Sunday, December 27, 2015

கல்வெட்டுகள் உதிர்க்கும் செய்திகள்

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


பேரிடர்கள் நிகழும்போது துயர் துடைக்கத் தொண்டுள்ளங்கள் இணைவதை நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். அண்மையில் வெள்ளம் நிகழ்த்திய அழிவுத் தாக்கத்தின்போதும் அவ்வாறுதான் நடந்தது. களத்தில் நேரடியாக இறங்கி உயிர் காத்தும், உணவும் நீரும் அளித்தும் மனிதத்தை மலையளவு உயர்த்தினர். அடுத்து அழிவிலிருந்து மீளும் முயற்சிகளில் கைகொடுக்க நிதிக் கொடை தொடர்கிறது. சமுதாயத்தின் எல்லா நிலையினரிடமிருந்தும் நிதிக்கொடை. இவ்வகையில், பணியிலுள்ளோரும், பதவியிலுள்ளோரும் தங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கொடையாக அளிப்போர் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். ஒரு மாதம் அல்லது ஒரு நாள் ஊதியம் கொடையாகச் செல்கிறது. இவ்வகைச் செய்திகளை நாளிதழில் காண்கையில், கோவை-பேரூர் பட்டீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்று நினைவுக்கு வந்தது. அதில், ஒரு நாள் ஊதியம் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி தற்போதைய நிலைமையோடு இயைந்து நிற்பதைப் பார்க்கிறோம்.

கல்வெட்டு தொடர் எண் : 122 / 2004 (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1)         

கல்வெட்டுப் பாடம்:

1.  ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்டு 2-ஆவது ஆளுடையார் இடங்கை நாயகீஸ்வரமுடையார் நடுவிற்சமக்கட்டோமும் அம்மன
2. க்காறரோமும் சேனாபதிகளோமும் நாயகஞ்செய்வா
3. ர்களோமும் மற்று இத்தந்திரத்தில் கொற்றுண்ண கடவாரெல்லாம் ஆட்டொரு நாளை படி குடுத்தோம் சந்திராதி
4. த்தவர் செல்வதாக கல்வெட்டிக் குடுத்தோம் நடுவிற்சமக்கட்டோம் பந்மாஹேஸ்வர ரக்‌ஷை


கல்வெட்டில் வருகின்ற கொங்குச்சோழ அரசன் இரண்டாம் விக்கிரம் சோழன் ஆவான். அவனுடைய இரண்டாம் ஆட்சியாண்டில் – கி.பி. 1258-இல் – கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அவனது படைகளில் ஒன்றான நடுவிற்சமக்கட்டார் என்னும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும், அம்மனக்காறர் என்னும் பதவியிலுள்ளோரும், சேனாபதிப் பதவியிலுள்ளோரும், படைகளின் நிர்வாக மேற்பார்வை செய்யும் நாயகம் செய்வார் என்பவரும், அந்தத் தந்திரத்தில் (படைத்தளத்தில்) கொற்றுண்ணக்கடவாரும் (படைப்பிரிவின் ஊழியர் தொகுதி) ஆகிய எல்லாரும் ஆண்டுக்கொருமுறை (ஆட்டொரு) ஒரு நாள் வருவாயைக் கோவிலுக்கு அளிப்பதாகக் கல்வெட்டிக் கொடுத்துள்ளார்கள். இக்கொடைச் செயல் நிலவும் கதிரும் உள்ளவரை (சந்திராதித்தவர் செல்வதாக) நடக்கட்டும் என உறுதி ஏற்கிறார்கள். இக்கொடைச் செயல் தவறாது நடப்பதைப் பந்மாஹேச்வரர் என்னும் அதிகாரிகள் கன்காணித்துக் காப்பார்களாக என்னும் காப்புறுதியோடு கல்வெட்டு முடிகிறது.

பெரும்பதவிகளில் இருந்த பலர் கொடையளித்துள்ளது போலவே, அப்படையில் சிற்றாள் பணியில் இருந்த ஊழியர்களும் கொடையளித்துள்ளது வேறுபாடில்லா ஒற்றுமையைச் சுட்டி நிற்கிறது.  கல்வெட்டில் நாம் கண்டது மகேசன் தொண்டு. இந்நாளில் நாம் கண்டுகொண்டிருப்பது மக்கள் தொண்டு.





