Saturday, October 15, 2016

மண்ணின் கீழ் அடியில் சென்ற கீழடி


-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.


மதுரையிலிருந்து  சுமார்  ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள கீழடியில், நடுவண் அரசின் கீழ் இயங்கும் ‘இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை’ கடந்த இரண்டாண்டுகளாக ( 2014-15, 2015-16)  மேற்கொண்ட அகழ்வாய்வின் போது வெளிப்பட்ட “பண்டைய நகரம்”, வெள்ளத்தால் மண்ணுக்கு அடியில்  புதையுண்டது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அந்த வெள்ளம் எங்கிருந்து வந்தது என்பதுதான் வினா? இன்றைய வைகை ஆற்றிலிருந்து கீழடி, சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளதே , இவ்வளவு தூரம் ஆற்று வெள்ளம் சென்று தாக்க இயலுமா என்றெல்லாம்  நம் அன்பர்கள் சிலருக்கு ஐயம் எழுந்துள்ளது. இந்த ஐயம் நியாயமானதே. இந்த ஐயத்தைத் தீர்ப்பதும் மிக எளிதானதே.

தடம் மாறும் ஆறுகள்:
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை ஆகிய அனைத்து ஆறுகளும் தங்கள் தடங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்திருக்கின்றன.  இது ஓர் புவியியல் உண்மை. உலகம் முழுக்க இந்த வரலாறு  உண்டு. சற்று அனுபவம் உள்ள கண் கொண்டு நோக்கினால், நமது செய்கோள் பதிமங்களிலேயே இவற்றைக் கண்டறிய இயலும். சில ஆறுகள் தடம் மாறியதற்கு இலக்கிய சான்றுகளும் காட்ட இயலும். அவற்றில் ஒன்று எங்கள் கடலூர் அருகே கடலில் கலக்கும் தென்பெண்ணையாறு.

கீழடிக்கும் வைகை ஆற்றிற்கும் போகும் முன், நான் கூற வரும் ஆறுகள் தடம் மாறும் நிகழ்வை எளிதில் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, கொஞ்சம் தென்பெண்ணை ஆற்றிற்குப் போவோம். ஓரிரு சிவதலங்களையும் காண்போம்.

முதலில், திருவெண்ணெய்நல்லூர் செல்லலாம். ஆமாம், ஆமாம் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை “பித்தா” என்று அழைத்துப் பாடிய திருத்தலம். முதலில் அந்தப் பாடலைப் பார்ப்போம்:

பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே

இந்த இனிய பாடலைப் படிக்கும் போதும், பாடும் போதும், நம் முன் சிவன் தோன்றுகிறாரோ இல்லையோ, திருவருட்செல்வர் சிவாஜி தோன்றி விடுவார். டி . எம் . எஸ். குரல் , மகாதேவன் இசை, சிவாஜியின் அருமையான முகபாவங்கள், இதை எழுதும்போது கூட எழுதுவதை நிறுத்திவிட்டு அந்தப் பாடலைப் பார்த்து விட்டுத்தான் எழுதுகிறேன். அருமை.

சரி, பாடலுக்குப் போவோம். இதில் நாம் கவனிக்க வேண்டியது பாடலின் மூன்றாவது வரி

“வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறை”

பொருள் : பெண்ணை ஆற்றின் தென்புறம் உள்ள திருவெண்ணெய் நல்லூர் எனும் துறை.

கீழேயுள்ள படத்தைப் பாருங்கள் ...



இன்றைய தென்பெண்ணை ஆறு, திருவெண்ணைநல்லூருலிருந்து சுமார் ஐந்தரை கி.மீ. தொலைவில் உள்ளது. சுந்தரர் பொய் சொல்லவில்லை. திருவெண்ணைநல்லூருக்கு உடனடி வடக்கில் ஒரு ஆறு இருக்கிறது. அதற்குப் பெயர் ‘மலட்டாறு’. தண்ணீரே இருக்காது ஆதலின் அந்தப் பெயர். எனினும் தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு  நிகழுங்காலை, மலட்டாற்றில் சிறிது நீர் வரும்.

