இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், அரசு மற்றும் மக்களின் உரிமைகளும் கடமைகளும்
--- சொல்லாக்கியன்
உலகின் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனும், அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில், எல்லா சட்டங்களின் ஊற்றுக்கண்ணாகவும் அரசியல் அமைப்புச் சட்டமே திகழ்கின்றது. ஒரு நாடு நல்ல வழியில் செல்கின்றதா அல்லது தீய வழியில் செல்கின்றதா என்பதை உரசிப்பார்க்கும் கல்லாகவும் அரசியல் அமைப்புச் சட்டம் நிலவுகின்றது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரத்தைச் சுருக்கமாகக் காண்பதற்குமுன், அதன் பின்புலத்தையும் சிறிது காண்போம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், உலகில் உள்ள எல்லா நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்களைக் காட்டிலும், மிகவும் அருமையான சட்ட ஆவணம் ஆகும். ஏனெனில், இதை உருவாக்கியவர்களில் பலரும் சட்ட மேதைகள், உலக வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், புதிய சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கத் துடித்தவர்கள். பி. என். ராவ், ராஜேந்திர பிரசாத், பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, சரோஜினி நாயுடு, அன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், அம்ரித் கவுர், விஜயலக்ஷ்மி பண்டிட் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். உலகத்திலேயே மிகவும் அற்புதமான நாடாக இந்தியாவைக் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் இன்பக்கனவைக் கண்டதனால், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், அயர்லாந்து என, உலகில் உள்ள பல அரசியல் அமைப்புச் சட்டங்களின் நல்ல பண்புகளை எல்லாம் ஒன்று சேர்த்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அதன் இறுதி வடிவில் உலகச் சட்டவரலாற்றின் ஒளிமிக்க சிகரம் எனலாம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னோட்டம் (Preamble):
சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பண்புகளாகும். பொது நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை, அதன் இலக்குகளாகும் என்று முன்னோட்டம் (Preamble) குறிப்பிடுகின்றது.
இந்திய அரசின் கொள்கைக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் (Directive Principles of State Policy):
முன்னோட்டத்தை மேலும் விளக்கும் வகையில், இந்நெறிமுறைகள் அமைந்துள்ளன.
இவை, அயர்லாந்து அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டன. டாக்டர். அம்பேத்கர், இவற்றை, இந்திய அரசியலமைப்பின் “புதுவகையான முக்கியத்துவம்” என குறிப்பிடுகிறார்.
அரசாங்கமானது, மக்கள் நலனிற்காக கொள்கைகளை வகுக்கும் போதும், சட்டங்களைச் செயல்படுத்தும் போதும், நெறிமுறையின் இலட்சியங்களை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட வேண்டும் என்பது அரசியலமைப்பின் அறிவுறுத்தலாகும் மற்றும் நாட்டின் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய அங்கங்களுக்கும் பரிந்துரைப்பதாகும்.
1. இந்தியா, ஒரு நல அரசு (Welfare State): ஒரு மக்கள் நல அரசு, வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் செல்வத்தைச் சமச்சீரான முறையில் விநியோகிப்பது ஆகிய கொள்கைகளின் அடித்தளத்தில் அமைந்தது. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், இந்திய நாட்டின், வரலாற்றின் அநீதி, அடிமைத்தனம், சமமின்மை, போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகத்தான, இந்தியா ஒரு மக்கள் நல அரசாக விளங்க வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தார்கள்.