து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
 
 
 

மண்டிக்கிடக்கும் நினைவுப்புதர்கள்


கண்ட கனவுகள்
கொண்ட நினைவுகள்
மண்டிக்கிடக்கும் நிகழ்வுப்புதர்கள்
மனமெனும் காட்டிடத்தே!        {மலர்விழி}

​மனப்புழுக்கத்துக்கு​
உடல் வியர்க்கிறது
உடல் புழக்கத்துக்கு
மனம்  அயர்கிறது
இரண்டையும்  குழைத்தே
கட்டிய  கட்டிடம்                {தமிழ்த்தேனீ}

கட்டிய கட்டிடம்
பூட்டிய அறைகள்
புழங்காத உறவுகள்
படியாத பேரங்கள்
உரிமைச் சாளரங்கள்
உண்மை உணரா
உன்னதப் பாழ்வெளி            {மலர்விழி}

பாழ்வெளியின் சூழ்வெளிகளால்
ஊழ்வலியின் சூழ் வலிகளால்
ஆழியும் புகுந்தே பாழ்பட்டே போனது
கோழிமேடும் குப்பைமேடும்        {தமிழ்த்தேனீ}

குப்பைமேடும் கோபுரமும்
தப்பைத் தானுணர்ந்து
நட்டாத்தில் போனகதை நாடறிய
ஒப்புமோ நட் (ஷ்) டக்கணக்கு        {மலர்விழி}

கணக்கெல்லாம் எழுதினாலும்
பிணக்குதான் தீரவில்லை
மக்களுக்கும்  அரசுக்கும்
எக்கணக்கும் இல்லை நேர்மையாய்     {தமிழ்த்தேனீ}

நேர்மையாய் நேரியதாய்
தார்மீகமாய் செய்யாததை
பார்மீது காட்டிடவே மண்மீது
பிராண்டியதோ பேய்மழையே!?        {மலர்விழி}

பேய் மழையும் பேரிடராய்
ஆனதற்கு காரணமே
பாய்முதல் படுக்கை வரை
சுருட்டியதன் காரணமே
செத்துப்  போன  மனிதத்துக்கு
சொத்து சேர்க்கவே            {தமிழ்த்தேனீ}

சொத்துச்சேர்க்கவேதான்
வெத்துவேட்டுகளைக்கூட்டிகிட்டு
மொத்துமொத்தாய் மொடாமொடாவாய்
கொத்துக்கொத்தாய் கொள்ளைக்கூட்டமாய்
ஏத்திவச்சிவினைதானே அரசியல் கட்சிகளால்
ஆனதுவே ஆனதுவே கபளீகரம்!?        {மலர்விழி}

கபளீகரம் செய்ததெல்லாம் போதாதா
கடல் வழியே​ சுனாமியாய்
பூமிக்குள்ளிருந்து பூகம்பமாய்
இன்னும் தொடர்கிறீர் நடிப்பின் உச்சம்
அடுத்து  ஆட்சியைப் பிடிக்க        {தமிழ்த்தேனீ}

அடுத்து ஆட்சியைப் பிடிக்க
அரசியல்வாதிகள் போடுவர் திட்டம்
இவரது குட்டை அவர் உடைக்க
அவரது முகத்திரையை இவர் கிழிக்க
குப்பையைக் கிளறி கிளறி
தாங்கவியலாத முடை நாற்றம்
கிடைப்பதென்னவோ மக்களுக்கு
நிரந்தரமாக என்றுமே பட்டை நாமம்     {தேமொழி}

பட்டையும் நாமமும் நெற்றியில் மட்டுமே
மொத்த உடலும் மனமும் குப்பைதான்
சட்டை செய்யாத  மனிதரிவர்
குட்டையும்  குளமும் ஆக்ரமித்தாலும்
வாக்கு வேட்டை மட்டுமே குறி
முடை நாறாமல் என்ன செய்யும்        {தமிழ்த்தேனீ}

