஜெயிலை உடைத்துவிட்டு தப்பி ஓடினார்கள். போலிஸ் சிலரை துரத்திப்பிடிக்க, சிலர் கடைசிவர அகப்படவே இல்லை. அதன்பின் ப்ரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு சீன கைதிகளை நீலகிரியிலேயே குடியமர்த்தியது ப்ரிட்டிஷ் அரசு. அவர்களுக்கு நீலகிரி தமிழ்பறையர் இனத்தை சேர்ந்த பெண்களை திருமணமும் செய்து வைத்தார்கள் ப்ரிட்டிஷார். இந்த தம்பதியினர் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் முதல் கூடலூர் வரை இருந்த பகுதிகளில் வசித்தார்கள்.

இவர்களை ஆராய்ச்சி செய்ய சென்ற எட்கார் தர்ஸ்டன் அவர்களை புகைப்படம் எடுக்க வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். வழக்கமாக தர்ஸ்டன் இந்தியர்களுக்கு புகைப்படம் எடுக்க இரண்டு முதல் எட்டணா வரை கொடுப்பது வழக்கம். ஆனால் சீனர்கள் "எங்களுக்கு காசு வேண்டாம். போட்டொ கொடுங்கள்" என கேட்டுவாங்கிக்கொண்டார்கள்.

அவர்களது குழந்தைகள் தாயின் கருநிறமாக இல்லாமல் தந்தையின் மஞ்சள் நிறத்தில் இருந்ததாக தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். இடுங்கிய கண்கள், தட்டைமூக்கு என மங்கோலிய சாயல் அக்குழந்தைகளிடம் இருந்ததாம். காலஓட்டத்தில் அக்குழந்தைகள் நீலகிரியின் பறையர் சமூகத்திலேயே கலந்துவிட்டார்கள். அவர்களை பின்னாளில் தேடிக்கண்டுபிடிக்க நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை



Monday, April 13, 2015

1921 ஆம் ஆண்டு - சென்னை மாகாண நாடார்குலத்தினர் புள்ளிவிவரங்கள்

1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புபடி, சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண்கல்விநிலை  பற்றிய புள்ளிவிவரங்கள்

-- தேமொழி.


[ நாடார் குல மித்திரன் - 1923 - ஜனவரி  மாதத்தின் 1 வது இதழ் வழங்கும் தகவல்]
 

1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155 - ஜனசங்கை)  கணக்கெடுப்புபடி  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் ஏறக்குறைய பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர். 

ஆண் பெண் , மணமானவர்,  மதப் பின்னணி பற்றிய மக்கட்தொகை  விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  கிறிஸ்துவ நாடர்கள் (சுமார் இரண்டு லட்சம் பேர்), கிறிஸ்துவர்கள் என்ற பிரிவுக்குள் கணக்கெடுக்கப் க்கபட்டுவிட்டதாகவும், நாடார் குலத்துடன் சேர்க்கப்படவில்லை என்பதும் மேலதிகத் தகவல்.  சென்னை மாகாண கணக்கெடுப்பின் படி நாடார்களின் எண்ணிக்கை 6,52,652 .  இதே ஆறரை லட்சம் எண்ணிக்கையில் உள்ள நாடர்கள் தமிழகம் தவிர்த்து உலகில் பிற இடங்களிலும் இருப்பர் எனவும், எனவே ஆக மொத்தம் உலகளாவிய அளவில் 13 லட்சம் நாடர்கள் இருக்கக்கூடும் என்ற கணிப்பு கூறப்படுகிறது.  

