- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி
திருவள்ளுவர் யார் என்று நெடுங்காலத்திற்கு முன்பே தொடங்கிய ஆராய்ச்சி இன்று வரை முற்றுப்பெறவில்லை. அவரைக் குறித்து வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கதைகளில் பெரும்பான்மையானவை புராணக் கதைகளைப் போன்றே உள்ளன. இவற்றையெல்லாம் கேட்க நேர்ந்தால் வள்ளுவரே அசந்துவிடுவார். நான் அவனில்லை என்று கூடக் கூறலாம். இக்கதைகள் வரலாற்றுக்குப் பொருந்துவதாக இல்லை என்பதால் ஆய்வாளர்களால் அவைகள் புறந்தள்ளப்படுகின்றன. இருக்கின்ற ஒரே சான்று அவர் எழுதிய திருக்குறள் என்பதால் அதிலிருக்கும் சொல்லாட்சி, மொழிநடை, இடம்பெறும் பெயர்கள், உவமைகள், கதைகள், மேற்கோள், பழமொழி முதலானவற்றை வைத்துத் திருவள்ளுவர் யார் என்று அறுதியிடும் முயற்சிகளும் பன்னெடுங்காலமாக நிலவி வருகின்றன. இம்முயற்சிகளால் அவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர், தங்கள் சமயத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் அவரவர் விருப்பத்திற்கும், பயன்களுக்கும் உள்ளாக்கப் படுகிறார். மேலும், அவர் மீது பல முத்திரைகளும், பல வண்ணங்களும், பல முகமூடிகளும் அணியப்பட்டு பல்வேறுவித அடையாளங்களுடன் பார்க்கப்படுகிறார். தற்போதைய அடையாளம் காவி தரித்த உருவம். ஒருமை, ஒற்றுமை, மாந்தநேயம் ஆகிய பிம்பங்கள் சிதையுமளவில் இவ்வேற்றுமைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் இடம் கொடுத்தது திருக்குறளா, இத்தனை நூற்றாண்டுக்கால இடைவெளியா, எழுத்துருக்களின் வளர்ச்சி நிலையா, இடைச்செருகல்களா, உரையெழுதியோரின் உள்மன விகாரங்களா, அதிகார மாற்றங்களா, சமயச் சண்டைகளா என்று பன்னோக்கில் எழுந்து நிற்கும் வினாக்களுக்கு விடை காண்பது எளிதாக இல்லை.
திருக்குறளில் பாதிக்கு மேற்பட்ட குறள்கள் தமிழ் படித்தோர்க்கு எளிதில் விளங்கிவிடும். மீதியில் பெரும்பாலானவற்றை உரையாசிரியர்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஒருசில பகுதிகள் உரையாசிரியர்களாலும் விளங்க வைக்க முடியாதவை. அவற்றுள் ஒருசில உரையாசிரியர்களுக்கே விளங்காதவை. மிகக் குறிப்பிட்ட சில குறள்கள் வள்ளுவருக்கு மட்டுமே விளங்கக்கூடியவை. அவர் வாய்திறந்தால்தான் உண்டு. அப்படிப்பட்ட குறள்களில் ஒன்றுதான் முதல் குறள். அந்த ‘ஆதி பகவன்’ யார்தானென்று இதுவரை நடந்த ஆய்வுகளை எழுதியும், படித்தும் மாளவில்லை. பலவாறாகப் பொருள் கூறப்பட்ட அந்த ‘ஆதிபகவன்’ சொல்லாய்வில் ஏதோ ஒரு கூற்றில் உண்மை இருக்கக் கூடும். ஆனால் அது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாக இருக்க முடியாது என்ற நிலை திருக்குறளில் ஒருமை இல்லையோ என்ற எண்ணத்தைக் கூட ஏற்படுத்திவிடும். இருமையைப் பற்றிப் பல இடங்களில் கூறிச் செல்லும் அவருடைய கருத்தினால் ஒருமையும் இருக்கும், இருமையும் இருக்கும் என்பதையே குறளின் சிறப்பாகக் கொள்ளலாம். அதே நேரம், திருக்குறளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தியாவின் தொடக்கக்காலச் சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பினை அறிந்தாக வேண்டும்.