என்ன செய்யும் எப்படிச்செய்யும்
இன்னபிறயாரரிவார் காலமகள்
தின்னமாய் பதிலுரைப்பாள் அவருந்தான்
திருந்துவரோ மனதுள்ளும் மனிதராய்?     {மலர்விழி}

மனிதராய்ப் பிறக்கவே
மாதவம் செய்தோமென்றார்
மனிதராய் வாழ்ந்திட
மா மாதவம் வேண்டுமன்றோ!        {அன்பு ஜெயா}

மா மாதவத்தை மன்பதையில் ஈண்டு
மாமாதவம் என்றே மாறியுணர்ந்தார்
மாமாவேலைக்குப் பலர்வந்ததாலே
மா மாதவத்தோர் மறைத்தனர் நொந்து     {மலர்விழி}

நொந்து போன மக்களுக்கு ஆதரவாய்
மா  மா   பெரும்  சேவைக்கு
மனிதம்  துணை வந்ததால்
பேரிடர் மா மதயானையும்
மறைந்தே   நொந்ததே            {தமிழ்த்தேனீ}

நொந்ததே என்று தளர்பவருக்கும்
வந்திடும் ஓர் நாள் புது வாழ்வு
கடந்ததை எண்ணிக் கலங்காது
இழந்ததை எண்ணிப் புலம்பாது
வருவதை எதிர்கொள்வோருக்கு
வாழ்வில் என்றுமே தாழ்வில்லை         {தேமொழி}

தாழ்வில்லை என்றே உணர்ந்து
தளராது முயல்வோரே
தரமான  தருணம் இது
தலைதூக்கி எழுந்து வாரும்
மனிதம்  தலை தூக்கினால்
மற்றவை   தலை கவிழும்            {தமிழ்த்தேனீ}

கவிழும் தலை காசினியில் நிமிர்ந்திடவே
கங்கணம் கட்டி வந்திடும் உள்ளங்கள்
கணக்கின்றி உள்ளனவே காண்போம்,
கண்குளிர்வோம், கவலை அகற்றிடுவோம் {அன்பு ஜெயா}

அகற்றிடுவோம் குப்பை நினைவுகளை
கூடவே   குப்பை  மலைகளைகளையும்
நாடு செழிக்கட்டும்  நாற்றம் ஒழியட்டும்
பீடு நடைபோடுவோம்     காசினியிலே    {தமிழ்த்தேனீ}

காசினியிலே கரங்கள் பலவுண்டு
மாசில்லா மனங்கொண்டு நெகிழ்ந்து
பாசிபடியா பளிங்கு உணர்வதுகொண்டு
வாசமலராய் வந்தாரே உதவிக்கரங்களாய் {மலர்விழி}

உதவிக் கரங்களாய் நிதமும் வாழ்ந்திடுவீர்
மதமான பேய்தனையே மன்பதையில் நீக்கிடுவீர்
இதமான இன்சொற்கள் என்றும் பேசிடுவீர்
எதுவுமில்லை இவ்வாறு வாழ்வதற்கு ஈடு! {மேகலா}

ஈடு இணையற்ற மானுடப் பிறவியிலே
தேடு நல்லோரின் நட்பினையே நீஎன்றும்
கூடு அறவோர்கள் அவைக்களம் தன்னிலே
ஓடாதோ தீமை உனைவிட்டு வெகுதூரம்?! {மேகலா}

வெகுதூரம் சென்றாலும் அருகினிலே நின்றாலும்
மிகுந்த அன்பினையே நம்மீது பொழிந்துநிற்கும்
அன்னை அவள்தானே நமக்கெல்லாம் ஆதாரம்
என்றும் அவளைநாம் போற்றிடுவோம் பொன்போலே! {மேகலா}

பொன்போலே  மனமிருக்க பேராசை
செம்பு கலந்து   கனமாக ஆக்கி
விற்று பொருளீட்டி சேர்த்து வைத்தால்
மண்ணாகும்  கடலில் கலந்து        {தமிழ்த்தேனீ}

கலந்து மகிழவே கண்கொண்டு போற்றவே
நொந்து நூலானார் காரணிகளானாரே
வெந்த மனவேக்காடுகள் வெருண்டோடியதே
வசந்தமெனவந்தாரைவருடிநிற்போம்வாஞ்சையாய் {மலர்விழி}

