Wednesday, May 31, 2017

காட்டம்மாவின் காதல்

''புருஷன் செத்துட்டாரு... பூவும் பொட்டுமா மினுக்குறானு பேசுவாங்க'' - செருப்பு தைக்கும் காட்டம்மாவின் கதை!

கட்டுரை: மு.பார்த்தசாரதி
படங்கள்: குமரகுருபரன்
வெளியீடு: விகடன் (இதழ்: மே 31, 2017)


காலை பத்து மணி. அசோக் நகர் நான்காவது பிரதான சாலை பரபரப்பாக இருக்கிறது. நேற்றிலிருந்து பேருந்துகள் சரியாக இயங்காததால் அலுவலகத்திற்குச் செல்பவர்களும், வெளியூர் செல்பவர்களும் தனியார் பேருந்துகளிலும் ஷேர் ஆட்டோக்களிலும் முண்டியடித்து ஏறிக்கொண்டிருக்க, எந்தவொரு பதட்டமும் இல்லாமல் எதிரிலுள்ள பிளாட்பாரத்தில் நடந்து வருகிறார் காட்டம்மா . 
பருமனான உடல் தோற்றம், கந்தல் சேலை, நெற்றியில் வட்டவடிவப் பொட்டு இதெல்லாவற்றிற்கும் மேலாக, சம்பந்தமே இல்லாமல் முதுகில் ஒரு காலேஜ் பேக் போட்டுக்கொண்டு ஹாயாக  நடந்து வந்தவரை எல்லோரும் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவரோ இதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. நேராக அந்த பிளாட்பாரத்தில் கிடந்த பலகைகளை ஒன்றாக சேர்த்து அதன்மேல் தார்ப்பாயை விரித்து அதில் உட்கார்ந்தார். உள்ளே கிடந்த செருப்புகளையும் ஷூக்களையும் தன் முன் எடுத்து வைக்கிறார். 
காட்டம்மா

