ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு ஏற்படுத்தும் ஆர்வங்கள்
—— முனைவர் சிவ. இளங்கோ
கீழடி அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு வரலாற்றின் மீதும் தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மீதும் ஆர்வம் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் தொல்லியல் துறை, தொல்லியல் பயிற்சிப்பட்டறை நடத்த முன்வந்ததும், அதற்கு எட்டாயிரத்துக்கும் மேல் விண்ணப்பங்கள் இணைய வழியில் குவிந்திருப்பதைக் கண்டு அத்துறை அமைச்சரே ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் அளவுக்குத் தமிழ் மக்களின் ஆர்வ விழிகள் தொல்லியல் மீது கூர்ந்திருக்கின்றன. தமிழக அரசின் கீழடி அறிக்கைப்படி தமிழ் எழுத்துக்களின் காலம் கி.மு.2600 வரை நீண்டு, இந்தியாவின் முதல் எழுத்துரு அமைந்த மொழியாகத் தமிழை உறுதிப்படுத்தியிருப்பதே இந்த ஆர்வங்களுக்கு அடிப்படை. இதற்கு மேலும் தமிழ் மொழியின் காலம் பின்னோக்கி நீளக்கூடும் என்ற எதிர்பார்ப்புதான் தற்போதைய நாடித் துடிப்பு. அதற்கேற்றாற்போல் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு நடத்த, மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதியுடன், தமிழக அரசு களமிறங்கி உள்ளது. அதே நேரம் 2004 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையால் ஆய்வு நடத்தப்பட்டு, அதில் ஒருசில மாதிரிகள் காலக் கணிப்பும் செய்யப்பட்டு, அவை கீழடி முடிவுகளைவிட பின்னோக்கிச் செல்லக்கூடிய காலமாக இருக்கின்றன என்று வெளிவரும் தகவல்களால் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வின் முடிவுகளை இந்தியா முழுவதுமான வரலாற்றாய்வாளர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
பெயர்க்காரணம்:
தமிழகத்தின் தென்கோடியில் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில், தாமிரபரணி என்று இப்போது அழைக்கப்படும் பொருநை ஆற்றின் தென்கரையில் பொன்னக்குடி (பொன்னன் குறிச்சி) என்ற ஊரின் அருகில் மேடாக அமைந்திருக்கும் பகுதியே தற்போது ஆதிச்சநல்லூர் என்றழைக்கப்படுகிறது. அப்பகுதி பறம்பு என்றும் வழங்கப்படுகிறது. அரசின் வருவாய்த் துறை ஆவணங்களின்படி வெள்ளூர் என்னும் கிராமத்தின் எல்லைக்குள் அடங்கும் பகுதி. இங்கு முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் இதற்கு தாழிக்காடு என்ற பெயர் பலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்தாழிக்காடு இடுகாட்டுப் பகுதியாக இருப்பதால், இங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி என்ற ஊர் இருந்திருக்கலாம் என்றும், அவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு செங்கற்கட்டுமானம் தன்னால் காணப்பட்டதாகவும் அலெக்சாண்டர் ரீ, தனது 1906 ஆம் ஆண்டு அகழ்வாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கொங்கராயக் குறிச்சி என்னும் இப்பழமையான ஊர் பத்தாம் நூற்றாண்டுச் சமணர் கல்வெட்டுகளில் முதுகோனூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1] ஆனால் நல்லூர் என்ற பெயர் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. ஆற்றுநீர் பாயும் மருதநிலத்தில் அமைந்த ஊர்கள் நல்லூர் என்று அழைக்கப்படுகின்றன. அவை கடலோடு சேரும் ஆற்று முகத்துவாரங்களாகவும் இருக்கும்.[2] நல்லூருக்கு முன்னே சேரும் ஆதிச்ச என்ற பெயர் 17ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.[3] ஆதிச்ச என்ற முன்னொட்டு இராஜராஜ சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆதி தச்ச நல்லூர் என்ற பெயரே ஆதிச்சநல்லூராக மருவியது என்றும் ஒரு கருத்து உள்ளது. எனினும், நல்லூர் என்பது மட்டும் மாறாமல் உள்ளது.[4]
அகழ்வாய்வுகள்:
ஆதிச்சநல்லூர்ப் பகுதியில் தொல்லியல் சான்றுகள் 18ஆம் நூற்றாண்டிலேயே ஒருசிலரால் கண்டறியப்பட்டன. 19ஆம் நூற்றாண்டில் அப்பகுதிகளில் இருப்புப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது முதுமக்கள் தாழியுடன் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. இது குறித்துப் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டது (மதராஸ் அரசாணை எண்:867 நாள் 13.08.1876). இதைக் கண்ணுற்ற ஜெர்மானியர் ஜாகோர் என்பவர் தன்னார்வத்தில் இந்தியா வந்தடைந்து ஆதிச்சநல்லூர்ப் பகுதிகளில் அம்மாவட்ட ஆட்சியர் உதவியுடன் 1876 ஆம் ஆண்டில் அகழ்வாய்வினை மேற்கொண்டார். இதில் பல அளவுகளில் மண்பாண்டங்கள், இரும்புப் பொருட்கள், எலும்புக் கூடுகள் கிடைத்தன. இவற்றைப் பெரும் அளவில் ஜாகோர் தன்னோடு ஜெர்மனி எடுத்துச் சென்றார் என்றும், அவை தற்போது பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளன என்றும் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886 இல் இங்கு இனப்பகுப்பாய்வுக்கு ஆய்வு செய்துள்ளனர். இதே காலகட்டத்திற்குச் சற்று முன்னர், அவ்விடங்களில் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த கால்டுவெல், “தென்னிந்தியாவில் மிகப்பெரிய பழமையான நாகரிகமாகச் சிறந்து விளங்கியது பொருநைக் கரையே” என்று கூறியுள்ளார்.
