Tuesday, October 25, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 2

- இராம.கி.

இரண்டாம் பாட்டு:
அடுத்தது இம்மென்கீரனாரின் அகநானூறு 398 ஆம் பாட்டு. இதன் 7ஆவது வரியில் வரும் ”இம்”மெனுங் குறிப்பே (humming sound) கீரனாருக்கு முன்னொட்டுப் பெயரானது. பெரும்பாலும் பொ.உ. மு. 100 - 0 இல் பாட்டு எழுந்திருக்கலாம். இமையம் ஆரியர்க்குச் சொந்தமென இப்பாட்டு தெளிவாய்ச்சொல்கிறது. இருவேறு இனத்தார் கலந்துவந்த இக்காலத்திலேயே இவ்வுணர்வு எழுந்தது. இதற்கு முந்தைய காலங்களில் பனிபடு வரையைத் தமிழர்க்குஞ்சேர்த்து உரிமைகொண்டாடுவர். இமையவுரிமை சிறிதுசிறிதாக மாற்றியுணரப்பட்டது. பாடல் குறிஞ்சித்திணை. மலையிலிருந்து ஆறு கீழிறங்கி ஓட, தலைவி ஆற்றுக்குச் சொன்னதாய்ப் பாட்டமைகிறது. எந்த ஆறென்று தெரியாது. ”நும்மோன், நின் குன்றுகெழுநாடன்” என்ற பதங்களால் தலைவன் குறிஞ்சிநாட்டானென்பது விளங்குகிறது.  . .

இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
படர்மலி வருத்தமொடு பலபுலந் தசைஇ
மென்தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல்பசந்து
இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக் கிம்மென்று
அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழநின்
குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ
கரைபொரு நீத்தம் உரையெனக் கழறி
நின்னொடு புலத்த லஞ்சி அவர்மலைப்
பன்மலர் போர்த்து நாணுமிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி
நயனறத் துறத்தல் வல்லி யோரே
நொதும லாளர் அதுகண் ணோடாது
அழற்சினை வேங்கை நிழல்தவிர்ந் தசைஇ
மாரி புரந்தர நந்தி ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல்பூங் கானத் தல்கி யின்றிவண்
சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ
குயவரி இரும்போத்துப் பொருதபுண் கூர்ந்து
உயங்குபிடி தழீஇய மதனழி யானை
வாங்கமைக் கழையின் நரலும் அவர்
ஓங்குமலை நாட்டின் வரூஉ வோயே.


என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

”குயவரி இரும்போத்துப் பொருத புண்கூர்ந்து
உயங்குபிடி தழீஇய மதனழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும்
அவர் ஓங்குமலை நாட்டின் வரூஉவோயே.

கரை பொரு நீத்தம்!

இவண்
எவ்வம் கூரப் படர்மலி வருத்தமொடு
பலபுலந்து அசைஇ,
மென்தோள் நெகிழ,
இழை நிலைநெகிழ்ந்த,
கொன்றை ஊழுறு சாஅய் மலரின் பாழ்பட முற்றிய,
பசலைமேனி நோக்கி நுதல்பசந்து இன்னேம் ஆகிய
எம் அருளான் நும்மோன் செய்த கொடுமைக்கு
இம்மென்று அலமரல்?
நன்று!
மழைக்கண் தெண்பனி மல்க புறமாறி அகறல்!
யாழ!
நின் குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ?
உரை!”
எனக் கழறி

நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைப்
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நின் செலுத்தித் தந்து
நயன் அறத் துறத்தல் வல்லியோரே
நொதுமலாளர் அது கண்ணோடாது

