Sunday, November 28, 2021

சாக்கிய வேதந் தேக்கிய பாதம்: வடலூர் வள்ளலார்

-- ஆ.சிவசுப்பிரமணியன் 


நீதிமன்ற வழக்குகள் என்பன அவை உரிமையியல் வழக்காக இருந்தாலும், குற்றவியல் வழக்காக இருந்தாலும் பெரும்பாலும் தனிமனிதரைச் சார்ந்தவை யாகவே இருக்கும். இதனால் இவ்வழக்குகளின் மீது வழங்கப்படும் தீர்ப்புகளை வெறும் செய்தியாக மட்டுமே பெரும்பாலோர் படிப்பர்.

தம் சட்ட அறிவுக்குத் துணைபுரியும் என்றும் வேறு வழக்கில் மேற்கோள்காட்ட உதவும் என்றும் கருதினால் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றை வரி பிறழாது படிப்பர்.

ஆனால் இவ்வெல்லையைத் தாண்டி சமூக வரலாற்றாவணமாக நீதிமன்றத் தீர்ப்புகள் சில அமைந்துவிடுவதுண்டு. வரலாற்றாய்வாளர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் படித்து விவாதிக்கும் தகுதியை இவை பெற்றிருக்கும். இத்தீர்ப்பின் வாசிப்புத்தளம் இதனால் விரிவடைந்துவிடும்.

இத்தகையத் தீர்ப்புகளில் தீர்ப்பு வழங்கியவரின் சட்ட அறிவு மட்டுமன்றி, அவரது உலகக் கண் ணோட்டமும் சார்புநிலையும்கூட வெளிப்படும். அத்துடன் சில வரலாற்றுண்மைகளையும் சமூகச் சிக்கல்களையும் இவை வெளிப்படுத்தி நிற்கும். இத்தன்மை வாய்ந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்றை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.

வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (1823-1874) வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபையை மையமாகக் கொண்டது இத்தீர்ப்பு. இத்தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் சந்துரு.

வழக்கின் பின்புலம்:
வழிபாட்டிற்காக உருவம் எதுவும் நிறுவப்படாத சத்தியஞான சபையில் சிவலிங்கம் ஒன்றை சபாபதி சிவாச்சாரியார் என்பவர் 2006இல் நிறுவினார். ‘பிரதோசம்’ அன்று அதற்கு வழிபாடு நிகழ்த்திப் பிரசாதங்களும் திருநீறும் வழங்கினார். அவரது இச்செயல் இச்சபையை நிறுவிய வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று, அவரைப் பின்பற்றுவோர் சிலர் இந்து அறநிலையத் துறையிடம் முறையீடு செய்தனர். இம்முறையீடே இவ்வழக்கின் தொடக்கமாக அமைந்தது.

விசாரணை:
13.07.2006இல் இதுதொடர்பான விசாரணையை இந்து அறநிலையத் துறை மேற்கொண்டது. இவ் விசாரணையை இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையர் நடத்தினார். இவ்விசாரணையில் மேற்கூறிய சிவாச்சாரியார் கலந்து கொள்ளவில்லை.

இராமனாதபுரம் மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்த தொண்டர்குல வி.பெருமாள் என்பவர் 22.08.2006இல் நடந்த விசாரணையில் கலந்துகொண்டு அறிக்கை அளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:
  --  18.07.1872இல் வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் படி பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட, எழுபத்தி யிரண்டு வயதுக்கு மேற்பட்ட எவரும் சத்தியஞான சபையைத் தூய்மைப்படுத்தி விளக்கு ஏற்றலாம்.

  --  18.09.2006 அன்று உதவி ஆணையரும் சத்திய ஞான சபையின் நிர்வாக அதிகாரியும் மனு அளித்தனர். சமயம் சார்ந்த வழிபாடு நடத்தி வள்ளலாரின் அடை யாளத்தைச் சிதைக்கக் கூடாது என்று இருவரும் தம் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதே நாளில் மேற்படி சிவாச்சாரியார் தமது வழக்கறிஞர் வாயிலாக மனுவொன்றை அளித்தார். இம்மனுவில் 25.01.1872ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தைப்பூசத் திருவிழா நடைபெற்றதாகவும், தம்முடைய தாத்தாவிடம் கண்ணாடி ஒன்றையும், விளக்கு ஒன்றையும் வள்ளலார் வழங்கியதாகவும், அன்றிலிருந்து தற்போதைய பூசைமுறை தொடங்கிய தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தம் மனுவுடன் ஆறு ஆவணங்களையும் இணைத்திருந்தார்.

முதல் ஆவணத்தில் வள்ளலாரின் கையப்பம் இருந்தது, 
11.02.1941இல் நடந்த திருவிழா அழைப்பிதழ் இரண்டாவது ஆவணமாகவும், 
01.02.1942இல் நடந்த திருவிழாவின் அழைப்பிதழ் மூன்றாவது ஆவணமாகவும் இடம்பெற்றிருந்தன. 
நான்கு மற்றும் அய்ந்தாவது ஆவணங்கள் தைப்பூசத் திருவிழா தொடர்பான ஆவணங்களாகும். 
அறங்காவலர்கள் பட்டியலாக ஆறாவது ஆவணம் அமைந்திருந்தது.

நிகழ்வின்போது நிர்வாக அதிகாரியாக இருந்த சங்கர நாராணயன் சத்தியஞான சபை அறக் கட்டளையின் தலைவர் வி.எம்.சண்முகம் மற்றும் இதர அறங்காவலர்களான அருட்பா அண்ணாமலை, எம்.ஏ.ராஜன், கணக்காளர் பி.ஞானப்பிரகாசம் ஆகியோர் இணை ஆணையரிடம் மனுச்செய்தனர். இம்மனுவில் பின்வரும் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன:
  --  வள்ளலார் காட்டிய வழிகாட்டுதலின்படி ஜோதி வழிபாடே நிகழுதல் வேண்டும்.

  --  பிராமணர் ஒருவர் வழிபட விரும்பினாலும்கூட அவர் தனது பூணூலை நீக்கி, தன் சாதியடையாளத்தைக் கைவிட்டே வழிபடவேண்டும். ஆனால் மனுதாரர் சபையின் கிழக்குப் பகுதியில் சிவலிங்கத்தை நிறுவி சமயச் சடங்குகளையும் மேற்கொண்டுள்ளார். திருநீறு விநியோகித்துள்ளனர். இதை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்களும் துண்டறிக்கைகளும் விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இம்மனுக்களில் இடம்பெற்றுள்ள செய்திகளின் அடிப்படையில் இவ்வழக்கில் பின்வரும் வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்று இணை ஆணையர் முடிவு செய்தார். அவர் எழுப்பிய மூன்று வினாக்கள் வருமாறு:
1.   சத்தியஞான சபை தொடங்கிய 25.01.1872 லிருந்து யார் சடங்குகளைத் தொடங்கியது?
2.   உருவ வழிபாடு எப்போது தொடங்கியது? எப்போது சிவலிங்கம் நிறுவப்பட்டது.
3.  இச்சடங்குகள் வள்ளலார் வகுத்த விதிமுறை களுக்கு உட்பட்டனவா?

இவ்வினாக்களுக்கான விடைகளாக தம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
சபாபதி சிவாச்சாரியார் வழங்கியுள்ள ஆவணத்தில் நாள், திங்கள், ஆண்டு எதுவும் இல்லை. இதில் இடம் பெற்றுள்ள சபாபதி சிவாச்சாரியார் வள்ளலார் ஆகியோரின் கையப்பங்கள் அடையாளம் காணப் படவில்லை. இதன் நம்பகத்தன்மை நிலைநாட்டப் படவில்லை.

