Saturday, June 5, 2021

பனையுறை அன்றிலும் நீருறை மகன்றிலும்


 -- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


'பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை  மட்டும் அருந்திவிட்டு நீரைத் தனியாகப் பிரித்துவிடும் தகைமையது அன்னப்பறவை என்று சான்று இல்லாமல் கூறும் கூற்றுபோல தமிழ்நாட்டில் பல செய்திகள் உண்டு.  அன்றில் பறவை இணையில் ஒன்று இறப்பின் மற்றொன்றும் இறந்துபடும் என்ற செய்தியும் அவ்வரிசையில்தான் நீங்காமல் இடம்பெற்று விட்டது. கடற்கரைகளை ஒட்டிய மணற்பாங்கான பூங்கழிகளில், பனை மரங்களில் கூடுகட்டி வாழ்பவையே அன்றில் பறவைகள். 

ibis.jpg
தமிழ்நாட்டில் தூத்துக்குடி,  இராமநாதபுரம் முதலிய மாவட்டங்களில் இப்பறவைகளைக் காணலாம். இப்பறவைகள் இரவு நேரங்களிலும் செவ்வானம்  காணப்பெறும்போதும், புணர்ச்சிக் காலங்களிலும் உரத்த குரலில் அரற்றும் தன்மை கொண்டவை. இச்செயல்தான் இப்பறவையின் தனித்தன்மை.  பிரிவில் இறப்பு என்பது சான்று இயலாத அற்றாரும். 

பறவை இயல் வல்லுநர் பலரும், பி.எல். சாமி, நா. கணேசன் போன்ற அறிஞர் பலரும் அன்றில் பறவை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு கட்டுரைகள் வனைந்துள்ளனர். அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலிய சங்கத் தமிழ் நூல்களிலும், மணிமேகலை, நாலடியார், ஆழ்வார் தம் பாசுரங்கள், மூவர் தேவாரப் பாடல்கள், கம்பராமாயணம் முதலிய நூல்களிலும் அன்றிலின் தோற்றம் செயல்கள் பற்றிய பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

'பிளாக் ஐபிஸ்'  எனும் ஒருவகை நாரை இனம் சார்ந்ததே அன்றில் பறவைகளாகும். வடமொழியில் கிரௌஞ்சம் என்று குறிப்பிடுவர். நாட்டுப்புற வழக்கில் கருப்பு அரிவாள் மூக்கன் என்றும் வடபுலத்தில் சாரஸ் நாரை என்றும் அழைப்பர். 

இப்பறவையின் அரற்றும் குரல்தனை ......  
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய (அகம். 305),  
சேவலோடு புணராச்சிறுகரும்பேடை இன்னாது உயங்கும் (அகம். 120), 
அன்றிற் பேடை அரிக்கு ரல் அழைஇ (மணி.5-127), 
அன்றிலின் குரல் அடரும் (பெரிய திருமொழி), 
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்குமே (திருவாய்மொழி), 
அன்றிலம் பேடைபோல் வாய்திறந்தரற்றலுற்றாள் (கம்ப.) 
எனக் கூறப்பெற்றுள்ளள. இவை அனைத்தும் பிரிவால் நேர்ந்தவையாகும்.

மேலும், புணர்வின் போது ஒலி எழுப்பும் என்பதை  இன்னாது உயங்கும் கங்குலும் (அகம்.) 
பெடை புணர் அன்றில் உயங்குரல் அளைஇ (நற்.)
கையற நரலும் நள்ளென்யாமத்து குறுந்.) 
எனப் பலவாறாக சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

அன்றில் போன்றே மகன்றில் என்ற ஒருவகை நீர்வாழ் பறவை பற்றிய பல இலக்கியக் குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றில் ஒட்டக்கூத்தரின் மூவருலா பாடலடிகள் குறிப்பிடத்தகுந்தவை. இராசராச சோழனுலாவில் இடம்பெறும் தலைவி ஒருத்தி தன் இல்லத்திற்கு முன்புள்ள பனை மரத்தின் மேல் இருந்துகொண்டு இராப்பொழுதில் அரற்றும் அன்றிலின் குரல் தன்னை வருத்துகின்றது. எனவே, பனையின்கண் உள்ள அன்றிற் பறவையை அகற்றிவிட்டு மகன்றிற் பறவையை அங்கு கொண்டு  வந்து ஏற்றுங்கள் என்று புலம்புவதாகக் கூறப் பெற்றுள்ளது.