இதற்குப் பிறகு அலெக்சாண்டர் ரீ என்பவர், 1899 முதல் 1904 ஆம் ஆண்டு வரை 33 இடங்களில் அகழ்வாய்வு மேற்கொண்டார். இருபத்தோரு மாட்டு வண்டிகளில் அவர் ஏற்றிச்சென்ற பொருட்கள் பலவும் இன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. பின்னர் 1915 இல் அவர் வெளியிட்ட அறிக்கையில் “எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதைகுழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளன. தென்னிந்தியாவிலேயே மிகப் பரந்த அளவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய இடம் இதுதான்” என்று கூறினார். 1903 – 1904 ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்த பாரிசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூயி லாப்பேக் என்பவர் நான்கு குழிகளிலிருந்து, தான் கண்டெடுத்த பொருட்களைப் பாரிசு அருங்காட்சியகம் கொண்டு சென்றார். “அப்பொருட்கள் தொன்மைத் திராவிடர்களுடையவை” என்று அவர் கருத்து வெளியிட்டார். ஜே.ஆர். ஹெண்டர்சன் என்பவர் 1914 ஆம் ஆண்டில் ஆய்வுகள் மேற்கொண்டார். இதன் பின்னர் 2004 – 2006 ஆம் ஆண்டுகளில் மத்தியத் தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்ததில் 169 முதுமக்கள் தாழிகளும், மண்பாண்டங்களும், எலும்புகளும் கிடைத்தன. இவ்வாய்வின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.[5] அதே நேரம், தற்போது (பிப்ரவரி 2020) மத்திய தொல்லியல் துறை, 2004 - 2006 ஆண்டு அகழ்வாய்வு குறித்து இடைக்கால அறிக்கையை மத்திய அரசுக்குக் கொடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.[6]
பொருட்களும், காலமும்:
ஆதிச்சநல்லூரில் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் நடைபெற்ற அகழ்வாய்வுகள் பலவும் அறிவியல் முறைப்படியான அகழ்வாய்வுகளாக நடத்தப்படவில்லை. மேலும் தொல்லியல் பொருட்கள், புதையல்கள் போன்றவற்றின் மீதான சட்டங்கள் ஏதும் இயற்றப்படாத நிலையில் அவற்றைத் தோண்டி எடுத்தவர்கள் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். ஆதிச்சநல்லூரில் அதிகமாகக் கிடைத்தவை முதுமக்கள் தாழி என்பதால் அவற்றை வைத்து அப் பறம்பு முழுமையும் இடுகாட்டுப் பகுதி என்றே பலர் கருத்துரைக்கின்றனர். ஜாகோரின் 1876 ஆம் ஆண்டு அகழ்வாய்வில் பலவகையான, அளவிலான மண்பாண்டங்களுடன் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், வெண்கலத்தால் ஆன உருவச் சிலைகள், தங்க நெற்றிப் பட்டயங்கள், மனித எலும்புகள், நெல், சாமை போன்ற தானியங்கள் கிடைத்துள்ளன. அலெக்சாண்டர் ரீ நடத்திய 1899-1904 ஆம் ஆண்டு ஐந்து கட்ட அகழ்வாய்வுகளில் முன்னர்க் கூறிய பொருட்களோடு வெண்கலக் கருவிகள், தங்க அணிமணிகள், கல் அம்மிகள். கலைநயம் மிக்க பூச்சாடிகள், கிண்ணம், சட்டி, சல்லடை போன்ற சமையல் பாத்திரங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை 2004 - 2005ஆம் ஆண்டுகளில் நடத்திய சிறிய பகுதியிலான அகழ்வாய்வில் பெருமளவில் முதுமக்கள் தாழிகளும் (169), அவற்றின் உள் சிறிய மண்பாண்டங்கள், எலும்புகள், தானியங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வாய்வின்போது, கோட்டைச் சுவரின் ஒரு பகுதியும், குயவர்களின் சூளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டைச் சுவர் சீரான வடிவமைப்பைக் கொண்டது. கோட்டையில் குயவர்களின் குடியிருப்பும் இருந்திருக்கிறது. மூன்று பானை சுடும் சூளைகளும், சாம்பலும், கரியும், உடைந்த பானை ஓடுகளோடு அங்குள்ளன. இரும்புக் கட்டிகள், பாசிமணிகள், சிவப்புப் பளிங்கு மணிகள் (Carnelian gems), பிறவண்ண மணிகள், பெருங்கற்காலக் குறியீடுகளைக் கொண்ட பானை ஓடுகள், எலும்பினால் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவை இக்கோட்டைச் சுவர் இருந்த பகுதிகளுக்குள் கிடைத்துள்ளன.[7]