திருக்குறளும் சமணமும்:
திருக்குறள் இயற்றப்பட்ட காலத்திலிருந்து (கி.மு. மூன்று) ஆயிரம் ஆண்டுகள் வரை கற்றோர் இடையில் அந்நூல் செல்வாக்குடன் இருந்து வந்தது. பதினான்காம் நூற்றாண்டுக்குப்பிறகு சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த பின்னர், திருக்குறளும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாண ஆட்சியர் பொறுப்பேற்ற பிரான்சிஸ் வைட் எல்லீஸ் (1777 – 1819) காலத்தில், அவர் வெளியிட்ட திருக்குறள் (1812) நூல்தான் மீண்டும் திருக்குறளைத் தமிழகத்திற்கு நினைவில் கொண்டுவந்தது. (இதற்கு முன்பும் வீரமாமுனிவர் உள்ளிட்ட சிலரின் பதிப்புகள் வெளிவந்துள்ளன). அயோத்திதாசனாரின் பாட்டனார் கந்தப்பன் வழி, அவருடைய அதிகாரி ஆரிங்டன் வழி திருக்குறள் ஓலைச்சுவடி எல்லீசை அடைந்தது. அது ஒரு சமண நூலாகவே எல்லீஸ் குறிப்பிட்டுத் திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களில் இருந்து தெரிந்தெடுத்த குறள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீண்ட விளக்கங்களுடனும், பிற இலக்கிய மேற்கோள்களுடனும் 1812 இல் வெளியிட்டார். அந்தக் காலத்தில் நிலவிய கருத்துப்படி அவர் திருவள்ளுவரைச் சமணராகவே அவரது நூலில் அடையாளப்படுத்தினார். எல்லீஸ் காலத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் திருவள்ளுவர் தங்க நாணயங்களை வெளியிட்டது. நாணயத்தில் திருவள்ளுவர் உருவம் சமண முனிவராகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குறளின் முதல் குறளில் இடம் பெறும் ‘ஆதிபகவன்’ முதற்றே உலகு’ என்னும் தொடரில் வரும் ஆதிபகவன், சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரைக் குறிப்பதாகச் சமண நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆதிநாதரும், ஆதிசிவனும், ஒருவரே என்றும், சமணமும், சித்தமும் அதிலிருந்தே தொடங்குகின்றன என்றும் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். சிந்துவெளி முத்திரைகளில் எருமைக் கொம்புகள் அணிந்து தவ நிலையில் காணப்படும் உருவம் ஆதிநாதர் என்றும், இடப (ரிஷப) தேவரே என்றும், சிந்துவெளி வரை பேசப்பட்ட மொழி தமிழே என்றும், சமணம் தமிழ்ச் சமயமே என்றும், சமண இலக்கியங்களே தமிழில் அதிகம் என்றும் அண்மைய ஆய்வுகள் கருத்துரைக்கின்றன. பிற சமயக் குரவர்கள் அனைவரும் விருஷபதேவருக்குப் பின்னர் தோன்றியவர்களே என்று திருவள்ளுவர் சைனர் (சமணர்) என்ற கட்டுரையில் திரு.வி.க. குறிப்பிடுகிறார். சமணம் தமிழகத்தில் இறக்குமதியானதல்ல, ஆதிநாதர் (சிந்துவெளி) காலந்தொட்டே தமிழர்களின் சமயமாக சமணம் இருந்துள்ளது. தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டாக இலக்கணம், இலக்கியம், அற இலக்கியம், உரைகள் ஆகிய தொண்டுகள் உள்ளன என்கிறார் பேரா. க.ப.அறவாணன். சமணர்களின் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்கிறார் கால்டுவெல். காப்பியங்கள், புராணங்கள் உட்பட 22 இலக்கிய நூல்களும், தொல்காப்பியம், நன்னூல் உட்பட 20 இலக்கண நூல்களும், திருக்குறள், நாலடியார் உட்பட 16 அற நூல்களும், நீலகேசி உள்ளிட்ட நான்கு தருக்க நூல்களும், பெருங்குருகு, செயிற்றியம் உள்ளிட்ட ஒன்பது இசை நூல்களும், பிற இலக்கிய வகைகளான நிகண்டு, ஓவியம், சோதிடம், பிரபந்தம், சதகம், கணிதம், நாடகம் ஆகிய வகையில் திருக்கலம்பகம், சூடாமணி நிகண்டு உள்ளிட்ட 36 நூல்களும் ஆக மொத்தம் 107 இலக்கிய நூல்கள் தமிழ்ச் சமணர்களால் இயற்றப்பட்டுள்ளன என்ற செய்தி, தமிழக அரசு வெளியீடான தமிழரசு இதழில் (1.11.1974) வெளியிடப்பட்டுள்ளது (தகவல் இரா.பானுகுமார், சென்னை–மின் தமிழ், தமிழ் மரபு அறக்கட்டளை).
