Monday, November 14, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 6

- இராம.கி.

அடுத்தது பதிற்றுப்பத்தின் இரண்டாம்பத்துப் பதிகம். இரண்டாம்பத்தைப் பாடியவர் குமிட்டூர்க் கண்ணனார். பாடப்பட்டவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். பதிகம்பாடியது யாரென்று தெரியவில்லை. பதிகங்கள் மூலத்தோடன்றி உரைச்சுவடிகளில் மட்டுமுள்ளதால், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் இவற்றை இயற்றியிருக்கலாமென்பர். கடைசிப்பத்தின் தலைவனான யானைக்கட்செய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குப் பின்னிருந்த ஆதன்களும், இரும்பொறைகளும் இதில் இடம்பெறாததால், கடைசிப்பத்து எழுந்த சில ஆண்டுகளில் (பொ.உ.மு. இறுதிகளில்) தொகுப்பு நடந்திருக்கலாம் என எண்ணுகிறோம். இப்பதிகம் சிறியதாயினும் நெடுஞ்சேரலாதன் பெற்றோரில் தொடங்கி, முகன (main) வாழ்க்கை நிகழ்ச்சிகளை காலவரிசையிற் கூறுவதால் என் விளக்கமும் சற்று பெரிதாகிறது. ஊடே மண்ணுமங்கலம், வாள்மங்கலம், நெய்யிடுதல் போன்ற சில விதப்பான மரபுகளையுஞ் சொல்லவேண்டியுள்ளது.


மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற
மகன்
அமைவரல் அருவி இமையவில் பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்.
இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெண்ணாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ.. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்  
------------------------------
என்பது பாட்டும் பின்குறிப்புமாகும். பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள்வரும் புணர்ச்சிகளைப்பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
---------------------------
மன்னிய பெரும்புகழ் மறு இல் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு,
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்
அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ,
தகைசால் சிறப்பொடு பேர்இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து,
நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ,
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு,
பெருவிறல் மூதூர்த் தந்து,
பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்தாள்
இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெண்ணாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ.. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்
-------------------------------------
இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். மன்னிய பெரும்புகழ் = நிலைத்த பெரும்புகழும்; மறுஇல் வாய்மொழி = குற்றமிலா வாய்மொழியும்; இன்னிசைமுரசின் = இனிது இசைக்கும் முரசுங் கொண்ட; உதியஞ்சேரற்கு = வானவரம்பன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனுக்கு; இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-143 ஆகும். முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் இவனைப் பாடுவார். அதில் வரும் ஈரைம்பதின்மர் என்பார் நூற்றுவர் கன்னரே (சதகர்ணிகள்). பலருஞ் சொல்வது போல் பாரதப்போரின் கௌரவரல்லர். புறம் 2 இன் செய்தியை கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பது தேவையற்ற பௌராணிகப் பார்வை. உதியஞ்சேரல் காலத்திலேயே அசோகன்தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே மோரியருக்கடுத்து வந்த சுங்கரின்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதை. (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்தது. சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பாற்புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத்தொடரையும் படியுங்கள்.

http://valavu.blogspot.in/2010/08/2-1.htmlம்
http://valavu.blogspot.in/2010/08/2-2.html
http://valavu.blogspot.in/2010/08/2-3.html
http://valavu.blogspot.in/2010/08/2-4.html
http://valavu.blogspot.in/2010/08/2-5.html

வெளியன்வேண்மாள் நல்லினி = வெளியன்வேள் மகளாகிய நல்லினி; வெளியன்வேள் பெரும்பாலும் பொதினியைச் சேர்ந்த ஆவியர் குலமாகலாம். (இற்றைப் பழனியே பழம்பொதினி. அதனடிவாரத்தில் ஆவினன்குடி உள்ளது.) ஆவியர்குடியோடு சேரர்குடிக்குக் கொடிவழிதோறும் மணத்தொடர்புண்டு. ஈன்ற மகன் = ஈன்ற மகன்; உதியன் மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குடக்கோ நெடுஞ்சேரலாதனென்பர். இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 109. அக்காலத் தமிழகத்தில் 16/18 அகவையில் ஆண்மகனுக்குத் திருமணம் நடந்துவிடும். 20/25 இல் இளவரசுப்பட்டஞ் சூட்டுவர். ஆட்சியாண்டுகள், இளவரசுப்பட்டம் கட்டியதிலிருந்து கணக்கிடப்படும். இல்லாவிடில், ”58 ஆண்டு நெடுஞ்சேரலாதனாட்சி”, ”55 ஆண்டு செங்குட்டுவனாட்சி” என்ற தொடர்களுக்குப் பொருளிராது. அரசுப்பட்டம் அளிப்பு தனித்துநடந்ததாய் பதிற்றுப்பத்துக் குறிப்புகள் தெரிவிப்பதில்லை. 

நெடுஞ்சேரலாதனுக்கு 2 மனைவியருண்டு. நல்லினிசோதரன் வேளாவிக்கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங்கோமான்; கூட்டத்தலைவன்.) முத்தமகள் பதுமன்தேவியை முதல் மனைவியாய்ப் பெற்றான். அவள் மூலம் பிறந்தவர் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். அடுத்தவள் ஞாயிற்றுச்சோழன் மகள் நற்சோணை. இவளுக்குப் பிறந்த செங்குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்டவன். நெடுஞ்சேரலாதன் மகனாய்ப் பலருஞ் சொல்லும் இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தருகாதை 171-183 வரிகளிலன்றி வேறெங்கும் தென்படவில்லை. அக்காதையை இடைச்செருகலென நான் ஐயுறுவதால் இளங்கோ செங்குட்டுவன் தம்பியென என்னால் கொள்ளமுடியவில்லை. அவர் சிலம்பின் ஆசிரியர்.. அவ்வளவுதான். அவர்பற்றிய செய்திகள் வேறெங்குமோ, பதிற்றுப்பத்திலோ வரவில்லை. வரந்தரு காதையிலுள்ள பெரும் முரண்களை என்”சிலம்பின் காலம்” நூலில் தெரிவித்துள்ளேன்.

குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற தம்பியுண்டு. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவன் வேந்தனாகாததால், வானவரம்பனெனும் பட்டஞ்சூடான். அடுத்தது களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இவன்காலம் பொ.உ.மு. 131-107. இவன் இயற்பெயர் தெரியவில்லை. இவன் பெயர்முன்னொட்டு ஒருவகை முடியைக்குறிக்கும்.
நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்தபின், மூத்தாள் மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சமகாலத்தில் நெடுஞ்சேரலாதன் இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்கலாம். நெடுஞ்சேரலாதனுக்குப் பின்  நார்முடிச்சேரல் வானவரம்பனாகி அரசுகட்டில் ஏறினான். இவனுக்கு இன்னொரு பெயரும் இருக்கலாமென்று ஊகிக்கிறோம்.  

புறம் 62 இல் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளியும் (மைத்துனன்; நற்சோணையின் சோதரன்) பொருதுகையில் இருவரும் இறந்துபட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதேபொழுது புறம் 65 இல் நாகநாட்டுக் கரிகால்வளவன் [பெரும்பாலும் 2 ஆம் கரிகாலன். முதற்கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்ததைச் சிலம்பாலறிவோம். முதற் கரிகாலனையும், அடுத்தவனையும் குழம்பித் தமிழாசிரியர் தடுமாறுவார்.] வெற்றிபெற்றதையும், பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறென்பது புரியும். ஆழ ஆய்ந்தால் புறம் 62 இல் விவரிக்கப்படுபவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனென விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் யார்? .

நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டது பதிற்றுப்பத்தில் பெருஞ்செயலாய்ச் சொல்லப்பெறும். ”வாகைப்பெருந்துறைச் சேரலாதன்” என்று வருங்கூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம். அதைவைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதனென்றும் நடுத்தம்பியைக் குட்டுவச்(=சிறிய) சேரலாதனென்றும், கடைத்தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச்சேரலே பெருஞ்சேரலாதனாக வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டைப் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவன் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர்சொல்லாமற் குறிப்புவரும். 

இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப்பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர்பெற்றவனைப் பார்ப்போம். இவன்காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பலகாலம் தமிழறிஞர் பிளவுபட்டார். வேடிக்கையென்ன தெரியுமோ? இவன் இயற்பெயர் என்னவென இன்றும் யாருக்கும் தெரியாது. இன்றுங் குட்டுவனைக் குட்டனென மலையாளத்திற்சொல்வார். சிறியவனென்று பொருள். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோவகையிற் குட்டனாகலாம். ஈழப்பெருந்தலைவரான பிறகும், பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் தம்பியா? இல்லையே? விளிப்பெயரே பரவலாய் எல்லோருக்கும் பழகிப்போயிற்று. குட்டுவனும் அப்படித்தான். வெல்கெழு குட்டுவன் = வெல்லுங் குணங்கொண்ட குட்டுவன்;. செங்குட்டுவன் = செந்நிறக் குட்டுவன். அவ்வளவுதான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது வியப்பேயில்லை. சிலபெயர்கள் சட்டென்று பொருந்திக்கொள்ளும்.

செங்குட்டுவன் கங்கைக்கரைபோகிய செயல் பதிற்றுப்பத்தின் 4ஆம்பத்தில் வராது பதிகத்தில்மட்டுமே வரும். கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவன் கடைசிக்காலத்தில். குட்டுவன் 55 ஆண்டுக் காலம் ஆட்சிசெய்தான். அவன்விறல் வெளிப்பட வெளிப்பட விதம் விதமாய் அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் பரணருக்கு 50 வயதெனவையுங்கள். கடல்பிறக்கோட்டிய செயல் அடுத்தசில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச்சொல்வார். அதன்பின் செங்குட்டுவனுக்கு நடு அகவையிருக்கையில் முதல்முறை வடக்கே படையெடுத்துப்போனான். (பரணர் உயிரோடிருந்தால் தானே இதைச் சொல்வார்? இயலுமையை எண்ணிப்பாருங்கள்.) இது சேரரின் இரண்டாம் வடபடையெடுப்பு. (முதற்படையெடுப்பு குடக்கோ நெடுஞ்சேரலாதனின் இளமைக் காலத்தில் நடந்தது.)

 வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

என்பது சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தின் காட்சிக்காதை 158-164 வரிகளாகும். இது அமைச்சன் வில்லவன்கோதையின் கூற்று. இங்கே கோமகள் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகள் நற்சோணையை. அவள் கங்கையிலாடியது பெரும்பாலும் வாரணாசியாய் இருக்கும். பொதுவாய்ப் பலரும் ஒருமுறையே செங்குட்டுவன் வடக்கேபோனதாய் எண்ணிக்கொள்கிறார். கிடையாது. சிலம்பின் படி அவன் இருமுறை போயிருக்கிறான். முதல்முறையில் பெரும்பாலும் சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரனோடு சண்டையிட்டிருக்கலாம். இரண்டாம் முறை பாகபத்ரனின் மகன் தேவபூதியோடும், அவன் அமைச்சன் விசய கனகனோடும் சண்டையிட்டிருக்கிறான். செங்குட்டுவனின் முதல் படையெடுப்பின் பின்புலம் அறிவோம்.

சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரன் காலத்தில் (பொ.உ.மு. 119-83) மகதம் ஆட்டங்கொள்ளத் தொடங்கியது. பாடலிபுத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (Beznagar. இற்றை ம.பி. மாநிலத்திலுள்ளது. இங்குதான் அசோகன் முதற்கொண்டு மகத இளவரசர் ஆட்சிபுரிவார்.) தலைநகர் மாற்றப்பட்டது. மகதம் கொஞ்சங்கொஞ்சமாய்ச் சுருங்கியது. மகதங்கவரக் கலிங்கர், நூற்றுவர்கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசர் என்று பலரோடும் சண்டைகள் தொடங்கின. இக்காலத்தில் பாணினியின் ”அட்ட அத்தியாயிக்கு” பதஞ்சலி மாபாடிய (மகாபாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்தசூத்ரம்) சுங்கர்கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். பாகபத்ரன் ஆட்சி முடிவில் நூற்றுவர்கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக்கொள்ள முயன்றார். மகதம் வலியிழந்தது இந்தியாவெங்கணும் அன்று தெரிந்திருக்கும். இந்நேரத்தில் செங்குட்டுவனும் வடக்கே படையெடுத்துப்போகத் துறுதுறூத்தது இயற்கையே. இக்காலத்தில் செங்குட்டுவன் தன் தந்தையின் சார்பாக முதல்முறை வடக்கே சென்றுள்ளான். அவன்தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்பின் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும்.

2 ஆம்முறை கங்கைக்கரை போகையில் செங்குட்டுவனுக்கு அகவை 78/80 ஆகலாம்.. மகதக்குழப்பத்திற் தானும்புகுந்து இன்னொருமுறை விளையாடமுடியுமென்று சேரனுக்குத் தெரிந்த காரணத்தால் கண்ணகி கதையை தன் அரசமுயற்சிக்குப் பயன்படுத்தியிருக்கிறான். செங்குட்டுவன் 2 ஆம் படையெடுப்பு நடக்குபோதிருந்த சுங்க அரசன் தேவபூதி இவன்காலம் பொ.உ.மு. 83-73 (இவனே கடைசிச் சுங்கன். அளவுக்குமீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்ட இவனை இவன் முதலமைச்சனான வாசுதேவக்கனகனே பின்னாற் கொன்றுவிடுவான். (விசயன் என்பது வாசுதேவனின் மறுபெயரோ, அன்றி வாசுதேவனின் தந்தையோ எனத்தெரியவில்லை.).அதற்கப்புறம் கனகரே ஆட்சிசெய்வார். தேவபூதிக்குத் தனுத்ரபூதியென்ற பெயருமிருக்கலாம். பாகதச்சான்றுகள் கொண்டு உறுதிசெய்யவேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயரைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப்பெயர், எவை இயற்பெயர்?” என்று சொல்லமுடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரனாய் இருக்குமோ?” என்ற ஐயம் கட்டாயமெழுகிறது. இது சேரரின் மூன்றாம் வட படையெடுப்பு. மயிலை சீனி வேங்கடசாமியாரும் சேரர் மூன்றுமுறை வடக்கே படையெடுத்ததாய்ச் சொல்வார்.

செங்குட்டுவனுக்குப் பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பட்டமேறினான். ஆறாம்பத்தின் பதிகம் ”நெடுந்தொலைவுள்ள தொண்டகக்காட்டினுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித்துறைக்குத் திரும்பக்கொணர்ந்தவனெ”ன ஆடுகோட்பாட்டிற்குப் பொருள்சொல்லும். பழம்போரில் ஆக் கவர்வதை வெட்சியென்றும், மீட்டுவதைக் கரந்தை என்றுஞ்சொல்வர். தொல்காப்பியர் கரந்தையை வெட்சிப்பகுதியாகவே சொல்வார். தவிர, இரண்டுஞ் சேர்ந்தது ஆகோட் பூசலாகும். அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. பெரும்பாலும் இவன் காலம் பொ.உ.மு. 106-75 ஆகும். செங்குட்டுவனுக்குப்பின் பட்டத்திற்குவந்து வானவரம்பனென்ற பெயருங்கொள்வான். இவன் வேந்தனானதற்கு இதுவே அடையாளம். இவனுக்கு ஆட்டனத்தியெனும் இன்னொரு பாகமுமுண்டு. ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன்; செந்நிறத்தால் (அத்து=சிவப்பு) அத்தியெனும் விளிப்பெயருற்றான். நெடுஞ்சேரலாதன் வளநாட்டிற் பெண்ணெடுத்தான். அவன்மகன் நாகநாட்டில் பெண்ணெடுத்தான். (பெண்கொடுப்பதும், சண்டைபோடுவதும் மூவேந்தரிடையே நடந்துள்ளன.) பெரும்பாலும் இவனே 2ஆம் கரிகாலன்மகள் ஆதிமந்தியை மணந்தவனாவான். சிலப்பதிகாரம் இவன் அரசவையில் அரங்கு ஏறியிருக்கலாம். இதன் காரணத்தைச் “சிலம்பின் காலம்” நூலில் விளக்கியிருப்பேன். செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் நமக்குத் தெரியவில்லை.

இப்பொழுது 2ஆம் பத்தின் பதிகத்திற்கு வருவோம். அமைவரல் அருவி = நெஞ்சையள்ளும் அருவியுள்ள; இமையம் வில்பொறித்து =இமையத்தில் விற்சின்னம் பொறித்து; இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க = ஓசுங்கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி; தன்கோல் நீறீஇ = தன் செங்கோலை (அங்கு) நிறுவி; தகைசால் சிறப்பொடு = தகுதிநிறைச் சிறப்பொடு; பேரிசை மரபின் ஆரியர் வணக்கி = பெரும்புகழ் மரபுகொண்ட ஆரியரை அடக்கி; ஆரியரென்போர் இங்கு எதிரியாகவே மதிப்புடன் சிறப்பித்துச் சொல்லப்படுகிறார். அவருக்கும் தனிமரபுண்டு என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அப்படி ஆவதாலேயே தமிழர் மரபும், ஆரியர் மரபும் சிலவகைகளில் வேறுபடலாம் என்பது வெள்ளிடைமலை; இப்படையெடுப்பு நெடுஞ்சேரலாதன் பட்டமேறிய சில ஆண்டுகளுள், பெரும்பாலும் பொ.உ.மு 160 க்கு அருகில் நடந்திருக்கலாம். அப்போது மோரியரரசைத் தொலைத்து புஷ்யமித்திரன் அரசு (பொ/உ/மு.165-149) வந்துவிட்டது.

[இங்கே ஒரு போகூழைச் சொல்லித்தானாகவேண்டும். வில்லும், புலியும், கயலும் இமையத்தில் பொறித்ததை இலக்கியத்திற் பலகாலம் படித்தாலும், அவை எந்த இடங்களென்பது நமக்குத் தெரியாது. குத்துமதிப்பாய், காசிக்கும், பாட்னாவிற்கும் வடக்கிருக்கலாமென ஊகஞ் செய்கிறோம். சான்றுகளுடன் நிறுவ ஒருசெய்தியும் இதுவரை கிட்டவில்லை. தொல்லோவியர், கல்வெட்டாளர் போன்றோர் வடநில ஆய்வாளருடன் சேர்ந்து இதைத்தேடவேண்டும். பதிற்றுப்பத்து அரசருக்கிணையான சுங்கர், கனகர் பற்றிய வட தரவுகள் நமக்கு வேண்டும். சேரலாதனும் செங்குட்டுவனும் வடக்கே போனாரா என்பதை நம் பக்கச் சான்றாற் சொல்வது ஒருவகை. எதிரிகள் பக்கம் காண்பது இன்னொரு வகை. பல்லாசிரியரும் அசோக மோரியனுக்கு அப்புறம் குத்தருக்குத் (குப்தர்) தாவுவார். கிட்டத்தட்ட 400 ஆண்டு காலம் அங்கும் வரலாற்று இடைவெளிதான். தவிர வடபகுதிகளின் மாகத(புத்த), அர்த்தமாகத(செயின) நூல்களைப் பார்க்கவேண்டும்.

