Wednesday, June 29, 2016

களந்தை-கரைப்பாடி-ஆனைமலை-திருமூர்த்திமலை ஒரு வரலாற்றுச் சுற்றுலா

களந்தை-கரைப்பாடி-ஆனைமலை-திருமூர்த்திமலை ஒரு வரலாற்றுச் சுற்றுலா  பகுதி ஒன்று

 
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
 
 
கோவை- வாணவராயர் அறக்கட்டளை
         கோவையில் இயங்கும் வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் கொங்குப்பகுதியில் வரலாற்றுத் தொடர்புள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லும் உலாக்களில் ஒன்று 26-06-2016 ஞாயிறன்று நடைபெற்றது. அதுபோது, பொள்ளாச்சியை ஒட்டியுள்ள களந்தை, கரைப்பாடி, ஆனைமலை, திருமூர்த்திமலை ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்தோம். தமிழ்நாடு தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, தொல்லியலில் துறைபோகிய அறிஞர் திரு. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பயண உலா மிகுந்த இன்பத்தையும் பயனையும் நல்கியது எனில் மிகையல்ல. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே. இக்கட்டுரையில் வருகின்ற வரலாற்றுச் செய்திகள் அனைத்தும் திரு. பூங்குன்றன் அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை.
களந்தை



முதலாம் ஆதித்தசோழனும் இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டும்
முதலில் நாங்கள் சென்றது கிணத்துக்கடவுக்கு அருகில் அமைந்த ஒரு சிற்றூரான களந்தை இது ஒரு வரலாற்றுச் சிறப்புள்ள ஊர். இங்கு, தற்காலம்  ஆதீஸ்வரம் என்னும் பெயர் கொண்ட சிவன்கோயில் உள்ளது. ஆனால், கோயிலின் பழம்பெயர் “ஆதித்தேசுவரம்”  என்பதாகும். சோழ மன்னர்களில் இரண்டாவது அரசனான முதலாம் ஆதித்தசோழன் பெயரால் அமைந்த கோயில். இந்த ஆதித்தசோழன் கொங்குநாட்டைப்பிடித்தான்; ஆட்சி செய்தான் என்பதற்கு இரு சான்றுகள் உள்ளன. ஒன்று, கொங்குதேச ராஜாக்கள் என்னும் நூல். இரண்டாவது கோவைப்பகுதியில் பாலக்காட்டுக்கணவாய் காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் இராசகேசரிப்பெருவழிக்கல்வெட்டு. கொங்குதேச ராஜாக்கள் நூலில், ஆதித்தசோழன் கொங்குநாட்டு வேட்டுவராஜாக்களை வெற்றிகொண்டான் என்று குறிப்பிடப்பெறுகிறது. செய்தி பழைய காலத்துச் செய்தியாக இருப்பதாலும், இருநூறு ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட நூலாக இருப்பதாலும் இக்கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இராசகேசரிப் பெருவழி என்று ஒரு பெருவழியையும் அப்பெருவழியில் இருந்த கல்வெட்டையும் கண்டுபிடித்தார் பூங்குன்றன் அவர்கள். அக்கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு:
இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு
கல்வெட்டுப்பாடம் (வட்டெழுத்துப்பகுதி)

1         ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப்
2         பெருவழி திருநிழலு மன்னு
3         யிருஞ் சிறந்த
4         மைப்ப ஒருநிழல் வெண்டி
5       ங்கள் போலோங்கி ஒரு நிழல்போ
6         ல் வாழியர் கோச்சோழன் வளங்
7         காவிரி நாடன் கோழியர் கோக்கண்ட
8         ன் குலவு.
கல்வெட்டுப்பாடம் (தமிழெழுத்துப்பகுதி)

