Thursday, April 7, 2022

விளையாடிய தமிழ்ச்சமூகம் - நூல் மதிப்புரை

விளையாடிய தமிழ்ச்சமூகம் - நூல் மதிப்புரை

-- முனைவர் வா.நேரு



விளையாட்டு என்றாலே நம் கண் முன்னால் விரிவது நம் இளமைக்காலம்தான். கிராமங்களில் காடு, மேடுகளில் ஓடியதும், ஆடியதும், தொட்டுப் பிடித்து விளையாடியதும், தொடர்ந்து ஓடி, ஓடித் தொட்டுப் பிடித்ததும் என நம் மனக்கண் முன்னால் விரியும் காட்சிகள் பல பல. 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் சிறுவர்,சிறுமிகளால் விளையாட்டுக்களமாய் இருந்த தெருக்கள் இன்று நகரம் என்றாலும், கிராமம் என்றாலும் அமைதியாக இருக்கும் நிலையில், ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஆய்வுக்காக அந்த விளையாட்டுகளை ஆய்வுக் களமாக எடுத்துக்கொண்டு, கள ஆய்வாக கிராமங்களுக்குச்சென்று, அங்கு விளையாடும் பிள்ளைகளைக் கண்டு, அதனைப் போல பிள்ளைகளை விளையாடச்சொல்லி அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி ஒரு புத்தகமாகக் கொடுத்திருக்கின்றார், அந்தப் புத்தகத்தின் தலைப்பு 'விளையாடிய தமிழ்ச்சமூகம்'.  அட்டையிலேயே தலைப்பிற்குக் கீழ் 'விளையாட்டில் கட்டமைக்கப்பட்ட தமிழ்ச்சமூக உறவுகள் குறித்த ஓர் அலசல் ' என்று கொடுத்திருக்கிறார்கள்.


நூல் ஆசிரியர் பற்றி பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளார்கள். முனைவர் ஆ.பாப்பா அவர்கள் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி, தமிழ் உயராய்வு நடுவத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 'நாட்டுப்புற விளையாட்டுக்கள்: சமூகவியல் உளவியல் பகுப்பாய்வு'  என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். விளையாட்டுக்கள் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் முப்பத்தைந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் பல நூல்களில் வெளியிட்டுள்ளார் போன்ற பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளில் விளையாட்டு மரபுகள் பண்பாட்டு விழுமியங்களாக அமைகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் தற்சமயம் மேற்கொள்ளப்படுகின்ற அகழாய்வுகளில் விளையாட்டுப்பொருள்கள் கண்டுபிடிக்கப்படுகின்ற செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன.  இதற்குச்சான்றாக அண்மைய காலக் கொடுமணல், கீழடி, சிவகளை போன்ற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளைக் கூறலாம்." என்று குறிப்பிட்டு தமிழ்ச்சமூகம் 3000 ஆண்டுகளாக விளையாடிய சமூகம் என்பதனை நினைவுபடுத்திப் பதிப்புரையை தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷிணி அவர்கள் கொடுத்துள்ளார்.

இந்த நூல்  நான்கு  இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இயல் 'நாட்டுப்புற விளையாட்டுக்களும் சமூகவயமாதலும்' என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.'சமூகவயமாதல்   என்கிற சொல் கற்றுக்கொள்ளுதல் அதாவது சமூகச்செயல்பாடுகளை, சட்ட திட்டங்களைக் கற்றுக்கொள்ளுதல் என்கிற பொருளைக் குறிக்கிறது ' என்று குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர். சமூகவயமாதல் இல்லை என்றால் மனிதனும் விலங்காகவே வாழ்வான் என்பதைச்சொன்ன மேனாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார்.