நம்மூராய்வாளர் பாலி, பாகத மொழிகளை அறிவது இன்றியமையாதது. சங்கதம் வைத்தே எல்லாஞ் செய்யலாம் என்பது கானல்நீர். சங்ககால வரலாற்றறியச் சங்கதநூல்கள் இதுவரை உதவவில்லை. சங்க காலத்தை முன்சொன்னது போல் பொ.உ.மு.600-பொ.உ.150 இல் தேடவேண்டும். பொ.உ.மு.300-பொ,உ. 300 என்பது பிழை. அதையப்படியே புளியங்கொம்பாய்ப் பிடித்து ”அவர்சொன்னார், இவர் சொன்னாரெ”ன. 20ஆம் நூற்றாண்டு ஆய்வாளர் வழி நூறாண்டு காலம் தவறாய்த்தேடி முட்டுச்சந்துள் வந்துவிட்டோம். இன்னுந் தள்ளி பொ.உ.500 வரை சிலம்பைக் கொணர்வது வறட்டுத்தனமானது, போகாத ஊருக்கு வழிதேடுவது. Status quo doesn't take us anywhere. பல்லாண்டாய்வின் பின் இதைச்சொல்கிறேன். சங்ககால மகதத்தில் பாகதமே பேராட்சி பெற்றது. சங்கதம் வடமேற்கிருந்து கொஞ்சங்கொஞ்சமாய் வந்து படித்தோரிடம் பரவியது. குத்தருக்கு அப்புறமே வடக்கிலும் (பல்லவருக்கு அப்புறமே தெற்கிலும்) சங்கதம் மேலோங்கியது.]

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து = நயமிலா வன்சொல் பேசும் யவனரைச் சிறைப்படுத்தி; ஆரியரைச் சொன்னவுடன் யவனரைச் சொல்வதால் இது இந்தோ-சித்தியரை/ சத்ரபரை/ சகரை என்று புரிந்துகொள்ள வேண்டும். அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் வந்து வெளிச்சென்ற போது அவர் படையும், ஆளுநரும் இங்கே இருத்திவைக்கப்பட்டார். பின்னால் அவர் தனித்தியங்கும் மன்னராய் மாறி மதிப்புடன் இந்தியாவிற்குள் விரிய நுழைந்தார். அவந்தி நாட்டின் உச்செயினி வரை அவர் வந்தார். அவந்தி நாட்டோடு தமிழர்க்கிருந்த தொடர்பு சிலப்பதிகாரத்தால் வெளிப்படும். முதலாங் கரிகாலன் காலத்தில் (கிட்டத்தட்ட பொ.உ.மு.462) தமிழகத்தோடு நட்பாக இருந்த அவந்தி நாடு பின் நட்பாகவும் பகையாகவும் ஆட்சியாளருக்குத் தக்க மாறிமாறியிருந்தது. படித்தானம் தொடங்கி மகதம் வரை செல்லும் தக்கணப்பாதைக்கு உச்செயினி மிக அருகிற்றான் இருந்தது. இந்தோ - சித்திய யவனரை பொ.உ.மு.160 இல் தெற்கிருந்து வடக்கே போன சேரர் சிறைப்படுத்துவது நடக்கக்கூடியது தான்

நெய்தலைப்பெய்து = (வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து; கைபின் கொளீஇ = பின் அதைக் கையிற்கொண்டு;

இங்கோர் இடைவிலகல். ”நெய்யிடுதல் ஏதோ கப்பலில்வந்த யவனருக்களித்த தண்டனையென்றே” உரையாசிரியரும், தமிழாசிரியரும் தவறாய்ப் பொருள்சொல்வர். மாறாக ”இது மங்கலமானது; சேரன் பக்கஞ் சொல்வது; யவனர் பக்கமல்ல” என்பதை இன்றும் மிஞ்சிக்கிடக்கும் மரபுகள்சொல்லும். பட்டமேறல் (அரசர், சமய ஆதீனங்கள் பட்டமேறுவது, ஆண்டுதோறும் அதைக் கொண்டாடுவது), நல்லநாள், பெரியநாட்களில் வீட்டுப்பெரியவர் தலைவருக்குச் செய்வது, கோயில் குடமுழுக்கிற் செய்வது, இறைப்படிமத்திற்குத் திருமஞ்சனமாட்டுவது எனப் பல்வேறு விழவுகளில் நெய் தலைப்பெய்தல் இன்றும் நடக்கிறது. இவ்வளவேன்? மணம்முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் பிள்ளைவீட்டிற்குச் செல்லுமுன் பெண்வீட்டில் மஞ்சள்நீராட்டின் முன் ஒவ்வொரு பெரியவரும் இவர் தலையில் நெய்யைச் சிறிதேயிட்டுப் மஞ்சளுந்தடவி சிகைக்காயும் பூசி நீராடலாகும். மாப்பிள்ளையும், பெண்ணும் புதுக்குடித்தனம் போகிறாரல்லவா? புது வாழ்க்கைக்கு வாழ்த்துக்கூறி நெய் தலைப்பெய்தல் நடைபெறுகிறது. இப் பழக்கம் சீவக சிந்தாமணி கோவிந்தையார் இலம்பகத்திலும் (487 ஆம் பாட்டு) குறிக்கப்படும்.

நாழியுள் இழுது நாகுஆன் கன்றுதின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழுதொறு ஆவும் தோழும் போன்றுடன் மூக்க என்று
தாழிருங் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழைநீர் சொரிந்து மொய்கொள் ஆயத்தியர் ஆட்டினாரே.

நெய்யிடும் இந்தப்பழக்கம் இன்று தீபாவளிப் பண்டிகையின் போதும் தொடருகிறது. (நான் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்துள் போகவில்லை. அதனுள் நடக்கும் ஒரு சடங்கை மட்டுமே சொல்கிறேன்.)  தீபாவளியின் தொடக்கமாய்த் தலையில் எண்ணெய் தேய்த்து நீராடும் வழக்கம் மண்ணுமங்கலத்தில் தொடங்கியது.

ஆங்கிலத்தில் இச்சடங்கை anointing என்பர். unction என்றொரு பெயருமுண்டு. உலகமெங்கும் நெய் தலைப்பெய்தல் வெவ்வேறு நாகரிகங்களில் நடந்துள்ளது. http://biblehub.com/topical/a/anointing.htm என்ற வலைத்தளம் பாருங்கள். விவிலியத்திற் கூட ஆசிகூறித் தலையில் நெய்யிடும் பழக்கமுண்டு. இதைக் குறிக்கும் பலமொழிச் சொற்களிலும் நெய் உள்ளே அடங்கிக்கிடக்கும். தமிழன் நாகரிக முன்னோடி என்றால் நம்ப ஆளில்லாதிருக்கலாம். ஆனால் anointing என்பதற்குள் ”நெய்” என்றசொல் கட்டாயமுண்டு. [Pun intended] unguent (n.) Look up unguent at Dictionary.com. "ointment,"  early 15c., from Latin unguentem "ointment," from stem of unguere "to anoint or smear with ointment," from PIE root *ongw- "to salve, anoint" (source also of Sanskrit anakti "anoints, smears,"
Armenian aucanem "I anoint," Old Prussian anctan "butter," Old High German ancho, German anke "butter," Old Irish imb, Welsh ymenyn "butter")

நெய்யிடல் சேர்ந்த நீராட்டுவழக்கம் மண்ணனம் என்றும்,. மண்ணுமங்கலமென்றும் பழந்தமிழ் வழக்கிற் சொல்லப்படும். (மண்ணுதல் = நீராடுதல், மூழ்குதல், கழுவுதல், பூசுதல், செய்தல், அலங்கரித்தல், செப்பமிடுதல். மண்ணனம்>மஞ்ஞனம்>மஞ்சனமாகும். மங்கலத்தை திருவென்ற வேறுசொல்லாக்கி இன்று திருமஞ்சனம் என்கிறோம். இந்த விண்ணவச்சொல் மண்ணுமங்கலத்தில் எழுந்தது. பொதுவாய் விண்ணவ, சிவ ஆகமங்களிலுள்ள பல்வேறு பழக்கங்களும் பழங்குடிப் பழக்கங்களாகவே ஆகின்றன. சமயங்களுக்கும் இதற்கும் மெய்யியல் வரிதியாய்ப் பெரிதாய் உறவு காணோம்.) தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணியியலில் பாடாண் திணையை விவரிக்கையில் 1037 ஆம் நூற்பாவில் “சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம்” என்றுவரும். சேரன் பட்டமேறியபோதும் ஓவ்வோராண்டும் இது நடைபெற்றிருக்கும். இங்கே இன்னும் விதந்து வேறொன்று சொல்லப்படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றிபெற்று வந்தபின்னால் வாள், வேல், முரசு போன்றவற்றிற்குப் படையல் நடக்கும். அதிலும் இந்த நெய்யிடுதற் சடங்கு நடைபெறும். அந்நிகழ்வைப் பழங்காலத்தில் வாள்மங்கலம் என்பர். இதுவும் மேற்சொன்ன நூற்பாவில், மாணார்ச் சுட்டிய வாள்மங்கலம்” என்று குறிப்பிடப்பெறும். (மாணார் = பகைவர்)     . .

அருவிலை நன்கலம் = அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை வயிரமொடு = (அதிற்பொருத்திய) வயிரத்தோடு கொண்டு; பெருவிறல் மூதூர்த் தந்து = பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து; பிறர்க்கு உதவி = பிறருக்கு உதவி; அமையார்த் தேய்த்த = அடங்காதவரை அழித்த அணங்குடை நோன் தாள் = அணங்குடைய வலியகால் கொண்ட; இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை =  இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;  

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

நிலைத்த பெரும்புகழும், மறுவிலா வாய்மொழியும்,
இனிதேயிசைக்கும் முரசுங் கொண்ட
வானவரம்பன் உதியஞ்சேரலாதனுக்கு,
வெளியன்வேள் மகளாகிய நல்லினி ஈன்ற மகன்
நெஞ்சையள்ளும் அருவியுள்ள இமையத்தில் வில்பொறித்து,
ஓசுங்கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி தன் செங்கோல் நிறுவி,
தகுதிநிறைச் சிறப்பொடு பெரும்புகழ் மரபுகொண்ட ஆரியரை அடக்கி,
நயமிலா வன்சொல்பேசும் யவனரின் பொருளைச் சிறைப்படுத்தி,
அவ்வெற்றியின் பின்,
(வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து
பின் வாளைக் கையிற்கொண்டு,,
அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை,
(அதிற்பொருந்திய) வயிரத்தோடு கொண்டு,
பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து,
பிறருக்கு உதவி,
அடங்காதவரை அழித்த,
அணங்குடைய வலியகால் கொண்ட,
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;  
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.


