Friday, April 8, 2022

முத்தமிழ் விரும்பியின் தேநீர் கவிதைகள்



  -- முனைவர்.செ. இராஜேஸ்வரி


நான் நேசிப்பதும் அதுதான் முப்பொழுதும் 
என் மோகம் தீர்ப்பதும் அதுதான் 

தத்தரிகிட தித்தோம் என்று கவிஞர் தேநீரைப் பாராட்டினார். கவிஞர்களின் உற்சாக ஊற்றாக விளங்குவது தேநீர். மது போதைக்கு ஆட்படாத கவிஞர்கள் கூட தேநீர் போதையிலிருந்து தப்புவதில்லை. முத்தமிழ் விரும்பியும் நண்பர்களோடு தேநீர் சுவைத்து மகிழ்ந்து கதைத்து உரையாடி உறவாடிய பொழுதைக் கவிதையாக படைத்திருப்பதைக் காணலாம். தேநீர் என்பது உலகப் பாடுபொருளாக விளங்குகிறது. தேநீர் பாடுபொருளாக அமைவதன் சிறப்பை அறிவதற்கு அதன் வரலாற்றை முன் அறிவது இன்றியமையாததாகும்.

தமிழகத்தில் தேநீர் (டீ) அல்லது காப்பி  என்பது வெறும் சுடுநீர் அல்லது பருகுநீர் அல்ல. அது  நண்பர்களுக்கு  விருந்து அனுபவம் (tea party) ஆகும். பலருக்குப் பசி தீர்க்கும் உணவாகும். சிலருக்குத் துன்பம் தீர்க்கும் மருந்தாகும். களைப்பைப் போக்கும் காயகல்பம் ஆகும். தேநீர் தொழிலாளியின்  அடையாளம். காபி மேட்டுக்குடியின் ஆடம்பரச் சின்னம்.  ஆனால் காபி அல்லது தேநீர் பயிரிடல் என்பது உலகில் மிகப் பெரிய சூழலியல் சீரழிவைக் கொண்டுவந்தது.  

தேநீரின் வரலாறு சுவையானது. கி. மு. 2737இல்  ஒரு சீன மன்னன் காட்டில் இளைப்பாறிக் கொண்டிருந்த வேளையில் அவனுடைய குடிநீரில் காற்றில் பறந்து வந்த சில காய்ந்த இலைச் சருகுகள் விழவும் அந்த குடிநீரின் நிறமும் சுவையும் மாறியது.  அந் நீரைக் குடித்த பின்பு மன்னன் உற்சாக மனநிலையை எய்தினான். மேலும் வேண்டுமெனக் கேட்டான். பணியாட்கள் அந்த இலையைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி தேநீர் தயாரித்து மன்னனுக்கு வழங்கினர். அந்த இலையைத் தே இலை என்றனர்.

காபிக்கும் ஒரு கதை வழங்குகிறது. எகிப்து நாட்டில் ஒரு நாள் ஆடுகள் உறங்காமல் இருந்ததைப் பார்த்து ஆட்டிடையர்கள் மறுநாள் அந்த ஆடுகள் ஒரு செடியின் இலையைத் தின்றதால் தான் அவை தூங்காமல்  விழித்திருந்ததைப் புரிந்து கொண்டனர். அன்று முதல் அவர்களும் இரவில் ஆடுகளைக் காவல் காக்கும் பணியின் போது அந்த இலையைக் கொதிக்க வைத்து அதன் சாற்றைப் பருகினர். இவ்வாறு காபி அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆயினர். 

 கிபி பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தேநீர் மேலை நாடுகளில்  பிரபலமாயிற்று. பிரிட்டிஷ் அரசாங்கம் தன் ஆளுகையின் கீழ் இருந்த நாடுகளில் மலையில் இருக்கும் மரங்களை அழித்து அங்குத் தேயிலையும் காப்பியும் பயிரிட்டது. முதலில் அரசு தம் குடிமக்களுக்கு இலவசமாகக் கொடுத்துப் பழக்கியது. பிறகு காசு கொடுத்தால் தான் தருவோம் என்று விலைக்கு விற்கத் தொடங்கியது. பின்னர் உலகம் முழுக்க தேநீர் தவிர்க்க இயலாத ஒரு பருகு நீராகப் பரவிற்று. ஒவ்வொருவரின் அதிகாலைப் பொழுதும் தேநீர் அல்லது காபியுடன் தொடங்கியது. உலக அளவில் குடிநீருக்கு அடுத்தபடியாகத் தேநீர் தான் அதிகளவில் பருகப்படுகிறது. 