சபாபதி சிவாச்சாரியார் 13.11.1903வரை அறங் காவலராக இருந்ததாகவும், அவரது உடல் நலக் குறைவுக்குப் பின்னர் அவரது மகனும் மருமகளும் அறங்காவலர்களாக இருந்து தைப்பூசத் திருவிழாவின் போது சைவ சமயம் சார்ந்த சடங்குகளை மேற்கொண் டிருந்தனர் என்ற வாதத்திற்குச் சான்றுகளில்லை. மேலும் சபாபதி சிவாச்சாரியார் மரபினர் அறங்காவலர்களாகத் தொடர்ந்து இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட வில்லை. அத்துடன் அறங்காவலர்களே பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்படவில்லை.

25.01.1872இல் சத்தியஞான சபை நிறுவப்பட்ட பின்னர் 18.07.1872இல் வழிபாட்டு முறைகள் வகுக்கப் பட்டன. ஜோதி வடிவிலேயே இறைவனை வழிபடும் முறையைத் தவிர வேறு வழிபாட்டு முறைகள் பின் பற்றப்படவில்லை. தற்போதைய லிங்க வழிபாடு மிக அண்மைக்காலத்திலேயே தொடங்கியுள்ளது. இது வள்ளலார் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது.

இணை ஆணையரின் வழிகாட்டுதல்:
மேற்கூறிய அறிக்கைகளையும் ஆவணங்களையும் மட்டுமே சான்றுகளாகக் கொள்ளாது, 18.07.1872

அன்று சமரச சுத்த சன்மார்க்க சபையை நிறுவியபோது, வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் சாரத்தைப் பட்டியலிட்டு இவையே இச்சபையின் செயல் பாட்டுக்கான வழிகாட்டி என்று இணை ஆணையர் சுட்டிக்காட்டினார். அவை வருமாறு:
1.  சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தோர் வள்ளலார் வகுத்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
2.  பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்டோரும், எழுபத்தியிரண்டு ஆண்டுகட்கு மேற்பட்டோரும் சத்தியஞான சபையில் வழிபாட்டை நடத்த வேண்டும்.
3.  உள்ளமும் உடலும் தூய்மையானவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
4.  நீராடிய பின்னர் தம் பாதங்களை ஆடையால் மறைத்துக்கொண்டு தகரத்தாலும் கண்ணாடி யாலும் செய்யப்பட்ட பெட்டியில் இருக்கும் ஜோதியை அறையில் இருந்து எடுத்துவந்து மேடையில் வைக்க வேண்டும்.
5.  தம் பாதத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு நான்கு நாட்களுக்கு ஒருமுறை கருவறையில் நுழைந்து, கண்ணாடி விளக் கையும் மற்ற இடங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
6.  இதைத்தவிர வேறு எதையும் அங்கு மேற் கொள்ளக்கூடாது.
7.  ஞானசபையின் திறவுகோல் நிரந்தரமாக ஒருவரிடமே இருக்கக்கூடாது. பணிமுடிந்ததும் திறவுகோலைப் பெட்டியன்றில் வைத்துப் பூட்டி பின் அறையையும் பூட்டி அத்திறவு கோலை அப்பகுதியைப் பாதுகாக்கும் காவலரிடமோ, நிர்வாக அதிகாரியிடமோ கொடுத்துவிட வேண்டும்.
8.  சத்தியஞான சபையில் ஓசையின்மை உறுதி யாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.
9.  எண்ணெய் ஊற்றி எரியும் ஜோதியை தகரத்தாலும் கண்ணாடியாலும் செய்யப் பட்ட பெட்டியில் வைத்துக் காட்ட வேண்டும்.
10.  ஜோதியைக் காட்டும்போது மக்கள் இரைச்சலின்றி ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற மந்திரத்தைக் கூற வேண்டும்.
11.  வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியன வற்றில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்.
12. சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும்.

இவ்விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை ஆராய்ந்து சிவாச்சாரியார் மேற்கொண்ட வழிபாட்டு முறையைத் தடை செய்து இணை ஆணையர் உத்தரவிட்டார்.

மறுஆய்வு மனு:
இணை ஆணையரின் இத்தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை இந்து அறநிலையத் துறையின் ஆணையரிடம் சிவாச்சாரியார் அளித்தார்.  இவற்றில் பின்வரும் வாதங்களை அவர் முன்வைத்தார்:
1.  தாம் நிறுவிய சத்தியஞான சபையை சிவாலய மாகவே வள்ளலார் கருதினார்.
2.  சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடுகள் நிகழ்ந்தன.
3.  மனுதாரரின் (சிவாச்சாரியாரின்) முன் னோர்கள் சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடுகளை நடத்தி வைத்தனர்.

இவ்விவாதங்களை நிலைநாட்டப் பின்வரும் அய்ந்து சான்றுகளை அவர் முன்வைத்தார்:
1.  வள்ளலார் தாம் எழுதும் கடிதங்களை ‘உ’ ‘சிவமயம்’ என்று தொடங்கி, சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்று கையெழுத் திடுவார்.
2.  சத்தியஞான சபையென்பது சிதம்பரம் சித்திர சபையின் மற்றொரு பகுதியாகும்.
3.  தமது ஆறாம் திருமுறையில் சிவன், சிவ வழிபாடு, சித்திர சபை ஆகியன குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
4.  சிவலிங்கம், தூபதீபம், கண்ணாடி ஆகிய பூசைப்பொருட்களை சபாபதி சிவாச்சாரி என்பவரிடம் (வாதியின் முன்னோர்) ஒப்படைத்தார்.
5.  சத்தியஞான சபை தொடங்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட சடங்குகளும், பூசை முறை களும் இன்றுவரை பின்பற்றப்படுகின்றன.

சபாபதி சிவாச்சாரியாரின் இம்மனுவை எதிர்த்து இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகிலுள்ள புதுக்குடியைச் சேர்ந்த தொண்டர்குல வி.பெருமாள் என்பவர் எதிர்வாதங்கள் சிலவற்றை முன்வைத்தார். அவற்றுள் முக்கியமான சில செய்திகள் வருமாறு:
சத்தியஞான சபையைத் தெய்வ நிலையமாக வள்ளலார் உருவாக்கினார். தைப்பூசம் தொடர்பான துண்டறிக்கைகள் மனுதாரரின் முன்னோரால் தன்னிச்சையாக அச்சடிக்கப்பட்டவை. சத்தியஞான சபையானது சைவ ஆகம விதிமுறையிலான வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டுமென்று வள்ளலார் விரும்பியிருந்தால் அதை சிவன் கோவிலாக நிறுவி யிருப்பார். சைவ ஆகம நெறிப்படி கோவில் ஒன்று நிறுவப்பட்டால், சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியன இருக்க வேண்டும். சிவனுக்கு எதிராக நந்தி நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் இல்லாமல் சத்தியஞான சபையை அவர் நிறுவியுள்ளார். சிவலிங்கம் ஒன்றை அங்கு நிறுவி உருவ வழிபாட்டை அவர் நிகழ்த்தியதற்கு வரலாற்றுச் சான்று எதுவுமில்லை.

வள்ளலார் உயிரோடு இருந்தபோது ஆறாம் திருமுறை அச்சிடப்படவில்லை என்பதினாலேயே அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வில்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. 1885இல் வெளியான முதல் பதிப்பில் தொடங்கி, 1896, 1924, 1931-32 ஆண்டுகளில் ஆறாம் திருமுறை நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இவற்றில் அருட்பெருஞ்ஜோதி அகவல் இடம்பெற்றுள்ளது. சபாபதி சிவாச்சாரியாரின் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தும் இணை ஆணையரின் தீர்ப்பை உறுதிசெய்தும், இந்து அற நிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார்.

உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரின் தீர்ப்பையும், அதை உறுதிசெய்து இந்து அறநிலையத் துறையின் ஆணையர் வழங்கிய தீர்ப்பையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சபாபதி சிவாச்சாரியார் மேல் முறையீடு செய்தார். 

இதை விசாரித்த நீதியரசர் சந்துரு மனுதாரர் முன்வைத்த விவாதங்களை ஏற்றுக்கொள்ளாது அவரது மனுவைத் தள்ளுபடி செய்து 24.03.2010இல் தீர்ப்பு வழங்கினார். அவரது தீர்ப்பு வள்ளலாரின் சிந்தனைகள் குறித்த ஆய்வுக்கட்டுரை போல் அமைந்துள்ளது. தீர்ப்பின் தொடக்கத்தில் வள்ளலாரைக் குறித்த சிறு அறிமுகத்தைச் செய்துள்ளார்.

Vallalar.jpg

          ‘கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
          கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
          சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரம்ஆ சாரம்
          சமயமதா சாரம்எனச் சண்டைஇட்ட கலக
          வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
          மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
          முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
          முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே’

          ‘ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
          அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
          நீதியில் கலந்து நிறைந்தது நானும்
          நித்தியன் ஆயினேன் உலகீர்
          சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
          சத்தியச் சுத்தசன் மார்க்க
          வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
          விளம்பினேன் வம்மினோ விரைந்தே’

என்ற வள்ளலாரின் பாடல்களுடன் அறிமுகம் தொடங்குகிறது. சமயம், சாதி, ஆகமம், வேதம் என்பனவற்றை அவர் ஏற்றுக்கொள்ளாததை வெளிப் படுத்தும் வழிமுறையாக,
          ‘சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில்
           உணர்த்திய அருட்பெருஞ்சோதி’

          ‘ஆகமுடி மேல் ஆரண முடிமேல்
           ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்சோதி’

          ‘சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
           அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி’
என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை எடுத்துக் காட்டுகிறார்.

1866ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாநிலத்தில் நிகழ்ந்த கொடிய பஞ்சமும், அப்பஞ்சத்தால் மக்கள் பட்டினியால் வாடியது கண்டு வள்ளலார் பதைபதைத்ததும் தீர்ப்பில் இடம்பெறுகின்றன. இப்பதைபதைப்பு,
          ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
          வாடினேன் பசியினால் இளைத்தே
          வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
          நீடிய பிணியால் வருந்துகின்றோர்என்
          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
          ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’
என்ற பாடலாக வெளிப்பட்டதைச் சுட்டிக்காட்டி விட்டு, இதுவெறும் புலம்பலாக நின்றுவிடவில்லை என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். 1867ஆம் ஆண்டில் கஞ்சித் தொட்டியன்றை வடலூரில் அமைத்ததையும், அங்குள்ள அடுப்பில் அவர் ஏற்றிய நெருப்பு இன்றுவரை அணையாது தொடர்வதையும், ஏழைகளுக்கு உணவளித்தலை உயரிய குணமாக அவர் கருதியதையும் குறிப்பிட்டுள்ளார். ஏழைகளின் அவல நிலையைப் பொறுக்காது இறைவனை நோக்கி,
          ‘வாழைஅடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
          மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
          ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
          இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
          மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யான் உனக்கு
          மகன் அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
          கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
          கொடுத்தருள்நின் அருள்ஒளியைக்
           கொடுத்தருள் இப்பொழுதே’
என்று வேண்டுவதையும், 
‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக அருள்நியந்த நன்மார்க்கர் ஆள்க’ என்று கூறுவதையும் அவர் நினைவூட்டுகிறார். ஏனைய மடங்கள், ஆதினங்களைப் போன்று வாரிசையோ, இளைய பீடத்தையோ உருவாக்காத தன்மையையும் எடுத்துரைக்கிறார்.

தீர்ப்பின் தொடக்கத்தில் இடம்பெறும் இப்பகுதிகள் வள்ளலாரைக் குறித்த சரியான சித்திரத்தை வழங்குகின்றன.

* * *

வள்ளலாரின் உண்மையான இயல்பை வெளிப் படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட சான்றுகளையும், விவாதங்களையும் தம் தீர்ப்பில் எடுத்தாள்கிறார். அடுத்து வள்ளலாரின் கருத்துக்களின் சாரத்தை வெளிப்படுத்தும் தன்மைகொண்ட பின்வரும் திரு அருட்பா பாடல்களை மேற்கோளாகக் காட்டுகிறார். வள்ளலாரின் சமய நெறிமுறைகள் குறித்தும் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடுகிறார்.

உருவ வழிபாட்டை ஏற்காமையும், ஜோதி என்ற பெயரில் நெருப்பை வழிபடுவதும் வள்ளலாரின் கருத்தாக இருந்துள்ளது. நிறுவன சமயம் எதற்கும் அவர் இடமளிக்கவில்லை. மனிதகுலத்திற்கு முழுமையான இடத்தை அவர் வழங்கியுள்ளார். சாதி அடிப்படை யிலான பாகுபாட்டிற்கு அவர் இடமளிக்கவில்லை.

          ‘எச்சம யங்களும்பொய்ச்சம யமென்றீர்
          இச்சம யம்இங்கு வாரீர்
          மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்’

          ‘சதுமறை யாகம சாத்திர மெல்லாஞ்
          சந்தைப் படிப்புநஞ் சொந்தப் படிப்போ
          விதுநெறி சுத்தசன் மார்க்கத்திற் சாகா
          வித்தையைக் கற்றன னுத்தர மெனுமோர்
          பொதுவளர் திசைநோக்கி வந்தன னென்றும்
          பொன்றாமை வேண்டிடி லென்றோழி நீதன்
          அதுவிது வென்னாம லாடேடி பந்து
          அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து’

          ‘சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
          சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
          ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
          அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
          நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
          நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
          வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
          மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே’

          ‘செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
          தேவரும் முனிவரும் பிறரும்
          இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
          எந்தைநின் திருவருள் திறத்தை
          எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
          என்தரத் தியலுவ தேயோ
          ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
          உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே’

உருவமில்லாத வழிபாடும், நிறுவன சமய மறுப்பும் வள்ளலாருக்கு எதிரிகளை உருவாக்கின. அவருக்கு எதிரான பரப்புரையை அவரது எதிரிகள் மேற்கொண்டனர். அவரது பாடல்கள் ‘திருஅருட்பா’ என்றழைக்கப்படுவதை எதிர்த்து, ‘மருட்பா’ என்றழைத்தனர். இதுதொடர்பாக ஆறுமுக நாவலர் கடலூர் நீதிமன்றத்தில் 1869இல் வழக்குத் தொடுத்தார். இறுதியில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

தீர்ப்பின் இறுதியில் சிந்தனைக்குரிய கருத்து ஒன்றையும் நீதியரசர் சந்துரு முன்வைத்துள்ளார். புத்தமதத்தைப் பின்பற்றும்படி மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார் என்பதே அக்கருத்தாகும். இதற்குச் சான்றாக,
          ‘சாக்கிய வேதந் தேக்கிய பாதம்
          தாக்கிய ஏதம் போக்கிய பாதம்

          ‘புத்தந்தரும் போதா வித்தத்தருந் தாதா
          நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா’
என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை முன் வைக்கிறார். முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆராய வேண்டிய ஆய்வுப்பொருள் இது.




