Thursday, June 23, 2016

கொள்ளையிட்ட அரசுகளும் மாமழை தந்த தண்டனையும் ...

-- ஜா. கௌதம சன்னா

வாட்டி வதைத்த வெயில் காலம் முடிவுக்கு வர இருக்கிறது. தொடர்ந்து லேசான மழையும், அடை மழையும் வரலாம் என்கிற அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பொதுவாக முன்னெச்சரிக்கை என்பது நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாத நிலையில் கடந்த ஆண்டின் மழைக்காலம் உண்டாக்கிய வேதனைகள் கண் முன்னே விரிகின்றன. அது தந்திருக்கும் பாடங்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது என்கிற வகையில் படிப்பினையைத் தந்துள்ளது. போக்கு காட்டிவந்த மழை கடந்த 2015 ஆண்டின் வட கிழக்கு காற்றின் போது புரட்டி எடுத்துவிட்டது  வட தமிழகத்தினை. குறிப்பாகச் சென்னையை.

2015ன் வட கிழக்குப் பருவமழை உருவாக்கிய பேரழிவினால் மழையையும் அது வாரி வழங்கிய நீரையும் பழிக்க முடியுமா.. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமா என்பதுதானே நமது மூதுரை ஆனாலும் பழித்தோம். காரணத்தை விட்டுவிட்டு காரியத்தைக் குறை சொல்லும் மிகச் சாதாரண மனநிலையில் அரசும் அரசு எந்திரங்களும் இருக்கின்றன என்பதற்கு அப்பட்டமான சாட்சி 2015 ஆண்டிற்கான மாமழை உருவாக்கிய காட்சிகள்.

பொதுவாக இயற்கையை எவ்வளவு தூரம் மனித இனம் காயப்படுத்தினாலும் மனித உடலில் உள்ள இயற்கையான குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றலைப் போல, நமது சுற்றுச் சூழலும் ஏதாவது ஒரு வகையில் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறது. அப்படி குணப்படுத்திக் கொள்ளும்போது அதன் காயத்திற்கு காரணமான மனித இனத்தினால்  அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதைத்தான் நாம் பேரழிவு என்கிறோம்.

இந்த உலகம் வெறும் மனித இனத்திற்கானது மட்டும் என்ற சுயநலத்தினால் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் பூண்டற்றுப் போயுள்ளன. அழிந்தவற்றைப் பற்றி எந்தக் குற்ற உணர்வும் நமக்கு இல்லை. இந்தக் குற்ற உணர்வு உருவாகாத வரை பூமி தன்னை குணப்படுத்திக் கொள்வதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. பெரும் மழையினால் பூமி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்படி நிலைமை ஆனதற்கு என்ன காரணங்கள் என்பதை நாம் ஆராய வேண்டும். இயற்கை ஒரு கண்டிப்பான ஆசிரியர், அது தண்டித்துவிட்டுத்தான் பிறகு சொல்லிக்கொடுக்கும். தண்டனைப் பற்றிப் பேசும் நாம் பாடத்தினை மறக்கக் கூடாது. அப்படியானால் காரணங்கள் இருக்கத்தானே வேண்டும்.

 அவற்றில் முதன்மையாகப் புலப்படுவது நீர் வள மேலாண்மை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை என்கிற கருத்தாக்கத்திற்கே தமிழகத்தை ஆளும் அரசுகள் வரவில்லை. மாறாக, திடீரென உருவாகும் பிரச்சினைகளின் அடிப்படையில் அமைத்துக்கொள்ளும் செயல்திட்டங்களைத் தாண்டி கடந்த ஐம்பது ஆண்டுகளாக உருப்படியாக எதுவும் நீர் வள மேலாண்மையில் நடக்கவில்லை. நீர் மேலாண்மை என்பது வெறும் ஆறுகளையும் ஏரிகளையும் பார்த்துக் கொண்டிருப்பதல்ல. நீருக்கு ஆதாரமே மழைதான். அந்த இயற்கை ஆற்றல்தான் கடல்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், காடுகள், மலைகள், நிலங்கள், உயிரினங்கள் மற்றும் மனிதர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறது. அப்படி பிரித்துக் கொடுப்பதில் அது எந்த வஞ்சனையும் வைக்கவில்லை. ஒப்பற்ற ஒரு பகிர்மான விதியைத்தான் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை கடைப்பிடித்து வருகிறது. அந்த விதியில் மனிதன் மேற்கொண்ட இடையீடுகளினால்தான் அது திருப்பித் தாக்குகிறது. இந்த இடையீட்டினைக் கட்டுப்படுத்துவதும், இயற்கையின் சமநிலையை பேணுவதும் அரசின் பணி, அதுதான் நீர் வள மேலாண்மையின் அடிப்படை. ஆனால் இதில் அரசுகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன.