இவ்வாய்வில் கிடைத்த ஒருமண்பாண்டத் துண்டு தமிழர் நாகரிகத் தேடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஓட்டினில் ஒரு பெண், நெற்கதிர், நாரை, மான், முதலை ஆகியவை புடைப்பு உருவங்களாக, மிகவும் நேர்த்தியான வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் உள்ள தாழி மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், அந்தத் தாழியில் புடைப்பு உருவ முறையில் இச்சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இப்பானை ஓட்டினில் இருந்த சில குறியீடுகள் அரப்பா கால உருவ எழுத்துகளை ஒத்தன என்றும் தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் தெரிவித்துள்ளார். மேலும், ஆதிச்சநல்லூரில் கிடைத்த பானைகள் மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.[8]
இந்தியத் தொல்லியல் துறை அகழ்வாய்வு (2004-2005) செய்த பொருட்களை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆணைப்படி அமெரிக்க (புளோரிடா) ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட கார்பன்-14 பரிசோதனையில் ஒரு பொருளின் காலம் கி.மு.791 என்றும், இன்னொரு பொருளின் காலம் கி.மு.905 என்றும் கண்டறியப்பட்டு, அவை ஊடகங்களிலும் வெளியிடப்பட்டன.[9] அலெக்சாண்டர் ரீ நடத்திய அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் சில, இதற்கு முன்னரே காலக் கணிப்பு ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளன. அதில் ஒரு மரத்துண்டு, கி.மு.900 என்று டாட்டா ஆய்வு நிறுவனமும், ஒரு மண்பாண்டத் துண்டு கி.மு.2000 என்றும், மற்றொரு மண்பாண்டத் துண்டு கி.மு. 4000 என்றும் மணிப்பூர் பல்கலைக் கழக ஆய்வுக் கூடமும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் அறிவித்துள்ளன. இக்காலக் கணிப்புகளால் தமிழ் மக்களுக்கு எழுத்தறிவு வருவதற்கு முந்தைய நாகரிகமாக ஆதிச்சநல்லூர் நாகரிகம் இருந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 3700 ஆண்டுகளுக்கு முந்தைய, கிட்டத்தட்ட சிந்துசமவெளி நாகரிகத்திற்கு இணையான நாகரிகமாக ஆதிச்சநல்லூர் நாகரிகம் உள்ளது என பி.பி.சி. செய்திகள் தெரிவிக்கின்றன.[10] வங்காள ஆராய்ச்சியாளரான பானர்ஜி என்பவர், சிந்துவெளி நாகரிகத்தைவிட ஆதிச்சநல்லூர் தொன்மையான நாகரிகம் என்றும், அதன் காலம் கி.மு.12,000 ஆண்டுகள் என்றும், இந்திய அரசு இவ்வுண்மைகளை மறைப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.[11] ஆக, சிந்துவெளிக் காலம் அல்லது அதற்கு முன்னரும் கூட தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தான் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் தெரிவிக்கும் செய்தி.
மேலும், ஆதிச்சநல்லூருக்கும், சிந்துவெளிக்குமான பொருத்தப்பாடுகளில் உலோகக் கலவையில் ஆறு விழுக்காடு துத்தநாகம் கலப்பு, பானைகளின் மெல்லிய கனம், பானை ஓடுகளில் அரப்பா காலக் குறியீடுகள் உள்ளமை, சமயச் சின்னங்கள் இல்லாத நிலை, நடனமாடும் பெண் உருவம் (தாய்த் தெய்வ வழிபாடு) கிடைத்துள்ளமை ஆகியவற்றைத் தொல்லியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாட்டோடு இனம், மொழி, பண்பாடு, சமயம் ஆகிய கூறுகளில் தொடர்புடைய திராவிட நாகரிகம் என்று பன்னாட்டுத் தொல்பொருள் அறிஞர்கள் பலரும் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். சிந்துவெளி ஆராய்ச்சியில் ஜான் மார்ஷல், ஆர்.டி.பானர்ஜி, ஐ.ஆர்.அண்டர், ஈராஸ் பாதிரியார், எச்.டி.சங்காலியா, பி.பி.லால், ஜி.எம். ஹேவிட், ஐராவதம் மகாதேவன் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். தற்கால ஆய்வறிஞர்களான அஸ்கோ பார்பலோ, ஜார்ஜ் எல். ஹார்ட், ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளத்தைக் குறிப்பாகச் சிந்துவெளி - தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பதைத் தங்கள் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.[12] ஆனால் சிந்துவெளி நாகரிகத்தைச் சரசுவதி நாகரிகமாகக் கட்டமைக்க இந்திய அரசு பெரும் முயற்சிகள் எடுத்துவரும் இன்றைய சூழ்நிலையில், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் எத்தனை விழுக்காடு சரியான தகவலைக் கொண்டு வெளியிடப்பட உள்ளது என்பது வரலாறு, தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்விக்குறிதான்.
மொழி:
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மேற்கூறிய பொருட்கள் சங்க இலக்கியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தி சங்க இலக்கியங்கள், தமிழரின் வாழ்வியலைச் சித்தரிக்கும் எழுதப்பட்ட ஆவணம் என்று கூறுவதற்குச் சான்றாக அமைகின்றன. ஆனால், மூன்றாம் தமிழ்ச்சங்க காலத்தினைச் சேர்ந்த சங்க இலக்கியங்களில் ஆதிச்சநல்லூர் பற்றிய குறிப்புகள் இல்லை. கொற்கை, திருச்செந்தூர், பொதிகை மலை இவற்றைப் பற்றிய குறிப்புகள் மூன்றாம் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் இருப்பதால், மூன்றாம் தமிழ்ச்சங்கம் தோன்றி மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே, அதாவது, கொற்கையினைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சிபுரிந்த இரண்டாம் தமிழ்ச்சங்கக் காலத்தில் ஆதிச்சநல்லூர் நாகரிகம் இருந்திருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகிறார். அதற்கொப்பவே ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளின் காலம் கி.மு. 4000 வரை முன்னோக்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது.[13] சங்க இலக்கியக் காலத்தின் முன் எல்லை 2300 ஆண்டுகளாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், கீழடியில் எழுத்துருப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் கிடைத்து எழுத்துருவின் காலத்தையும், அதன்வழி சங்க இலக்கிய முன் எல்லைக் காலத்தையும் 2600 ஆண்டுகள் என நிறுவ வழிகோலி உள்ளன. இந்தக் காலத்தைக் கொற்கை அகழ்வாய்வில் கிடைத்த தமிழி எழுத்துரு கொண்ட பானை ஓடுகள் கி.மு. 780-க்கு முன்னெடுத்துச் சென்றுள்ளன. இந்திய அகழ்வாய்வுகளில் எழுத்துரு கொண்ட பானை ஓடுகள் எங்கும் கிடைக்காத நிலையில், தமிழகத்தில் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 175 இடங்களில் 37 இடங்களில் தமிழி எழுத்துருக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவையெல்லாம் தமிழி எழுத்துரு முறை 3000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறைத் தெளிவாக்குகின்றன.[14] ஆதிச்சநல்லூர் தாழிகளில் பழந்தமிழ் எழுத்துகள் இருந்தன. ‘கதிரவன் மகன் ஆதன்’ என்று பொருள் தரக்கூடிய எழுத்துகள் ஒரு தாழியில் காணப்பட்டதாக 2004 ஆம் ஆண்டு அகழ்வாய்வு செய்த மத்தியத் தொல்லியல் துறை இயக்குநர் தியாக. சத்தியமூர்த்தியும், கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி. சம்பத்தும் தெரிவித்தனர். கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனும் அவ்வெழுத்துகள் அரப்பா கால எழுத்துகளைப் போல இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார் (Front line, 01.07.2005). ஆனால் அவை யாவுமே பின்னாட்களில் மறுக்கப்பட்டன. அப்படி எழுத்துகளே காணப்படவில்லை என்றும், அவை சாம்பல் கீறல்களே என்றும் கூறப்பட்டது. தமிழி எழுத்துருவின் காலம் அசோகன் பிராமியைவிட முற்காலத்திற்குச் செல்வதால் இவை மறைக்கப்படுகின்றன என்று நடன. காசிநாதன் தனது ‘தமிழகம் – அரப்பன் நாகரிகத் தாயகம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.[15] இந்தக் காலஎல்லை, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கை வெளிவந்தால், இன்னும் முன்னோக்கிச் செல்லும் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்பாடு:
பழந்தமிழர்ப் பண்பாட்டில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் மட்டுமே இருந்திருக்கிறது. இனக்குழுக் காலத்தில் கூட இறந்தோர் உடலை வெட்டவெளியில் கிடத்திப் பின் எலும்புகளைச் சேகரித்து மண்பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்திருப்பதைத் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.[16] இதனுடைய நீட்சியாகவே முதுமக்கள் தாழி புதைக்கும் வழக்கத்தைக் கூறலாம். தமிழர்களின் இவ்வழக்கம் சிந்துவெளி வழி பாலஸ்தீனம், சிரியா வரை பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கி.மு. 15ஆம் நூற்றாண்டு வரையும் பழக்கத்தில் இருந்திருக்கிறது. தாழி அடக்கமுறைகளில் பின்பற்றப்பட்ட சடங்கு முறைகளும் கூட பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலும் பின்பற்றப்பட்டுள்ளன. இறந்தவர் நெற்றியில் காசு, பட்டம் வைக்கும் சில சடங்கு முறைகள் அப்படியே பின்பற்றப்பட்டது மட்டுமல்ல, பிறநாட்டின் பரிமாற்றப்பட்ட காசுகளும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பவானி, நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் கிடைத்துள்ள தாழிகளில் ரோமானிய காசுகள் கிடைத்துள்ளன. எகிப்திய பிரமிடுகளுக்கு முன்பாகவே தலைவன் அல்லது அரசன் இறந்தபின்னும் வாழத்தேவையான பொருட்கள் உடன் வைத்துப் புதைக்கும் வழக்கம் தமிழரின் தொன்மைப் பண்பாடாக இருந்துள்ளது. இத்தனை நீண்ட பரவல் இந்த நாடுகளுக்கிடையேயான வணிகப் பரிமாற்றத்தையும் குறிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலகின் பிற மூத்த இனங்களின் மண்டை ஓடுகளும் ஆதிச்சநல்லூர்த் தாழிகளில் கிடைத்திருக்கின்றன.[17]
சுட்ட செங்கற்களால் வீடு, கோட்டை, மாளிகை கட்டும் வழக்கம் ஆதிச்சநல்லூரிலிருந்து சிந்துவெளி வரை பரவிக் கிடக்கிறது. தலைவர்கள் மாளிகை மற்றும் கோட்டைகளில் வசிக்க, மக்கள் நீள்சதுர வீடுகளில் வசித்தனர். இந்த அமைப்பு முறையே சிந்துவெளி நகர நாகரிகத்தில் மேல்மேற்கு, கீழ்கிழக்கு முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[18]
ஆதிச்சநல்லூர் மக்கள் இரும்பு, செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களின் பயன்பாட்டை அறிந்து பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, எல்லா உலோகப்பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடமாக ஆதிச்சநல்லூர் மட்டுமே அறியப்பபட்டிருப்பதாகத் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்நிறுவனம் 2004 ஆம் ஆண்டில், மத்தியத் தொல்லியல் துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆதிச்சநல்லூரில் கனிமங்கள் பற்றி ஆராய்ந்தது. அந்நிறுவன ஆய்வறிக்கையின்படி ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் ஆறுமீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டு இரும்புக் கனிமங்கள் எடுக்கப்பட்டதாகவும், பின் அந்தக் குழிகளையே முதுமக்கள் தாழிகளைப் புதைக்கப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்றும் தெரிய வருகிறது. இரும்பினில் போர்க்களக் கருவிகளும், வேளாண்மைக்குத் தேவையான கருவிகளும் செய்யப்பட்டுள்ளன. தேனிரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகிய இரும்பு வகைகளில் பானைத்தொழில், பயிர்த்தொழில், நெசவுத் தொழில் ஆகியவற்றிற்கான கருவிகளைச் செய்துள்ளனர்.
இரும்பின் வளர்ந்த நிலைப் பயன்பாட்டால் கப்பல் கட்டும் தொழில் இங்கு முழுவீச்சில் நடைபெற்றுப் பிற நாடுகளுடன் வணிகத் தொடர்பும் பெருமளவில் நடைபெற்றிருக்கின்றன. தென்னிந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருட்களே எகிப்துக்கும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.[19] மேலும், ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கும் இரும்புப் பொருட்கள் ஏற்றுமதி நடந்து வந்தது. எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டிலிருந்துதான் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்பதும், இரும்பின் உபயோகத்தை இந்தியாவில் முதன்முதலில் அறிந்த பகுதி ஆதிச்சநல்லூர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கும் கிருட்டினாபுரத்திலும் அக்காலத்திலேயே நிலத்தின் மேற்பகுதியில் நீண்ட தொலைவுக்கு இரும்புச் சுரங்கங்கள் இருந்ததையும், சுரங்கத் தொழில் நடைபெற்றதையும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.[20] அதேபோல வெண்கலத்தில் குடுவைகள், சாடிகள், கிண்ணங்கள், விலங்கு உருவங்கள், மனித உருவங்கள், மகளிர் ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளன. வெண்கலப் பொருட்கள் தயாரிப்பில் மிக உயர்ந்த தொழில் நுட்பத்தை இங்கு வாழ்ந்திருந்தவர்கள் பெற்றிருந்தனர் என்றும், அதனாலேயே கலையழகு மிக்க மிகச் சிறந்த வெண்கலப் பொருட்களைத் தயாரித்து வந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கத்திலும் ஆபரணப் பொருட்கள் செய்யப்பட்டுள்ளன. வெண்கலத்தில் ஆர்சனிக் என்ற உலோகமும் கலந்து பொருட்கள் செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவில் ஆதிச்சநல்லூரைத் தவிர்த்து வேறு எங்கும் காணப்படவில்லை என்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.[21]