* * *

இவ்வழக்கு வேறொரு சிந்தனையையும் தூண்டுகிறது. சபாபதி சிவாச்சாரியார் சிவலிங்கத்தை வள்ளலாரின் சத்தியஞான சபையில் நிறுவி, சைவ ஆகம விதிமுறைப்படி வழிபாடு நிகழ்த்தத் தொடங்கியதுதான் இவ்வழக்கின் அடிப்படைக்காரணம். இன்று கிராமப்புற நாட்டார் தெய்வங்கள் ஆதிக்க வகுப்பினரால் ஆகம விதிக்குள் கொண்டு வரப்படுகின்றன. அம்மன்கள் அம்பாள்களாக்கப்படுகின்றனர். நாட்டார் தெய்வக் கோவில்களுக்குள் சிவனும், விஷ்ணுவும், முருகனும் அத்துமீறி நுழைந்து, அச்சாமிகளின் அசைவ உணவுப் படையலைத் தடுக்கின்றனர். ஆகம விதிகளின்றி நிறுவப்பட்ட இக்கோவில்களில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நிகழ்கிறதே! இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால் என்ன? நீதியரசர் சந்துரு இதற்கு வழிகாட்டினால் நன்றாக இருக்கும்.





நன்றி: 
வடலூர் சத்தியஞான சபை  2007-2010 வழக்கில் நீதியரசர் சந்துருவின் தீர்ப்பு
நவம்பர் 2014 -உங்கள் நூலகம் 










Saturday, November 27, 2021

மாறாத விடியலின் அழகும் வீசும் காற்றும்...



-- வித்யாசாகர்



விளக்குகள் அணைந்தாலென்ன
விடியல் இயல்புதானே
காத்திரு;

நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன
விட்டில் பூச்சு ஒன்று வரும்
காத்திரு;

 
கற்றது வேறானாலென்ன
அறிவு உன்னுடையது தானே
காத்திரு;

யார்விட்டுப் போனாலென்ன
உயிர் உண்டுதானே
காத்திரு;

உலகம் எப்படி இருந்தாலென்ன
நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும்
காத்திரு;

யாரால் எது செய்யமுடியா விட்டாலும்
உன்னால் எல்லாம் முடியும்
காத்திரு;

நம்பிக்கைதான் வாழ்க்கை
நம்பு, நம்பிக்கையோடு எழுந்து
இந்த உலகம் பார்

யாரோ போனாலும் யாரோ வருகிறார்கள்
ஏதோ போனாலும் ஏதோ வருகிறது
போனது கிடைப்பதுமில்லை
வருவது நிற்பதுமில்லை;
பிறகேன் வருத்தம் ?

எல்லாம் மாறும், நம்பியிரு
பூக்கள் நிறைந்த காடுகளில்
ஒரு மலர் உதிர்வதும்
ஒரு மலர் பூப்பதும் இயல்பு எனில்
எல்லாம் மாறுவதும் கூட
இயற்கையின் இயல்புதானே?

பிறகு நீயென்ன? நானென்ன?
போவதை விடு
வாழ்வதை எண்ணிக் காத்திரு;

இருக்கும் காலம் அத்தனையும்
உயிர் மிக்கவை,
இந்த உலகம் உயிர்கள் வானம் பூமி மழை கடல்
காற்று சூரியன் நிலா காடு அத்தனையும் உயிர் மிக்கவை
அவையெல்லாம் உனக்காகக் காத்திருக்கிறது

நீ தான்
ஏதோ ஒன்றிற்காக மட்டுமே மயங்கி
காத்திருந்து பிரிந்து ஒடுங்கி
ஒன்றிற்காக மட்டுமே அழுது
ஒன்றிற்காக மட்டுமே சாகிறாய்
ஒன்று போனால், எல்லாம் போனதாய் முடிகிறாய்;

சற்று யோசி;
சாதல் பிழையன்று
தனித்து வலித்து சாதல்
சரியுமன்று;

வாழ்ந்து காட்டப் பிறந்தவர்கள் நாம்
வாழ்தலே விதி, வாழ்தலே வரம்;

சரி சரி; விடு
நிறைய யோசிக்காதே
நீ உயிர்த்திருக்க
உள்ளிழுக்கும் காற்று இந்தப் பிரபஞ்சம் வரை
நிறைந்தேயிருக்கிறது; போ

மிச்சமிருக்கும் நாட்களையேனும்
மகிழ்வோடு வாழ்ந்துவிடு!!




-----------------------

வித்யாசாகர், குவைத்
தொலைபேசி எண்: +965 97604989, +919840502376
இயற்கையைக் காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Sunday, November 21, 2021

இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதிய செய்திகளைத் தரும் திருகோணமலைக் கல்வெட்டு


தமிழ் இராச்சியத்தின் தோற்றம்பற்றிய முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்



புகை படர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன. அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும்  எழுதப்பட்டிருப்பதினால்  அவற்றிலிருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகமானதாகவே பார்க்கப்படுகின்றன. இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய  பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். 

முதலில் இக்கல்வெட்டுப் பற்றிய செய்தி  திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ஜே.எஸ். அருள்ராஜ் என்பவரால் வைத்திய கலாநிதி த.ஜீவராஜ் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதன்  மூலம் அதுபற்றிய தகவல் எமக்கும் பரிமாறப்பட்டது. அவர்கள் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்ட நாம் அக்கல்வெட்டை ஆய்வு செய்வதற்குத் தொல்லியற் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்று யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான திரு. பா.கபிலன், திரு.வி. மணிமாறன் மற்றும் முன்னாள் தொல்லியல் விரிவுரையாளர் திரு.கிரிதரன் ஆகியோருடன் 30.01 2021 அன்று திருகோணமலை சென்றிருந்தோம். இந்நிலையில் திருகோணமலை மாவட்ட வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுவரும்  வைத்திய கலாநிதி த.ஜீவராஜூடன் வைத்திய கலாநிதி  அ.ஸதீஸ்குமார்,  கிராம உத்தியோகத்தர் திரு. நா.சந்திரசேகரம் மற்றும் கோமரன்கடவல பிரதேசசெயலக உத்தியோகத்தர் திரு. நா.ஜெகராஜ் ஆகியோரும் கல்வெட்டைப் படியெடுக்கும் பணியில் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றியமை எமக்கு மனமகிழ்வைத் தந்ததுடன், அச்சமற்ற சூழ்நிலையில் இக்கல்வெட்டைப் படியெடுக்கவும் வாய்ப்பாக இருந்தது.  

Prof.Pushparatnam2.jpg

இக்கல்வெட்டு, திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில்  திருகோணமலை மாவட்டத்தில் தனிநிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. முன்னர் இப்பிரதேசம் கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது இந்த இடம் குமரன்கடவை எனவும் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும், அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டிட அத்திவாரங்களும் காணப்படுகின்றன. அவற்றுள், அழிவடைந்த சிவாலயம் அதேநிலையில் தொல்லியற் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாலயத்திற்கு மிக அருகிலுள்ள சிறு மலையிலேயே கல்வெட்டும் காணப்படுகின்றது. இம்மலையின் மேல்பகுதியில் திருவாசிபோன்ற வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன. 

Prof.Pushparatnam6.jpg

சிவலிங்கத்திற்கு மேலிருக்கும் வட்டம் சக்தி வழிபாட்டு மரபுக்குரிய   சக்கரமாக இருக்கலாம்  எனப் பேராசிரியர் பொ.இரகுபதி குறிப்பிடுகின்றார்.   இக்குறியீடுகளுக்குக் கீழே 23 வரிகளில் தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் இரு வரிகளும், ஏனையவற்றில் சில சொற்களும் சமஸ்கிருத கிரந்தத்தில் இருக்கின்றன. கல்வெட்டின் வலப்பக்கத்தில் உள்ள பல எழுத்துப் பொறிப்புக்கள் மலையின் மேற்பகுதியில் இருந்து கீழ்நோக்கி வழிந்தோடும் நீரினால் சிதைவடைந்தும் தெளிவற்றும் காணப்படுகின்றன. இடப்பக்க எழுத்துப் பொறிப்புக்கள் தெளிவாகக் காணப்பட்டதால் கல்வெட்டைப் படியெடுத்தவர்கள் ஆர்வமிகுதியால் பல சொற்களைப்  படித்தனர்.