இருப்பினும் சுதந்திரத்திற்கு முன்பு அப்படி பெரும்பாலும் நடக்கவில்லை, குறிப்பாக, தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட அடிப்படையில்தான் நீர் வள மேலாண்மை நடந்துகொண்டிருந்தது. இதற்கு மிக எளிமையான சூத்திரம்  ‘நீரோட்டத்தை’ பாதகமில்லாத வழியில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதுதான். ஏனெனில் ஆறுகள் ஓடைகள் மட்டும் நீரோடும் பாதைகளல்ல, பூமி பந்து முழுவதும் நீரோடும் பாதைதான். அது மேலாகவோ அல்லது பூமிக்கு அடியிலோ ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

இதைப் புரிந்துகொண்டதினால்தான் பண்டைக்காலம் முதலே நீரினை தேக்கும் முறையில் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டார்கள். விவசாய நிலங்கள் அத்தனையும் இந்த நீரோட்டப் பாதையில் அமைந்தவைதான். மழை பொழியும் போது வயல்களில் ஓடும் நீர் அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கும், அந்த இடத்தில்தான் நிலாப் பிறை வடிவில் ஒரு தடுப்பை உருவாக்கி ஏரிகளை உருவாக்கினார்கள். இதில் தேங்கும் நீரின் மட்டம் விவசாய நிலங்களை மூழ்காமல் இருக்கும் வரையிலான உயரம் மட்டுமே இருக்கும், அதற்குமேல் தேங்கும் நீர் மீண்டும் இயற்கையான நீரோட்டப்பாதையில் விடப்படும். பின்னர் அந்த நீரோட்டம்  குளங்களையும், குட்டைகளையும் நிரப்பிவிடும். அப்படி நிரம்பிய பின் ஓடைகளாக ஓடி ஆறுகளில் கலந்து கடலுடன் சங்கமித்துவிடும். இப்படி மழை நீரானது  பொதுவான பாதையில் பயணிக்கும்படியான அமைப்புதான் பண்டைய அமைப்பு முறை. பிற்காலத்தில்தான் கரைகள் உயர்த்தப்பட்டுக் கரைகள் ஒரு வளையம் போல் ஆக்கப்பட்டன. ஆனால் எல்லா ஏரிகளும் அப்படி ஆக்கப்படவில்லை. பெரும்பாலான ஏரிகள் இன்னும் பிறைவடிவம் தான். அதனால் நீரோட்டப் பாதைகள் அப்படியே இன்னும் இருக்கின்றன. இந்த நீரோட்டப் பாதையில் மனிதன் ஏற்படுத்தியதடைகள்தான் இன்றைய தாக்குதல்களுக்கும் பற்றாக் குறைகளுக்கும் காரணம்.

அந்தத் தடைகளில் முதல் இடம் வகிப்பது தூர் வாராதது. பன்னெடுங்காலங்கள் நிலைத்து நிற்கும் ஏரிகளையும் அதன் துணை நிலைகளான கால்வாய்கள்,  குளங்கள் மற்றும் குட்டைகளைத் தூர் வாரி, மராமத்துப் பணிகள் செய்து கொள்வது என்பது கிராமத்தின் அடிப்படையான விவசாயக் கடமைகளில் ஒன்றாக அன்றைக்கு இருந்து வந்தது. ஆனால் பிற்பாடு அந்தப் பணி உள்ளாட்சி அமைப்புகளின் கீழும், பொதுப்பணித்துறையின் கீழும் வந்தன. அதன் விளைவாய் தூர் வாரப்படாமல் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் மேடானதால் ஏரிகளின் கொள்ளளவு குறைந்து, மழை நீரின் தேங்கும் பரப்பளவு அதிகரித்தது. இதனால் நீரோடும் கழனி உள்ளிட்டப் பகுதிகளில் நீர் பரவலாக பாயத் தொடங்கி விரைவில் காய்ந்து, பூமியின் ஈரப்பதம் குறைந்தது. பெருமழைக் காலங்களில் நீரின் பரந்தத் தேக்கமும் அதனால் உண்டான பாயும் ஓட்டமும் அதிகரித்ததால் ஏரிகளின் கரைகள் கரைந்தன, இதன் காரணமாக பல ஏரிகள் குளங்கள் குட்டைகள் காணாமல் போய்விட்டன.

