Wednesday, August 16, 2017

ஊத்துக்குளிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

முன்னுரை:
அண்மையில், கோவையைச் சேர்ந்த அசோக் என்னும் இளைஞர், ஊத்துக்குளியில் இருக்கும் பழங்காலக் கிணறு ஒன்றைப் பார்வையிட்டு அது பற்றிய கருத்துச் சொல்லவேண்டி ஊத்துக்குளிக்கு அழைத்துச் சென்றார். ஊத்துக்குளியில் கைத்தமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் சாலையோரத்திலேயே இந்தக் கிணறு அமைந்துள்ளது. கிணறு பல காலமாக நீரின்றிப், பொறுப்பறியா மக்களால் குப்பை கொட்டுமிடமாக மாற்றப்பட்டு வந்துள்ளது. அண்மையில், இப்பகுதியில், சுற்றுச் சூழல், இயற்கை உணவு, இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர் குழுவொன்று, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பணிகளைச் செய்து வருகின்றது. அக்குழுவினர், மேற்படி கிணற்றைக் கண்ணுற்று, குப்பைகளை முழுதும் அகற்றியதோடு இதன் வரலாறு பற்றி அறிந்து வெளிப்படுத்தும் முயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கிணறு தூய்மையாகக் காணப்படுகிறது. மழை பெய்தபின் சிறிது நீரும் காணப்படுகிறது.

பழங்கிணறு-படிக்கிணறு:
இக்கிணற்றின் ஒட்டுமொத்தத் தோற்றமே இதன் பழமையை எடுத்துக் காட்டுகிறது. கிணறு முழுதும் கல்கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. ”படிக்கிணறு”  (STEP-WELL)  என்னும் வகையைச் சேர்ந்தது.  வடநாட்டில் குஜராத், இராஜஸ்தான், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், கருநாடகத்தில் விஜய நகர அரசின் தலை நகராய் விளங்கிய ஹம்பியிலும் படிக்கிணறு வகைக் கிணறுகள் உள்ளன. மொத்த எண்ணிக்கை  பத்துக்கு மேல் இரா எனத்தெரிகிறது. இவை, எண்ணற்ற படிகளைக்கொண்ட வடிவமைப்புக்கும், அழகான கட்டிடக் கலைக்கும் பேர் பெற்றவை. தமிழகத்தில் இத்தகைய படிக்கிணறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தில் திருவெள்ளறை என்னும் ஊரில் உள்ள படிக்கிணறு “நாலுமூலைக் கிணறு”  என்றும், “ஸ்வஸ்திகா கிணறு”  என்றும் அழைக்கப்பெறுகின்றது. கல்வெட்டில் இக்கிணறு “மாற்பிடுகு பெருங்கிணறு”  என்று குறிக்கப்படுகிறது. இது பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் கம்பன் அரையன் என்பான் வெட்டுவித்தது. மற்றொன்று மயிலாடுதுறையில் உள்ள குளம் ஒன்று படிக்கிணறு வடிவத்தை ஒத்துள்ளது.

ஹம்பி - படிக்கிணறு
 
மயிலாடுதுறை - படிக்கிணறு வடிவமுள்ள குளம்
 
 

திருவெள்ளறை-மாற்பிடுகு பெருங்கிணறு
  
 
திருவெள்ளறைக் கிணறு - உட்புறத்தோற்றம் 
 

 
ஊத்துக்குளிப் படிக்கிணற்றின் சிறப்பு:
தமிழகத்தில் உள்ள மேற்குறித்த திருவெள்ளறை மாற்பிடுகுப் பெருங்கிணற்றை (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு-பல்லவர் காலம்)  ஒத்த வடிவமைப்பில் ஊத்துக்குளிக் கிணறும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. திருவெள்ளறைக் கிணற்றில் மையத்தில் சதுரமாக உள்ள கிணற்றுப்பகுதியைச் சுற்றிலும் நான்கு பக்கங்களில் படிகளோடு கூடிய நான்கு வழிகள் கீழிறங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளிக் கிணற்றுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்த வேற்றுமை தவிர இரண்டுமே ஒத்த தோற்றத்தைக் கொண்டுள்ளன. இரண்டிலுமே, கிணற்றின் சுற்று வடிவ விளிம்பின் (எல்லைச் சுவர்) மேற்பகுதியில் சதுரப் பரப்பாயில்லாமல் உருள் வடிவம் கொண்டுள்ளது. இதைப் பார்க்கையில், தஞ்சைப் பெருங்கோயிலின் அதிட்டானப்பகுதியில் உள்ள உருள் குமுதப்படையின் தோற்றம் நினைவுக்கு வரும். அழகான கட்டுமானம்.

ஊத்துக்குளிப் படிக்கிணறு-பல தோற்றங்கள்


கிணற்றுக்குள் வேலைப்பாடுள்ள தூண்கள்

திருவெள்ளறைக் கிணற்றின் சுற்றுவடிவ விளிம்புகள் சிற்பங்கள் எவையுமின்றி வெற்று விளிம்புகளாயுள்ளன. ஆனால், ஊத்துக்குளிக் கிணற்றின் விளிம்புகள் சிற்பங்களைக்கொண்டிருக்கின்றன. சதுரப்பகுதியின் நான்கு விளிம்புகளிலும் நான்கு நந்திச் சிற்பங்களும், நுழைவு வாயிலின் விளிம்புகள் இரண்டில் இரண்டு யாளிச் சிற்பங்களும் உள்ளன. இவை தவிர, தரையிலிருந்து முதன்முதலாய்க் கீழிறங்கும் நுழைவுப்பகுதியில் இரண்டு யானைச் சிற்பங்கள் உள்ளன. கிணற்றின் உள்பகுதியில், வேலைப்பாடுகள் அமைந்த இரு தூண்களும் அவற்றின் குறுக்கே விட்டம்போல் கிடத்தப்பட்ட ஒரு கல்லும் சேர்ந்து ஒரு தோரணவாயில் போலத் தோற்றம் அளிக்கும் அமைப்பும் காணப்படுகிறது. இந்தத் தூண் தோரணம், கிணற்றின் மேல் பகுதியில் நீரை இறைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏற்றத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது. ஏற்றத்தின் கிடைமட்டக் கல்துண்டுகள் தூண்களையும் தாண்டி நீண்டுள்ளன. கிணற்றின் இரு பக்கங்களில், தரையிலிருந்து நேரடியாக இறங்கும் வண்ணம் ஆறு பெரிய கற்கள் செருகப்பட்டுள்ளன. தூண்கள், அடிப்பகுதியில் சதுரம், நாகபந்தம், பதினாறு பட்டைகள் கொண்ட சித்திரக் கண்டக் கால்கள், கலசம், தாடி, தாமரை, பலகை ஆகிய கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளன. தூணின் உச்சியில் யாளி முகம் காணப்படுகிறது. தூணின் சதுரப்பகுதியில் அன்னம், சிங்கம், சூலம் போன்ற புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இது போன்ற தூண் வேலைப்பாடு திருவெள்ளறைக் கிணற்றில் இல்லை.

கிணற்றின் உட்புறச் சுவர்கள் முழுதும் ஆங்காங்கே சிறு சிறு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனித முகம், நின்ற நிலையில் மனித உருவம், வணங்கும் நிலையில் மனித உருவம், லிங்கம், பூதகணத்தின் முகம், பிள்ளையார், குட்டியை ஏந்திய குரங்கு, குத்துக்காலிட்ட நிலையில் சிங்க உருவம், மீன் உருவம், ஆமை உருவம், நாயும் பன்றியும் இணைந்த உருவம், யாளி, தனித்த ஒரு நாயின் உருவம், இரண்டு யானைகள் போரிடும் காட்சி ஆகியவை புடைப்புச் சிற்பங்களாய் உள்ளன.
 
புடைப்புச் சிற்பங்கள் சில







யாளிச் சிற்பம்

கிணற்றின் காலம்:
ஊத்துக்குளிக் கிணறு கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இளைஞர்களின் நற்பணி:

ஊத்துக்குளிக் கிணறு, முன்பே தொல்லியல் துறை சார்ந்த ஆய்வர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. ஆனால், நானூறு ஆண்டுப்பழமையுள்ள இக்கிணறு பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்திகள் வெளியாகவில்லை என்றே தோன்றுகிறது. கிணற்றின் வரலாற்றுச் சிறப்பு மக்களை எட்டவேண்டும். இதன் சிறப்புணர்ந்து ஊர் மக்கள் இக்கிணற்றை முறையாகப் பாதுகாத்து, எதிர்வரும் சந்ததியினர்க்குக் கொண்டு சேர்க்கவேண்டும்.

கிணறு, பராமரிப்பின்றிப் புறக்கணிக்கப்பட்டுக் குப்பை கொட்டுமிடமாகக் கிடந்த அவல நிலையில், “இயல்வாகை” என்னும் பெயரில் இயங்கும் இளைஞர் அணியினர், பெரும் முயற்சியெடுத்து நான்கைந்து முறை கிணற்றைத் தூய்மைப்படுத்தி இன்றைக்குள்ள நிலைக்குக் கொணர்ந்துள்ளனர். அவர்களோடு இணைந்து பணியாற்றியவர்கள் “பசுமை வனம்” என்னும் மற்றொரு குழுவினர் ஆவர். பள்ளிக் குழந்தைகளும் இந்தப் பணியில் சேர்ந்துகொண்டனர் என்பது சிறப்பு. வரலாற்றை வெளிப்படுத்த ஆர்வம் கொண்டுள்ள இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.