விளையாட்டினால் குழந்தைகளுடைய திறன் வளர்வதையும், புதுமை உருவாக்கும் மனப்பான்மை தோன்றுவதையும், பிறரின் தந்திரங்களை அறிவது மட்டுமல்லாது தானே தந்திரங்களை உருவாக்கக் கற்றுக்கொள்வதும் உண்டாகிறது என்று குறிப்பிடுகிறார். சிறு குழந்தையாக இருக்கும்பொழுதே விளையாடுவதால்,விளையாட்டில் இருக்கும் சட்ட, திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு விளையாடுவதால் பின்னால் சமூக கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்களாக உருவாகிறார்கள்.  விளையாட்டில் ஒரு தலைவனுடைய கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் அவர்கள் பின்னாட்களில் தலைமைக்குக் கட்டுப்பட்டு  நடப்பது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். விளையாடுவதின் மூலமாக குழந்தைகள் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், உதவி மனப்பான்மை, கவனமாக இருத்தல், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை வளர்தல் போன்ற பல குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.  சமூகம், அரசியல், பண்பாடு, உறவு போன்ற பலவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் ஒரு கருவியாக விளையாட்டு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாவது இயலில் 'நாட்டுப்புற விளையாட்டுக்களும் பாலினமும் ' என்னும் தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் நூலாசிரியர் நிறைய கள ஆய்வின் வழியாகக் கண்டறிந்ததை ஆவணப்படுத்தியுள்ளார்.  பாலினப்பாகுபாடு என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழ்ச்சமூகத்தில் காட்டப்படுகிறது என்பதனை பட்டியலிடுகிறார். வாய்மொழி இலக்கியங்களில் ஆண்களை விடப் பெண்களின் பங்கே அதிகம் எனக்குறிப்பிடுகிறார்.  "பொதுவாக நமது சமூகத்தில் ஓர் ஆண் குழந்தையின் பிறப்பைவிட ஒரு பெண் குழந்தையின் பிறப்பு சிறப்பற்றதாகக் கருதப்படுகிறது.  இதுவே பாலினப் பாகுபாட்டிற்கு அடிப்படையாகும்," என்று குறிப்பிடுகின்ற நூலாசிரியர் பெண் குழந்தை தாலாட்டிற்கும் ஆண் குழந்தை தாலாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பாலினப் பாகுபாடு தொட்டிலை ஆட்டும்போதே ஆரம்பிக்கிறது என்பதையும், ஆண் எப்படி உயர்ந்த நிலையில் வரவேண்டும் என்பதையும், பெண் எப்படி அடுப்பங்கரைக்கு மட்டும் உரியவள் என்பதையும் தாலாட்டுப் பாடல்களின் உட்பொருள் உணர்த்துவதைச்சொல்கிறார்.

நாட்டுப்புற விளையாட்டுகளில் பாலினக்கூறுகள் வெளிப்படையான நிலை,உள்ளார்ந்த நிலை என்று இரண்டு நிலைகளில் இருப்பதைக் கூறுகின்றார். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதைச் சுட்டும் விதமாக சிறுவயது விளையாட்டிலேயே, விளையாடும் விளையாட்டுப் பெயர்களிலேயே பாலினப்பாகுபாடு இருப்பதைக் காட்டுகிறார்.  விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டின் அமைப்பு, விளையாடும் நேரம், இடம்,விளையாட்டில் பயன்படுத்தும் சொற்கள் என நூலாசிரியர் சுட்டிக்காட்டுவதை யோசிக்கும்போது பாலினப் பாகுபாடு விதைக்கப்படும் இடம் எது என்பது தெளிவாகத் தெரிகிறது. "உடல் திறன் மற்றும் அறிவுத்திறன் கொண்ட வன்மை விளையாட்டுகள் சிறுவனுக்குரியதாகவும் பொழுது போக்கு விளையாட்டுகள் சிறுமிக்குரியதாகவும் நம் சமூகத்தில் பாகுபடுத்தப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் சில பயமுறுத்தல்களையும் ஆவணப்படுத்தியுள்ளார்.
 