'குலோத்துங்க சோழனுலா' வில் வருகின்ற தலைவியோ தனக்கு அன்றிலின் அகவல் இராப்பொழுதில் துன்பத்தைத் தருகின்றது என்று கூறி, சேரனுக்குரிய பனைமரத்தை வெட்டி வீழ்த்திய சோழன் அந்த அன்றிற் பறவை தங்கியிருக்கின்ற பனைமரத்தை வெட்டியிருக்கக்கூடாதா? எனப் புலம்புகின்றாள். 

தேவாரப் பாடல்களில் அன்றில் பற்றிய குறிப்புகள் காணப்பெற்றாலும் ஓரிரு பாடல்களில் பகன்றில் என்ற சொல் காணப்பெறுகின்றது. பகன்றில் என்பது அன்றிலையே குறிக்கின்றது என உரையாசிரியர்கள் பலர் கட்டியுள்ளனர்.

இக்கட்டுரை ஆசிரியர் ஓலைச்சுவடிகளில் அமைந்த அந்த ஏடுகளை ஆய்வு மேற்கொண்ட போது, மகர எழுத்துகள் ஏடுகளில் எழுதப்பெறும்போது அவை பகரமாகக் காட்சி அளிப்பது அறியப்பட்டது. மகன்றில் என்பதை பகன்றில் எனப் படித்து அப்படியே அச்சு நூல்களிலும் பதிப்பித்து விட்டனர். அத்தகையதோர் பாடல் திருநாவுக்கரசரின் திருவையாற்றுப் பதிகத்தில் உள்ளது.

திருக்கயிலை செல்ல முனைந்த அப்பரடிகள் ஈசனால் ஆட்கொள்ளப்பெற்று வடபுலத்து வாவியில் மூழ்கி ஐயாற்றுக் குளத்திலிருந்து எழுந்தார். கரை ஏறியபோது, இணை இணையாக விலங்குகளும் பறவைகளும் அங்கு திகழ்வதைக் கண்டார். ஐயாற்றுக் கோயிலில் கயிலை தரிசனம் பெற்ற பின்பு தான் கண்டவற்றை மாதர் பிறைக் கண்ணி யானை எனத் தொடங்கும் பதினொரு பாடல்கள் கொண்ட பதிகமாகப் பாடியருளினார். ஆறாம் பாடலில் 'வண்ண மகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்' என்று தான் கண்ட காட்சியைப் பதிவு செய்தார். பிற்காலத்திய ஏடு பெயர்த்து எழுதும்போது மகன்றில் பகன்றில் என மாற்றம் பெற்றுவிட்டது.


தாராசுரம் சிவாலயத்தில் இரண்டாம் இராசராசசோழன் இப்பதிகம் பாடும் காட்சியை சிற்பமாக்கியுள்ளதை இக்கட்டுரை ஆசிரியர் தம் ஆய்வில் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அதில், அப்பர் பதிகம் பாடும் ஆறாம் காட்சியில் இணையாக மகன்றில் பறவைகள் நிற்க, அவை முன்பு உழவாரம் ஏந்தியவண்ணம் அப்பர் பாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அக்காட்சியில் திகழும் மகன்றில் பறவைகள் சிறிய வாத்துகள் வடிவில் திகழ்கின்றன. நாரை இனத்து அன்றில் பறவை வடிவிலிருந்து இவை வேறுபட்டுக் காணப்பெறுகின்றன.

சோழன் படைத்த இச்சிற்பக் காட்சியால் இது வரை நாம் அறிந்திராத மகன்றில் பறவை வடிவம் யாது என்பதைக் காண முடிவதோடு, தேவாரப் பாடல்களில் காணப்பெறும் பகன்றில் என்ற சொல் ஏடு பெயர்த்து எழுதியவர் செய்த தவறே என்பது உறுதி பெறுகின்றது.


----



No comments:

Post a Comment