மேலும் சில தொல்லியல் தடயங்கள்:
கோவை நண்பரும் வரலாற்று ஆர்வலருமான பாஸ்கரன் அவர்கள், தாம் ஊத்துக்குளிப் பகுதியில் பயணம் மேற்கொண்டபோது, கல்திட்டை, கல்வட்டம் ஆகிய பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பதைக் கண்டதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் தொலைபேசியில் பேசி, அச்சின்னங்கள் இருக்குமிடத்தைப் பற்றி அறிந்துகொண்டபின், அவற்றைப்பார்க்க முடிவு செய்து, என்னை அழைத்துவந்த கோவை அசோக்குடனும் இயல்வாகைக் குழுவைச் சேர்ந்த அசோக், அழகேசுவரி, ஈரோட்டைச் சேர்ந்த, இயற்கை வேளாண்பொருள் அங்காடி நடத்தும்  ஜெகதீசன் ஆகியோருடனும் பயணப்பட்டோம். மாடுகட்டிப்பாளையம் என்னும் ஊர்ப்பகுதியில் மேலே குறிப்பிட்ட பெருங்கற்காலச் சின்னங்களைக் காணுவது நோக்கம். உடன் வந்த அனைவருக்கும் வரலாற்று எச்சங்களாக இன்றும் காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்கள் பற்றிய அறிமுகம் இல்லை. அவர்களுக்கு அவற்றைப் பற்றிய சில செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப் படுகின்றன.

பெருங்கற்காலச் சின்னங்கள்:

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சங்ககாலம் அல்லது வரலாற்றுக் காலம் என்று குறிப்பிடப்பெறும் காலத்துக்கு முன்னர் தமிழகத்தில் இரும்புப் பயன்பாடு விளங்கிய காலகட்டத்தில் மக்களின் வாழ்வியலில், இறந்தோர் நினைவாக ஈமச் சின்னங்களை அமைத்து வழிபடும் மரபு இருந்துள்ளது. இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் அப்போது இருக்கவில்லை. இறந்தவர்களின் உடலைக் குறிப்பிட்ட ஒரு வெளியில் இடுவதுதான் வழக்கமாக இருந்தது. இயற்கைச் சூழலில் விலங்குகளும், பறவைகளும் உடலைத் தின்று முடித்தபின்னர், எலும்புகளைக் கொணர்ந்து புதைவிடத்தில் புதைப்பர். இறந்தோர் பயன்படுத்திய சிறு பொருள்களையும் அந்தப் புதைவிடத்திலேயே வைப்பர். புதைவிடத்தின் அடையாளம் தெரியவேண்டி அதைச் சுற்றிலும் பெரும் பலகைக் கற்பாறைகளை நான்கு பக்கங்களிலும் நிறுத்தி, அதன் மேற்பகுதியைப் பெரியதொரு பலகைக் கல்லைக் கொண்டு மூடிவிடுவர். முகப்புப் பகுதியில், முழுதும் மூடாமல் வாயில் போன்று திறப்பு இருக்கும்படி அமைத்திருப்பார்கள். இந்த அமைப்பு, கல்திட்டை எனப்படும். தரையின் மேல் பகுதியில் திட்டை போன்று இருப்பதால் இது கல்திட்டை. ஆங்கிலத்தில் “DOLMEN”  என்பார்கள். இறந்தவர்கள் ஆவி வடிவில் இருந்து நன்மையும் வளமும் சேர்ப்பார்கள் என்பதான ஒரு நம்பிக்கையின்பால் எழுந்த வழக்கம். அடுத்து இன்னொரு வகைச் சின்னங்களில், புதைவிடத்தைச் சுற்றிலும் பெரும் பெரும் உருண்டைக் கற்களை வட்டமாக அடுக்கி அடையாளப்படுத்துவர். இது கல்வட்டம் எனப்படும். ஆங்கிலத்தில் இதனை “CAIRN CIRCLE”  என்பார்கள். இந்த நினைவுச் சின்னங்களில் பெரிய பெரிய கற்கள் பயன்பட்டமை கருதி இவற்றைப் பெருங்கற்சின்னங்கள் அழைக்கிறார்கள்.

பனியம்பள்ளியில் கல்திட்டைகள்:

மாடுகட்டிப்பாளையத்தை நோக்கி தொட்டம்பட்டி வழியாகப் பயணம் செய்யும்போது, மாடுகட்டிப்பாளையம் ஊரை நெருங்கும் முன்னரே ஒரு சாலைப்பிரிவு காணப்பட்டது. அங்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் பனியம்பள்ளி ஊராட்சி நீருந்து நிலையக் கட்டிடமும் அருகில் உயர்நிலை நீர்த்தொட்டியும் இருந்தன. அந்த இடத்தில் சாலையோரம் இரு கல்திட்டைகள் புலப்பட்டன.

முதல் கல்திட்டை:
முதல் கல்திட்டையில், சாலையிலிருந்து பார்க்கும் நேர்ப்பார்வையில், சாய்ந்த நிலையில் சுவர்போல இணைந்த இரண்டு பலகைக் கற்களும், அதன் மேல் ஒரு மூடு கல்லும் புலப்பட்டன. சற்று அருகில் சென்று அடுத்த பக்கத்தைப் பார்வையிடுகையில் அது, கல்திட்டையின் திறப்பு வாயில் என்பது புலப்பட்டது. மூன்றாவது பக்கத்தைப் பார்க்கையில், அங்கு, சுவர்போல ஒழுங்கான பலகைக் கற்கள் காணப்படவில்லை. சற்று ஒழுங்கற்ற இரண்டு பாறைக்கற்கள் சாய்ந்த நிலையில் காணப்பட்டன. நான்காவது பக்கத்தைச் சரியாகப் பார்க்கவொண்ணா நிலையில் சிறு சிறு வேப்ப மரங்களும் புதர்ச் செடிகளும் மூடியவாறு காணப்பட்டது. கலைந்துபோன நிலையில் கற்கள் இருப்பதாகத் தெரிந்தது.

 
முதல் கல்திட்டை

முதல் கல்திட்டை-வேறு தோற்றங்கள்


கல்திட்டைக்குள் ஒரு நடுகல்:
முகப்பிலுள்ள வாயிலுக்கருகில் சென்று பார்த்தால் ஒரு வியப்பான காட்சி. ஆண் உருவம் ஒன்றும், பெண் உருவம் ஒன்றும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு நடுகல் சிற்பத்தின்  அழகான தோற்றம். ஆணின் உருவம், இடப்புறமாகக் கொண்டை முடிந்து, மீசையுடன் காணப்படுகிறது. செவிகளிலும், மார்பிலும் அணிகலன்கள் உள்ளன. கைகளிலும் தோளிலும் வளைகள் உள்ளன. இடையில் ஆடைக்கச்சு உள்ளது. வலது கையில் ஒரு நீண்ட வாளினைத் தரையில் ஊன்றியவாறு வீரன் நிற்கிறான். அவனது இடையிலும் ஒரு குறுவாள் காணப்படுகிறது. அவனது இடது கை தொங்கிய நிலையில் காணப்படுகிறது. விரல்களில் மோதிரங்கள் தெரிகின்றன. பெண்ணின் உருவம் வலப்புறமாகக் கொண்டை முடிந்து தலையில் அணிகலன்களோடு காணப்படுகிறது. கழுத்திலும் இடையிலும் அணிகலன்கள் உள்ளன. கைகளில் வளைகள் உள்ளன. கைகளில் எதையும் ஏந்தியிருப்பதாகத் தெரியவில்லை. வலது கையை மடக்கியவாறு உயர்த்தியும், இடதுகையை நேராகத் தொங்கவிட்டும் நிற்கிறாள். இடையாடை கீழே கால்வரை காணப்படுகிறது. கால்களில் கழல்கள் உள்ளன. வீரனுக்கு மட்டும் எடுக்கப்பட்ட நடுகல்லாக இருப்பின் பெண்ணின் கைகளில் மதுக்குடுவை ஒன்று காணப்படுவது வழக்கம். இங்கு அவ்வாறில்லாமல் ஆண், பெண் இருவர் சிற்பங்கள் ஒன்றாகக் காணப்படுவதால், இது ஒரு சதிக்கல்லாக இருக்கக்கூடும். அல்லது மனைவியோடு காட்டப்பெற்ற வீரனின் நடுகல்லாக இருக்கக்கூடும்.
கல்திட்டைக்குள் ஒரு நடுகல் சிற்பம்


இரண்டாம் கல்திட்டை:
இரண்டாம் கல்திட்டையிலும் நான்குபுறமும் பலகைக்கல் சுவர்களும், முன்புறம் திறப்பு வாயிலும் உள்ளன. இங்கும் ஒரு நடுகல் சிற்பம் உள்ளது. அது வெளிப்புறத்தில் சாய்க்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண், பெண் உருவங்கள் உள்ளன. உருவங்கள் தெளிவாக இல்லை. ஆடை, அணிகள் புலப்படுகின்றன. பெண்ணின் இடப்புறம் காலடியில் ஒரு சிறிய மனித உருவம்போல் தோன்றுகிறது. அது ஒரு குழந்தையின் உருவமாயிருக்குமோ என்னும் ஓர் ஐயத்தை ஏற்படுத்துகிறது. 