அதுவுமின்றி, கடந்த முப்பது ஆண்டுகளில் ஏரிகளுக்குள் கருவேலம் மரங்களை வளர்ப்பதை அரசு ஊக்குவித்தது. அது ஏரிகளுக்கு பெரும் கேடாய் மாறி அழித்துவிட்டது. தமிழகம் முழுவதும் ஏரிகளின் கரைகளை பலப்படுத்துவதற்குப் பதில் ஏரிகளின் உள் பகுதிகளில் ஆயிரக்கணக்கான கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டதால் ஏரிகளின் நீர்ப் பிடிப்பு குறைந்து கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மேடானதாலும். நூற்றுக்கணக்கான ஏரிகள் காணாமல் போய்விட்டன. விளைவாய் மேற்பரப்பு நீரோட்டம் முற்றிலும் சிதைந்து போனது. இப்படி மேடாக்கப்பட்ட ஏரிகள்தான் நிலக் கொள்ளையர்கள் வளைப்பதற்கு எளிதாகிவிட்டன. புற நகரங்கள் வளர்ந்ததற்கு இந்த நிலக் கொள்ளையும் ஒரு காரணம்.

மேடாக்கப்படும் நீர் நிலைகள் எப்படி வளைக்கப்படுகின்றன என்றால் அது ஒரு கூட்டுக் கொள்ளை போல நடக்கிறது. எப்படியெனில்.. தமிழகத்தில் உள்ள அத்தனை நீர் நிலைகளுக்கும் அது குளம், குட்டை, ஏரி, வாய்க்கால், ஏரிப் புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, ஓடை என எல்லாவற்றிற்கும் புல எண்கள் தரப்பட்டிருக்கும்.  புல எண்களோடு நீர் நிலையின் தன்மை குறிக்கப்பட்டிருக்கும். மேடாக்கப்பட்ட நீர் நிலையின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு வருவாய்த்துறை செயலில் இறங்கும். அந்த நீர் நிலையை ஆய்வு செய்யும் பின்பு அது நீர்நிலை அல்லது நீர் பிடிப்புப் பகுதியாகத் தொடர முடியாது என்று கோட்டாட்சியர் மூலமாக அறிவிப்பு வெளியாகும். இதற்குச் செய்யப்படுவது ஒரே ஒரு திருத்தம். அதாவது புல எண்ணிற்குப் பக்கத்தில் நிலத்தின் தன்மை இருக்கும் அல்லவா அதை நீக்கிவிடுவார்கள். அடங்கலில் அந்த நீக்கம் நிலையாகப் பதியப்படும். பிறகு பட்டா, வரி இத்யாதி என வழக்கமான பணிகள். இப்படித் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பிற்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம், ஆனால் அவர்கள் அதைச் செய்வது இல்லை. புறநகர்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ரியல் எஸ்டேட் முகவர்களாகவும், வியாபாரிகளாவும் இருப்பதால் கொள்ளைகளுக்கு எந்த எதிர்ப்புகளும் இல்லை. இதுதான் இந்த வியாபாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட பண வரம்.

அப்படி தமிழகம் முழுவதும் ஏராளமான குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் களவாடப்பட்டுள்ளன. சென்னையின் பரந்து விரிந்த பரப்பளவு இப்படி உருவானதுதான். நீர் நிலைகளுக்கு இப்படி ஒரு நிலை என்றால் விவசாய நிலங்கள் வேறு வகையாகவா இருக்க முடியும்?