வாஞ்சையாய் வருடி நிற்க
நாம் தயார்  வருடலை
பூஞ்சையாய்  மனம் கொண்டோர்
ஏற்பரோ  வாஞ்சையென்றே         {தமிழ்த்தேனீ}

வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்
கொஞ்சமேனும் கருணையற்ற பிள்ளை
நெஞ்சமதில் அன்பின்றி துரத்தியதால்  
பஞ்சைப் பராரியாய் அலையும் பெற்றோரே
நஞ்சு தோய்த்து அவர் உதிர்க்கும் இன்மொழியை 
வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்     {தேமொழி}

ஏமாறாதீர்​  வஞ்சப் புகழ்ச்சியினை
அள்ளித் தெளிப்போரிடம் ஏமாறாதீர்
அழ அழச் சொல்வோர்  தமர்
அதிகமாய்ப் புகழ்வோர்  அளிக்கும்
விஷப் போதை தலைக்கேறும்
ஆயினும்  உயிர்  குடிக்கும்        {தமிழ்த்தேனீ}

உயிர் குடிக்கும் துணிவு பெற்றது
போலி மதவாதிகளின் கூட்டம்
கடவுள் எமக்கே உடைமை என்றே
கூசாது பொய்யுரைத்து போராட்டம்
மாந்தர் யாவரும் சமம் என்றாலோ
சகித்திடாது செய்வர் ஆர்ப்பாட்டம்
உண்மையை மறைத்து பழியுரைத்து
நன்றே நடத்திடுவர் பித்தலாட்டம்        {தேமொழி}

பித்தலாட்டம் செய்கின்ற
எத்தருக்கே   பித்தலாட்டம்
நன்கு வரும் மாந்தரெல்லாம்
சமம் என்றே வாய் வீச்சு
அதிகம்  வரும்  மேடைப்
பேச்சு வீரர்கள் கீழே இறங்கினால் 
கடவுளுக்கும்   மனிதனுக்கும்
பணம்தானே  சமம்
எல்லாமே  பணம்            {தமிழ்த்தேனீ}

எல்லாமே பணம் எல்லாமே பணம்
பிச்சாண்டியை மதிப்பவருண்டோ
பெருமைமிகு பெரியகோவிலில்
சொக்கரும் மீனாளின் கருணை வேண்டி
சிறப்பு தரிசனம் செய்யச் சென்றால்
சொக்கருக்கும் வேண்டுமந்த பணம்
காசு பணம் துட்டு மணி மணி        {தேமொழி}

மணிமணியாய் பிள்ளைகள்
பிணியற்ற பெருஞ்செல்வம்
துணிவான மனச்செல்வம்
கனிவான வாழ்க்கைத் துணை
அத்துணையும் துணையிருந்தால்
பணம் என்னடா பணம் பணம்
குணம்தானடா நிரந்தரம்            {தமிழ்த்தேனீ}

நிரந்தரம் ஏதெனத்தேடித்தேடியே
பம்பரமாய்ச் சுற்றியே வந்திடினும்
தம்புராக்கொண்டே மீட்டியே அலைந்தாலும்
தம்பிரானருள் தேடிவரும் நல்லான்மாவிடத்தே {மலர்விழி}

மாவிடத்தே கைக்கொள்ளினும்
பூநாகமாயினும் பூவிடத்தே
உள் கொள்ளினும் ஆவிடத்தே
கொள்கின்ற பாலாயினும்
திரியும் தீயோர் கண்பட்டால்        {தமிழ்த்தேனீ}

கண்பட்டால் வருந்தீங்கைக் காட்டிலுமே பிறர்மனந்தான்
புண்பட்டால் பெருந்தீங்கு வந்திடவே காண்கின்றோம்
பண்பாட்டால் நற்பண்பைப் பாங்கோடு காத்துநின்றால்
மண்வந்த பயனைத்தான் மானுடமும் எய்தாதோ? {மேகலா}

எய்தாதோ  மானுடம் உய்யும்
இலக்கு  தீயவை கண்டால்
விலக்கி மானுடம் வென்றிடவே
மனதை   இளக்கி மனிதம்
போற்றினால் மண் வந்த பயன்        {தமிழ்த்தேனீ}