அழற் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புரந்தர நந்தி ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல் பூங்கானத்து அல்கி இன்றிவண்
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். நீள்வது நீ(ள்)த்தம். ஆற்றைக்குறிக்கும் இச்சொல்லை இன்று நீரோட்டமென்பார். குயம் = அரிவாள். குயவரி = அரிவாள் போன்று வளைந்த வரி. இரும்போத்து = பெரிய ஆண்புலி (இருங்கடல் = பெருங்கடல்). பொருதல் = சண்டையிடல். [பொருதிற்கு sport எனும் பொருளுமுண்டு. போர்செய்யாக் காலங்களில் போர்ச்செயலுக்குப் பகரி(substitute)யாகவே sport எழுந்தது. மற்போர், வாட்போர் என ஒவ்வொன்றிலும் இருவர் பொருதுவார். பொருதல் வினையே போரெனும் பெயர்ச்சொல்லை உருவாக்கியது. sport வல்லடி/violence இல்லாத பொருதல். sport-ற்கு இணையான ”பொருதும்” தமிழில் பெயர்ச்சொல் தான். http://valavu.blogspot.in/2008/06/blog-post.html.].

கூர்தல்/கூரல் = சேரல்; உயங்குதல் = வருந்தல்; மதனழிதல் = உன்மத்தம்/வெறி அடங்கல்; வாங்கு = வளைவு. நரல் = ஓசை. [நரல்பவன் நரன் =.மாந்தன் இதுவும் தமிழ்ச்சொல்தான். சங்கதமல்ல. நரல்ந்து ஏகும் ஆறு நருமதை.] ”வாங்கமைக் கழையில் நரல்” என்ற சொற்றொடரைப் புரிய மூங்கிற்காடுகளுக்குள் போகவேண்டும். புரை(உட்துளை)யோடுள்ள இயற்கழை நெட்டங்குத்தலாய் இருக்கும். இதிற் பிளவுறாவிடில் காற்றுப்புக வழியில்லை. வளைந்தமூங்கிலில் ஓரிரு இடங்கள் பிளந்தாலோ, அன்றிக் கழையின் சுற்றுப்பரப்பில் துளை ஏற்பட்டோலோ, ஒருபக்கம் காற்றுநுழைந்து இன்னொரு பக்கம் மூங்கில் தடைகளின் நடுவே இழுமெனும் ஓசை வெளிப்படும். இயற்கையில் இவ்வாறு நடப்பதைப் பார்த்தே செயற்கையாய்ப் புல்லாங் குழலிற் செய்கிறோம். ”ஆண்புலியின் அடியாற் புண்பட்ட பெண்யானை வலிதாளாது முனகிக்கிடக்க, உடன்வந்த   ஆண்யானை தன்வலியால் புலியைத் துரத்திவிட, ஆண்யானையின் உன்மத்தம் (இன்னதென்று சொல்லமுடியா ஆங்காரம்) பொருதினூடே அழிந்து போக, பிடியைத்தழுவி ஊமென ஆண்யானை ஓலமிடுகிறது. பெண்ணின் துன்பத்திற்கு இரங்கும் ஆண்கள் உள்ளதாம் குறிஞ்சிநாடு. அப்படியானால் எனக்கு என்ன நடக்கிறது?” - என்கிறாள் தலைவி.

எவ்வம் = துன்பம்; படர்மலி வருத்தம்= உடம்பிற் படர்ந்து விரவும் வருத்தம்; பல புலந்து அசைஇ = பலவற்றை வேண்டாமென வெறுத்து இயங்கி; மென்தோள் நெகிழ =  (தலைவனையே நினைந்து சரியாயுண்ணாது) மென்தோள் மெலிய, இழை = கையிற் கட்டுங் காப்பு; நிலைநெகிழ்தல் - பொதுவாக மணிக்கட்டிற்கு மேலிருக்கும் காப்பு, கைமெலிகையில், மணிக்கட்டில் நில்லாது (நிலையென்ற சொல் புரிகிறதா?) நெகிழ்ந்துகொள்ளும். கொன்றை ஊழுறு சாஅய் மலரின் = கொன்றையின் முதிர்வுற்ற, மெலிந்த மலரைப்போல்; பாழ்பட முற்றிய பசலை மேனி = உடம்பின் கொழுமை (health) பாழ்பட, முற்றிப்போன பசலை நிறங்கொண்ட மேனி. தலைவனைக் காணாது நின்றவள் பசலைமேனி கொண்டாள். நுதல் = நெற்றி

