Tuesday, November 2, 2021

வடலூர் வள்ளலார் !



—   தமிழறிஞர் ஔவை நடராசன் 
     

பழமையில் படிந்து வாழ்ந்த துறவியர் பலர்
            புதுமையில் பூத்துப் புரட்சித் துறவியாய்ப் பொலிந்தவர் எவர் !
செங்கல் காவியில் துறந்தவர் பலர் !
            எங்கள் நிறம் என்றும் வெண்மைச்சீருடை என்றவர் எவர் !
பிறவாவரம் கேட்டுப் பேசியவர் பலர்
            இறவாவரம் எனக்கு வேண்டும் என்றவர் எவர் !
சாதிகள் - மதங்கள் சனாதனம் என்று சரிந்தவர் பலர்
            நீதியில் நேர்மையில் சன்மார்க்கம் என்றவர் எவர் !
பசிக்கு உணவைப் பலரிடம் கேட்டுப் பாடினோர் பலர்
            பசிக்கு நான் உணவு உலகுக்குப் படைக்கிறேன் என்றார் எவர் !
கண்மூடித்தவம் செய்யும் கருத்தினர் பலர்
            மண்மூடிப் போகட்டும் மக்களில் பேதமா என்று மறுத்தவர் எவர் !
சத்திரம் கட்டிய நாட்டில் சாலை நிறுவினார் !
            எத்திறத் தோறும் கற்றுணர்ந்திடவே சங்கம் அமைத்தார்
வடிவம் ஏதும் இல்லை வணங்கலாம் சோதியை என்றார்
            வனப்பு மிகுந்த எண்கோண வடிவில் சபையொன்று கண்டார்
வல்லாரும் மாட்டாரும் விழிப்புணர்வு கொண்டு
            கல்லாரும் கற்றாரும் ஓரினம் என்றே உணர்ந்து  
எல்லார்க்கும் பொதுவாய் இருப்பதே நெறி என்றார்
            வடலூர்ப் பெருவெளி வணங்கிட வருகவே என்றார்
இவர்தான் வடலூர் வள்ளலார் !
            இவர் வழி தான் பொதுமை நெறி என்றே புவியோர் புகல்வர் !

      —   தமிழறிஞர் ஔவை நடராசன்


(வள்ளலார் 198 ஆவது ஆண்டு பிறந்தநாள் பெருமங்கலம்)










No comments:

Post a Comment