ஆதிச்சநல்லூர் மக்கள் உழவின் பயன்பாட்டை அறிந்து தங்கள் உணவில் நெல், சாமை போன்ற தானியங்களைப் பயன்படுத்தி உள்ளனர். உழவுக்கான பலவிதப் பொருட்கள் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழிகளில் தானியங்கள் வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன. பருத்தியை விளைவித்து ஆடைகளை அழகுற நெய்து உடுத்தி உள்ளனர். அழகு சாதனப் பொருட்களும் கிடைத்து அவர்களின் ஒப்பனைத் திறனை வெளிப்படுத்தி உள்ளன. அம்மிக்கல் போன்றவை தமிழரின் சமையல் கலை அன்று தொடங்கி இன்றுவரை நீடித்து வருவதைக் காட்டுகின்றன. மேலும், ஆதிச்சநல்லூரின் பண்பாட்டுக் கூறுகள், சிந்துவெளி வழி உலகமெங்கும் பரவியிருந்ததை பல்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிந்து வெளியில் அகழ்வாய்வு செய்த பிரிட்டிஷ் இந்தியத் தொல்லியல்துறை இயக்குநராக இருந்த ராக்கல்தாஸ் பானர்ஜி, தனது ஆய்வுக் கட்டுரையில், “இந்தியாவின் மிகத் தென்கோடியில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அறுந்துபோகாத ஒரு சங்கிலித் தொடர் போலத் திராவிடர்களின் பண்பாட்டுத் தொடர்பு உள்ளது. மனித நாகரிகம் இந்தியாவின் தென் கோடியிலிருந்து வடஇந்தியா முழுவதும் பரவியது. பலுசிஸ்தான் வழியாகப் பாரசீகம், ஈரான், பக்ரைன் தீவு, கிரீட் தீவு வரை சென்றுள்ளது” என்று கூறியிருக்கிறார். சிந்துவெளி வரலாற்றாய்வாளர் ஈராஸ் பாதிரியார், “மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இன்றும் வாழும் உழவர், செம்படவர், பிற தொழிலாளர் வாழ்வில் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியைக் காண்கிறேன்” என்று தன் ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்.[22] மேலும், சங்க இலக்கியங்கள் கூறும் அகம், புறம் என்ற காதல் மணம், போர்க்குணம் நிறைந்த வாழ்க்கை முறைக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு வெளிப்படுத்தும் வாழ்வியல் முறைக்கும் பெரும் ஒற்றுமை காணப்படுவதும் நோக்கத்தக்கது.
சமயம்:
இந்தியாவிலேயே மிகவும் பழமையான, சிந்துவெளி நகர நாகரிகத்திற்கு இணையான நாகரிகமாக ஆதிச்சநல்லூர் திகழ்கிறது. இனக்குழுக்கள் கால முன்னோர் வழிபாடுதான் இப்பகுதிகளில் முதன்மை யாக இருந்திருக்கிறது. தொடர்ந்து தாய்த்தெய்வ வழிபாடுகளுக்கான தடயங்கள் பலவும் கிடைத்திருக்கின்றன. அலெக்சாண்டர் ரீயின் அகழ்வாய்வில் வெண்கலப் பெண் சிலை கிடைத்திருக்கின்றது. இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓட்டுப் புடைப்புப் பொறிப்பில் பெண் உருவத்துடன் விலங்கு, பறவை, நெல்கதிர் உருவங்களும் காணப்படுகின்றன. இவை தாய்த் தெய்வ வழிபாட்டை உறுதிப்படுத்துகின்றன. இதுவரை தமிழ்நாட்டினில் தமிழகத் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட 40 அகழ்வாய்வு இடங்களிலும் முன்னோர் வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாட்டைத் தவிர வேறு சமய வழிபாடுகளுக்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. பழந்தமிழர் வழிபாட்டில் நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எவ்வித வழிபாடும், கடவுளரும் இல்லை என்பதே சங்க இலக்கியக் கொள்கையாக உள்ளது. பகைவர் படைகளை முன்னின்று எதிர்த்து, யானைகளைக் கொன்று, தானும் வீழ்ந்த வீரர்களுக்கு அமைக்கப்பட்ட நடுகற்களுக்கு நெல்தூவி வழிபடுதல் அல்லாது, நெல்தூவி வழிபடக்கூடிய வேறு கடவுள் எதுவும் இல்லை என மாங்குடிக் கிழார் என்னும் புலவர் சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூலில் (புறநானூறு – 335) குறிப்பிடுகிறார். சமயங்கள் உருவான காலத்திற்கும் முற்பட்ட பழந்தமிழர் நாகரிகத்தைத்தான் சங்க இலக்கியங்களும் கட்டமைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்புரை:
தமிழர்கள் தொன்மையான மாந்த இனத்தினர் என்பதும், தமிழ் மொழி உலக மொழிகளுள் மிகவும் தொன்மையானது என்றும் பல காலங்களில் பல்வேறு அறிஞர்கள், ஆய்வாளர்கள் தெரிவித்து வந்துள்ளனர்.[23] அதற்கான அகச்சான்றுகளாகத் தமிழ் மொழியில் சங்க இலக்கியங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், புறச்சான்றுகளாகத் தமிழர் பண்பாட்டினை வெளிப்படுத்தும் நகர நாகரிகங்களை அண்மையில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அதே நேரம், இந்த அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பல்வேறு நாடுகளிலும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து ஆதிச்சநல்லூரில் அமையவிருக்கும் அருங்காட்சியகத்தில் வைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பங்கு உள்ளது.[24]
