Wednesday, March 25, 2015

மனோசக்தியின் மகிமை

-- தேமொழி

ஹேவுட் என்னும் ஐரோப்பியர் கல்கத்தா டெலிகிராப் பத்திரிக்கைக்குக் கொடுத்த தகவல்


சில வியத்தகு நிகழ்வுகள் அவ்வப்பொழுது இந்தியாவில் நிகழ்கின்றன. அறிவியலுக்கு அப்பாற்பட்ட இந்த நிகழ்வுகளை விளக்கவும் வழியில்லை. 

மூன்று மாதங்களுக்கு முன் நான் கோவையிலிருந்து திருச்சிக்கு தொடர்வண்டியில்  முதல் வகுப்பில் பயணம் செய்த பொழுது எதிர்கொண்ட புதுமையான வியக்கவைக்கும் நிகழ்விது.   

இரண்டாம் வகுப்பில் உடல்முழுவதும் திருநீறு அணிந்து, நீண்ட சடைமுடியுடனும் கண்களிலும் முகத்திலும் ஒளி துலங்க, பற்றற்ற வகை என்று சொல்லக்கூடிய  பார்வையினைக்  கொண்ட துறவி ஒருவரைக் காண நேர்ந்தது.  

நிலையத்தில் வண்டியில் ஏறுமுன்னரே அவரை நான் பார்த்திருந்தேன். பயணச்சீட்டு இன்றி வண்டியில் நுழைந்தவரை பயணச்சீட்டு சோதனை  செய்பவர் வெளியில் இறக்கி விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த நினைவிருந்தது. இப்பொழுது மீண்டும் அவரை வண்டியினுள் கண்டதும் பக்தி நிறைந்தவர் யாரோ அவருக்காக பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து உதவினார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன். 

சற்றுக் கழித்து சோதனை செய்பவர் அவரிடம் ஏதோ சர்ச்சையில் இறங்கவும் ஏற்பட்ட சத்தம் என் கவனத்தைக் கவர்ந்தது. . துறவி  பயணச்சீட்டு  இல்லை என்று தலையை மட்டுமே அசைத்து  உணர்த்தினார், வாய்திறந்து  மறுமொழி அளிக்கவில்லை.  இதற்குள் வேடிக்கை பார்க்கவென ஒரு கூட்டமும்  சேர்ந்துவிட்டது.   கோபமுற்ற சீட்டு பரிசோதகரால் மீண்டும் துறவி  வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டார். நானும் அத்தோடு அந்த செயலுக்கு முடிவேற்பட்டது என்றுதான் நினைத்தேன். 

ஆனால், நடந்தததோ வேறு.  அத்துறவி நடைமேடையில் நின்றுகொண்டு வண்டியை முறைத்துப் பார்த்தவாறே  இருந்தார்.  வண்டி புறப்படும் நேரம் வந்தது.  புறப்படும் மணியும் அடித்தாகிவிட்டது. வண்டியை இயக்கத் தொடங்கினார்கள். ஆனால், எவ்வளவு முயன்றும் தொடர் வண்டி நகரவில்லை.  நிலைய ஊழியர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.  

இயந்திரக் கோளாறாக இருக்கும் என்று எண்ணி அந்த என்ஜினை நீக்கிவிட்டு வேறொண்டு பொறுத்த நினத்தாலும், தண்டவாளத்தில் இருந்து அதை நகர்த்தவும் முடியவில்லை. அப்பொழுது சிலர் துறவியை வெளியேற்றியதால் அவர் வண்டியை நிறுத்திவிட்டார் என்று நிலைய அதிகாரியிடம் கூறவும் அவர் சிரித்தார்.  இதற்குள்  இயந்திரப் பரிசோதனையில் வண்டியில் பழுதொன்றும் இல்லை என்ற தகவலும் கிடைத்தது. பழையபடி இயக்க முற்சித்தபொழுதும், நீராவி மட்டும் வெளியேறியதே ஒழிய வண்டி நகரவேயில்லை. 

வேறுவழியின்றி நிலைய  அதிகாரி துறவியை அணுகி பேசத் துவங்கினார். துறவி தான் போக வேண்டிய இடத்திற்குத் தேவையான பயணச் சத்தத்திற்கான  பணம் தன்னிடமில்லை என்றும், தனக்கு யாரும் துன்பம் தராமல் தான் விரும்பும் இடத்திற்குப் பயணம் செய்ய உதவவேண்டும், அவ்வாறு உறுதியளித்தால் வண்டியை தடை செய்யமாட்டேன்  என்று சைகையால் தெரிவித்தார்.  வேறுவழியின்றி தொடர்வண்டியின் அதிகாரிகள் இசைவு தெரிவித்தனர். 

துறவியும் அவசரமின்றி அமைதியாக தான் முன்னர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்துகொண்டு, இனி வண்டி புற்றப்படலாம் என்ற தோரணையில் சைகையால்  அனுமதி வழங்கினார். அந்தக் குறிப்பின்படி அதிகாரி குழுலூதி, கொடியை அசைத்ததும் ஓட்டுனர் வண்டியை இயக்கினார், என்ன வியப்பு வண்டியும் நகரத் துவங்கியது. 




நாடார் குல மித்திரன், 1922ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று  வெளிவந்த  இதழ்  (மலர் 4 - இதழ் 11) தந்த செய்தி 

தேமொழி
[ themozhi@yahoo.com ]

No comments:

Post a Comment