Wednesday, April 13, 2022

தமிழ்த்தாய்: ஒரு கலை விமர்சனப் பார்வை



  —  இந்திரன் ராஜேந்திரன், கலை விமர்சகர்  


ஏ. ஆர். ரகுமான் சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்த,  ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கிற்கு   பழுப்புத் தோல் மேனி, கையில் 'ழ' எனும் எழுத்து ஆயுதம், வெள்ளை உடை, விரிந்த கூந்தல், காலில் சிலம்பு, இடையில் மேகலை, உக்கிர தாண்டவம், காதில் குண்டலம் இல்லை. ஓவியர் சந்தோஷ் படைப்பு புதுமைக்குப் புதுமை செய்கிறது.  

ஆனால் இதற்கு முந்திய  தமிழ் அன்னையை சிவந்த மேனியுடன் ஓவியர் மணியம் செல்வன் ஓவியமாகத் தீட்டி இருக்கிறார்.  


தமிழன்னையை கவியோகி சுத்தானந்த பாரதியார்  கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.
"காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
         யாபதியும் கருணை மார்பின்
    மீதொளிர்சிந் தாமணியும் மெல்லிடையில்
         மேகலையும் சிலம்பார் இன்பப்
    போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ
         ளாமணியும் பொலியச் சூடி
    நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
         தாங்குதமிழ் நீடு வாழ்க" 

தமிழ் முன்னர் ஓவியமாகத் தீட்டப் பட்டதற்கும் இன்று தீட்டப் படுவதற்கும் தான் எத்தனை வேறுபாடு.  அன்று திருக்குறளைச் செங்கோலாய்த் தாங்கியது. இவ்வாறு தமிழ் மொழி காலம் தோறும் மாறி வருவதால் தான் என்றுமுள தென்தமிழ் என தொடர்ந்து வளர்கிறது.

1.  1891இல் தமிழ் எனும் ஒரு மொழியை ஒரு தமிழ்த் தாயாக முதல் முதலில் உருவகப்படுத்தியவர்  மனோன்மணியம் சுந்தரனார்  (1855 – 1897).  இவர்   தனது  மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினார். இது எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டது.  1967 இல் தி.மு.க.  வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோது  தமிழ்நாட்டின் முதலமைச்சரான அறிஞர் அண்ணாதுரை “நீராரும் கடல் உடுத்த” எனும் இப்பாடலைச் சில திருத்தங்களோடு தமிழ்த் தாய் வாழ்த்தாக தேர்வு செய்தார்.  அவர் மறைவிற்குப் பிறகு இப்பாடலை 1970 மார்ச் 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. இதன் மூலம் தமிழ்த்தாய் எனும் சொல்லாடல்  புகழ் அடைந்தது. “பிதா, சுதன் ஆவி “ என்பதில் தந்தையை முன்னிறுத்தியதுபோல் அல்லாமல் மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்திலிருந்து தொடரும் தாய்த்தெய்வ வழிபாட்டை இது அடியொற்றியது.


2.  இதன் அடுத்த கட்டமாக தமிழ்த்தாய் கோயில் காரைக்குடியில் அமைக்கப்பட்டு, 1975, ஏப்ரல் 23 அன்று தமிழ்த்தாய்க் கோயிலுக்குக் கால்கோள் விழா நடந்து, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பெற்றன. பின்னர்  16 ஏப்ரல் 1993 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியால்  திறந்து வைக்கப்பட்டது. அதில் தமிழன்னைக்கு சிற்பி வை.கணபதி ஸ்தபதி வடிவம் கொடுத்தார். இதனை கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய ஞான சரஸ்வதி வடிவத்தை அடியொற்றி படைத்ததை கணபதி ஸ்தபதியும், சோழமண்டல் ஓவியர் கிராமத்துச்  சிற்பி கே.எம் .கோபாலும் நேரில்  சந்தித்தபோது எங்களிடம் தெரிவித்தனர்.  இதில் தமிழ்த்தாய் உருவம் நான்கு கைகளுடன் வலக்கால் கீழே தொங்க இடக்கால் மடித்த நிலையிலும், தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு செதுக்கப்பட்டது. நான்கு கைகளில் சுவடி,  செங்கோட்டு யாழ், சுடர்,  உருத்திராட்ச மாலை ஆகியவை சித்தரிக்கப்பட்டன. கால்களில் சிலம்பும், தண்டையும் உள்ளன.  மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை பின்புறத்தில் திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. 


3.  இதன் அடுத்த கட்டமாக ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டுக்காக 1981 இல் மதுரையில் அமைக்கப்பட்ட சிலை தாமரையில் இரண்டு கைகளுடன்  அபய முத்திரையுடன் அமர்ந்திருப்பது போன்று உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளான 10.1.1981-ம் நாள் அன்று இச்சிலையை அன்றைய முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் முன்னிலையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார். இன்றைக்கும் தமுக்கம் மைதான நுழைவுவாயிலில் தமிழன்னை தேரில் அமர்ந்திருப்பது போன்ற சிலையை நீங்கள் காணலாம்.

தமிழ்ச் சமூகத்தில் இப்போதுதான் தமிழ் அழகியல் கூறுகளுடன் கூடிய படைப்புச் செயல்பாடு தீவிரம் அடைந்துள்ளது. ஓவியர் சந்தோஷ் நாராயணனின் பழுப்பு நிறம் கொண்ட”தமிழணங்கு” ஓவியம் அத்தகைய ஒன்று. ஏ.ஆர் ரகுமான் டுவிட்டரில் பதிவிட்ட பின்னர்  என் பிறந்த மண் புதுச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் முத்தமிழ்ச்செல்வன், பாரதியார் ஆண்கள் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளி 11 வகுப்பு மாணவன் அதைச் சிற்பமாக வெளிப்பாடு செய்திருக்கிறான். 


ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் இதனை மிக உன்னதமான தமிழ்  மண்ணின் அடையாளத்தோடு கூடிய அசல் படைப்புக் கலை வெளிப்பாடாக கருதுகிறேன்.  மேல்நாட்டுச் சூரியனிடமிருந்து கடன் வாங்கித்தேய்ந்து போகும் நிலாக்களாக நிறைய படைப்புகள் நவீனத் தமிழ் ஓவியர்களால் செய்யப்படும்போது மாணவன் முத்தமிழ்ச் செல்வனைன் படைப்பு மிகவும் அசல் உயிரோட்டத்துடன் விளங்குவதாக நான் கருதுகிறேன்.  முற்றிலும் தமிழ் மண்ணில்  இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட தமிழன்னையின் தமிழணங்கு  வடிவம் சோள இலை மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டது (ஆடை வடிவமைப்பு: குணா).   

இதனை ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. நமது கலை தமிழ் அடையாளம் கொண்டதாக மாற வேண்டும் என்று  கடந்த 30 ஆண்டுகளாக நான் எனது “தமிழ் அழகியல்” நூலில் வற்புறுத்தி வருவது இன்று இயல்பாகவே  கள்ளம் கபடமற்ற நிலையில் நனவாகிறது.




No comments:

Post a Comment