[தொடரும்]
__________________________________________________________________










இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________

Sunday, November 13, 2016

காகித பாரதம்

 - ருத்ரா இ பரமசிவன்



காகித பணங்களா?
காகித பிணங்களா?   
குப்பைக்காடு ஆனது
நம் பொருளாதாரம்.
கண்டெய்னரில்
கிடந்து நாறும்
ஊழல் இங்கே
மறந்து போனது!
சொத்து குவித்தவர்கள்
ஆற்றுமணல் தின்றவர்கள்
மலைகளை உடைத்து
டிஃபன் சாப்பிட்டவர்கள்
பொய்மைப்பலூனில்
ஊதி ஊதி
"மெய்மை எஸ்டேட்"டில்
கரன்சி குவித்தவர்கள்
எத்தனை எத்தனை
இங்கே நிழல் அரக்கர்கள்!
நம் மூவர்ண வெளிச்சம் எல்லாம்
இருட்டுத் தார் பூசி
திருட்டுச் சொத்துகள்
திசை தோறும் திசை தோறும்
பதுக்கி நின்றவர்
பாரத புத்திரர் வேடம் புனைந்தனர்!
அன்னியப் பகைவர்
அச்சடித்த பணங்கள்
அணுகுண்டுகளாய் நம்மை
சிதைத்து விட்டனவே!
கறுப்புப்பணப்பெரும்பூதம்
கஜானாவுக்குள்
கர்ப்பம் தரித்ததோ!
தாராளமய உலகப்பொருளாதாரம்
சுவாசம் செய்த
சூறாவளிகளே நம்மைச்சூழ்ந்தது.
பணம்!பணம்! பணம்!
எங்கும் பணம் எதிலும் பணம் என‌
கொள்ளை ஆசையின்
கோரப்பற்கள் குருதி குடித்தன.
தேர்தல் எனும் பருவக்காற்று
வீசிய போதெல்லாம்
வீதியெலாம் வீடுகள் எல்லாம்
காந்திப்புன்னகையின்
கசாப்பு ரத்தம்!
கண்டு கொள்ளவில்லை!
ஆட்சி எந்திரம்.
சீட்டுகள் பிடிப்பதும்
நாற்காலி ஆள்வதும்
மட்டுமே இங்கு குறியாச்சு!
இன்று கரன்சி வெள்ளம்
கூவம் ஆக
மக்கள் எல்லாம் கூளங்கள் ஆக‌
கூவுகின்றார்!கூவுகின்றார்!
வங்கிகள் யாவும்
வழிகள் அடைத்தன.
எந்திரப்பணங்களும்
எங்கோ போயின!
ஐநூறு ஆயிரம் நோட்டுகள் எல்லாம்
காகித மலங்கள் ஆகிப்போயின!
பொருளாதார சுகாதாரம்
நாறிப்போச்சு!நாறிப்போச்சு!
சீப்பை எடுத்து
ஒளித்து வைத்தால்
கல்யாணம் நின்றுபோகும் என‌
துக்ளக் தர்பார் நடக்குது இங்கே!
ஐநூறு கோடிகள் வாரியிறைத்து
கல்யாணங்கள் நடத்தும்
காட்சிகளுக்கும் குறைவில்லை!
கோடி கோடி ஏப்பம் விட்டவன்
விமானமேறி தப்பிப்போன‌
காட்சிக்கும் இங்குக் குறைவில்லை.
மக்கள் குமுறி வரமாட்டார்!
டிவிப் படங்கள் பார்த்தால் போதும்
விட்டில் பூச்சிகள் குவிந்து கிடக்கும்.
இந்தக் காகித பாரதம்
கத்தி தூக்கியா
பகைவரை அழிக்கும்? நம்
மண்ணைக் காக்கும்?


______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

Thursday, November 10, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 5

- இராம.கி.


அடுத்தது பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு. இதற்குள் போகுமுன் முன்குறிப்புகளைப் பார்ப்போம்.

ஒரு மொழியின் தொடக்கத்தில் தான்தோன்றியான கருத்துச்சொற்கள் (idea words) எழா. பருப்பொருட் சொற்களே (material words) எழும். பருப்பொருளிலிருந்தே, பகரிக் (rebus) கொள்கையின் படி கருத்துச்சொல் உருவாகும். அவ்வகையில் பன்மைகுறிக்கத் தமிழ்ப்பழங்குடி மாந்தன் பல்லையே அடையாளங் காட்டினான். 10 எனுங் எண்ணிக்கைப் பொருள் நெடுங்காலத்திற்குப் பிறகே அமைந்தது. இதன் தொடக்கம் பல் (>பல்த்து>பத்து>பது) என்பதே. [இதேபோல 3 ஐக் குறிக்க மூக்கையும், 5 ஐக் குறிக்க கையையும் காட்டியே தமிழெண்கள் எழுந்தன. 1,2, 3, 5, 10 என்ற சொற்களில் இருந்து கூட்டல், கழித்தல், பெருக்கல் முறையில் தமிழெண்கள் தோன்றின. அவற்றை வேறுபொழுதிற் பார்க்கலாம்.] பதில்/பதின் என்பது பத்தின்தொகுதி. பதினொன்று, பதினிரண்டு,.. பதினெட்டென்று எண்கள் வரும் கூடவே, பதினிரண்டு பன்னிரண்டென்றும், பதினொன்பது பத்தொன்பதென்றும் பேச்சில் திரியும். பப்பத்துப் பாட்டுகளாய் 10 ”பத்தில்>பதில்” கொண்டது பதிற்றுப்பத்து. பதில்+து = பதிற்று. பற்றிக் (பக்திக்) காலத்திலிருந்து இப்பொழுது வரைப் பதிகம் என்ற சொல்லையே பதிலுக்கு மாறாய்ப் பயன்படுத்துகிறார். பதில்/பதின் என்பது வழக்கற்றுப் போனது.

உ.வே.சா.விற்குக் கிடைத்த பதிற்றுப்பத்தில் ஏடுகளிருந்ததால், 1 ஆம் பத்தும், 10 ஆம்பத்தும் கிடைக்கவில்லை (ஆனால் இன்னதென்று சொல்லமுடியா 5 துண்டுகள் கிடைத்தன.) முதலாம்பத்து உதியஞ் சேரலைக் குறித்திருக்கலாமென்பர். அடுத்த 5 பத்துகள் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், களங்காய்க்கன்னி நார்முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பாரையும், மேலும் 3 பத்துகள் இரும்பொறைக் குடியின் செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரலிரும்பொறை, இளஞ்சேரலிரும்பொறை ஆகியோரையும் பேசும். முன்சொன்ன துண்டுகளால் பத்தாம்பத்து பெரும்பாலும் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கே எனவுஞ் சிலர் ஊகிப்பர். பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் உள்ளேவரும் தொடரை வைத்து தனித் தலைப்புண்டு. இந்தக் குறிப்பிட்ட பாட்டின் தலைப்பு “*புண் உமிழ் குருதி*. இதைப் பாடியவர் குமட்டூர்க்கண்ணனார். பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

குமட்டூரென்பது பெரும்பாலும் குமிட்டூராகலாம். 2 ஆம் பதிகத்தின் கீழ் ”பாடிப் பெற்ற பரிசில் உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதலிற் பாகங் கொடுத்தான் அக்கோ.” என்றகுறிப்பு வரும். இக்கூற்றை வைத்துக் குமிட்டூரை எளிதாய் அடையாளங்காணலாம். பிரமதாயம், பெருமானருக்குத் (brahmins) தரும் இறையிலிநிலம். சங்க காலத்திலேயே வேதநெறி தமிழகத்துள் ஓரளவு பரவியதால், இப்படி இறையிலி நிலங்கொடுப்பது நடக்கக்கூடியது தான். (அதேபொழுது வேதமறுப்பு நெறிகளும் உலகாய்தமும் இங்கிருந்தன. இந்நெறியே சங்ககாலத்தில் ஓங்கியது என்பது ஒருபக்கச் சார்பாகும்.) பல்லவர் காலம் (பொ.உ.500) தொடங்கிய பின் தான் பெருமதாயங்கள் (>பிரமதாயம்) எழுந்தனவென்று சொல்வதற்கு இயலாது. . 

ஐந்நூறூர் என்பதை 500 ஊர்களெனக் கொள்ளவேண்டாம். பெருமானர் கூட்டங்களில் (கோத்திரங்களில்) எண்ணாயிரம் (அஷ்ட சகஸ்ரம்) என்றொரு கூட்டமுண்டு..(எக்காலம் அதுவெழுந்தது என்பது தனியாய்வு) இக்கூட்டத்தின் தொடக்கம் திருவண்ணாமலைக்கருகில் எண்ணாயிரம் பெருமானக் குடும்புகளிருந்த எண்ணாயிரமாகலாம். இதேபோல் தில்லையில் 3000 குடும்புகள், திருப்பெருந்துறையில் முந்நூற்றுவர் இருந்தார். இங்கே 500 குடும்புகள் கொண்ட சேரநாட்டு ஊரொன்று பெருமதாயமாகிறது. (500 பேரும் பெருமானரென்ற பொருள் கிடையாது.) தானங் கொடுக்கையில் சேரன் தன்நாட்டுள் தானே கொடுப்பான்? வேறுநாட்டிலா கொடுப்பான்? எனவே உம்பற்காடும் குமிட்டூரும் சேரநாட்டினுள் இருக்கவேண்டும். (சுற்றிவளைத்துச் சிற்றன்னவாசற் கல்வெட்டைத் தவறாகப்படித்த தமிழறிஞர் சிலர் குமிட்டூரை ஓய்மான் நாட்டினுள் கொண்டு திண்டிவனம் பக்கம் இதைத் தேடுவார். அப்பிழை விக்கிபீடியாவிலுமுண்டு.)