2. சோசலிசம்: பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டி, நியாயமான சமூக அமைப்பை உருவாக்க வேண்டிய கடமையை, அரசுக்கு இது சுமத்துகிறது. மக்கள் அனைவருக்கும், சமூக பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக் கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க முயல வேண்டும் என்று, இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் வாசகம் 38 கூறுகின்றது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் கிடைத்தல் (வாசகம் 39 d )
ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதன் மூலம் சமமான நீதி முறையை ஏற்படுத்துவது (வாசகம் 39 A)
மனிதாபிமான வேலைச்சூழல் அமைய, பேறுகாலச் சலுகை கிடைக்கும் வகை. (வாசகம் 42)
ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கைத் தரத்தையும் பொது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது அரசின் கடமை. (வாசகம் 47)
3. காந்தீயம்: கிராமப் பஞ்சாயத்துக்களை அமைத்தல். (வாசகம் 40)
கிராமப் புறங்களில் தனிநபர் அல்லது கூட்டுறவு முறையில் குடிசைத் தொழில்களை மேம்படுத்துதல். (வாசகம் 43)
உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு செய்யக்கூடிய மதுவகை மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தாமல் தடுத்தல். (வாசகம் 47)
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை, அறிவியல் வகைகளில், அரசு அமைத்தல். பசுவதையைத் தடுத்தல். கன்றுகள் மற்றும் பால் தரும் பசுக்கள் தீவனம் இன்றி வாடும் கால்நடைகளின் நலன்களைப் பேணுதல். (வாசகம் 48)
4. சமத்துவம்: நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வருதல். (வாசகம் 44)
ஆறு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியளிப்பது. (வாசகம் 45)
நலிவடைந்த பிரிவினரின், குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடிகள் ஆகியோரின், கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்புக் கவனம் கொண்டு அரசு வளர்க்க வேண்டும். (வாசகம் 46)
நிர்வாகத்திலிருந்து நீதித்துறையைப் பிரித்தல். (சரத்து 50)
வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகிய இரண்டும் இந்திய அரசியலமைப்பின் தத்துவார்த்தமான பகுதிகள் மற்றும் ஆன்மா நிறைந்த பகுதிகளாகும். நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என கிரான்வில்லி ஆஸ்டின் (Granville Austin) குறிப்பிடுகிறார்.
அடிப்படை உரிமைகள்: அடிப்படை உரிமைகளுக்கு, இந்திய அரசியலமைப்பின் பகுதி – III ல், வாசகம் 12 முதல் 35 வரை, உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பகுதி – III, இந்தியாவின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தில், வரலாற்றின் முதன் முறையாக 1215 – ல், அரசரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டதும், பிரபுக்கள் மற்றும் சாதாரண மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டதும், இந்த மகா சாசனம் மூலம்தான்.
வாசகம் 12 – ன்படி, “அரசு” என்ற சொல்லில், பின்வருவன அடங்கும்:
(1) இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம்; மற்றும்
(2) ஒவ்வொரு மாநிலத்தினுடைய அரசாங்கம் மற்றும் சட்டமன்றம்; மற்றும்
(3) இந்திய ஆட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளூர் அதிகார அமைப்புகள் அல்லது பிற அதிகார அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள், நீதிபதிகள் ஆகிய யாவரும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே இயங்கவும், அதைக் காக்கவும், கடமைப்பட்டவர்கள்.
வாசகம் 13(2) – குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவோ அல்லது மீறுவதாகவோ அரசு எந்தச் சட்டத்தையும் இயற்றக் கூடாது மற்றும் இந்நிபந்தனைக்கு முரணாகச் சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது அம்முரண்பாடு அளவிற்கு இல்லாநிலையதாக ஆக்கப்படும்.
சமத்துவ உரிமைகள் (வாசகம் 14 முதல் 18 வரை):
வாசகம் 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவருக்கும் சமத்துவ சட்டப் பாதுகாப்பு.
வாசகம் 15 – மதம், இனம், சாதி, பால், இடம் அல்லது பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பாரபட்சம் காட்டக்கூடாது.
வாசகம் 16 – அரசின் வேலைவாய்ப்புகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு,
வாசகம் 17 – தீண்டாமை ஒழிக்கப்படுகின்றது. தீண்டாமையின் எல்லாவகையான நடைமுறையும் தடைசெய்யப்படுகின்றது . தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர் எவராயினும், சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.
சுதந்திர உரிமைகள் (வாசகம் 19 முதல் 22 வரை):
வாசகம் 19:
1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம்,
2. ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்கான சுதந்திரம்,
3. கழகங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்,
4. இந்தியா முழுவதும் சென்று வர சுதந்திரம்,
5. இந்தியாவிற்குள் எப்பகுதியிலும் தங்கி வாழும் உரிமை,
6. எந்த தொழில், பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தைச் செய்யவும் சுதந்திரம்.