அறுந்த செருப்புகளை எடுத்துக்கொண்டு செல்பவர்களிடம், 
“செருப்பு ஒட்டுப்போட முப்பது, ஷுக்கு பாலிஷ் போட இருபது, புது செருப்ப சுத்தி ஓரம் வக்க நாப்பது” என்று தன் வேலையில் பிஸியாக இருப்பவரை அத்தனை எளிதில் பார்க்காமல் கடந்து போக முடியாது.  காட்டம்மா உட்கார்ந்திருக்கும் அதே இடத்தில்தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் கார் மோதி விபத்துக்குள்ளானார். நாம் அவரைப் பார்ப்பதை கவனித்ததும்
காட்டம்மா
“வா ராசா, செருப்பு தக்கனுமாயா. சுத்தி தச்சிறவா, அறுவது ரூவா ஆவும் சாமி” என்றவரிடம், நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு “நான் செருப்பு தைக்க வரலைங்கம்மா” என்று சொன்னவுடனேயே, அருகில் கிடந்த பலகையை எடுத்துப்போட்டு உட்காரச்சொன்னவர், “ஆயாவால இதான்யா முடியும் ஏதும் நெனச்சிக்காத” என்றபடியே மீண்டும் செருப்பை தைத்துக்கொண்டே, பேச ஆரம்பிக்கிறார். 
“எம்பேரு காட்டம்மா, இந்தா பக்கத்துல இருக்குல்ல பஜனகோயில் தெரு, அங்கதான் வாடக வீட்டுல குடியிருக்கேன். அஞ்சர வருசம் ஆவப்போவுதுய்யா, அவரு செத்துப்போயி. இந்தா இந்த எடத்துலதேன் உக்காந்து செருப்பு தச்சிக்கிட்டு இருந்தாரு. அவரு போயிட்டாரு, நான் இங்க வந்துட்டேன்” னு சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது. கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் நீரை சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தவரிடம் ஆறுதல் வார்த்தை சொல்லிவிட்டு அவரை திசை திருப்ப, 'உங்களைப் பற்றி சொல்லுங்களேன்' என்றோம். 
காட்டம்மா
“ராயபுரத்துல பொறந்து வளந்த பொண்ணு நான். என்னோட அப்பா, செருப்பு தக்கிறவரு. ஸ்கூல் முடிஞ்சதும் அப்பா கடைக்கு போவேன். அவரு பக்கத்துலயே துண்ட விரிச்சு போட்டு என்ன படுக்க வப்பாரு. நான் தூங்காம அப்பா செருப்பு தக்குறதையே பாத்துட்டு இருப்பேன். அன்னைக்கு நான் அப்பாக்கிட்ட கத்துக்கிட்ட தொழில்தான் என் புருசன் செத்துப்போனதுக்கு அப்பறம் எனக்கு வாழ்க்கைய கொடுத்துருக்கு. 
என் புருசனும் செருப்பு தைக்கிறவருதான் தம்பி. இத்தினூன்டு வயசுலருந்தே எம்பின்னால சுத்திசுத்தி வந்துச்சு. பதிமூனு வயசுல நான் பெரிய மனுஷியானதும் ஓல குச்சில உக்கார வச்சிருந்த என்னய ஏதேதோ சொல்லி மயக்கி இழுத்துன்னு ஓடிட்டாரு. வெவரமே தெரியாத வயசுல அவரு பேச்சக் கேட்டு நானும் கூடப்போயி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். திருவேற்காட்டுலதான் கல்யாணம். 
 கடையில்
வருசக்கா மூணு புள்ளைங்க. கடைசி புள்ளய ஆண்டவனே எடுத்துக்கிட்டான். பாவம் மூளக்காச்சல் வந்து செத்துபோயிடுச்சு. அப்போல இருந்து மத்த ரெண்டு புள்ளைங்களையும் கண்ணுக்குள்ள வெச்சி பாத்துக்கின்னாரு. என்னயும் அப்டித்தான். அதுங்க ரெண்டும் வளந்து கட்டிக்குடுக்குற வரைக்கும் அவருக்கு எம்மேல ஒரே லவுசுதான். நானும் அப்புடித்தேன் அவர பாத்தாலே வெக்கம் வந்துடும். 
'பொம்பளப்புள்ள வூட்டுலயே அடஞ்சிகெடக்காம, நாலு எடத்துல போயி எதனாச்சும் வேலய கத்துக்க புள்ள... அப்பதான் வாழ்க்கயில முன்னேற முடியும்' னு சொல்லுவாரு. அவருக்கொசம் ஏஜன்சி வேலக்கு போயிக்கின்னு இருந்தேன். வாங்குற சம்பளத்துல ஒரு ரூவா அவருட்ட கொடுத்ததே இல்ல. ஆனா, அவரு தெனக்கும் கெடக்குற காச கொண்டாந்து ஏங்கிட்டதேங்கொடுப்பாரு. 
நான் எப்பவாச்சும் கடைக்கு வந்தா இங்க உக்காரவே வுட மாட்டாரு. 'ஆம்பளைங்கள்லாம் இருக்குற எடம் புள்ள. நீயெல்லாம் இங்க வராத' ன்னு சொல்லி அம்பது நூற குடுத்து 'ஒனக்கு புடிச்சத எதுனாச்சும் வாங்கித் துன்னுக்கிட்டிரு. நான் வேலய முடிச்சிட்டு வந்துடுறேன். லேடீஸ்லாம் ரோட்டுல வந்து உக்காரக்கூடாது சரியா' ன்னு கொஞ்சிக்கின்னே அதட்டுவாரு. ஆனா, இப்போ தெனக்கும் நான் இங்கதான் உக்காந்துகின்னுருக்கேன்” என்கிறார் ஏக்கத்தோடு.
காட்டம்மாவின் காதல் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருக்கிறது. பதிமூன்று வயதில் ஆரம்பித்த இவர்கள் காதல் இப்போது வரையிலும் தொடர்கிறது. பெண்கள் ரோட்டில் வந்து உக்காரக்கூடாதென்று சொல்லிய துரைசாமி தன் ஆசை மனைவியை சுயமாகவும் பகுத்தறிவோடும் வாழப் பழக்கியிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இப்போதும் காட்டம்மா குங்குமப் பொட்டோடும் தலை நிறைய பூவோடும் தன்னை எப்போதும் அலங்காரமாய் வைத்திருக்கிறார். தன் மகனுக்கும் மகளுக்கும் திருமணமான பிறகும் கூட அவர்கள் நிழலை அண்டாமல் செருப்பு தைத்து பிழைக்கிறார். ஆனாலும், காட்டம்மா இப்போது வரை ஒரு ரூபாய் கூட தனக்காக சேர்த்து வைப்பதில்லையாம். 
