Saturday, May 6, 2017

பல கோடி ஆண்டுகள் பழமையான ஃபாசில் இலைகள் ... சென்னைக்கு அருகே



-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்


படம் - 1

பல இலட்சம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களின் மிச்சங்களும் எச்சங்களும் அக்காலத்தே உருவான படிவப் பாறைகளில் பதிந்து கிடக்கின்றன. இவை ஆங்கிலத்தில் ஃபாசில்  (FOSSIL) எனப்படுகின்றன. தமிழில், ‘தொல்லுயிர் எச்சங்கள்’ எனலாம். எலும்புகள், பற்கள், கிளிஞ்சல்கள், சிப்பி ஓடுகள் போன்ற கடினமான பகுதிகள் மட்டுமின்றி இலைகள், தண்டுகள் போன்ற மென்மையான பகுதிகளும் ஃபாசில்களாகக் கிடைக்கின்றன (படம் - 1).

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல் அவை அடங்கியுள்ள பாறைகள் உருவான காலத்தை அறியவும்,  கனிமவளங்களை கண்டறியவும் ஃபாசில்கள் பெரிதும் உதவுகின்றன.

தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் பலவற்றில் ஃபாசில்களைத் தன்னகத்தேக் கொண்ட படிவப்பாறைகள் கிடைக்கின்றன. அரியலூர் பகுதியில் காணப்படும் கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்கே காரை-தரணி பகுதியில் உள்ள திறந்தவெளி களிமண் சுரங்கங்களில்  இலை ஃபாசில்களும் கண்டறியப்பட்டுள்ளன (படம் - 2&3).
படம் - 2
படம் - 3


சென்னைக்கு அருகே, தாம்பரத்திற்கு மேற்கே, சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான  மேல் கோண்டுவானா காலத்திய படிவப்பாறைகள் சற்றேறக்குறைய  நூறு சதுர கி.மீ. பரப்பளவில் காணப்படுகின்றன (படம் - 4).

படம் - 4

மணற்கல் பாறைகளும் , களிமண் பாறைகளும் இவற்றில் அடக்கம். இந்தப் பாறைகளில் அந்தக் காலத்தில் வாழ்ந்த சைகடோஃபைட்டா, ஃபிலிகேலஸ் வகைத் தாவரங்களின் இலைகள் ஃபாசில்களாகப்  பதிவாகியுள்ளன. இவற்றுள் சைகடோஃபைட்டா வகையைச் சேர்ந்த டீலோஃபிலம் தாவர இலைகளே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்து வரப்படும் களிமண், நீர்நிலைகளில் படியும் போது அந்த மண்ணோடு அடித்துக் கொண்டுவரப்படும்  இலைகளும் களிமண்ணோடு சேர்ந்து படிகின்றன. நாளடைவில் களிமண் இறுகி கெட்டிப்படும் போது  இலைகள் மக்கிப் போனாலும் அவை பதித்த சுவடுகள் அப்படியே இருக்கின்றன. இந்தச் சுவடுகள் பார்ப்பதற்குப் பூ போன்ற அமைப்பில் இருப்பதால், உள்ளூர் மக்கள், இலைஃபாசில் அடங்கிய கற்களை 'பூக்கல்' (படம் - 5 & 6) என்று அழகாக அழைக்கிறார்கள்.

படம் - 5


 படம் - 6

தாம்பரத்திற்கு மேற்கேயுள்ள மணிமங்கலம், சோமங்கலம், பிள்ளைப்பாக்கம், குண்டுபெரும்பேடு, அமரம்பேடு , வல்லம், வல்லக்கோட்டை, அழகூர், வட்டம்பாக்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்   பகுதிகளில் இலைஃபாசில்களும் தண்டுஃபாசில்களும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் வெண்மை மற்றும் மங்கலான வெண்மை நிறத்திலுள்ள களிமண் பாறைகளிலேயே உள்ளன.

இலைஃபாசில்கள் அதிக அளவில் கிடைக்கும் இந்தப் பகுதியில், அபூர்வமாகக் கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்களும் கிடைக்கின்றன.

சென்னைப் பெருநகர், வரலாற்று முக்கியம் வாய்ந்த ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களால் சூழப்பட்ட இந்த இடத்தின் சில பகுதிகளையாவது தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவித்துப்  பாதுகாக்க தமிழ்நாடு சுற்றுலா துறையும்,  இந்திய புவியியல் ஆய்வுத் துறையும் முன் வர வேண்டும். இல்லையெனில் இவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.




 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________ 


No comments:

Post a Comment