இரண்டாம் கல்திட்டையின் சில தோற்றங்கள்
       
இரண்டாம் கல்திட்டை அருகில் உள்ள நடுகல் சிற்பம்


மாடுகட்டிப்பாளையம் பெருங்கற்காலச் சின்னங்கள்:
அடுத்து, பனியம்பள்ளியிலிருந்து மாடுகட்டிப்பாளையம் ஊரை நோக்கிப் பயணப்பட்டோம். ஓரிரு கி.மீ. தொலைவில் ஊர் இருந்தது. அங்கு சிலரிடம் கல்வட்ட அமைப்பை எடுத்துச் சொல்லி, அவ்வாறு ஏதேனும் கற்சின்னங்கள் உள்ளனவா எனக்கேட்டோம். சிலர் சாலையிலிருந்து சற்றுத்தள்ளியிருந்த இரயில் பாதைக்கருகில் பெருங்கற்கள் காணப்படுவதாகக் கூறவே அங்கு சென்று பார்த்தோம். கல்வட்டங்கள் இருந்ததற்கான தடயங்கள் அங்கு இருந்தன. இரயில் பாதை அமைக்கும் பணியில் நிறையக் கற்கள் கலைக்கப்பட்டுச் சிதறல்களாக இருந்தன. பெரும்பாலும் கல்வட்டங்களில் காணப்பெறும் கற்கள், ஓர் ஒழுங்கு முறையில் வடிக்கப்பட்ட உருண்டைக் கற்களாக அமையும்   இங்கு அவ்வாறான உருண்டைக் கற்கள் காணப்படவில்லை. ஒழுங்கற்ற வடிவில் பெருங்கற்கள் இருந்தன. கல்வட்டத்தின் ஒரு முழுத்தோற்றம் அங்கு எங்களுக்குக் கிட்டவில்லை.
 
இரயில் பாதைக்கருகில் பெருங்கற்களின் எச்சங்கள்

 
 கல்வட்டங்கள்:
அங்கிருந்து அகன்று, விஜயமங்கலம் சாலையில் சற்றுத் தொலைவு சென்றதுமே, சாலையோரம் வலது புறத்தில் ஒரு காட்சி எங்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. சாலையோர வேலிக்கப்பால், செடிகளோ புதர்களோ இன்றிச் செம்மண் நிலம் ஒன்று கண்முன்னால் பரந்துகிடந்தது. அந்த நிலத்தில் கல்வட்டங்கள் இரண்டு மூன்று, சிதையாமல் வட்ட வடிவத்துடன் அருமையாகத் தோற்றமளித்தன. அந்த நிலப்பரப்பிற்குள் செல்ல இயலாதவாறு தார்ச்சாலைக்கருகில் நெடுகவும் நெருக்கமான வேலி இருந்தது. எனவே, நாங்கள் வேலியை ஒட்டி நடந்துசென்று ஒரு வீட்டை அடைந்தோம். வீட்டு உடைமையாளர்தாம் அந்த நிலத்துக்கு உடையவரும். அவரிடம் பேசி, அவருடைய ஒப்புதலோடு அவர் திறந்துவிட்ட வேலித்திறப்பினுள் நுழைந்துசென்று கல்வட்டங்களைப் பார்வையிட்டோம்.
கல்வட்டங்கள்


 ஆட்டுப்பட்டியின் அழகான தோற்றம்

 மூன்று கல்வட்டங்கள் நல்ல நிலையிலும், ஒரு கல்வட்டம் அரைவட்டப்பகுதியாகச் சிதைவுற்றும், மற்றொன்று கற்கள் சிதறிய நிலையிலும் காணப்பட்டன. நிலத்தில், ஒரு  ஆட்டுப்பட்டி அழகாகக் காட்சியளித்தது. நிலத்து உடைமையாளர் பெயர் மகேசுவரன். அவருடைய பாட்டன் காலத்திலிருந்து அந்தக் கல்வட்டங்கள் இருந்துள்ளன என்றும், நிலத்தைப் பண்படுத்தும் ஒவ்வொரு முறையும் கல்வட்ட அமைப்புகளைச் சிதைக்காமல் விட்டுவைத்திருப்பதாகவும் அவர் கூறியது எங்களுக்கு மிக வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளித்தது. அத்தி பூத்தாற்போல் ஒரு சிலர் இதுபோன்ற நன்மையாளர்களாயிருக்கின்றனர்.
 
கல்வட்டங்கள்

 
தொடர்ந்து இக்கல்வட்டங்களை இன்றுள்ளவாறே பேணவேண்டும் என்னும் கோரிக்கையோடு அவருக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி விடைபெற்றோம்.
___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

மானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில்

கோயில் நிர்வாகத்தால் புணரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட கோயில் தான் மானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில். அதன் சிதைக்கப்பட்ட பகுதிகளின் சில புகைப்படங்கள்.

நன்றி திரு.நூ த லோ சு
























Monday, August 14, 2017

கோழியூர்க் கதைகள்

-- தேமொழி 





வைதீக இந்து சமயமும், அதன் உட்பிரிவுகளும் எண்ணிலடங்கா புராணங்கள் என்ற தொன்மப்புனைவுகளின் பிறப்பிடம். தொன்மப் புனைவுகளின் நோக்கம் சமயப்பற்றை, இறைநம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் கற்பனையுடன் இணைத்து, அவற்றில் சில  நன்னெறிகளைக்  கலந்து மக்களுக்குக் கதைவடிவில் கொடுப்பது.  வெறும் கருத்துகளாகப் படிப்பதைவிட கதைகள் வடிவில் கொடுக்கப்படும் கருத்துகள் மக்கள் நினைவில் தங்கும். 

எடுத்துக்காட்டாக, ஒற்றுமையாய் வாழவேண்டும் என்பதை வலியுறுத்த வேடனின் வலையில் அகப்பட்ட பறவைகள் அனைத்தும் ஒன்றாகப் பறந்து தப்பிவிடுவது,  பிரிந்திருந்த காளைகள் சிங்கத்தை எதிர்கொள்ள ஒற்றுமையாக அதனை எதிர்ப்பது,  வெற்றி உறுதி என நினைத்துத் தூங்கி ஓய்வெடுத்த முயலை, மிக மெதுவாக ஊர்ந்தே  வெற்றி கண்ட  ஆமையின் கதை எனச் சிறுவயதிலிருந்து பலகதைகள் நன்னெறிக் கதைகளாகப் படித்துள்ளோம்.

சமயம் அடிப்படையில் உள்ள கதைகளும் நன்னெறிகளை நுழைத்துச் சொல்லும் வகையில் அமைக்கப்பட்டன.  எடுத்துக்காட்டாகத் தந்தை  சொல் மீறாத இராமன் அரசபதவியை விட்டு காட்டுக்குச் சென்றது,  எத்தகைய இடர் ஏற்பட்டாலும் உண்மையையே பேசிய அரிச்சந்திரன், ஏழை நண்பன் குசேலன் தன்னைக் காணவந்த பொழுது பேதம் பாராமல் நட்புப் பாராட்டி, நண்பன் கொண்டு வந்த அவலை விருப்பத்துடன்  ஏற்று உண்ட கண்ணன்,  தனக்கு வாழ்வளித்த காரணத்திற்காக தன் சகோதரர்களையும் எதிர்த்துப் போரிட்டக் கர்ணன் என்ற கதைகளும் காட்ட விரும்பியது அது போன்ற நன்னெறிகளே. 

இருப்பினும் காலப்போக்கில் தங்கள் நோக்கங்களை மக்களின் மனதில் திணிக்கும் நோக்கில் மனிதநேயத்திற்குப் புறம்பான கதைகளும் புராணங்களில் இடம்பெறத் துவங்கின.  இவை இக்கால மறுவாசிப்பில்,  உள்நோக்கத்துடன் சமூகத்தில் ஒரு சிலரை ஒடுக்கும் நோக்கில் புனையப்பட்டவை என்று அறியும் பொழுது, இன்றைய சூழல் அவற்றை ஏற்க மறுக்கும் மனப்பான்மையையும் தோற்றுவித்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, வர்ணாசிரமக் கொள்கைகளை வலியுறுத்தும் நோக்கில், துரோணரை மானசீகக் குருவாக மனதில் ஏற்றுக் கொண்டு,  சத்திரியர்கள் மட்டும் கற்க வேண்டிய வில்வித்தையைத் தானே தன்முயற்சியில்  கற்று அதில் சிறந்து விளங்கிய ஏகலைவனின் கட்டைவிரலை காணிக்கையாகக் கேட்ட துரோணரின் செய்கை, கற்பைச் சோதனை செய்யும் நோக்கில் சீதை தீக்குளிக்க வேண்டிய கட்டாயத்தைக் காட்டும் கதை, குலநெறிகளுக்குப் புறம்பாகத் தவம் செய்த காரணத்திற்காக இராமனால் கொல்லப்பட்ட சம்பூகன் போன்ற கதைகள் கூறப்பட்டதன் நோக்கம் இக்கால வாசிப்பாளர்களுக்கு அதிர்ச்சியைத் தரும்.