சீனாவின் யுனான் மாகாணம் தேநீரின் பிறப்பிடமாக அறியப்படுகிறது. ஜப்பான், கொரியா, தைவான் போன்ற நாடுகளில் தேநீர் சடங்கு என்பது விருந்தினர்களை வரவேற்கும் முக்கியச் சடங்காகும். கிமு 300 க்கும் முன்னாடியே இந்நாடுகளில் தேநீர்ச் சடங்கு நடைபெற்றதாக அறிகிறோம். இந்தியாவில் மணி ராம் தேவான் என்பவர் முதன் முதலில் தேயிலையைப் பயிரிட்டார். தே என்பது 1500 மீட்டர் உயரத்தில் வளரக்கூடிய மரம் . ஆனால் இதன் இலக்காக செடி போல இடுப்பளவிற்கு மட்டும் வளர்க்கின்றனர்.  இதன் குருத்து இலைகள் பறிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு தேயிலைத் தூள் தயாரிக்கப்படுகிறது. 

அசாம் மாநிலத்தில் பெரிய அளவு தேயிலைகளும் சீனாவில் சிறிய தே இலைகளும் வளருகின்றன.  நடுத்தர அளவிலான தேயிலையும் உண்டு.  உலக அளவில் தேயிலை சீனாவில் 36 சதவீதமும் இந்தியாவில் 23 சதவீதமும் விளைகின்றது. உலகின் தேநீர் பருகுகின்றவர்களில் கால் பகுதி இந்தியாவில் தான் இருக்கின்றனர். இந்தியாவிலுள்ள அசாம் மாநிலம் தேயிலை விளைச்சலில் முதல் இடத்தில் உள்ளது. சுமார் 3 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இங்குத் தேயிலை பயிரிடப்படுகின்றது. இது தேயிலை  சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றதாகும். 

காபி என்பது பெரியவர்களின் பருகுநீர் என்று வெளிநாடுகளில் கருதப்படுவதால் அங்குக் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது கிடையாது. ஆனால் இந்தியாவில் குழந்தைகளும் காப்பி அருந்தும் பழக்கத்திற்கு ஆட்பட்டு உள்ளனர். சர்வதேச அளவில் சுமார் 10 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் காபி  பயிரிடப்படுகிறது. கொடைக்கானலில் மட்டும் 50 ஏக்கர் நிலத்தில் காபி விளைகிறது. காபியில் இரண்டு வகை உண்டு ஒன்று அராபிகா இன்னொன்று ரோபஸ்டா. ரோபஸ்டா என்பது பெரிய அளவிலான காப்பிக் கொட்டைகளை உடையது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கையில்  தேயிலைத் தோட்டங்கள் உருவாக்க தமிழ்நாட்டிலிருந்து ஆட்கள்  அழைத்துச் செல்லப்பட்டனர். சாதிப்பாகுபாடு தீரும் என்ற நம்பிக்கையில் அல்லது சாதிக்கொடுமைகள் ஒழியும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கில் கூலிகள் புறப்பட்டனர். மதுரை, நெல்லை, இராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, வட ஆற்காடு மாவட்டங்களிலிருந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த லட்சம் பேருக்கு அதிகமானோர் நடைப்பயணமாக இராமநாதபுரம் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து கப்பலில் ஏற்றப்பட்டனர்.  ஒருமுறை ஆதிலட்சுமி என்ற கப்பலில் பயணம் செய்தவர் பலர் கப்பல் கவிழ்ந்ததால் நூற்றுக் கணக்கில் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். படகுகளின் மூலம் அங்கிருந்து  கண்டி மாநிலத்திலுள்ள காடுகளுக்குத் தமிழ் கூலிகள் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களைக் கொண்டு கண்டி மலைப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அங்குத் தேயிலை பயிரிடுவதற்கான நிலம் பண்படுத்தப்பட்டது. அங்குச் சென்ற பல்லாயிரம்  தொழிலாளிகள்   காட்டுயிர்களுக்குப் பலியாயினர். 1841 முதல் 1849 வரை சுமார் 70 ஆயிரம் பேர் இவ்வாறு உயிரிழந்தனர் எஞ்சியவர்கள் மலையகத் தமிழர் என்ற பெயரில் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்து அங்கேயே வாழ்ந்து வந்தனர். இலங்கைக்கு 70 சதவீத வருமானம் மலையகத் தமிழர்களின் உழைப்பால் அவர்களின் வியர்வையால் கிடைத்தது. ஆரம்பத்தில் காப்பி செடி பயிரிடப்பட்டது. அதற்கு நோய் வந்தபோது காபியை விடுத்துத்  தேயிலையை அதிகமாகப் பயிரிட்டனர். இவர்களுக்குப் பத்துக்கு எட்டு அடி அளவில் தகரக் கொட்டகை வீடுகள் என்ற பெயரில் வழங்கப்பட்டன. அவற்றில் அவர்கள் குடியிருக்க நேரிட்டது.  ஸ்ரீலங்கா விடுதலைக்குப் பிற்பாடு, 1974இல் இக் கூலிகள் கட்டாயமாக இந்தியாவுக்குக் கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் இராமேஸ்வரம் கடற்கரைக்கு அனாதைகளாக வந்து சேர்ந்தனர். இங்குள்ள சொந்த ஊர்களின் தொடர்பும் விட்டுப் போனதால் அவர்கள் இங்கு இலங்கை அகதிகளாக இருக்கும் நிலை ஏற்பட்டது. ஏழைகளாகச் சென்று ஏழைகளாகவே தாயகம் திரும்பினர். 

தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆனால் தேநீர் அருந்துவதில் துருக்கி மக்கள் முதல் இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் அளவுக்குத் தேநீர் பருகுகின்றனர்.  இவ்வாறான முக்கியத்துவம் பெற்ற தேநீர் கவிஞர்களுக்கும் மிகவும் விருப்பமான உற்சாகப் பானமாக, சோர்வு நீக்கி சுறுசுறுப்பு ஊட்டும் பருகுநீராக விளங்குகிறது.

 மழலை கவி என்பவர்,  
"மழையில் குடையாக நான் 
இதழில் இதமான தேநீராக நீ" 
என்று தேநீரின் சுவையைத் தனது கவிதையில் வடித்தார். 

நளினி விநாயகமூர்த்தி என்ற சென்னைக் கவிஞர், 
"என்னவளே 
நீ பருகித் தந்த  தேநீரை 
நான் பருகப் பருக 
என் இளமை இன்னும் நீள்கிறது"
 என்கிறார். 

சுமையா என்பவர், 
"இனிப்பும் 
சற்று தூக்கலாகவே தெரிகிறது 
உன் இதழ் தொட்டபின் 
பருகும் தேநீரில் "
என்றும், 

"நுரைத்த குளம்பியில் 
நிரம்பித் தவிக்கிறது 
சுடச்சுட காதல் குமிழிகள்" 
என்றும் தேநீரையும் காப்பியையும் காதலோடு இணைத்துக் கவிதை பாடினார்.

கவிஞர் முத்தமிழ் விரும்பியின் தேநீர் கவிதைகள்: 
கவிஞர் முத்தமிழ் விரும்பியின் தேநீர் கவிதைகள் பல சூழல்களில் உருவெடுத்துள்ளன. கவிஞர் முத்தமிழ் விரும்பி தேநீர் பருகுவதை நண்பர்களோடு நடத்தும் கலந்துரையாடலின் ஓர் அங்கமாகக் கொள்கிறார் அடுத்தடுத்து அவர்கள் தேநீர் பருகுகின்றனர். இன்னொரு சூழலில் இயற்கை அழகில் மயங்கித் திளைக்கும் போது அந்த இரசனைக்கு இன்னும் சுவை ஊட்டுவதாக தேநீர் பருகும் பழக்கம் அமைகின்றது. 

1. நட்பு:
இன்பத்திலும் துன்பத்திலும் தேநீர் கவிஞர் முத்தமிழ் விரும்பியின்  வாழ்க்கையின் ஓர் அங்கமாகி இருப்பதைக் காணலாம். தான் காப்பி குடிப்பது மட்டுமின்றி அடுத்தவன் காபிக்கு என்ன செய்வான் அவன் எங்கே போய் காபி குடிப்பான் என்று அடுத்தவனுக்காகக் கவலைப்படும் நிலையையும் இவர் கவிதைகளில் காணலாம். உறவுகளையும் நட்புகளையும் கொண்டாட முடியாத ஏக்கத்தையும் காப்பி அருந்தும் போது அவர் உணர்கின்ற நிலையைப் பார்க்கலாம். தனக்குத் தேநீர் குடிக்க வேண்டும் என்ற ஓர் உந்துதல் இல்லாவிட்டாலும்கூட நண்பர்களுக்காக அவர்களின் வேண்டுகோளுக்காக காப்பி அருந்துகின்ற பழக்கம் இருந்து வருவதை அவரது கவிதைகளில் காணலாம். இது நட்புக்கு வழங்கும் கௌரவம் ஆகும்.

 "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
 நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்"
 என்ற இலக்கிய வரிகளை நினைவூட்டும் வகையில் விரும்பாத நேரத்திலும் நண்பர்களின் விருப்பத்திற்காக தேநீரும் காபியும் குடிக்கும் மரபு இருப்பதை அறியலாம். 

பூமர நிழல்  என்ற கவிதைத் தொகுதியில், 
"தேநீர் கூட
நண்பர்களின் வற்புறுத்தலுக்காக 
விரும்புவதில்லை எனினும்
தருணங்களைக் கருதி அருந்துவது தப்பாது" 
என்கிறார்.

பல்வேறு சாதி மற்றும் தொழில் செய்யும் குடும்பங்களில் பிறந்தவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து தேநீர் பருகும் சூழ்நிலையை ஏற்படுத்தும் போது நண்பர்கள் சாதி, தொழில் வேறுபாடுகளை மறந்து நட்பு என்ற ஓர் அன்புத் தளத்தில் இணைகின்றனர். அவர்களை அங்கு இணைக்க தேநீர் ஒரு கருவியாகச்  செயல்படுகிறது. எனவே

"இந்தத் தேநீர்
சில கோடுகளையாவது
அழிக்கிறது" 
என்று நுட்பமாக எடுத்துரைக்கிறார்.

"எனக்கும் இன்னொரு
வெல்லம் போட்ட தேநீர் சொல்லு" 
என்று கவிஞர் கவிதையை முடிக்கும்போது  'கோடுகளை அழித்த' மன நிறைவு தொனிக்கிறது. 

தேநீர் குடிப்பதற்காக அனைவரையும் அழைக்கின்ற பாங்கும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெருவைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டும் போது அவர்களுடைய அவர்களுடைய சாதி மற்றும் தொழில் வேறுபாடுகள் அதில் நுட்பமாகக் குறிக்கப்படுவதும்  உணர்ந்து இன்புறத்தக்கது. இதுபோன்ற பாகுபாடுகளைத் தவிர்க்க தேநீர் விருந்து உதவும் என்ற நம்பிக்கையோடு கவிஞர் கவிதையைப்  படைத்திருக்கிறார். 


2. காதலின் அழகு:
காதலின் அழகை மேம்படுத்தவும்  காதல் உணர்வுகளின் ஆழத்தையும் அழுத்தத்தையும் புலப்படுத்தவும் காப்பி காதலர்களின் ஓர் அங்கமாக விளங்குகின்றது. நுண்கலை மருத்துவன் என்ற கவிதைத் தொகுதியில்,
"நீண்ட 
காலத்திற்குப் பிறகு 
ஒரு பனிக் காலத்தில் 
நாம் சந்தித்தபோது 
அவசரம் கருதி உடனே 
பிரிந்தோம் 
அன்று மாலையில் 
நாம் 
அருந்த வேண்டிய சர்க்கரை இல்லாத 
காபி இன்னும் மீதமிருக்கிறது
 எப்போது வரும் 
அந்த மாலை 
அதே மாலை
பச்சையிலைத் தேநீருடன்"
என்ற கவிதை காதலி அருகில் இருக்க அவளோடு  மனநிறைவாக உரையாட முடியாத சூழ்நிலையில் பிரிய வேண்டிய வேளையில் குடித்து முடிக்கப்படாத காப்பி ஒரு குறியீடாகக் காட்டப்படுகின்றது. மீண்டும் அந்த மாலைப் பொழுதை எதிர்பார்க்கும் மனம் சர்க்கரை இல்லாத காப்பி பச்சையிலைத் தேநீராக மாறி இருப்பதையும் உணரலாம் 