1            ஸ்வஸ்திஸ்ரீ கோஇரா
2            சகேசரிப்
3            பெருவழி
இக்கல்வெட்டு முதலாம் இராசராசன் காலத்தது என்று தொல்லியல் அறிஞர்கள் கருதினார்கள். ஆனால், கல்வெட்டு முதலாம் ஆதித்தசோழன் காலத்தது என்று பின்னர் தெளிவாகியது. கல்வெட்டில் “கோக்கண்டன்  என்ற ஒரு பெயர் வருகிறது. இதே பெயரோடு தில்லைத்தானம் என்ற ஊரில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில், பல்யானைக் கோக்கண்டனாயின தொண்டைநாடு பாவிய இராஜகேசரி என்று ஒரு தொடர் வருகிறது. தொண்டைநாடு பாவிய இராஜகேசரி என்பவன் முதலாம் ஆதித்த சோழன்தான். கோக்கண்டன் என்னும் பெயர் சோழர்களில் இருவருக்கு மட்டுமே வழங்கியது. ஒருவன் முதலாம் ஆதித்தன்; இரண்டாமவன் இரண்டாம் இராஜராஜன். இரண்டாம் இராஜராஜன்., கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அந்தக்காலத்தில் இராசகேசரிப்பெருவழிக்கல்வெட்டு சேராது. காரணம், இக்கல்வெட்டு வட்டெழுத்துக்கல்வெட்டு. எனவே, முதலாம் ஆதித்தன் கல்வெட்டு இங்கே கொங்கில் இருப்பதால், ஒருவேளை கொங்குநாட்டில் அவனது ஆட்சி நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது. அவ்வாறு, அவன் கொங்குநாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, அவன் பெயரால் யாரேனும் களந்தைக்கோயிலைக் கட்டுவித்திருக்கலாம். அவனே கட்டுவித்தான் எனச் சொல்வதற்கில்லை. அதுவும், ஆதித்தன் காலத்தில் கட்டப்படவில்லை. கோயில் பிற்காலத்தது.
கருவூர்த்தேவர் சுட்டும் இன்னொரு களந்தை
தஞ்சைப்பகுதியிலும் ஒரு களந்தை உண்டு. அந்தக்களந்தையைப்பற்றித் திருவிசைப்பாவில் கருவூர்த்தேவர் பாடியிருக்கிறார். அந்தப்பாட்டில், கோயில் இராஜராஜேச்சுரம் என்ற பெயரில் சுட்டப்பெறுகிறது. என்வே, அது இந்தக்களந்தை அல்ல என்பது தெளிவாகிறது.
கோயில் கல்வெட்டுகள்
இந்தக்கோயில் கல்வெட்டுகளில் சிறப்பானதாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டு, சேலம் நாட்டுச் சேலமான இராஜாச்ரயபுரத்திலிருக்கும் கைக்கோளன் ஒருவன் இங்கு வந்து தங்கியிருந்தபோது கொடுத்த தானத்தைப் பற்றிக்குறிப்பிடுகிறது. உள்ளூர் அல்லாது, பல வெளியூர்களிலிருந்து வந்து இந்தக்கோயிலுக்குக் கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
                  கோயிலின் வளாகத்தில் ஒரு நடுகல் சிற்பம்
தூண் கொடை பற்றிய கல்வெட்டு - 3 பகுதிகளாக
பகுதி-1
பாடம்
1 ஸ்வஸ்திஸ்ரீவி
2 க்கிரம சோழ
3 தேவற்கு யா
4 ண்டு பத்தாவ
5 து களந்தை
                               பகுதி-1