கடையில்
“இன்னாத்துக்குயா காச சேத்து வக்கனும், நாலக்கு ஒழக்க முடியாதுன்னு வருத்தப்படுறவன் ஒண்டிதான் இன்னக்கே காச சேத்து வப்பான். நான் தெனமும் ஒழக்கிறவ. எம்புருசன் இருந்தவரைக்கும் நான் சேத்துவச்சதே கெடயாது. வூட்டு வாடகைலேந்து, புள்ளகுட்டியல வளக்கறது ஒண்டிக்கும் அவரே பாத்துகினாரு. எனக்கு தர்ற காச வச்சிக்கிட்டு ராணிமாதிரி சுத்திக்கிட்டு இருந்தேன். புள்ளங்கள கட்டிக்குடுத்த பெறகும் நாங்க ரெண்டு பேரும் லவ் பேர்ட்சுதான். எப்பவுமே சுதந்திரமா சுத்திக்கின்னு கெடப்போம். நாளக்கு அதுவேணுமே இதுவேணுமேன்னுலாம் யோசிச்சதே இல்ல.
இந்தா பாக்குற சனங்கள்லாம் புருசன் செத்துப்போயி இத்தன வருசம் ஆவுது. இன்னும் பொட்டு வச்சிக்கிட்டு மினுக்கிக்கிட்டு திரியுது பாருன்னு காது படவே பேசுறாங்க. ஊரு பேசுதேங்கிறதுக்காக என்னோட ஆசய நான் விட்டுக்கொடுக்க முடியுமாய்யா. என்னப்பொறுத்த வர எம் புருசன் இன்னும் எங்கூடவேதான் இருக்குறாரு. அதான் எப்போதும் நான் என்ன அலங்காரமா வெச்சிக்குறேன் ” என்ற வார்த்தைகளில் வைரமாய் மிளிர்கிறது உழைப்பும் தன்னம்பிக்கையும். 
காட்டம்மா குடும்பத்தினர்
பேசிக்கொண்டிருக்கும்போதே நாம் மெல்ல காட்டம்மாவிடம் அன்றைய சம்பவம் பற்றி கேட்டோம்,
“முப்பது வருசமா அவரு இங்க இருந்துதான் செருப்பு தச்சிக்கின்னு இருந்தாரு. கல்யாணம் முடிஞ்ச பெறவு என்னய இந்தப்பக்கமே வரக்கூடாதுன்னு சொன்னவரு, சாவப்போற அன்னக்கி காலைல வூட்லருந்து கௌம்பும்போது, சும்மா இருந்தா கடபக்கம் வந்துட்டு போபுள்ளன்னு சொன்னாரு. நானும் பூக்கடைக்கு போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன். 
நான் கடையாண்ட வரும்போது அவரசுத்தி ரொம்ப கூட்டமா இருந்துச்சு. ஒடம்பு முழுக்க ரத்தத்தோட அவரு உசுருக்கு துடிச்சிக்கின்னு கெடந்தாரு. பாத்த எனக்கு ஈரக்கொலயே அந்துப்போச்சு. அடிச்சுபுடிச்சு ஒரு வண்டியில ஏத்திக்கின்னு ஆஸ்பத்திரிக்கு போனோம். ஒருநாள் முழுக்க உசுருக்கு போராடிட்டு கெடந்தவரு மறுநாளே கண்ண மூடிட்டாரு. 
யாரோ சின்னபையம்போல, காரு ஓட்டி கத்துகினானாம். அப்பதான் பிரேக்க புடிக்கத்தெரியாம கார இவருமேல ஏத்திட்டான். காருவேகமா வரும்போதே பக்கத்துல இருந்த பூக்காரம்மா கத்துனாளாம். குனிஞ்சுகின்னே செருப்ப தச்சிக்கின்னு இருந்தவரு அதை கவனிக்கல. வண்டி ஓட்டி பழகுறவங்க சனங்க நடமாட்டம் இல்லாத ஏரியாவா பாத்து போயிருக்கலாம். அவரோட கெட்ட நேரம் அன்னக்கின்னு இருந்துருக்கு. அதுக்காக நான் நெதமும் வருத்தப்பட்டுக்கின்னே வூட்டுக்குள்ள அடஞ்சி கெடக்க முடியுமாய்யா. அப்புடி இருந்தேன்னா அவரே என்னய சபிச்சிடுவாரு. 
அவரு போனதுக்கப்பறம் நான் கஷ்டப்படாத நாளில்ல, போகாத எடமில்ல. ஒரு எடத்துலயும் வேல தரமாட்டேன்னுட்டாங்க. எல்லா முயற்சியும் எடுத்த பெறவுதான் இங்க வந்து உக்காந்துட்டேன். என்கிட்டதான் என்னோட அப்பனும் புருசனும் சொல்லிக்கொடுத்த தொழில் இருக்குல்லே. பின்ன இன்னாத்துக்கு நாம வேல கேட்டு ஒவ்வொரு எடத்துக்கா அலையனும்னு யோசிச்சுதான்அவரு உக்காந்து செருப்பு தைச்சிக்கிட்டு இருந்த எடத்துக்கே வந்துட்டேன்.   
kaattamma

இங்கதான் அவரு ஏம்பக்கத்துலயே இருக்குற மாதிரி உணருறேன். அதனால, என்னாலயும் தொழில நல்லபடியா பண்ணமுடியுது. கெடக்குறத வச்சு ஏம்புள்ளங்களுக்கும் கொடுத்துக்கிட்டு, நானும் சந்தோஷமா வாழுறேன்” தன்னம்பிக்கையோடு பேசியவரை வியப்போடு பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். காட்டம்மா மீண்டும் அறுந்த செருப்புகளைத் தைத்துக் கொண்டிருக்கிறார்.

 __________________________________________________

vikatan.com 
http://www.vikatan.com/news/tamilnadu/89494-the-heartfelt-story-of-kaatamma-who-stitches-footwear-at-road-side.html
  __________________________________________________


தெரிவு: செல்வன் 

No comments:

Post a Comment