Monday, March 9, 2015

சைத்தான் ஓதிய வேதம்

சைத்தான் ஓதிய வேதம்

கிபி 1230ம் ஆண்டுவாக்கில் எழுதப்பட்ட, உலகின் எட்டாவது அதிசயமாக ஒரு காலத்தில் கருதப்பட்ட, சைத்தானால் எழுதப்பட்டதாக கருத்தபடும் கோடெக்ஸ் கிகாஸ்( Codex Gigas) எனும் நூலைப்பற்றிய National Geographic டாக்குமெண்டரியை இன்று பார்த்தேன்
சைத்தான் ஏன் பைபிளை எழுதவேண்டும்?

பண்டைய பொஹிமியாவில் (ரொமேனியா) ஒரு (கிறிஸ்துவ) கருந்துறவிகள் மொனாஸ்ட்ரி இருந்தது. மிக, மிக தீவிர விரதம் எடுத்தவர்களே இதில் துறவிகளாக சேரமுடியும். குறைவாக உண்பார்கள், குறைவாக உறங்குவார்கள், கடுமையாக பிரார்த்தனை செய்வார்கள், எந்த தவறான எண்ணமும் மனதில் வராமல் பார்த்துக்கொள்வார்கள். இவ்விரதங்களில் சிறுபிழை நேர்ந்தாலும் தம்மையே சாட்டையடிக்கு உட்படுத்துவது, கடுமையான முறையில் மரணதண்டனை பெறுவது என்பது போன்ற விதிகள் உண்டு.

இதில் ஒரு துறவி ஒரு பிழை செய்த்தால் அவருக்கு மரணதண்டனை என முடிவானது. அதாவது சுவரில் வைத்து உயிருடன் புதைத்துவிடும் தண்டனை. நாளை காலையில் தண்டனை நிறைவேற்றம் எனும் நிலையில் அசரீரியாக அத்துறவியிடம் கடவுள் "உலகின் மிகச்சிறந்த ஞானம் அனைத்தும் இருக்கும் நூல் ஒன்றை இரவுக்குள் எழுதுவதாக மற்ற துறவிகளிடம் கூறு. அப்படி செய்தால் உனக்கு விடுதலை கிடைக்கும்" என்றார். துறவியும் அவ்வாறே கூற "அது எப்படி ஒரு இரவில் அப்படி ஒரு நூலை எழுத முடியும்?" என மற்ற துறவிகள் கேட்டாலும் அதன்பின் அப்படி செய்தால் விடுதலை அளிப்பதாக ஒப்புக்கொண்டார்கள். இரவு முழுக்க எழுத ஆரம்பித்தும் நூலை எழுதி முடிக்க முடியாத நிலை. கடவுளை உதவிக்கு அழைத்தும் அவர் வரவில்லை. அதனால் கோபத்தில் அத்துறவி சைத்தானை வேண்டி "என் ஆன்மாவை உனக்கு கொடுத்துவிடுகிறேன். நூலை எழுதிக்கொடு" என வேண்டினார். சாத்தானும் அதன்பின் ஒரே இரவில் நூலை முடித்துக்கொடுத்து அத்துறவியை காப்பாற்றினான்.

இதுதான் அந்த நூலைப்பற்றிய தொன்மம். இத்தொன்மம் ஏன் பிறந்தது என ஆராய்கையில் அதற்கான காரணங்கள் புலப்பட்டன. இந்த நூலில் உள்ள சாத்தானின் படம் அக்காலகட்டத்தில் மிகப் புதுமையானதாக இருந்தது. இதுபோல தனியாக இருக்கும் சைத்தானின், அச்சமூட்டும் படம் அக்கால பைபிள்கள் எதிலும் இல்லை.
 அதுதவிர நூலை எழுத அசாதாரண உழைப்பு தேவைப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஒரு பிழை நேர்ந்தாலும் அந்த பக்கத்தை மொத்தமாக கிழித்துவிட்டு புதிதாக எழுதவேண்டும். மையை தயாரிப்பது, பேப்பரை தயாரிப்பது எல்லாம் எழுத்தாளரே செய்யவேண்டும். சித்திரமும் அவரே வரையவேண்டும். பேஜ் லே அவுட் எல்லாம் செய்யவேண்டும். பேப்பர் இல்லாத காலகட்டத்தில் ஆட்டுத்தோலில் சில புராசஸ் செய்துதான் தாள் தயாரிக்கவேண்டும்.