Prof.Pushparatnam4.jpg

ஆயினும் கல்வெட்டின் ஒரு பாகம் தெளிவற்றுக் காணப்பட்டதால் அது  கூறும் வரலாற்றின் முழுமையான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் தென்னாசியாவின் முதன்மைக் கல்வெட்டு அறிஞரும், எனது கலாநிதிப்பட்ட ஆய்வு மேற்பார்வையாளருமான பேராசிரியர் வை.சுப்பராயலு அவர்களுக்கும், தமிழகத் தொல்லியற் துறையின் முன்னாள் மூத்த கல்வெட்டறிஞரான கலாநிதி சு.இராஜகோபால் அவர்களுக்கும் இக்கல்வெட்டுப் படிகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன். 


Prof.Pushparatnam3.jpg
அவர்கள் இருவரும் ஒருவாரக் காலமாக கடும் முயற்சி செய்து கல்வெட்டின் பெரும்பகுதியை வாசித்து அதன் வாசகத்தைத் தற்போது எமக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் வாசகம் பின்வருமாறு:

1)… … க்ஷகே ஸ்ரீவிம்[ங்கோ3]நௌ ம்ருகே3விம்ச0தி ப4.
2)…. …..ச0க்தி ப்ரதிஷ்டா2ம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ … 
3) [த்திகள் ?] [ஸ்ரீகுலோ]த்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழ[ம
4) ண்டலமான மும்முடி]சோழமண்டலமெறிந்தும் கங்கராஜ காலிங்க வி-
5)  ஜயவாகு தே3வற்கு வீராபி4ஷேகம்  பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட-
6) [நேமி பூசை கால]ங்களில் ஆதி3க்ஷேத்ரமாய் ஸ்வயம்பு4வுமாந திருக்கோ-
7) [யிலை]யுடைய நாயநாரை தெ3ண்டன் பண்ணி இன்னாய-
8) நாற்கு ச0[க்தி] ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா
9) ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்
10) ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[து] நாட்டில் ல-
11) ச்சிகா[தி]புரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில-
12) மும்  . . .றிதாயாளமு . . .ட்டும்  இதில் மேநோக்கிய
13) மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட
14) இந்நா[ச்சியார்க்கு திருபப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்று-
15) க்கும்சாந்த்3ராதி3த்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோத3கம் ப-
16) ண்ணிக் குடுத்தேன்இ ….  லுள்ளாரழிவு படாமல்
17) …ண்ண..ட்ட……ப் பெறுக்கிவுண்டார்கள் [ஆ]ய்
18) நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்
19) மாக . . டையார்  பி… கெங்கைக் கரையிலாயிரங்
20) குரால் பசுவைக் கொன்றா[ர்பாவங்] கொண்டார்கள் ஆயிரம் ப்3ரா-
21) ஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு …
22) மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின்[சொல்படி] … …
23) த்தியஞ் செய்வார் செய்வித்தார் ||.... ......

கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டுப் பற்றிய தமிழக அறிஞர்களின் வாசிப்பிலிருந்து இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் தெரியவந்துள்ளன. அவை சோழர் ஆட்சியிலிருந்து ஐரோப்பியர் காலம்வரை தமிழர் பிராந்தியங்களின் ஆட்சியுரிமை, நிர்வாக ஒழுங்கு என்பன தனிப் போக்குடன் வளர்ந்தமையைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன. மேலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றகாலப் பின்னணி,  அது தோன்றிய காலம்,  தோற்றுவித்த வம்சங்கள் தொடர்பான முன்னைய வரலாற்றுப் பார்வையை மீளாய்வு செய்வதிலும்  தெளிவுபடுத்துவதிலும் இக்கல்வெட்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கல்வெட்டுப் படியெடுத்த காலப்பகுதியிலேயே இக்கல்வெட்டின் புகைப்படங்களை எனது ஆசிரியர்களான பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர்  சி.பத்மநாதன், பேராசிரியர் பொ.இரகுபதி ஆகியோருக்கு  அனுப்பி அவர்களின் கருத்துக்களைப் பெற்றிருந்தேன். பேராசிரியர் இரகுபதியால் கல்வெட்டின் சில பாகங்கள் வாசிக்கப்பட்டு அதற்குரிய பொருள் விளக்கத்தையும் அவர் அவ்வப்போது எனக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தமிழக அறிஞர்களால் பெருமளவு வாசித்து முடிக்கப்பட்ட கல்வெட்டு வாசகத்திற்கு மேற்கூறிய அனைவருமே வழங்கிய கருத்துக்கள், விளக்கங்கள் என்பன இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதிய செய்திகளைச் சொல்வதாக உள்ளன.

தென்னிந்தியாவில் நீண்டகால வரலாறு கொண்டிருந்த சோழ அரசு தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பேரரசாக எழுச்சியடைந்த  போது அவ்வரசின் செல்வாக்கால் சமகால இலங்கை வரலாற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் தமிழ் நாட்டு அரச வம்சங்களை வெற்றி கொண்டதன் பின்னர் சோழர்; இலங்கைக்கு எதிராகவும் படையெடுத்து வந்தனர். இது  முதலாம் பராந்தகசோழன் காலத்தில் ஆரம்பித்துப்  பின்னர்  இராஜராஜசோழன்  காலத்தில் கி.பி. 993 இல்  இலங்கையின் வடபகுதி வெற்றி கொள்ளப்பட்டது.   கி.பி. 1012 இல் முதலாம் இராஜேந்திர சோழன்  காலத்தில் இலங்கை முழுவதும்  வெற்றி கொள்ளப்பட்டு புதிய தலைநகரம் ஜனநாதபுரம் என்ற பெயருடன்  பொலநறுவைக்கு மாற்றப்பட்டதாக சோழர்காலச் சான்றுகளால் அறிகின்றோம். சோழரின் 77 ஆண்டுக்கால நேரடி ஆட்சியில் அவர்களது  நிர்வாக முறையே பின்பற்றப்பட்டது. இதன்படி    இலங்கை மும்முடிச் சோழமண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன்   வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன.  திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன. அத்துடன் சோழரின்  அரசியல்,  இராணுவ,  நிர்வாக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக  திருகோணமலை இருந்ததை அவர்களின் ஆட்சிக்கால ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.  

பொலநறுவையைத் தலைநகராகக் கொண்ட சோழரின் ஆட்சி கி.பி.1070 இல்  வீழ்ச்சியடைந்தாலும் சோழரின் ஆதிக்கம், நிர்வாக முறை,  பண்பாடு என்பன  தமிழர் பிராந்தியங்களில் தொடர்ந்திருக்கலாம்  எனக் கருதமுடிகின்றது.  இதை    உறுதிப்படுத்தும் புதிய சான்றாகவே கோமரன்கடவலக்  கல்வெட்டுக் காணப்படுகின்றது. பொலநறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டு ஏறத்தாழ 125 ஆண்டுகளின்  பின்னரும் தமிழர் பிராந்தியங்களில் மும்முடிச் சோழமண்டலம் என்ற நிர்வாகப் பெயரும்  தமிழ் நிர்வாக முறையும் இருந்தன என்ற புதிய செய்தியை இக்கல்வெட்டுத் தருகின்றது. கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலத்தில்  இப்பகுதியில், சோழர் ஆட்சிக்குப் பொறுப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழனது  படைத்தளபதிகளுள் ஒருவனான   அல்லது அரச பிரதிநிதியான குலோத்துங்கசோழக் காலிங்கராயன் இருந்துள்ளான்  என்ற புதிய செய்தியும் தெரியவருகின்றது. மேலும் இவனே கங்கராஜகாலிங்க விஜயபாகுவிற்கு (கலிங்கமாகனுக்கு)  பட்டாபிஷேகம் செய்தான் என்ற அதிமுக்கிய புதிய வரலாற்றுச் செய்தியும் இக்கல்வெட்டிலேயே முதல் முறையாகச் சொல்லப்பட்டுள்ளது.