[நம்மிற் பலரும் பசலை நிறத்தைத் தவறாகவே பொருள்கொள்கிறோம். ஏதோ பசியநிறமென்று நினைப்போரும் மிகுதி. உரையாசிரியர் தாக்கம் அவ்வளவு இருக்கிறது. ஆங்கிலத்தில் pale என்கிறோமே, அது தான் பயலை>பசலை ஆகும். இரு மொழிச்சொற்களும் தொடர்பானவை தாம். Paleness is an unusual lightness of skin color when compared with normal hue. It is caused by reduced blood
flow or a decreased number of red blood cells. ஆணோ, பெண்ணோ ஒழுங்காய்ச் சாப்பிடாமல், ஒன்றைப்பற்றி ஓயாது நினைத்து ஏங்குகையில், சத்துக்குறைவாலோ, மனக்கலக்கத்தாலோ அவரின்
அரத்தவோட்டம் குறையலாம். அப்பொழுது அவருடைய மெய் வெளிறும்; பசலும். குறுகிய நேரமோ, நீண்ட நேரமோ இது நிலைகொள்ளலாம். anemic என்பதும் வெளிறலோடு தொடர்புடையது.]

யாழ = அசைச்சொல், இங்கே கூட்டுக்காரியே, நட்புக்காரியே என்று பொருள்கொள்ளலாம். யாழுதல் = கூட்டுச் சேருதல் என்ற பொருளுமுண்டு.

புலத்தல் = பிணங்குதல்; மிக ஒடுங்கி - பாட்டில்வரும் ஆறு இன்னும் சமவெளிக்குப் போகவில்லை. அதனாலும் இவ்விடத்தை முல்லைநிலம் என்கிறோம். தலைக்காவிரியை அடுத்து ஓரிரு கி.மீட்டர்கள் தள்ளிவந்தால் பாகமண்டல என்னும் ஊர்வரும். அழகான ஊர். அங்கே ஒரு பகவதி கோயிலுமுண்டு. இக்கோயிலுக்கருகில் காவிரி ஆறு மிக ஒடுங்கி நகரும். இதை ஆடுதாண்டுங் காவிரி என்பர். இதுபோன்ற இடங்கள் முல்லையிற்றான் பெரிதுமுண்டு. மிகவொடுங்கி என்பது இடக்குறிப்பு.

நயனென்ற சொல்தான் முந்தையச்சொல். நேர்மை, சரி, ஞாயமென்ற பொருள்கொண்ட அடிச்சொல். நயம்>நாயம், ஞாயம். இது ந்யாயமென்றும் வடமொழித் திரிவுகாணும். மீண்டுமதைக் கடன்வாங்கி நியாயமென்போம். நயத்தின் திரிபான நயதியே இன்று நீதியென வழங்குகிறது. நயமன்றம் = நீதிமன்றம். நயவர் = justice. judge. நொதுமல் = neutral. அழகான இச்சொல்லை விட்டு நடுநிலை என்று சுற்றிவளைத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஏராளமான நல்லசொற்களைப் புழங்காது தமிங்கிலம் தாவிக்கொண்டிருக்கிறோம். கண் நோடுதல் = பார்வையைச் செலுத்துதல்
 
அழற்சினை = நெருப்புப்போலும் கொழுந்துத்தளிர்; இங்கே வேங்கைமரங்கள் ஆற்றின் கரையிலூள்ளன. ஆறு ஆங்காங்கு விலகிவளைகிறது. அது வேங்கைநிழலைத் தவிர்ப்பதாய்த் தலைவி கற்பனை செய்கிறாள். மாரி புரந்தர நந்தி = மழை புரந்துதரும் வெள்ளம் பெருகி; நுந்துதல்>நந்துதல் = தூண்டுதல், பெருகுதல்; இங்கே அருகிலுள்ள ஆறா, அன்றி இமைய ஆறுகளா என்பது பொருள்கொள்ளும் முறைசார்ந்தது. இரண்டுமே சரி. ஆரியர் பொன்படு நெடுவரை = ஆரியருடைய பொன்போலும் பனிவிழும் நெடிய மலைத்தொடர். இங்கே இமைய மலையின் அடிவாரக் காடுகள் உருவகஞ் செய்யப் படுகின்றன. அவை ஆரியருக்குச் சொந்தமென்பதும் வெளிப்படுகிறது. நெடுவரையின்மூலம் தந்தையின் பூங்கானத்திற்கு உயர்ச்சி நவில்கிறாள். காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு தானே? இமையத்தை இவள் அருகுசென்று பார்த்தவளில்லை. சொற்பேச்சு, படிப்பு போன்றவற்றால்வருங் கற்பிதம் இங்கு வெளிப்படுகிறது. முல்லைநிலப் பெண்ணென இதனாலுஞ் சொல்கிறோம்.
    
பாட்டின் மொத்தப்பொருள்:
”அரிவாள் வரியுடைய ஆண்புலியோடு பொருதிப் புண்பட்டுத் துன்புறும் பெண்யானையைத் தழுவி, அதேபொருதில் உன்மத்தமழிந்த ஆண்யானை வளைந்த கழைவழி எழும் நரலைப் போல், ஊமென்றழுது ஓசையிடும் மலைநாட்டின் ஊடுவரும் ஆறே! கரைபொருந்தும் நீட்டமே!

இங்கே, துன்பஞ்சேர, மெய்யெங்கணும் படர்ந்துவிரவும் வருத்தமொடு, பலவும் வேண்டாமென வெறுத்தியங்கி, மென்தோள் மெலிய, கையணிக்காப்பு நெகிழ, கொன்றையின் முதிர்வுற்ற, மெலிந்த மலர் போல் உடம்பின் கொழுமை பாழ்பட, முற்றிய பசலை நிறங்கொண்ட மேனியும் நெற்றியும் கொண்டு இப்படியாகிய எமக்கு அருளாது நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று வருந்துகிறாயோ? (ஓயாது கசியும்) கண்ணீர் மல்க, புறம் மாறி அகலாதே! என் நட்புக்காரியே! உன் குன்றுநிறை நாடனுக்கு இது என்னவென்று படும்? சொல்! உன்னோடு பிணங்குவேனென்று அவர்மலையிற் கிடைக்கும் பல்வேறு மலர்களைப் போர்த்துக்கொண்டு, நாணுற்று, மிகவொடுங்கிக் கழியும் நின்னைச்செலுத்தித் தந்தவர், நயந்துறந்த வல்லமையாளர் தான். நடுநிலையாளர் அப்படிப் பார்வை செலுத்தமாட்டார். மழை புரந்துதரப் பெருகிவரும் நீருடைய ஆரியரின் பொன்படு நெடுவரை போல் அமைந்த எந்தையின் பல்பூங்கானத்தில், நெருப்புப்போன்ற கொழுந்துடைய வேங்கைநிழலைத் தவிர்த்தபடி அசைந்து, இன்று இங்குத் தேங்கி, நீ தங்கிச் சென்றால், கெடுவது ஏதுமுண்டோ?”

என்று கழறினாள் தலைவி.

இந்தப்பாட்டில் வெளிப்படுவது ஆரியர் பற்றி பொதுமக்கள் கொண்ட நொதுமற் கருத்து. ”பொன்படு நெடுவரை” என்பது ஒரு பெரிய சித்திரம். ஏதாவது பெரியதைச் சொல்லவேண்டுமானால் இதைச் சொல்லிவிடலாம்.


[தொடரும்]
__________________________________________________________________இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________

No comments:

Post a Comment