காதலியோடு குடித்து முடிக்காத காப்பிக்காகக் கவலைப்பட்டு எழுதிய கவிதையைப்  போலவே இன்னொரு கவிதை காதலனைப் பற்றி அமைந்துள்ளது.  தேநீர் பருகும்போது கனவில் நுழையும் காதலனைக் குறிப்பிடும் தொடரும் என்ற கவிதை, 
"அரைகுவளை
 பச்சையிலைத் தேநீர் 
அருந்திய சில நிமிடங்களில் கனவில் நுழைகிறான் 
கையில் 
பீங்கான் கோப்பையுடன்" 
ஒரு காதலி தேநீர் அருந்தத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவளுடைய காதலனும் கையில் தேநீர்க் கோப்பையுடன் அவள் கனவில் நுழைகிறான். ஒருவர் தேநீர் அருந்தும் போது கனவில் இன்னொருவரும் இணைந்து கொள்வது காதலின் சிறப்பியல்பாகும். தேநீர் காதலையும் ஊற்றெடுக்கச் செய்யும் சுவை நீராக விளங்குவதை இக்கவிதையில் காணலாம்.

3. வேடிக்கை: 
தூறல் மழை பெய்யும் நேரங்களில் தேநீர்க் கடையில் நின்று காப்பியோ தேநீரோ குடித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் வேளைகளில் மழையின் அழகை ரசிப்பதும் அங்கு வரும் மனிதர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பதும் இனிய அனுபவம் ஆகும்.  கவிஞர் முத்தமிழ் விரும்பி இவ் அனுபவத்தைக் கவிதைகளாகப் புனைந்துள்ளார். அவற்றில் ஒன்று எதிர்ப்பு என்ற கவிதையாகும்.

"காத்திருப்பின் சுவரெங்கும் 
பிளாஸ்டிக் இலைகள் படர்ந்திருக்க 
இலை திணற வெள்ளாடாய்
காலம் 
சிறு தூறல் விழும் இக்கணத்தில் 
வரசித்தி விநாயகர் கோவில் 
அரசமரத்தடிக் கடையில் 
இனிப்பில்லாத தேநீர்ச் சாறு குடிக்கும் 
என் முகத்தில் அவசரமாய் வந்து புகைக்கிறார்"

யாரோ ஒருவர் தான் மழையின் அழகை ரசிக்கும் வேளையில் வேகவேகமாக வந்து இவர் இருப்பதை உணராதவர்  போல முகத்தில் புகையை ஊதி விட்டுச் செல்கிறார்.  இவர் முகத்தில் பட்ட புகை மழைத் தூறலின் அழகையும் ரசிக்க விடாமல் பருகும் தேநீர் சாற்றையும் ருசிக்க விடாமல் இரண்டுக்கும் இடையூறாக அமைந்து விட்டது. 

உள்ளங்கை என்ற கவிதை கவிஞர் பயன் தரு மழையையும்  குளிர் தரு காற்றையும் தேநீர் குடித்தபடி  ஒரு சேர அனுபவித்துப் பாடியதாகும்.  ஏரியின் அழகைக் கண்டு ரசிக்கும் வேலையில் தென்மேற்கு பருவக்காற்று சில்லென்று வீசும் பொழுதில் ஒரு தேநீர்க்  கடையில் தேநீர் குடித்த படி அந்த அழகை உள்வாங்கித் திளைக்கும் அனுபவத்தைக் கவிதையாகப் படைத்துள்ளார்.  

"துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் 
தேநீர் 
குடித்தபடி 
எதிரே நீர் தளும்பும் 
ஏரியைப் பார்க்கிறேன்.

செங்கொன்றைப் பூக்கள் 
ஆனி மாதம் 
நீர்ப்பரப்பில் 
அலையாடுகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று கொல்லிமலை 
புளியஞ்சோலை பச்சைமலை தொட்டுத் 
தவழுகிறது. 

உள்ளங்கையில்  மழை பெய்ததால் ஏரி நிறைந்து காணப்படுகிறது. ஏரிக்கரை ஓரத்தில் இருக்கும் செங்கொன்றை மரங்களின் பூக்கள் நீர்ப்பரப்பின் அலைகள் மீது விழுந்து அலையலையாக அசைகின்றன. அத்தருணத்தில் தென்மேற்குப் பருவக்காற்று கொல்லி மலை, பச்சை மலை வழியாகத் தவழ்ந்து வந்து தேநீர் அருந்தும் கவிஞரின் உள்ளங்கையைத் தொட்டு சிலிர்ப்பூட்டுகிறது. 

