Friday, November 5, 2021

தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலைமை


-- தேமொழி 

வாழ்க்கைத் துணையை இழந்த நிலை என்பது ஓர் இழிவான நிலை அல்ல.  

இணையரில்  ஒருவர் இறந்த பின்னர் மற்றவரும் துணையுடன்  சேர்ந்து இறந்துவிடுவதும் இயற்கையில் நடவாத ஒன்று. மிக அரிதான நிலையில் துணையின்  பிரிவினால்  ஏற்படும் மனத்துயர்(depression), அதிர்ச்சி(shock) மற்றவரின் வாழ்வை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து விடுவதும்  உண்டு. ஆனால் அது தனிப்பட்ட ஒருவர் தன் இழப்பைக் கையாளும் முறைப்படி அமையும். 

"மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே" (புறநானூறு 245)
'என் மனைவியின் உடல் தீயில் எரிந்ததை நான் கண்ணால் கண்ட பிறகும் இன்னும் உயிரோடு உள்ளேனே' என்று மனைவியை இழந்து வாழ்வதற்கு மனம் வருந்திப் பாடியவர் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையார். 

துயரம் தாங்காது  தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணமும் ஒரு சிலருக்குத் தோன்றும். பெண்களுக்கு ஏற்படும் அந்தத் தற்கொலை எண்ணத்தைப் போற்றுதற்கு உரிய செயல் போல பாராட்டி, ஊக்கப்படுத்தி, பிறகு கட்டாயப்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றதுதான் சமூகத்தின் இழிநிலை.  கைம்பெண் என்றால் ஈனநிலை என்ற இழிவான எண்ணத்தில்  இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தியையே மாட்டுக் கொட்டிலில் அமர்த்தி (தீட்டு போய்விடும் என்ற ஐதீகமாம்) நேர்காணல் கொடுத்த மடத்தலைவர் ஒருவரையும் கண்டது சென்ற நூற்றாண்டு.   

ஈவெரா போன்ற சமூக அக்கறை கொண்ட பெரியார் ஒருவர்,  ஆண்பெண் சமத்துவ நிலை வேண்டுபவர், 'விதவை' என்ற சொல் வழக்கத்தில் இருக்க 'விதவன்' (widower) என்ற சொல் புழக்கத்தில் இல்லாத நிலையைச் சுட்டிக் காட்டியது இந்த ஆண் பெண் சமுதாய ஏற்றத் தாழ்வு நிலையை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரும் ஒரு முறை.

மனைவியை இழந்த நிலையை சுட்டிக் காட்ட புதுச்சொல் உருவாக்கும் தேவை  இல்லை. துணையை இழந்த கணவனைக் குறிக்கும்  'தபுதாரன்' என்ற சொல் முன்னர் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அவ்வாறு மனைவியை இழந்த துயருடன் தனித்து வாழும் கணவனின் நிலை "தபு-தார நிலை' என்று அழைக்கப்பட்டிருக்கிறது. "தபு' என்றால் "இறத்தல்' என்றும், "தாரம்' என்றால் "மனைவி' என்றும் பொருள். ஆகவே,  தபுதாரன் என்பவர்  மனைவியை இழந்தவர் என்பது பொருள். 

"பைந்தொடி மேல்உலகம் எய்தப் படர்உழந்த
மைந்தன் குரிசில் மழைவள்ளல் - எந்தை
தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலைமை கேளாச்
செவிடாய் ஒழிக என் செவி'' (புறப்பொருள் வெண்பா மாலை)

மனைவி இறந்த பின்னர் மறுமணம் செய்துகொள்ளாமல் அவள் நினைவுடன் கைம்மை நோன்பு மேற்கொண்டு  கணவனும் வாழ்ந்துள்ளதை இப்பாடல் பதிவு செய்திருப்பதைக் காணலாம். 

மனைவியை இழந்த நிலையைக் குறிக்கும் ஒரு சொல் நம்மிடம் வழக்கத்தில் இல்லாத நிலைக்குப் போனதும், மாறாக, கணவனை இழந்தவர் அமங்கலி என்று ஒதுக்கப்பட்டதும், கைம்பெண்ணைக் குறிக்கும் கைம்பெண்டாட்டி என்ற சொல்  'கம்னாட்டி'  என்று மருவி இழிவு படுத்தும் ஒரு சொல்லாக, வசவுச் சொல்லாக மாற்றப்பட்டதில்தான்  இருக்கிறது அடிப்படை மனித உரிமை மீறலையே  தன் வழக்கமாக்கிக் கொண்ட  இந்தியாவின்  பண்பாடும் நாகரிகமும். 

----

No comments:

Post a Comment