விவசாயி அல்லாத ஒருவர் விவசாய நிலத்தை வாங்க முடியாது என்கிற  சட்டம் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உத்திர பிரதேசத்தில் வாங்கிய நிலத்தை அவர் விவசாயி அல்ல என்கிற காரணத்தினால் திருப்பிக் கொடுக்க நேர்ந்தது. இப்படி ஒரு சட்டம் தமிழகத்தில் ஏன் உருவாக்க முடியவில்லை, இதைப் பற்றி பேசிப் பேசி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஓய்ந்து போய்விட்டார்கள்.  ஆனால் தமிழகத்தில் விவசாய நிலத்தை எப்படி ரியல் எஸ்டேட் வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள், அதற்கு எளிமையான வழி இருக்கிறது. நிலத்தைத் தொடர்ந்து இரண்டாண்டுகள் கரம்பாக போட வேண்டும். அதில் வேலிகாத்தான் முளைக்கும், பிறகு விவசாயத்திற்குத் தகுதி இல்லாத நிலமாக மாறும், அதை வருவாய் துறை பார்த்துக்கொண்டிருக்கும். ஓர் ஆண்டுக்குள் என்னென்ன பயிரிடப்பட்டன என்று குறிக்க வேண்டிய அடங்கல் புத்தகத்தில் வேலிகாத்தான் என்று கிராம நிர்வாக அதிகாரி குறித்துக்கொள்வார். நஞ்சை நிலம் புஞ்சையாக மாறிவிட்டது என்று குறித்துக்கொள்வார் அதுதான் அதன் மரணக்குறிப்பு. அந்தக் குறிப்பை அறிவிப்பாக ஆர்டிஓ வெளியிடுவார், அவருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறது. பிறகு ரியல் எஸ்டேட் கற்கள் நடப்படும்.  புதிய குடியிருப்பு அல்லது வில்லா உருவாகி இருக்கும். ஆனால் விதிப்படி என்ன நடக்க வேண்டும் ஒரு நஞ்சை நிலம் புஞ்சை நிலமாக மாறியது என்று அறிவிப்பிற்கு அது 20 ஆண்டுகளுக்கு மேல் கரம்பாக இருக்க வேண்டும் என்பது வருவாய்த்துறை விதி. இந்த இருபது ஆண்டுகளும் வருவாய்த்துறை அடங்கலில் அது குறிக்கப்பட வேண்டும். குறிக்கப்பட்டிருக்கும். இந்த அடங்கல் பதிவேட்டை ஆய்வு செய்தால் எவ்வளவு பெரிய நிலக்கொள்ளைக்கு வருவாய்த்துறை துணைபோயிருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியும். இப்படித்தான் விவசாய நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதாவது நீரோட்டப் பாதைகள் கொள்ளையடிக்கப்பட்டு வீடுகள் தடைகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரத்தின் விரிவாக்கத்திற்கு இவ்வளவு கேடுகள் விளைவிக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரம் ஓர் அடிப்படை அலகாக இருந்தது. அப்படி விரிவாக்கப்பட்ட போது ரியல் எஸ்டேட் தொழில் என்பது வெறும் பணம் பண்ணும் தொழிலாக மட்டும் இருந்துவிட்டிருந்தால் அது குறைவான கேடாக இருந்திருக்கும். ஆனால் இந்த கேடானது, மக்களின் குடியிருக்கும் உரிமையை நிறைவேற்றும் ஒரு பொறுப்பை அரசு  தட்டிக் கழிக்க வழி வகுத்தது. இதுதான் மிக மோசமான சமூக அரசியல் கேடு. குடிமக்களின் குடியிருப்பு உரிமையை உறுதி செய்வதற்கு பதில் திராவிட கட்சிகளின் அரசுகள் தான் தொடங்கிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தானும் ஒரு ரியல் எஸ்டேட் அதிபரைப் போல செயல்படத் தொடங்கியது.  இந்த வாரியம் அமைக்கப்பட்டு அது கைப்பற்றிய பகுதிகள்  சென்னையின் மைய நீரோட்டப் பகுதிகளில் அமைந்திருந்தன. உதாரணத்திற்கு சின்னக்கூடல் ஏரி என்ற அண்ணா நகர், திருமங்கலம் ஏரித்திட்டம், கோடம்பாக்கம் லேக் ஏரியா மற்றும் புலியூர் ஏரி, சேத்துப்பட்டு ஸ்பர்டாங்க் பகுதி, மறைமலை நகர் எனப் பலவற்றை குறிப்பிடலாம். இப்படி மாநில அரசே ஏரிகளை, குளங்களை வளைத்து சுமார் ஒன்றரை லட்சம் வீடுகளைக் கட்டியுள்ளது. இப்படி ஒரு முன்னுதாரணத்தைக் காட்டியபின் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் சும்மா இருப்பார்களா.. அவர்கள் அனைவரும் மாநில அரசை நடத்தும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தானே, அதனால் அரசின் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித் துறையின் ஆசியோடு நீர் ஓட்ட மற்றும் தேக்கப் பகுதிகளை மடக்கி விற்றார்கள். இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் போனது. இந்த மோசடி சென்னையில் மட்டும் நடக்கவில்லை, நகர மயமான தமிழகத்தின் பெரும்பாலான  பகுதிகளில் நடந்துள்ளன. விளைவாய்  நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்த இயற்கை நீர் மேலாண்மை சமநிலை முற்றாக ஒழிந்தது.