"இருபாலரும் இணைந்து விளையாடுவதற்குச் சமூகம் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிறுமிகள் பையன்களோடு சேர்ந்து விளையாடக்கூடாது.  குறிப்பிட்ட வயதிற்கு(எட்டு வயதிற்கு) மேல் சிறுமிகள் பையன்களோடு சேர்ந்து விளையாடினால் சிறுமிகளின் மூக்கு விழுந்துவிடும், காது அறுந்து போகும், வயிற்றில் கை முளைத்துவிடும்" என்று ஒரு பெண் (தாயம்மாள்,48,மதுரை) சொன்னதைப் பதிவு செய்து எப்படிப் பெண் குழந்தைகள் பயமுறுத்தப்படுகிறார்கள் என்பதைச்சுட்டியுள்ளார். பிராய்டு அவர்களின் மேற்கோள்களோடு விவரிக்கப்பட்டிருக்கும் 'கற்பனைத் தோழமை ' என்னும் பகுதியை இன்னும் விரிவாக ஒரு தனிப்புத்தகமாகவே நூல் ஆசிரியர் எழுதலாம்.  அவ்வளவு ஆர்வம் ஊட்டும் பகுதியாக அந்தப் பகுதி உளவியலோடு சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

"நாட்டுப்புற விளையாட்டுக்களின் இன்றைய நிலை" என்பது அடுத்த இயல்.  கடந்த 50,60  ஆண்டுகளில் நடந்த மாற்றங்களை.சமூகத்தில் நடந்த மாற்றங்கள்,  அதனால் விளைந்த விளைவுகளின்  விவரிப்பாக இந்த இயல்...  அடுக்குமாடிக் குடியிருப்பில் குழந்தைகள் விளையாட இடமெங்கே? அடுத்தடுத்து டீயுசனுகளுக்குப் பறக்கும் குழந்தைகளுக்குத் தரையில் விளையாட நேரமிருக்கிறதா?  இன்றைக்கெல்லாம் தனிக்குடித்தனங்கள் மட்டுமே... நாமிருவர் நமக்கொருவர் என்றாகிவிட்டது.  ஒற்றைக்குழந்தை யாரோடு விளையாடும்? வேலைக்கு ஓடும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளைக் கவனிக்க நேரமிருக்கிறதா? கூட்டுக்குடித்தனங்கள் சிதைந்தது குழந்தைகளின் விளையாட்டிற்குப் பேரிடர் போன்ற பல சிக்கல்களைப் பேராசிரியர் பாப்பா அவர்கள் போகிறபோக்கில் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய குழந்தைகள் இயந்திரத்தனமாக வாழப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அதனால் இயந்திரங்களோடு விளையாடுவதையே விரும்புகிறார்கள் என்று சொல்கின்றார்.  கணினி, இணையம், வாட்சப், முக நூல், வீடியோகேம் என விரிந்திருக்கும் இணைய உலகம் ஒரு புதிய பாதையைக் காட்டினாலும் இதனால் விளைந்த ஓர் இழப்பை விவரிக்கும் இயலாக இந்த இயல் உள்ளது எனலாம்.  "இன்றைய தலைமுறைக்கு உடல் அசைவும் உடல் உழைப்பும் குறைவு.  இவர்களது செயல்கள் அனைத்தும் லாப/நட்டக் கணக்கை அடிப்படையாகக் கொண்டவை.  அதனால் தேவையில்லாமல் உடல் அசைவு மிகுந்த விளையாட்டுக்களை விளையாட இவர்கள் தயாராக இல்லை.  மேலும் கேட்புத்திறன்(Auditory) ,  பார்க்கும் திறன்(Visual) என்று பார்த்தால் இவர்கள் கேட்கும் திறனைவிடப் பார்க்கும் திறனையே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.  அதனால் மற்றவர்களோடு பேசுவதும் அவர்கள் சொல்வதைக் கேட்பதும் குறைவு.  தனி நபராகவே வாழப்பழகிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் குழு விளையாட்டுத் தன்மை அதிகமாகக் கொண்ட நாட்டுப்புற விளையாட்டுக்களை விளையாட இவர்கள் விரும்புவதில்லை " என்று நூலாசிரியர் தன் கருத்தாகக் கூறியுள்ளார்.  இது விவாதத்துக்குரியது.  இன்றைய தலைமுறை இப்படி ஆனதற்கு சென்ற தலைமுறைதானே காரணம்.

