Friday, May 5, 2017

இணையத்தமிழ் வளர்ச்சி பற்றிய கேபிஎம்ஜி - கூகுள் ஆய்வறிக்கை

-- தேமொழி 
"இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு" என்பது  விகடன் தந்த செய்தி.

மேலோட்டமாகக் கொடுத்த இத்தலைப்பை  அப்படியே பொருள் கொண்டால் அது தவறான முடிவுக்குக் கொண்டு செல்லும்.  இந்நாட்களில்  இணைய  உலகில் ஆங்கிலத்தை விட, ஸ்பானிஷ்  மொழியை விடவா தமிழ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் படிப்பவர் குழப்பம் கொள்ளலாம்.  உலகளாவிய முறையில் ஐரோப்பிய காலனி ஆதிக்க முறையினால்  திணிக்கப்பட்ட மொழிகள் போலன்றி,  தங்கள் நாட்டின்  அதிக மக்கள் தொகையாலும், மொழி மறுசீரமைப்புக் கொள்கையாலும்  அதிக மக்கள் பேசும் பண்டைய மொழிகளில் ஒன்றான எங்கள்  சீன மொழியைவிடவா இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ்? என்று சீனர்கள் வெகுண்டும் எழலாம்.  இணையத்தை தங்களது  முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அவர்கள் கொண்டிருக்கும் பெருமையை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார்கள்.  

விகடன் கொடுத்த தகவல் கட்டுரையின் மூலமான கேபிஎம்ஜி மற்றும் கூகுள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை*  (வழங்கிய நண்பர் முனைவர் நா. கணேசன் அவர்களுக்கு நன்றி),  தமிழர்கள்  தொழில்நுட்பம்  வழங்கிய தாய்மொழி பயன்பாட்டு வாய்ப்பிற்கு வெகு விரைவில் தங்களை தகவமைத்துக் கொண்டதைக் காட்டுகிறது.  இந்த ஆய்வு பிற இந்திய மொழியினரின் தகவமைப்பு, தாய்மொழிவழி இணையப் பயன்பாடு கொள்ளல் ஆகியவற்றையும் தருவது தமிழர்களைப் பிற இந்திய மொழியினருடன் ஒப்பிட உதவுகிறது.  இந்த அறிக்கையில்,  இந்திய மொழிகளில் மக்கள்தொகை அடிப்படையில் அதிக அளவில் பேசப்படும் இந்தி, வங்காளம், தெலுங்கு, மராத்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மலையாளாம் ஆகிய  மொழியினர் மட்டுமே ஒப்பிடப்பட்டுள்ளனர். இந்திய மொழிகளில் தட்டச்சுவதற்கு 11 மொழிகளுக்கும், மொழிபெயர்ப்பிற்கு 22 இந்திய மொழிகளுக்கும் கூகுள் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியினர் 75 மில்லியன் எனவும் அவர்களில் 40 மில்லியன் தமிழர் ஆங்கிலத்தைவிடத் தமிழில் படிக்க, எழுத, உரையாட விரும்புகிறார்கள் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.  இது இருவரில் ஒரு தமிழர் தாய் மொழியை முதன்மை மொழியாகப் பயன் கொள்ள விரும்புகிறார் என்று காட்டுகிறது  (மராத்தி -72% ; கன்னடம் - 70%; குஜராத்தி - 57%; மலையாளம் -  55%; தமிழ் - 53%; வங்காளம்  52%; இந்தி -  49%; தெலுங்கு  - 44% ).  வணிகம், வங்கி பயன்பாடு, செய்தி, விளம்பரங்கள், அரசு சேவைகள், கேளிக்கை, தொலைத்தொடர்பு சமூக வலைத்தள பங்களிப்பு, பயனர் உருவாக்கும் பதிவுகள் ஆகியவற்றில் இந்த மொழியினர் எவ்வாறு  பங்கேற்கிறார்கள்  என்று தொகுத்தளிக்கிறது இந்த ஆய்வறிக்கை. 