உம்பலெனில் குமிழம் (coomb teak; Gmelina arborea). உம்பற்காடு = குமிழ்மரக் காடு. Gmelina asiatica என இன்னொரு வகையுமுண்டு. முன்னது பெருங்குமிழ். 2 1/4 அடி விட்டம், 100 அடி உயரம் வளரக்கூடிய மரம். 800 அடிதொடங்கி 3000 அடிவரை உயரமுள்ள குறிஞ்சிநிலத்தில் விரவிக் காணலாம். பின்னது பெரிய முட்செடி நிலக்குமிழ் என்பார். குமிழ்மரத்தின் புறணி மழமழப்பாக, சாம்பல் படர்ந்த வெண்ணிறமாய் இருக்கும். 4 முதல் 8 அங். நீளத்தில் அகன்ற முட்டைவாகில் இதயவடிவில், கீழ்ப்புறம் முசுமுசுப்பாக இலைகளிருக்கும். 1 முதல்; 1.5 அங். வரை நுனியிலும், மஞ்சரிகளிலும் பழுப்புப் படர்ந்த மஞ்சள்நிறமாக மார்ச்சு, ஏப்பிரல் மாதங்களிற் பூக்கும். முட்டைச்சாயலில் 0.5 முதல் 1.0 அங். நீளத்தில் செம்மஞ்சள் நிறத்தோடு மகிழ் வாசனையோடு மழைக்காலங்களிற் காய்க்கும். பழங்கள் உருண்டு திரண்டு குமிழாயிருப்பதால் குமிழ்மரமென்று அழைத்தார். இதைக் கும்பலம்>கும்பளம் என்றுஞ் சொல்வார். கும்பலிற் குகரம் விட்டு உம்பலென்றுஞ் சொல்வார். தவிர, ’அம்’மின்றி இகரவீற்றில் கும்பலி>கும்பளி என்றுஞ் சொல்வர். சேரலத்தில் சிலபோது மூக்கொலிபெற்று கும்மளி>குமளியென்றுஞ் சொல்லப்பட்டது. இற்றை மலையாளத்தில் கும்பில், கும்புலு, குமிலு என்றாகும்.

வடக்கே நகருஞ்சொற்களிற் பெரும்பாலும் ளகரம் டகரமாயும், லகரம் ரகரமாயும் மாறும். கன்னடத்திற் கும்புலு, கும்புடு என்றும், தெலுங்கிற் குமரு, கும்மடி என்றும், ஒடியாவில் குமர், கும்ஹரென்றும், வங்காளத்தில் கும்பர், கம்பர், கமரி என்றும், அசாமீசில் கொமரி என்றும், மேகாலய கரோ மொழியில் கமரி, கம்பரெ என்றும், நேபாலியில் கமாரி என்றும், இந்தியில் கும்பரி, கம்ஹர், கமர என்றும், பஞ்சாபியில் கும்ஹர் என்றும், சங்கதத்தில் கம்பரி என்றும் அழைப்பர். இத்தனையும் தமிழ்வழிச் சொற்கள், இதுபோக Sanskrit: sindhuparni, sindhuveshanam, stulatvach; Oriya- Bhadraparni; Gujarati- Shewan, Sivan; Hindi- sewan; Kannada- Shivane mara, Kasmiri- shivani; Marathi- shivan, siwan; Sinhala- Demata என்றும் இன்னோர் அடிப்படையில் சொல்வரிசையுண்டு.

தமிழகக் கேரள எல்லையில் இன்றுள்ள குமிழி>குமிளியே அற்றைக் குமிழூர்>குமிளூர்>குமிட்டூரென இப்போது புரிந்திருக்கும். மரத்தொழிலர் நடுவே குமிழமரம் குமிட்டுத்தேக்கு என்றுஞ் சொல்லப்பெறும் குமிழியிலிருந்து 4 கி.மி. தொலைவில் தேக்கடி (தேக்கு+அடி). தேக்கும், வெண் தேக்கும், குமிட்டுத் தேக்கும் அருகருகே விளைவது வியப்பல்ல. குமிழூர் அன்றுஞ் சேரலஞ் சேர்ந்ததுதான். இவ்வூருக்கு அருகிற்றான் இமையவரம்பன் நெடுஞ்சேரல் குமிட்டூர்க்கண்ணனாருக்கு உம்பற்காட்டு ஐநூறூரைப் பெருமதாயமாய் அளித்தான். குமிழிக்கருகிற்றான், குட்டநாடு. முல்லைப்பெரியாறு; கண்ணகி போய்ச் சேர்ந்த இடம். செங்குட்டுவன் மலைக்காட்சி கண்ட இடம். மங்கலாதேவி கோயில். வஞ்சிக்காண்டம் தொடங்குமிடம். சேரலாதன் ஐந்நூறூர் தவிர தன்நாட்டு வருவாயில் ஒரு பாகத்தையும் (எத்தனை என்று தெரியவில்லை) தான் அரசனாய் வாழ்ந்த 38 ஆண்டிற் கொடுத்திருக்கிறான். வருமானத்தில் ஒருபகுதியை உள்நாட்டானுக்குத் தானே கொடுக்கமுடியும்? .
     .
பாடாண்டிணை. ”பாடு+ஆள்ந்திணை” எனவிரிந்து, போற்றக்கூடிய ஆளுமையைப் புகழ்வதாயமையும். (எல்லாப் புறத்திணைகளும் ஒரு குறிப்பிட்ட செய்கையை மட்டுமின்றி ஒரு மரத்தையும் சேர்த்துக் குறிக்கும். பாடாண்மரம் பற்றி மூலிகை மருந்தறிவியல் ஆய்வாய் பேரா.இரா.குமாரசுவாமி அருங்கட்டுரை படைத்துள்ளார். பார்க்க: ”தமிழர் மெய்யியலும், அறிவுமரபும்” பக்.54-75. உலகத்தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டாய்வு நிறுவனம், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி: 8903838356) பாட்டின்துறை: செந்துறை: வேறொரு ஆளுமையோடு ஒப்பிடாது நேர்படச் சொல்வது செந்துறையாகும்..

இசையியலில் தூக்கென்பது தாளம்பொறுத்து அமையும், யாப்பிலோ இன்னசெய்கைக்கு இன்னவகைப் பாட்டென வழிகாட்டுண்டு. ஒருவரையழைத்துச் சொல்கையில் அகவலோசையோடு ஆசிரியமாய் அமைந்தாற் சிறப்பென்பர். மாறாக அழைத்துச் சொல்வதைச் செப்பலோசையோடு வெண்பாப் பாடின், மரபின்படி அது சரியல்ல. (இக்காலத்தில் யாரும் மரபைக் கண்டுகொள்வதில்லை. அவரவர்க்குப் பிடித்தபடி ஆசிரியம், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை எனக் கலந்தடிப்பார். அதே போல இன்னபொழுதிற்கு இன்னபண் என்றா பார்க்கிறோம்? அதிலும் கலப்புதான்.) அகவல், செப்பல், துள்ளல், தூங்கல் ஆகியவற்றை நேரம், காலம், நிகழ்வு, செய்கைபார்த்து அந்தந்தப் பா பாடுவது செந்தூக்காகும். அழைத்துச்சொல்லும் வகையில் ஆசிரியம் இங்கு வருவதால் இது செந்தூக்கு.

அடுத்தது, எழுத்துக்கள் வரும்வகை வருநம்>வண்ணமாகும். 20 வகை வண்ணங்களுண்டு. இப்பாட்டில் வருவதை ஒழுகுவண்ணமென்பர். ஓர் ஓடை தடைப்படாது ஓடுவதுபோல ஒழுகும்வண்ணம். படித்துப்பார்க்கும்போது இதில் எத்தடையும் வராது பாடலமையவேண்டும்.

வரைமருள் புணரி வான்பிசி ருடைய
வளிபாய்ந் தட்ட துளங்கிரும் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
அணங்குடை அவுண ரேமம் புணர்க்கும்
சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்
செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப
அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்
மணிநிற யிருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல வரண்கொன்று
முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை
பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுத றுமிய வேஎய்
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரரி நறவி னார மார்பின்
போரடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும்
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
பொலனணி எருத்த மேல்கொண்டு பொலிந்த
நின்
பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே
கவிர்ததை சிலம்பிற் றுஞ்சும் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொ டாயிடை
மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே.


என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு
வான்பிசிர் உடைய வரைமருள் புணரி
வளிபாய்ந்து அட்ட துளங்குஇரும் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி

விலங்குநர் செவ்வாய் எஃகம் அறுப்ப,
மனாலக் கலவை போல
அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து,
அரண் கொன்று
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை

பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடிஉடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று
எறிமுழங்கு பணைசெய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்
போர்அடு தானைச் சேரலாத

பரந்து இலங்கு அருவியொடு
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே.
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எருத்த மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே

இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். முதலில் நாம் பார்ப்பது ”அணங்கைப்” பற்றியாகும். நாட்டு மரபுகள் அறியாத் தமிழாய்வாளரும், அவர் வழித் தமிழிலக்கியங் கற்ற மேலையாசிரியரும் இச்சொல்லைத் தவறாகப் புரிந்துகொள்கிறார். இணையத்தில் தேடின், பென்னம்பெரிய பேராசிரியரெலாம் இதில் தடுமாறியது புரியும். அணங்கென்பது ஏதோ ஒருவகை ஆற்றல் என்றும் இது பெண்முலையில் குடிகொள்ளுமென்றும், அணங்கின் வழிதான் கண்ணகி மதுரை எரித்தாளென்றுஞ் சொல்வார். இதுபோன்ற விளக்கங்கள் தென்பாண்டிநாட்டில் நாட்டுமரபு தெரிந்தோருக்கு வியப்பாகவே தெரியும். பல்வேறு சங்க இலக்கியக் காட்டுக்களை எடுத்துக்காட்டி இப்புரிதல் பிழையென்று முதலிற் சொன்னவர் பேரா. வி.எஸ்.இராஜமேயாவார்..