4. ஒரு பொருள் ஒரு இடம் இரு கவிதை:
ஒரு நீண்ட இரவு ரயிலில் பயணம் முடித்து அதிகாலையில் தமிழகத்தின் தலைநகரில் காலடி எடுத்து வைத்து  அங்குள்ள ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தியபடி சென்னை மாநகரின் அதிகாலைப் பொழுதை அதன் குறைந்த பரபரப்பை ரசித்து எழுதப்பட்ட கவிதை விடிந்தது கண்டேன்.  இதே இடத்தில் மீண்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு தேநீர் பருகும் போது அங்குக் காணப்படும் மாற்றங்களைத் திரும்ப எழுதிய கவிதை   விவரிக்கின்றது.  இவ்வாறு ஒரே இடம் ஒரே சூழ்நிலை தேநீர் பருகும் அனுபவம் ஆனால் அங்கே இருக்கும் மனிதர்கள் மற்றும் செயல்பாடுகளில் காணப்படும் மாற்றங்கள் ஆகியவை விடிந்தது கண்டேன் என்றும் பின்பு திரும்ப எழுதிய கவிதை என்றும் இரண்டு கவிதைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

விடிந்தது கண்டேன்  கவிதையில் கவிஞர் தேநீர் பருகும்போது அந்தக் கென்னத் சந்தின்  பெயர்க் காரணத்தை அறிய விரும்புகிறார்.  ஆனால் அந்த பெயரைத் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு பெரியவர் தன் பெயர் தான் அது என்று சொல்லி தனது ஊரின் பெயரையும் சேர்த்துச் சொல்கிறார். தேநீர் குடித்த பிறகு  சிறிது தூரம் நடந்து வேனல்ஸ் சாலை சென்ற கவிஞர் மீண்டும் ஒரு கடையில் தேநீர் பருகுவதோடு கவிதை நிறைவு பெறுகிறது. அடுத்தடுத்து தேநீர் பருகும் இவரது பழக்கத்தை இன்னும் ஒரு சில கவிதைகளிலும் பதிவு செய்துள்ளார். 

விடிந்தது கண்டேன் 
எழும்பூரில் 
தொடர்வண்டி நிலையத்திலிருந்து 
வெளியே வந்து 
இம்பாலா விடுதியில்
 பச்சை தேநீர் அருந்த 
மார்கழியின் முற்பகுதிப் 
பனிமூட்டம் கலைகின்றது 

தொடர்வண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்து பச்சை இலை தேநீர் அருந்தும் வேளையில் அது வரை இருள் படர்ந்திருந்த அதிகாலைப் பொழுது மெல்லமெல்ல தன் இருட்டை விலக்கி அருணோதயத்தைக் காண்கிறது. பனிமூட்டமும் விலகத் தொடங்குகிறது. அப்போது அவர் தேநீர் அருந்தியபடி கென்னத் விடுதியில் கென்னத் யார் என்று விசாரிக்கிறார். அங்கு படுத்திருந்த பெரியவர் என் பெயர் கென்னடி என்றார். என் ஊர் மம்சாபுரம் என்றார்.  கவிஞர் அங்கிருந்து அகன்று வேனல்ஸ் சாலையில் திரும்பித் திரும்பவும் தேநீர் வருந்துகிறார். இப்போது நன்றாக விடிந்து விட்டது. 
புதிய மனிதர்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர்

திரும்ப எழுதிய கவிதையில்   ரயிலை விட்டு இறங்கியதும் எழும்பூரில் புதிதாக அழகுமுத்துக்கோன் என்ற விடுதலை வீரனுக்கு ஒருசிலை எழுப்பப்பட்டு இருப்பதைக் கவிஞர் காண்கின்றார். பிறகு சென்னையில் உள்ள குதிரைகளுக்குத் தீவனமாக இலை தழைகள் வெளியூர்களிலிருந்து பேருந்தில் கொண்டு வரப்பட்டு அங்கு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். உள்ளூர்க்காரர்கள் வந்து உடனடியாக வாங்கிச் செல்கின்றனர். நோய்த்தொற்று காலத்தில் பேருந்துகள் ஓட்டம் இல்லாத போது பாவம் இந்த குதிரைகள் எதைத் தின்று இருக்கும் என்று குதிரைகளுக்காகக் கவலைப்படுகிறார்.  கிராமங்களின் தோட்டத்து மூலிகைகள் காய்ந்துபோய் இருக்குமே அந்த விவசாயிகளுக்கு அது பேரிழப்பை ஏற்படுத்தி இருக்குமே என்று விவசாயிகளுக்காக வருந்துகின்றார். அதன்பிறகு இங்கு வேலை செய்யும் முனியப்பன் எங்கே போய் தேநீர் குடித்திருப்பான். தேநீர்க் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்த வேளையில் அவன் தேநீருக்கு என்ன செய்திருப்பான் என்று அவனை நினைத்தும் கவலைப் படுகிறார். தேநீர் குடித்த படி பல ஊர்க்காரர்கள் அங்கு  கதைகள் பேசுவதைக் கவனிக்கிறார்.  நிறைவாக இந்த ஆண்டு நல்ல மழை பெய்யட்டும் நான் மீண்டும் இந்த ஊருக்கு வரும்போது எல்லோரும் மகிழ்ச்சியாக ஊர்க் கதைகளைப் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் அப்போது நானும் வருவேன் காலை தேநீருடன் உங்கள் கதைகளைக் கேட்க என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.