பேராசிரியர்.சுப்பராயலு இக்கல்வெட்டில்  (வரிகள் (3-5) வரும் “ஸ்ரீகுலோத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழமண்டலமான மும்முடி சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம்”  என்ற சொற்றொடரைப் புதிய செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் இந்திரபாலா அவர்கள் இத்தொடரில் உள்ள கங்கராஜ காலிங்கவிஜயவாகு என்பவன் 1215 இல் பொலநறுவை அரசை வெற்றி கொண்டு ஆட்சி செய்த கலிங்கமாகன் (மாகன் மாகோன்) என அடையாளப்படுத்துகின்றார்.  அவன் விஜயபாகு என்ற பெயராலும்  அழைக்கப்பட்டான் என்பதற்கு 14ஆம் நூற்றாண்டில் எழுந்த நிகாயசங்கிரஹய என்ற சிங்கள இலக்கியத்தில் வரும் குறிப்பை முக்கிய ஆதாரமாகக் காட்டியுள்ளார். இவற்றிலிருந்து, இலங்கையை வெற்றிகொண்டு பொலநறுவையில் ஆட்சிபுரிந்த கலிங்கமாகன், குலோத்துங்கசோழ காலிங்கராயனால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்டவன் என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டில் கூறப்படும் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்த சோழப்படைத் தளபதியாக அல்லது சோழ அரசப் பிரதிநிதியாக இருந்திருக்கவேண்டும். ஏனெனில் மூன்றாம் குலோத்துங்க சோழனது  ஆட்சிக்காலத்தில் (கி.பி 1178-1218) அவன் இலங்கை மீது படையெடுத்து சில வெற்றிகளைப் பெற்றதாக அவனது பத்தாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.  இங்கே கலிங்கமாகன் பொலநறுவை இராச்சியத்தை கி.பி.1215 இல் வெற்றி கொண்டான்  எனக் கூறப்படுகிறது. இதனால் குலோத்துங்கசோழ காலிங்கராயனால் கலிங்கமாகனுக்கு நடத்தப்பட்ட பட்டாபிஷேகம் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் இறுதிக்  காலப்பகுதியில் நடந்ததெனக் கூறமுடியும். பொலநறுவை இராசதானியில் நிஸங்கமல்லன் ஆட்சியைத் தொடர்ந்து பல குழப்பங்களும், அயல்நாட்டுப் படையெடுப்புக்களும் ஏற்பட்டதைப் பாளி, சிங்கள இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

இந்நிலையில் சோழ, கேரள தமிழ்ப்படை வீரர்களின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து வந்த கலிங்கமாகன் 1215 இல் பொலநறுவை இராசதானியைக்  கைப்பற்றி 44 ஆண்டுகள் வரை ஆட்சி செய்தான் என்ற வரலாறு காணப்படுகின்றது. இவனது ஆட்சியில் வெறுப்படைந்த சிங்கள மக்களும், சிங்கள தலைநகரும் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தபோது கலிங்கமாகன் தலைமையில் வடக்கே இன்னொரு அரசு தோன்றியதாக சூளவம்சம், ராஜவெலிய முதலான வரலாற்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆயினும் இக்கலிங்கமாகன் யார்? எந்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்தவன் என்பதையிட்டு இதுவரை அறிஞர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்களே இருந்துள்ளன.   சில அறிஞர்கள் இவனை  மலேசியா நாட்டிலுள்ள கலிங்கத்திலிருந்து படையெடுத்தவன் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டில் கலிங்கமாகன் கங்கை வம்சத்துடனும், கலிங்க நாட்டுடனும் தொடர்புடையவன் என்ற புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சோழர்கள் தம் திருமண உறவுகளால்  கீழைச்சாளுக்கியரது (வேங்கி அரசு) கங்கை வம்சத்துடனும், படையெடுப்புகள் மூலம் கலிங்கநாட்டுடனும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதைக் கலிங்கத்துப்பரணியும், சோழக் கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்தில்  அரசமைத்த ஆரியச்சக்கரவர்த்திகளும் கங்கை வம்சத்துடன் தொடர்புடையவர்கள் என அவ்வரசு தொடர்பாக எழுந்த இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண அரசின் தோற்றத்தை கலிங்கமாகனுடன் தொடர்புப்படுத்தி  பேராசிரியர் இந்திரபாலா அவர்களால் எழுதப்பட்ட அரிய கட்டுரை ஒன்று தற்போது எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலங்கை  ஊடகங்களில் விரைவில் பிரசுரமாக இருப்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

இக்கல்வெட்டின் 8-10 வரிகளில் வரும் “திருக்காமக்கோட்ட நாச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பண்ணுவித்து” என்ற சொற்றொடர் இப்பிரதேசத்தில் சக்திக்கென தனிக்கோவில்(காமக்கோட்டம்)  அமைக்கப்பட்ட புதிய செய்தியைக் கூறுவதாக உள்ளது. பேராசிரியர் பத்மநாதன் இது போன்ற செய்தி இலங்கையில் கிடைத்த பிற  தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை காணப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றார். தமிழகத்தில் இரண்டாம் இராஜராஜசோழன் காலத்திலிருந்து சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் சக்திக்குத் தனிக்கோயில் அமைக்கும் மரபு இருந்தமை தெரிகின்றது . அம்மரபு சமகாலத்தில் இலங்கையிலும் பின்பற்றப்பட்டமைக்கு இக்கல்வெட்டு சான்றாகும். கோமரன்கடவல சிவன்கோயில் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் காலத்திற்கு முன்பே பன்நெடுங்காலமாக இருந்திருக்கின்றது என்பதும்  கல்வெட்டில் வரும் ஆதிக்ஷேத்ரம் என்ற சொற்றொடரால்  தெரிகின்றது. காலிங்கராயன் ஈழத்தை வெற்றி கொண்டதற்கும்  கலிங்கமாகனுக்குப் பட்டம்  சூட்டியதற்கும்   பிறகு    இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு, சக்திக்காக தனிக்கோயில் எடுப்பித்து, தனக்குச் சொந்தமாகக் கிடைத்த நிர்வாகப் பிரிவிலிருந்து சில நிலங்களை நிவந்தமாக கொடுத்தமையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இந்த நிலங்களுக்கும்  கோயில் நிர்வாகத்திற்கும்  உரித்துடையவர்களாக  ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் காலிங்கராயன் சொற்படி இக்கல்வெட்டைப் பொறித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