தலபுராணங்கள்:
இவ்வாறே, புராணங்களின் வரிசையில் திருத்தலங்களின் பெருமை கூறும் தலபுராணங்கள் எனப்படும் தொன்மப்புனைகதைகள் ஒவ்வொரு கோயில்களுக்கும் உண்டு.  இது கோயிலொழுகு, அதாவது கோயிலின் தொன்ம வரலாறு கூறுதல் என அறியப்படும்.  கோயிலொழுகுகள் கொண்ட தொன்மப்புனைவுகளில் ஊரின் வரலாறும் கலந்து இயற்றப்படுவதன்  நோக்கம் கோயில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் மக்களுக்கு விளக்குவதற்காக எடுக்கப்படும் ஒரு முயற்சி.  இக்கதைகளில் வரலாற்றுக் குறிப்புகளுடன்  இயற்கையில் நிகழ இயலாத நிகழ்வுகளும் பிணைந்திருப்பது வழக்கம். 

தேவாரப்பாடல்களில் பாடப்படும் பாடல்பெற்ற தலங்கள் என்ற முறையை ஒட்டி பிற்காலத்தில் எழுதப்பட்டவை  திருத்தலபுராணங்கள்.  எழுதப்படும் பாடல்கள் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன், இறைவி ஆகியோரின் அருட்செயல்கள், அடியார்களை ஆட்கொண்ட முறை, தேவர்கள் மற்றும் முனிவர்களுக்குக் கருணையுடன் துயர் தீர்த்த செய்கைகள் அதற்கு உதவிய கோயிலின் குளம், மரம், விலங்கு ஆகிய சிறப்புக்களை எடுத்தியம்பும். மனிதர்கள் மட்டுமன்றி விலங்கினங்களையும் கடவுள் உய்வித்த கதைகளும் பல உள்ளன.  மேலும் இந்திய அளவிலான இதிகாச  புராணக்கதைகளின் சிற்சில பகுதிகள் குறிப்பிட்ட ஊர்களில் நிகழ்ந்ததாகவும் காட்டப்படும்.  எடுத்துக்காட்டாகப் பாண்டவர்கள் வனவாசம் இருந்த பகுதி, சீதையைத் தேடி இராமன் சென்ற வழியில் உள்ள இடங்கள் என இந்துமதக் கதைகள் இந்தியமண்ணில் பல பகுதிகளுடன் தொடர்பு காட்டி இணைக்கப்படும்.  வசிட்டரும், அகத்தியரும், விசுவாமித்திரரும் பல கால எல்லைகளையும் கடந்து இந்தியாவின் பல பகுதிகளில் பயணித்திருப்பதும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய தலவரலாறு கூறும் செய்திகளை, ஐதீகங்களை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூசை, விழாக்கள், விரதங்கள், சாங்கியங்கள், சடங்குகள் போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன.

கோயிலொழுகு இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பொது ஆண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்திற்குப் பிறகு எனக் கருதப்படுகிறது. தமிழில் பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடற்புராணம் இவ்வரிசையில் முதலாவது எனப்படுகிறது. இடையே தலபுராணங்களின் வளர்ச்சி சற்றே தொய்வடைந்தாலும், விஜயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சியில்  தமிழகத்தில் மீண்டும் அவை வளர்ச்சியடைந்தன.  நாட்டுப் படலம், நகரப் படலம் போன்றவற்றை உள்ளடக்கி இலக்கியச் சுவையுடன், குறிப்பிட்ட ஊரின்  இயற்கையழகு பற்றியும், நிலவளம் பற்றியும், மக்களின் வாழ்க்கை பற்றியும் சிறப்பித்து மிகச் சிறந்த புலவர்களால் பாடப்பட்ட  தலபுராணங்கள் அவ்வூர் மக்களைக் கவர்ந்தன, பெருமை கொள்ளச் செய்தன.

டாக்டர். உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரும், 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவருமான திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (1815-1876)  திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தலபுராணங்கள் பாடினார்.  தங்கள் ஊர்களின் கோயில்களுக்கு இவரால் திருத்தல  வரலாறு பாடப்பெறுவதை அவ்வூர் மக்கள்  பெருமையாகக் கருதியதாகவும் தெரிகிறது.  "தமிழ் மரபு அறக்கட்டளை" நிறுவனம் தமிழக கோயில்களின் தலபுராணங்களை திரட்டும் திட்டத்தின் கீழ் பல திருத்தலபுராணங்களை (http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-09-27-01-35-50) சேகரித்துள்ளது. 

வரலாறும் புனைவும் கலப்பதால் இந்த இலக்கியங்களில் பொதுவாக வழக்கில் உள்ள பல கதைகளின் சாயல்கள் அமைந்துவிடும். அத்துடன் காலக்கோட்டில் அக்கறை செலுத்தாமல் புனையப்பட்ட வரலாறுகள் வரலாற்றுக் குழப்பத்தையும் உருவாக்கும்.  கதைகளைப் பிணைத்து ஒன்றின் மீது ஒன்று ஏற்றி கால எல்லைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது திருத்தல வரலாறுகள் புனையப்பட்டதற்கு ஓர் எடுத்துக்காட்டாக  கோழியூர் என்னும் உறையூர் குறித்த தலவரலாற்றுக் கதைகளை அடுத்து நாம்  காணுவோம்.

பீடார் உறந்தை என்ற கோழியூரின் தலவரலாற்றுக் கதைகள்:
சோழநாட்டின் மிகப்பழமையான தலைநகர் உறந்தை என்றழைக்கப்பட்ட உறையூர்.  சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய, கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றியப் பட்டினப்பாலை என்ற நூலில், 
"குளம் தொட்டு வளம் பெருக்கி
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி
கோயிலொடு குடி நிறீஇ
வாயிலொடு புழை அமைத்து" ( பட்டினப்பாலை: 284-287)
எனக் கரிகாலன் காலத்திலேயே உறந்தை புதுப்பிக்கப் பட்டதாகப் பட்டினப்பாலை கூறுகிறது.

உறையூருக்குக் கோழி அல்லது கோழியூர் என்ற பெயரும் உண்டு.   உறைந்தை, குக்கிடபுரி,  வாரணபுரி, வாரணம், உரபுரம், திருமுக்கீசுரம், நிகளாபுரி  என்று மேலும் பல  பெயர்களும் உறையூருக்கு உண்டு.  சேவல் ஒன்று யானையைத் தனது கால் நகங்களினாலும் அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடுமாறு துரத்தி வெற்றிகொண்டதால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படும்.  இக்கதையை  இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் காணலாம். 

"காவுந்தி யையையுந் தேவியுங் கணவனும்
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்"(246-248)
(சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/10. நாடுகாண் காதை)
என்ற வரிகளில், தவத்தானே மிக்க சிறப்பினையுடைய கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும், முறம் போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின்கண் விரும்பிப் புக்கார் என இளங்கோவடிகள் கோழியூர் கதையையும் குறிப்பிடுகிறார்.

உறையூரில் வாழ்ந்தவர்களாகப் பல சங்ககாலப் புலவர்களையும் அவர்கள் பெயரில் இருந்து நாம் அடையாளம் காணலாம். ஏணிச்சேரி முடமோசியார், கதுவாய்ச் சாத்தனார், சல்லியங்குமரனார், சிறுகந்தனார், பல்காயனார், மருத்துவன் தாமோதரனார், முதுகண்ணன் சாத்தனார் போன்ற புலவர்கள் பெயருடன் உறையூர் இணைந்தே வரும்.

சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தே, சோழர்களுக்கு உறந்தை, பூம்புகார் என இரண்டு தலைநகர்கள் இருந்தன.   அவற்றில் ஒன்றான உறந்தை என்னும் உறையூர், பண்டையச் சிறப்பு நலிவுற்று  இக்காலத்தில் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகிப்போனது.
"மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்"(3-4)
(சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/8. வேனிற் காதை) எனச் சோழர் தலைநகராகப் புகாரும், உறந்தையும் இருந்தது சிலப்பதிகாரத்தில்  குறிப்பிடப்படுகிறது.  மேலும்,

"...............  பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,
கோழி யோனே, கோப்பெருஞ் சோழன்"
(புறநானூறு - 212 பாடல்)
பாணரின் சுற்றத்திற்கு வழங்கி உதவுபவனாக இருக்கின்ற கோழியூரின் கோப்பெருஞ்சோழன் எனப்  பிசிராந்தையார் பாடும் பாடலை புறநானூறு காட்டுகிறது.

 கொல்லி காவலன் கூடல் நாயகன்
          கோழிக்கோன் குலசேகரன்
  சொல்லினின் தமிழ் மாலை வல்லவர்
          தொண்டர் தொண்டர்க ளாவரே
 (பெருமாள் திருமொழி 2ம் பத்து 10 ஆம் பாடல்)
என்ற பெருமாள் திருமொழி பாடல் கோழியின் மன்னவன் குலசேகரன் என்ற செய்தியைக் கூறுகிறது.

இனி கோழியூரின் திருத்தலவரலாறு என்று "108 - வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு" என்ற நூல் காட்டும் பகுதியைக் காணலாம்.

 உறையூர் என்னும் திருக்கோழி:

    " கோழியும் கடலும் கோயில் கொண்ட
          கோவலரே யொப்பர் குன்றமன்ன
     பாழியும் தோழுமோர் நான்குடையர்
          பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்
     வாழியரோ விவர் வண்ண மென்னில்
          மாகடல் போன்றுளர் கையில் வெய்ய
     ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
          அச்சோ ஒருவர் அழகியவா" (1762)
                       (பெரிய திருமொழி 9-2-5)

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார், திருநாகையில் (நாகபட்டினம்) உள்ள  சுந்தர்ராஜப் பெருமாளின் பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு  ஒப்பானதாகும் என்று கூறுகிறார்.