இப்படி சென்னையும் பிற நகரங்களும் வளர்க்கப்பட்ட போது நகருக்குள் இருந்த ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் என அத்தனையும் தூர்க்கப்பட்டுவிட்டன. இனி அதை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால் உருவாக்கப்பட்ட பகுதிகள் இயற்கையாக அமைந்த நீரோட்டப்பாதையில் உள்ளவைதான் என்றாலும், தற்போது மழைநீர் ஓடுவதற்குச் சாலைகள் மிக முக்கியமான தடங்களாகிவிட்டன. ஆனால் அந்தச் சாலைகளை இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.

சாலைகளை வரைமுறையின்றி உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சாலைக் கட்டுமானத்தில் எந்தவிதமான வரையறைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. போடப்பட்ட சாலைகளுக்கு எத்தனை ஆண்டுகள் உத்திரவாதம், அதன் உறுதி  தன்மை மீதான கண்காணிப்பு என எதுவுமே இல்லை. தரமற்ற சாலைகளை போட்டதற்காக எந்த இழப்பீடும் கோரப்படுவதில்லை, மாறாக அவர்களுக்கே மறு ஒப்பந்தம். இப்படி முறைகேடுகள் தொடர் கதையாகிவிட்டதால் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சென்னை மற்றும் தமிழகத்தின் நகரங்களின் உள் சாலைகள் கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் சுமார் ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டார்வரை உயர்ந்திருக்கின்றன.

சென்னைக்குள் உதாரணத்திற்குப் பார்க்க வேண்டும் என்றால், சென்னை பல்கலைக் கழகம், சென்னை உயர்நீதி மன்றம் ஆகியவற்றைச் சுற்றியிருந்த பழைய சுற்றுச்சுவர்கள் முற்றாகப் பூமியில் புதைக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம், சாலைகளைப் போடும்போது பழைய சாலையைத் தோண்டி எடுத்து புதிதாக போடுவதற்குப் பதில், அதன் மீதே புதிய சாலைகளைப் போட்டு  போட்டு உயர்த்திவிட்டார்கள். எம்ஜியார் ஆட்சிக்காலம் வரை பழைய சாலைகளைப் தோண்டி எடுத்துவிட்டு, புதிய சாலைகளை போடும் வழக்கம் கட்டாயமாக இருந்தது. பிறகு வந்த ஆட்சியாளர்கள் யாரும் அந்த முறையைக் கடைப்பிடிக்கவில்லை. போதாத குறைக்கு இப்போது எங்கும் சிமெண்ட் சாலைகள் போடப்படுகின்றன, அவை  பூமியின் நீர் உறிஞ்சும் தன்மையை முற்றாக அழித்துவிட்டன. எனவே சாலைகளில் ஓட வேண்டிய நீர் வீடுகளுக்குள் புகுந்து ஓடுகிறது.

