Thursday, March 26, 2015

ஆடானையப்பர் ஆலயம் - பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலம்

-- சொ.வினைதீர்த்தான்

ஆடானையப்பர் ஆலயம்
பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலம் வழிபாடுதிருவாடானை அரசு கலைக்கல்லூரி மணிமேகலை காப்பியம் குறித்த பயிலரங்கில் உரையாற்றச்சென்றிருந்தபோது 23.3..2015 மாலை பாண்டியநாட்டில் பாடல்பெற்ற பதினான்கு கோவில்களில் ஒன்றாகிய ஆடானையப்பர் கோவிலில் வழிபட்டுவந்தேன்.

 
இராமநாதபுரம் சமத்தானத்தின் ஆளுகைக்குட்ட நகரத்தார் திருப்பணியான கோவில் குடமுழுக்கு காணவிருக்கிறது. அருமையான சிற்பத்தொகுதிகள் நிறைந்த 130 அடி ஒன்பதுநிலை கோபுரத்திற்கு வண்ணபூச்சு வேலை பூர்த்தியாகவிருக்கிறது.


1.ஆடானையப்பர், ஆதிரத்னேசுவரர், அஜகஜேசுவரர் என்று பெருமான் அழைக்கப்படுகிறார். நல்லவேளை ஊர் அஜகஜேஸ்வரம் என்றில்லாமல் ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தப்பெருமான் அழைத்த ஆதியான் உறை ஆடானை  என்ற பெயரிலேயே திருவாடானை எனப்பதிவாகிவிட்டது.

புராணக்கதை மிகவும் பொருள்பொதிந்தது. வருணன் மகன் வாருணி என்பான் துர்வாசமுனிவரின் வேள்விக்கு இடையூறு செய்துவிடுகிறான். கோபத்திற்கு பெயர்போன துர்வாசர் மரபுக்குப்பொருந்தாத செய்கை புரிந்ததால் ஆட்டின் தலையும் யானையின் உடலும்கொண்ட பொருந்தா உருவமடையுமாறு வாருணிக்குச் சாபம் அளித்துவிடுகிறார். ஆட்டின் வாயால் யானை உடலுக்கு ஏற்றவாறு உண்ணமுடியாமல் அவன் பசிப்பிணியடைகிறான். மணிமேகலை கதையில் வருகிற காயசண்டிகையும் கூட ஒரு முனிவர் உண்ண வைத்திருந்த அருங்கனியை அவர் குளிக்கச்சென்றிருந்தபோது சிதைத்துவிடுவதால் தீராப்பசி நோய்க்கு ஆளாகும்படி முனிவருடைய சாபத்தைப்பெறுகிறாள். பின்பு அமுதசுரபி உதவியால் அவள் பசிப்பிணியை பாரகம் அடங்கலும் பசிப்பிணி தீர்த்த பாவையாகிய மணிமேகலை போக்குகிறாள். இங்கு வாருணி சூர்ய தீர்த்தத்தில் மூழ்கி சிவனை வழிபட்டுச் சாபவிமோசனம் பெறுகிறான்.
 
ஒருவன் பொருந்தாத செய்கை செய்தால் என்ன நிகழும் என்பதை இத்தொன்மக் கதைகள் உணர்த்தும் செய்தியாக நான் மாணவர் பயிலரங்கில் பகிர்ந்துகொண்டேன். மாணவர்கள் படிக்கும் காலத்தில் மாணவருக்குப் பொருந்தாத செயலில் ஈடுபட்டால் துன்பப்படவேண்டும் என்பதை உணர்த்தினேன்.
 
2.முன் மண்டபம் வித்தாரமான கல்திருப்பணி. 108 தூண்கள். பெரும்பாலும் வடிவங்கள்,பூக்கள்,பறவைகள் என்ற வகையில் பலநூறு புடைப்புச்சிற்பங்கள். தூண்களின் வரிசையும் ஒழுங்கும் அத்தூண்கள் தாங்கும் கல்பலகைகளின் வேலைப்பாடும் கவர்வன. 

3.திருச்சுற்று மண்டபத்தில் அறுபத்துமூவர் பத்தியில் ஒவ்வொரு அடியாருக்கும் மேலே சுவரில் அவருடை வண்ணத்திருவுரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது வேறெங்கும் காணக்கிடைக்காதது.

 
4.ஆலமர்செல்வனின் மண்டபம் அழகான சிற்ப தூண்களுடன் கருங்கல் திருப்பணி.சனகாதி முனிவர்கள் நால்வரும் வரிசையில் அமர்ந்துள்ளனர்.
 

5.இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் “ஆசாரபக்தியுடன் ஞானாகமத்தையரு ளாடானை நித்தமுறை பெருமாளே” என்று ஞானம் பெற வழிகாட்டியவனெனத் தொழுகிறார்.
 
 
6.ஆதிரெத்னசுவரர் என்ற திருப்பெயருடனும் அழைக்கப்படுகிற சிறிய இலிங்கத் திருவுரு இரத்தினம்போல விளக்கொளியில் ஒளிவிடுகிறது.

7.சுவாமியின் இடப்பக்கத்தில் கிழக்கு நோக்கி முன்மண்டபம், சுற்றுப்பத்தி என்று பரந்த தனிக்கோவிலில் அம்பிகை அன்பாயி, அன்பாயிரவல்லி, சினேகவல்லி என்ற திருபெயர்களோடு அருளாட்சி செய்கிறாள். வல்லி என்றாள் கொடி. அன்பு,சினேகம் ஒரு கொடியாகத்தழுவினால் எவ்வளவு பேறு!
 
8.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை மலரால் அர்ச்சித்து மனதால் சிந்தித்து நாவால் அவன் புகழ்பாட வளமெல்லாம் பெருகும் என்பது உறுதியென திருஞானசம்பந்தர் பதிகம் அருளியுள்ளார். “போதினார் புனைந்து ஏத்துவார்தமை வாதியா வினைமாயுமே”என்பதும்”அங்கை யானுறை யாடானை நாதனை தன்கையால் தொழுதுஏத்தவல்லவர் மங்கு நோய் பிணிமாயுமே” என்பதும் அவருடைய திருவாக்கு.

  
திருக்கோவில் படங்கள் பகிர்ந்துள்ளேன்.  நண்பர்கள் ஆதிரத்னேசுவரர் என்னும் ஆடானைஅப்பர், சினேகவல்லித்தாயார் அருள்பெற வாழ்த்துகிறேன்.
 
 


  
 
 


No comments:

Post a Comment