அணங்குதல் = மேலேறுதல். வீரம், மகிழ்ச்சி, பயமென்று தான்கொள்ளும் இயல்வெளிப்பாடுகளிற் சட்டென மாறி எக்கிய உணர்ச்சிகளுக்கு (extreme emotions) ஆட்பட்டு இதுவரை காணாதபடி ஒருவர் நடந்துகொண்டால், ”இவருக்கு என்னாச்சு? ஏனிப்படி நடந்துகொள்கிறார்? ஏதேனும் பேய்பிடித்ததா? ஆவி இவருட்புகுந்ததா? சாமி, கீமி வந்துவிட்டதா?” என்று சுற்றியுள்ளோர் சொல்வாரல்லவா? அளவுமீறிய ஆற்றலுடன் கொஞ்சமுங் களைப்புறாது வேலை செய்பவரையுங்கூடச் சாமிவந்தவர்போல் செயற்படுவதாய் நாட்டுப்புறத்திற் சொல்வர். இதுபோன்ற வெளிப்பாடுகளை (நீண்ட நாள், குறுகிய நேர) மனப்பிறழ்வுகளென்றும், உடைபட்ட ஆளுமையின் (split personality) வெளிப்பாடென்றும் சொல்லி, விதப்பு மருத்துவங்களையும், நரம்பியல் மருந்துகளையும் இற்றை உளவியல் நாடச் சொல்லும்.  ஆனால் நாட்டுப்புறப் பழங்குடிப்பார்வையில் இவற்றை அல்மாந்த (அமானுஷ்ய)ச் செயற்பாடுகளாக்கிச் ”சாமியாடியைக் கொண்டுவா; வேப்பிலையால் மந்திரித்துவிடு; திருநீறுபூசு; குறிகேள்! படையல் போடு; பூசைநடத்து” என்றே நடவடிக்கையெடுப்பார். சங்க இலக்கிய வேலன்வெறியாட்டு போன்றவை இவற்றைச் சேர்ந்ததுதான் (வேலன் இன்றைக்குச் சாமியாடி. வெறியாட்டம் சாமியாட்டம்.) மேலே சொன்ன பேய், பிசாசு, ஆவி, சாமி ஆகிய வெவ்வேறு விதப்புகளுக்கான பொதுச்சொல்லே அணங்காகும். மேலேறுதல் என்ற கருத்தீடு இப்போது விளங்குகிறதா?

அணங்குடை அவுணர் = அணங்குள்ள அவுணரின். உரையாசிரியர் பலரும் அவுணரை அசுரராக்கித் தேவாசுரக் கதைகளைச் சொல்வார். அப்படியிருக்கத் தேவையில்லை. நாகர், இயக்கர், அரக்கர் (இதையே இராட்சதர், இராக்கதரென்பார்), பூதர், அசுரர் என்போர் வெவ்வேறு பழங்குடி எதிரிகள். இவரில் எத்தனைபேர் தமிழரின் எதிரிகள்? எத்தனைபேர் தமிழருள் கலந்து போனார்? என்பதெலாம் ஆய்வு விதயங்கள். வடபுலத் தென்புலக்கதைகளை இக்காலத்திற் கலந்துபேசுகிறோமா?- என்பதும் பெருமாய்வு. எதிரிகளென்று கற்பிக்கப்படுவதன் மிச்சசொச்சம் தமிழரிடமும் இருக்கலாம். அவுணர் உண்மையில் அசுரரா? அன்றி உவணரெனும் மலைக்குடியாரா?- புரியவில்லை.

(உவணம் = உயரமான இடம், மலை. வானம் போன்ற பொருளுமுண்டு. உவணர்>ஊணர்>ஔணர்>அவுணர் எனும் திரிவை எண்ணிப்பாருங்கள். வரலாற்றில் மிலேச்சரான ஹூணராய் இவரிருக்க வழி இல்லை. ஏனெனில் அவர் பொ.உ.5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பொதுவாக வெளியாரைக் குறிக்குஞ் சொற்கள் நம்மிடந் திரியலாம். ”கன்வ” எனும் மகதச்சொல் கனகவென நம்வாயில் திரிந்ததே? செங்குட்டுவன் தோற்கடித்த கனகவிசயன் மகத அரசனாகலாமெனச் ”சிலம்பின் காலத்திற்” சொன்னேன். அம்முகன்மையை நம்மிற் பலரும் உணரவில்லை. அயொனியர் நமக்கு யவனரானாரே?)

ஏமம் புணர்க்கும் = ஏமங் (safety) காக்கும்; சூருடை முழுமுதல் தடிந்த = சூரனின் உயிரிருந்த மாமரத்தை வெட்டி; பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் = பெரும்புகழ் கொண்ட கடுஞ்சின விறல்வேளின் (முருகனின்); களிறு ஊர்ந்தாங்கு = களிறு நகர்ந்தது போல்; வான்பிசிருடைய = வான்தெறிக்கும் துளிகளுடைய; வரை மருள் புணரி = மலையென மருளத்தகும் அலையை; வளி பாய்ந்து அட்ட =  காற்றுப் பாய்ந்து சிதைக்க; துளங்கு இரும் கமஞ்சூல் = அசையும் பெருநீரைச் சூலாக்கி; நளி இரும் பரப்பின் = பென்னம்பெரிதாய்ப் பரந்த; மாக்கடல் முன்னி = கருங்கடலில் (சமுத்திரம்) முன்சென்று

[தம்நாட்டுக் கடல்வணிகம் காப்பாற்றுதற்காகச் சேரர் கடல்வழிசென்று மேற்கே இலக்கத்தீவுக் கடற்கொள்ளையரைத் தாக்கியழித்த செய்தி இங்கே சொல்லப்படுகிறது. பொ.உ.மு.200 களுக்கு முன்னேயே யவனரோடும், உரோமரோடும் மேற்குவணிகம் தொடங்கியது. சேரலத்து மிளகும் கொங்கின் மணியும், சூர்ணி முத்துமெனப் பல பொருட்கள் ஏற்றுமதியாகின. மேற்கின் பல்வேறிடங்களிலிருந்து கொண்டு வந்த கொடிமுந்திரிக் (grapes) கள்ளும், தங்கமும், குங்குமப்பூவும் (Crocus sativus), சாம்பாணியும் (சாம்பிராணி) இங்கிறங்கின. முசிறி, தொண்டி, நறவில் தொடங்கி வடக்கே பாருகச்சம் (Barukaccha> Baroach) வரை வணிகம் நடந்தது. மூவேந்தரையும் (குறிப்பாகச் சேரர்), நூற்றுவர் கன்னரையும் (Satakarni) மகதம் அசைக்கமுடியவில்லை சோழரும், பாண்டியரும் கிழக்கு வணிகத்தில் சிறந்திருந்தார். சங்க இலக்கியத்திற் பெரிதும் பேசப்படும் பலவும் அரசியற் பொருளாதாரம் (political economy) தொடர்பானவை. எங்கெலாம் பொருளியற் தேவை எழுந்ததோ, அங்கெலாம் போரும் உடன்சென்றது. (Wherever economy demanded, war followed). பிற்காலத்தில் பொ.உ.1000க்குப் பின்னால் கிழக்குவாணிகம் தடைப்பட்டபோது, இராசேந்திர சோழன் சிரீவிசயத்தின் மேற் படையெடுத்துப் போனான்.]

விலங்குநர் = (இச்செயல்) தடுப்போரை (கடற்கொள்ளையரை); செவ்வாய் எஃகம் = கூர்(sharp)ஓர எஃகுவாளால் (இரும்புக்கால முதலடையாளங்களும் பழம் எஃகுப்பொருட்களும் தொல்லாய்வின் மூலம் தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. எஃகு = steel; எஃகம் = steel sword); அறுப்ப = அறுத்து; மனாலக்கலவை போல = குங்குமப்பூக் கலவைபோல்; அருநிறம் = செந்நிறம்; அருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதியின் = செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால்; மணிநிற இருங்கழி = நீலப்பெருங்கழி, நீர்நிறம் பெயர்ந்து = நீரின் நிறம்மாற, அரண்கொன்று = (எதிர்த்தவரின்) காவலழித்து; முரண்மிகு சிறப்பின் = முரண் மிகு சிறப்பால்; உயர்ந்த ஊக்கலை = உயரூக்கம் கொண்டவனே!

[ஓர் இடைவிலகல். ”மனாலம்” என்பது இங்கே எழுத்துப்பெயர்ப்பாய் Minoan crete ஐயும், மனாலக்கலவை குங்குமப்பூக் கலவையையும் குறிக்கிறது. கிரீட்டிலிருந்துதான் பொ.உ.மு. 3000 - 1100 இல் குங்குமப்பூ மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பார்க்க: https://en.wikipedia.org/wiki/History_of_saffron. Saffron played a significant role in the Greco-Roman pre-classical period bracketed by the 8th century BC and the 3rd century AD. The first known image of saffron in pre-Greek culture is much older and stems from the Bronze Age. A saffron harvest is shown in the Knossos  palace frescoes of Minoan Crete, which depict the flowers being picked by young girls and monkeys. One of these fresco sites is located in the "Xeste 3" building at Akrotiri, on the Aegean island of Santorini—the ancient Greeks knew it as "Thera." These frescoes likely date from the 16th[ or 17th century BC` but may have been produced anywhere between 3000–1100 BC. They portray a Minoan goddess supervising the plucking of flowers and the gleaning of stigmas for use in manufacture of what is possibly a therapeutic drug. A fresco from the same site also depicts a woman using saffron to treat her bleeding foot. These "Theran" frescoes are the irst botanically accurate visual representations of saffron's use as an herbal remedy. This saffron-growing Minoan settlement was ultimately destroyed by a powerful earthquake and subsequent volcanic eruption sometime between 1645 and 1500 BC. The volcanic ash from the destruction entombed and helped preserve these key herbal frescoes.

தவிரக் குரு>குருங்கு என்பது தமிழிற் சிவப்புநிறங் குறிக்கும் சொல். குருங்குமம்>குங்குமம், நிறத்தை வைத்து இறக்குமதிப் பொருளுக்கு ஆன பெயர். (பருத்தி - ஒரு பிறந்தவிடப் பெயர். கொட்டை> cotton - இறங்கிய இடங்களில் ஏற்பட்ட பெயர்.) ”குருங்குமம்” பின்னால் (kurkema Aramaic இலும், krocos கிரேக்கத்திலும் என) மேலைநாடுகளிற் பரவும். அதேபொழுது azupirana என்ற akkadian சொல்லிலிருந்து Saffron என்ற இற்றை மேலைச்சொல் பிறந்தது. குங்குமப்பூ வணிகத்தையும் பதிற்றுப்பத்து வரியையுஞ் சேர்த்து விக்கிப்பீடியாவில் யாரேனுங் குறித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சேரலாதன், செங்குட்டுவனின் பழங்காலமும் (’சிலம்பின்’ காலமும்) மனாலக்கலவை என்ற கூட்டுச்சொல்லால் உறுதிப்படும். எத்தனை இந்திய இலக்கியங்கள் ”மனோலத்தைப்” பதிவுசெய்தன???] 

பலர்மொசிந்து ஓம்பிய = பலருங்கூடிக் காப்பாற்றிய; திரள்பூங்கடம்பின் = திரள்பூங் கடம்பமரத்தின்; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று = காவலுடைய அடிமரத்தை வெட்ட ஏவி, வென்று; எறிமுழங்கு பணைசெய்த வெல்போர் = (அதன்மூலம்) அடித்துமுழக்கும் பறைசெய்த வெல்போரினையும்; நாரரி நறவின் ஆர = நார்ச்சீலையால் வடித்த கள்ளையும் பருகும்; மார்பின் = மார்புடைய; போரடுதானைச் சேரலாத = போரடுக்கும் தானைகொண்ட சேரலாதனே! (எதிரியின் காவல்மரம்வெட்டி முரசுசெய்வதும், எதிரிக்கோட்டையழித்து, எள்விதைத்துக் கழுதைகொண்டுழுவதும் அன்றிருந்த மரபுகளாகும். எள்விதைத்து கழுதையாலுழுவதை மூவேந்தர் மட்டுமின்றிக் கலிங்கத்துக் காரவேலனுஞ் செய்தான். மூவேந்த மரபுகள் தென்னகம் முழுக்கப் பரவினவோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.)

பரந்திலங்கு அருவியொடு = பரந்துவிளங்கும் அருவியொடு; கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி = முருக்குநிறை மலையில் துயிலும் கவரிமான்கள், கவிர் (Erythrina suberosa Roxb.), முள்முருக்கு (Erythrina stricta Roxb.), கலியாண முருக்கு (Erythrina variegata L.; also known as Erythrina indica) என்று 3 விதமான முருக்குமரங்கள் (Indian coral tree) உண்டு. (முருக்கையோடு முருங்கையைக் குழம்பவேண்டாம்.) கலியாண முருக்கு பொ.உ.8/9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைக்கப்பட்டது. பெரும்பாலும் கவிரும், முள்முருக்கும் நம்மூர் மரங்களாகலாம். ("செம்முகை அவிழ்ந்த முண்முதிர் முருக்கு” என்பது அகம்:99.2) கவிரும் முருக்கும் 1200 அடி தொடங்கி 4000 அடிவரையில் குறிஞ்சிநிலத்தில் வளரும். முருக்கம்பூ ஒருவகையில் முருகனின் நிறங்குறிப்பது.

முருக்கு மரங்களைக் காட்டுத்தீப்பிழம்பு போல் பூக்கும் புரசு மரத்தோடு [Butea monosperma; காட்டுமுருக்கு, வெள்ளைப்புரசு. இதைச் செந்தூரப்பூ மரம் என்றுஞ் சொல்லுவர். ”பதினாறுவயதினிலே” திரைப்படத்தில் வரும் “செந்தூரப்பூவே” பாட்டு. சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் கங்காதீசர் கோயிலின் தலமரம். புரசை வடமொழியில் பலாசு/பலாசம் என்பார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க மரம். சென்னையிலிருந்து தில்லிபோகும் இருவாய்ப்-railway-பாதையில் Ballarshaவை எண்ணிக்கொள்ளுங்கள். இராபர்ட்கிளைவ் வங்காளத்திற் சண்டையிட்டுவென்ற பலாசி யுத்தம் எண்ணிப்பாருங்கள்.] பலரும் குழம்பிக்கொள்வதுண்டு. நானுங் குழம்பியிருக்கிறேன்.

கவரி = கவரிமான்கள், இவை இமையமலை அடிவாரத்திலும், சற்று உயரக்குன்றுகளிலும் அலைந்துதிரியும் யாக் எருமைகள். இவற்றின் மேனியை மூடினாற்போல் உரோமங்களுண்டு. குளிருக்காக இந்த முடி. இந்த எருமைகள் வெப்பநிலங்களில் வளரா. தென்னகத்தில் இவை கிடையா. இந்தியாவில் இவை இமையமலைப் பகுதியில் மட்டுமேயுள்ளன.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம்வரின்”

என்பது குறள். பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு கவரிமானைக் குறிப்பதால் பாட்டிற் சொல்லப்படும் ஆரியர் வடக்கே இமையத்தின் அடியில் வாழ்பவரே என்ற கருத்து உங்களுக்கு வலுப்படும். (ஆரியர் என்ற சொல்லிற்கு noble என்று பார்ப்பதை வேறிடத்தில் பேசுவோம்.)  

நரந்தம் கனவும் = நரந்தம்புல்லைத் தின்னக் கனவுகாண்கிற, நரந்தம் புல் = நல்ல வாசனையோடு வளரும் புல். எலுமிச்சம் புல் என்றுஞ் சொல்லப்படும். [நரந்தம் என்ற தனிச்சொல் எலுமிச்சைக்கு முதலிற் பயன்பட்டு இங்குப் புல்லிற்கு வாசனை கருதி மாறிவந்தது. நார்த்தை, நாரங்கை (>orange) போன்ற சொற்களும் நரந்தத்தோடு தொடர்பானவை] நரந்தம்புல் ஆங்கிலத்தில் Cymbopogan எனப்படும்.புல்லிலிருந்து பெறப்படும் நரந்த (சிட்ரொனெல்லா) எண்ணெய் மணமூட்டும் பொருளாய்ப் பயனாகிறது. Cymbopogan citratus, Cymbopogan flexuosus, Cymbopogan martinii, Cymbopogan nardus எனப் பல்வேறு வகைகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வளர்கின்றன. இங்கே Cymbopogan flexuosus என்று உத்தரப் பிரதேசத்திலும் வடக்கு பீகாரிலும் விளையும், இவற்றிற்கு வடக்கே இமையமலைடடியில் வளரும் புல் பேசப்படுகிறது. கவரிமான்கள் இந்தப்புல்லைத் தின்னக் கனவு காண்கின்றனவாம்.

ஆரியர் துவன்றிய = ஆரியர் தோற்றுப்போன; இங்கே வடக்கே இமையமலை அடிவாரம் வரைக்கும்போய் ஆரியரைத் தோற்கடித்தது பேசப்படுகிறது. சிலம்பின் வஞ்சிக்காண்டத்தில் இரண்டாம் படையெடுப்பிற்கான விவரிப்பில் முதற்படையெடுப்பை அசைபோட்டுச் சிலசெய்திகள் சொல்லப்படும். இதுபோன்ற படையெடுப்புக்கள் பொ.உ. 5 ஆம் நூற்றாண்டில் நடக்கவேயில்லை. (காய்தல் உவத்தலின்றி ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால்) சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் வெவ்வேறு செய்திகளும் சிலம்பின் வஞ்சிக்காண்டச் செய்திகளும் உறுதியாக இமையவரம்பன் சேரலாதன் காலத்தில் பொ.ய்.மு.120க்கு முன் நடந்த படையெடுப்பை உறுதிசெய்கின்றன. சங்ககாலத்தை பொ.உ.மு.600 இலிருந்து பொ.உ.150 வரை சொல்வதே சரியென்று விளங்கும். அடுத்தடுத்துப் பல பாடல்கள் இதை உறுதிசெய்கின்றன. தமிழர் வடக்கே போகவேயில்லை என்றுசொல்லிச் சங்ககாலத்தைக் குறைத்து மதிப்பிடுபவர் நாம் என்னசொல்லியுங் ஏற்கப்போவதில்லை. அவர் அடம்பிடித்துக் கொண்டேயிருப்பார்.

பேரிசை இமயம் = பெரும்புகழ் இமையமும், தென்னங் குமரியொடு ஆயிடை = தென்குமரியொடும் ஆகிய இடைப்பட்ட இடங்களின்; மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. = செருக்குற்று நிலைத்த மன்னரின் மறம்கெடக் கடந்து; மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் = மார்பிற்கிடந்த பசியமாலையும் நெற்றிப்பட்டமும் விளங்க; வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் = வலிமிகு பெரும்தந்தத்தால் பழிதீர்த்த யானையின்; பொலன் அணி எருத்த மேல் கொண்டு பொலிந்த = பொன்னணி எருத்தின்மேல் பொலிந்துகொண்டு சென்ற; நின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே = பலரும்புகழும் உன் செல்வத்தை இனிதே கண்டோம்.

பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்...

அணங்குள்ள அவுணரின் ஏமங்காக்கும்
சூரனின் உயிரிருந்த மாமரத்தை வெட்டி,
பெரும்புகழ்கொண்ட கடுஞ்சின விறல்வேளின்
களிறு நகர்ந்ததுபோல்,
வான்தெறிக்கும் துளிகளுடைய
மலையென மருளத்தகும் அலையைக்
காற்றுப்பாய்ந்து சிதைக்க,
அசையும் பெருநீரைச் சூலாக்கி,
பென்னம்பெரிதாய்ப் பரந்த கருங்கடலில்
முன்சென்று,
(இச்செயல்) தடுப்போரைக்
கூரோர எஃகு வாளால் அறுத்து;
குங்குமப்பூக் கலவைபோல்
செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால்,
நீலப்பெருங்கழி நீரின் நிறம்மாற,
(எதிர்த்தவரின்) காவலழித்து,
முரண்மிகுசிறப்பால்,
உயரூக்கம் கொண்டவனே!

பலருங்கூடிக் காப்பாற்றிய,
திரள்பூக்களும் காவலுமுடைய,
கடம்பின் அடிமரத்தை வெட்ட ஏவி,
வென்று, (அதன்மூலம்)
அடித்துமுழக்கும் பறைசெய்த வெல்போரினையும்
நார்ச்சீலையால் வடித்த கள்ளையும்
பருகும் மார்புடைய
போரடுக்கும் தானைகொண்ட சேரலாதனே!

பரந்துவிளங்கும் அருவியொடு
முருக்குநிறை மலையில் துயிலும் கவரிமான்கள்
நரந்தம்புல்லைத் தின்னக் கனவுகாண்கிற,
ஆரியர் தோற்றுப்போன,
பெரும்புகழ் இமையமும்
தென்குமரியொடுமாகிய
இடைப்பட்ட இடங்களிற்
செருக்குற்று நிலைத்த மன்னரின்
மறம்கெடக் கடந்து
மார்பிற்கிடக்கும் பசியமாலையும்
நெற்றிப்பட்டமும் விளங்க,
வலிமிகு பெரும்தந்தத்தால்
பழிதீர்த்த யானையின்
பொன்னணி எருத்தின்மேற்
பொலிந்துகொண்டு சென்ற,
பலரும்புகழும் உன்செல்வத்தை
இனிதே கண்டோம்!

[தொடரும்]
__________________________________________________________________










இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________


ஏரி காத்த ராமன்

 - நா.கண்ணன் 









நீண்ட நாட்களாக மதுராந்தகம் பெருமாளை சேவிக்க வேண்டுமென ஆசை. என் மாமனார் வாரிசுகள் அக்கோயிலில் திருவாராதணைக் கைங்கரியம் செய்துள்ளனர். அவர் சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன். சீதையுடன் கைகோர்த்த வண்ணம் இராமன். கண்கொள்ளா அழகு. சோழர் காலத்து விக்ரகமாக இருக்க வேண்டும். தீர்க்கமான அங்க லட்சணம். இராமானுஜருக்கு இங்குதான் அவர் மாமா திருமலை நம்பிகள் பஞ்சசம்ஸ்காரம் செய்வித்தாராம்.

கோயில் எவ்வளவு பழமை என்பதில் சில சந்தேகங்கள். இராமானுஜர் சம்பவம் உண்மையெனில் 1000 ஆண்டுகள். ஏதோ கலெக்டருக்கு இராமன் காட்சி கொடுத்த கல்வெட்டு உண்டு என்று தாயார் சந்நிதி அறிவிப்பு சொல்கிறது. படம் எடுத்தேன். நான் பார்த்தவரை அங்குள்ள ஒரே கல்வெட்டு. துரை ஐயா வாசித்துத் தெளிவு படுத்த வேண்டும்.


கல்வெட்டு தரும் செய்தி

- து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
           [doraisundaram18@gmail.com]


கல்வெட்டு முழுமையாக இல்லை. துண்டுக்கல்வெட்டு.
படித்த அளவில் கல்வெட்டின் பாடம் :
1   ...................... இருபத்து (நால்)
2  ... செம்பொன்  எண்ப (த்/து?)
3   கழஞ்சே முக்காலே இரண்டு
4  (ம)ஹா ஸபையாரும் வீரசிகர
5  சரி ஸபையாருஞ் சார்த்துவித்த
6   ண  .........................................


கருத்து :
நிவந்தம் ஒன்றுக்குச் செம்பொன் (எண்பதுகளில் ஒரு எண்ணிக்கை ) கொடையளிக்கப்படுகிறது.
தவிர ஒன்றே முக்கால் கழஞ்சுப் பொன் கொடையும் இருக்கலாம்.
இரு ஊர்களின் மகா சபையார் குறிக்கப்படுகின்றனர்.
வீரசிகர என்பது ஒருவரைக் குறிக்கிறது. அரசரா அல்லது வேறொருவரா என்பது தெளிவாகவில்லை.
சார்த்துவித்த என்பது கொடை பற்றிய யூகத்துக்கு இடமளிக்கிறது. ஆடை, அணிகலன் போன்றவற்றைச்
சார்த்தும் நிவந்தம் ஆகலாம். உறுதியில்லை.
கிரந்த எழுத்துகள் உள்ளன. எழுத்து நேர்த்தியாகச் செதுக்கப்படவில்லை என்றாலும் எழுத்தமைதியைக்
கருத்தில்கொண்டால், கல்வெட்டு 16-17 நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம். இதையடுத்துப் பிற்காலத்துக்கும் சிலர்  கொண்டுபோகலாம். காலக்குறிப்பு கல்வெட்டில் இருந்திருப்பின் ஐயம் ஏற்படாது.

___________________________________________________________
  

முனைவர் நா.கண்ணன்
navannakana@gmail.com
___________________________________________________________


Monday, November 7, 2016

சோவியத் யூனியன் இதழ்கள் பற்றிய அறிமுகம்

 -  கௌதம சன்னா


விளாடிமிர் இலியிச் லெனின் தலைமையில் இயங்கிய போல்ஷ்விக் கட்சி, 1917ஆம் ஆண்டு ஜார்ஜ் மன்னரை எதிர்த்து ரஷ்யாவில் புரட்சியினை நடத்தி ஆட்சியதிகாரத்தினைக் கைப்பற்றியது. வரலாற்றில் நவம்பர் புரட்சி என்று அது அழைக்கப்படுகிறது. உலகில் அமைக்கப்பட்ட இரண்டாவது கம்யூனிஸ்ட் ஆட்சியாக அது அறிவிக்கப்பட்டது. புரட்சியினைத் தொடர்ந்து ரஷ்யாவினை சுற்றியுள்ள சிறு நாடுகள் அதன் தலைமையில் சேர்ந்தபிறகு சோவியத் கூட்டமைப்பு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேசிய இனங்களின் முழு அங்கீகாரம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாக அது விளங்கியது. இந்த ஜனநாயகப் பண்பினர் தமது கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பண்பாடு  மற்றும் இலக்கியங்களின் செழுமைகளை மற்ற நாடுகள் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகளை சோவியத் யூனியன் மேற்கொண்டது.

அந்த முயற்சியில் சோவியத் படைப்பாளிகளின் ஆகச் சிறந்த படைப்புகள் உலகின் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு, கோடிக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு உலக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப்பட்டன. இது ரஷ்யா மற்றும் சோவியத் கூட்டரசின் மக்களின் இலக்கிய மற்றும் வரலாற்று பங்களிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.

அதில் ஒரு அங்கமாக சோவியத்தின் நிர்மாணக் கட்டமைப்பில்  என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக "சோவியத் யூனியன்" என்ற இதழ் 1930ஆம் ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி அவர்களால் தொடங்கப்பட்டது.  அவர் மறைந்த பிறகு அந்த இதழ் வெளிவருவதில் தடைகள் வந்தன. பிற்பாடு சோவியத் அரசினால் அதிகாரப் பூர்வமாக 1950ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு சோவியத் கூட்டரசு சிதறும் வரையில் தொடர்ந்து வந்தது. அது மட்டுமின்றி ரஷ்ய, தமிழ், வங்காளி, உருது, ஆங்கிலம்,அரபு, சீன, பின்னிஷ், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்க, அங்கேரி, இத்தாலி, ஜப்பானிய, கொரிய, மங்கோலிய, போர்த்துகீசிய,  ருமேனியா, செர்போ-குரோத்திய, ஸ்பானிஷ், வியட்நாமிய மொழிகளில் அது வெளியிடப்பட்டது.

மேற்கண்ட மொழிகளில் அது வெளியிடப்படும்போது அந்த மொழியில் நாட்டுடன் சோவியத் கூட்டரசுக்கு உள்ள அரசியல் மற்றும் பண்பாட்டு உறவுகள் முன்னிலைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் படைப்புகள் அதில் பிரதானமாக இருந்தன, அதன் ஒரு பகுதியாக தமிழில் வெளியிடப்பட்ட சோவியத் யூனியன் இதழ்களில் ஒன்று இது.

சர்வதேசத் தரத்தில் தமிழ் எப்படிப் பயணிக்க முடியும் என்பதற்கு இந்த இதழ் ஒரு சான்று. மிக உயர்ந்த தரத்தில் வெளியிடப்பட்ட சோவியத் யூனியன் இதழ்களில் 1990 ஆண்டு வெளிவந்த இரண்டு இதழ்கள் 'தமிழ் மரபு அறக்கட்டளை' வாசகர்கள் மட்டுமின்றி சர்வதேசத் தரத்தில் தமிழைக் கொண்டு செல்ல முயலும் அனைவருக்குமான பரிசாக வழங்குகின்றேன். ரஷ்ய புரட்சி 1917 நவம்பர் மாதம் 7ஆம் நாள் அதிகாரப் பூர்வமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 7 அன்று  கொண்டாடப்படுகிறது. அதன் பரிசாக வாசகர்களுக்கு என்னுடைய சேகரத்திலிருந்து.


___________________________________________________________
 
ஜா. கௌதம சன்னா
 g.sannah@gmail.com
___________________________________________________________