- ருத்ரா இ பரமசிவன்
உன் வாழ்க்கையின்
ஒரு ஃபோட்டோ நெகடிவ்
உன் மன ஆழத்தில்.
அதை நீ எல்லோருக்கும்
ப்ரிண்ட் போட்டு காட்டமுடியாது.
உன் முகம் ரோஜாதான்
உன் வானம் பளிங்கு நீலம் தான்
ஆனாலும் உன்
சட்டைகளையெல்லாம்
உரித்துப்போட்டு விட்டு காட்சி கொடுக்க முடியாது.
சித்தர்கள் சமணத்துறவிகள்
அழகாய் நம் மீது பின்னல் வேலை போடும்
அந்த ஐம்பொறிகளைக்கூட
களைந்து வீசி விட்டவர்கள்.
அவர்கள் எதையோ தேடுகிறார்கள்!
அதற்காக
அம்மண சாமியார்களாய்
அலைந்து திரிந்து
கல்லடி பட்டார்கள்.
நாம் நாகரிகத்தின்
நுனிக்கொம்பர் ஏறியபின் கண்டோம்
நம் அசிங்கமான நிர்வாணத்தை.
ஆணும் ஆணும் அல்லது
பெண்ணும் பெண்ணும்
சேர்ந்தால் என்ன என்று?
நம் புராணங்களின் இடுக்கு சந்துகளில்
இது இருந்தாலும்
இது மீண்டும் நம்மை மரமேறிகளாக
மனிதனை மனிதன் பச்சையாக
பிய்த்துத் தின்றுவிடும் நிகழ்வுகளை
அரங்கேற்றிவிடுமோ என்ற அச்சமே
நம்மைத்தடுக்கும் சுவர் ஆக இருக்கிறது.
பொருள்களின் அதிகப்படியான இன்பம்
அலுப்பு தட்டி விடுகிறது.
"லா ஆஃப் டிமினிஷிங் யுடிலிடி" என்று
ஆல்ஃப்ரட் மார்ஷல் கூறுகிறார்.
இதை உள்ளுணர்ந்து பொருளாதார முதலாளிகள்
விளம்பரத்தின் மூலம்
அதே பொருளை பல்வேறு முகமூடிகளில்
நுழைத்து
நுகர்வோர்களுக்குள் ஒரு
"ஆர்டிஃபிசியல் இமேஜினரி செண்டிமென்டல் அட்டாச்மெண்டை"
அதாவது "கற்பனையான செயற்கை ஈர்ப்பின் ஒட்டுதலை"
தங்கள் பொருள்கள் மீது பாய்ச்சுகிறார்கள்.
டிவிகளில்
இதற்குத்தான் அந்த "வண்ண ஒளி"க்கசாப்புகள்
நடத்தப்படுகின்றன.
ஆனால் இரண்டு (ஆண் பெண்)மனங்கள் இடையே
அத்தகைய செயற்கை பூச்சுகள் இயலாது.
அதற்காக பாரம்பரியம் அது இது என்ற
போலி பாவ்லாக்களை
மிக மிக உச்சிக்குப்போன நாகரிகம் ஏற்றுக்கொள்வதில்லை.
அதனால் தான் ஆண் ஆண் அல்லது பெண் பெண்
சேர்ந்து கொண்டு வாழும் ஒரு
படிமத்துள் படிந்து கொள்ள நினைக்கிறார்கள்.
அதே "அலுப்பு" என்னும் உலுக்கு விசையின்
ஒரு பூகம்பம் வரும் வரைக்கும்
அதுவே "அல்ட்ரா" நினைப்புகள் ஆகும்.
புணர்வுகளில்
முதலில் நிகழ்வது
மனங்களின் புணர்வுகள்.
அது இருவர் இடைப்பட்டது மட்டும் அன்று.
உலக மனிதங்களின்
எலலா இதயங்களும்
ஒரே தகட்டில் லேமினேட் செய்யப்படுவது.
அந்த சாந்தி முகூர்த்தை தேடித்தான்
இந்த அம்மண சாமியார்களும் ஓடுகிறார்கள்.
தங்கள் ஆழ்நிலை சிந்தனையின் அடுக்குகளை
பாடல்களின்
மேளங்கள் தட்டிக்கொண்டு
செல்கிறார்கள்.
அந்த திசைகள் கழன்ற வெளியில்
அதற்கு அடையாளமாய்
ஏதோ ஒன்றை
"நட்ட கல்லாக்கி நாலு புஷ்பம் சாத்தி
சுற்றி வந்து மொணத்து மொணத்து"
மந்திரங்கள்
தந்திரங்கள்
எந்திரங்கள்
என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்.
பரிணாம விசை ஒன்று தான்
பஞ்ச பூதங்களையெல்லாம்
பூச்சாண்டி காட்டி
மிரட்டிக்கொண்டிருப்பது.
மனித வளர்ச்சி
அறிவுகளின் "புணர்வுகளில்"மட்டுமே
நிலைத்து நிற்பது.
உணர்ச்சித்தீக்களின் புணர்வுகளில்
மிஞ்சும் சாம்பல்களிலிருந்து
ஃபீனிக்ஸ்களும் சிறகு முளைத்து
வெளி வரலாம்.
ஆயினும்
உலக மானிடம்
எனும் மௌன உந்து விசையே
பரிணாமத்தின் மைல் கற்களை நட்டு
முன் முன் செல்கிறது.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்."
______________________________________________________
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________