வரலாறு:
(தலவரலாறு கூறும் இப்பகுதி, நூலில் உள்ளவாறே எழுத்து மாறாமல் இங்குக் கொடுக்கப்படுகிறது - [1])

........ உறையூரில் தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த நந்தசோழன் என்னும் மன்னன் மிகச் சிறந்த பக்திமானாக அரங்கனுக்குத் தொண்டு செய்வதில் பேரவா கொண்டவனாயிருந்தான். புத்திரப்பேறில்லாத பெரும் கவலை மட்டும் அவன் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்கவே இதற்கும் ஸ்ரீரங்கநாதனே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான்.  பக்தனுக்கருளும் பரந்தாமன் வைகுண்டத்தில் இலட்சுமி தேவியைக் கடைக்கண்ணால் நோக்கி நந்தசோழனுக்கு புத்திரியாகுமாறு அருள,  உறையூரில் தாமரை ஓடையில் தாமரைப் பூவில் குழந்தையாக அவதரிக்க வேட்டைக்குச் சென்ற நந்தசோழன் அம்மகவைக்கண்டெடுத்தான். கமல மலரில் கண்டெடுத்தமையால் கமலவல்லி என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வர, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கமலவல்லி திருமணப் பருவம் எய்தினாள்.

ஒருநாள் ஸ்ரீரெங்கநாதன் குதிரை மீதேறி பலாச வனத்தில் வேட்டைக்கு வந்ததுபோல் உலாவர, தோழிமாருடன் அப்பக்கம் வந்த கமலவல்லி, எம்பெருமான் பேரழகைக்கண்டு யார் இவர் என வியந்தனள். தன் பேரழகை முழுவதும் எம்பெருமான் கமலவல்லிக்கு காட்டிமறைய, காதல் மோகத்தில் பக்தி வெள்ளத்தில் கலக்கலானாள் கமலவல்லி. மகளின் நிலைகண்டு என்னசெய்வதென்று தெரியாது மன்னன் திகைத்து சிந்தனையில் மூழ்கியிருக்க, அவன் கனவில் வந்த பெருமான் குழந்தைப் பேறில்லா நின் குறை தீர்க்கவே யாம் திருமகளை அனுப்பினோம். என் சன்னதிக்கு அழைத்துக் கொண்டுவா, ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்ல, மிகவியந்து மகளைப் பலவாறாய் துதித்துப் போற்றி நகரை அலங்கரித்து கமலவல்லியைத் திருமணக்கோலத்தில் ஸ்ரீரங்கம் அழைத்துவர, கோவிலினுள் நுழைந்ததும் கமலவல்லி மண்ணில்புக்கு மறைந்து அரங்கனோடு இரண்டறக் கலந்தாள். சேனை பரிவாரங்களுடன் இந்தக் காட்சியைக் கண்ட மன்னன் தான் பெற்ற பெரும் பேற்றை எண்ணி வியந்து ஸ்ரீரங்கத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்து உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக மாபெரும் கோவில் எழுப்பினான். ஸ்ரீரங்கநாதனே அழகொழுகும் மாப்பிள்ளையாக வந்து திருமணம் செய்து கொண்டதால் அழகிய மணவாளன் ஆனார் (இவரே மீண்டும் ஒரு முறை வயலாளி மணவாளன் ஆவார். அதனைத் திருவாலி திருநகரி  ஸ்தல வரலாற்றில் காணலாம்).

இந்நிகழ்ச்சி நடைபெற்றது துவாபரயுகத்தின் முடிவிலென்பர். கலியுகத்தில் ஒரு சமயம் இந்த உறையூரில் மண்மாரி பெய்து பட்டனம் முழுகிப்போக அதன்பின் சோழ மன்னர்கள் கங்கை கொண்டானைத் தலைநகர் ஆக்கி ஆண்டுவருங்காலை இந்த உறையூரில் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவிலைத்தான் இப்போது நாம் காண்கிறோம். இவன் இக் கோவிலில் அழகிய மணவாளனையும் (ஸ்ரீ ரங்கநாதனின் திருமணக்கோலம்) கமல வல்லியையும் பிரதிட்டை செய்தான். இம்மன்னனின் பெயர் இன்னதென்றறியுமாறில்லை. ........

'இம்மன்னனின் பெயர் இன்னதென்றறியுமாறில்லை' என்று சொல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை, கற்பனைக் கதைகளை வரலாற்றுடன் ஒப்பிட்டு சான்று காண முயலும் பொழுது ஏற்படும் துயரன்றி வேறில்லை.  துவாபரயுகத்தின் முடிவில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி என்றால்,  கமலவல்லியின் தந்தையான உறையூர் நந்தசோழன் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில்  ஏன் இடம்பெறவில்லை என ஓரிருவருக்கு ஐயம் வந்தால் கூட போதுமானது.  ஸ்ரீரெங்கநாதன் குதிரை மீதேறி வந்தார் என்பதில் இருந்து, தற்கால குதிரை என்ற விலங்கை மக்கள் அறிந்திருந்ததாகக் காட்டப்படும் நந்தசோழனின் காலத்தை,  இந்தியாவில் குதிரைகள்  இருந்திராத காலமான சிந்து சமவெளி நாகரிக காலத்திற்கும்  பிற்பட்ட காலத்திற்குத்  தள்ளலாம். அதாவது இந்த நிகழ்ச்சியை  பொது ஆண்டுக்கு முன் கி.மு.  3,000 ஆண்டுகள் காலகட்டத்திற்குப் பின்னர் என நாம் கொள்ள வேண்டும்.  சிந்து சமவெளி நாகரிக காலம் என்பது  இந்தியாவில் குதிரைகள் அற்ற காலம் என அறியப்படுகிறது, சிந்துசமவெளி அகழகாய்விலும் குதிரை இருந்ததற்கான தடயங்கள் இன்றுவரை கிடைத்ததில்லை. அப்படி என்றால்,   கி.மு. 3000 க்குப் பின்னர் என்பதுதான் துவாபரயுகமா?  

மேலும், துவாபரயுகத்தின் முடிவில் உறையூரில்  நடைபெற்ற நிகழ்வாகக் கூறப்படும் இதே கதை, திருவாலி திருநகரி வயலாளி மணவாளன் என மற்றொரு கதையிலும்  காட்டப் படுவதாகவும் தெரிகிறது.  மேலும் குழந்தையற்றவர் ஒருவர்,  மாலவனின் அருளலால் அவருக்கு மகளாகத் திருமகள் பிறக்கிறார், திருமாலை அவள் மணக்க விரும்புவது, திருவரங்கத்திற்கு அவளை அழைத்துவரச் சொல்லி மணமுடிக்கத் திருமால் வேண்டிக் கொள்வது, திருவரங்கக் கோவிலில் மணமகள்  இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்துவிடல் என்பது போன்ற நிகழ்வுகள்  தவறாமல் அனைவருக்கும் பெரியாழ்வார் அவர் மகள்  ஆண்டாள் கதையையும் நினைவூட்டும்.  ஒத்த சாயல் கொண்ட கதைகள் திருத்தல தொன்மப் புனைவுகளில் இருப்பதற்கு இத்தலவரலாறு சான்றாக அமைகிறது. 

மேலும் சில உறையூர் தலவரலாற்றுக் கதைகள்:
இளவரசி கமலவல்லி, அவளது தந்தையாகிய உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் நந்தசோழன், அவரது மாப்பிள்ளை திருவரங்கம் அழகிய மணவாளன் குறித்த தலபுராணக் கதையுடன் மேலும் சில உறையூர்க் கதைகளும் உள்ளன. 

சிபிச் சக்கரவர்த்தி இந்த உறையூரிலிருந்து ஆட்சி புரிந்ததாகவும் கூறப்படுவதுண்டு. மற்றொரு கதையில்,  சோழன் இளஞ்சேட்சென்னி உறையூர்  மன்னனாக இருந்த பொழுது,  இறைவனின் பூஜைக்கு வைத்திருந்த மலர்களை அரசி தலையில் சூடிக்கொண்டதால் இறைவன் சினந்து இந்த ஊரை அழித்துவிட்டதாகவும், இறைவன் சினத்தால்  நெருப்பு மாரி பெய்து உறையூர் அழிந்ததாக  மற்றுமொரு தலவரலாறுமுண்டு.  பலவகையில் கூறப்படும் இக்கதையில்  மலைக்கோட்டை இறைவன்  தாயுமானவரான சிவனும், சில சமயம்  உறையூர் வெக்காளி அம்மனும்  வருவதுண்டு.  உறையூரில் நெருப்புமழைக்குப் பதிலாக மண்மழை பொழிந்ததாகவும் கதையுண்டு. மண்மழை கதை பல வேறுபாடுகளுடன் கூறப்படுகிறது. 

இக்கதைகளில் ஒன்றில்,   நாகலோகத்திலிருந்த செவ்வந்தி மலர்ச்செடி ஒன்று சாரமா முனிவரால் உறையூருக்குக்  கொணரப்பட்டு இறைவனுக்காகப் பராமரிக்கப்படும் அவரது  பூந்தோட்டத்தில் வளர்கிறது. பூவணிகம் செய்யும் பிராந்தகன்  என்பவன்  இறைவன் பூசைக்காக உள்ள அம்மலர்களைத் திருடுவதைத் தொழிலாகக் கொள்கிறான்.  அவற்றை அரசியாருக்குக் காணிக்கையாகக் கொடுத்து அவரது  நன்மதிப்பைப் பெறுகிறான். மலர்கள் மறைவதன் உண்மைப் பின்புலம் அறிந்த முனிவர் உறையூரை ஆட்சி செய்யும் பராந்தகச் சோழ மன்னனிடம்  முறையிடுகிறார் (வன்பராந்தகன் என்றும் இந்த மன்னனின் பெயர் குறிப்பிடப்படுகிறது, அத்துடன் இளஞ்சேட்சென்னி என்று கூறப்பட்டவரும் இக்கதையில் பராந்தகனாக மாறிவிட்டார்).  மன்னன் முனிவரது குறைக்குச் செவிசாய்க்கவில்லை. உள்ளம் நொந்து இறைவனிடம் முறையிடுகிறார் முனிவர். தனது அடியாரை நோகவைத்த மன்னனின் மேல் சினம் கொண்ட திருசிரமலை சிவன், அமர்ந்திருந்த கிழக்கு நிலையில் இருந்து மேற்கில் உள்ள உறையூரை நோக்கித் திரும்பியமர்ந்து உறையூரில் மண்மழை பொழியச் செய்கிறார். அரசன் உறையூருடன் அழிகின்றான்.

கருவுற்றிருந்த அரசி புவனமாதேவி காவிரியில் தற்கொலை செய்யக் குதிக்கின்றாள்.   ஆனால், பார்ப்பனர் ஒருவரால் காப்பாற்றப்பட்ட அரசி ஆண் முழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள், இக்குழந்தையே சோழர்களில் சிறந்த மன்னனாகக் கருதப்படும் திருமாவளவன் என்னும் கரிகால் சோழன்.  வீடு வாசலை இழந்த உறையூர் மக்கள், அவர்களை  எல்லையம்மனாக காத்து வரும் வெக்காளி அம்மனிடம் தஞ்சம் புகுந்தனர். அம்மன் தாயுமானவரிடம் சினம் தவிர்த்து மக்களிடம் கருணை காட்டும்படியாக வேண்ட, சிவன் சினம் தணித்து மண்மாரியை நிறுத்தினார். வீடின்றி வெட்டவெளியில் துயருற்ற மக்களுக்காக வெக்காளியம்மன்,  தானும் வானத்தையே கூரையாகக் கொண்டு, கூரையற்ற கோவிலில் குடியிருக்கத் தொடங்கினார் (உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு கூரையில்லாத தலவரலாறு இது).

தங்கள் தவவலிமையால் கல்மழையும், மண்மழையும் பெய்வித்து சமணர்கள் உறையூரை அழித்தார்கள் என்பது ஒரு கதை.  உறையூர் அழிந்ததாக  வேறுசில இலக்கியக் குறிப்புகளும் உள்ளன.   சமணர் தவ வலிமையினால் கல்மழையும் மண்மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என தக்காயபரணி கூறுகிறது. 
மலைகொண் டெழுகுவார் கடல்கொண் டெழுவார்
மிசைவந்து சிலா வருணஞ் சொரிவார்
நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுவார்
இவறிற் பிறர் யாவர் நிசாசரே(தக்கயாகப்பரணி 70)
இப்பாடலின் பொருளைக் கொண்டு அபிதானசிந்தாமணி  ஆசிரியர் உறையூர் மண்மாரி பொழிந்ததில் அழிந்தது என விளக்கம் தருகிறார் எனவும் கருதப்படுகிறது. 

பராந்தகச் சோழனின் (கி.பி 907-953) தலைநகரம் உறையூர் என்பது உதயேந்திரச் செப்பேடு அளிக்கும் தகவல்.  பின்னர் முதலாம் மாறவர்மன் சுந்த பாண்டியன்(கி.பி 1216 – 1235) உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான் என்பது திருக்கோயிலூர் கல்வெட்டு தரும் செய்தி. 

சங்க காலச் சோழ மன்னர்களுள் காலத்தால் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுபவனான உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, "உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் தாய்வயிற் றிருந்து தாயம்" எய்திய (பொருநராற்றுப்படை: 130,132) கரிகால் வளவன் பிறப்பு குறித்த கதை,  தக்கயாகப்பரணி செய்தி, அபிதானசிந்தாமணி சமணர் மண்மழை குறிப்பு,  உதயேந்திரச் செப்பேடு குறிப்பிடும் பராந்தகனின் தலைநகர் உறையூர் என்ற தகவல், தீயால் அழிந்த உறையூர் குறித்த திருக்கோயிலூர் கல்வெட்டு செய்தி இவையாவற்றையும், வரலாறு குறிப்பிடும் வரிசையில் காலக்கோட்டில் கொள்ளாமல் இணைத்தவை  உறையூர் கதைகள், அதனுடன் உறையூர்  சோழ மன்னனின் மகளின் திருவரங்கத் திருமணக் கதையையும் இணைந்துள்ளவை திருச்சிப் பகுதி ஊர்களின் தலபுராணக் கதைகள். 

இதில் கோழியூரின் தலவரலாறுகளில் ஒன்றான, சிலப்பதிகாரம் காட்டும் யானையைத் துரத்திய கோழியின் கதை மற்றொருவடிவம்  பிற்கால சோழ மன்னனான ஆதித்த சோழனுடனும் இணைக்கப்படுகிறது.   உறையூரை ஆண்ட ஆதித்த சோழன் தன் பட்டத்து யானையின் மீது வரும்போது, வில்வ மரத்தின் நிழலில் மறைந்து இருந்த சிவன் உறையூரின் மேன்மையை மன்னனுக்கு  உணர்த்த விரும்பி,  அம் மரத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை நோக்க, அது வெறிகொண்டு  கொண்டு பட்டத்து யானையைக்  குத்தி வீழ்த்தியது. இச்செயலைக் கண்டு வியந்த ஆதித்த சோழன்  உறையூருக்குக் கோழியின் வீரத்தைச் சிறப்பிக்க  திருக்கோழி எனப்  பெயரிட்டான் என்கிறது இக்கதை.   கோழியும் யானையும் போரிடும்  கதையைக் கூறும் சிற்பமொன்று  உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது. பரகேசரி விசயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் (கி.பி 871 - 907) ஆட்சி புரிந்தது பிற்காலம். ஆனால் கோழி யானை கதை சிலப்பதிகாரத்திலேயே இளங்கோவடிகளால் கூறப்படுகிறது என்பது ஒன்றே தலபுராணக் கதைகள்  தொன்மப்புனைவுகளும் வரலாறும் கலந்து இயற்றப்படுவதைக் காட்டும் சான்று.

[1] 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு, பக்கம் 54 - 57: http://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584
[2] திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவர், சக்தி விகடன் - 26.09.2007: http://www.vikatan.com/news/article.php?aid=18882

படம் உதவி:
http://www.shivatemples.com/sofc/sc005.php
(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcxjdKzhDTD1ozAeMc6ek6mB44fo9Pyi9Wg-lQyYVpclaFFkyDynX0tNMN-hO8kNfMHPF0i1WvUThu8aCGeI9No_C3Oku48xbIa2HeG1aJ13E9CDjORNQlp9V4y7Xl2JLSdV8qlhdzx57O/s320/2.jpg)
 



______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com

Sunday, August 13, 2017

கொடுவரி முதலை குடை தண் துறைய‌

-- ருத்ரா இ பரமசிவன்


தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ்
தோலின் முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.
எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே




விளக்க உரை:
-- ருத்ரா இ.பரமசிவன்

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
கொடுவரி முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?


தன் குட்டிகளையே தின்னும்முதலை.அது  நெருப்புக்குமிழிகளும் வளைந்த வரிகளும் உடையது.அந்த முதலைகள் குடைந்து நீராடும் குளிர்ந்த நீர்த்துறைகள் உடையவனே. இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா?என் உடல் என் உயிரைத்தின்கிறதா? எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?


அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.

 
மரக்கால் (அம்பணம்) எனும் ஒரு அளவைப்பாத்திரத்தை கவிழ்த்து வைத்தாற்போல் அசையாமல் கிடக்கும் பெரிய‌ ஆமையின் முதுகுப்புறத்தின் மேல் ஓயாமல் ஒலித்து குரல் எழுப்பும் நாரையின்அந்த ஒலி மழையில் வேங்கை மரத்தின் வரிகள் போன்ற காலை உடைய ஆமை கொஞ்சம் அசைந்து கொடுக்க அவ்வேளை அந்த நாரை ஆமைக்கு உயிர் இருக்கிறதோ என்ற எண்ணத்தில் வேறுபட்ட குரல்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து அங்கே மீண்டும் மீண்டும் பறக்கும். பிறகு பறந்து திரிந்து அருகில் உள்ள மரக்கிளைகளில் போய் அமரும்.இத்தகைய மணற்கரைத்திட்டுக் (எக்கர்) காட்சிகள் நம் கண்களை மயக்கும்.(அது போல் ஏமாற்றி செல்லுவதே உன் வழக்கம்)


எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே.


