Friday, June 10, 2016

திருவக்கரை பகுதி கல் மரங்கள்


-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.


தீக்குழம்பாய் சுழன்று கொண்டிருந்த புவிப்பந்து, குளிரத் தொடங்கியது.  கெட்டிப் பட்டது. பாறைகள் தோன்றின. இவைகளே  தீப் பாறைகள் அல்லது அழற் பாறைகள்- ஆங்கிலத்தில் IGNEOUS ROCKS.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் தட்ப வெப்ப மாற்றங்களால், பூமியின் மேற்பரபில்லுள்ள பாறைகள் சிதைவுறுகின்றன. இப்படித்தான் மண் உருவாகிறது. இந்த சிதைவுகள் காற்று, மழை மற்றும் ஆறுகளால் அடித்துக் கொண்டுவரப்பட்டு பெரிய ஏரி – கடல் போன்ற நீர் நிலைகளில் படிகின்றன. இந்த நிகழ்வு லட்சக்கணக்கான-கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்போது பல நூறு மீட்டர்கள் கனத்திற்கு படிவங்கள் படிந்துவிடுகின்றன. இதனால் அடிப்பகுதியில் உள்ள படிவங்களில் அழுத்தமும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாகவும் இன்ன பிற புவியியல் மாற்றங்களாலும் படிவங்கள் பாறைகளாக கெட்டிப்பட்டு “படிவப் பாறைகள்” ( SEDIMENTARY ROCKS) உருவாகின்றன.

படிவப் பாறைகள் உருவாகும் போது அந்த நீர்நிலைகளில் இருந்த நீர்வாழ் உயிரினங்களும் (சிப்பிகள்-மீன்கள்-நண்டுகள்–நீர்வாழ் தாவரங்கள் போன்றவை), ஆற்றில் அடித்து வரப்பட்ட உயிரினங்கள் மற்றும் மரம் செடி கொடிகளின்  மிச்சங்களும்  படிவங்களோடு சேர்ந்து படிந்து மடிந்து கல்லாய் சமைந்து விடுகின்றன. இப்படிக் கல்லாய்  சமைந்த பழங்காலத்து உயிரினங்களின் மிச்சங்களும்-எச்சங்களுமே ஆங்கிலத்தில் ‘பாசில்ஸ்’(fossils) என்று அழைக்கப்படுகின்றன—தமிழில் “தொல்லுயிரெச்சங்கள்”. இவை பற்றிய கல்வி- ‘தொல்லுயிரியல்’- ‘Palaeontology.’

பொதுவாக தொல்லுயிரெச்சங்கள் படிவப் பாறைகளிலேயே காணப்படுகின்றன. தமிழகத்தின் கிழக்குப் பகுதிகளில் படிவப் பாறைகள் உள்ளன.  தொல்மர எச்சங்கள் திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளிலும், தொல்இலை எச்சங்கள் திருப்பெரும்புதூர், அரியலூர், சிவகங்கை பகுதிகளிலும்,  கடல்வாழ் மெல்லுயிரிகளின் எச்சங்கள் அரியலூர் பகுதிகளிலும், டைனோசார் எச்சங்கள் அரியலூர் பகுதியிலும் கிடைக்கின்றன.   

முதலில் கல்மரங்கள் பற்றிக்  காணலாம். இங்கு கல்மரம் (FOSSIL WOOD) எனக் குறிப்பிடப் படுவது இன்று கல்லாகிப் போன பண்டைய காலத்து மரங்களையே ஆகும். இந்தியாவில் கல் மரங்கள் அதிகமாகக் காணப்படுவது நம் தமிழகத்தில்தான். விழுப்புரம் மாவட்டத்தில் , புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள திருவக்கரை எனும் கிராமத்திலிருந்து (நிறைநிலாக் காலங்களில் பக்தர்கள் கூடும் வக்கிரக் காளியம்மன் கோயில், திருவக்கரையில் உள்ளது.)  ஒரு கி.மீ. தொலைவில்,மிகவும் அரிய, முழுவதும் கல்லாக மாறிப்போன மரங்கள் ஏராளமாக இருக்கின்றன.இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GEOLOGICAL SURVEY OF INDIA) இந்தப் பகுதியில் கல்மரப் பூங்கா ஒன்றினை அமைத்துக் காத்து வருகிறது.
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  (தே.நெ.45), திண்டிவனத்திற்கு தெற்கே பத்து கி.மீ. தொலைவில், கூட்டேரிப்பட்டு எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து மைலம் வழியே புதுச்சேரி செல்லும் சாலையின் தெற்கே உள்ளது-திருவக்கரை.சென்னையிலிருந்து 150 கி.மீ.; புதுச்சேரியிலிருந்து 30 கி.மீ.

சரி, இந்தக் கல்மரம் சொல்லும் கதை என்ன?
“இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் பெரும்  நீர்நிலையாய்  இருந்தது. அதையொட்டி இருந்த நிலப் பகுதிகளில் பெருங்காடுகள் இருந்தன. அக்காடுகளில் கனிதரும் வகையை சேர்ந்த மரங்களும் கனிதரா வகை மரங்களும் இருந்தன. இப்பெருமரங்களை அடித்துக் கொண்டுவரும் அளவிற்கு வெள்ளப்ப்பெருக்கு அக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.”


அப்படி அடித்துக் கொண்டுவரப்பட்ட மரங்கள் நீர்நிலைகளின் அடியில் படர்ந்திருக்கின்றன.தொடர்ந்து ஆறுகளில்  அடித்து வரப்பட்டகூழாங்கற்கள், மணல் களிமண் போன்ற படிவங்களின் கீழ் இந்த மரங்கள் புதையுண்டு போயின.    புதையுண்ட மரங்கள் சிதைவுறத் தொடங்கும்போது , செல் சுவர் (CELL-WALLL)களுக்கிடையே உள்ள மரப் பொருள் அகற்றப்பட்டு அந்த இடங்களை சிலிக்கா ஆக்ரமித்துக் கொள்கிறது .இந்த இடமாற்றப்பணி (REPLACEMENT) சிறிது சிறிதாகத் தொடங்கி பின் முழுமை அடைகிறது. இதனை " பாறையாதல்" (PETRIFICATION.....PETRA =பாறை ) என்கிறோம்.மரம் முழுமையாக  பாறையான பின்னும் செல் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படாததால் அவை மரம் போன்றே காட்சி தருகின்றன.

ஆனால், திருமாலின் சீற்றத்திற்கு ஆளான அசுரர்கள் அந்த நெடியோனால் அழிக்கப்பட்டனர் . அந்த அசுரர்களின் எலும்புகளே இந்த நெடிய கற்கள் என்பது உள்ளூரில் வழங்கும் புராணக் கதை.


தமிழகத்தில் படிவப்பாறைகள் உள்ள பகுதிகள்
  

(இது ஓர் மீள் பதிவு) 
 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________ 

No comments:

Post a Comment