திருவள்ளுவரைக் கொண்டாடும் சைவ, வைணவ மதங்களின் வழிபாட்டு இடங்களில் அவருடைய உருவம் அமைக்கப்படுவதில்லை. அடியவர் வாழ்த்தில் அவர் சேர்க்கப்படுவதில்லை. இதற்குத் திருவள்ளுவர் முன்னாளில் சமணர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமே காரணம் என்கிறார் திரு. வி.க. திருவள்ளுவரை எச்சமயத்தின் சார்பாகப் பார்த்தாலும் அவை அத்தனையுமே அருகதேவர் (மகாவீரர்) கண்ட அருள்நெறியின் பாற்பட்டன வென்பதும் திரு.வி.க. வின் ஆழ்ந்த கருத்து. கொல்லாமையைத் திருவள்ளுவர் வலியுறுத்தியதைப் போல் அவர் காலத்துப் புலவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை (அறவினை யாதெனின் கொல்லாமை – குறள் - 321). மேலும் அறத்தைப் பாயிரத்தில் அமைக்கும் மரபாட்சியும் சைனருடையதே என்றும் திரு.வி.க. கூறுகிறார். ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற வேதாந்த நாடக நூலில் சமணர் சார்பில் ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்ற குறள் இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஆதிபகவனையே குறிக்கும். அவரே ஆதிநாதர் (ரிஷப நாதர்). இதுவே திருவள்ளுவர் தம் நூலில் வைத்துள்ள திறவுகோல் என்று தன் ஆய்வில் திரு.வி.க. உரைக்கிறார்.
சைன (சமண) சமயம் விதிக்கின்ற ஐவகை நோன்புகளான கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிரமச்சரியம், உடமை நீக்கம் ஆகியவற்றைப் பல குறள்களில் வலியுறுத்தியும், தனித்தனி அதிகாரத்தில் இக்கருத்துகளை அமைத்தும் இருப்பது திருக்குறள் சைன சமய நூலே என்று நிறுவப் போதுமானதென்று அ.சக்கரவர்த்தி நயினார் ‘திருக்குறள் வழங்கும் செய்தி’ (1959) எனும் கட்டுரையில் விளக்குகிறார். ஜைன சமயத்தில் நான்கு விழுமியங்களாக (மங்களமாக) அருகன், சித்தன், சங்கம், தருமம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பாகத மொழியில் திருவள்ளுவர் இயற்றிய ஒரு பாடலில் அமைத்திருப்பதாகக் கூறும் சக்கரவர்த்தி நயினார், இதனைப் பின்பற்றியே திருக்குறளில் கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதே கருத்தையும், முறையையும் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணியில் பின்பற்றியிருப்பதாகவும் தெரிவிக்கிறார். தேவர், நாயனார் என்பவை சமண முனிவர்களுக்கு வழங்கும் பெயர் என்று சமணத்தின் பன்மொழி நூல்களும் தெரிவிக்கின்றன.
திருக்குறளும் பௌத்தமும்:
புத்த சமயம் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் பரவியமைக்கு மாமன்னர் அசோகனே காரணம். புத்தர் (கி.மு. 623 – 543) பரிநிர்வாணம் எய்தி (இறந்தபின்) 300 ஆண்டுகள் கழித்து மௌரிய மாமன்னனான அசோகன் புத்த சமயத்தைத் தழுவி, அதை அரசாங்க மதமாகவும் ஆக்கினார். அதே காலத்தில் சமணம், ஆசீவகம் ஆகிய சமயங்களும் செல்வாக்குப் பெற்றிருந்தன. வைதிகமும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. அசோகனின் தூதுவர்களாகப் புத்த சமயம் பரப்ப வந்தவர்கள் முக்கியமான இடங்களில் கல்வெட்டுகளையும், அசோக சக்கரம், தூண்களை நிறுவினார்கள். சில இடங்களில் புத்தர் இன்னார் என்று அறிய அவரது பாத உருவங்களைப் பொறித்தார்கள். இதுதான் இந்தியாவில் முதன்முதலாக உருவ வழிபாடுகளைத் தோற்றுவித்தது. அதற்கு முன்னரும் சில வழிபாடுகள் இருந்திருந்தன. தமிழர்களைப் பொறுத்தவரையில் முன்னோர் வழிபாடும், தாய்த் தெய்வ வழிபாடும், நடுகல் வழிபாடும் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தன. முன்னோர் வழிபாடு உருவமில்லாதது. ஆனால் இடம் சார்ந்து கிடைக்கும் பொருட்களால் அடையாளப் படுத்தப்படுவது. தாய்த் தெய்வ வழிபாடு ஒரு பெண்ணுருவம், குறிப்பாகத் தாய் உருவம் சிறியதாக வடிவமைக்கப்பட்டது. நடுகல் வழிபாட்டில் தொடக்கத்தில் உருவம் இல்லை. பெயரும் அவரைச் சார்ந்த ஏதோ ஒரு அடையாளமும் இடம்பெற்று வந்தன. இந்நிலையில்தான் கௌதமபுத்தரின் திருவடிகளைத் தொழும் வழிபாடு அசோக மாமன்னரால் கி.மு. 300 இல் உருவாக்கப்பட்டது. திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் (திருக்குறளில் கடவுள் என்ற சொல் எங்கும் இடம் பெறாத நிலையில் கடவுள் வாழ்த்து எனும் தலைப்பு இடைச்செருகலே என்ற கருத்தும் நிலவுகிறது) பாதங்களைத் தொழும் தன்மை மிகுதியாக இடம்பெற்றுள்ளது. வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின், மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார், தனக்குவமை இல்லாதான் தாள், அறவாழி அந்தணன் தாள், எண்குணத்தான் தாளை, இறைவன் அடி சேராதார் என்று தாள், அடி ஆகிய காலடி அல்லது பாத வணக்கத்தைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். இதில் கூறப்படும் தாள், அடி என்பவை புத்தருடையதே என அதற்குரிய அடைமொழிகளான, வாலறிவன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான் போன்றவைகளைச் சுட்டிக்காட்டிப் புத்த சமயத்தினர் கூறிவருகின்றனர். இவை மகாவீரருக்குச் சொல்லப்பட்டவை என சமண சமயத்தவரும் கூறுகின்றனர்.
புத்தரின் ஒழுக்க இயலைப் பாலிமொழி நூல்களான விநயபிடகம், சூத்திரபிடகம் ஆகிய தொகை நூல்கள் விவரிக்கின்றன. இந்நூலில் புத்தரின் போதனைகளாகக் குறிக்கப்பெறும் ஒழுக்கவியல் திருவள்ளுவர் கூறும் திருக்குறள் ஒழுக்கவியலோடு பெரிதும் ஒத்துப் போவதைத் தனிநாயகம் அடிகளார் விவரித்துள்ளார். சாதி வேற்றுமைகளை ஒழித்த புத்தரின் கருத்து புண்ணிய பூமியை விரிவாக்கியது. அதைத் தென்னாட்டில் விரிவுபடுத்தியது திருக்குறள். புத்த தன்மங்களான பஞ்சசீலம் (ஐவகை நெறி), அஷ்டசீலம் (எண்குணத்தான்), தசசீலம் (பத்துக்கட்டளைகள்) ஆகியவற்றைத் திருக்குறளில் பொய்யாமை, அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும், கொல்லான், புலாலை மறுத்தானை, எவ்வுயிர்க்கும் செந்தண்மை போன்றவும் இன்னும் பல குறள்களிலும் காணலாம். அதே நேரம் துறவறத்தை அதிகமாகப் புத்தர் வலியுறுத்தியபோதும் திருவள்ளுவர் இல்லறத்தை வலியுறுத்தி அதுவே அறம் என்று மொழிவதை ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று மொழியும் குறள்கள் மூலமாக அறியலாம் என்றும் தனிநாயகம் அடிகளார் கூறுகிறார். துன்ப நீக்கத்திற்கு வழியாக இறப்பை வள்ளுவர் வலியுறுத்தவில்லை. மாறாக வாழ்க்கையைச் சுவைத்து வாழும் முறையையும் இன்பத்துப் பாலாகக் கொடுத்திருக்கிறார்.
புத்தரின் போதனைகளான தன்மபீடம், சூத்திரபீடம், விநயபீடம் ஆகிய மூன்று பிடகக் (திரிபிடகம்) கருத்துக்களையே மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம் என்னும் மூன்று பிரிவாகத் திரிக்குறள் நூலை திருவள்ளுவர் இயற்றினார் என்று அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். வள்ளுவர், சாக்கையர், நிமித்திகர், வேந்தன், மாதானுபங்கி, செந்நாப்போதார், பொய்யாமொழி என்று வழங்கும் பெயர்களைத் திவாகரம், பின்கலை நிகண்டு, மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் இன்னும் பிற இலக்கியங்களில் இருந்தும் பண்டிதர் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், திருவள்ளுவர் மன்னர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், இறுதியாகத் தின்னனூர் அருகில் இராகுல வியாரத்தில் தங்கி நல்லுரைகள் ஆற்றிப் பின் காலமானார் என்றும் ‘தியானப் பஞ்சரத்தினப்பா’ என்னும் ஓலைச் சுவடிச் செய்தியையும் கூறுகிறார். திருவள்ளுவர் நினைவிடம் கட்டப்பட்ட இராகுல வியாரம் தற்போது வீரராகவர் ஆலயமாக வைணவ சமயத்தார் வசம் உள்ளதாகவும் பண்டிதர் கூறுகிறார். இந்த உண்மைகளைத் திரித்து திருவள்ளுவரை வேறு சமயத்தவராகவும், வேறு இனத்தவராகவும் காட்டவேண்டும் என்பதற்காகவே எழுவரோடு உடன்பிறந்தார் என்று கூறும் ‘கபிலர் அகவல்’ போன்ற பொய்யான வரலாறுகள் புனையப்பட்டதாகக் கூறும் அயோத்திதாசர், எல்லீஸ் வெளியிட்ட திருக்குறள் (1812) நூலிலும், அதன் பின்னர் 1831 இல் வெளிவந்த நூலிலும் திருவள்ளுவர் வரலாறு இல்லையென்றும், 1935 இல் விசாகப் பெருமாளையரும், 1937 இல் சரவணப் பெருமாளையரும் ஆதி, பகவன் ஆகியோருக்குப் பிறந்தவர் வள்ளுவர் என்ற கட்டுக்கதைகளைச் சேர்த்து விட்டனர் என்றும் கூறுகிறார். இப்படியான கட்டுக்கதையிலிருந்து விடுவித்துத் திருக்குறளை புத்த சமயக் காப்பியம் என்று நிறுவுதற்குத் திரிக்குறள் உரை விளக்கத்தினை தன்னுடைய ‘தமிழன்’ இதழில் 1911 முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் எழுதிவந்தார். முதல் 55 அதிகாரங்களுக்கு உரை எழுதி அயோத்திதாசர் இறப்பைத் தழுவிய நிலையில், அவரது உரைகளும், அவர் எழுதிய திருவள்ளுவர் வரலாறும் இலக்கியச் சான்றுகளுடன் புத்தசமய வழிநூலாகத் திருக்குறளை நிறுவி உள்ளன.
திருக்குறளும் ஆசீவகமும்:
சமணம், பெளத்தம் ஆகியவை அமைப்பாக உருவான காலத்தில்தான் ஆசீவகமும் அமைப்பாக உருவகம் பெற்றது. மகாவீரர், கெளதம புத்தரின் சமகாலத்தவராக ஆசீவகத்தின் மூன்றாம் திருத்தங்கரரான மற்கலி கோசாலர் இருந்தார். மாமன்னர் அசோகனின் தந்தை பிம்பிசாரர் ஆசீவக சமயத்தைச் சேர்ந்தவர். அசோகர் புத்தமதம் தழுவினாலும் ஆசீவகமும் செல்வாக்கோடு திகழ்ந்தது. வடபுலம் மட்டுமன்றித் தென்புலத்திலும் இம்மூன்று சமயங்களும் பெரும் செல்வாக்கோடுதான் இருந்தன. ஆசீவகம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை வடபுலத்திலும், கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டிலும் இருந்தது. சமணமும், பௌத்தமும் தமிழில் பல இலக்கிய, இலக்கண நூல்களை அளித்துள்ளன. ஆசீவகத்தின் ‘ஒன்பது கதிர்’ என்னும் தமிழ் நூல் இன்று கிடைக்கப்பெறவில்லை. இன்னொரு நூலான சினேந்திரமாலை (வெண்பா) ஆசீவகம் செல்வாக்கிழந்த நிலையில் சமண நூலாக அறியப்படுகிறது.
ஆசீவகத்தின் கோட்பாடுகள் தமிழிலக்கியங்களில் அதிகமாகவே உள்ளன. திருமந்திரம், பரிபாடல், புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார், அருங்கலச் செப்பு ஆகிய நூல்களில் ஆசீவகக் கருத்துகள் விரவிக் காணப்படுகின்றன. திருவள்ளுவர் காலத்தில் இம்மூன்று சமயங்களுமே தமிழகத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தன. ஆசீவகத்தின் கருத்துகளில் உயர்ந்தவையும், உடன்பாடானவையும் திருக்குறளில் பயின்று வருகின்றன. ஆசீவகம் பிறவியை ஏழு வண்ணங்களில் குறிக்கிறது. திருக்குறளில் ஏழு என்பதை மையப்படுத்தும் எட்டுக் குறட்பாக்கள் உள்ளன. எழுமையும், எழுபிறப்பும் என்ற சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாடு திருக்குறளின் ஊழ் அதிகாரத்தில் ஊடுருவி இருப்பதை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆசீவகத்தின் அணுக் கொள்கை அறிவியல் முன்னோட்டத்தின் முதற்படியாகக் கருதப்படுகிறது. அதேநேரம் அணுவைப் பிளக்க முடியாது என்ற ஆசீவகத்தின் கொள்கையை 2600 ஆண்டுகளுக்குப் பின்னர் பிளந்தவர் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன். அறிதலையும், அறிவித்தலையும் உயிரின் தொழில்களாக ஆசீவகம் குறிப்பிடுகிறது. ‘எண்பொருளவாக செலச் சொல்லித் தான் பிறவாய் நுண்பொருள் காண்பதறிவு’ (குறள்-424) என்னும் திருக்குறள் ஆசீவகக் கருத்தோடு பெரிதும் ஒத்துள்ளதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆசீவகம், தமிழ்நாட்டில் தோன்றி வடபுலம் வரை சென்ற அறிவியல் சமயம் என்று பேரா. க. நெடுஞ்செழியன் தனது ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ நூலில் குறிப்பிடுகிறார்.
திருக்குறளும் வடபுலமும்:
வடபுலம் என்பதில் ஆரியம், சமஸ்கிருதம், வேதம், புராணங்கள், மனுஸ்மிருதி ஆகியவை அடங்கும். ஆரியர் என்பதை இனமாகக் கொள்ளாமல் ஆடவரில் உயர்ந்தவர் என்ற பொருளில் புத்தர் வழங்குவார். ஆனால் திருவள்ளுவர் ஆரியரைப் போற்றவில்லை. மனுதர்மத்தின் வர்ணாசிரமத்திற்கு எதிர்ப்புக் காட்டுகிறார். நாம் இன்று வழங்கும் பொருளில் அந்தணர் அன்று குறிக்கப்படவில்லை. சிரமணர்களில் உயர்ந்த அறஹத்துகளே அந்தணர் எனப்பட்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்நிலையில் மதிக்கப்பெற்றனர். திருவள்ளுவர் காலத்தில் வேள்விக் கொலை புரிந்துவந்த ஆரியர், சமூக மதிப்புக் கருதித் தங்களையும் அந்தணர் என்று சொல்லிக்கொண்டனர். அதனால் தான் அந்தணர் என்போர் அறவோர் என்று வள்ளுவர் விளக்கம் கொடுக்க நேர்ந்தது. இப்படி அகச்சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவற்றை எதிர்த்தழிக்கத் தொடங்கிய புறச்சமயமான வைதிகத்தை நேரடியாகவும், மறைபொருளாகவும் தோலுரித்துக் காட்டும் குறள்கள் நூல் முழுவதும் விரவியுள்ளன.
வடபுலத்தை முற்றாக எதிர்க்கவே தென்புலத்தார் என்கிறார் வள்ளுவர். தென்புலத்தார் என்பது முன்னோர் வழிபாட்டையும், தென்மதுரை, குமரிக்கண்டங்களில் கடல்கோளால் அழிந்தவர் நினைவையும் போற்றுவதற்கான வழிபாடு என்று பாவாணர் கூறுகிறார். தங்கள் புலன்கள் தென்பட சாதிக்கும் (ஐந்தவிக்கும்) சமண முனிவர்களையும், அறஹத்து களையும் குறிக்கும் சொல்தான் தென்புலத்தார் என அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். ஆரியத்தையும், வடபுலத்தையும் பல்வேறு நிலைகளில் எதிர்க்கும் குறள்களை மேற்கூறிய இருவருமே பெரும் பட்டியல் இட்டுள்ளனர். வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் பசியால் வாடும் நிலையில் எப்பாவம் செய்தாயினும் அவர்களைக் காப்பாற்றுக என்று ஆரிய நூல்கள் அறம் உரைக்கின்றன. ஆனால் அதையெல்லாம் மறுத்து எத்துணை இடர்வந்தாலும் பாவகாரியம் எதுவும் செய்யக்கூடாது என்று திருவள்ளுவர் உரைப்பதாகத் திருக்குறளுக்கு வைதிகப் போர்வை போர்த்திய பரிமேலழகரே கூறுகிறார். (செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள் - 656), குன்ற வருப விடல் (குறள் - 961).
உயர் பிறப்பாளர்களுக்கே மேலுலகம் என்று கூறி அவர்கள் வீடுபேறடைந்தால் அவர்களை மேலோர், உயர்ந்தோர், வானோர், தெய்வம், தேவர் என்று கூறும் வழக்கமிருக்க ‘தேவர் அனையர் கயவர்’ என்றும், ‘நன்று அறிவாரில் கயவர் திருவுடையர்’ என்றும், ‘மக்களே போல்வர் கயவர்’ என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுவது கயவர்களைத் தேவர்களுக்கு ஒப்பிட்டு, மக்களிலும் தேவர்கள் தாழ்ந்தவர் என்ற கருத்தில் அமைந்ததே என்று புலவர் குழந்தை மதிப்பீடு செய்துள்ளார். திருக்குறளில் உரைகளில் பின்னர் சேர்க்கப்பட்ட ‘திருவள்ளுவ மாலை’ நூலிலும் சில இடைச் செருகல்கள் போக பெரும்பாலான வெண்பாக்கள் வள்ளுவரின் வருண, வேத, வடபுல எதிர்ப்பினைச் சுட்டியே செல்கின்றன.
வடபுலத்து அரசுகள் தொடக்கக் காலங்களில் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் அறக் கொள்கைகளை ஏற்று அமைதி வழிப்பட்ட அதே காலத்தில், வைதிகத்தின் மனுஸ்மிருதிக் கொள்கை ஆரியர்வழி வர்ணாசிரமக் கொள்கையாக அரசுகளின் மீது திணிக்கப்பட்டது. இதில் அசோக மாமன்னனும் தத்தளித்திருந்த வேளையில்தான், நால்வருணம் சாராத அரசையும், அறவழியில் அரசு மற்றும் குடிகளை இணைக்கும் சமூக அமைப்பினைப் புத்தரின் போதனையில் இருந்து அசோகர் பெற்றார். பல்வேறுபட்ட மனிதர்கள், இனங்கள், சமயங்கள் சேர்ந்து வாழும் சமுதாயம், அடிப்படையில் அறநிலையில் அமைய வேண்டிய இன்றியமையாமையை அவர் புத்தரிடம் இருந்து பெற்றார். இதையொட்டி தமது அரசியல் கொள்கைகளை வகுத்துக் கொண்ட அசோகரின் அரசில் ராஜகுரு, மத குருக்களுக்கு இடமில்லை. உயிர்ப்பலி கொடுக்கும் வேள்விகள் அசோகரால் தடைசெய்யப்பட்டன. அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் புத்தரின் போதனை, வைதிகத்தின் வேரை ஆட்டம் காண வைத்ததுடன் அவர்களின் கூட்டத்தைப் புலம் பெயரவும் வைத்தது.
வடபுலம் பெயர்ந்தால் தென்புலத்தைத் தவிர வேறு வசதியுள்ள புலமில்லை. இதனால் தமிழர்கள் மீதும், தமிழ் அரசுகள் மீதும் மிகப்பெரிய பண்பாட்டுத் திணிப்பும், போரும் நடை பெற்றபோது அவர்களுக்கு வடபுலத்தில் புத்தர் கிடைத்ததைப் போல் ஒரு தத்துவ வழிகாட்டி கிடைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அறிவுசார் சமயங்களை அறிந்திருந்த வள்ளுவர் தமிழர்களுக்கு அரணாக இருந்தார். மனுஸ்மிருதி, புராணம், வருணம் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கிலேயே மதகுரு இல்லாத அரசன் – அமைச்சர் கொண்ட அரசியலைத் தத்துவக் கோட்பாடாகத் தந்தார். அரசன் அருள் உள்ளம் உடையவனாகவும், செங்கோல் செலுத்துபவனாகவும் அறம்பிறழாமல் ‘ஐந்து சால்பு ஊன்றிய தூண்’ (குறள் – 983) போல ஆட்சிபுரியவேண்டும் என்ற வள்ளுவரின் அரசியல் கோட்பாடுதான் அன்றைய தமிழ் அரசுகளுக்குப் பெரும் அரணாக விளங்கியது. மனுநீதி வெறுக்கும் உழவுத் தொழிலைத் தலைமைத் தொழிலாக உயர்த்திப் பிடித்தவர் வள்ளுவர். வருணங்கள் நுழையாத பழந்தமிழ்ச் சமுதாயம் காதலை உயர்த்திப்பிடித்தது. அதை இலக்கியங்களில் பாடி வைத்தது. வைதிகத்தின் வழியாக வருணம் தமிழ்நாட்டில் நுழைந்த காலத்தில் அறமும், பொருளும் பாடித்தந்த வள்ளுவர், இன்பத்துப் பாலையும் பாடிவைத்து சமத்துவச் சமுதாயம் நிலைத்திருக்கும் வகை செய்தார்.
பௌத்தத்திற்கும், வைதிகத்திற்கும் இரண்டு முக்கியமான வேறுபாடுகளை அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். முதலாவதாக, பௌத்தத்தில் கூறப்படும் தம்மம் என்பது ஒழுக்கமே. அது கடவுளுக்கு நிகரானது. ஒழுக்கநெறி இல்லையென்றால் பௌத்தமே இல்லை. ஆனால் வைதிகம் ஒழுக்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதல்ல. வைதிக தர்மம் என்பது சடங்கு, யாகம், பலி, பெண் போகப்பொருள் என்ற தன்மையைக் கொண்டது. இரண்டாவதாகச் சமத்துவம். பௌத்தம் நால்வருணத்தின் எதிரி. மனுதர்மம், நால்வருணம் ஆகியவற்றின் எதிர்ப்பை நீண்டகாலப் போராட்டமாகப் பௌத்தம் கைக்கொண்டது. ஆனால், வைதிகத்தில் ஒருவருக் கொருவர் சமம் இல்லை. ஆண்களுக்குள் சமம் இல்லை. ஆண் – பெண் சமம் இல்லை. பிறப்பினால் கடைநிலையில் உள்ளவர்களும், பெண்கள் அனைவரும் சன்னியாசம் பெறமுடியாது. கடவுளை அடைய முடியாது. மேலும் இதை மீறினால் அருவருக்கத்தக்கத் தண்டனைகள். இதுவே வேதத்தின் ஆணை. இதைத் தடுக்கத்தான் வள்ளுவர் தமிழ் மக்களுக்கு அரணாக நின்று, அவர் காலத்து நன்னெறிகளைத் திரட்டித் திருக்குறளாகத் தந்தார் என்று கொண்டால் தமிழர்கள் ஒற்றுமை பூண்டு, எதிரிகளை அடையாளம் கொள்ளவேண்டிய தேவை விளங்கும்.
துணை நின்ற நூல்கள்:
1. G.U. Pope, Thirukkural, 2018, சாரதா பதிப்பகம், சென்னை.
2. க. அயோத்திதாசப் பண்டிதர், திரிக்குறள்., 2015, மெத்தா பதிப்பகம், சென்னை.
3. ஞா. தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, 2000, இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை.
4. புலவர் குழந்தை, திருக்குறள், 2007, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
5. பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, திருக்குறள்–அறத்துப்பால், 1939, திருச்சி.
6. திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், 1967, கழகம், சென்னை.
7. ப.மருதநாயகம், எல்லீசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி, 2009, சீதைப் பதிப்பகம், சென்னை.
8. திருக்குறள் பன்முக வாசிப்பு, 2009, மாற்று, சென்னை.
9. மருதமுத்து, திருக்குறள் – தமிழ்த் தேசிய அரசியல் நூல், 2013, போர்க்கொடி பதிப்பகம், சென்னை.
10. தர்மானந்த கோசம்பி, பகவான் புத்தர் (மொழிபெயர்ப்பு கா.ஶ்ரீ.ஶ்ரீ.) 2018, சாகித்ய அகாதமி, புதுதில்லி.
11. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், புத்தரும் அவர் தம்மமும் (தமிழில் வீ.சித்தார்த்தா), 1996, பௌத்த ஆய்வு மையம், சென்னை.
12. மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், 1940, கழகம், சென்னை.
13. மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும், 2017, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை.
14. க.நெடுஞ்செழியனின் ஆசிவகமும் ஐயனார் வரலாறும், 2014, பாலம், சென்னை.
15. சாகர் முனிமகராஜ், குழந்தை ஞானம் (5 தொகுப்புகள்), 2015 பகவான் 1008 ஶ்ரீ நேமி தீர்த்தங்கரர் பஞ்சகல்யாண விழா, ஏதாநெமிலி.
16. சோ.ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம் (3 தொகுதிகள்), 2016, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
17. ஆர்.பி.சேதுப்பிள்ளை, திருவள்ளுவர் நூல் நயம், 1931, கழகம், சென்னை.
18. திருவள்ளுவர் நினைவுமலர், 1935, திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை.
19. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம்.
முனைவர் சிவ. இளங்கோ,
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.
பேசி: 99940 78907.
Mail ID: ilangosiva57@gmail.com
-------