இவ்வாறாக இந்த திரும்ப எழுதிய கவிதை பல நிகழ்வுகளை எதிர்பார்த்துப் பல எண்ணங்களை விவரிப்பதாக அமைகின்றது.  எழும்பூரில் எழுந்துள்ள 
தமிழக விடுதலை வீரன் ஒருவனது இடது கையில் கேடயம் இருக்கிறது.

 வேனல்ஸ் சாலையில் நடைமேடையில் 
புத்தம்புதுக் கட்டுகளாக பசுமை மாறா 
தழைகளும் இலைகளும் 
நடைப்பயிற்சி செய்வார் ஒதுங்கிப் போவர்
 இது என்னவாக இருக்கும்?

இராமநாதபுரம் 
சிவகங்கை 
திருவாடானைப் பகுதியிலிருந்து 
தினமும் 
ஆம்னி பஸ்களில் இருந்து இறக்கப் படுகின்றன
இருபது நிமிடங்களில் 
இடம் காலி 

ஏதெனக்கேட்டான் கவிஞன் 
குதிரைகளுக்குத் தீவனம் மூலிகைச் செடிகள்
என்றார் முனியப்பன்
கோவிட்-19 காலத்து 
ஏழு மாதங்களில் 
பெருநகரத்துக் குதிரைகள் 
எதைத் தின்றன 

தோட்டத்து மூலிகை காய்ந்திருக்கலாம் 
தென் மாவட்ட வேளாண்மை 
என்னவாய் இருந்திருக்கும்
முனியப்பன் எங்கே வேலை செய்து 
தேநீர் குடித்திருப்பார்?

பெருநகரத்துச் சாலைகள் நடமாட்டம் 
குதிரையோட்டம் 
யாதென நினைத்தல் 
இனி வேண்டாம் 
பசுமை படரட்டும் 

ஸ்ரீராம் விடுதியருகே 
மக்கள் குழுவாய்த் 
தேநீர் அருந்தும் பொழுதில் 
சொந்த ஊர் கதையாடட்டும்

கிபி 2021 நலமாய்க்
கிடைக்க 
இந்த ஐப்பசி மாதம் 
வடகிழக்குப் பருவமழை சேதாரமின்றிச்
சரியாய்ப் பொழியட்டும்
நண்பா 

நானும் வருவேன் 
காலைத் தேநீருடன் 
கதைகள் கேட்க 

திரும்ப எழுதிய கவிதை முதலில் எழுதப்பட்ட கவிதையில் இரண்டாவது தேநீர் பருகிய வேனல்ஸ் சாலையிலிருந்து தொடங்குகிறது. அந்தச் சாலையில் குவிக்கப்பட்ட குதிரை தீவனத்தை பற்றிய சிந்தனையோடு தொடர்ந்து தொடங்கி நாடு செழிக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், நண்பா என்ற நல்லெண்ண வெளிப்பாட்டுடன்   கவிதை நிறைவு பெறுகிறது.