புதிய கண்டுபிடிப்புகள் மக்களிடையே ஊடுருவிப் பரவுவதை விளக்கும் கோட்பாடு மிக முக்கியமான ஒன்று. அந்த  புதிய கண்டுபிடிப்பு, அதனை அடைய உதவும் வழிமுறை, காலம், ஏற்றுக் கொள்ளும்  சமூக மனப்பான்மை ஆகியன  ஒரு கண்டுபிடிப்பின் பரவலின்   வேகத்தை நிர்ணயிக்கின்றன. ("Diffusion of innovations" is a theory that seeks to explain how, why, and at what rate new ideas and technology spread. Rogers proposes that four main elements influence the spread of a new idea: the innovation itself, communication channels, time, and a social system. இதற்குக்  கூகுள் கொடுக்கும்  மொழிபெயர்ப்பு: "புதிய கண்டுபிடிப்புகளின் பரவல் ஒரு கோட்பாடாகும், அது எவ்வாறு, ஏன், புதிய விகிதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரவியுள்ளன என்பதை விளக்க முற்படுகிறது. நான்கு முக்கிய கூறுகள் ஒரு புதிய யோசனை பரவலை பாதிக்கும் என்று ரோஜர்ஸ் முன்மொழிகிறது: புதுமை தன்னை, தொடர்பு சேனல்கள், நேரம், மற்றும் ஒரு சமூக அமைப்பு".   கணினி செய்த இந்த  மொழி பெயர்ப்பு சிறப்பாக இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கடந்த ஆண்டுகளைவிடப் பொருளை புரிந்து கொள்ள உதவும் விதத்தில் நல்ல  முன்னேற்றம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்).
மூன்றில் இருவர் வட்டார மொழியில் கிடைக்கும் தகவல் நம்பிக்கைக்குரியது என்று கருதுகிறார்கள்.  பிற இந்திய மொழியினருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்கள் அதிக அளவில் இணையத்தில் தங்களது   தாய்மொழிப் பயன்பாட்டிற்கு தங்களை தகவமைத்துக் கொள்வதில் முதன்மையிடத்தில் (42%) இருக்கிறார்கள். இதனைப் பல பிரிவுகளில் விளக்குகிறது இந்த ஆய்வறிக்கை.
பெரும்பான்மையானவர்  ஆங்கிலத்தைவிட  தங்கள் தாய்மொழியில் வரும் விளம்பரங்களைப் படித்து வினையாற்றுகிறார்கள்.  இது இந்தி மொழியில் அரசு செய்திகளை, சேவைகளைக் குறித்து விளம்பரம் செய்யும் நடுவண் அரசு தனது  கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவல். இவ்வாறு தாய்மொழி விளம்பரங்களுக்குச் செயலாற்றுபவர்களில் தமிழர் முன்னணியில் (97%) இருக்கிறார்கள்.  பெரும்பாலும் அனைத்துத் தமிழரும் தமிழில் படிக்க விரும்புகிறார்கள் என்பதை இது  காட்டுவதால், ஆங்கிலத்தில்  தங்கள் கருத்துகளை முன்வைக்க விரும்புபவர் அதற்கு ஏற்ற மறுமொழி கிட்டாவிட்டால் வருந்திப் பயனில்லை (So, the lesson is: if you want to reach out, going native is the way to go, obviously).  இது போன்ற தகவல்களின் அடிப்படையில், அடுத்த நான்காண்டுகளில் தாய்மொழி வழி இணையவழிப் பயன்கொள்வதில் நால்வரில் மூவர் என்ற அளவில் தமிழர் தம்மை தகவமைத்துக் கொண்டு முன்னணியில் இருப்பர் (கன்னடரும் அவ்வாறே  - 74%; தமிழர் போலவே தகவமைப்பில் முன்னேறி முன்னணியில்  இருப்பர்) என்று இந்த ஆய்வறிக்கை கணிக்கிறது. 
பிற இந்திய மொழியினருடன் ஒப்பிடும் பொழுது,  இப்பொழுதும் அதிக அளவு தமிழர்  செய்திகளைத் தாய்மொழியில் படிப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள்,  அடுத்த நான்காண்டுகளுக்குப் பிறகும் தமிழரில் அதிக விழுக்காட்டினர் தாய்மொழியிலேயே செய்திகளைப் படிப்பதில் முன்னணியில் இருப்பர் எனக் கணிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக  இந்தியாவின் வட்டார மொழிகளில் செய்தி பெறுவது ஆங்கிலத்தில் பயன் பெறுபவர் அளவையும்  மிஞ்சிவிடப் போகிறது.  இது மிகவும் நல்லதொரு செய்தி.  நிறைய வாசகர்கள் என்பது நிறைய எழுத்தாளர்கள், நிறையத் தமிழ் இணையத் தளங்கள், அதிக தமிழ்ப் பதிவுகள், உரையாடல்கள் என்று விரிவடையும் நிலையை எட்டும். வரும் ஆண்டுகளில் 24 மில்லியன் இணையவழி தமிழ்ப் பயனர் இருப்பார் என எதிர்பார்த்தால் அதன் தேவைக்கேற்ப பல இணையத் தமிழ் பதிவுகள் நூல்களாகவோ, கட்டுரைகளாகவோ, பல வித வாசகர்களின் தேவைக்கேற்ப அதிகரிக்கவும் செய்யும், இணையவழி கலந்துரையாடல்களும் அதிகரிக்கும். அனைத்து மொழியினருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்  அரசியலில் அதிக ஆர்வம் காட்டி முன்னணியில் இருக்கிறார்கள். இந்தி மொழியினருக்கு வட்டாரச் செய்திகளிலும், வங்காளிகளுக்கு விளையாட்டுச் செய்திகளிலும், குஜராத்திகளுக்குத் திரைப்படம் கேளிக்கை செய்திகளிலும் அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. இன்றைய பயன்பாட்டின்படி  வட்டாரச் செய்திகள் (63%), அரசியல் (61%), விளையாட்டுச் செய்திகள்(45%)  என்ற வரிசையில்  தமிழர்களின் விரும்பி வாசிக்கும் செய்திகள் இருக்கின்றன. கேளிக்கை திரைப்படம் ஆகிய செய்திகளில் 44% தமிழர் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்.   

இந்த அறிக்கை கொடுக்கும் தகவலைப்  பயன்படுத்தி அதற்கேற்ப அரசுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், கல்வியாளர்கள் என யாவரும் தங்கள் சேவைகளை மக்களிடம் கொண்டு செல்லத் திட்டமிட வேண்டும்.  பல அலைபேசி செயலிகளையும் உருவாக்க வேண்டும்.

---
* Indian Languages –Defining India's Internet - KPMG
https://assets.kpmg.com/content/dam/kpmg/in/pdf/2017/04/Indian-languages-Defining-Indias-Internet.pdf

______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________

No comments:

Post a Comment