Prof.Pushparatnam1.jpg
கல்வெட்டின் ஓம்படைக்கிளவியில் குலோத்துங்கசோழக் காலிங்கராயனின் இந்த ஏற்பாடுகளுக்குப் பங்கம் செய்பவர்கள் கங்கைக் கரையில் ஆயிரம் குரால் (கபிலை) பசுக்களைக் கொன்ற பாவத்திற்கும், ஆயிரம் பிராமணர்களைக் கொன்ற பாவத்திற்கும் உட்பட்டு நாயாகவும் காகமாகவும் பிறப்பார்கள் எனக் குறிப்பிட்டு அவற்றின் உருவங்களும் கல்வெட்டுப் பொறிப்புக்குக் கீழே கோட்டுருவுமாக வரையப்பட்டுள்ளன. 
இக்கல்வெட்டால் அறியப்படும் முக்கிய வரலாற்றுச் செய்திகளோடு, அவற்றில்  இடம்பெற்றுள்ள  சில பெயர்கள், சொற்கள் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்துக்களும் விளக்கங்களும் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. முதலில் ‘“ஸ்வயம்புவுமாந திருக்கோ (ணமலை) யுடைய நாயநாரை” எனப் படிக்கப்பட்டதைப் பேராசிரியர் இரகுபதி “ஸ்வயம்புவுமாந திருக்கோயிலுடைய நாயநாரை” எனப் படித்திருப்பதைப் பேராசிரியர் சுப்பராயலு பொருத்தமானதென எடுத்துக்கொண்டுள்ளார்.  இச்சிவாலயத்தில் காணப்படும் சிவலிங்கத்தின் அமைப்பு ஸ்வயம்பு என்ற சொல்லுக்குப் பொருத்தமாக  இருப்பதினால் இக்கல்வெட்டு இந்தக்கோயிலையே குறிப்பிடுகின்றது என்பது பேராசிரியர் இரகுபதியின் விளக்கமாகும். மேலும் அவர்  கல்வெட்டில் வரும் இடப்பெயரை “லச்சிகாமபுரம்” என வாசித்து அது இப்பிரதேசத்திற்கு உட்பட்ட ஒரு இடத்தின் பெயர் எனக் குறிப்பிடுகின்றார். 

இதில் வரும் வேச்சார் நிலம் என்பது குளத்தோடு ஒட்டிய பயிர் நிலம் என்ற பொருளில் சிங்களக் கல்வெட்டுக்களில் வரும் வேசர(வாவி சார்ந்த) என்ற சொல்லுடன் தொடர்புடையது என்பதும்  அவரது கருத்தாகும். பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டில் வரும் “மாநாமத்துநாடு” என்ற பெயர் இங்குள்ள பரந்த பிரதேசத்தை குறித்த இடமாக இருக்கலாம் எனக் கருதுகின்றார்.  இக்கூற்றைப் பொருத்தமாக கருதும் பேராசிரியர் பத்மநாதன் இதற்குப் பெரியகுளம் கல்வெட்டில் வரும் இதையொத்த பெயரை ஆதாரமாகக் காட்டுகின்றார்.  இக்கல்வெட்டில்  "பற்று" என்ற நிர்வாகப் பிரிவு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இப்பெயர் சோழர் ஆட்சியில் வளநாடு என்ற நிர்வாகப் பிரிவிற்குச் சமமாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பேராசிரியர் பத்மநாதன் கருதுகின்றார். பற்று என்ற தமிழ்ச் சொல்  சிங்களத்தில் "பத்து" என அழைக்கப்படுகின்றது.  இச்சொற்கள்  தற்காலத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் நிர்வாக அலகுச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Prof.Pushparatnam5.jpg
இக்கல்வெட்டைப் படியெடுத்த போது கடும் மழையாக இருந்ததாலும், பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் இங்குள்ள காட்டில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டதாலும் குறுகிய நேரத்திற்குள் இக்கல்வெட்டைப் படியெடுக்க வேண்டியிருந்தது. ஆயினும் மீண்டும் இக்கல்வெட்டைப் படியெடுக்கவேண்டியிருப்பதால் மேலும் பல  புதிய தகவல்கள் வெளிவரக்கூடும். இவ்விடத்தில் இக்கல்வெட்டைப் படிப்பதற்கும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணரவும்  உதவிய என் ஆசிரியர்களுக்கும்,  எனது தொல்லியல் பட்டதாரி மாணவர்களுக்கும், ஆய்விடத்தை  அடையாளப்படுத்திக் காட்டியதுடன் எம்முடன் இணைந்து பணியாற்றிய திருகோணமலை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

------------------------------------

Sunday, November 14, 2021

மகிழ்வின் நாட்கள்


-- முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய்





தென்னகத்து சீமையிலே
இலந்தைக்குளம் கிராமத்திலே
வாழையடி வாழையென
ஏழுதலைமுறை கண்ட
முப்பாட்டன் பரம்பரையில்
ஆறாம் தலைமுறையாய்
வந்துதித்தோம் அனைவரும்
அன்பான வாரிசுகளாய்!

ஒரு மரத்துக் கிளைகளாய்
அடுத்தடுத்து வீடு இருக்க
ஒரு கூட்டுப் பறவைகளாய்
ஒன்றிணைந்து வாழ்ந்திட்ட
உறவுக் கூட்டமே எம் குடும்பம்!

மேலவீட்டுத் தாத்தா வாரிசுகளும்
நடுத்தாத்தா  வகையறாக்களும்
சின்னத்தாத்தா வீட்டுச் சிறுசுகளுடன்
மொட்டைமாடி நிலவொளியில்
சோறு உண்ட  நாட்கள்தான்
நிறைவான நாட்களாய்
நெஞ்சினிலே நிழலிடுதே! !

வகைவகையாய் அப்பாக்கள்
வாங்கிவந்த பண்டங்களையும்
வக்கனையாய் அம்மாக்கள்
ஆக்கி வைத்த வெஞ்சனங்களையும்
ஆவலாய் கடைபரத்த
ஆளாளுக்கு அள்ளி எடுத்துண்ட
மகிழ்ச்சிதான் என்னே என்னே!

விடியற்காலை நேரத்தில        
வெள்ளத்தாயம்மா டீக்கடையில
டீ ஒன்றைக் குடித்துவிட்டு
வெந்த மொச்சையையும்
சுடசுட தோசையும்
எஜமாந்தொர  பெரியப்பா
எட்டு ரூபாய்க்கு வாங்கிவந்தா
எட்டூருக்கும் மணக்குமன்றோ!

கயத்தாரு காரச்சேவும்
கழுகுமலை தேன்குழலும்
ஓலைப்பெட்டி சில்லுமிட்டாயும்
கோவில்பட்டி கடலைமிட்டாயுமென
ஜமாந்திக்குப்  போய்வரும்
ஜட்சப்பா வாங்கி வந்தா
சட்டென காலிபண்ண
ஈப்போல மொய்ப்போமன்றோ!

மாட்டுத் தொழுவத்தில
கறந்து வைச்ச பசும்பால
காய்ச்சி இறக்கும்முன்னே
தூக்கி குடிச்சதுவும்
கன்னுக்குட்டி ஈனியதும்
கறந்து வரும் சீம்பால
கருப்பட்டி போட்டுக் கிளறி
கிண்டி கீழே இறக்கியதும்
வழிச்சு வழிச்சு தின்னதுவும்
வருடங்கள் சென்றாலும்
நெஞ்சவிட்டு மறக்கலையே!

மாலையிலே ஓடிஆடி
விளையாடி முடிச்சதுவும்
தெற்கு வீட்டுத் திண்ணையிலே
தினம் இரவு கூட்டம் கூடி
வறுத்த கடலை தீரும் வரை
உடைச்சு உரிச்சு தின்றவாறே
கதைகதையாய்ப் பேசி மகிழ்ந்த
காலமும்தான் இனித்திடுதே!

தடதடனு  மோட்டார் சத்தம்
தெரு முனையில் கேட்டதுவும்
'கிராம்ஸ் அப்பா வர்றாங்க'னு
கையில் புத்தகத்தை எடுத்ததுவும்
வீட்டுக்குள்ளே போனதுவும்
விட்ட கதையைத் தொடர்ந்ததுவும்
கனவாத்தானே கண்ணுமுன்னே
வந்து வந்து போகுது இப்போ!

வடக்கு வீட்டு மாடியிலே
வானத்து விண்மீனாய்
வரிசையா படுக்கை போட்டு
விடியும் வரை விடுகதையை
மாற்றி மாற்றிக் கேட்டுவிட்டு
முகத்தில சூரியன் வந்து
சுரீர்னு உரைக்கும் வரை
உடல்முழுசும் போர்வைக்குள்ளே
சுருண்டவாறு புதைத்துக்கொண்டு
புரண்டு புரண்டு உறங்கியதுவும்
காலங்கள் கடந்த பின்னும்
கண்முன்னே விரியுது இப்போ!

அடுத்தடுத்த வீடுகளாய்
அருகருகே இருந்ததனால்
ஒரு மாடியில் ஏறி விட்டு
ஒற்றைச் சுவரு தாண்டி தாண்டி
தெருக்கோடிக்குச் சென்றுவரும் 
சாகசமும் இனிவருமோ?!

பிள்ளைகளா வளர்ந்த நாங்க
பருவ நிலை அடைந்ததுவும்
ஆளாளுக்கு ஒரு பக்கம்
வாழ்க்கைப்பட்டுப் போனாலும்
கள்ளங் கபடமற்ற
வெள்ளை உள்ளத்தோடும்
சொந்த பந்தங்களோடும்
அன்போடு வாழ்ந்துவந்த 

பிள்ளைப் பருவ நிகழ்வுகளை
பசுமையான நினைவுகளாய்
பதியம்போட்டு நான் வைச்சேன்!

மறக்க மனம் முடியாமல்
பொக்கிஷமா மனசுக்குள்ள
பொத்திவச்ச அத்தனையும்
மற்றவரும் காணும்படி - இன்று
மின் தமிழ் இதழிலே
கவிதையாய்க் கொட்டிவச்சேன்!

-- முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்



Wednesday, November 10, 2021

புத்தகம்


-- கி.ரமேஷ்


books.jpg
சாய்வு நாற்காலியில்
தலைசாய்த்து
சுகமான தூக்கம்

நாஞ்சில் மணம் பரப்பி
மார்பில் கிடக்கிறார்
நாஞ்சில் நாடன்
 
லேசாய்ச் சாய்ந்த முகத்தில்
சரிந்து கிடக்கிறது
மூக்குக் கண்ணாடி.

படித்த புத்தகம்
மனதில் பேசியதில்
மெல்லிய புன்னகை

என் முறை எப்போது
என்று தவம் கிடக்கும்
அலமாரி புத்தகங்கள்

கிடக்கும் நிலைகண்டு
மெலிதாய் சிரிக்கிறார்
பொக்கைவாய் கி.ரா
 
சிறு வயதில்
சின்னதாய் தொடங்கி
நிறுத்த முடியாது போனது

மேசையிலும் கட்டிலிலும்
எங்கெங்கு நோக்கினும்
விரிந்து கிடக்கும் புத்தகங்கள்

மேலதிகமாய் வாங்கி விட்டோமென
திருப்தி கொள்கிறதா
மனசு?

புத்தகக்கடையைக்
கடந்து செல்ல முடிகிறதா
கால்கள்?

பார்த்துத்தான் வைப்போமென
இழுத்துச் சென்றன
கண்கள்

வாங்கித்தான் வைப்போமென
கைகள் நீண்டபோது
தடுக்கத்தான் ஆளில்லை

வைக்க இடமில்லையென
மனைவி புலம்புவாள்
ஏமாற்றத்தான் வேண்டும்.

எத்தனை எத்தனை கோடி
இன்பமாய் வைத்தாய் இறைவா
புத்தகமாய்!

எத்தனை ஜென்மம்
கடந்தாலும்
முடிக்க முடியாத முடிச்சுடன்!

சாய்ந்தால் 
தலை சாய வேண்டும்
மடியில் புத்தகத்தோடு

வேண்டேன் ஒருபோதும்
இனி ஒரு வரம்
போதும் இந்தப் புத்தகம்!

-- கி.ரமேஷ்








Saturday, November 6, 2021

அகழாய்வினால் அறியப்படும் தமிழகத்தில் சிறந்திருந்த நகர நாகரீகம்


--  கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (ஓய்வு)


சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் வடிகட்டியுடன் கூடிய நீர் செல்லும் குழாய் அமைப்புகள் மற்றும் உறைகிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம். தொன்மைச் சிறப்புமிக்க ஆதிச்ச நல்லூர் கொற்கை போன்ற ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் நீர் செல்லும் குழாய்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மனித இனத்திற்கு மிகவும் தேவையானதாக விளங்கும் சுத்தமான குடிநீரை தண்ணீரை பெறுவதற்கும் கழிவு நீரை அகற்றவும் "சுருங்கை' எனப்படும் குழாய்களும் கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்களும் இருந்திருக்கின்றன. இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சங்க இலக்கியமான பரிபாடலில் குழாய்கள் நிலத்தின் அடியில் நீண்ட யானையின் துதிக்கை போல அமைந்திருந்ததாக குறிக்கப்படுகிறது.

            அருவி சொரிந்த தியிற்றுரந்து
            நெடுமால் சுருங்கை நடுவழிப்போந்து
            கடுமாகி களிறணத்துக் கைவிடு நீர் போலும்
                        (பரிபாடல் 20 : 14-106)

surungai.jpg

நீர் செல்லும் குழாய் அமைப்பு "சுருங்கை" என அழைக்கபடுகிறது. அரண்மனையின் மாடிமேல் நிலா முற்றம் அமைந்திருந்தது. அம்முற்றத்தின் மேலாக பெய்த மழைநீர் கீழே விழுவதற்கு மீன் வாயைப் போன்ற அம்பணங்கள் (தூம்புகள்) அமைக்கப்பட்டிருந்ததாக நெடுநல்வாடை (96) கூறுகிறது. நீர்செல்லும்  "சுருங்கை"   பற்றி மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகிறது.

            கல்லிடித்தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின்
            நல்லெயிலுடிந்த செல்வத்தம்மின் (730-31)

மேலும் "சுருங்கை' அமைப்பினைப் பற்றி சிலம்பு, மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

இலக்கியங்கள் குறிப்பிடும் செய்திகளை அகழ்வாராய்ச்சிகள் சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றன. சுடுமண்ணால் ஆன குழாய்வகை நீர்க்கால்கள் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) ஊத்தங்கரை (தர்மபுரி மாவட்டம்) சென்னை-நங்கநல்லூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.

இவ்வகை குழாய்களில் ஒரு முனை சற்று குறுகலாகவும் மறுமுனை அகலமாகவும் இருக்கும். குழாய்களை ஒன்றுக்குள் ஒன்று சொருகிவிடலாம். களிமண் பூச்சு தேவையிருக்காது. மேலும் இவை துணிகளுக்கு வண்ண சாயமேற்றும் பணிகளுக்காக இவை பயன்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் "சுருங்கை' எனப்படும் நீர் செல்லும் குழாய்கள் கிடைத்துள்ளன. அரிக்கமேடு, வசவசமுத்திரம் திருக்கோவிலூர், உறையூர் உலகடம் (ஈரோடு மாவட்டம்) போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. உலகடத்தில் கிடைத்த குழாய்களின் மீது எண்கள் (கி.பி. 10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை) தமிழ் எண்கள் இடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தரைக்கு கீழே நீர் செல்லக் கூடிய வடிகால்கள், படைவீடு, கண்ணனூர், கங்கை கொண்ட சோழபுரம், கரூர் போன்ற தொன்மைச் சிறப்புமிக்க இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வாராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சிறந்த நகர நாகரீகம், சிறப்பான நிலையில் இருந்ததற்கான சான்றுகளாக (சுருங்கை) சுடுமண் குழாய்களும், வடிகால்களும் விளங்குகின்றன.