தேநீர்  என்பது உற்சாகத்துக்குப் பருகப்படும் வெறும் பருகுநீர் மட்டும் அல்ல.  ஒரு சமூக அலசலை உள்ளுக்குள்ளே தூண்டுகின்ற ஊக்க நீராகவும் அமைகின்றது. இவ்வாறான தேநீர் அல்லது காபி பற்றிய கவிதைகளில் பச்சை இலை தேநீர், சர்க்கரை இல்லாத தேநீர் காபி போன்றவை  அடிக்கடி வருகிறது. காபி அல்லது தேநீரில் பால் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்டதாக குறிப்பு காணப்படவில்லை. ஒரு கவிதையில் மட்டும் வெல்லம் குறிப்பிடப்பட்டுள்ளது.  பச்சை இலைத் தேநீரும் சர்க்கரை இல்லாத தேநீரும் மேட்டுக்குடியினரின் பருகு நீராக விளங்குவது இவண் குறிப்பிடத்தக்கது.  

பாலுக்கு வழியற்று கடுங்காப்பி குடிக்கும் ஏழைகளின் காபி அனுபவம் எதுவும் எந்தக் கவிதையிலும் காணப்படவில்லை.  ஆரோக்கிய சிந்தனையுடன் பாலில்லாத சர்க்கரை சேர்க்காத மேட்டுக்குடி காப்பியும் தேநீரும் தான் கவிதைகளில் இடம் பெற்றுள்ளது. இனிப்புக்  காப்பியை விட  கசப்புக் காப்பி, கசப்பு தேநீர் அதிகம்  இடம்பெறுவதைக் காண முடிகிறது.  கவிஞரின் பிற கவிதைகளிலும் ஆதொண்டங்காயின் கசப்பு சுவை,  சோற்றுக் கற்றாழையின் கசப்புக்  கூழ்மம் என கசப்பின் சுவை ரசிக்கப் படுவதைக் காணலாம். 

ஆங்கிலேயர்கள் அல்லது வெளிநாட்டவர் காபி மோச்சா, கப்புச்சினோ, எக்ஸ்பிரசோ என்று பலவகையான சுவையில் காபி குடிக்கின்றனர். தமிழ்நாட்டில் காப்பி பார்ப்பனர்களுக்கு என்று தனிச் சுவையில் தயாரிக்கப்படுவதாக தொன்றுதொட்டு ஒரு கருத்து நிலவுகின்றது  அதற்கு கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயரும் சூட்டி உள்ளனர். அது கசப்புச் சுவை மிகுந்தது. இங்கு  காபி வசதியானவர்களின் பருகுநீராகவும் தேநீர் என்பது உழைப்பாளர்களின் பசியைப் போக்கும் உணவாகவும் கருதப்படுகின்ற நிலை உள்ளது. இந்த இரண்டுக்குமான வேறுபாடு எதுவும் முத்தமிழ் விரும்பியின் கவிதைகளில் காணப்படவில்லை.  சில கவிதைகளில் காபி என்று என்று குறிப்பிட்டாலும் அதுவும் சர்க்கரை இல்லாத மேட்டுக்குடிக் காப்பியைத் தான் குறிக்கிறது.  அல்லது மேட்டுக்குடியினரின் பச்சை இலைத்  தேநீர்  இடம் பெற்றுள்ளது.   கவிஞர் மாநிலத்தின் ஓர் அரசு உயர் அதிகாரி ஆவார். அவர் கவிதைகளில் எங்கும் ஏழைகளின் தேநீர் பற்றிய தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. பணக்காரர்களின் பச்சைத் தேநீர் இடம்பெற்றுள்ளது.

காதலர்கள் பருகும் காபி அல்லது தேநீர் அனுபவத்தை விட நட்பு மற்றும் சமூக அக்கறை சார்ந்த காப்பி பருகும் அனுபவம் கூடுதலாகக் கவிதையில் இடம் பெற்றுள்ளது.  காவிரி ஆற்றங்கரையின் நெல்  விவசாயி என்பதால் பருவ மழை, வேளாண்மை, ஊர்க் கதைகள் போன்ற கிராமத்துத் தகவல்கள் கவிதைகளின் உள்ளடக்கக் கூறுகளாக விளங்குகின்றன.

 கவிதையின் சரளமான நடையும் போக்கும் வாசிப்பு அனுபவத்தை சுவைமிக்கதாக ஆக்குகிறது. எதிர்மறைச் சொற்கள், வன்மம், வெறுப்பு, வசை  போன்றவை இல்லை.  அன்பும் நட்பும் சமூக அக்கறையும் காதலும் ஏழைகளின் பால் இரக்கமும் மழை, காற்று போன்ற இயற்கை நேசமும் நிறைந்திருப்பதால் கவிதைகள் சிறப்பு நிலை பெறுகின்றன. 





No comments:

Post a Comment