சென்னை மாகாண வாழ் நாடார்களில்  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கையும்  பத்தில் ஒருவர் என்ற விகிதமே, மாகாண நிலையையே  இது ஒத்திருக்கிறது.   நாடார்குல பெண்களில்  நூறில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர். மொத்தம் 2500 ஆங்கிலம் படிக்கத் தெரிந்த நாடார்குல மக்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும்  88  மட்டுமே., 

1901 மற்றும் 1911 மக்கதொகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது 1901 இல் 1000 த்தில் 1 பெண்(கள்) படித்திருந்தனர் என்ற நிலை, 
அடுத்த பத்து ஆண்டுகளில்...1911 இல் 1000 த்தில் 7 நாடார் குல பெண்கள் படித்திருந்தனர் என்று  உயர்ந்திருந்தது.  
ஆனால் இது அதற்கடுத்த பத்து ஆண்டுகளில், 1921 இல்  1000  த்தில் 15  நாடார் குல பெண்கள் படித்தவர் என்ற அளவிற்கு உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரம் கொடுக்கப்படிருக்கிறது.  

எனினும்  நூறு  நாடர்குல பெண்களில் ஒருவர் மட்டுமே படித்தவர் என்பதே ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழக நாடர்குல பெண்களின் கல்விநிலை என்பது வருந்தத் தக்க புள்ளிவிவரம்.  இதே நிலைதான்  மற்றகுல பெண்களுக்கும் என்பதையும் எளிதில் நாம் கணிக்கலாம்.  

நாடார்குல பெண்களில் மூன்றில் ஒரு பங்கு திருமணமானவர்கள், திருமணமானவர்களிலும்  ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர்  கைம்பெண்கள். அதாவது,  நூற்றில் 14 நாடார் குல பெண்கள் கைம்பெண்கள். இதை பெண்களின் பரிதாப நிலை என்கிறது நாடார் குலமித்திரன்.  பெண்களைவிட ஆடவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு நாடார்கள் பலர் தொழில் நிமித்தமாக அயல்நாடு செல்லும்பொழுது குடும்பத்தையும் அழைத்து செல்லாததும் ஒரு காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. 

நாடார்களில் பெரும்பாலோர் விவசாயம், கைத்தொழில், வணிகம் என்று வாழ்வாதாரம் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.  வேலை பார்ப்பவர் எண்ணிக்கை குறைவு என்றும் அதிலும் நாடார்களில்  உயர் அதிகாரி என்ற நிலை  இல்லாது இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.  கல்விநிலையங்கள் அதிகரித்தும், கல்வியின் தேவை பற்றி பரவலாக அறிவுறுத்தப்பட்டும்  நாடார்குல கற்றோர் எண்ணிக்கை வருத்தம் தருவதாக உள்ளதாக இந்த இதழ் அறிவிக்கிறது.  பெற்றோர்களை நாடார்குல முன்நேற்றத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை காட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
 

themozhi@yahoo.com

பிலிப்பைனின் தங்கத் தாரா

--செல்வன்.


இன்று சிகாகோவின் புகழ்பெற்ற பீல்ட் மியூசியத்தில் இந்த தங்கதாரா சிலையைக்கண்டேன்.
13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலை முழுக்க தங்கத்தால் ஆனது. சுமார் 1.86 கிலோ தங்கத்தால் ஆன இச்சிலை மலேயாவின் மகாஜத் அரச வம்சாவளியை சேர்ந்ததாக கருதபடுகிறது. இச்சிலையில் இருக்கும் தாரா எனும் தேவி பவுத்தத்தின் ஒரே பெண் போதிசத்வர். எடுத்த காரியத்தில் வெற்றி அளிக்கவல்ல தேவதை.
 
தாரா வட இந்தியாவில் துர்க்கையின் வடிவமாக கருதப்படுபவர். பவுத்தம் அதன்பின் இவரை உள்வாங்கியது.

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிலிப்பைன்ஸில் ஆற்றோரம் ஒரு எளிய பெண்மணி இத்தங்கதாரா சிலையை கண்டெடுத்தார். அதன்பின் அந்த மாகாண பிலிப்பைன்ஸ் கவர்னர் கைக்கு இச்சிலை சென்றது. பிலிப்பைன்ஸ் கவர்னர் ஒரு தேங்காய் கம்பனிக்கு பட்ட கடனுக்கான இச்சிலையை கைமாற்றி விட்டார். அத்தேங்காய் கம்பனி இதை எக்ஸிபிஷனில் வைக்க பீல்ட் மியூஸிய கியூரேட்டரின் மனைவி 4000 பெசோவுக்கு (பிலிப்பைன் பணம்) 19208 வாக்கில் இதை வாங்கி சிகாகோ கொண்டுவந்தார்

பிலிப்பைன்ஸின் ஒப்பற்ற தேசிய சின்னமாக கருதப்படும் இச்சிலை இப்படி சிகாகோ நகருக்கு வந்து சேர்ந்தது. பிலிப்பைன்ஸில் இதன் மாதிரியை எக்ஸிபிஷனில் வைத்துள்ளார்கள்.