ஆக, சுந்தரர் காலத்தில் திருவெண்ணைநல்லூருக்கு உடனடி வடக்கில் ஓடிய தென்பெண்ணை, தன் பாதையை மாற்றிக்கொண்டு, இன்று ஐந்தரை கி.மீ. தொலைவில் வடக்கில் ஓடுகிறது. அன்றைய தென்பெண்ணை இன்று மலட்டாறு எனும் பெயரில் நீரின்றி கிடக்கின்றது. பெண்ணையாறு, இடைப்பட்ட காலத்தில் தன் தடத்தை மாற்றிக்கொண்டுவிட்டது. இதற்கு சுந்தரரே சாட்சி.

அடுத்து, திருத்துறையூர் செல்வோம் வாருங்கள்.

விழுப்புரத்திற்கும் பண்ருட்டிக்கும் இடையில் உள்ள தொடர்வண்டி நிலையம் திருத்துறையூர். இறைவன் பாசுபதேஸ்வரர். இறைவி: பூங்கோதை நாயகி.

திருமணம் தவிர்த்த புத்தூரில் (இன்றைக்கு மணப்புத்தூர் என வழங்கப் படுகிறது) சுந்தரரின் மணத்தைத் தவிர்த்த இறைவன், அவரை அழைத்துக்கொண்டு   திருத்துறையூர் வரும் வழியில் கீழப்பாக்கம் எனும் இடத்தில் அவரை ஆட்கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. பெண்ணையின் தென்பால் உள்ள வெண்ணை நல்லூரிலிருந்து, வடபால் உள்ள திருத்துறையூருக்கு  ஆற்று வெள்ளம் காரணமாக செல்ல முடியாமல் சுந்தரர் தவித்தபோது, இறைவனும் இறைவியும் முதியோர் வடிவில் வந்து ஓடத்தில் ஏற்றிச் சென்றதாகவும் கதைகள் உள்ளன. இவைமூலம் நாம் அறிவது வெண்ணை நல்லூருக்கும் , திருத்துறையூருக்கும் இடையே  அந்நாளில் பெண்ணை ஓடி இருக்கிறது.

திருத்துறையூருக்கு தெற்கே  பெண்ணை ஓடியது என்பதற்கான இலக்கிய சான்றுகள் தேடி மீண்டும் சுந்தரரிடமே செல்வோம். கீழேயுள்ள தேவாரப் பாடல்கள் ஒன்பதிலும் , இரண்டாவது வரியைக் கவனியுங்கள். பெண்ணை வடபால் திருத்துறையூர்  இருந்திருப்பது தெளிவாகிறது. ஆனால் , இன்றைய பெண்ணையாறு திருத்துறையூருக்கு மூன்று கி.மீ. வடக்கே உள்ளது. திருத்துறையூருக்கு தெற்கே  மலட்டாற்றின் தடம்தான் உள்ளது.

மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்   
கலையார் அல்குற்கன் னியர் ஆடும்துறையூர்த்   
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.1

மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்      
பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர்   
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.2

கந்தங் கமழ்கா ரகில்சந் தனம் உந்திச்   
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்      
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.3
              
அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்       
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்    
கரும்பார் மொழிக்கன் னியர்ஆடுந் துறையூர்     
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.4

பாடார்ந் தனமாவும் பலாக்க ளும்சாடி    
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்     
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்  
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.5
              
மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி    
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்   
கொட்டாட் டொடுபாட் டொலிஓவாத் துறையூர்ச்  
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.6

மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரைஉந்தித்      
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்      
போதார்ந்தன பொய்கைகள் சூழுந் துறையூர்      
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.7
              
கொய்யா மலர்க்கோங் கொடுவேங் கையுஞ்சாடிச் 
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்    
மையார் தடங்கண் ணியர்ஆடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.8
              
விண்ணார்ந்தன மேகங்கள் நின்றுபொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்     
பண்ணார் மொழிப் பாவையர் ஆடும்துறையூர்    
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.               7.13.9

கீழே உள்ள படத்தை மீண்டும் பாருங்கள் ...


ஆக,பெண்ணையாறு தன் பாதையைக் கடந்த 1200 ஆண்டுகளில் மாற்றிக் கொண்டுள்ளது எனத் தெளிவாகிறது. பழைய பெண்ணையாற்றிற்கும் புது பெண்ணையாற்றிற்கும் இடையே ஐந்து கி.மீ. க்கும் அதிகமான இடைவெளி உள்ளதும் தெரிய வருகிறது.