பகுதி-2
பாடம்
1 யிலிருக்கும்
2 வெள்ளாளரி
3 ல் மாப்புளி
4 களில் கோ
5 வந் தேவநா

                                                            பகுதி-2

பகுதி-3
பாடம்
1 ன உதைய
2 பாலந்
3 தரும
4 ம் இத்தூண்
5 பந்மாயேஸ்வ
6 ர ரக்ஷை

                                                                  பகுதி-3

வாயறைக்காநாடு
களந்தை, வாயறைக்காநாட்டைச் சேர்ந்தது. பல்லடம், பொள்ளாச்சி ஆகிய இரு வட்டங்கள் சந்திக்கும் பகுதி இந்த வாயறைக்காநாடு. வாயறைக்காநாடு, தென்கொங்கிலிருந்த ஏழு நாடுகளுள் ஒன்று. காவடிக்காநாடு, கரைவழிநாடு, வெண்டையூர்க்கால் வீரகேரளவளநாடு, நல்லூர்க்காநாடு முதலானவை இவ்வேழு நாடுகளுள் அமையும். கொழுமம் கோயில் கல்வெட்டில் ஏழு நாடுகள் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த ஏழு நாடுகளில் (அதாவது தென்கொங்கில்) இருந்த கம்மாளர்களுக்கு அரசனால் சில உரிமைகள் வழங்கப்பட்ட செய்தியை கொழுமம், பேரூர், கரைப்பாடி, குடிமங்கலம் போன்ற பல ஊர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் காண்கிறோம். (உரிமைகள் பற்றிய விளக்கம் “கரைப்பாடி” என்னும் தலைப்பில் காண்க.)
 
பூலுவர்கள்-பழங்குடிகள்
                       பூலுவர்-குறிப்புள்ள கல்வெட்டு      
கல்வெட்டின் பாடம்:
1 ..
2 வது வாய
3 றைக்கா
4 நாட்டுக்க
5 ளந்தையி
6 ல் பூலுவ
7 ந் பெரும்
8 பற்றாரில்
9 வாணந்
10 நிலையு
11 டையாந்

வாயறைக்காநாடு பூலுவர்கள் இருந்த பகுதியாகும். பொள்ளாச்சியிலும் குள்ளிச்செட்டிபாளையத்திலும் பூலுவர்கள் இருந்தனர். (பொள்ளாச்சி, வெண்டையூர்க்கால் நாட்டைச்சேர்ந்தது). குள்ளிச்செட்டிபாளையம் தற்போது ஒரு சிற்றூர். தென்கொங்கின் வடபகுதி முழுதும் பூலுவர்கள் இருந்த செய்தியைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில், வெள்ளாளர் வந்தபிறகு பூலுவர், வெள்ளாளர் இருவரையும் கல்வெட்டுகள் தனித்தனியே குறிப்பிடுகின்றன. ஒரே பகுதியில், வெள்ளானூர் என்றும் பூலுவனூர் என்றும் இருக்கும். இவ்விருவகையினருக்கும் தனித்தனியே நாட்டுச்சபைகள் இருந்தன. இருவகையினரும் சேர்ந்து கோயில்களுக்குக் கொடைகள் கொடுத்துள்ளனர். இதுபற்றிய குறிப்புகள் அவிநாசி, சேவூர் ஆகிய ஊர்க்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
 
பழங்குடிகள் வேளாண்குடிகளாக மாற்றம் பெறுதல்
மேலே குறிப்பிட்டபகுதிகளில் இருந்த பூலுவர்களைச் சோழர்கள் வேளாண்குடிகளாக மாற்றினர். அப்போது, பூலுவர்கள் தங்களை வேளாண்குடிகளாக உட்படுத்துவதற்காக, அவர்களுக்குச் சில சலுகைகள் அளிக்கப்பட்டன. இச்சலுகைகள், பூலுவர்களை வேளாண்குடிகளாக மாற்றும் ஒரு முயற்சியாக இந்தசலுகைகளைக் குறிப்பிடலாம்.
 