இந்தியா மதவழியில் மேலாதிக்கம் கொண்ட சமுதாய அமைப்பினில் பல நூறு ஆண்டுகள் இருந்து வந்ததால் வரலாறு வளைக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் காலங்காலமாய் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறையும், தமிழக அரசின் தொல்லியல் துறையும் நடத்திவரும் அகழ்வாய்வுகளில் தமிழ்ச் சமுதாயத்தைத் தொன்மையான சமுதாயமாக அடையாளப்படுத்தும் வழிகளில் தொல்பொருள்களும், பழமையான கட்டிட அமைப்புகளும் கிடைத்து வருகின்றன. காலம், இனம், மொழி, பண்பாடு, சமயம் ஆகிய கூறுகளின் வழி, தமிழ்மொழியின் காலம் முதன்மை நிலை அடைவதை மேலாதிக்கச் சமுதாயக் கட்டமைப்பினில் சிக்கி இருக்கும் இந்திய அரசு விரும்பாத போக்கு இன்றுவரையும் நிலவி வருகிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கை வெளியிடப்படாத நிலை குறித்துத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம், “தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லாமல் இருப்பதுபோல் தெரிகிறது. இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்று முத்தாலங்குறிச்சி காமராசு போன்றோர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் 15.02.2019-இல் கூறியிருப்பது நோக்கத்தக்கது.[25]
இந்நிலையில் தற்போது (பிப்ரவரி 2020) ஆதிச்சநல்லூரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழ்வாய்வு மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் (2020–2021) ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மத்திய அரசு அறிவித்திருந்த ஒருசில நாட்களில், இக்கட்டுரை உருவாக்கம் பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அருங்காட்சியகம் மற்றும் வேலி அமைக்க ஆதிச்சநல்லூர் பறம்பில் பெரிய இயந்திரம் கொண்டு தோண்டியதில் காலத்தால் தொன்மைவாய்ந்த பல தாழிகள் சிதைக்கப்பட்ட செய்தி வரலாற்றார்வலர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட தாழிகள் நொறுக்கப் பட்டிருப்பதைப் படத்துடன் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.[26 ]இந்நிலையில் மீண்டும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடி உள்ளிட்ட பல இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழ்வாய்வைத் தொடங்கி உள்ளது. இந்த அகழ்வாய்வின் அறிக்கைகளும், முன்னர் கிடப்பில் இருக்கும் அகழ்வாய்வு அறிக்கைகளும் நேர்மையாக வெளியிடப்படுமாயின் தமிழர்கள் பெருமைப்படத்தக்க அளவிலேயே அவை அமையும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
அடிக்குறிப்புகள்:
1. ஜெயக்குமார்.கோ, தமிழ்மணம், varalaru.blogspot.com, 2.08.2013.
2. ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும் பேரும், சென்னை, 2006, பக் .28.
3. Dinamani, 4.4.2019.
4. இதேபோன்று ஆறு கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதிக்கு முன்னால் உள்ள மருதநிலப் பகுதி, நல்லூர் என இடைக்கழி நாட்டுப் பகுதியிலும் வழங்கி வருகிறது. சங்க இலக்கியங்களில் எயிற்பட்டினம் என்று வழங்கப்படும் இன்றைய மரக்காணத்தை அடுத்துள்ள இரண்டு கழிமுகத்துவாரப் பகுதிகளுக்குள் அமைந்துள்ளது, இடைக்கழிநாடு. சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப் படை நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Francis Cyril Antony (ed.), Gazetteer of India, vol II, Union Territory of Pondicherry, 1982, p. 1524 / இக்கட்டுரை ஆசிரியரின் கள ஆய்வுகள்.
5. Excavations of Archaeological site in Tamil Nadu (1969 – 1995), Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, 2004, P46-56 / தொல்தமிழ், சதக்கத் ஆய்விதழ் சிறப்புப் பதிப்பு, அக்டோபர் 2019, ப.73, 97. / அமுதன், ஆதிச்சநல்லூர் – கீழடி, மண்மூடிய மகத்தான நாகரிகம், 2017, பக்.81 -91.
6. The Hindu, 03-02-2020.
7. ta.m.wikipedia.org.
8. கல்வெட்டு, 19.04.2015 / m.facebook.com / tarr
9. The Hindu, 06.04.2019 / தினமணி, 04.04.2019.
10. BBC News Tamil, 05.04.2019 / bbc.com
11. கல்வெட்டு, 19.04.2015 / m.facebook.com / tarr
12. முனைவர் சிவ.இளங்கோ, சிந்துவெளி அவிழும் முடிச்சுகள், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், 2019, ப.7.
13. BBC News Tamil, 05.04.2019 / bbc.com
14. தொல்தமிழ், op.cit., p.74, 99.
15. ஏர் இதழ் – 2019 / erithazh.blogspot.com
16. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கச் சிறப்பு மலர், தமிழ்நாடு அரசு, 2010, ப.7.
17. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளில் கிடைத்த மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகளின் எண்ணிக்கை குறித்துப் பல்வேறு செய்திகள் உள்ளன. அவரவரும் தங்கள் ஆவலில் ஆய்வுசெய்து, கிடைத்தவற்றைத் தங்களோடு எடுத்துச் சென்றதே இதற்குக் காரணம். இதனால் அங்குக் கிடைத்த ஒருசில மண்டை ஓடுகளை வைத்து, திராவிட இனம் சார்ந்த மண்டை ஓடுகள் எட்டு விழுக்காடு அளவில் உள்ளன என்றும் கருத்துரைக்கின்றனர். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ஆறு மண்டை ஓடுகளும் 3000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மை வாய்ந்தவை. அதிலொன்று ஆஸ்திரலாய்டு இனக்குழுவை ஒத்திருக்கிறது. அதே நேரம் ஆஸ்திரலாய்டு – திராவிட இனங்களின் நெருங்கிய தொடர்பினை ஆய்வாளர் ஹக்சுலி குறிப்பிட்டுள்ளார். தொல் ஆஸ்திரேலிய இனம், தொல் திராவிட இனம் (புரோடோ-திராவிடர்கள்), தென்னிந்திய மலைவாழ் இனம், வேடர்கள் மற்றும் சகாய் இனக் குழுக்களின் மண்டை ஓட்டுத் தோற்ற ஒற்றுமையை, எலியட் ஸ்காட்டின் அறிக்கையை மேற்கோள்காட்டி ஆதிச்சநல்லூர் மண்டையோடுகள் குறித்து ஆராய்ந்து எழுதிய சக்கர்மேன் விளக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கிடைத்த தல்காய் இன மண்டையோடு மற்றும் உடலமைப்புடன் புரோடோ - திராவிடர்களின் உடலமைப்புகள் ஒத்திருக்கின்றன என்றும் சக்கர்மேன் நிறுவியுள்ளார். இவை தவிர, ஆப்பிரிக்க நீக்ராய்டு இனக்குழு மண்டை அமைப்பு, ஐரோப்பிய கிரிமால்டி இனக்குழு மண்டை அமைப்பு ஆகியவற்றை ஒத்த மண்டை ஓடுகளும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகளில் அடக்கம். பன்னாட்டுத் தொல் குடிமக்களின் மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் புதைந்து கிடைப்பதானது, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கடந்து வணிகப் பரிமாற்றம் செய்த தொல்குடிகள் ஒரே சமூகமாக வாழ்ந்த இடம் தமிழகம் என்பதற்கான தொல்லியல் சான்றே ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பதை நிரூபிக்கின்றன. (Source: https://www.facebook.com, Nivedita Louis, Referred by தேமொழி, தமிழ் மரபு அறக்கட்டளை, 24.09.2019).
18. ஆர். பாலகிருஷ்ணன், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், 2017, p.60.
19. http.//keetru.com / 14.03.2014. (Reffering the research paper presented by J.M.Heath at The Journal of the Royal Aisatic Society of Great Britain and Ireland, Vol.5, No:2, Cambridge University Press, 1839, pp.390-397).
20. https://www.jstor.org/stable/pdf/25207527.pdf / முத்தமிழ் வேந்தன், ஆதித்தநல்லூர் புகழ்பெற்ற சுரங்கத் தொழில் நகரம், source:https://www.facebook.com /story.php (based on அ.இராமசாமி, தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, 2013, பக்.88-93), Referred by தேமொழி, தமிழ்மரபு அறக்கட்டளை, 25.09.2019.
21. தொல்தமிழ், op.cit., pp.74,99,100 – 101.
22. மருதநாயகம் ப, தேவநேயப் பாவாணர் சொல்லாய்வும் சொல்லாடலும், இராச குணா பதிப்பகம், சென்னை, 2017; ப.45, 46.
23. தினத்தந்தி, 06.11.2019.
24. 1876 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாகோர் நடத்திய அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று பெர்லினில் உள்ள வோல்கர்குண்ட், ஹேம்பர்க் அருங்காட்சியகத்தில் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் அவை என்னென்ன என்று அறியும் பட்டியலையோ அல்லது அந்தப் பொருட்களையோ யாரும் பார்த்ததில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் அமைப்பை நடத்தி வரும் முனைவர் க. சுபாஷினி, இதுகுறித்த புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 04.10.2019 அன்று நடைபெற்ற தொல்தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கில் சுபாஷினி பேசும்போது, பெர்லினில் 99 அருங்காட்சியகங்கள் இருப்பதாகவும், இதற்கான தேடலில் ஈடுபட்டபோது, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பொருட்கள் ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் (Asian Art Museum) இருக்கும் செய்தியை அறிந்ததாகவும், அவையும் காட்சிப்படுத்தப் படாமலும், கட்டுகள் பிரிக்கப்படாமலும் இருக்கும் நிலையைத்தான் தான் அங்கு அறிந்ததாகவும் கூறினார். அவருடைய நேர்காணல் யூ டியூபிலும் உள்ளது. இணையதளம்: தமிழ் மரபு அறக்கட்டளை.
25. இந்து தமிழ் திசை, 16.02.2019.
26. Indian Express, 09.02.2020.
தொடர்பு:
முனைவர் சிவ.இளங்கோ,
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்ட நகர்,
புதுச்சேரி- 605 011.
இந்தியா.
பேசி: 99940 78907,
Mail ID: ilangosiva57@gmail.com