பயனை நாடாது தொண்டு செயும் உள்ளத்தார்
தயவு பூமிக்குத் தாராளமாய்க் கிடைத்தால்
உலகம் உய்வடையும் மக்களும் உயர்வடைவர்
கலகம் ஒழிந்தேதான் குவலயமும் சிறந்தோங்கும்! {மேகலா}

சிறந்தோங்கும் என்றெண்ணி
சீர்மைப்படுத்தும் போதெல்லாம்
அறந்தாங்கி ஆன்மபலம்  பெற்றே
பிறந்தோங்கி நிற்கும்  மனிதம்        {தமிழ்த்தேனீ}

மனிதம் மலர்ந்திடவே மதவெறியும் ஒழிந்திடவே
புனிதம் அடைந்துவிடும் நம்புவியும் ஓர்நாளில்
கனிபோல் நல்லவைகள் நம்முன் குவிந்திருக்க
இனியும் அல்லவையாம் காய்கவர்வ தெதற்காக? {மேகலா}

கவர் தெதற்காக  பாடுபட்டு
உழைத்து சேர்த்த  அடுத்தவர்
செல்வத்தை ஈடில்லா உயிரையும்
போக்கி  கேடு விளைவிக்கும்
தீச்செயலாம்  இழிவான பாவங்கள்
சேர்த்து   மனசாட்சியியையும்
சேர்த்தே அழித்து நீதியின் முன்னால்
பதுங்கவா மாட்டியபின் கயவராய்க்
கூண்டில்  நின்று தலைகுனிந்து
குற்றம்  இழைத்தவராய்
வெதும்பவா   மன்னிப்பு கேட்டு        {தமிழ்த்தேனீ}

மன்னிப்பு கேட்பவன் மனிதனென்றால்
மன்னிப்பவன் மாநிலத்தில் மாமனிதன்
எண்ணிப் பார்த்தால் இப்புவியல்
கண்டிடலாம் மனவமைதி மாந்தர்களே     {அன்பு ஜெயா}

மாந்தர்களே தவறிழைப்பார்
மன்னித்தால் மகேசனாகிறார்
கண்ணி வைக்கும்  குணத்தோரே
எண்ணிக்  குமைந்து  மந்தராகிறார்     {தமிழ்த்தேனீ}

எண்ணிக்  குமைந்து  மந்தராகியவரும்
பண்பினில் சிறந்தால் மாந்தராகிடுவார்
அன்பில் திளைத்துப் புனிதராகியே
மன்பதை காத்திடும் தன் மனச்செல்வம்    {தேமொழி}

மனச்செல்வமே மிகுபெருமை என்றும்
தனச்செல்வமே செருக்குடைத்து ஞான்றும்
தினஞ்செல்லுமே ஊசலாட்டமாய்த் தோன்றும்
கனம்விலகுமே மாயைத்திரை         {மலர்விழி}

மாயத்திரை விலகினாலே
மாயவனை அடைந்திடவே
மங்கலமாய் வழிபிறக்கும்
சங்கமமா குமான்மாவே             {அன்பு ஜெயா}

ஆன்மாவே ஆனந்தங்காணும்
ஆன்மத்தேடலை ஆரம்பித்துவைக்கும்
ஆன்மநிவேதனமாய் ஆராய்ந்துணரும்
ஆன்மாவே தானாய் ஆடியடங்கும்    {மலர்விழி}

ஆடியடங்கும் ஆன்மாதான்
அவனடியைச் சேர்ந்தபின்னே
நாடியே அனுபவிக்கும்
நாதனின் அருளைத்தான்            {அன்பு ஜெயா}

​அருளைத்தான் தேடியே அவன்தாள்​
பணிந்தோர்க்கு  அவன் கருணை
முழுவதுமாய் கிடைத்தே தீரும்
அவநம்பிக்கை தவிர்            {தமிழ்த்தேனீ}

தவிர்ப்பன தள்ளி நாமும்
ஏற்பன ஏற்போம் எப்போதும்
சேர்ப்பன சேர்ப்போம் நிதமும்
பார்ப்பனவெல்லாம் பண்புடனாகட்டும்    {மலர்விழி}