மென்குவளை மலர் தீப்பற்றி எரிந்தால் எப்படியிருக்குமோ அது போல் என் அழகு நலன்கள் சிதைந்து அந்த வெப்பத்து ஆவி என்னை உண்ணும் அந்த அவிந்துபோகும் நிலையிலிருந்து எனைக்காப்பாய். பகலவன் ஒளியை ஒளித்து ஒளித்து  ஊர்ந்து செல்லும் குழைவான மேகங்கள் அக்கதிரவனின் கண் பொத்தி விளையாடும்.ஆனால் அது அவன் என் மீது தொடுக்கும்  கொடும் போர் ஆகும். இறுகிய பாறை போன்ற உன் உறுதியை என்னிடமா காட்டுவது? உள்ளம் இளகிய பசுந்தளிராய் என்னிடம் வந்து என்னைத்தழுவிக் கொள்வாயாக.அனல் பட்ட நிலையில் துடிக்கும் எனக்கு அன்பினை அருள்வாய்.


______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

Wednesday, August 9, 2017

கங்கைகொண்டசோழபுரச் சலுப்பையும் சாளுக்கியரும்

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


முன்னுரை
தஞ்சாவூரில் இயங்கிவரும் தொல்லியல் கழகம், ஒவ்வொரு ஆண்டும் தொல்லியல் கருத்தரங்கம் ஒன்றைத் தமிழகத்தின் முதன்மையான பல்வேறு ஊர்களில் நடத்திவருகின்றது. தமிழகம் முழுதுமுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ளோர், தம் ஊர்ப்பகுதியின் வரலாற்றிடங்கள் அன்றிப் பிற ஊர்ப்பகுதிகளின் வரலாறு பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ள இக்கருத்தரங்கங்கள் துணை செய்கின்றன. பெரும்பாலும், வரலாற்று ஆர்வலர்கள் முதன்மை ஊர்களைப் பற்றி வரலாற்றடிப்படையில் செய்திகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், முதன்மை ஊர்களை ஒட்டியுள்ள பகுதிகளின் உள்ளூர் வரலாற்றுச் செய்திகளையும் நாட்டார் வரலாற்றுச் செய்திகளையும் தெரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பில்லை. அவ்வாறான வாய்ப்பினை மேற்சொன்ன கருத்தரங்கங்கள் தருகின்றன. அண்மையில் ஜூலை மாதம் கங்கைகொண்டசோழபுரத்தில்  நடைபெற்ற தொல்லியல் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, கருத்தரங்க விழாக்குழுவினர் கங்கைகொண்டசோழபுரத்தின் புறவூர்ப் பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். முதலாம் இராசேந்திரன் எடுப்பித்த கங்கைகொண்டசோழ ஈசுவரம் என்னும் பெரிய கோயிலைப் பற்றிச் சற்று அறிந்திருக்கும் நமக்கு, இராசேந்திரசோழன் போரில் வென்ற சாளுக்கியரோடு தொடர்புள்ள ஒரு சில செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் இப்பயணத்தால் கிட்டியது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.

சலுப்பை-அழகர்கோயில்
கருத்தரங்கப் பார்வையாளர்கள், கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து இரு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டோம். பயணத்தில், முன்னுரையில் கூறியவாறு கங்கைகொண்டசோழபுரத்தைச் சுற்றிலுமுள்ள புறவூர்கள வந்தன. கருவாலப்பர்கோயில், சத்திரம், குண்டவெளி, கொல்லாபுரம், இளையபெருமாள் நல்லூர், மீன் சுருட்டி ஆகிய ஊர்கள். சிறிய கிராமத்துச் சாலைகள். இருபுறமும் பசுமையான வயல்வெளிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றமே. நீரில்லை; அதனால் வயல்களும் இல்லை. “யூகலிப்டஸ்”  என்னும் தைல மரங்களும், சவுக்கு மரங்களும் , முந்திரி மரங்களும் சாலையின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்பட்டன. எளிமையான கிராமங்கள். ஆள் நடமாட்டமின்றி, அரவமின்றிக் காணப்பட்டன. நீர்நிலைகளான குளங்களை வறண்ட குழிகளாய்க் கண்டபோது, கல்வெட்டுகளில், ஆயிரம் ஆயிரம் கலங்களாய் நெல் குவித்த இடைக்காலச் சோழரின் ஊர்களைப்பற்றிப் படித்த செய்திகள் நினைவுக்கு வந்து நெஞ்சை வருத்தின. இளையபெருமாள் நல்லூரை அடுத்து அழகர்கோயில் என்னும் இடத்தை அணுகினோம். மதுரையில் ஓர் அழகர்கோயில் போல இங்கும் ஓர் அழகர்கோயிலா என்னும் வியப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த அழகர்கோயில், வைணவக்கோயில் அல்ல என்றதும் வியப்பு கூடுதலானது.  இது ஒரு சித்தர் சமாதியுற்ற இடம். தோரணவாயிலாகக் கட்டியிருக்கும் நுழைவாயில். "அருள்மிகு ஸ்ரீ துறவுமேல் அழகர் திருக்கோயில்-சலுப்பை"  என்னும் தலைப்பெழுத்து. கருத்தரங்கின் உள்ளூர்ச் செயலராய் இயங்கிய திரு.கோமகன் என்பார், இக்கோயிலைப் பற்றிய சில செய்திகளைக் கூறினார்.

சலுப்பை -  துரவுமேல் அழகர் கோயில் - முகப்பு



சலுப்பை-பெயர்க்காரணம்
கோயில் அமைந்திருக்கும் இடம் சலுப்பை என்னும் பெயரில் அமைந்த கிராமம். இராசேந்திரசோழன் சாளுக்கியரை வெற்றிகொண்டதால் இப்பகுதி, சோழநாட்டின் சளுக்கியகுலநாசனி மண்டலம் என்னும் பெயர் பெற்றது. இப்பெயரின் முதற்பகுதியே சுருக்கப்பெயராய் அமைந்து சளுக்கி என்று வழங்கிற்று. நாளடைவில், சளுக்கி, சலுப்பி என்றாகிப் பின்னர் சலுப்பை எனத் திரிந்து நிலைத்துப்போனது.

துறவுமேல்

துறவுமேல் என்பதற்கான விளக்கம் புதுமையானது. துறவி ஒருவர் இறந்து சமாதியானதால் “துறவு”  என்னும் சொல்லொட்டு வந்தது என நினைத்தோம். அது பிழையானது. “துரவு”  என்பதே சரியான சொல்; துரவு என்பது கிணற்றைக் குறிக்கும் சொல். துரவு என்பது மக்கள் வழக்கில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் சொல்லே. ”தோப்பும் துரவும்”  என்னும் தொடர் நாம் அறிந்த ஒன்று. கல்வெட்டுகளிலும் துரவு என்னும் சொல் காணப்படுகிறது. செவி வழிச் செய்தியின்படி, இப்பகுதி காடாக இருந்தபோது துறவி ஒருவர் இங்கு தவத்தில் இருந்தார். இந்த இடத்துக்கு அண்மையில் ஒரு வைணவக்கோயிலும், ஒரு பார்ப்பனச்சேரியும் அமைந்திருந்தன. ஒரு  நாள், பார்ப்பனச் சேரியிலிருந்து இரு பார்ப்பனப் பெண்கள் கிணற்றில் நீரெடுக்க வந்திருந்தபோது, துறவிக்கருகில் காணப்பட்ட ஒரு குடம், இவர்கள் பார்வையில் பொன்னிறமாகத் தோற்றம் தரவே, அப்பெண்கள் அதை எடுக்க முயன்றனர். தவ நிலையில் இருப்பினும், துறவி இந்நிகழ்ச்சியை உள்ளறிவால் உணர்ந்ததும் தவம் கலைந்துபோனது. துறவியின் சினம் அறமாய் எழுந்து அப்பெண்களை அழித்தது. இறந்த பெண்களிருவரும் கிணற்றில் இரண்டு தாமரை மலர்களாய் மாறினர். தவத்தினால் இறை நிலை எய்த இயலாது தவம் கலைந்துபோனதால் துறவி வெறுப்புற்றுக் கிணற்றுள் ஒன்றிப்போகிறார். கால்நடை மேய்ப்பர்களின் கனவில் தோன்றி தாம் மறைந்த கிணற்றை மூடி வழிபடவேண்டுமென்று கூறுகிறார். அவ்வாறே, கிணறு மூடப்பட்டுப் பீடம் அமைக்கப்பட்டு வழிபடுதல் நடைபெறுகிறது. எனவே, கோயில் கருவறையில் உருவ வழிபாடு இல்லை. பீடம் மட்டுமே உண்டு. துறவி, துரவுமேல் அழகராக வணங்கப்படுகிறார். இவரது வழிபாட்டுச் சடங்குகளில் உயிர்ப்பலி இல்லை. ஆனால், இவரது காவல் தெய்வங்களான வீரபத்திரசாமி, கருப்புசாமி ஆகியோருக்கு உயிர்ப்பலி நடைபெறுகிறது.