பழங்குடித்தெய்வம் பெற்றநாச்சியார்
பழங்குடிகளை வேளாண்குடிகளாக மாற்றும்போது பழங்குடிகளின் தெய்வங்களைச் சிவன்கோயில்களுக்குள் கொண்டுவருகின்றனர். அவ்வாறு கொண்டுவரும்போது, பழங்குடித்தெய்வங்கள் எப்படி இருந்தனவோ அப்படியில்லாமல் பிராமணமரபுக்குட்பட்டு மாற்றப்பட்டன. தமிழ்நாட்டிலேயே, இந்த ஊரில்தான் நந்தியின்மேல் அமர்ந்த நிலையில் அம்மனைப் பார்க்க இயலும்.நந்திமேல் அமர்ந்த அம்மன் என்பதால் பெற்றநாச்சியார் என்று அழைத்தார்கள். பெற்றம் என்றால் எருது. பெற்றநாச்சியார் என்று கொழுமம்,ஆனைமலை ஆகிய ஊர்க்கல்வெட்டுகளில் குறிப்பு வருகிறது.ஆனைமலை ஆனைக்கீசுவரர் கோயிலில் பெற்றநாச்சியார் சிலையைப் பாண்டிமண்டலத்து இருஞ்சோனாட்டைச் சேர்ந்த சுந்தரப்பெருமாள் வாழ்வித்தாரான பல்லவராயர் என்பவர் திருக்காமக்கோட்டநாச்சியாராக ஏறியருளப்பண்ணினார் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. பாண்டிநாட்டிலிருந்து வந்த ஒருவர் இங்கு பெற்றநாச்சியார் சிலையைச் செய்துகொடுத்தார் என்னும் செய்தியைக்காணும்போது, பெற்றநாச்சியார் என்னும் தாய்த்தெய்வம் இப்பகுதியில் எத்துணை முதன்மையான தெய்வமாக இருந்திருக்கும் என்பதை அறியலாம். களந்தைக்கோயில் கருவறையில் இருப்பது பெற்றநாச்சியார் உருவமேயாகும். இந்தப்பகுதி அம்மன்வழிபாட்டுக்குரிய பகுதியாக விளங்கியுள்ளது. அம்மன் வழிபாடு, சோழர் ஆதிக்கம் செயல்பட்டமை போன்ற பல அடிப்படைகளால் இந்தக்கோயில் சிறப்பிடம் பெறுகிறது. இந்தக்கோயிலின் அருகில் இராசராசன் காசு கிடைத்துள்ளது.
 
களந்தையில் பெருங்கற்சின்னங்கள்
                       பெருங்கற்சின்னம்-கல்திட்டை                         

                                      கல்திட்டைக்குள் புலிகுத்திக்கல்


                                                  புலியின் உருவம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெருங்கற்சின்னங்கள் (ஈமச்சின்னங்கள்) இந்த ஊர்ப்பகுதியில் கிடைத்தன. பல வீடுகளில் இந்தத் தாழிகளை எடுத்து வீட்டுப்பயன்பாட்டுக்குப் புழங்கிவந்துள்ளனர். சாம்பல் மேடு (Ash mound)  இங்கே இருந்துள்ளது. மேலும், வேட்டுவர் நடுகற்களும் கிடைத்துள்ளன. இவையெல்லாம் ஊரின் பழமையைப் பறைசாற்றும் சான்றுகள். பூலுவவேட்டுவர் என்று இப்பகுதியில் குறிப்பிடப்பெறுகிறார்கள். பூலுவரும் வேட்டுவரும் ஒருவரே ஆகலாம். பழங்குடிகளை நாகரிகக்குடிகளாக மாற்றுவதற்குச் சோழர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி ஓரளவு வெற்றிபெற்றது எனலாம். காலம் செல்லச்செல்ல, அவர்கள் வேறுவேறு தொழில்களில் ஈடுபட்டனர். வாணிகமும் நிறைய நடைபெற்றது.
 