பண்புடனாகட்டும் என்று முடிவெடுத்து
நல்லன சேர்த்து அல்லவை தவிர்த்தாலே
பண்புடன்  ஆகும் முடிவிலே 
நிச்சயம் அறம் பெருகும்            {தமிழ்த்தேனீ}

பெருகும் தண்ணீரைத் தக்கவண்ணம் காத்திட்டால்
கருகும் பயிர்காத்து வேளாண்மை செய்திடலாம்
விரும்பி இப்பணியை அரசுந்தான் ஏற்றிட்டால்
அருகிடுமே பஞ்சமும் பசிப்பிணியும் மாநிலத்தே!    {மேகலா}

பசிப்பிணியும் மாநிலத்தே ஒழிந்திடுக 
பல்லுயிரும் இன்புறவே நல்லறம் ஓங்கிடுக
பாரெல்லாம் அன்புநெறி தழைத்திடுக
பாங்குடனே சிறந்தென்றும் வாழ்ந்திடுக     {தேமொழி}

வாழ்கவே வளர்கவே மனிதநேயம்
வாழ்வாங்கு நம்மினம் வாழ்ந்திடவே
தாழ்கவே தருக்கரின் சூழ்ச்சிகள்
வாழ்கவே தமிழென்றும் நலமுடனே        {அன்பு ஜெயா}

நலமுடனே மாந்தரெலாம் வாழ்தல் வேண்டும்
பலகலைகள் பாரினிலே செழிக்க வேண்டும்
கலகங்கள் இல்லாத வையம் வேண்டும்
திலகமாய்த் தமிழதிலே திகழ வேண்டும்!        {மேகலா}

வேண்டும் என்றே வேண்டிக் கேட்போர்க்கு
விருப்பமானதை அளித்திடவே அவர் தகுதி
ஆராய்ந்து அதற்கேற்ப  அளிப்பவள்தான் சக்தி
ஆகவே பெண்களெல்லாம் சக்தி வடிவே        {தமிழ்த்தேனீ}

சக்தி வடிவென்றே பாடலெழுதுவார் ஒரு சிலர்
மறைப்போசைப் பாடலெழுதுவார் மறு சிலர்
பெண்ணுக்குப் பரிந்து பாடலெழுதினார்
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
என்றார் சொல்வித்தகர் தந்தை அன்று
பெண்ணை அவமதிக்கும் பாடலெழுதுகிறார் 
அவர் வளர்த்த அருமை மகனார் இன்று
பீப் பீபீப்  ... பீப்  பீபீப் ... பீப்  பீபீப் ...
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
பீப் பீபீப்  ... பீப்  பீபீப் ... பீப்  பீபீப் ...             {தேமொழி}

பீப்பீ  என்றே நாதஸ்வரம் ஒலிக்க
கோப்பிலே கையெழுத்திட்டு 
உறுதி செய்த திருமணம்
பதிவு அலுவலகத்துக்கு பக்கத்தில் கோயிலாம்    {தமிழ்த்தேனீ}

கோயிலில்லா ஊரில் குடியிருந்தால்
கோலாகல மாய்மண முடிக்க
வாயிலேது பதிவு இல்லையேல்
வாழ்நாளில் மனமொத்தல் போதுமே!        {அன்பு ஜெயா}

போதுமே என்று நினைத்தாலே
பொன்னாகும் வாழ்க்கை மீறுவோர்
வீழுவார் வஞ்சகர் வலையிலே
ஆழுவார் எப்போதும் துயரிலே            {தமிழ்த்தேனீ}

துயரிலே உறுதியிழப்பார் நட்பாம்
பயிரிலே செழித்து எழுவார்
கயறிலே தொங்கிமாய நினைத்தாரும்
அயர்வினின்றும் மீள்வர் எழுந்து            {மலர்விழி}

எழுந்து நடக்கும் குழந்தை கீழேயும்
விழும் விழுந்தாலும் மீண்டும் எழுந்து
ஓடும் இடறினாலும் எழும் திறமை
பெறும் அதுதானே  வெற்றி            {தமிழ்த்தேனீ}