இந்த நூலின் மிகச்சிறப்பாக நான் கருதுவது 'நாட்டுப்புற விளையாட்டுகள்" என்னும் பகுதி.  முழுக்க முழுக்க, களத்தில், கிராமங்களுக்குச்சென்று, நாட்டுப்புற விளையாட்டுக்களை விளையாடுபவர்களிடம் பேட்டி எடுத்து, விளையாடச்சொல்லி, அதனை எப்படி விளையாடுகிறார்கள் என்பதனை ஆவணப்படுத்திக் கொடுத்திருக்கும் பகுதி.   காலஞ்சென்ற தமிழ் அறிஞர் பேரா.தொ.பரமசிவம் அவர்களின் ஆய்வேடான 'அழகர் கோவில்' மிகப்புகழ் பெற்றது.  அதற்கு முதன்மையான காரணம் கள ஆய்வு.   களஆய்வின் அடிப்படையில் அமைந்த தொகுப்பு நூல் அது.  அதைப் போலவே இந்த இயல் களப்பணியால் விளைந்த கனி.  இந்த நூலின் ஆசிரியர் "களப்பணியில் சேகரிக்கப்பட்ட வடிவத்திலேயே அதே மொழி அமைப்புடன் விளையாட்டுகள் பனுவலாகத் தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் தரப்பட்டுள்ள விளையாட்டுகள் சிறுவர்கள் விளையாடிய விளையாட்டின் அடிப்படையில் அப்படியே தரப்பட்டுள்ளன." என்று குறிப்பிட்டு, களப்பணி அனுபவங்களையும் கொடுத்துள்ளார்.

வண்ணாம்பாறைப்பட்டி என்னும் ஊரில் கள ஆய்வில் கண்ட வெத்தலக்கட்டு பிடியாத விளையாட்டு, வலையபட்டியில் சேகரித்த வெத்தலப்பட்டி வருது விளையாட்டு, தேன்கல்பட்டியில் கண்ட 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது விளையாட்டு,  வலையபட்டியில் கண்ட திரிதிரியம்மா திரிதிரி விளையாட்டு,  கச்சைகட்டியில் பார்த்த கிளித்தட்டு விளையாட்டு, புளியங்குளத்தில் சேகரித்த கிச்சு கிச்சு தாம்பாளம் எனப்படும் தில்லி தில்லி பொம்மக்கா விளையாட்டு,  இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் பாட்டு, சின்ன உடைப்பு ஊரில் கண்ட தென்னை மரம் விளையாட்டு கச்சை கட்டியில் கண்ட கொல கொலயா முந்திரிக்கா விளையாட்டு என்பன போன்ற  முப்பத்து மூன்று விளையாட்டுகளைப் பற்றி மிக விரிவாக, ஆவணமாகக் கொடுத்துள்ளார்.  இந்த முப்பத்து மூன்று விளையாட்டுகளையும் ஆவணப்படுத்துவதற்கு உதவிய 91 பேர்களின் பெயர்களை நன்றியோடு ஊர்ப்பெயரோடு சேர்த்துக்கொடுத்திருக்கிறார்.

நூன்முகம் எனத் தலைப்பிட்டு நூல் ஆசிரியர் பாப்பா அவர்கள் தன்னுரையைக் கொடுத்திருக்கிறார்.   அதில் தன்னுடைய பால்ய காலத்தை ஓவியம் போல வடித்திருக்கிறார்." சிறு வயது முதல் வளரிளம் பருவம் வரையிலும் வீட்டினுள் இருந்ததை விடத் தெருவிலும் திறந்த வெளிகளிலும் விளையாடியதே அதிகம்.  வெயிலிலும் பனியிலும் இரவிலும் பகலிலும் கால நேரமின்றித் திரிந்ததும் விளையாடியதும் கொஞ்சங்கூட இப்பொழுது நினைத்துப்பார்த்தாலும் அலுக்கவேயில்லை.   பாகுபாடின்றிப் பையன்களோடு விளையாடிச்சுவரேறிக் குதித்ததே அதிகம்.  சிறுவயதில் படித்ததைவிட விளையாடியதே அதிகம்.  படிக்காமல் விளையாடி வீணாகி விடவில்லை.  அனுபவப் பாடம் அறிய முடிந்தது" என்று குறிப்பிடுகிறார். சமூகத்தை நேசிக்கும் ஒருவராக அன்றைக்கும் இன்றைக்குமான வேறுபாட்டை உணர்ந்து ஆவணப்படுத்தி இருக்கிறார்.

இந்த நூலுக்கு மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் டாக்டர் கிறிஸ்டியானா சிங் அவர்கள் வாழ்த்துரை அளித்திருக்கிறார். அக்கல்லூரியின் தமிழ் உயராய்வு நடுவத்தின்  தலைவர், பேரா.முனைவர் கவிதாராணி அவர்கள் அணிந்துரை கொடுத்துள்ளார்கள்.  அதில் "திரையில் மட்டுமே விளையாடி மகிழும் இன்றைய இளம் தலைமுறைக்குத் தரையில் விளையாடும் விளையாட்டுக்களின் சிறப்புகளையும் அவற்றின் பன்முகத் தன்மைகளையும் சமூகப்பரிவோடு இந்நூல் பரிந்துரைக்கிறது.மேலும் விளையாட்டு என்றாலே இருவராகவோ அல்லது குழுவாகவோ இணைந்து விளையாடுவது என்கிற நிலை மாறி தானும் தன் கைபேசியும் எனும் ஒற்றைமயமான இன்றைய நிலை குறித்துக் கவலைப்பட வைக்கிறது.   நூலாசிரியர் முனைவர் பாப்பா பூச்சு இல்லாத பேச்சுக்காரர்.  அவ் வெளிப்படத்தன்மையையும் இயல்புத் தன்மையையும் இந்நூலுள் நம்மால் இனங்காண முடிகிறது " என்று குறிப்பிட்டுள்ளார்,  உண்மைதான்.    இன்றைய சமூகச்சூழலை மிக வெளிப்படையாக பேசும் நூலாகவும், நமது தமிழ்ச்சமூக விளையாட்டுக்களை ஆவணப்படுத்தி, நமது அடுத்த தலைமுறையை தரையில் விளையாட வைக்கும் உண்மையான முயற்சியாகவும் இந்த நூல் திகழ்கிறது, வாங்கிப் படிக்கலாம்.  பாதுகாத்து வைத்து நாம் விளையாடிய விளையாட்டுகளை குழந்தைகளுக்குச்சொல்லி மகிழலாம்.  அதன் மூலம் அவர்களையும் தரையில் விளையாடப் பழக்கப்படுத்தலாம்,  ஊக்கப்படுத்தலாம்.


நூல் விவரம்: 
 விளையாடிய தமிழ்ச்சமூகம்
ஆசிரியர் : முனைவர் ஆ.பாப்பா
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
பதிப்பு : முதலாம் பதிப்பு பிப்ரவரி 2022
பக்கங்கள்:  256 
விலை: ரூ  300/=

நன்றி: சங்கப்பலகை, வல்லினச்  சிறகுகள் - மார்ச் 2022 




No comments:

Post a Comment