கோயிலின் நுழைவுப்பகுதி

 குதிரைச் சிற்பங்கள்
                              
யானைச் சிற்பம்

துரவுமேல் அழகராகிய சித்தருக்குப் பாதுகாப்பாக விளங்கும் யானையின்  சிற்பம் ஒன்று கோயிலின் எதிர்ப்புற வளாகத்தில், ஏறத்தாழ எழுபது அடி உயரத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. சுடுமண்/சுதைச் சிற்பமாகலாம். பழமையான சிற்பம்தான். காலக்கணிப்புக்குச் சான்றில்லை. இந்த யானையும், கோவில் வளாகத்தினுள் உள்ள குதிரையும் இரவில் வேட்டைக்குப் போய்த்திரும்புவதாக நம்பிக்கை. யானைக்கு உதவியாக ஒரு நாயும் உண்டு. ஒருமுறை, பலாக்காயைத் திருடவந்த கள்வனை நாய் குரைத்து இருப்பைக் காட்ட, யானை தன் துதிக்கைகொண்டு கள்வனை வளைத்துப்பிடிக்கிறது. இந்நிகழ்ச்சியை அழகுறக்காட்டும் சிற்பத்தொகுதி நாட்டார் கலை வண்ணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. யானையின் கழுத்தைச் சங்கிலியும், சிறு சலங்கை மணி கோர்த்த கயிறும், சற்றுப் பெரிய மணிகள் கோர்த்த கயிறும் அணி செய்கின்றன. யானையின் முதுகில் (பட்டுத்?) துணி போர்த்தப்பெற்று, உடலின் இருமருங்கிலும் பெரிய மணிகள் (சங்கிலியால் இணைத்தவை) தொங்குகின்றன. மணிகளின் கீழ் இசைக்கருவிகளை இசைத்த நிலையில் பக்கத்துக்கு மூன்றாக ஆறு பூதகணங்கள் அல்லது மனித உருவங்கள் காணப்படுகின்றன. யானையின் இடது கால் கள்வனின் காலை மிதித்துப் பிடித்துத் துதிக்கையால் வளைத்து நெருக்குகிறது. கள்வனின் காலருகில் நாயும் பலாக்காயும் காணப்படுகின்றன. 

யானைச் சிற்பம்

இசைக் கலைஞர்கள்

கள்வன் - யானையின் பிடியில்

காவல் நாய்

சளுக்கியக் காளி
இக்கோயிலின் சிறப்பு ஒன்றுண்டு. சாளுக்கியரை வெற்றிகொண்ட இராசேந்திர சோழன் சாளுக்கியரிடமிருந்து கொண்டுவந்த காளிச் சிற்பம் இக்கோயிலில் உள்ளது. கோயிலின் நுழைவுப்பகுதியிலேயே தனிக் கருவறையில் இச்சிற்பம் உள்ளது. எட்டுக்கைகளுடன், எருமை அரக்கனைக் கொல்லும் “மகிஷாசுர மர்த்தனி” யாக இக்காளி காட்சி தருகிறாள். வழக்கத்தில் எல்லாக் காளிச் சிற்பங்களிலும் காலடியில் எருமைத்தலை இருப்பதாகக் காட்டப்படும். ஆனால், இந்தச் சிற்பத்தில் எருமைத் தலையும் மனித உடலுமாக அரக்கன் காட்டப்படுகிறான். மனித உடலும், எருமைத் தலையும் இணைந்த சிற்ப அமைப்பு சாளுக்கியச் சிற்பக்கலை மரபிலே காணப்படும் என்று திரு. கோமகன் சுட்டிக்காட்டினார். கங்கைகொண்ட சோழபுரத்தின் வடவெல்லைக் காளியாக இச்சிற்பம் வணங்கப்படுகிறது. டாக்டர் மா.இராசமாணிக்கனார், “சோழர் வரலாறு” என்னும் தம் நூலில், இராசேந்திரசோழன் தன் தலைநகரின் நான்கு புறங்களிலும் நான்கு காளிகளை நிறுத்தினான் என்றும், வடவெல்லைக் காளி சலுப்பையிலும், தெற்கெல்லைக் காளி வீராரெட்டி என்னும் கிராமத்திலும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். கிழக்கெல்லைக் காளி செங்கல்மேடு என்னும் ஊரிலும், மேற்கெல்லைக் காளி இடைக்கட்டு என்னும் ஊரிலும் உள்ளதாக “நம்ம கங்கைகொண்டசோழபுரம் சோழநாடு”  என்னும் முக நூல் குறிப்பு சுட்டுகிறது.

சளுக்கியக் காளியும் எருமை அரக்கனும்

அகோரவீரபத்திரர்-கருப்பராயர்
அடுத்துள்ள தனிக்கருவறையில் பெரிய உருவத்துடன் அகோரவீரபத்திரரின் சிற்பம். பூசையாளர் கூறியதுபோல், இருளில் வீரபத்திரரின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. வீரபத்திரர் கருவறைக்கு முன்பாகவே, கருப்பராயர் சிற்பம் உள்ளது. வளாகத்தில் சுடுமண் சிற்பங்களாகக் குதிரைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

வீரபத்திரர்

துரவு மேல் அழகர்-பீட வடிவில்
கோயிலின் முதன்மைத் தெய்வமாக வழிபடப்படும் துரவு மேல அழகரின் அடையாளமாக வெள்ளித் தகடு போர்த்திய ஒரு பீடம் உள்ளது.

சித்தரின் துரவுப் பீடம்



கலிங்கச் சிற்பங்கள்

அடுத்து நாங்கள் சென்ற இடம் செங்கமேடு என்னும் ஊர்ப்பகுதி. இங்கே, இராசேந்திரசோழனின் வெற்றியின் அடையாளமாகக் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. செந்நிற மணற்கற்களால் ஆன இச்சிற்பங்கள் கலிங்க நாட்டுக் கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவன என்று தொல்லியல் துறை அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது. இன்றைய ஒரிசா மாநிலத்தின் வடபகுதியே அன்றைய கலிங்கநாடு.

கலிங்கச் சிற்பங்கள்


சோழர் காளி
இங்கே, கலிங்கச் சிற்பங்கள் தவிர, தனிச் சிறு கோயிலில் வணங்கப்படும் சோழர் கலைப்பாணிக் காளியின் சிற்பத்தைக் காணும் வாய்ப்புப் பெற்றோம். ஓர் ஆள் உயரத்துக்கும் மேலாக ஓங்கி உயர்ந்து காணப்பட்ட காளிச் சிற்பம் அருமையானதொன்று. தீக்கதிர் முடியும் (ஜ்வாலா கேசம்), எட்டுக்கைகளும் கொண்டவளாக ஆற்றல் வாய்ந்த தோற்றம். வலது காலைக் குத்திட்டு மடித்த நிலையிலும் இடது காலை அரக்கனின் உடல்மீது மிதித்த நிலையிலும் கொற்றவை காணப்படுகிறாள். வலது செவியில் “பிரேதகுண்டலம்”  என்று குறிப்பிடப்பெறுகிற, பிணத்தையே காதணியாகக் கொண்ட அரிய தோற்றத்துடன் கொற்றவை காட்சி தருகிறாள்.

சோழர் காலக் கொற்றவை

கொற்றவையின் செவியில்  ”பிரேத குண்டலம்”




கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றிலும் வரலாற்றுச் சுவடுகள்
வரலாற்றுச் சுவடுகளைத் தம்மகத்தே கொண்ட பல ஊர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் புறவூர்களாக இன்றும் எஞ்சியுள்ளன. கடாரம்கொண்டான், வீரசோழபுரம், வானவன் நல்லூர், சோழன்மாதேவி, விக்கிரமங்கலம் (விக்கிரமசோழமங்கலம்), ஆயுதக்களம், சுண்ணாம்புக்குழி, உள்கோட்டை, யுத்தப்பள்ளம் ஆகியவை அத்தகைய ஊர்கள். பல ஊர்கள், அரசர், அரசியர் பெயரைத்தாங்கியுள்ளன. படைகளுக்கு வேண்டிய ஆயுதங்கள் உருவான ஊர் ஆயுதக்களம்; கட்டடங்கள் கட்ட சுண்ணாம்பைத் தந்தது சுண்ணாம்புக்குழி என்னும் ஊர்; கோட்டை இருந்த இடம் உள்கோட்டை; போர் நிகழ்ந்த இடத்தை நினைவூட்டுகின்ற யுத்தப்பள்ளம். வடநாடு நோக்கிச் சென்ற பெருவழியில் அமைந்த சத்திரம் என்னும் ஊர் தங்குமிடமாகச் சத்திரங்களைக் கொண்டிருந்தது போலும். கங்கைகொண்ட சோழபுரத்தின் மதிற்சுவர்களின் இடிபாடுகளிலிருந்து எடுத்த கற்களே தற்போதுள்ள அணைக்கரையில் அணைகட்டப் பயன்பட்டன என்று கருதப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரத்தில் இருக்கும் மாளிகைமேடு என்னும் பகுதியில் அகழாய்வு நடத்தப்பெற்று, இராசேந்திரனின் மாளிகை(அரண்மனை) கண்டறியப்பட்டுள்ளது. மேற்சொன்ன புறவூர்களுள் தகுதிபெற்ற ஊர்களில் அகழாய்வு நடைபெற்றால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிப்படும் என்னும் சிந்தனையோடு கங்கைகொண்டசோழபுரத்தின் புறவூர்களைப் பார்க்கச் சென்ற எங்கள் பயணத்தைக் கொற்றவை முடித்துவைத்தாள்.

கட்டுரை ஆக்கத்துக்குத் துணை நின்றவர்க்கு நன்றி.

1.திரு. கோமகன், பொறிஞர், கங்கைகொண்டசோழபுரம்.
2. நம்ம கங்கைகொண்டசோழபுரம் சோழநாடு-முகநூல்
3. தேவர்களம்- வலைப்பூ



___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________