வெற்றி கொண்டாலும் தோல்வியே கண்டாலும்
சற்றும் தங்குணத்தில் மாறாது நின்றிடலே
கற்றோர்க்கு அழகாகும் கவின்மிகு பண்பாகும்
சுற்றமாய் அவர்தம்மை இப்புவியும் சுற்றிநிற்கும்!     {மேகலா}

நிற்கும்  என்றும் நிற்கும் நிரந்தரமாய்
வெற்றி எப்போதும்  நம்முடனே
கற்கும்  கல்வியினால் பெறும்
வித்தையினால் நிற்கும் வெற்றி            {தமிழ்த்தேனீ}

வெற்றியை அழைத்துவரும் அரிய முயற்சியினைப்
பற்றிக் கொண்டவர்தாம் பாரிலே உயர்ந்திடுவார்
புகழும் பதவியுமே அவர்வாசல் வந்துநிற்கும்
சகமும் அவர்சொல்லைத் தட்டாமல் கேட்டுநிற்கும் {மேகலா}

நிற்கும் போட்டியில் அனைவரும்
ஜெயித்தால் அதென்ன போட்டியா 
அதற்கொரு பேட்டியா  ஊடகம்
நினைத்தால் நிற்காததும் நிற்கும்             {தமிழ்த்தேனீ}

நிற்கும்  தானாய் நிற்கும் என்றே
அநியாயங்களைக் கண்டும் காணாமலும்
போனதால்  வந்த  வினை
அறம் பாடினால் நிச்சயம்  நிற்கும்              {தமிழ்த்தேனீ}



Sunday, December 13, 2015

பாரதி காட்டும் ஒலி அலைகள்!


--ஷைலஜா.
 
 

எதிரே விண்ணை  முட்டும் கோபுரம் தெரிகிறது. தொலைவில் மண்ணை முட்டும் தொடுவானம் தெரிகிறது. சிறகிருந்தால் இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து  கிளம்பி அந்தத்தொடுவானம்  வரை  சக்கர வட்டம் அடிக்கலாம். என்னும் ஆசை எழுகிறது. நமக்குச்சிறகு இல்லை ஆனால் என்ன? வானத்துக்கும் மண்ணுக்குமாய் நாம் சவாரி செய்வதற்கு ஏற்ற  வாகனம்  ஒன்று  இருக்கிறதே!

பாரதி பாடுகிறார்...

தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச் செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரை கொண்டேறித் திரியுமோர் உள்ளம் படைத்து விட்டோம்.

ஆம் காற்றுதான் அந்த வாகனம். அதிலே  ஸ்தூலமாக அதாவது  இயல்பான உருவத்துடன் செல்லமுடியாதுபோனாலும், சூட்சமமாக அதாவது  உணர்வினால் சவாரி செய்யலாம் அத்தகைய உள்ளம்  படைத்திருக்கிறோம் நாம்.

’மண்ணுலகத்து நல்லோசைகள்  காற்றெனும் வானவன் கொண்டுவந்தான்’. என்கிறார் மகாகவி. இந்தக்காற்று நமக்குப்பணிவிடை செய்கிற தூதுவனாக விளங்கி எத்தனை எத்தனை சப்த ஜாலங்களை, ஒலி அலைகளை ஏந்தி வருகிறது! அவை எல்லாவற்றையும் மண்ணில் இசைத்துப்பாடி மகிழ வேண்டும் என்கிற ஆசை எழுகிறதல்லவா!

ஒரு கவிஞர் சொன்னார் “இறைவா  இந்த உலகத்தில்தான் எத்தனை அன்பு நிறைந்திருக்கிறது! அந்த அன்பை எல்லாம்  வாரிச்சுருட்டிக்கொண்டுவிடமுடியுமானால் எத்தனை பேறு அது!”

அன்புக்கு மட்டுமல்ல  ஒலிக்கும் அதே தாபம்தான்.  பாரதியின்  வசனகவிதையில் இதனைக்காணலாம்...

பாரதியின் வசன கவிதை இனிமைகொண்டது. எளிமையானது, கவிதைநயம் மிக்கது,  உயிர்த்துடிப்பான  ஓட்டம்பரவியது!