பாடிகாவல்
தமிழ்நாட்டின் வடபகுதியில் மட்டும் கிடைக்கும் ஒரு கல்வெட்டுச்சொல் இங்குள்ள கல்வெட்டில் கிடைத்துள்ளது. பாடிகாவல் என்பது அச்சொல். பாடி என்பது ஆடுமாடு ஆகிய கால்நடைகளைப் பாதுகாத்து வைக்கும் இடமாகும். நாளடைவில் நிலையான ஊராகும்போது பாடி என்னும் பெயர் ஊர்ப்பெயருடன் இணைந்தது. பாடிகாவல் என்பது ஊர்க்காவலையும், ஊர்க்காவலுக்காகப் பெறுகின்ற வரியையும் குறிக்கும். இந்தச்சொல் முதன்முதலில் தேவாரத்தில்தான் வந்தது. “பாடிகாவலில் பட்டு உழல்வீரே என்பது நாவுக்கரசர் தென்கோடிக்காவில் பாடிய பாட்டில் வரும் தொடர். பாடிகாவலைக் கீழானதாக அப்பர் நினைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. ஆனால், காரணம் தெரியவில்லை. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில்தான் கல்வெட்டுகளில் பாடிகாவல் சொல் கிடைக்கிறது. அதற்குமுன்னர், சோழர்கள் பாடிகாவலைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால், உள்ளூரில் இருக்கும் மக்கள் அந்த ஊர்க்காவலர்களுக்கு ஊதியமாகப் பாடிகாவல் வரியைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, அரசு நிர்வாகத்தில் வராத சிறிய நிலையிலான பாடிகாவல் வரிபற்றிக் கல்வெட்டில் வரவில்லை. முதல் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் காலத்திலிருந்துதான் பாடிகாவல், கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஒரு சிலர், தமக்கு வரவேண்டிய பாடிகாவல் வருமானத்தைக் கோயிலுக்குக் கொடையாக அளித்துள்ளனர். சிறிய நிலையிலான பாடிகாவல் சோழர் காலத்தில் பெரிய நிலைக்கு உயர்கிறது. பாடிகாவல் பற்றிய கல்வெட்டு இந்தக்கோயிலில் மட்டுமே உள்ளது. வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பாடிகாவல், தமிழகத்தில் வேறெங்கும் இல்லை; இங்கு களந்தைக்கோயிலில் இருப்பது சிறப்பு.
 
கோயிலின் பெயர்க் காரணம்
தற்போது “ஆதீஸ்வரம்”  என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்பெயர், சமணத் தீர்த்தங்கரரில் முதல்வரான ஆதிநாதர் என்னும் ரிஷபதேவர் பெயரால் வந்தது என்று சில அறிஞர்களின் கருத்து. இப்பகுதியில், பல சமணக்கோயில்கள், சைவக்கோயில்களாக மாற்றப்பட்டதன் அடிப்படையிலும், இக்கோயிலில், பரியங்க ஆசனத்தில் அமர்ந்து தவம் செய்யும் தோற்றத்தில் உள்ள ஒரு முனிவரின் சிற்பத்தின் அடிப்படையிலும் மேற்படி கருத்து உருவாகியிருக்கலாம். ஆனால், முனிவரின் சிற்பம், சமண முனிவரின் தோற்றத்தில் இல்லை; அது, ஒரு சைவமரபைச்சேர்ந்த முனிவரின் தோற்றத்தில்தான் காட்சியளிக்கிறது. எனவே, சோழ அரசன் முதலாம் ஆதித்தன் பெயரால் இக்கோயிலின் பெயர் அமைந்தது என்றே கொள்ளவேண்டும். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 870-907. ஆனால், கோயில் பிற்காலத்தது.
 
களந்தையும் வச்சணந்தி முனிவரும்
வச்சணந்தி மாலை என்னும் இலக்கண நூலை இயற்றிய வச்சணந்தி முனிவர் இப்பகுதியைச் சேர்ந்தவர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதன் அடிப்படையில்
 
முடிவுரை
இதுகாறும் நாம் அறிந்தவற்றால், பொள்ளாச்சி, ஆனைமலைப்பகுதிகளில் தாய்தெய்வ வழிபாடே பழங்குடி மக்களால் சிறப்பாகவும் முதன்மையாகவும் பின்பற்றப்பட்டது என்பதும், பழங்குடிகளை நாகரிகக் குடிகளாக  மாற்றிய சோழர்களின் செயல்பாடும், பழங்குடியினரின் தாய்த்தெய்வத்தைப் பெருஞ்சமயத்தில் சிவனின் மனைவியாக இணைத்துக்கொண்ட செயல்பாடும், மக்கள் சமுதாயத்தில் காலமும், ஆட்சி அதிகாரமும் எத்தைகைய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
 
குறிப்பு: கரைப்பாடி, ஆனைமலை, திருமூர்த்திமலை ஆகியவை பற்றிய செய்திகளை
அடுத்துவரும் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தொடரும்.





 
 

___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________
 
 

No comments:

Post a Comment