தார் சாலைகளை போடும்போது இருக்கின்ற பழைய சாலையை ஆறு அங்குலம் பெயர்த்து எடுத்துவிட்டு நான்கு அங்குல உயரம் சாலை போட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. இதற்குக் காரணம், ஆறு அங்குலம் தோண்டி எடுத்து பிறகு நான்கு அங்குலம் போடும் போது இரண்டு அங்குலம் சாலை குறைகிறது. இப்படியே தொடர்ந்தால் பழைய உயரத்திற்குச் சாலை வந்துவிடும், ஆனால் மில்லர் இயந்திரத்தின் மூலம் வெறும் ஒரு அங்குலம் மட்டுமே சுரண்டி எடுக்கிறார்கள், சுரண்டுவதிலும் சுரண்டி நமது ஒப்பந்தக்காரர்கள் நிபுணர்கள் என நிரூபித்திருக்கிறார்கள். அதே போல சிமெண்ட் சாலை போடும் போது பழைய தார்சாலையை முற்றாகச் சுரண்டி எடுத்துவிட்டு, பூமிக்கு அடியில் போகும் மின்சார வடங்கள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் வழிகள் என அத்தனையும் சரி பார்த்த பிறகே சிமெண்ட் சாலை போட வேண்டும், ஏனெனில் சிமெண்ட் சாலைக்கு பத்து ஆண்டுகள் உத்திரவாதம். ஆனால் சிமெண்ட் சாலை போடப்பட்ட இடங்களைப் பாருங்கள். இவை எதுவுமே கடைப்பிடிக்கப்பட்டிருக்காது. தெருவோர கழிவு நீர் வழிகள் முற்றாக அடைபட்டிருக்கும். அதுவுமின்றி, முக்கிய சாலைகளுக்கும் அதன் இணைப்புத் தெருக்களுக்கும் உள்ள உயரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதே இல்லை. முக்கிய சாலைகள் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மேலும் மேலும் போடப்பட, தெருக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை போடப்படுவதின் மூலம் சாலைகளின் நீரோட்டம் குடியிருப்புகளுக்கு திருப்பி விடப்படுகிறது.

ஏற்கெனவே சாலைகளால் புதையுண்ட குடியிருப்புகளில் நீர் தேங்க இதுதான் முக்கியக் காரணம். வசதியானவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே இந்த நிலை என்றால் ஏழைகள் வசிக்கும் பகுதியை எண்ணிப்பாருங்கள். அவர்கள் அனாதரவாக விடப்பட்டது புரியும். சாலைக் கட்டுமானத்தில் இதே நிலை நீடிக்குமானால் இன்னும் பத்தாண்டுகளில் சிமெண்ட், மற்றும் தார் சாலைகளால் சென்னை மாநகர வீடுகள் பாதியளவிற்காவது புதையுண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி நடந்தால் எல்லா வீடுகளும் இடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். அது எவ்வளவு பெரிய பொருளாதார தாக்குதல் என்பது  அப்போது புரியவரும். இதற்குத் தீர்வு காண வேண்டுமானால் பழைய சிமெண்ட் சாலைகள் அத்தனையும் பெயர்த்து எடுக்கப்பட்டு மேலை நாடுகளில் போடுவதைப் போன்ற நீர் உறிஞ்சும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அதுதான் நிரந்தர சாலைத் தீர்வாக இருக்கும்

எனவே, 2015ம் ஆண்டின் மழை நீர் மேலாண்மையினை செப்பனிட்டுக் கொள்ள ஒரு பாடத்தினை தந்துள்ளது. 2016ம் ஆண்டு பெய்யப்போகும் மழை தண்டனையா அல்லது வரமா என்பதை நாம் பொருந்திருந்து பார்க்கலாம். ஆனால் நீர் மேலாண்மை என்பது ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் கமிஷன் என்கிற குறுகிய நோக்கில் பார்க்கப்பட்டால் மக்கள் பொருத்துக் கொண்டிருப்பது தேவையற்றது. நீர் மேலாண்மை என்பது மனிதனின் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது இயற்கைச் சமநிலை அடிப்படையாகக் கொண்டது. அதை இயைபாக்கும் விதத்தில்தான் நமது நீர்வள மேலாண்மை மக்கள் தொகை குடிபெயர்வு, முறையான திட்டமிடப்பட்ட நகர வளர்ச்சி, இருக்கும் நிலமெலாம் நீரோடும் பாதை என்ற புரிதலோடு, மனித மற்றும் பிற உயிர்களும் நீரோடும் பாதை என்கிற புரிதல் என்பதாக இருக்க வேண்டும். அது இயற்கை அன்னையின் நீர் பகிர்மானத்தைக் குலைக்காத மனித நீர் பகிர்மானமாக இருந்தால் இக்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்கால உலகத்திற்கும் நல்லது.


 

___________________________________________________________
 
 
கவுதம் சன்னா
 g.sannah@gmail.com
___________________________________________________________
 

No comments:

Post a Comment