பீல்ட் மிச்யுசியத்தில் 19ம் நூற்றான்டை சேர்ந்த பீஜாப்பூர் நகை ஒன்றையும் காண நேர்ந்தது. ஆலிலை கண்ணன் சிரித்தபடி அதில் வீற்றிருந்தான்

மாவோரி பழங்குடியினர் ஆயுதங்கள்

--செல்வன்.

 ஒப்பிட்டளவில் உலகில் மிக சமீபகாலத்தில் மனித குடியேற்றம் நிகழ்ந்த பகுதி நியூசிலாந்து மட்டுமே

சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு மாவோரி எனும் மாலினிசிய குடிகள் இங்கே குடியேறினார்கள். பூர்விகமாக அவர்கள் கருதுவது ஹவாகிகி எனும் இடம்..இது கற்பனையான இடம் எனவும், தற்போதைய ஹவாயி எனவும் நடுவே இருக்கும் பல பசிபிக் தீவுகள் இவர்கள் பூர்விகமாக கருதபடுகின்றன

மவோரி  பழங்குடிகள் கதாயுத்த்தை பயன்படுத்தி சண்டையிட்டனர். கற்கால குடி என்பதால் உலோக ஆயுதங்கள் இல்லை. மர கதைகள் மட்டுமே.



மண்டையை உடைக்க ஒரு வகை கதை.
தோலை கிழிக்க ஒரு வகை கதை.
எலும்புகள், மூட்டுகளை உடைக்க ஒரு வகை கதை.
கூட்டங்களில் அலங்காரமாக அணிய ஒரு வகை கதை.
இடுப்பில் அணிந்து close combat சண்டைகளுக்கு பல வகை குறுங்கதைகள்.

மாவோரி மொழியில் இவற்றிற்கு பெயர் கடா (Gata)




Thursday, March 26, 2015

ஆடானையப்பர் ஆலயம் - பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலம்

-- சொ.வினைதீர்த்தான்

ஆடானையப்பர் ஆலயம்
பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலம் வழிபாடு



திருவாடானை அரசு கலைக்கல்லூரி மணிமேகலை காப்பியம் குறித்த பயிலரங்கில் உரையாற்றச்சென்றிருந்தபோது 23.3..2015 மாலை பாண்டியநாட்டில் பாடல்பெற்ற பதினான்கு கோவில்களில் ஒன்றாகிய ஆடானையப்பர் கோவிலில் வழிபட்டுவந்தேன்.

 
இராமநாதபுரம் சமத்தானத்தின் ஆளுகைக்குட்ட நகரத்தார் திருப்பணியான கோவில் குடமுழுக்கு காணவிருக்கிறது. அருமையான சிற்பத்தொகுதிகள் நிறைந்த 130 அடி ஒன்பதுநிலை கோபுரத்திற்கு வண்ணபூச்சு வேலை பூர்த்தியாகவிருக்கிறது.


1.ஆடானையப்பர், ஆதிரத்னேசுவரர், அஜகஜேசுவரர் என்று பெருமான் அழைக்கப்படுகிறார். நல்லவேளை ஊர் அஜகஜேஸ்வரம் என்றில்லாமல் ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தப்பெருமான் அழைத்த ஆதியான் உறை ஆடானை  என்ற பெயரிலேயே திருவாடானை எனப்பதிவாகிவிட்டது.

புராணக்கதை மிகவும் பொருள்பொதிந்தது. வருணன் மகன் வாருணி என்பான் துர்வாசமுனிவரின் வேள்விக்கு இடையூறு செய்துவிடுகிறான். கோபத்திற்கு பெயர்போன துர்வாசர் மரபுக்குப்பொருந்தாத செய்கை புரிந்ததால் ஆட்டின் தலையும் யானையின் உடலும்கொண்ட பொருந்தா உருவமடையுமாறு வாருணிக்குச் சாபம் அளித்துவிடுகிறார். ஆட்டின் வாயால் யானை உடலுக்கு ஏற்றவாறு உண்ணமுடியாமல் அவன் பசிப்பிணியடைகிறான். மணிமேகலை கதையில் வருகிற காயசண்டிகையும் கூட ஒரு முனிவர் உண்ண வைத்திருந்த அருங்கனியை அவர் குளிக்கச்சென்றிருந்தபோது சிதைத்துவிடுவதால் தீராப்பசி நோய்க்கு ஆளாகும்படி முனிவருடைய சாபத்தைப்பெறுகிறாள். பின்பு அமுதசுரபி உதவியால் அவள் பசிப்பிணியை பாரகம் அடங்கலும் பசிப்பிணி தீர்த்த பாவையாகிய மணிமேகலை போக்குகிறாள். இங்கு வாருணி சூர்ய தீர்த்தத்தில் மூழ்கி சிவனை வழிபட்டுச் சாபவிமோசனம் பெறுகிறான்.
 
ஒருவன் பொருந்தாத செய்கை செய்தால் என்ன நிகழும் என்பதை இத்தொன்மக் கதைகள் உணர்த்தும் செய்தியாக நான் மாணவர் பயிலரங்கில் பகிர்ந்துகொண்டேன். மாணவர்கள் படிக்கும் காலத்தில் மாணவருக்குப் பொருந்தாத செயலில் ஈடுபட்டால் துன்பப்படவேண்டும் என்பதை உணர்த்தினேன்.
 
2.முன் மண்டபம் வித்தாரமான கல்திருப்பணி. 108 தூண்கள். பெரும்பாலும் வடிவங்கள்,பூக்கள்,பறவைகள் என்ற வகையில் பலநூறு புடைப்புச்சிற்பங்கள். தூண்களின் வரிசையும் ஒழுங்கும் அத்தூண்கள் தாங்கும் கல்பலகைகளின் வேலைப்பாடும் கவர்வன. 

3.திருச்சுற்று மண்டபத்தில் அறுபத்துமூவர் பத்தியில் ஒவ்வொரு அடியாருக்கும் மேலே சுவரில் அவருடை வண்ணத்திருவுரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது வேறெங்கும் காணக்கிடைக்காதது.

 
4.ஆலமர்செல்வனின் மண்டபம் அழகான சிற்ப தூண்களுடன் கருங்கல் திருப்பணி.சனகாதி முனிவர்கள் நால்வரும் வரிசையில் அமர்ந்துள்ளனர்.
 

5.இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் “ஆசாரபக்தியுடன் ஞானாகமத்தையரு ளாடானை நித்தமுறை பெருமாளே” என்று ஞானம் பெற வழிகாட்டியவனெனத் தொழுகிறார்.
 
 
6.ஆதிரெத்னசுவரர் என்ற திருப்பெயருடனும் அழைக்கப்படுகிற சிறிய இலிங்கத் திருவுரு இரத்தினம்போல விளக்கொளியில் ஒளிவிடுகிறது.

7.சுவாமியின் இடப்பக்கத்தில் கிழக்கு நோக்கி முன்மண்டபம், சுற்றுப்பத்தி என்று பரந்த தனிக்கோவிலில் அம்பிகை அன்பாயி, அன்பாயிரவல்லி, சினேகவல்லி என்ற திருபெயர்களோடு அருளாட்சி செய்கிறாள். வல்லி என்றாள் கொடி. அன்பு,சினேகம் ஒரு கொடியாகத்தழுவினால் எவ்வளவு பேறு!
 