தேவாரம் காட்டும் உண்மைகள் கூகிள் பதிமத்திலும் நன்கு தெரிவதால், நான் பெண்ணையை விளக்கினேன். இது போன்ற இலக்கிய சான்றுகள் பல இருக்கலாம். படித்தறிய வேண்டும்.

 
அடுத்த கேள்வி, தொல் வைகை ஆற்றால் அழிந்ததா கீழடி?

கீழூர் அருகே பள்ளிசந்தை திடலில், அண்மையில் அகழ்ந்தறியப்பட்ட பண்டை நகரத்தை எப்படி மண் மூடியது எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.  வைகை ஆற்றின் கரையில் இருப்பதால் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இந்நகரம் அப்படியே அழிந்திருக்கலாம்   என்பது எளிதான  விடை. வைகை ஆற்றிலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளதே இவ்வளவு தூரம் வெள்ளம் வருமா என்பதும் சிலரின் ஐயம்.

இது குறித்து தொல்லியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.  தொல்லியலாய்வாளர் சாந்தலிங்கம்:

“தொல்லியல் ஆய்வாளர் என்ற முறையில் என்னால் ஒன்றை யூகிக்க முடிகிறது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, கிபி 1650 முதல் 1700 வரையிலான காலகட்டத்தில் மதுரையை ஆண்ட அரிகேசரி என்ற மன்னன், இன்றைய குருவிக்காரன் சாலை அருகே வைகை ஆற்றில் அணை கட்டி, தண்ணீரைக் கால்வாய் வெட்டி பாசனத்திற்குக் கொண்டு சென்றுள்ளான். அந்தக் கால்வாய் கொந்தகை, கீழடி, திருச்சுழி வழியாக வீரசோழன் வரையில் இருந்திருக்கிறது. வைகையில் ஏற்பட்ட பெருவெள்ளம் இந்தக் கால்வாய் வழியாகப் பாய்ந்து கீழடியை மூழ்கடித்திருக்கும் என்று கருதுகிறோம். ஆய்வு தொடர்ந்தால் தான் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்.”

இதன் அடிப்படையில் கூகிள் பதிமத்தையும் , இஸ்ரோவின் புவன் பதிமத்தையும் ஆய்ந்த போது வைகையிலிருந்து ஒரு சிறு கிளை பிரிந்து கீழடி – வீர சோழன் வழியே சென்று கடலில் கலக்கிறது. இது ஒரு கிளைநதிதானா அன்றி வைகையின் தொல்தடமா? என்பது அடுத்த கேள்வி. இந்தக் கிளை ஆற்றின் நெளிவு சுழிவுகளைக் காணும்போது இது ஓர் வெட்டப்பட்ட கால்வாயன்று, இயற்கையான வாய்க்கால்தான்  என்று தெளிவாகிறது. தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு இருப்பதைப் பார்க்கையில் இது தொல்தடமாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது. (புவியியலாளர்களுக்கு தொல்தடங்கள் மீது எப்போதுமே ஒரு காதல் என்பது வேறு விஷயம்). இதற்கிடையில், இங்குப் பணியாற்றிய திரு அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள் சொல்வதையும் கேட்போம்


பெரும்பாலான அகழ்வாய்வுக் குழிகளில் ஒரு குறிப்பிட ஆழத்திற்குக் கீழ்  ஆற்று மணல் படிவங்கள் கிடைக்கின்றன.பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கே ஒரு தொல்ஆற்றுத் தடம் இருந்திருக்கும் என்பதை இவை காட்டுகின்றன” (In most of the trenches, below a certain level, layers of river sand have been found, signalling the existence of paleochannels in the area many centuries ago).

ஆக, புவன் மற்றும் கூகிள் பதிமங்களில் நாம் காண்பது, தொல்லாற்றுத்தடமாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.

மேலும், இந்த கீழடி- வீரசோழன் ஆற்றினை அப்படியே இழுத்து கடலுக்குக் கொண்டுபோனால் அங்கே நம்மை வரவேற்க, ஒரு பவளத் தீவு திட்டும் காத்திருக்கிறது. 

இந்த தொல் ஆற்றுத் தடம் அகழ்வாய்வுக் குழிகளில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குக் கீழ்  உள்ளதால், இது இந்தப் பண்டை நகரம் உருவாகும் முன்பே இருந்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இதனால் நகரம் அழிந்திருக்க வாய்ப்பில்லை.

பிறகு என்னதான் ஆனது?




 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________ 

No comments:

Post a Comment