ஆக மிகப்பெரிய டீமாக தான் அன்றைய நூல்கள் எழுதபப்ட்டன. அதற்கு வருடக்கணக்கில் கால அவகாசமும் எடுத்தது. இத்தனை பெரிய சைஸில் எந்த நூலும் அன்று கிடையவும் கிடையாது (நூல் எடை சுமார் 100 கிலோ). ஆனால் இந்த நூல் மெகாசைஸ் நூல், சித்திர வேலைப்பாடுகள் நிரம்பிய நூல், நூல் முழுக்க ஒருவரால் எழுதபட்டது என கையெழுத்தை ஆராய்கையில் தெரிந்தது...தவிரவும் நூலில் சைத்தான் உள்ள பக்கம் மட்டும் கருத்திருந்தது. பிறபக்கங்கள் வெண்மையாக இருந்தன.

டாக்குமெண்டரியில் இந்த புதிரை விஞ்ஞானிகள் விடுவித்ததை காட்டினார்கள். முதற்கண் நூலில் கையெழுத்து ஆய்வு நடத்தபட்டது. அது நூலை எழுதியவர் ஒருவரெ என காட்டியது. நூலை எழுத எத்தனை நாளாகும் என ஆராய்ந்ததில் இரவு,பகல் ஒரு செகண்டு ஓய்வெடுக்காமல் எழுதி இருந்தால் சுத்தமாக ஐந்து வருடம் ஆகும் என தெரிந்தது. உறக்கம், ஓய்வு எல்லாம் சேர்த்தால் 25- 30 ஆண்டுகளில் நூலை எழுதியிருக்க சாத்தியமுண்டு.

அதன்பின் நூலை எழுதியவர் ஹெர்மன் என்ற பாதிரியார் (Herman the recluse) என்ற புதிரும் நூலின் கடைசிபக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. பெயரை லட்டினில் தவறாக எழுதியிருந்ததால் இத்தனை நாளாக யாரும் அதை கண்டுபிடிக்கவில்லை.. ஆனால் தனி அறையில் இருந்த ஹெர்மன் (Herman the recluse) என்பதை உயிரொடு புதைக்கபட்ட ஹெர்மன் என பலரும் தவறாக புரிந்துகொண்டதால் இப்படி ஒரு கதை எழுந்ததாக தெரிந்தது. ஹெர்மன் தன் சர்ச்சுக்கு மிகப்பெரும் கொடையை அளிக்க விரும்பி இரவு, பகலாக தனி அறையில் இருந்து நூலை எழுதி முடித்தார். எழுதி முடித்ததும் நூல் இன்னொரு சர்ச்சுக்கு நல்ல விலைக்கு விற்கபட்டது. அந்த சர்ச்சில் அதை ஏசுவின் கல்லரை இருந்த மண் அருகே வைக்க அப்போது பிளேக் நோய் வந்து அந்த சர்ச்சில் பலரும் இறந்தார்கள். ஆக நூலின் பெயர் கெட ஆரம்பித்தது. அதில் பேயை ஓட்டுவது, பிசாசை ஓட்டுவது போன்ற பல மாந்தீர்கங்கள் விவரிக்காப்ட்டிருந்தன. அதனால் அன்றைய ரோமானிய மன்னர் அந்த நூலை எடுத்துபோனார். அவர் வாரிசின்றி இறந்தார். அதன்பின் நூலை ஸ்வீடிஷ் படைகள் கைப்பற்றி ஸ்டாக்ஹோம் நகருக்கு கொண்டு சென்றன. இன்றூவரை நூல் ஸ்டாக்ஹோம் நூலகத்தில் பத்திரமாக உள்ளது

சாத்தான் படம் மட்டும் ஏன் கருப்பானது?

நூல் தோலில் எழுதபட்டது எனபபர்த்தோம். தோலின் மேல் வெயில் பட்டால் அது கருக்கும். எட்டுநூறு ஆண்டுகளில் நூலைபார்க்கும் யாரும் முதலில் பார்ப்பது சாத்தான் படத்தைத்தான். பிற பக்கங்களை அவர்களில் பலரும் தொடக்கூட இல்லை. அதனால் வெயில் பட்டு சாத்தான் பக்கம் இருந்த தோல் கருத்துவிட்டது

இதுவே சைத்தான் எழுதிய பைபிளின் சுவாரசியமான கதை

Authored by: செல்வன்

No comments:

Post a Comment