8.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை மலரால் அர்ச்சித்து மனதால் சிந்தித்து நாவால் அவன் புகழ்பாட வளமெல்லாம் பெருகும் என்பது உறுதியென திருஞானசம்பந்தர் பதிகம் அருளியுள்ளார். “போதினார் புனைந்து ஏத்துவார்தமை வாதியா வினைமாயுமே”என்பதும்”அங்கை யானுறை யாடானை நாதனை தன்கையால் தொழுதுஏத்தவல்லவர் மங்கு நோய் பிணிமாயுமே” என்பதும் அவருடைய திருவாக்கு.

  
திருக்கோவில் படங்கள் பகிர்ந்துள்ளேன்.  நண்பர்கள் ஆதிரத்னேசுவரர் என்னும் ஆடானைஅப்பர், சினேகவல்லித்தாயார் அருள்பெற வாழ்த்துகிறேன்.
 
 






 



 
 
 


Wednesday, March 25, 2015

மனோசக்தியின் மகிமை

-- தேமொழி

ஹேவுட் என்னும் ஐரோப்பியர் கல்கத்தா டெலிகிராப் பத்திரிக்கைக்குக் கொடுத்த தகவல்


சில வியத்தகு நிகழ்வுகள் அவ்வப்பொழுது இந்தியாவில் நிகழ்கின்றன. அறிவியலுக்கு அப்பாற்பட்ட இந்த நிகழ்வுகளை விளக்கவும் வழியில்லை. 

மூன்று மாதங்களுக்கு முன் நான் கோவையிலிருந்து திருச்சிக்கு தொடர்வண்டியில்  முதல் வகுப்பில் பயணம் செய்த பொழுது எதிர்கொண்ட புதுமையான வியக்கவைக்கும் நிகழ்விது.   

இரண்டாம் வகுப்பில் உடல்முழுவதும் திருநீறு அணிந்து, நீண்ட சடைமுடியுடனும் கண்களிலும் முகத்திலும் ஒளி துலங்க, பற்றற்ற வகை என்று சொல்லக்கூடிய  பார்வையினைக்  கொண்ட துறவி ஒருவரைக் காண நேர்ந்தது.  

நிலையத்தில் வண்டியில் ஏறுமுன்னரே அவரை நான் பார்த்திருந்தேன். பயணச்சீட்டு இன்றி வண்டியில் நுழைந்தவரை பயணச்சீட்டு சோதனை  செய்பவர் வெளியில் இறக்கி விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த நினைவிருந்தது. இப்பொழுது மீண்டும் அவரை வண்டியினுள் கண்டதும் பக்தி நிறைந்தவர் யாரோ அவருக்காக பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து உதவினார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன். 

சற்றுக் கழித்து சோதனை செய்பவர் அவரிடம் ஏதோ சர்ச்சையில் இறங்கவும் ஏற்பட்ட சத்தம் என் கவனத்தைக் கவர்ந்தது. . துறவி  பயணச்சீட்டு  இல்லை என்று தலையை மட்டுமே அசைத்து  உணர்த்தினார், வாய்திறந்து  மறுமொழி அளிக்கவில்லை.  இதற்குள் வேடிக்கை பார்க்கவென ஒரு கூட்டமும்  சேர்ந்துவிட்டது.   கோபமுற்ற சீட்டு பரிசோதகரால் மீண்டும் துறவி  வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டார். நானும் அத்தோடு அந்த செயலுக்கு முடிவேற்பட்டது என்றுதான் நினைத்தேன். 

ஆனால், நடந்தததோ வேறு.  அத்துறவி நடைமேடையில் நின்றுகொண்டு வண்டியை முறைத்துப் பார்த்தவாறே  இருந்தார்.  வண்டி புறப்படும் நேரம் வந்தது.  புறப்படும் மணியும் அடித்தாகிவிட்டது. வண்டியை இயக்கத் தொடங்கினார்கள். ஆனால், எவ்வளவு முயன்றும் தொடர் வண்டி நகரவில்லை.  நிலைய ஊழியர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.  

