Wednesday, June 29, 2016

ஈழத்து இலக்கிய கர்த்தா - டொமினிக் ஜீவா

-- ஏலையா க. முருகதாசன்



ஈழத்து இலக்கியம் பற்றி பேசுபவர்கள் திரு.டொமினிக் ஜீவாவை பற்றிப் பேசாமல்  கடந்து போகவே முடியாது.

திரு.டொமினிக் ஜீவா தனது 88வது வயதை நிறைவு செய்துள்ளார். தனது பிறந்த நாளன்று இன்னொரு இலக்கிய கர்த்தாவான திரு. மாத்தளை சோமு, மல்லிகைத் தோட்டக்காரனின் வீடு சென்று வாழ்த்தியிருக்கின்றார்.

மகாஜனக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மாணவர் மன்றத்தின் அழைப்பை ஏற்று  திரு.டொமினிக் ஜீவா உரையாற்ற வந்திருந்தார்.

அன்றைய தினத்திலிருந்து அவரின் இலக்கியச் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொண்ட நான், யாழ்ப்பாணத்திற்குப் போகும் போதெல்லாம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் மல்லிகை சஞ்சிகையை வாங்கத் தவறுவதில்லை. வண்ண அட்டைகளைத் தாங்கிய இந்திய சஞ்சிகைகளுக்கு நடுவில் எந்தவொரு வண்ண அட்டையும் இல்லாமல் மல்லிகை மனம் வீசிக் கொண்டிருக்கும்.

எனது அயலவரும் வீரகேசரி, தினக்குரல் முன்னாள் ஆசிரியருமான திரு.ஆ. சிவநேசச்செல்வன் தண்ணீரும் கண்ணீரும் என்ற சிறுகதைத் தொகுப்பைத் தந்தார். அது திரு.டொமினிக் ஜீவாவின் கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பாகும்.

அதிலுள்ள சிறுகதைகளை வாசித்த போது அச்சிறுகதைகள் யாவும் சாதியக் கொடுமைகளை தோலுரித்துக் காட்டி நின்றன. ஈழத்துச் சிறுகதைகள் மீது எனக்கு அளப்பரிய ஆர்வத்தை இச்சிறுகதைகள் ஏற்படுத்தியிருந்தன.

ஈழத்துச் சிறுகதைகள் எமது மாந்தரைப் பற்றியும் எமது சூழலையும் கூறி நின்றன. அதன் பிறகு ஈழத்துச் சிறுகதைகளை தேடித்தேடி வாங்கி வாசித்தேன்.

திரு.டொமினிக் ஜீவாவை ஒரு கர்மவீரராகவே பார்க்கிறேன். மனிதர்கள் அனைவரும் சமமே என்ற சிந்தனையும் சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் நேர்மையான கோபத்தையும் மனக் கொந்தளிப்பையும் அவரின் எழுத்துக்கள் மூலம்  கோபத்துடன் அதே வேளை அதை எப்படிச சொல்ல வேண்டுமோ அப்படி இறுக்கமாகப் பதிய வைத்தவர்.

தானே அச்சுக் கோர்த்து தானே அச்சடித்து மல்லிகைச் சஞ்சிகையை பையில் போட்டு தூக்கியபடி கடைகளுக்கு கொண்டு சென்றதை யாழ்ப்பாணத் தெருக்களில் நான் பார்த்திருக்கிறேன்.யாழ் ராஜா தியேட்டரின் வடக்குப்புறத்து ஒழுங்கையுடன் இருந்த ஒரு சிறிய அறையில் அவர் அச்சுக்கூடம் வைத்து மல்லிகையை வெளியிட்ட காலப்பகுதியில் அவரை அங்கு போய்ச் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன்.

அவர் மனம் சளைக்காத மனிதன். மனித நீதிக்காக எழுத்தை ஏன் தேர்வு  செய்தேன் என்பதை இறுதி வரை விடாப்பிடியாக ஒரு வேட்கையுடன் செயலாற்றியவர்.

போர் அவரை இடம்பெயரச் செய்த போதும், ஒரு இடைவெளிக்குப் பிறகும் தணியாத தாகமாக மல்லிகையை வெளியிட்டவர். இன்றும் மல்லிகை வெளிவருகின்றதா இல்லையா என்பது தெரியாது.
அவரோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. அவரோடு பழகிய நாட்கள் பசுமரத்தாணி போல இன்னும் ஆழப்பதிந்து  இருக்கின்றன.

ஈழத்து இலக்கிய கர்த்தாக்களைப்  பற்றி ஒரு ஆவணப்படுத்தலை  எழுதும் போது திரு.டொமினிக் ஜீவாவை தவிர்த்து எவராலுமே எழுத முடியாது. அப்படி யாராவது மறந்துவிட்டேன் என நடித்து எழுதாது விட்டால் அவர் இலக்கியவாதியாக இருப்பாரானால் அவர் இலக்கிய உலகிற்குத் தன்னை 'சூதுள்ளவனாகவே காட்டிக் கொள்வார்.


___________________________________________________________



ஏலையா க. முருகதாசன், ஜெர்மனி
tamilstorywriters@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment