Wednesday, May 13, 2020

தமிழிசையும் கலைஞரும்

தமிழிசையும் கலைஞரும்

  ——   விஜய் எஸ். ஏ

          தமிழ்நாட்டின் 20ஆம் நூற்றாண்டு அரசியல் சமூக வரலாற்றைப்  பார்த்தோமானால் அதில் இசை சார்ந்த ‘இசை அரசியல்’ என்பது அங்கு இங்கென பல்வேறு  இடங்களில் பரந்துபட்டு நிறைந்திருக்கிறது. இன்றைய தேதியில், தமிழிசை தான் கர்நாடக இசை என்கின்ற அடிப்படை உண்மையை யாரும் மறுக்கமுடியாதபடி  பலரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

          போன நூற்றாண்டில் பெரும் பிரச்சனையாக எழுந்து அடங்கிய “தமிழ்நாட்டில் வேற்றுமொழியில்  பாடுவது” என்கிற பிரச்சனை, இன்று ஓரளவேனும் குறைந்துவிட்டது. இன்று சஞ்சய் சுப்ரமணியம் போன்ற புகழ்பெற்ற செவ்வியல் இசைக்கலைஞர்கள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் சீசனில் தமிழிசை மன்றத்தில் முழுக்க தமிழில் பாடுகிறார்கள். ஆனால் இன்னமும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் வேறு விதங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், செவ்வியல் இசையை அல்லது பொதுவாக மண் சார்ந்த இசையை, தமிழிசை கோட்பாடுகள் கொண்டு அணுகாமல் இன்னும் கர்நாடக சங்கீதம் வகுத்த கோட்பாடுகள் தான் கோலோச்சுகின்றன.

          இன்னமும் தமிழர்களாகிய நாம், இதில் முழுதாக இறங்கிச்  சீர்திருத்தம் செய்யாமலிருக்கிறோம் என்பதும்  ஒரு முக்கிய காரணம். தமிழக அரசு இசைக்கல்லூரிக்கு முதல்வராக ஒரு தமிழர் புஷ்பவனம் குப்புசாமி ஆகமுடிவதில்லை, ஆனால் (சுதா ரகுநாதன்) சிபாரிசில் அவர்களுக்குத்  தோதான ஒருவர் முதல்வர் ஆக முடிகிறது. ஆனால் அதையும் தாண்டி இன்று செவ்வியல் இசைத்துறை கர்நாடக இசை என்ற பெயரிலும், மக்களிசையும் ஆங்காங்கு அதன் வடிவிலும், நவீனத்  தொழில்நுட்ப வளர்ச்சியால் விளைந்த சினிமா திரைப்பட இசை என்றும் பரந்துவிரிந்து தமிழிசை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச்  சூழலில், தமிழ்  மண்ணை, மக்களை, இதன் வரலாற்றை, பண்பாட்டை, தொடர்ந்து மாறிக்கொண்டு வரும் பகுத்தறிவை, இறுதி மூச்சு உள்ள வரை கட்டிக்காத்தவரும் நேசித்தவருமான கலைஞர் கருணாநிதி, தமிழ் இசைக்குச் செய்த சேவைகள் குறித்து தனியே பதிவு செய்யவேண்டி இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

          கலைஞர் தமிழிசையின் பால் செய்த முதல் பதிவு என்று வரலாற்றை முடிந்தளவு பின்னோக்கிச்சென்றால் நமக்குக் கிடைப்பது, அவர் 1946 இல் குடிஅரசு இதழில்  எழுத்துப்பணி செய்தபோது அவர் எழுதிய “தீட்டாயிடுத்து!” என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரை! அந்த ஆண்டு, திருவையாறு தியாகராஜர் உற்சவ இசை  விழாவில், தண்டபாணி தேசிகர் “விநாயகனே வினை தீர்ப்பவனே” என்று தமிழில் பாடியதால், “நீச பாஷை தமிழில் பாடிட்டார், தீட்டாயிடுத்து” என்று  சொல்லி அங்கிருந்த பார்ப்பனர்கள், தண்டபாணி தேசிகர் பாடிய இடத்தை நீரால் கழுவினர் என்பது அங்கு நடந்த சம்பவம். அதை அவர் குடி அரசு இதழில் ஒரு சிறு கட்டுரையாக கலைஞர் எழுத,  பெரியார் அதைப் பாராட்டினாராம்! [1, 2]
 (குடி அரசு - கட்டுரையிலிருந்து: அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்து வந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது. தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு.  ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகி விட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது. தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை ஆரியக்குடி வர்க்கம் அகம்பாவத்தோடு தான் வாழும்.)

           இதற்கடுத்து, அவர் அரசியலில் நுழைந்து வளர்ந்து வென்று முதல்வரான பின், ஆரம்ப காலகட்டங்களில் அவரின் பங்களிப்பு குறித்து அதிகம் தகவல்கள் இல்லை. ஆனால் 2009இல் அவர் முதல்வராக இருந்தபோது செய்த முக்கிய சம்பவம்; ஆபிரகாம் பண்டிதர் எழுதிய “கருணாமிர்த சாகரம்” என்கிற அதிமுக்கியம் வாய்ந்த தமிழிசை நூலை நாட்டுடைமையாக்குகிறார் [3].   அதுமட்டுமின்றி, பண்டிதர் வம்சாவளியில் வந்த அமுதா பாண்டியன் எழுதிய “கருணாமிர்த சாகரம் – சுருக்கத்திறனாய்வு உரை” (Karunamirdha Sagaram – A Brief Critical Review) என்கிற நூலை வெளியிட ஆராய்ச்சித்தொகையை அரசு மூலம் வழங்குகிறார்.   இதற்கு முன்பு, 1997 இல், பிடிஆர்  பழனிவேல்ராஜனின் இளைய சகோதரர், பிடிஆர் கமலைத் தியாகராஜன் எழுதிய தமிழிசை வரலாறு/கோட்பாடுகள் பற்றிய நூலான “இசைத்தமிழின் உண்மை வரலாறு” என்கிற நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் கலைஞர். அது உங்கள் பார்வைக்குக் கீழே…






          கலைஞர், தமிழிசை ஆய்வு நூலுக்கு அணிந்துரை அல்லது முன்னுரை எழுதும் அளவுக்குத் தான் இசை அறிஞர் அல்லன் என்கிறார்.  ஆனால், அவரறிவுக்குட்பட்டு இந்த நூலை நன்கு வாசித்திருக்கிறார் என்பது அவர் எழுதிய அற்புதமான உரையே நமக்குச்  சொல்கிறது. முக்கியமாக, தமிழகத்தில் இசையின் பொற்காலம் என்று கர்நாடக இசை மூவர்(தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்) வாழ்ந்த காலத்தை  என்று நூலாசிரியர் சொல்வதைக்  குறிப்பிட்டு, அவர்களுக்கு முன்னரே, அருணாசலக்கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய தமிழிசை மூவரைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் இசை வரலாற்றில் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட எண்ணற்ற தகவல்களுள் இந்த தமிழிசை மூவரும்  அடக்கம்.

           கலைஞர் இந்த தமிழிசை மூவர்களுக்காக, அவர்கள் நினைவைப்  போற்றும் விதமாக 2010 ஆம் ஆண்டு, இவர்களுக்கு ஒரு மணிமண்டபம் எழுப்பப்படும் என்று அறிவித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இதற்காக இடம் ஒதுக்கினார். பின்னர் அடுத்த அதிமுக ஆட்சியில் அது திறக்கப்பட்டது[4].



          தமிழிசை குறித்த நூல்கள், பஞ்ச மரபு தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற சங்ககால நூல்களில் துவங்கி, நா.மம்மது உருவாக்கிய தமிழிசைப்  பேரகராதி வரை, கிட்டத்தட்ட 100 நூல்களுக்குள் தான் இருக்கும். ஆனால் இன்றைய தேதியில், தமிழிசையில் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல்கள் கூட கிடைப்பது பேரரிது என்கிற நிலை தான். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நூலகங்களை  அனைவரும் எளிதில் பயன்படுத்த முடியாத நிலையில், வாங்க நினைத்தாலும் பல நூல்கள் இன்று அச்சில் இல்லாத நிலையில், கலைஞர் அமைத்த அண்ணா நூலகம் இன்று ஒரு மிக முக்கிய ஞானப்புதையலே தான்! அதன் தமிழிசைப்பிரிவில் பற்பல முக்கிய நூல்கள் இடம்பெற்றிருப்பது கலைஞர் அளித்த கொடை.

          சர்ச்சைகளும் இல்லாமலில்லை. 2007இல் பத்மா சுப்ரமணியம் “பரதமுனி ட்ரஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடன ட்ரஸ்ட் தொடர்பான விழாவிற்காகக் கலைஞரிடம் அனுமதி கேட்க, அவர் கொதிப்படைந்திருக்கிறார். பின்னர் அந்த இடத்தை பரத-இளங்கோ ட்ரஸ்ட் என பத்மா பெயர்மாற்றி இருக்கிறார் [5].   அனேகமாக, இதற்கு ஒரு பதிலடியாகத்தான் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் திறக்கும் திட்டத்தைக் கலைஞர் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், பரதர் இயற்றிய நாட்டிய சாஸ்திரம் தான் ஒட்டுமொத்த இந்திய இசை மற்றும்  நடனத்திற்கான அடிப்படை என ஆரியர்கள்  பலகாலமாய்  திரிபு வாதம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் 4ஆம் நூற்றாண்டு நாட்டிய சாஸ்திரத்திற்கு முன்பே, கி.மு 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரமே தமிழர்களின் இசைக்கோட்பாடு மற்றும்  நடனத்திற்கான கருவூலமாகத் தமிழர்களால் கருதப்படுகிறது. சிலம்புக்கு முந்தைய பஞ்சமரபு (ஐந்து தொகை) உள்ளிட்ட நூல்களும் இசைக்கோட்பாடுகளுக்கு அடிப்படை தானெனினும் சிலம்பு பல்வேறு காரணங்களுக்காக ஒரு மிகமுக்கிய மய்யமான நூலாக விளங்குகின்றது.

          2008இல் கலைஞர் எழுதிய உளியின் ஓசை என்கிற திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா இசையில் “அகந்தையில் ஆடுவதா” என்கிற பாடலில், தமிழிசையின் தொன்மம், அதன் நூல்கள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புக்களைப் பாடல் வரிகளாக வடித்திருப்பார்! திருவாசகம், ஸ்வப்னம் போன்ற இசை ஆல்பங்கள், உளியின் ஓசை பாடல் உள்பட, திரைப்பாடல்களில் தமிழிசை பற்றிய குறிப்புக்களை இளையராஜா வைத்திருப்பார். குறிப்பாக, 'கோவில் புறா' என்ற படத்தில், “அமுதே தமிழே” என்ற பாடலில், “தேனூறும் தேவாரம்  இசைப்பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே” என்று புலமைப்பித்தன் எழுதியிருப்பார். 

(மேற்சொன்ன 'அமுதே தமிழே' பாடல்வரிகளின்படி 7ஆம் நூற்றாண்டின் தேவாரம்தான் இசைப்பாட்டின் ஆதாரம் என்று சொன்னால்,  அதை மறுத்து,  அதற்கு முந்தைய இசைநூல்கள், இசைப்பாடல்கள், 5ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்ட பக்தி இலக்கியம் சார்ந்த பாடல்களைச் சிலர் குறிப்பிடலாம். ஆனால் அன்றைய தமிழகத்தில் 247க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவ தலங்கள் என்பன பெற்ற பாடல்கள் தேவாரம் தான் என்பதால் அந்த வரி நியாயமாகிறது. அதேபோல், தமிழிசை தான் தரணியிலேயே முதன்முதலாகத் தோன்றிய இசை என்பதும் கூட கேள்விக்குள்ளாக்கப்படலாம்.  அது மிகநீண்ட விவாதம். ஆனால் உலக வரலாற்றில், கிரேக்க இசைக்குக் கூட ஒரு துவக்கம் உண்டு.  ஆனால், தமிழிசைக்குத் துவக்கமே தெரியாத அளவு மிகப்பழைமையானது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பஞ்சமரபு ஆகிய நூல்களின் காலத்திலேயே தமிழிசை மிகவும் பண்பட்ட, கோட்பாடுகள் நன்கு வளர்ந்த நிலையில் செழிப்பான கலையாகத் திகழ்ந்தது என்கிற விதத்தில், ஐயமின்றி தமிழிசை தரணியில் முதலிசை தான்.)

          இவை மட்டுமின்றி, இளையராஜா, தன் திரைப்படங்களில் தமிழிசையின் முக்கிய இசைக்கருவிகளான பறை, நாகசுரம் உள்பட, நீண்டகாலமாக இந்த மண்ணின் பல்வேறு வகையான தாள/மேளக்கருவிகளை பயன்படுத்துவது அனைவரும் அறிந்தது. இளையராஜாவின் நாட்டுப்புற இசை, மக்களிசைக்கான பங்களிப்பு சாதனைகள் என்பது சொல்லித் தெரியவேண்டியதே அல்ல. அவ்வகையில், தமிழிசைக்குத் தொண்டாற்றும் இளையராஜாவைப் பெருமைப்படுத்த இளையராஜாவுக்கு 'இசைஞானி' பட்டத்தைக் கலைஞர் வழங்கியது கூட, தமிழிசைத் துறைக்குக் கலைஞர் செய்த ஒரு சேவை தான்.

          இவை அனைத்தும் நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! தமிழக அரசியல் தலைவர்களில், இன்றும் ஒரு சவலைப்பிள்ளையாக இருக்கும் தமிழிசையின் மீது அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்த, தமிழ் இசைக்குத் தொண்டாற்றிய ஒரே முதல்வர் கலைஞர் மட்டுமே! அவர் வாழ்நாட்களில் இன்னும் அதிக முறை ஆட்சியிலிருந்திருந்தால், இன்னும் கூடச் செய்திருப்பார். மேற்சொன்ன “இசைத்தமிழின் உண்மை வரலாறு” நூலில், “அக்காலத்தமிழன் இசையில் உயர்ந்திருந்ததை இக்காலத்தமிழன் உணரவில்லை” என்று கலைஞர் சுட்டிக்காட்டிய கருத்தை மனதில் கொண்டு, வருங்காலத்தில், தமிழ்ப்பண்பாட்டை முழுமையாக ஆரிய ஆதிக்க சக்திகளிடமிருந்து மீட்பதுபோல் தமிழ் இசையையும் முழுதாக மீட்டெடுப்போம் என தமிழர்கள் உறுதி பூணுவோம்.



தொடர்பு:  இசை ஆய்வாளர் விஜய் எஸ். ஏ., சென்னை(@tekvijay)


மேற்கோளாகக்  கொடுக்கப்பட்டவை:
1)  http://namathu.blogspot.com/2018/01/blog-post_75.html
2)  https://youtu.be/8f1Jue57raY?t=1520
3)  https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Rs.1.65-crore-royalty-for-scholarsrsquo-heirs/article15227023.ece
4)  https://www.dinamani.com/tamilnadu/2013/feb/21/சீர்காழியில்-தமிழிசை-மூவர்-மணிமண்டபம்-திறப்பு-636581.html
5)  https://www.vikatan.com/news/coverstory/123613-bharathamuni-temple-opening-ceremony-in-mamallapuram.html



நன்றி மழை - 2018 




Monday, May 11, 2020

புதுவைக் குயிலின் பொன்னோவியம்

புதுவைக் குயிலின் பொன்னோவியம்

- முனைவர். ஔவை அருள்


          பாரதியாரை நாளும் நினைவோம் !



          பாரதியாரின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் இடைவெளியிருந்ததில்லை.  நெஞ்சில் கனல் மணக்கும் நித்திலப் பூவாக அவர் எப்போதும் வாழ்கிறார்.  புலவர்களின் பெரும்பாலோர் பெற்று வாழ்ந்த பேராளர்கள்.  அவர் ஒருவர்தான் கொடுத்துச் சிவந்த கோமான்.  வாழ்க்கை முழுவதும் தோற்றார் என்றாலும், எந்த இடத்திலும் தன் தோல்வியைச் சொன்னதில்லை.  இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் "எடுத்த காரியம் யாவிலும் வெற்றி" என்று பாடுவதற்கு ஒருவர் முன்வர இயலுமா?

          தேசிய நோக்கில் படைக்கப்பட்ட காப்பியம்,   பாஞ்சாலி சபதம்.  பக்திப் பாங்கில்   படைக்கப்பட்டது கண்ணன் பாட்டு.  தத்துவ   இழையில்  பின்னப்பட்டது குயில் பாட்டு.

          குயில்பாட்டு எழுநூற்று நாற்பத்து நான்கு அடிகளில் படைக்கப்பட்ட காப்பியம். இந்த குயில் படைப்பு ஒன்பது பகுதிகளாக விரிகிறது.




          குயிலின் பாட்டாக இடையிடையே வருகின்ற பகுதிகளைத் தவிர எஞ்சியுள்ள பகுதிகள் அனைத்தும் வெண்பா யாப்பில் அமைந்திருக்கின்றன.   முப்பெரும் காப்பியங்களுள் இந்தக் காப்பியமான குயில் பாட்டு மட்டும் சங்ககாலப் பத்துப் பாட்டுகளை ஏதோ ஒரு வகையில் நினைவூட்டுவதாகவே அமைந்துள்ளது.

          குக்கூ என்ற குரலில் காதல், அருள், இன்பம், நாதம், தாளம், பண், புகழ், உறுதி, கூடல், சூழல் ஆகிய பத்துப் பொருண்மைகளையும் ஒளியாலும் சூழலாலும் குரல் வெளிப்பட்ட முறையாலும் பாரதியார் உணர்கிறார்.  சின்னக் குயிலின் மடியில் வெட்டுண்ட நிலையில் கிடக்கும்  சேரமானின் இறுதிப்   பேச்சு,

          கண்ணகியின் மடியில் வெட்டுண்ட கோவலன் பேசிய இறுதிப் பேச்சைப் பல இடங்களில் குயில் பாட்டில் நினைவூட்டுகிறது.  ஐயுற்று மன்னன் மகன் வீசும் வாள் வீச்சு, காயசண்டிகையின் கணவன் உதய குமரன் மீது வீசிய வாள் வீச்சையும் நினைவூட்டுகிறது. 

          குயில்பாட்டில், மக்கள் மட்டும் பாத்திரங்களாக வரவில்லை.  பேய், பிசாசு, விலங்கு, புள் ஆகியனவும் பாத்திரங்களாகின்றன.

          எல்லா உயிர்களுக்கும் உள்ள காதல் உணர்ச்சி, இங்கே புதிய முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  பொதுவாகக் கவிஞர்கள் அன்பிலும், அழகிலும், பெண்மையிலும், ஈடுபாடு கொண்டவர்கள்.  மகாகவி பாரதியார் பெண்மையைப் போற்றுபவர், சக்தியை வழிபடுபவர், புதுமைப் பெண்ணைக் காணத் துடிப்பவர்.  அவர் கண்ட குயில், தமிழ்ச் சமுதாயத்தின் சராசரி பெண்ணுக்குக் குறியீடாகிறது.  இந்தியச் சமுதாயத்தின் சராசரி பெண் என்றாலும் தவறில்லை.

          குயிலின் சோகம், இந்த சமுதாயச் சராசரி பெண்ணின் சோகம், அல்லது பெண்மையின் சோகம்.  குயிலின் வரலாறு இந்த சமுதாயப் பெண்ணின் வரலாறு.  குயிலின் காதல் கதை ஆண்டாண்டாக அவலத்தில் ஆழ்ந்த பெண்ணின் காதல் கதை.  குயில்பாட்டின் மையப் பொருள் குயில்.

          பாரதியார், தன் குயில் பாட்டில் காட்டியுள்ள பாத்திரங்களைத் தாம் புனையும் கவி அமைப்புக்கு ஏற்பக் கற்பனை உலகில் இட்டு உருக்கி, கவிதை அச்சில் வார்த்தெடுத்து, உளவியல் சாணையில் தீட்டி, ஓவியம் எழுதி, உயிரும் உணர்வும் ஊட்டி உலா வகுத்த நீண்ட கனவின் நிகழ்ச்சியாகும்.

          பாரதியாரின் கவித் திறனுக்கும், கற்பனை வளத்துக்கும், புதியன புனையும் ஆற்றலுக்கும் சொல்லோவியத் திறனுக்கும் குயில் பாட்டு தனிப் பெரும் சான்றாகத் திகழ்கிறது.


முனைவர்.  ஒளவை அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை
தமிழ்நாடு அரசு






பண்ணின் சுவையும் படமாக்கப்பட்ட திணை மரபும்

பண்ணின் சுவையும் படமாக்கப்பட்ட திணை மரபும்

-  தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது  

            இசை என்பது உலகப் பொதுமையாக உள்ள அதேநேரம், அது உருவான நிலத்தின் / திணைக் கூறுகளின் தன்மையினை அடிநாதமாகக் கொண்டதே. அவ்வகையில் தமிழ்த்திரைப்படப் பாடல்களின் பண்களும் அவை படமாக்கப்பட்ட திணைகளின் ஒத்திசைவு கொண்ட பாங்கினையும்  விளக்குகின்ற விதமாக, ஆய்வு நோக்கில் அணுகும் சிறு முயற்சியே இக்கட்டுரை. 
      
            ஒவ்வொரு திணைக்கும் ஒரு பெரும்பண்ணும், ஒரு சிறுபண்ணும் என்பதாகப் பகுத்து உருவாக்கிய பண்பாடு தமிழர்களின் பண்பாடு ஆகும். 
       
            பண்டைய நாளில் பண், பெரும்பண், யாழ், பாலை, தாய்ப்பண் என்றும்;  இக்காலம் மேளம், மேளகர்த்தா, சம்பூரணம் என்று வழங்கப்படுவது ஏழுசுரப்பண்.    திறம், குழல், பாணி என்று முன்னாளிலும் ஒளடவம் என்று இந்நாளிலும் வழங்கும் பண், ஐந்து சுரப்பண் (சிறுபண்). 
       
            நெய்தல் நிலம் இரண்டு பாலைகளுக்கு உரிமை பெறுகின்றது. செவ்வழிப்பாலை மற்றும் விளரிப்பாலை. இந்த விளரிப்பாலை குறித்து நாம் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். 

விளரிப்பாலை:       
            விளர், விளரி, விளரிப்பண், விளரியாழ் என்றெல்லாம் பண்டை நாளில் பெயர் பெற்றிருந்த பண், இக்காலத்தில் ‘தோடி’ இராகம் என்றாகியுள்ளது. 
       
இப்பண்ணின் சுரங்கள் 
வளர் எனில் இளமை, மென்மை என்று பொருள். விளரி (த) என்ற சுரத்தால் பண்ணின் பெயர் ‘விளரி’. 
      
            அனைத்துச் சுரங்களும் மென் சுரங்களாக இருப்பதால் இயல்பாகவே இப்பண் அவலச்சுவை (சோகம்) தரும் பண் ஆகிறது. கடற்கரை நிலமான நெய்தல் நிலத்திற்குரிய பண்ணாகத் ‘தோடியை’ தமிழர்கள் பண்டைக் காலங்களில் அமைத்துக் கொண்டதற்கு இப்பண் தரும் அவலச்சுவையே காரணமாகிறது. தமிழரின் இலக்கண மரபு தொகுத்துச் சுட்டும் முறைமையில், நெய்தல் நிலத்தின் உரிப்பொருளானது, ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ ஆகும்.

            உலக இலக்கியத் தர வரிசையில், முதல் வரிசையினுள் இடம்பெறும் காப்பியம் சிலப்பதிகாரம். உலகப் பெரும் இலக்கியப் படைப்பாளிகளில் முதல் வரிசையினில் இடம்பெறும் பெரும்புலவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தில், நிலத்திற்குரிய (திணை) பெரும்பண்  (ஏழுசுரப் பண்), மற்றும் சிறுபண் (ஐந்துசுரப்பண்) ஆகியவற்றை அந்தந்த நிலங்களிலேயே அமைத்துக் காட்டியுள்ளது அடிகளாரின் தனிச் சிறப்பாகும். 

            கடற்கரை (நெய்தல்) நிலத்தைச் சேர்ந்த மக்கள் நுளையர். அவர்களுடைய பண் விளரி. இதனை, ' நுளையர் விளரி நொடி தரும் தீப்பாலை '  ( சிலப்பதிகாரம்: புகார்க்காண்டம், கானல்வரி - 48 ஆம் பாடல்) என்று அடிகளார் பதிவு செய்துள்ளார். கானல் என்பது கடற்கரைச் சோலை. அவ்வாறே நொடியானது துன்பம், அவலம் என்றும் பொருள்படும் (விரிவுக்குப் பார்க்க: தமிழிசைப் பேரகராதி, பக். 460,461).

            நுளையர் என்பதில் திணையினையும், விளரி என்பதில் அத்திணைக்குரிய பண் என்ற இராகத்தையும், 'நொடி' என்பதில் அப்பண் தரும் அவலச்  சுவையையும், (தீம்) பாலை என்பதில் அது ஏழுசுரப்பண் என்பதையும் மிக நுட்பமாக அடிகளார் ஆவணப்படுத்துகிறார்.

            மாமன்னர் அக்பரின் அவைக்களப் பாடகர் தான்சேன். அவர் மறைந்த பொழுது அவருடைய மகன் பிலாசுகான் மிகுந்த அவலத்துடன் துன்பச்சுவைப் பாடல்களைப் பாடியதாக ஒரு செய்தி மரபினில் உண்டு. பிலாசுகான் (Tansen's son Bilas Khan)அப்போது பாடிய பண்ணின் பெயர் 'பிலாசுகானி தோடி'(Bilaskhani Todi). இந்தப் பண்ணின் சுரங்கள் பின்வருமாறு:

இந்துத்தானி இசைமரபின் பண்ணிற்கும், தமிழ்மரபின் பண்ணிற்கும் சில வேறுபாடுகள் இருப்பினும் சுரங்கள் பொதுவானவையே; மேலும் மென்மையானவை. எனவே  இரண்டு பண்களும் அடிப்படையில் அவலச்சுவைப் பண்களாகும். அதாவது கடற்கரை நிலமான நெய்தல் நிலத்திற்கு உரியவை.
         
            நமது தமிழ்ப்படங்களில் சில பாடல்கள் கடற்கரை நிலத்தில் பாடப்படுவதாகப் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பாடல்கள் அவலச்சுவைப் பாடல்களாகவும் உள்ளது கவனிக்கத்தக்கதாகும். சான்றாகச் சில படங்களைப் பார்ப்போம்: 
            'ஆலயமணி', படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் 'சட்டிசுட்டதடா' என்பதாகும். இந்த சோகப்பாடல் நமது நினைவினில் ஒலிக்கத் தொடங்கியதும் மனத்திரையில் அதன் காட்சிப் பின்புலம் மெதுவாக நகராத தொடங்கும். அந்தப் படிமமானது கடலிலும் கடற்கரையிலுமாக விரிவதைக் காண முடியும். 

            'பார் மக்களே பார்', என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல், 'அவள் பறந்து போனாளே, எனை மறந்து போனாளே' என்பதாகும். ஒரு தலைமுறை இளைஞர்களின் சோக கீதமாகத் தொடர்ந்து உலுக்கிய அந்தப்பாடலின் ஒரு பகுதி படத்தில் முத்துராமன் பாடுவது போலக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். சோகத்தில் அமிழ்த்துகையில் சற்று நிதானித்தால் அந்தப் பாடலின் பின்புலக் காட்சி கடற்கரையாக உள்ளதை அறியமுடியும். இந்த இரண்டு பாடல்களும் பிலாசுகானி தோடியில் அமைந்தவை.  

            தமிழரின் திணைமரபுடன்  தமிழிசை மரபு குறித்த பயிற்சியும் இருந்தால் மட்டுமே இதனை இணைத்து விளங்கிக் கொள்ளமுடியும். அவ்வாறிருக்க, மேற்குறிப்பிட்ட படங்களில் இத்தகைய காட்சிகளும் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்ற நிலையானது புரிந்து நடந்த ஒன்றா என்ற கேள்வி எழும். அப்படியும் இருக்கலாம். அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது திணை மரபும் இசைமரபும் நம் இயல்பினில், மரபீனியில் பதிவு பெற்றுள்ளதோ என்கிற எண்ணம் எழுதலும்  இயற்கை. 

            நெய்தலின் பண் கொண்டு அணுகியதுபோல மற்ற திணைகளின் பண்கள் கொண்டும் அணுகுகையில் பல பாடல்களைச் சுட்டிக் காட்டமுடியும். இருப்பினும் ஆய்வின் திறப்பாக இக்கட்டுரையானது ஒரு திணையினை மட்டும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு விளக்க முயன்றுள்ளது; தொடர்வோம்.
         
            "எவ்வகை அறிவும், தொன்மத்தை விட்டுவிட்டு இயங்குவதில்லை".






Saturday, May 9, 2020

ஒரு சேதுபதி மன்னரின் செப்பேடு

ஒரு சேதுபதி மன்னரின் செப்பேடு

--துரை.சுந்தரம்


முன்னுரை:
            திருவாங்கூர் தொல்லியல் வரிசைத் தொகுதி நூல்களில் ஒன்றான தொகுதி ஐந்தில் (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES, Vol-V), இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் ஒருவரான முத்து ராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் செப்பேட்டை விரிவாக ஆய்ந்து எழுதியிருக்கிறார் நூலின் பதிப்பாசிரியர் A.S. இராமநாத அய்யர் அவர்கள். அவருடைய ஆய்வுக்கட்டுரை (ஆங்கிலத்தில் அமைந்தது)  வாயிலாக 18-ஆம் நூற்றாண்டின் பின் பாதியின் வரலாற்றுச் செய்திகளையும், செப்பேட்டு ஆவணங்களின் அமைப்பு, மொழி போன்ற பல்வேறு செய்திகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.  அது பற்றிய ஒரு பகிர்வே இப்பதிவு.

சேதுபதிகள்:
            ’சேதுபதி செப்பேடுகள்’ என்னும் தம் நூலில் புலவர் செ. இராசு (முன்னாள் தலைவர், கல்வெட்டியல் துறை, தஞ்சைப்பல்கலை) அவர்கள் சேதுபதிகள் யார் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். சேதுபதிகள் மறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மறவர்கள் தமிழ்நாட்டின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த குடிகள். மறவர் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் உள்ளன. படைத்தலைவராக, பாலை நிலம் வாழ்பவராக, மறக்குடியைச் சேர்ந்தவராக அவர்கள் வருணிக்கப்படுகிறார்கள்.  இன்றைய மறவர் குலத்தின் முன்னோர்களா என்பது ஆய்வுக்குரியது. இரு சாரார்க்கும் தொடர்பு இருக்கக் கூடும்.
            மறவர்களில் செம்பிநாட்டு மறவர் ஒரு வகையினர். இராமநாத சேதுபதிகளும், சிவகங்கைச் சீமையை ஆட்சிபுரிந்த மறவர்களும் செம்பிநாட்டு மறவர் குலத்தவரே. செம்பிநாடு கல்வெட்டுகளில், ‘செம்பி நாடு’, ‘கீட்செம்பிநாடு’, ‘வடதலைச் செம்பிநாடு’  எனப்பலவாறு குறிக்கப்பட்டது. சோழரோடு தொடர்புடையவர். சோழரின் இலங்கைப்படையெடுப்பின்போது காவலாய் நின்ற படைத்தலைவர் வழி வந்தவர்கள்.  தொன்மைப் புனைவுகளின்படி, இராமன் கடலில் கட்டுவித்த ‘சேது’ என்னும் அணையையும், பின்னர், இராமன் எழுந்தருளுவித்த ‘இராமலிங்க’த்தையும் காத்த மறவர் தலைவன் வழி வந்தோர் ஆவர். இராமநாதபுரம் வரும்முன் சேதுபதிகளின் முன்னோர் துகவூர்க் கூற்றத்துக் காத்தூரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்ப்பால் விரையாத கண்டனில் இருந்தனர் என்று எல்லாச் செப்பேடுகளும் கூறுகின்றன.
            சேதுபதி அரச மரபு கி.பி. 1604-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.  சேதுபதி பரம்பரை 11-12-ஆம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றது என்று இராமநாதபுரம் அரசு இதழான  ‘கெசட்டியர்’ (GAZETTEER) குறிப்பிடுகிறது. 

முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி:
            இக்கட்டுரையில் இடம்பெறும் செப்பேட்டு அரசரான முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, கி.பி. 1604-05 –ஆம் ஆண்டு ஆட்சி தொடங்கும் முதலாவது சடைக்கத்தேவர் என்ற உடையான் சேதுபதி முதல் குறிக்கப்பெறும் பதினைந்து அரசர்களில் இறுதி அரசராவார்.  இவரது ஆட்சிக்காலம் 1763-1772, 1782-1795  எனக் குறிக்கப்பட்டுள்ளது. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : ஆட்சிக்காலத்தை இரு கட்டங்களாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இடைப்பட்ட பத்து ஆண்டுக்காலம் என்னவாயிற்று?) இவருக்கு முன்னர் ஆட்சியிலிருந்தவர் செல்லத்தேவர் விஜயரகுநாத சேதுபதி. கி.பி. 1860- இல் இறந்தபோது, அவருடைய சகோதரியான முத்து திருவாய் நாச்சியாரின் மகனான முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (சிறார்ப் பருவத்தினர்)  ஆட்சியில் அமர்த்தப்பட்டார். (செப்பேடு வழங்கப்பட்ட 1769-ஆம் ஆண்டு இவர் பத்து வயதினராகலாம்).  ஆட்சி நிருவாகத்தை இவருடைய தாய் பார்த்துக்கொண்டார். நிருவாக உதவியிலிருந்தவர் தளவாய் தாமோதரன் பிள்ளை.  இவரின் வீரம் குறித்துப் பாட்டு வடிவிலான ”வேள்விக்கோவை" என்னும் நூல் இயற்றப்பட்டுள்ளது.
            1910-11 ஆண்டுகளில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிவுக்குறிப்புகள் அடங்கிய ‘மெட்ராஸ் கல்வெட்டியல் ஆண்டறிக்கை’யில், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் கல்வெட்டு ஒன்றில் (ஆண்டு 1771)  இவரது சிறப்புப் பட்டங்களான ‘ தேவை நகராதிபன், இரவிகுல சேகரன், அனும கேதனன், கருட கேதனன் ஆகிய அடைப்பெயர்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இவரது முன்னோர்கள் வைத்துக்கொண்ட பெயர்கள். தொடர்ந்து அழைக்கப்பட்ட பெயர்கள். இவை போன்ற பெருமையும் பீடும் சாற்றுகின்ற அடைமொழிகள் விஜயநகர ஆட்சியாளர்களின் கொடைச் செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படுபவையே. பிற்கால மெய்க்கீர்த்திகளில் எழுதப்பெறும் புகழ் அடைகள். மேற்படி 1771-ஆம் ஆண்டுக் கல்வெட்டில், அரசரின் பெயர், ”முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி காத்த தேவர்” என்று வருகிறது. இதில் உள்ள ‘காத்த தேவர்’ என்னும் சிறப்பு ஒட்டுக்குச் சரியான சொல்  “கர்த்த தேவர்”  என்பதாக இருக்கக் கூடும். காரணம் வருமாறு:
            விஜயநகரப் பேரரசர்க்குக் கீழ், அவர்கள் சார்பாக, அவர்களது ஆளுநர்களாய் (GOVERNORS) தமிழகப்பகுதிகளின் ஆட்சிப்பொறுப்பு வகித்தவர்கள் மதுரை நாயக்கர்கள். எனவே, மதுரை நாயக்கர்கள் தம்மை விஜயநகரப்பேரரசர்களின் “கர்த்தாக்கள்”  என அழைத்துக்கொண்டனர். தமக்கெனச் சிறப்புப் பட்டப்பெயர்களைச் சூடிக்கொள்ளவில்லை. (Sanskrit. Karta=agent; representative).  அவர்கள் விஜயநகரப் பேரரசர்களால் நியமிக்கப்பட்ட தலைவர்கள். போரின்போது படை உதவி, தாம் பொறுப்பேற்ற ஆட்சிப்பகுதியின் வரி வருவாய் ஆகிய பொறுப்புகளில் விஜய நகர அரசர்க்குக் கட்டுப்பட்டவர்கள். அதுபோலவே, சேதுபதி அரசர்களும். மதுரை நாயக்கர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்களே. எனவே, இவர்களும் “கர்த்தா’க்களே. இக்காரணத்தால், சேதுபதி அரசர்கள் தம் இயற்பெயரை அடுத்து ”கர்த்த” எனச் சேர்த்துக்கொண்டனர் எனலாம். ‘தேவர்’  என்னும் பெயர் அவர்களது குடிப்பெயரான மறவர் பெயர். எனவே, “கர்த்த தேவர்”. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், உள்ளூர்த் தலைவர்கள் கொடை அளிக்கும்போது தம் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டுத் தம்மை அவர்களின் “காரியத்துக்குக் கர்த்தாவான”   என்று அழைத்துக்கொள்கிறார்கள் என்பதை இங்கு ஒப்பிடலாம்.) டாக்டர் கால்டுவெல் அவர்கள் ‘கர்த்தாக்கள்’ என்பதை ஆங்கிலத்தில் ‘HIGH COMMISSIONER’ என்னும் பதவிப்பெயருக்கு நிகராகக் குறிப்பிடுகிறார்.

வேறு இரகுநாத சேதுபதிகள்:
            திருமலை இரகுநாத சேதுபதி என்னும் அரசர். இவரது ஆட்சிக்காலம் 1647-72 .  இவர் மதுரை திருமலை நாயக்கரால் பெருமைப்படுத்தப்பட்டவர்.  மைசூர் அரசர்களின் படையெடுப்பு, அதனுடன் தொடர்புள்ள ‘மூக்கறுப்புப் போர்’  ஆகிய போர் நிகழ்வுகளில் திருமலை நாயக்கருக்குப் பெருந்துணையாய் நின்று மதுரையைக் காத்தவர் என்னும் நிலையில், திருமலை நாயக்கர் இந்தச் சேதுபதிக்குத் “தாலிக்கு வேலி”, “பாண்டிமண்டல ஸ்தாபனாச்சார்யா”  ஆகிய பட்டங்களை வழங்கினார். திருப்பூவணம், திருச்சுழி, பள்ளிமடம் ஆகிய ஊர்களைக் கொடையாகவும் அளித்தார். ‘தாலிக்கு வேலி’  என்பது திருமலை நாயக்கரின் அரசியின் தாலிக்கு வேலியாய் நின்றவர் என்னும் பொருளில் அமைந்த பட்டப்பெயர். மதுரையைக் காத்ததற்காகப் ‘பாண்டிமண்டல ஸ்தாபனாச்சார்யா’  என்னும் பட்டப்பெயர். இந்தச் சேதுபதிக்குத் “தளசிங்கம்” என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவரைப் பற்றி மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பார் “தளசிங்க மாலை” என்னும் நூலை இயற்றியுள்ளார்.
            மற்றொரு இரகுநாத சேதுபதி, ”கிழவன் சேதுபதி”  என்னும் பெயரால் அறியப்படுபவர். இவர்,  ருஸ்தம் கான் என்னும் முகம்மதியப் படைத் தலைவரை ஒழிப்பதற்குக் காரணமானவர். முகம்மதியத் தாக்குதல்களிலிருந்து மதுரை ஆட்சியாளர்களைக் காப்பதின்மூலம் “பகைமன்னர் சிங்கம்”, ”பரராஜ கேசரி”, “துலுக்கர் தள விபாடன்”, “துலுக்கர் மோகம் தவிர்த்தான்” என்னும் பட்டப்பெயர்களைப் பெற்றவர். இப்பட்டப்பெயர்களை வழங்கியவர் மதுரை சொக்கநாத நாயக்கர் ஆவார்.  இப்பட்டப்பெயர்கள் எல்லாம் இவைபோன்ற காரணச் சூழல்களில் வழங்கப்பட்டவை. இவை தவிர, மிகுந்த கற்பனை அழகுக்காகச் சேர்க்கப்பட்ட பட்டப்பெயர்கள் பல உள்ளன.  இவை அரசவைப் புலவர்கள் புனைந்தேற்றியவையாகவே இருக்கவேண்டும். இவற்றில் பின்னணிக் காரணங்கள் இருக்கா.  ”கொடைக்குக் கர்ணன்”, ”பொறுமைக்கு தர்மன்”, ”மல்லுக்கு பீமன்”, ”வில்லுக்கு விஜயன்”, ’இராஜாதிராஜன்’, ’இராஜபரமேஸ்வரன்’ , ‘இராஜமார்த்தாண்டன்’, ’இராஜ கம்பீரன்’, ’இராஜகுல திலகன்’, ‘துஷ்டரில் துஷ்டன்’, ’துஷ்ட நிக்ரஹன்’ ’சிஷ்ட பரிபாலன்’, ‘பூலோக தேவேந்திரன்’ போன்ற பட்டப்பெயர்கள் இவ்வாறானவை.

முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி – தொடர்ச்சி:
            கி.பி. 1773-ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பனியார், கருநாடக நவாபுடன் இணைந்து நடத்திய படைத் தாக்குதலில் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி தோல்வியுற்று ஏழு ஆண்டுகள் திருச்சிச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.  கி.பி. 1769-ஆம் ஆண்டில், இவர் இராமேசுவரம் கோயிலின் மூன்றாம் சுற்றாலைக் கட்டுமானத்தை முடித்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுற்றாலைக்கான கட்டுமானப்பணி கி.பி. 1740-ஆம் ஆண்டு முத்து இரகுநாத சேதுபதி அவர்களால் தொடங்கப்பட்டது. 

சில விருதுப்பெயர்கள்:
தொண்டியந்துறைக் காவலன்  -    பாண்டிய நாட்டின் மீதான சோழர்களின் படையெடுப்பின் போது அதிவீர ரகுநாத சேதுபதி என்னும் சேதுபதி செய்த உதவியின் பொருட்டுக் கிடைத்த விருதுப்பெயர்.

அனும கேதனன், கருட கேதனன்  -    விஜயநகர அரசர்கள் பக்கம் நின்று முகம்மதியப் பகைவருக்கெதிராகச் செய்த செயல்களுக்காகச் சேதுபதி அரசர்கள் பெற்ற சிறப்புச் சலுகைகள்.  அதாவது அனும, கருடக் கொடிகளைத் தாங்கிச் செல்லும் உரிமை.

சோழமண்டலப் பிரதிஷ்டாபனாச்சார்ய  -    பாண்டியர்களின் மேலாண்மையை ஏற்றுப் பாண்டியருக்குத் துணையாய்ச் சோழரை அவர்களுடைய எல்லை வரை – பட்டுக்கோட்டை, அறந்தாங்கி -  விரட்டிய காரணத்துக்காகக் கிடைத்த விருது.

கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்   -    வெற்றிகொண்ட பகுதியை மீண்டும் விட்டுக்கொடுக்காத தன்மைக்கான விருதுப்பெயர். இந்த விருதுப்பெயரை விஜயநகர அரசர்களும் சூட்டிக்கொண்டனர்.

கஜவேட்டை கண்டருளிய  -    யானை வேட்டையைப் பார்த்த நிகழ்ச்சியோடு தொடர்புடைய ஒரு விருதுப்பெயர். இந்த விருதுப்பெயரையும் விஜயநகர அரசர்கள் சூட்டிக்கொண்டனர். கல்வெட்டுகளில் இந்த விருதுப்பெயர்களைப் பார்த்த உடனே, விஜய நகரர்/நாயக்கர் காலக் கல்வெட்டுகளை இனம் கண்டுகொள்வதோடு, எழுத்துகள் சிதைந்துள்ள இடங்களில் சொற்களை இட்டு நிரப்புதலும் எளிது.

செப்பேட்டின் அடிப்படைச் செய்தி:
            சேதுபதி அரசர், திருவாங்கூர் அரசர் ஸ்ரீபத்மநாபதாச வஞ்சிபால ராமவர்ம குலசேகரப் பெருமாளுக்குக்  காக்கூர் என்னும் ஊரை நான்காயிரம் வராகனுக்கு விற்றுக்கொடுத்த விலையாவணமே இச்செப்பேடு.  பின்னர், இவ்வூர்,  திருவாங்கூர் அரசரால் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலுக்கு வழிபாட்டுச் சேவைக்காக, ‘ஸ்ரீ இராமநாதசுவாமி கட்டளை’ என்று இறைவனின் பெயராலேயே கட்டளையாகக் கொடுக்கப்பட்டது.
            மேற்படி ஆவணம் எழுதப்பட்டபோது, சேதுபதி அரசர், விரையாத கண்டன் என்னும் தலை நகரில் வீற்றிருந்து நிறைவேற்றினார் என்று கூறப்படுகிறது. இந்நகரம், காத்தூர் என்னும் குலோத்துங்க சோழ நல்லூருக்குக் கிழக்கே அமைந்திருந்தது. காத்தூர், தொகவூர்க் கூற்றத்தில் இருந்ததாகச் செப்பேடு குறிக்கிறது. விரையாத கண்டன், சேது நாட்டில் இராஜசிங்கமங்கலசேகரத்தில் அமைந்திருந்தது என்று அறிகிறோம். விரையாத கண்டன், குலோத்துங்க சோழ நல்லூர் இரண்டுமே சேதுபதி அரசர்களின் தலைமையிடங்களாகச் செயல்பட்டன.

செப்பேட்டின் பாடம்:

திருவாங்கூர் அரசர் பற்றி:
            திருவாங்கூர் அரசரின் பெயர் செப்பேட்டில், ’ஸ்ரீபத்மநாபதாச வஞ்சிபால ராமவர்ம குலசேகரப்பெருமாள் மஹாராஜா’  என்றுள்ளது. இப்பெயர் செப்பேட்டில், ஒரே ஒரு எழுத்தைத் தவிர முற்றும் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. அந்த ஒரு எழுத்து “ள்”.  முற்றிலும் வடசொற்களின் ஒலிப்புள்ள எழுத்துகள். ஆங்கிலத்தில் ‘SRI PADMANABHADASA VANCHIBALA RAMAVARMA KULASHEKARAP PERUMA(ள்)’  என அமையும். பதிப்பாசிரியர் இராமநாத அய்யர் அவர்கள் இப்பெயரில் உள்ள “பால” (BALA)  என்னும் சொல், சமற்கிருத ஒலிப்பிலேயே சற்றுப்பிழையாக எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கூறுகிறார். ‘BALA’ என்பது பிழையான வடிவம்; ‘PALA’ என்பது சரியான வடிவம் என்று கூறும் அவர் முன்வைக்கும் காரணம் முற்றிலும் ஏற்புடையது. ’BALA’  என்பது ‘இளம்’  என்னும் பொருளைத்தரும். இதை ‘ராம வர்மா’  என்னும் சொல்லுடன் இணைக்கும்போது ‘இளம்’ பொருள் அமைகிறது. ஆனால், அரசரின் முழுநீளப்பெயரில், ‘வஞ்சி’  என்னும் சொல் தனித்து நின்று பொருள் தராமல் போகும் வாய்ப்பே மிகுதி. மாறாக, ‘PALA’ என்பதை ‘வஞ்சி’யோடு சேர்த்து ‘வஞ்சிபால’  என்று குறிப்பிடும்போது ‘வஞ்சிக்காவலன்’ (‘வஞ்சியின் தலைவன்’) என்றமையும். இதுவே சரியான பொருளைத்தரும். ‘PALA’ என்னும் சமற்கிருதச் சொல், காவலன் (PROTECTOR) என்னும் பொருளுடையது. திருவாங்கூர்ப் பகுதியான சேர நாட்டுப்பகுதியின் அரசர் ‘வஞ்சிக் காவலன்’ என அழைக்கப்படுதல் சேர அரசர் மரபின் தொடர்ச்சி எனலாம்.
            மேற்படி அரசர், திருவாங்கூர் அரச வரலாற்றில் ’தர்மராஜா’ என்னும் பெயரில் நன்கு அறியப்படுபவர்.  இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1758-1798. இவரின் நீண்ட ஆட்சிக்காலத்தில், ஐதர் அலி, திப்பு சுல்தான்  ஆகிய இருவரின் தொடர்ந்த தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வந்தன. இவர் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியின் அடியவர் என்பது இவர் இயற்றிய நாட்டிய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாங்கூர் வட்டார ஆவணங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஓலை ஆவணம் ஒன்றில், திருவாங்கூர் ஆட்சி அரசு முழுமையும் பத்மநாபக் கடவுளர்க்குக் காணிக்கை என்னும் குறிப்பு உள்ளது. இவ்வோலை ஆவணத்தின் காலம் கொல்லம் 925 (கி.பி. 1750).
            மேற்படி அரசர், கி.பி. 1784-ஆம் ஆண்டு தம் அறுபதாவது வயதில் இராமேசுவரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். இவ்வரசர், குடிமக்கள் நலனை நன்கு பேணியவர் என்று அறியப்படுகிறார். ஆரியங்காவு சாத்தன் கோயிலுக்கு வழிபடச் செல்லும் மக்கள், திருவாங்கூர்ப்பகுதியையும் திருநெல்வேலியையும் இணைக்கும் மேற்கு மலைத்தொடரின் காட்டுக் கணவாய்ச் சாலையில் கொள்ளை, விலங்குகளின் தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  நல்ல சாலைகள், கொள்ளைத்தடுப்புப் பணிகள் வாயிலாக இத்தகைய இன்னல்களிலிருந்து மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்தார் என்று ஆரியங்காவு பற்றிய ‘ஆரியவன மகாத்மியம்’ நூலில் குறிப்புகள் உள்ளன.

செப்பேட்டின் மொழியும் எழுத்தும்:
            செப்பேடு தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு மிகையாக உள்ளது. நல்ல தூய தமிழ்ச் சொற்களைக்கூடக் கிரந்தத்தில் எழுதியிருக்கிறார்கள் என்பது பெருங்குறை என்று பதிப்பாசிரியர் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. இடைக்காலச் சோழர், பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் நல்ல தமிழ்ச் சொற்களால் எழுதப்பட்டுள்ள நிலையில், காலப்போக்கில் விஜயநகரர்/நாயக்கர் ஆட்சிகளின்போது, ஆவணங்களில் சமற்கிருதச் சொற்கள் மிகுதியும் நுழைந்து நல்ல தமிழ் வழக்கு ஒழிந்து, தமிழ் மொழி அழகிழந்ததைக் காண்கிறோம். ஆட்சியாளர்கள் தமிழ் மொழியினர் அல்லர் என்பதே காரணம்.  இந்தச் செப்பேட்டில், தமிழ்ச் சொற்களையே தமிழ் எழுத்துகளில் எழுதாமல் கிரந்தத்தில் எழுதியுள்ளமை வருத்தம் தருகிறது. சமற்கிருதச் சொற்களையும் இந்தச் செப்பேட்டில் பிழைபட எழுதியிருக்கிறார்கள் எனப் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். பிழை, செப்பேட்டின் பாடத்தை வடிவமைத்துத் தந்தவர் மேலா அல்லது செப்பேட்டை எழுதியவர் மேலா என்பது தெரியவில்லை.  எழுதியவர் பெயர் ‘மதுரை சட்டையப்ப நாலங்கராயன் குமாரன் சட்டையப்பன்’  எனக் காண்கிறோம்.

செப்பேட்டின்  அமைப்பு:
            செப்பேடு, திருவனந்தபுரத்தில் உள்ள ’செல்லம்வாகை’  மாளிகையில் (PALACE)  வைக்கப்பட்டுள்ளது. பத்து அங்குல நீளம், ஐந்து அங்குல அகலம் என்ற அளவில் உள்ளது.  ஏட்டின் முதல் பக்கத்தின் மையத்தில் தெலுங்கு எழுத்தில் “ஸ்ரீ ராமநாதஸ்வாமி ஸஹாயம்”  என்னும் பொறிப்பு பெரிய அளவிலான எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.  இத்தொடர், சேதுபதி ஆவணங்களில் காணப்படும் அரச முத்திரை எனக் கொள்ளலாம்.  அரசு ஆவண மொழியாகத் தொடக்கத்தில் தெலுங்கு இருந்துள்ளது என அறிகிறோம்.



செப்பேட்டில் பிழைகள்:
தமிழ் எழுத்துகளின் இடங்களில் கிரந்த எழுத்துகள் பயன்பாடு:
1.  இதன்மேற்  -    இச்சொல்லில் ‘இ’  எழுத்து கிரந்தம்.
2.  அற்பசி  -    இச்சொல்லில் ‘அ’  எழுத்து கிரந்தம்.
3.  உத்திராட  -    இச்சொல்லில் ‘ரா’  எழுத்து கிரந்தம்.
4.  கண்டநாடும்  -    இச்சொல்லில் ‘ண்ட’  எழுத்துகள்  கிரந்தம்.
5.  கொடாதான்  -    இச்சொல்லில் ‘டா’  எழுத்து கிரந்தம்.
6.  காவலன்  -    இச்சொல்லில் ‘ன்’  எழுத்து கிரந்தம்.
7.  கற்ணன்  -    இச்சொல்லில் ‘ன்’  எழுத்து கிரந்தம்.
8.  துலுக்கர்  -    இச்சொல்லில் ‘ர்’  எழுத்து கிரந்தம்.
9.  அன்னசத்திர(ம்)  -    இச்சொல்லில் ‘அ’  எழுத்து கிரந்தம்.
10.  கிறையம்  -    இச்சொல்லில் ‘ம்’  எழுத்து கிரந்தம்.
11.  அவர்கள்  -    இச்சொல்லில் ‘அ’, ‘ர்’  எழுத்துகள் கிரந்தம்.
12.  கட்டளை  -    இச்சொல்லில் ‘ட்டளை’  எழுத்துகள் கிரந்தம்.
13.  பண்ணின  -    இச்சொல்லில் ‘ன’  எழுத்து கிரந்தம்.
14.  தொண்டமண்டல  -    இச்சொல்லில் ‘ண்டமண்ட’  எழுத்துகள் கிரந்தம்.

செப்பேட்டில் காலக்கணக்கு:
            செப்பேட்டில் சாலிவாகன ஆண்டும் (சகம்), கொல்லம் ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளன.  சகம் 1691. கொல்லம் 945.  தமிழ் வியாழ வட்ட ஆண்டான விரோதி ஆண்டும் தரப்பட்டுள்ளது. இம்மூன்று ஆண்டுக்குறிப்புகளும் கி.பி. 1769-ஆண்டுடன் பொருந்துகின்றன. ஐப்பசி மாதம் ‘அற்பசி’  மாதம் என எழுதப்பட்டுள்ளது. எண்கள், தமிழ்க் குறியீட்டெண்களால்  எழுதப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை, ‘பானு வாரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வானியல் (பஞ்சாங்கக்) குறிப்புகள்:
            செப்பேட்டில், தேய்பிறைக் காலத்தைக் குறிக்கும் பூர்வ பட்சம்,  சப்தமி திதி, இருபத்தேழு யோகங்களில் ஒன்றான சூலம், பதினொரு கரணங்களில் ஒன்றான கரஜ (கரசை) ஆகிய குறிப்புகள் உள்ளன.

சில நாட்டுப்பிரிவுகளும் நிலவியல் ஊர்களும்:
            செப்பேட்டின்படி காக்கூர் என்னும் ஓர் ஊரே கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூர் தடாதகை நாட்டில் இருக்கும் கிராமம் என்பதாகச் செப்பேடு கூறுகிறது. இவ்வூரின் பரப்பை அடையாளப்படுத்துகையில் ஊர்ப்பரப்புக்கு நான்கு திசைகளிலும் உள்ள எல்லைகள் விரித்துச் சொல்லப்படுகின்றன.  எல்லைப் பெயர்களில் கதையன் கண்மாய், கருமளக்கண்மாய், குமாரக்குறிச்சிக்கண்மாய், கருசல்க்குளத்துக் கண்மாய், பத்தலைக் கண்மாய், பகையன் கண்மாய், காத்தான் ஏந்தல், பனையடி ஏந்தல், பாடுவான் ஏந்தல், பூந்தகுளம் ஆகிய நீர் நிலைகளின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. முதுகுளத்தூர், குமாரக்குறிச்சி என்னும் ஊர்ப்பெயர்களும் காணப்படுகின்றன.  இவ்விடப்பெயர்கள் இராமநாதபுரம் மாவட்டப்பகுதிகளில் இருக்கின்றனவா எனப்பார்க்கவேண்டும்.

சில வடமொழிச் சொற்கள் – கிரந்த எழுத்துகளில்:
மேலே சுட்டியவாறு வடசொற்கள் மிகுதியும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. சில சொற்கள் வருமாறு:
ஹநுமகேதனன்
கருடகேதனன்
சிம்ஹகேதனன்
சத்யஹரிச்சந்த்ரன்
சங்கீத ஸாஹித்ய வித்யா விநோதன்
விஜயலக்ஷ்மிகாந்தன்
அரசராவணராமன்
துஷ்டநிக்ரஹன்
சிஷ்டபரிபாலன்
பூலோக தேவேந்த்ரன்
சிவபூஜா துரந்தரன்
அநேகப்ரஹ்மப்ரதிஷ்டாபகாரன்
ஸகலஸாம்ராஜ்ய லக்ஷ்மிநிவாசன்
ராமநாதஸ்வாமி கார்யதுரந்தரன்
துலாபுருஷதானாதிஷோடஸமஹாதாநதுரந்தரர்
ஹிரண்யகர்பயாஜி

முடிவுரை:
            விஜயநகரரின் நேரடி ஆட்சி, அதைத்தொடர்ந்த நாயக்கர் ஆட்சி ஆகியவற்றின் தாக்கம் தமிழ் நிலத்துச் சேதுபதி அரசர்களையும் பற்றிக்கொண்ட காரணத்தால் தமிழ் மொழியின் பயிற்சியிலும் சிறப்பிலும் குறை மிகுந்தும் நிறை தாழ்ந்தும் போயின என்று நாம் கருதுவதற்கு இடமளிக்கும் வகையில் இச்செப்பேடு அமைந்துள்ளது என்பது இந்த ஆய்வுப்பார்வையில் புலப்பட்டுள்ளதை  மறுக்க இயலாது.  ஆனால், தமிழ் மொழி தன்னுடைய வேரில் வளமான தொன்மையைக் கொண்டுள்ளதால் தன்னைத்தானே காத்துக்கொண்ட ஒரு விதை நெல் போல இன்றளவில் புதுப்பித்துப் புதுப்பித்து வளர்த்துக்கொண்டது எனலாம்.

பார்வை நூல்கள்:
1.    திருவாங்கூர் தொல்லியல் வரிசை – தொகுதி-5 (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES Vol-V)
2.  ’சேதுபதி செப்பேடுகள்’ - புலவர் செ. இராசு (முன்னாள் தலைவர், கல்வெட்டியல் துறை, தஞ்சைப்பல்கலை)






Wednesday, May 6, 2020

பெருமரம்

பெருமரம்

 —  பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்


            தாவரங்களை, இயல் தாவரங்கள், அயல் தாவரங்கள் என்று தாவரவியலாளர்கள் வகைப் படுத்துவர். இவற்றுள் இயல் தாவரமென்பது ஒரு நாடு அல்லது நாட்டின் பகுதிக்கு உரித்தானது. அயல் தாவரமென்பது அந்நாட்டிற்கு உரித்தானதல்ல. இயல் தாவரம், அயல் தாவரம் குறித்து பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி (2007:85) பின்வருமாறு விளக்கம் அளிப்பார்.

     ‘ஒரு நாட்டின் இயற்கைச் செல்வங்களாகக் கருதப்படும் தாவரங்களை இரண்டு தொகுதிகளில் வகைப்படுத்தலாம். ஒரு தொகுதி இயல் தாவரங்களையும் (Wild plants) மற்றொரு தொகுதி அயல் தாவரங்களையும் கொண்டவை. இயல் தாவரங்கள் அந்த நாட்டின் இயற்கைச் சூழல்களில் (Natural Environments) தன்னிச்சையாக, எந்தவித மனித முயற்சிகளுமின்றி இயல்பாக வாழக்கூடியவை; அவை அந்த நாடு/பகுதிக்கே உரித்தானவை. அயல் தாவரங்கள் ஒரு நாட்டிற்கு உரித்தானவையல்ல; வெளிநாடுகளிலிருந்து மனித முயற்சிகளால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வேளாண்மைக்கோ, பூங்கா/ தோட்டத்திற்கோ, மருத்துவத்திற்கோ பயன் கருதிக் கொணரப்பட்டு இன்னொரு நாட்டில் காணப்படுபவை. இந்தச் செயலுக்குத் தாவர நுழைப்பு (Plant Introduce) என்று பெயர். அரசியல், வாணிபம், சுற்றுலா, படையெடுப்பு என்பவற்றின் விளைவால் தாவரங்களும், விலங்குகளும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்ந்து அங்கு நிலைபெறுகின்றன.

            இன்று நம் உணவுப்பொருளாகப் பயன்படும் பப்பாளி, கொய்யா, முந்திரி, மிளகாய், காபி, தேயிலை ஆகியன நம் நாட்டிற்குரியன அல்ல. கினிப்பன்றி, வான்கோழி என்பனவும் நம் மண்ணிற்குரியன அல்ல. அரேபியர்கள் வாயிலாகக் குதிரையும், டச்சுக்காரர் வாயிலாக வான்கோழியும் நம்மை வந்தடைந்துள்ளன.

            இது போன்று அரேபியர்களால் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மரம்தான் பெருமரம். இம்மரமானது ‘பேய் மரம், பப்பரபுளி, பேப்புளி, ஆனைப்புளி’ என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது. இப்பெயர்கள் இதன் உருவத்தின் அடிப்படையிலேயே இடப்பட்டுள்ளன. மற்றைய மரங்களில் இருந்து பெருமரத்தை வேறுபடுத்துவது அதன் சுற்றளவுதான். இம்மரம் வளரும்போது இதன் பட்டை கீழ்நோக்கி வளர்ந்துக் கொண்டே செல்வதால் இதன்சுற்றளவு பெருகிக்கொண்டே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே மேற்கூறியப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. இலங்கையில் ‘பெருக்கமரம்’ என்றழைக்கப்படுவது குறித்து ‘மரம் வரவர பெருக்கமடைந்து வருவதன் காரணமாகவே பெருக்கமரம் எனப் பெயரிட்டனர் போலும்’ என்று என்.எம். ஷாஜகான் என்ற ஈழத்தமிழறிஞர் ‘புத்தளம்’ (1992) என்ற தமது ஊர் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.

தாவரவியல் பெயர்:
            இம்மரத்தின் இலைகள் பெரியதாகவும் மென்மையாகவும் இருக்கும். மைக்கேல் ஆடன்சன் (Michel Adanson (1727–1806)) என்ற தாவரவியலாளரின் பெயராலும் விரல் போன்று (Digit) இதன் இலை இருப் பதன் அடிப்படையிலும் ஆடன்சோனியா டிஜிட்டா (Adansonia Digitata) என்ற தாவரவியல் பெயரை இம்மரம் பெற்றுள்ளது.

            பிஷப் கால்டுவெல், தாம் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் என்ற ஆங்கில நூலில் (1881:78) தூத்துக்குடி நகரில் உள்ள கிறித்தவ தேவாலயம் ஒன்றில் இம்மரம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளதுடன் அது தொடர்பாகப் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடுகிறார்:
தூத்துக்குடியில் உள்ள தொன்மையான பொருளாக ‘போவபாப் மரம்’ (Baobob) அங்குள்ள கோவானிய தேவாலயத்தின் அருகில் காணப்படுகிறது[1]. பண்டைய அரேபிய வணிகர்கள் சிலரால் இது நடப்பட்டிருக்க வேண்டும். இத்தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பே இம்மரம் இங்குள்ளதாக பாரம்பரியச் செய்தி உள்ளது. இப் போவபாப் மரமானது ‘ஆடன்சோனியா டிஜிட்டா’ என்ற ஆப்பிரிக்க நாட்டு மரமாகும். மங்கி பிரட் மரம் (Monkey-Bread) என்று ஆப்பிரிக்கர்கள் இதை அழைக்கிறார்கள். உள்ளுர்வாசிகள் ‘பெயரில்லாமரம்’ என்று இம்மரத்தை அழைக்கிறார்கள்.

தற்போது காணப்படும் இடங்கள்:
            தூத்துக்குடி நகரில் மாவட்ட ஆட்சித் தலைவரது இல்லத்தின் பின்புறத்திலும், எஸ்.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்திலும் இம்மரம் காணப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் முத்தையாபுரம் என்ற ஊரின் மேற்கில் உள்ள பச்சைப் பெருமாள் அய்யனார் கோவில் வளாகத்தில் மிகவும் முதிர்ச்சி அடைந்த மரமாக இம்மரம் காட்சியளிக்கிறது. இதே நெடுஞ்சாலையில் உள்ள பழைய காயல் என்னும் கடற்கரைச் சிற்றூரில் இருந்த பழமையான மரம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய்விட்டது. திருச்செந்தூருக்குத் தெற்கில் உள்ள குலசேகரன்பட்டினம் ஊரில் இசக்கியம்மன் கோவிலில் இருந்த இம்மரமும் 2017- ஆம் ஆண்டில் விழுந்துவிட்டது.

            தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையில் உள்ள மேல்மாந்தை கிராமத்திலும், கோவில்பட்டி - சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள நாலுவாசன் கோட்டை ஊரில் இருந்து அழகு நாச்சியார்புரம் செல்லும் சாலையிலும் இம்மரம் காணப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து ஓட்டப் பிடாரம் செல்லும் சாலையில் இராசாவின் கோவில் ஊருக்கு அருகில், சாலைக்கு வடபுறத்தில் உள்ள கரிசல் நிலத்தில் இம்மரம் உள்ளது. தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள தெய்வச்சிலைபுரம் ஊரில் இருந்து புதுப்பட்டி என்ற கிராமத்திற்குச் செல்லும் சாலையின் கீழ்புறத்திலும் தூத்துக்குடி இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள மேல்மாந்தை கிராமத்திலும் இம்மரம் நிற்கிறது.

            மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இம்மரம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள வேதியரேந்தல் என்ற கிராமத்தில் உள்ள தருமமுனீஸ்வரர் கோவில் வளாகத்தில் 6000 சதுர அடி வரை படர்ந்து வளர்ந்துள்ள இரு பெருமரங்கள் இக்கோவிலின் தலமரம் போல் விளங்குவதை இதழாளர் ஆரோக்கியராஜ் ஜான் பாஸ்கோ, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் (மதுரைப்பதிப்பு, 9.11.2017) செய்திக் கட்டுரையாக எழுதியுள்ளார். அவரது கட்டுரையின் சாரம் வருமாறு:
இக்கோவில் வளாகத்தில் இரண்டு பெருமரங்கள் உள்ளன. 70 வயதான இக்கோவில் பூசாரி பொன்னையா, இவற்றின் வயது 500 ஆண்டுகள் என்றும் இக்கோவிலுக்கு வருபவர்கள் கடவுளை மட்டுமின்றி இம்மரத்தையும் வழிபடுவதாகவும் குறிப்பிடுகிறார். பெயரில்லா மரம் என்று இம்மரத்தை அழைக்கிறார்கள். சிவகங்கையில் உள்ள பொன்னான் குளம் கண்மாயில் இருந்த பெருமரம் அழிந்து போய்விட்டதாகவும், தருமமுனிஸ்வரர் கோவிலுடன் தொடர்புடையதாய் விளங்குவதால் இவ்விரு மரங்களும் அழிவில் இருந்து தப்பிவிட்டதாகவும் சுந்தரராஜு என்ற ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி குறிப்பிடுகிறார். இவ்வூர்களைத் தவிர தமிழ்நாட்டின் வேறு பகுதிகளிலும் இம்மரம் நிற்கும் வாய்ப்புள்ளது.

மரத்தின் தாயகமும் பயன்பாடும்:
            மடகாஸ்கர் என்ற தென்கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இம்மரம் வந்ததாக இந்தியத் தாவரவியலாளர்கள் குறிப்பிடுகிறார். 5000 ஆண்டுகள் வரை இம்மரத்தின் ஆயுள்காலம் ஆப்பிரிக்காவில் உள்ளதாகவும் ஆடன்சன் குறிப்பிடுகிறார். இலங்கையிலும் இம்மரம் காணப்படுகிறது. அங்கும் அயல் நாட்டு மரமாகவே இம்மரம் கூறப்படுகிறது. இலங்கையின் வடபகுதியில் அரேபியர் குடியிருப்புகளில் இம்மரத்தை நட்டு வளர்த்தாகவும், புத்தளம் திகழி போன்ற இஸ்லாமியர் வாழும் ஊர்களில் இம்மரம் இருந்த தாகவும் புத்தளம் ஊரின் வரலாறை எழுதிய ஷாஜகான் குறிப்பிடுகிறார். மேற்கூறிய இரு ஊர்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இம்மரங்கள் இருந்ததாகக் கூறும் இவர், இது தொடர்பாக ‘ஊருக்கலங்காரம் ஒசந்த பள்ளி பெருக்கமரம்’ என்ற நாட்டார் பாடல் வரிகளை மேற்கோளாகக் காட்டுகிறார். அத்துடன் இலங்கையைச் சேர்ந்த வரலாற்றறிஞர் சைமன் காசிச்செட்டி என்பவர் புத்தளம் என்ற ஊரில் உள்ள பள்ளிவாசலில் வளர்ந்திருந்த ‘பெருக்கமரம்’(பெருமரம்) குறித்து எழுதியுள்ள பின்வரும் பகுதியை மேற்கோளாகக் காட்டுகிறார். இம்மரத்தைத் தமிழில் ‘பப்பரப்புளி’, ‘இராட்சதப் புளி’ எனவும், ‘தொதி’ எனவும் ‘பெருக்கமரம்’ எனவும் அழைப்பர்.



            மலைக்குன்றைப் போன்று கடுங்கருமை நிறத்துடன் நாற்பத்தைந்து அடி சுற்றளவுக்கு இம்மரம் தோற்றமளித்தது. நிலத்திலிருந்து எட்டரை அடி உயரத்தில் இம்மரத்தினடிப்பாகம் இரு கவராகப் பிரிந்து நேர் உயரமாக வளர்ந்திருந்த ஒரு கவரின் சுற்றளவு இருபத்தியிரண்டரை அடியாகவும், மற்ற கவரின் சுற்றளவு இருபத்தியாறேகால் அடியாகவும் இருந்தன. கிளைகள் மெலிந்த இலைகளுடையதாகக் காட்சியளித்தன. அதன் பெரிய உருவத்திற்கேற்ப உயரம் போதுமானதல்ல. எழுபது எண்பது அடி உயரமேயிருந்தது. இம்மரத்தின் இலைகளை உடம்பில் வரும் பருக்களுக்கும், கட்டிகளுக்கும் மருந்தாக உபயோகித்தனர். ஆடுகளின் உணவாகவும் பயன்பட்டது. அதன் பூக்கள் வெண்மையாகவும் அழகு மணம் இல்லாததாகவும் இருந்தன. இதன் பழம் நீண்டதாகவும் ஐந்தாறங்குலமுள்ளதாகவும் மிருதுவான மயிர் அடர்ந்ததாகவும் இருந்தது. இப்பழத்தின் உள்ளேயுள்ள சுளைகள் புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடையதாக இருந்தன. உள்ளுர்வாசிகள் இப்பழத்தை உண்கின்றனர்.




            இம்மரத்தின் பழமானது சுரைக்காய் வடிவத்தில் காட்சியளித்தது. இப்பழத்தினுள் கடற்பாசி போன்ற சதைப்பகுதியும் கெட்டியான நார்ப்பொருளால் சூழப்பட்ட குண்டிக்காய் வடிவிலான கருநிற விதைகளும் இடம்பெற்றுள்ளன. இப்பழத்தின் சதைப்பகுதி மாவு போன்று இருப்பதுடன் உண்μவதற்கும் உரியது. இப்பழத்தின் சதைப் பகுதியில் இருந்து உருவாக்கப்படும் பானம் வியர்வையை அதிகரிக்கச் செய்து காய்ச்சலை மட்டுப்படுத்துகிறது. ஷாஜகான் கூறிய செய்தியும், அவர் மேற்கோளாகக் காட்டிய சைமன் காசிச் செட்டியின் பதிவும் அரேபிய வணிகர்கள் வாயிலாக இம்மரம் இலங்கையில் பரவியுள்ளதாகக் கருத இடமளிக்கின்றன.

            அரேபிய வணிகர்கள் தாம் பயன்படுத்தும் வணிகப் பெருவழி சரியான வழிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இதை நட்டுவைத்தனர் என்ற வாய்மொழிச் செய்தியும் கடற்கரையை ஒட்டிய பழையகாயல், மேல்மாந்தை ஊர்ப்பகுதிகளில் உண்டு. தெற்கில் குலசேகரன்பட்டினம் தொடங்கி, பழையகாயல், முத்தையாபுரம், தூத்துக்குடி, மேல்மாந்தை என்பன, வடக்கில் உள்ள வேதாளை, கீழக்கரை, பட்டண்மருதூர் என்ற துறைமுகங்களுக்குச் செல்லும் இப்பாதையிலேயே இம்மரம் காணப்படுவது இவ்வாய்மொழிக் கூற்றுக்கு வலுவூட்டுகிறது. மேற்கூறிய ஊர்களில் குலசேகரன்பட்டினம், பழையகாயல், தூத்துக்குடி என்பன துறைமுகங்களைக் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

            தொடக்கத்தில் குறிப்பிட்ட, அழகுநாச்சியார்புரத்தில் இம்மரத்தின் இலையை அரைத்து கைக்குழந்தைகளுக்கு உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை தேய்ப்பர். அது உலர்ந்தவுடன் நீராட்டுவர். சிலர் இரவில் தேய்த்து காலையில் நீராட்டுவர். இப்படி செய்வதால் குழந்தை நோயின்றி நலமாக வளரும் என்பது நம்பிக்கை. இந்நம்பிக்கையின் அடிப்படையில் 'பிள்ளை வளர்த்தி' என்று இம்மரத்தை அழைக்கின்றனர் (பேராசிரியர் முத்துசாமி, வ.உ.சி. கல்லூரி).

            இம்மரத்தின் பழமானது இரத்தத்தின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதால் தொற்று நோய்க் காய்ச்சலின் போது முக்கிய காப்பு மருந்தாகப் பயன்படுவதாக பிரெஞ்சு நாட்டுத் தாவரவியலாளர் ஆடன்சன் கண்டறிந்துள்ளார். இந்திய அறிவியல் தொழில் ஆய்வு நிறுவனம் 1992-இல் வெளியிட்ட இந்தியாவின் பயன்மிகு தாவரங்கள் என்ற ஆங்கில நூலில் இம்மரத்தின் பல்வேறு பயன்பாடுகள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:
•  உடல் எரிச்சல், சொறி, கரப்பான் வயிற்று நோய்கள் ஆகியனவற்றைக் குணப்படுத்தும் மருந்துகள் இம்மரத்தின் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
•  குஜராத் மீனவர்கள் இம்மரத்தின் காய்ந்த பழங்களை மீன்பிடி வலைகளில் மிதவைகளாகப் பயன்படுத்துகின்றனர்.
•  துறவியர்கள் இம்மரத்தின் பழத்தை நன்றாகக் காய வைத்து தண்ணீர்க் குடுவையாகப் பயன்படுத்துகின்றனர்.
•  இளம் இலை சுவையூட்டும் பொருளாக மசாலாவில் சேர்க்கப்படுகிறது.
•  ஆஸ்துமா நோய் வராது தடுக்க கினிப் பன்றிகளுக்கு இதன் இலைகளைத் தூள் செய்து உண்ணக் கொடுக்கிறார்கள்.
•  பழத்திலுள்ள சதைப் பகுதி வியர்வையை உண்டாக்கும் தன்மையுடையது. பிராங்கைஸ்ட் ஆஸ்துமா, ஒவ்வாமையினால் ஏற்படும் தோல் அழற்சி ஆகியனவற்றிற்கு நிவாரணமளிக்கிறது.
•  இதன் விதைப் பருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
•  பட்டைகளில் இருந்து மென்மையான நார் கிடைக்கிறது.
•  காகிதம் செய்ய, தட்டுகள், சிறு படகுகள், மிதவைகள், மீன்பிடி வலைகள் செய்ய இம்மரம் பயன்படுகிறது.

            இதன் பட்டையில் இருந்து மிகவும் வலுவான கயிறு தயாரிக்கப்படுவதாகக் கூறுவதுடன், இம்மரம் வறட்சியைத் தாக்குப்பிடிப்பதற்குக் காரணம் தண்ணீரைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருப்பதுதான் என்கிறார்கள். இம்மரம் ஒன்றின் வேர்ப்பகுதியில் நூறு காலன் தண்ணீர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தாவரவியலாளர்கள் கூறுகின்றனர்.

பிண அடக்கத்தில்:
            முதிர்ந்த மரங்களின் உள்ளீடான வேர்ப்பகுதியில் ஆப்பிரிக்கர்கள், இறந்தவர்களைப் புதைப்பதாகவும், பாடம் செய்யும் முயற்சியெதுவுமின்றியே இப்பிணங்கள் உலர்ந்து காணப்படுகின்றன என்றும் இந்தியத் தாவரவியலாளர் கௌன் குறிப்பிட்டுள்ளார். இவ் வடக்க முறை குறித்து ஆர்தர்-சி.அயூஃபெட்ஸ் (பக்கம்:59) என்பவர் மத்திய ஆப்பிரிக்காவில் வாழும் சில பழங்குடி இனத்தவர் இம்மரத்தில் பெரிய பொந்துகளைக் குடைந்து இறந்தவரை அவற்றுள் அடக்கம் செய்கின்றனர். தன்னைச் சுற்றி உள்ள நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட இம்மரம் இறந்த உடல்களில் இருந்து நீரை உறிஞ்சிவிடுவதால், இவ்வுடல்கள் சுருங்கி ஆனால் கெட்டுப்போகாமல் எகிப்திய பிரமிடுகளில் பாதுகாக்கப்பட்ட மம்மிகளைப் போன்றே இருந்தன என்று விளக்கமாகக் கூறுகிறார்.

இம்மரத்தை வளர்த்தல்:
            இம்மரத்தின் வேகமான வளர்ச்சி, மதிப்பு மிக்க பழம் மற்றும் நார்ப்பொருளின் காரணமாக இதைப் பரந்த அளவில் பயிரிடுவது ஆதாயமிக்கதாக அமையும். ஆனால் இதுவரை வெற்றிக்கரமாக இது மேற்கொள்ளப்படவில்லை என்று இந்தியத் தாவரவியலாளர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இம்மரத்தின் விதைகள் இங்கு எளிதில் முளைப் பதில்லை என்று மதுரைக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் கே.எம்.ராஜசேகரன் குறிப்பிடுகிறார். இம்மரங்கள், கன்றுகளாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார். (ஆரோக்கியராஜ், 2017) அதிகளவில் நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் ஒரு தாவரத்தை, எச்சரிக்கை உணர்வுடனேயே அணுக வேண்டியுள்ளது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காது எனில் இதை பரவலாக்க முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு:
[1] கால்டுவெல் குறிப்பிடும் கோவானிய தேவாலயம்" என்பது, தூத்துக்குடியில் போர்ச்சுக்கீசியர் ஆதிக்கம் நிலவியபோது அவர்களால் கட்டப்பட்ட கத்தோலிக்கத் தேவாலயம் ஆகும். கோவாவில் இருந்த போர்ச்சுகீசிய ஆயரின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் கோவானிய தேவாலயம் எனப்பட்டது. கி.பி.1658 - இல் டச் நாட்டினர் தூத்துக்குடி கிறித்தவ சபையின் (புரட்டாஸ்டண்ட் பிரிவு) தேவாலயமாக மாற்றி அமைத்தனர். டச் நாட்டினரிடமிருந்து தூத்துக்குடி நகரை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்னர் இத்தேவாலயம் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 'புனித திரித்துவத் தேவாலயம்' (Holy Trinity Church) என்ற பெயரிலான இத்தேவாலயம் சீர்திருத்தக் கிறித்தவ சபையின் பேராயரது கட்டுப்பாட்டிற்குள் இப்போதும் உள்ளது. ஆங்கில ஆட்சியின்போது இங்கு வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்காக, 'ஆங்கில மொழியிலேயே நடந்த வழிபாடு இன்றும் தொடர்கிறது. இதனால் 'இங்கிலிஷ் சர்ச்' என்றே பொதுமக்கள் அழைக்கின்றனர். தற்போது, இத்தேவாலயத்தில் பெருமரம் காணப்படவில்லை.

உதவிய நூல்கள்:
கிருட்டிணமூர்த்தி, கு.வி. (2007) தமிழரும் தாவரமும், ஷாஜகான், புத்தளம்
Arockiaraj Johnbosco, (2017) It's Faith that Nurtures Two African Baobabs in A Sivaganga Hamlet. The Times of India, (Madurai, November 9, 2017)
Caldwell (1881), AHistory of Tinnevelly
Umrao Singh and others, (1983) Dictionary of Economic Plants in India, Indian Council of Agricultural Research, New Delhi. (Arthur C. Ailfder, The Scientific Study of Mummies)

ஒளிப்படங்கள்:
சு.நாகராஜன், பொன்.தமிழன், ஏ.சண்முகானந்தம், விக்கிப்பீடியா

நன்றி:
உயிர் (2018| ஜூலை - ஆகஸ்ட்)








Sunday, May 3, 2020

யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்ட முருகப் பெருமானைக் குறிக்கும் அரிய நாணயங்கள்

யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்ட முருகப் பெருமானைக் குறிக்கும் அரிய நாணயங்கள்

 – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்


            யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் பற்றி ஆராய்ந்த பலரும் அவர்கள் சேது என்ற மங்கல மொழி பொறித்த நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் எமது தொல்லியல் ஆய்விற் கண்டுபிடித்த நாணயங்களிலிருந்து யாழ்ப்பாண மன்னர்கள் கந்தன், ஆறுமுகன் ஆகிய பெயர்கள் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவற்றுள் முதலாவது வகை நாணயத்தில் இடப்புறம் பார்த்த நிலையில் உள்ள மயில் சின்னம் காணப்படுகிறது. ஏனைய நாணயங்களில் மயிலின் வாயில் பாம்புச் சின்னம் காணப்படுகின்றது. ஆனால் இந்நாணயத்தில் உள்ள சின்னம் பாம்பு உருவத்திலிருந்து சற்று வேறுபட்ட உருவமாக உள்ளது. மயிலுக்கு மேலே விளிம்பை ஒட்டியவாறு பிறைச்சந்திரன், சூரியன் என்பன காணப்படுகின்றன. நாணயத்தின் பின்புறத்தில் வேல் சின்னத்துடன் தமிழில் “கந்”(தன்) என்ற பெயர் காணப்படுகின்றது. இதன் கீழ், கால்களைக் குறிக்கும் இரு கோடுகள் காணப்படுகின்றன. 

            இரண்டாவது வகை நாணயத்தில் உள்ள மயில் இடப்புறம் பார்த்த நிலையில் காணப்படுவதுடன் அதன் வாயில் காணப்படும் பாம்பும் தெளிவாகத் தெரிகின்றது. நாணயத்தின் பின்புறத்தில் “ஆ” என்ற எழுத்துக் காணப்படுகிறது. இதனுடன் இணைந்த நிலையில் முதலாவது நாணயத்தில் வருவது போல் மனித வடிவில் அமைந்த கால் உருவங்கள் காணப்படுகின்றன. இதற்கு இடது, வலது புறமாக முதலாவது நாணயத்தில் வரும் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்வகை நாணயங்கள் வடஇலங்கையைத் தவிர இலங்கையின் ஏனைய பாகங்களிலோ தென்னிந்தியாவிலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக நாணயங்களில் முக்கிய சின்னமாக இடம் பெறும் அரச இலச்சினை எதுவும் இந்நாணயங்களில் காணப்படவில்லை. ஆகவே இந்நாணயங்கள் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்டதென்பதில் ஐயமில்லை.


            மேற்குறிப்பிட்ட இரு நாணயங்களில் ஒன்றில் மயில், வேல் சின்னத்தோடு “கந்” என்ற பெயரும், மற்றையதில் இதே சின்னங்களுடன் “ஆ” என்ற எழுத்தும் இடம் பெற்றுள்ளன. இரு நாணயங்களிலும் உள்ள மயிலின் தோற்ற அமைப்பு, சின்னங்களிடையேயும் காணப்படும் ஒற்றுமைகள், நாணயங்களின் வடிவமைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இவை குறிப்பிட்ட காலப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு வம்சத்தால் அல்லது மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பது தெரிகின்றது. இரு நாணயங்களிலும் மயில், வேல் ஆகியவை முக்கிய சின்னங்களாக இடம் பெற்றிருப்பதைக் கொண்டு இந்நாணயங்களை வெளியிட்ட மன்னர்களும், அவர்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களும் முருக வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. 

            சேது மொழி பொறித்த நாணயத்தில் உள்ள நந்திக்கு முன்னால் சிறு உருவமாக வடிவமைக்கப்பட்ட மயில் இவ்விரு நாணயங்களிலும் பிரதான சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள “கந்”, “ஆ” என்பவை கந்தன் ஆறுமுகன் ஆகிய தெய்வப் பெயர்களின் குறுக்கமாகும். அப்பெயர்கள் இறைவனின் தலைப்பாகத்தையும், கீழ் உள்ள பாகம் இறைவனின் உடற்பாகத்தையும் குறிக்கின்றது. இம்மரபில் நாணயங்கள் வெளியிடும் முறை இடைக்காலத் தென்னிந்தியாவிலிருந்துள்ளது. இதற்கு சேரமன்னர் நாணயங்களில் பயன்படுத்திய ‘ச” என்ற எழுத்தையும் (ஆவைநெச 1998 : 160 – 1). மூன்றாம் வல்லாள மன்னன் ஆட்சியில் (கி.பி.1292 – 1345) வெளியிட்ட நாணயங்களில் வரும் ‘ப’ என்ற எழுத்தையும் குறிப்பிடலாம். இங்கே “ஆ” என்ற எழுத்திற்கும், “கந்” என்ற பெயருக்குக் கீழே நடுவில் உள்ள பகுதி இறைவனின் இடுப்புடன் இணைந்த காற்பகுதியாகத் தோன்றுகின்றது. இதை “ஆ” என்ற எழுத்துப் பொறித்த நாணயங்களில் தெளிவாகக் காணமுடிகின்றது.

            இந்த இடத்தில் யாழ்ப்பாண அரசு காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்ட கந்தன் ஆலயம் தொடர்பாக கைலாயமாலையில் வரும் குறிப்பை மேற்கூறப்பட்ட நாணயங்களுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது இந்நாணயங்களை வெளியிட்ட மன்னன் யார் என்பது ஓரளவுக்குத் தெரியவரலாம். கைலாயமாலையில் வரும் தனிச் செய்யுள் நல்லூரில் கந்தன் ஆலயத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் அமைத்தவன் புவனேகபாகு எனக் கூறுகின்றது. இச்செய்யுள் குறிக்கும் காலத்தைச் சக வருடம் எண்ணூற்றெழுபதாக எடுத்துக் கொண்டு பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மந்திரி புவனேகபாகு காலத்தில் அரசும், கந்தன் ஆலயமும் தோன்றியதாக முதலியார் இராசநாயகம் அவர்கள் கூறுகின்றார். ஆனால் இக்கூற்றை ஏற்கக் கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. இலங்கையில் புவனேகபாகு என்ற பெயரில் 7 மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களுள் 6ஆம் பராக்கிரமபாகு தென்னிலங்கையில் ஆட்சி செய்த காலத்தில் அவன் வளர்ப்பு மகனாகிய சபுமால்குமர என்ற மலையாள இளவரசன் செண்பகப்பெருமாள் 1540 இல் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் புவனேகபாகு என்ற பெயருடன் ஆட்சிபுரிந்துள்ளான். இதை யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் கிடைத்த இவன் காலத் தமிழ்க் கல்வெட்டும் உறுதிப்படுத்துகின்றது. இக்கல்வெட்டு யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்த தேநீர் சாலையில் வாசல் படியாகப் பயன்படுத்தப்பட்ட கற்தூணில் எழுதப்பட்டிருந்தது. 25 வரிகளில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டில், 15 வரிகளே ஓரளவு தெளிவாகக்காணப்பட்டன. 1968 ஆம் ஆண்டு இலங்கைத் தொல்லியற் திணைக்கழகம் இக்கல்வெட்டைப் படியெடுத்திருந்தாலும் 1969ஆம் ஆண்டு பேராசிரியர் இந்திரபாலா அவர்கள் மீளப்படியெடுத்து அவரால் வாசிக்கப்பட்டதன் பின்னரே இக்கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவம் வெளிச்சத்திற்கு வந்தது. அக்கல்வெட்டிலிருந்து யாழ்ப்பாண வைபமாலை, கைலாயமாலை முதலான நூல்கள் குறிப்பிடும் புவநேகபாகு கி.பி.15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் ஆட்சிபுரிந்த செண்பகப்பெருமாள் என்பதும் அவனே கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவின் பெயரில் இக்கல்வெட்டை வெளியிட்டான் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இக்கல்வெட்டு ஒரு கட்டிடத்தின் பாகமாக இருப்பதால் அது புவநேகபாகு கட்டிய நல்லார் கந்தன் ஆலயமாக இருந்திருக்கலாம் எனப் பேராசிரியர் இந்திரபாலா கூறுகின்றார்.

            இந்நாணயங்கள் சேதுமொழி பொறித்த நாணய மரபிலிருந்து வேறுபட்டு இருப்பதைக் கொண்டு யாழ்ப்பாண அரசை ஆட்சி புரிந்த செண்பகப்பெருமாளே இந்நாணயங்களை வெளியிட்டுள்ளான் என்ற முடிவுக்கு வரமுடிகின்றது. இம்முடிவைப் பொருத்தமானதெனக் கூறியுள்ள பேராசிரியர் பத்மநாதன் இந்நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய தனது கருத்தையும் அண்மைக்கால ஆய்வொன்றில் பின்வருமாறு கூறுகிறார்:
‘கந்’ என்ற எழுத்துக்கள் கந்தசாமியினது பெயரையும், ‘ஆ’ என்ற எழுத்து ஆறுமுகசுவாமியினது பெயரையுங் குறிப்பனவாதல் வேண்டும். அவ்வாறாகில் இந்த நாணயங்கள் கந்தக் கடவுளின் பெயரால் வழங்கப்பட்டவை. அவற்றைச் செண்பகப்பெருமாள் வெளியிட்டான் என்று கொள்ள முடிகின்றது. ஆதியான கந்தசாமி கோயிலை அவனே அமைத்தான் என்பது பல நூற்றாண்டு காலமாக நிலவி வரும் ஐதீகம் என்பது குறிப்பிடற்குரியது. இந்த அடிப்படையில் நோக்குமிடத்து யாழ்ப்பாண தேசத்தவரது சமய வழிபாட்டு மரபுகளுக்கும் மொழி வழக்கிற்கும் ஏற்றவகையிலேயே தனது பதவிக்கும் அதிகாரத்திற்கும் உரிய சின்னங்களை அமைத்துக் கொண்டான் என்பது தெளிவாகிறது. அது பிரமிக்கத்தக்கவொன்று. அது குடியாட்சி அரசியல் நெறி புரிந்துணர்வின் வழி ஏற்பட்ட நல்லெண்ணத்தின் அடையாளம். நல்லெண்ணத்திற்கு நல்லதொரு உதாரணம்”.

            இந்நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த தென்னிலங்கை நண்பர் ஒருவர் தன்னிடம் உள்ள இவ்வகை நாணயங்களின் புகைப்படங்களை அண்மையில் எனக்கு அனுப்பிவைத்தார். அவரிடம் இந்நாணயங்கள் எங்கிருந்து கிடைத்ததென வினாவிய போது அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக் கடையொன்றில் பணம் கொடுத்து வாங்கியதாகக் கூறினார். ஆனால் விலைமதிக்க முடியாத இந்நாணயங்களை தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் அருங்காட்சியகத்தைத் தவிர இலங்கையின் எந்த பல்கலைக்கழகத்திலோ, அருங்காட்சியகத்திலோ காணமுடியவில்லை.




தொடர்பு:
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
https://www.facebook.com/push.malar




தமிழக மக்கள் வரலாறு - காலனிய வளர்ச்சிக் காலம் - புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை!

நூல் விமர்சனம்: 
தமிழக மக்கள் வரலாறு - காலனிய வளர்ச்சிக் காலம் - புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை!

 -  முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி


https://minnambalam.com/archive/2020/05/03/7.jpg

            தமிழக வரலாற்றை ஆராய முற்படுபவர்களுக்கு ஐரோப்பிய ஆவணக் குறிப்புகள் தமிழக குறிப்புகளில் கிடைக்காத பல சான்றுகளை அளிக்கின்றன. மிக நீண்ட காலமாகவே ஐரோப்பியர்களது நாட்குறிப்பு எழுதும் பழக்கமும், தாங்கள் செல்கின்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைக்கும் பழக்கமும் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பண்டைய செய்திகளை அறிந்துகொள்ள நல்வாய்ப்புகளை வழங்குகின்றன. தமிழக ஆய்வுச் சூழலில் பொதுவாகவே வரலாற்றை ஆராய முற்படுபவர்கள் மிகப் பெரும்பாலும் ஐரோப்பியரது ஆய்வு குறிப்புகளில் கவனம் செலுத்துவது மிகக் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், ஆய்வில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் தமிழ் மொழியில் உள்ள ஆவணங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதும். ஐரோப்பிய ஆவணங்கள் பல தமிழகத்தோடும் தமிழர் வரலாற்றோடும் தொடர்புடையன என்ற விவரங்களை அறியாமல் இருப்பதுமே எனலாம். இவ்வகைப் போக்கு, வரலாற்று ஆய்வுகளின் விரிவுகளைக் குறைத்து, குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் மட்டுமே ஆய்வுகள் சுருங்கிப்போவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. இதிலிருந்து மாறுபட்டு, ஐரோப்பிய ஆவணங்களில் முழு கவனம் செலுத்தி அவற்றை ஆராய்ந்து தமிழ்ச் சமூகத்து வரலாற்றுச் செய்திகளை ஒப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்பவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன். அவரது எழுத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்து பின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் 2018ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் நூல் `காலனிய வளர்ச்சிக் காலம் - புலம்பெயர்ந்தவர்களின் வரலாறு’. இந்த நூலாசிரியரின் `தமிழக மக்கள் வரலாறு` என்ற தொகுப்பின் கீழ் வெளிவருகின்ற இரண்டாவது நூல் இது. இதன் முந்தைய நூலாக வெளிவந்திருப்பது `காலனிய தொடக்க காலம்’ என்ற நூல்.தொடக்க காலத்தின் தொடர்ச்சியாகக் காலனிய வளர்ச்சிக் காலத்தில் தமிழக அல்லது தமிழகத்துக்குள் புலம்பெயர்வினை ஆராய்கிறது இந்த நூல்.

            இந்த நூலில் ஐந்து பெரும் கட்டுரைகளாக ஐரோப்பிய காலனித்துவ காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் கூலிகளாகப் பயணித்த தமிழக மக்களின் வரலாற்றுச் செய்திகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஐந்து கட்டுரைகளுடன் மிக நீண்ட விரிவான முன்னுரை ஒன்றும், நூலின் இறுதியில் முடிவுரை ஒன்றும் ஜெயசீல ஸ்டீபன் அவர்களாலேயே தமிழில் வழங்கப்பட்டிருக்கின்றன.

https://minnambalam.com/archive/2020/05/03/7b.jpg

            மனிதகுலம், அது தோன்றிய காலம் தொட்டே ஓரிடத்தில் நிலை பெறாமல் வெவ்வேறு இடங்களுக்கு மாறிச் செல்வதை இயல்பாகக் கொண்டிருக்கிறது. தமிழக நிலப்பரப்பில் தோன்றிய தமிழினமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதுகாறும் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் காண்கின்ற போதும், தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு நில வழியாகவும் நீர் வழியாகவும் தொடர்ந்து புலம்பெயர்ந்துகொண்டே இருப்பதை பார்க்கிறோம். பயணப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்திலும் மனிதர்கள் கால்நடையாகவே மிக நீண்ட தூரத்துக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். கடல்வழி பயணம் செய்து வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல முடியும் என்பதைப் படகுகளையும் கட்டுமரம் போன்றவற்றையும் உருவாக்கி கடலைக் கடந்து புதிய நிலங்களுக்குச் செல்லும் வழியையும் கண்டுபிடித்து மிக நீண்ட தூரம் பயணத்தைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் மனிதர்கள். இன்று போக்குவரத்து வசதிகள் மிகப்பெரிய அளவிலான மேம்பாடு அடைந்துவிட்டதால் மனிதனின் புலம்பெயர்வு என்பது எளிதாக்கப்பட்டுள்ளது.

            மனிதர்கள் புலம்பெயர்வதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலான வேளைகளில் மனிதர்களின் புலம்பெயர்வு என்பது மனிதர்கள் தாங்கள் வாழ்கின்ற சூழலில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை அனுபவிக்கும்போதும், வாழ்கின்ற இடத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடர முடியாத இக்கட்டான சூழல் ஏற்படும்போதும் நிகழ்கின்ற புலம்பெயர்வு எனலாம். இதுகாறும் வாழ்ந்து வந்த பகுதியில் இனி வாழ்வதற்கு வழி இல்லை எனும்போது பெரும்பாலான புலம்பெயர்வுகள் நடைபெறுகின்றன. பொதுவாகவே மனிதர்கள் மட்டுமன்றி ஏனைய உயிர்களின் இயல்பும் அதுவே. அந்த வகையில் தமிழக வரலாற்றை ஆராயும்போது மிகப்பெரும்பாலான தமிழ் மக்களின் புலம்பெயர்வு என்பது தமிழகத்தைத் தாக்கிய பெரும்பஞ்சம் ஏற்பட்டிருந்த 1876-78ஆம் ஆண்டு காலத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் நிகழ்ந்த புலம்பெயர்வு எனலாம். இந்த நூல் தமிழகம் பெருவாரியாக, தமிழகம் பஞ்சத்தைச் சந்தித்த காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து பிரெஞ்சு காலனித்துவ ஆதிக்கம் நிகழ்ந்த தீவுகளுக்கும், பிரிட்டிஷ் காலனித்துவம் ஆதிக்கம் பெற்றிருந்த இலங்கை மற்றும் மலேசியாவுக்கும் குடிபெயர்ந்த வரலாற்று நிகழ்வுகளை ஐரோப்பியர்களின் ஆவணங்களின் அடிப்படையில் மிக விரிவாக அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துகிறது.

            நூலின் மைய ஆய்வு உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கான தமிழர்களின் புலம்பெயர்வாக அமைகிறது என்றாலும், நூலின் முன்னுரை மாறுபட்ட வகையில் தமிழகத்துக்குள் புலம்பெயர்ந்து வந்த பிராமணர்களின் வருகைக்கான காரணங்களை அலசுகின்றன. முதலாம் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆந்திராவிலிருந்து வந்த பிராமணர்களுக்கு நிலங்களைக் கொடையாக வழங்கி அவர்களுக்குக் கிராமங்களை உருவாக்கித் தந்த செய்திகளைக்கூறும் கரந்தைச் செப்பேடு இச்செய்திகளை விவரிக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாகப் புலம்பெயர்ந்த ஆண் பிராமணர்கள் தமிழகத்தில் வேற்று சமூக பெண்களை மணந்து சமூகக் கலப்பு திருமணத்தினால் உருவாகிய செய்தியையும் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பிரம்மதேய குடியிருப்பில் பிராமணர்கள் வாழ்ந்த பகுதிகள் ‘பிராமணச்சேரி’ என்று தமிழில் குறிக்கப்படுவதையும், குடியிருப்பில் உள்ளும் வெளியிலும் பல்வேறு இடைச்சாதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகள் உருவான செய்தியையும் காண்கின்றோம். கோயில்கள் மன்னர்களால் அதிகமாகக் கட்டப்பட்ட செய்திகளும் கோயில்களில் பூஜை காரியங்களைப் பராமரித்துச் செயல்படுத்திவரும் பணியைப் பிராமணர்கள் மேற்கொண்டதையும், கோயில்களில் பிரசாதம் தயாரித்து வழங்கும் முறையை அவர்கள் அறிமுகப்படுத்தியமையும், அதற்காக மன்னர்கள் ஏராளமான நிதியைக் கோயில்களுக்கு வழங்கியமையும் கல்வெட்டுகள், செப்பேடுகள் தரும் செய்திகள் வழி நூல் ஆசிரியர் இந்த முன்னுரை பகுதியில் விவரிக்கிறார்.

https://minnambalam.com/archive/2020/05/03/7f.jpg

            கோயில்கள் மற்றும் கோயில் பராமரிப்புகள் என்ற தொடர்பில் பிராமணர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் குற்றச்செயல்கள் பற்றியும் இந்த முன்னுரை பகுதி விவரிக்கிறது. கோயிலில் உள்ள நகைகள் களவாடப்பட்ட செய்தி, நெல் களவாடப்பட்ட செய்தி, கோயிலிலிருந்த விலையுயர்ந்த ஆடைகளைக் களவாடிய செய்தி, சர்ச்சையின் காரணமாகப் பழிவாங்கச் செய்யப்பட்ட கொலை, கோயில் பொருட்களைத் திருடிய செய்தி எனப் பல்வேறு குற்றச் செயல்களும் அவற்றுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளும் இப்பகுதியில் விவரிக்கப்படுகின்றன. இந்த முன்னுரை பகுதிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற ஆதாரங்களாக செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், வரலாற்று நூல்கள், ஆவணக் குறிப்புகள் என மிக நீண்ட பட்டியலையும் ஆசிரியர் வழங்கியிருக்கிறார். முன்னுரைக்கே இத்தனை சான்றுக் குறிப்புகளா என வியக்க வைக்கிறது இப்பகுதி.

https://minnambalam.com/archive/2020/05/03/7e.jpg

            இத்தகைய ஒரு தொடக்கத்திலிருந்து நூலின் முதல் கட்டுரைக்கு நம்மை ஆசிரியர் அழைத்துச் செல்கிறார். இந்த முதல் பகுதி 1729-1883 வரையிலான காலகட்டத்தில் பிரெஞ்சு ஆட்சியில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து மொரீஷியஸ் தீவுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தக் கூலிகள் பற்றிய செய்திகளாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக இதில் நாம் பார்க்க வேண்டியது 4.3.1729 அன்று `லா செரன்` என்ற கப்பலில் புதுச்சேரியிலிருந்து மொரீஷியஸுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் கைவினைத் தொழிலாளர்கள் பற்றிய செய்தி. பல்வேறு தச்சு வேலை பணியாளர்கள், கொல்லர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் கைவினை தொழில் திறன் பெற்ற தொழிலாளர்கள் இக்காலகட்டத்தில் மொரீஷியஸ் தீவுக்குப் பணி செய்யச் சென்றார்கள்.

            இதனையடுத்து தொடர்ச்சியாக ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள் மொரீஷியஸ் மற்றும் மஸ்கரேனஸ் தீவுகளுக்குச் செல்வது தொடங்கியது. அடிமை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட சில காலங்களுக்குப் பின்னர் மொரீஷியஸில் காடுகளை அழித்து சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையிலான கூலித் தொழிலாளர்கள் தமிழகத்தின் புதுச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் செல்வது தொடங்கியது. இதன் அடிப்படையில் மொரீஷியஸ் போர்ட் லூயியின் புறநகர்ப்பகுதியில் கேம்ப் டி மலபார் பகுதி தமிழர் குடும்பங்களின் குடியிருப்புப் பகுதியாக உருவாகியது. ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள், சமூக நிகழ்வுகள், தேரே ரூஷ் என்ற பகுதியில் இந்து மக்கள் வழிபாட்டுக்காக 25.10.1856இல் கட்டப்பட்ட முதல் இந்து கோயில் பற்றிய செய்தி, தமிழ் கலை இசை நாடக முயற்சிகள், சமூகப் பிரச்சினைகளைச் சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட பஞ்சாயத்து போன்ற ஒரு `சபை’ மற்றும் தமிழ்க் கல்விக்கான முயற்சிகள் போன்ற செய்திகள் பிரஞ்சு ஆவணங்களிலிருந்து நூலாசிரியர் கையாண்டிருக்கின்றார். நூலாசிரியர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் ஆழ்ந்த திறன் கொண்டிருப்பதால் நேரடியாக மூல ஆவணங்களை நூல் முழுமையுமே பயன்படுத்தியிருப்பது நூலின் ஆய்வுத்தன்மைக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது.
https://minnambalam.com/archive/2020/05/03/7c.jpg

            மொரீஷியஸ் தீவில் தமிழ் மக்கள் ஒப்பந்தக் கூலிகளாகப் புலம்பெயர்ந்தது போலவே அதன் அருகில் இருக்கும் ரீயூனியன் தீவுக்கும் தமிழ் மக்கள் இதே காலகட்டத்தில் அதிகமாகக் குடிபெயர்ந்து சென்றனர். மொரீஷியஸ், ரீயூனியன் ஆகிய இரண்டு தீவுகளுக்குமே சென்ற தமிழ் மக்கள்தாம் இத்தீவுகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் பங்காற்றியவர்கள் என்பதை கவனத்துடன் நோக்க வேண்டியுள்ளது. இன்றைய இத்தீவுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்த பெரும் பங்கு ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற தமிழர்களையே சாரும். கூலிக்காக வேலை செய்பவரை `கூலி’ என அழைக்கும் வழக்கம் பிரெஞ்சுக்காரர்கள் தமிழ் மொழியிலிருந்து எடுத்துக்கொண்ட சொல். இதே சொல் ஆங்கிலத்திலும் பயன்பாட்டில் வந்தது. இது இன்றும் வழக்கில் உள்ள சொல்லாகவே அமைந்து விட்டது.

            நூலின் அடுத்த கட்டுரையாக அமைவது புதுச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் பிரெஞ்சு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களைப் பற்றிய ஆவணத் தகவல்கள். பிரெஞ்சு கரீபியனில் 1830 இல் இருந்து 1840 வரையிலான காலகட்டத்தில் 1.6 மில்லியன் ஆப்பிரிக்க அடிமைகள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து பணியாற்றிக்கொண்டிருந்த இந்த அடிமைகள் ஏற்படுத்திய கிளர்ச்சியினால் அங்கு விவசாயப் பணிகள் தடைப்பட ஆரம்பித்தன. இதுவே தமிழகத்திலிருந்து ஏராளமான ஒப்பந்தக் கூலிகள் மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் புலம்பெயர்வதற்கு அடிப்படை காரணத்தை உருவாக்கின.

            தமிழகத்தைத் தாக்கிய பெரும் பஞ்சம் பெருவாரியான தமிழ் மக்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புலம்பெயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் பிரெஞ்சு அரசு ஒப்பந்தக் கூலிகளைத் திரட்டி அனுப்பும் அமைப்புகளை உருவாக்கிப் பதிவு செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது. `தி சொசைட்டி ஆஃப் இமிகரேஷன்` என்பது அத்தகைய ஓர் அமைப்பாகும். இதில் பணியாற்றும் உள்ளூர் தமிழர்கள் கூலிகளைத் திரட்ட வேண்டிய பணியைச் செய்தார்கள். அப்படித் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் கப்பல் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு முகவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்வார்கள். கப்பல் தலைவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களைக் கப்பலில் ஏற்றிச்சென்று அங்குள்ள தோட்ட உரிமையாளர்களுக்கு விட்டுவிடுவர். இப்படிக் கூலித் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய தேவை இருந்ததால் கயானா, மார்ட்டினிக், குவாடலுப் ஆகிய தீவுகளுக்குத் தமிழ் மக்கள் கூலிகளாகச் செல்வது பெருவாரியாக அமைந்தது.

            இத்தீவுகளுக்குக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்ட கூலிகளின் சாதிகள் ஆவணங்களில் குறிக்கப்படுகின்றன. உதாரணமாக குவாடலப் தீவுக்கு 1759ஆம் ஆண்டு 481 கூலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பயணித்த தமிழ்மக்களின் சாதியைப் பட்டியலிடுகிறது ஓர் ஆவணம். மிக அதிகமான எண்ணிக்கையில் பள்ளர், பறையர், பள்ளியார் என்றும் அதற்கடுத்த எண்ணிக்கையில் பஞ்சாயத்தார், வெள்ளாளர், வன்னியர், அகமுடையார், அம்பட்டன், நாவிதர், இடையர், கள்ளர், நெசவாளர் ஆகியோர் என்று எண்ணிக்கை வாரியாக இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலகட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்த பெரும்பாலான தமிழ் மக்கள் அத்தீவுகளை விட்டு திரும்பவில்லை. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் குடிபெயர்ந்த அம்மக்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும்கூட இத்தீவுகளிலேயே தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்தனர் என்பதை இன்று இத்தீவுகளுக்கு அன்று சென்ற தமிழ் மக்களின் சந்ததியினர் நிறைந்திருப்பதைக் கொண்டு இயல்பாகவே நம்மால் அறிய முடிகிறது.

            இந்த நூலின் அடுத்து வரும் கட்டுரையானது மெட்ராஸில் இருந்து மொரீஷியஸுக்குச் சென்ற தமிழ் ஒப்பந்தக் கூலிகளைப் பற்றி விவரிக்கிறது. கற்பனை செய்து பார்க்கும்போதுகூட மனத்தில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்ற புலம்பெயர்வுச் செய்திகள் அமைகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடில்லாமல் அடிமை விற்பனை நடந்ததாகவும், உள்ளூருக்குள் அடிமை பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், சில வேளைகளில் மக்கள் அடமானம் வைக்கப்பட்டதாகவும், அதுமட்டுமன்றி மக்கள் வாடகைக்கு விடப்பட்டதாகவும் ஜே.வான் என்ற ஆங்கிலேய அதிகாரி 1819 ஜூலை 20 அன்று மெட்ராஸ் வருவாய் வாரியத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவதை இங்கு நாம் சான்றாகக் காணலாம். அடிமைகள் விற்பனை என்பது ஏற்பட்டுவிட்ட காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1725 வாக்கில் பரவலாகக் குழந்தைகள் திருடப்பட்டு விற்கப்பட்ட அவலங்களையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது. மெட்ராஸிலிருந்து மொரீஷியஸ் தீவுக்குப் பயணித்தவர்கள் மெட்ராஸ், செங்கல்பட்டு, தென்னாற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளைச் சார்ந்தவர்கள் என்றும், மெட்ராஸிலிருந்து வந்த கூலித் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஓரளவு சூத்திரர்களும் இஸ்லாமியர்களும் என்றும் கப்பல் ஆவணப்பதிவேட்டில் உள்ள தரவுகளை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

            தொடர்ச்சியாக அடுத்து நூலில் வருவது இலங்கைக்கான புலம்பெயர்வு பற்றிய தகவல்களை ஆராயும் பகுதி. இலங்கைத் தீவின் மக்கள் தொகையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் எனக் குறிப்பிடப்படும் தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்றைய அளவில் 4.2 விழுக்காடு என அமைகிறது. 1820களில் காபி தோட்டங்களில் கூலி தொழிலாளர்களாகப் பணியாற்றச் சென்ற தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் மீண்டும் தமிழகம் திரும்பினார்கள் என்றாலும்கூட அடுத்த மாபெரும் அலையாகத் தமிழகத்திலிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியச் சென்ற பெரும்பாலான தமிழ் மக்களே இன்று மலையகப் பெருந்தோட்ட ஊழியர்களாகத் தொடர்கின்றனர். ஆங்கிலேயக் காலனித்துவ காலகட்டத்தில் ஆங்கிலேய அரசினால் பல்வேறு சமூக அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட இம்மக்கள் உலகம் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுவிட்ட இக்காலகட்டத்திலும் இன்றும் தங்கள் அடிப்படை வாழ்வியல் நிலையிலிருந்து மாற்றத்தைப் பெறவில்லை என்பதே இன்றைய பெருந்தோட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது நாம் கண்கூடாகக் காணக்கூடிய காட்சியாக அமைகின்றன.

            இலங்கை மலையகத்தில் பணியாற்ற, தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதியில் இருந்து பன்றிப் படகுகளிலும் கப்பல்களிலும் என தமிழ் மக்கள் பெருவாரியாக 1820 தொடக்கத்தில் புலம்பெயரத் தொடங்கினர். தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்பவர்களுக்குத் தட்டாபாறையிலும் ராமேஸ்வரம் வழியாக செல்பவர்களுக்கு மண்டபத்திலும் முகாம்கள் நிறுவப்பட்டன. இந்தியாவில் 1857இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் தாக்கத்தினால் இலங்கைக்கான குடியேற்றம் எண்ணிக்கையில் அதிகரித்தது. 1850 முதல் 1861 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 671,475 ஆகும். இக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கங்காணி முறை இலங்கையைப் போலவே மலேசியாவிலும் நடைமுறையிலிருந்தது. காலனித்துவ அரசின் துரைமார்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்களினால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதோடு தங்கள் சொந்த இனத்தைச் சார்ந்த கங்காணிகளாலும் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதும் நம் வரலாற்றில் நிகழ்ந்த அவலம். 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதன் பின்னரும் இந்த `இந்திய வம்சாவளி மக்கள்` என அடையாளப்படுத்தப்படும் தமிழ் மக்கள் அனுபவித்த குடியுரிமை பிரச்சினை என்பது 2003ஆம் ஆண்டு வரை பல்வேறு இழுபறி நிலைக்கு உட்படுத்தப்பட்டு `நாடற்றவர்களாக` அவர்கள் நடத்தப்பட்ட அவலம் தொடர்ந்தது. இலங்கையில் பூர்வகுடிகளாக வாழ்கின்ற தமிழ் மக்கள், மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களின் அங்கீகாரத்தையும் இம்மக்கள் பெறவில்லை. இன்றளவும் மலையகத் தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தரம் தாழ்த்திப் பேசுவதும், நடைமுறையில் அவர்களைச் சற்றே தாழ்த்திவைத்துப் பார்ப்பதும் இயல்பாக அமைந்துள்ள விஷயமாகத்தான் உள்ளது.

            நூலின் இறுதிக் கட்டுரையாக அமைவது மலாயாவுக்கான தமிழர்களின் புலம்பெயர்வு. 1786 தொடக்கம் 1878 வரையிலான மலாயாவுக்கான தமிழ் வணிகர்கள் மற்றும் நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் பற்றி இந்த நூலின் இறுதிக் கட்டுரை அலசுகிறது. மலாயாவுக்கான தமிழர்களின் வருகை என்பது நீண்ட நெடுங்கால வரலாறு கொண்டது. இந்தக் குறிப்பிட்ட கட்டுரை ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கான செய்திகளை மட்டும் ஆராய்வதாக அமைகிறது. 1786ஆம் ஆண்டு, பிரிட்டிஷார் மலேசியாவின் பினாங்குத் தீவை, தனித்துறைமுக நகரமாக வளர்க்கும் பணியைத் தொடங்கினர். 1786இல் பிரான்சிஸ் லைட் பினாங்குத் தீவில் ஜார்ஜ் டவுன் என்ற துறைமுகத்தையும், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் நகரையும் உருவாக்கி ஆங்கிலேயர் கொடியேற்றத்தைத் தொடக்கி வைத்தார். அந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து காதர் மொய்தீன் மரைக்காயர் என்பவர் 1786லிலேயே வணிகத்துக்காகப் புலம்பெயர்ந்திருந்தார். பினாங்குத் தீவின் இந்திய இஸ்லாமியர்களின் தலைவராக காதர் மொய்தீனை பிரிட்டிஷ் அரசு அப்போது நியமித்தது. ஏராளமான தமிழ் இஸ்லாமியர்கள் இக்காலகட்டத்தில் பினாங்கு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்படி வந்து சேர்ந்தவர்கள் கம்போங் கோலம், லெபோ கிளியா மற்றும் ஜாலான் மஸ்ஜித் கபித்தான் ஆகிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கினர். மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்குத் தமிழ் இஸ்லாமியர்களின் வணிக முயற்சிகள் மிக விரிவாக்கம் கண்ட ஒரு காலகட்டமாக இது அமைந்தது. பினாங்கில் தர்கா ஒன்றும் கட்டப்பட்டது. இதே காலகட்டத்தில் வணிகத்துக்காக 1801 வாக்கில் வந்த தமிழ் இந்துக்களும் பினாங்கில் குடியேறினர். 1801இல் ஆங்கில கம்பெனி ஜார்ஜ் டவுன் நகரில் இந்துக் கோயில் ஒன்றுக்கு இடம் ஒதுக்கியது. அதே காலகட்டத்தில் பினாங்கு மலையில் முருகன் கோயில் ஒன்றை தமிழ் இந்துக்கள் கட்டினார்கள்.

            ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை எதிர்த்த பாளையக்காரர்கள் அக்டோபர் 1801ஆம் ஆண்டில் வீழ்த்தப்பட்டு அதே காலகட்டத்தில் சின்ன மருதுவும் பெரிய மருதுவும் ஊமைத்துரையும் கைது செய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் இவர்களில் முக்கியமாக 73 பேர் நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டனர். இவர்களுள் சிவகங்கையின் வெங்கம் பெரிய உடையத்தேவர், பொம்ம நாயக்கர், பாஞ்சாலங்குறிச்சி தளவாய் குமாரசாமி நாயக்கர் மற்றும் மருது பாண்டியனின் மகன் துரைசாமி ஆகியோரும் அடங்குவர். கப்பலில் கொண்டுவரப்பட்ட இந்த அரசியல் கைதிகள் இருவர் இருவராக விலங்கிட்டு வைக்கப்பட்டிருந்தனர். 76 நாட்கள் பயணத்துக்குப் பிறகு 1802ஆம் ஆண்டு, இவர்கள் பினாங்கு வந்தடைந்தனர். பினாங்குத் தீவு புதிய உருவாக்கத்தில் இந்தத் தமிழ் கைதிகளின் உழைப்பு அடிப்படையை அமைத்தது என்பதை மறுக்கவியலாது. 1805க்குள் நாடு கடத்தப்பட்ட தமிழக அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 772ஆக உயர்ந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுவதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான இந்து, இஸ்லாமிய வணிகர்கள் பினாங்கில் குடியேறினர் என்றும் பினாங்கின் மிகப் பெரிய இனமாக அக்காலகட்டத்தில் தமிழர் இருந்தனர் என்றும் பிரிட்டிஷார் ஆவணக் குறிப்புகள் சொல்கின்றன. ஆயினும் அதன் பின்னர் தமிழ் மக்கள் பெருவாரியாகத் தமிழகத்துக்குத் திரும்பிச் சென்றதன் காரணத்தினால் இன்று தமிழ் மக்களின் எண்ணிக்கை பினாங்குத் தீவில் குறைந்து, இப்போது சீனர்கள் பெருவாரியாக நிறைந்த ஒரு மாநிலமாகப் பினாங்கு மாநிலம் அமைந்திருக்கிறது என்பது வருத்தத்தோடு நாம் காணக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு.

            அரசியல் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பின் அடிப்படையில் தமிழகத்துக்குத் திரும்பக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி விண்ணப்பித்தவர்களில் கிருஷ்ண ஐயர் என்ற ஒருவருக்கு மட்டுமே நாடு திரும்பக் கூடிய வாய்ப்பு அமைந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாத நிலை ஏற்பட்டது என்பதையும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாத கைதிகள் மீண்டும் மறு விண்ணப்பம் செய்ததையும் காண்கிறோம். அந்த அடிப்படையில் சின்ன மருதுவின் மகன் ராமசாமி இரண்டாவது முறையும் செய்த விண்ணப்பம் திருநெல்வேலி நீதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ராமசாமி பினாங்கிலேயே வாழ்ந்து இறந்து போனார் என்ற செய்தியும் குறிப்புகளின் வழி நமக்குக் கிடைக்கின்றன. பினாங்கில் மிக அதிகமாகக் குடியேறியவர்களில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், காரைக்கால், நாகூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் அமைந்திருந்தனர். மெட்ராஸிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் என இரண்டு துறைமுகப் பகுதிகளிலிருந்தும் வந்த கப்பல்களில் வந்த தமிழ் மக்கள் பினாங்குத் தீவுக்கு வந்து சேர்ந்தார்கள்.

            மலாயாவுக்குத் தமிழகத்திலிருந்து பெருவாரியான தமிழ் மக்கள் குடியேற்றம் என்பது ஒப்பந்தக் கூலிகளாக அவர்கள் மலாயாவின் பல பகுதிகளில் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகளாகப் பணியாற்றக் குடியேற்றப்பட்டவர்கள். 19ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாக ஏராளமான தமிழ் மக்கள் மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பதிந்துகொண்ட பெருந்தோட்ட உரிமையாளர்களால் கொண்டுவரப்பட்டனர். இவர்களது நிலை ஏறக்குறைய இலங்கை மலையக பகுதிக்குக் குடிபெயர்ந்த தமிழ் மக்களின் நிலையை ஒத்ததாகவே அமைந்திருந்தது. படிப்படியான தமிழ் மக்களின் கல்விச்சூழல் மற்றும் 1958இல் மலாயா சுதந்திரம் பெற்று மலேசியாவாக மாறிய பின்னர் நிகழ்ந்த மேம்பாட்டு முயற்சிகள் ஆகிய முன்னெடுப்புகள் மலேசியாவில் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்கு வகித்தன. ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலித் தொழிலாளிகளாகப் பணியாற்ற வந்த தமிழ் மக்கள் இன்று தோட்டங்களில் நிலங்களை வாங்கி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகப் பொருளாதார பலம்பெற்ற சூழல் உருவாகியிருக்கிறது. மலேசியாவின் வளர்ச்சியில் தமிழ் மக்களின் உடல் உழைப்பும் அர்ப்பணிப்பும் பின்னிப் பிணைந்து கலந்திருக்கிறது.

            இந்நூல் விவரிக்கும் செய்திகளின் அடிப்படையில் காணும்போது ஒப்பந்தக் கூலிகளாக உலகின் பல்வேறு தீவுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையோர் தமிழக சாதி கட்டுப்பாட்டு அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்களாக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக, அடிமைகளாக, சமூகத்தின் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருந்த மக்களாகவே இருக்கின்றனர். கொடூரமான சமூக வாழ்வியல் சூழல் ஆகியவை இம்மக்களை தங்கள் இயல்பான நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாகப் பெயர்த்து புதிய நிலங்களுக்குத் தள்ளிய சூழலைக் காண்கின்றோம். புதிய சூழலில் தொடக்கக் கால வாழ்க்கை நிலை என்பது கற்பனைக்கு எட்டாத கொடூரமான சூழலாக இருந்தது என்பதே உண்மை. ஆனாலும்கூட, படிப்படியாக இம்மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவான பல்வேறு சட்டங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழலைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளன என்பதைத்தான் இன்று காண்கின்றோம். கல்வித் துறைகளில் மேம்பாடு, வணிகத் துறைகளில் மேம்பாடு, ஆளுமை, சொத்து உடமை, அரசியல் அதிகாரம் பெறுதல் என்ற வகையில் தமிழ் மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உயரிய வாழ்க்கை பொருளாதாரச் சூழலை அனுபவிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் இன்றளவும்கூட நடைமுறையில் கிடைக்காத சுயமரியாதையும் இயல்பாகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் நிலை இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாகியுள்ளது. அரசியல் தலைமைத்துவம் பெற்று நாட்டின் அரசியல் தலைவர்களாக இம்மக்களின் பிரதிநிதிகள் செயல்படுவதை மொரீஷியஸ், மலேசியா, சிங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ரீயூனியன், பிஜி தீவுகளில் இன்று காண்கின்றோம். இம்மாற்றம் வலி நிறைந்த நீண்ட பயணத்தின் மாபெரும் சாதனை.

https://minnambalam.com/archive/2020/05/03/7d.jpg

            தமிழகத்தில் இன்றும்கூட பல்வேறு சீர்திருத்த முயற்சிகளுக்குப் பிறகும் சாத்தியப்படாத சாதி ஒழிப்பு என்பது தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த பல்வேறு நாடுகளில் மிகப் பெரிய அளவில் சாத்தியமடைந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்ற பூர்வகுடி மக்களோடு அல்லது தமிழ் மக்களிலேயே வெவ்வேறு சாதி சமூகத்தைச் சார்ந்த மக்களோடு திருமண கலப்பினால் ஏற்பட்ட கலப்பு எனலாம். இந்த நிலை சாதி வேறுபாட்டை மிகக் குறைந்திருக்கிறது அல்லது ஒழித்திருக்கிறது. இன்று தமிழர் புலம்பெயர்ந்த பல நாடுகளில் சாதிப் பெயர்கள் என்பன தமிழகத்தில் சொல்லப்படும் பொருள் என்றில்லாமல் குடும்பப்பெயர் என்ற அளவில் கிடைக்கும் ஒரு சாதிப்பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்ளும் நிலை உள்ளதை தென்னாப்பிரிக்கா போன்ற நாட்களில் மிகத் தெளிவாகக் காண்கின்றோம். கடந்த 200 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்குத் தமிழ் மக்கள் பரந்து விரிந்து சென்று தமிழர்கள் இல்லாத நிலப்பகுதிகளே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் வகையில் விரிவான புலம்பெயர்வைச் சாத்தியப்படுத்திய ஒரு வரலாற்று நிகழ்வாகவும் இந்தக் காலனித்துவ காலத்தின் செயல்பாடுகள் அமைகின்றன.

            உலகம் முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றுவது என்பது இன்றும்கூட வழக்கிலிருக்கும் ஒன்றுதான். இன்றைய நாகரிக உலகில் குறிப்பிட்ட சில காலங்களுக்குக் கான்ட்ராக்ட் அடிப்படையில் தொழில் திறமை பெற்றவர் பணியாற்றுவது மிக இயல்பான ஒன்றாக வளர்ந்துள்ளது. இன்று ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளைத் தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அடிப்படை தொழிலாளர் நலமாக நிர்ணயிக்கின்றன. ஆயினும்கூட எல்லா தொழிற்கூடங்களும் தமது பணியாளர்களுக்கு எல்லா சலுகைகளையும் முறையாக வழங்குவதில்லை. இது பற்றிய செய்திகளையும் இது தொடர்பான கோரிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் வழி நாம் அவ்வப்போது காண்கின்றோம். மனித உரிமைகளின் தேவை பற்றிய விரிவான புரிதல் அமைந்திருக்கும் இந்தக் காலகட்டத்திலும்கூட அடிப்படை உரிமைகள் மீறப்படுவது பற்றி கவலைப்படும் நாம், இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களின் நிலை எவ்வகையில் அமைந்திருக்கும் என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. அதை மிக மிகச் சிறப்பாக இந்த நூல் வெளிப்படுத்துகிறது.

            இந்த நூலின் பலமாக அமைவது நூலின் ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் நூலாசிரியர் வழங்கியிருக்கின்ற ஆவணங்களின் சான்றுப் பட்டியல். தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிகம் தொடாத ஓர் ஆய்வுத்துறையாகவே காலனிய கால வரலாறும் அதன் தாக்கத்தால் நிகழ்ந்த மக்களின் புலம்பெயர்வும் உள்ளன. இத்துறையில் மேலும் பல ஆய்வாளர்கள் தயக்கம் நீக்கி ஆர்வம் காட்ட வேண்டும். ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள ஆவணங்கள் தமிழக ஆய்வு மாணவர்களால் ஆராயப்பட்டு தமிழர் மற்றும் தமிழக வரலாறு பற்றிய புதிய தரவுகளும் தகவல்களும் வெளியிடப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது!


நூல்: தமிழக மக்கள் வரலாறு காலனிய வளர்ச்சிக் காலம் - புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில்: ரகு அந்தோணி)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: 175/-


கட்டுரையாளர் குறிப்பு:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.


நன்றி:  மின்னம்பலம் 
ஞாயிறு, 3 மே 2020



தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)