இயந்திரக் கோளாறாக இருக்கும் என்று எண்ணி அந்த என்ஜினை நீக்கிவிட்டு வேறொண்டு பொறுத்த நினத்தாலும், தண்டவாளத்தில் இருந்து அதை நகர்த்தவும் முடியவில்லை. அப்பொழுது சிலர் துறவியை வெளியேற்றியதால் அவர் வண்டியை நிறுத்திவிட்டார் என்று நிலைய அதிகாரியிடம் கூறவும் அவர் சிரித்தார்.  இதற்குள்  இயந்திரப் பரிசோதனையில் வண்டியில் பழுதொன்றும் இல்லை என்ற தகவலும் கிடைத்தது. பழையபடி இயக்க முற்சித்தபொழுதும், நீராவி மட்டும் வெளியேறியதே ஒழிய வண்டி நகரவேயில்லை. 

வேறுவழியின்றி நிலைய  அதிகாரி துறவியை அணுகி பேசத் துவங்கினார். துறவி தான் போக வேண்டிய இடத்திற்குத் தேவையான பயணச் சத்தத்திற்கான  பணம் தன்னிடமில்லை என்றும், தனக்கு யாரும் துன்பம் தராமல் தான் விரும்பும் இடத்திற்குப் பயணம் செய்ய உதவவேண்டும், அவ்வாறு உறுதியளித்தால் வண்டியை தடை செய்யமாட்டேன்  என்று சைகையால் தெரிவித்தார்.  வேறுவழியின்றி தொடர்வண்டியின் அதிகாரிகள் இசைவு தெரிவித்தனர். 

துறவியும் அவசரமின்றி அமைதியாக தான் முன்னர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்துகொண்டு, இனி வண்டி புற்றப்படலாம் என்ற தோரணையில் சைகையால்  அனுமதி வழங்கினார். அந்தக் குறிப்பின்படி அதிகாரி குழுலூதி, கொடியை அசைத்ததும் ஓட்டுனர் வண்டியை இயக்கினார், என்ன வியப்பு வண்டியும் நகரத் துவங்கியது. 




நாடார் குல மித்திரன், 1922ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று  வெளிவந்த  இதழ்  (மலர் 4 - இதழ் 11) தந்த செய்தி 

தேமொழி
[ themozhi@yahoo.com ]

Tuesday, March 17, 2015

1921 ஆம் ஆண்டின் தமிழகத் தொழிலாளர் புள்ளிவிவரம்

– தேமொழி.


 
1922ம் ஆண்டு டிசம்பர் 1  ஆம் தேதி வெளிவந்த நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை (மலர் 4 - இதழ் 10)  இதழில் வெளியான, தமிழகத்தைப் பற்றிய கருத்தைக் கவரும் புள்ளிவிவரங்களின் தொகுப்பு ...


லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை சென்னை மாகணத்தின் தொழில் நிலை பற்றிய புள்ளிவிவரங்கள் 1922ம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியன்று வெளிவந்த இதழில் தரப்பட்டுள்ளன:
  • 1921 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ...14% மக்கள் மட்டுமே தொழிற்சாலைகளை  நம்பி வாழ்க்கை நடத்தினார்கள் 
  • நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்  எண்ணிக்கை 14,06,286

தொழில் நிறுவனங்கள்:
  • 2105 தொழில் நிறுவனங்கள் மட்டுமே சென்னை மாகாணத்தில் இருந்தன. இவற்றில், 13,06,270  ஆண்களும்; 41,269 பெண்களும் பணிபுரிந்தனர்.
  • இந்தியத் தொழிலாளிகளில் 14 வயதிற்கு உட்பட்டவர்களில் 6,353 சிறுவர்களும்,   5,362 சிறுமிகளும் அடங்குவர்.
  • இத்தொழிலாளர்களில் 1,389 பேர் ஐரோப்பியரும் ஆங்கிலேய இந்தியர்களும் ஆவார்கள்.
  • சென்னையின் அரசுக்குட்பட்ட போர்க்கருவிகள் தொழிற்சாலையில் பொறுப்புள்ள நிர்வாகப் பதவியில் இந்தியர் ஒருவர் கூட இல்லை 