பாம்புப் பிடாரன் பற்றிப் பாரதி தன் வசன கவிதையில்கூறுவதைப்பார்க்கலாம்.

பாம்பு அவன் இசைக்கு மயங்கி ஆடுகிறது,ஆனால் பாம்புக்கு செவி இல்லை என்கிறார்கள் பிறகு ஏன் அது ஆடுகிறது? பாம்புக்கு செவி என்று தனி உறுப்பு இல்லை ஆனால் தன் உடல் முழுதுமே ஒலி அலைகளை உள்வாங்கி புல்லரித்து நர்த்தனமிடும் அபூர்வ நாத லயம் நிறைந்திருக்கத்தான் வேண்டும்!

இசையை இப்படி உடல்முழுதும் வாங்கி மகிழும்  பிராணி வேறு ஏதும் உண்டா என்று வியப்பு ஏற்படுகிறது! அதிருக்கட்டும்  பாம்புப்பிடாரன் குழல் ஊதுகிறானே அந்தக்குழலிலா இசை பிறந்தது! குழல் தனியாக  இசை புரியமுடியாதே! அப்படியானால் குழலில் உள்ள தொளைமூலமாக இசை பிறந்ததா? வெறும் தொளையில் இசை பிறக்கமுடியாதே! அப்படியானால் பாம்புப்பிடாரன் மூச்சிலே  பிறந்ததா இந்த இசை?

கேள்வி சிக்கலாக இருக்கிறது.

பாரதி பதில் சொல்கிறார்...
”அவன் உள்ளத்திலே இசை பிறந்தது, குழலிலே வெளிப்பட்டது!”

அவன் உள்ளத்தில் பாடுகிறான். அது குழலின் தொளையிலே கேட்கிறது’  என்கிறார் தன் வசன கவிதையில். ஆனால் நமக்குத்திருப்தி பிறக்கவில்லையே! உள்ளத்திலே இசை பிறந்தாலும் உள்ளம் தனியே எப்படி ஒலிக்கும் என்று கேட்கிறோம்.  நியாயம் தான்.

உள்ளம்  குழலில் ஒட்டாது. ஆனால் உள்ளம் மூச்சில் ஒட்டும். குழல் கூட எப்படி தனியே ஒலிக்கும்? மூச்சு குழலில் ஒட்டும், குழல் பாடும்!

பொருந்தாத பொருள்களைப்பொருத்தி வைத்து அதிலே இசை உண்டாக்குதல்...சக்தி.

இந்த அபூர்வமான  விளக்கத்தை பாரதியின் வசன கவிதையில் பார்க்கிறோம். மூச்சிலே ஒட்டும் உள்ளமும், காற்றிலே சவாரி செய்யும் உள்ளமும் அழகும் அருளும் நிறைந்த இப்பெரிய உலகின் ரசானுபவங்களை எல்லாம் நமக்குக்காட்டுகின்றன!

ஒலிமயமானது உலகு! அத்தனை ஒலிகளும் இசைக்கீற்றுகள். அவற்றைக்கேட்டுப் பண்ணிசைக்கும் உள்ளமெல்லாம் பாக்கியம் செய்தவை!

எதிரே கோபுரம் தெரிகிறது அது அழகின் வார்ப்பு! தொலைவில் தொடுவானம் தெரிகிறது அது அருளே வடிவான இறைவன் கருணையுடன் மண்ணைத்தொட்டு நிற்கும் பூரிப்பு!

தெரியும் பொருளைக்கொண்டு தெரியாத பொருளை எட்டிப்பிடித்துவிட முடியும் என்கிற தத்துவம் புரிகிறது!

ஒலி அலைகளும் அதே வித்தையைத்தான் உணர்த்துகின்றன. அவை புற உலகை மட்டுமல்லாது அக உலகையும் நமக்குக்காட்டுகின்றன. அவ்வாறு காண்பதில் வெறும் காட்சி இன்பம் மட்டுமல்ல காட்சிக்கு அப்பாற்பட்ட இறையருளின் மாட்சி இன்பமும் நமக்கு வாய்க்கின்றன!
இது எத்தனை பாக்கியம்!



 
 
 
ஷைலஜா
shylaja01@gmail.com