தொழிற்சாலை உற்பத்தி பற்றிய மேலும் விரிவான தகவல்கள்:
  • காப்பி தேயிலை போன்ற தோட்டப்பயிர்களின் உற்பத்தி பத்தாண்டுகளில் மும்மடங்கு பெருகியது.
  • 91 சுரங்கங்களும் அவற்றில் மாங்கனிசும், மைகாவும் அதிகம் வெட்டி எடுக்கப்பட்டன.  இச்சுரங்கங்களில் 6,665 தொழிலாளர்கள் வேலை  செய்தனர்.  அவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 352 பேரும், 235 சிறுமிகளும் அடங்குவர். 
  • நெசவுத் தொழில் நிறுவனங்கள் மொத்தம் 441; இவற்றில் 33,871 ஆண்களும், 13,750 பெண்களும் பணிபுரிந்தனர்; இவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 2,115 பேரும், 1,894 சிறுமிகளும் பணி புரிந்தனர். 

இத்தொழிற்சாலைகளில் ...
  • பருத்தி எடுக்கும் தொழிலுடன் தொடர்புடைய நிறுவனங்களின் எண்ணிக்கை 228ம்; அவற்றில் பணி செய்த ஆண்களின் எண்ணிக்கை 6,707 என்றும், பெண்களின் எண்ணிக்கை 5,075 ம் ஆகும், 14 வயதிற்குட்பட்டோரின்  எண்ணிக்கை 177.  பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவரும், கிரக்கர்கள் இருவரும், நான்கு ஜப்பானியரும், ஐந்து சுவிச்சட்சர்லாந்து பணியாளர்களும் இத்தொழிற்சாலைகளில் பணி புரிந்தனர். 
  • நூல்நூற்கும், துணி நெய்யும்  தொழ்ற்சாலைகளின் எண்ணிக்கை 115 ம், இவற்றில் 23,439 ஆண்களும், 6,167 பெண்களும் பணிபுரிந்தனர்.  இவர்களில் 14 குட்பட்டோரின் எண்ணிக்கை 3,377. நிர்வாகப்பணியிலும், உயர் பதவிகளிலும் இருந்தோரில் ஒரு அமெரிக்கர் இரண்டு பிரெஞ்சுக்காரர், இரண்டு டச்சுக்காரர்களும் அடங்குவர்.
  • கைத்தறிகளின்  எண்ணிக்கை 1,69, 403.  தஞ்சை, சேலம் பகுதிகளில் விசைநாடாத் தறிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. 
  • 21,525 பேர் வேலை செய்யும் மாநகராட்சி தொழில் நிறுவனங்கள் 53 இருந்தன.  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 84 ம், அதையொட்டி ய எலும்பரைக்கும் ஆலைகளும் 4,674 பேருக்கு வேலைவாய்ப்பளித்ததுள்ளது.  நவீன வகையில் அமைக்கப்பட்ட 7 சார்க்கரைத் தொழிற்சாலைகளும் சென்னை மாகாணத்தில் இருந்தன.
  • குறிப்பிடப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளிலும், நிர்வாகத்திலும், உயர்பதவியிலும் இருந்தவர் யாவரும் அந்நியர்களே, இவர்கள் லாபத்தில் பங்கு பெரும் முதலாளிகளாகவும் இருந்தனர்.  அங்கு பணிபுரிந்த இந்தியர்கள் கூலிகளாகவும், குமாஸ்தா, மேஸ்திரி தொழில்களில் இருந்தனர். உடல் உழைப்பைத் தந்த இவர்கள் யாவருக்கும் லாபத்தில் பங்கு இல்லை. 
  • சென்னை மாகாணத்தின் தொழில்வாய்ப்பு உயரவேண்டுமானால் அதற்கு அரசின் நடவடிக்கையும், இப்பகுதியில் வசிக்கும் செல்வந்தர்களும் முயற்சித்தால் முன்னேறலாம் என லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை தகவல்கள் தருகிறது.