வாசகம் 20:
எந்த ஒரு நபரும் தனக்கு எதிராகவே சாட்சியம், வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தக்கூடாது.
வாசகம் 21:
எந்த நபரின் வாழ்க்கையையும் அல்லது தனி நபர் சுதந்திரத்தையும், சட்டத்தின் நடைமுறைகளால் தவிர, பிற வழிகளில் பறிக்கக் கூடாது.
குழந்தைப்பருவத்தின் பாதுகாப்பிற்கான உரிமை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சுழலுக்கான உரிமை, மனித கௌரவத்திற்கான உரிமை போன்ற உரிமைகள் மீறப்படும் போது, பிரிவு 21-ன் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாக வேண்டுமென்று ஏராளமான வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வாசகம் 22:
கைது செய்வதற்குண்டான காரணங்களை எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
தன் சார்பாக வாதாட, ஒரு வழக்கறிஞரை, தன் விருப்பப்படி கைது செய்யப்பட்டவர் அமர்த்திக் கொள்ளலாம்.
கைது செய்யப்பட்ட நபரை, அவர் கைதான நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள், குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன், முன்னிலைப்படுத்த வேண்டும்.
சுரண்டலுக்கு எதிரான உரிமை வாசகம் 23 முதல் 24 வரை:
வாசகம் 23:
மனித இழிதொழில் வாணிகமும், ஊதியமற்ற கட்டாய உழைப்பு முறை மற்றும் இது போன்ற பிற வலுக்கட்டாய உழைப்பு முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இத்தடையை மீறி அவ்வாறு ஏதேனும் செய்யப்படுமானால், அது தண்டிக்கத்தக்கக் குற்றச் செயலாகும்.
வாசகம் 24:
14 வயதிற்குப்பட்ட குழந்தைகளை யாரும், தொழிற்சாலையிலோ அல்லது சுரங்கத்திலோ பணிக்கு அமர்த்தக் கூடாது. மேலும் பிற அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
சமய சுதந்திர உரிமை வாசகம் 25 முதல் 28 வரை:
வாசகம் 25:
பொது அமைதி, ஒழுங்கு, சுகாதாரம், அறநெறி ஆகியவற்றுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் உட்பட்டு எல்லோரும் தங்கள் உளநெறிக்கு உகந்ததாகப்படும் சமய நம்பிக்கையைக் கொள்ளவும், சுதந்திரமாக அதனைப் பின்பற்றவும், மற்றவர்களுக்கு அதன் உண்மையை உணர்த்திப் பரப்பவும், அரசியல் சட்ட உரிமையைப் பெற்றிருக்கின்றார்கள்.
வாசகம் 26:
அரசியலமைப்புச் சட்டத்தின் பொது அமைதி, ஒழுங்கு, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றின் நலனுக்குட்பட்டு,
1. ஒவ்வொரு சமயரும் அதற்குரிய அற நோக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றார்.
2. சமய சம்பந்தமான விஷயங்களில் தனது சொந்த விவகாரங்களைத் தானே மேலாண்மை செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றார்.
3. அசையும் சொத்துக்களையும், அசையாச் சொத்துக்களையும் சேர்த்துக் கொள்ளவும், உரிமையாக்கிக் கொள்ளவும் உரிமை பெற்றுள்ளார்.
4. அவ்வாறு சேர்ந்து சமயக் கூடங்களுக்கு உரிமையாக்கிக் கொண்ட சொத்துக்களைச் சட்டங்கள் கூறும் முறையில் நிர்வகித்துக் கொள்ளவும், உரிமை பெற்றிருக்கின்றது என்று அரசியலமைப்புச் சட்டம் விளம்புகிறது.
வாசகம் 27:
எச்சமயத்திற்கும் அல்லது அதன் உட்பிரிவிற்கும் வரி விதித்து, அவ்வரியின் வருவாயைச் சமய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் செலவு செய்யும் நோக்கத்துடன் எந்த ஒரு குடிமகனும் வரிப்பணம் கட்ட வேண்டுமென்று வற்புறுத்தக் கூடாது என்று கூறுகின்றது.
வாசகம் 28:
அரசின் நிதி உதவிகளை முழுமையாகப் பெற்று, கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில், சமய போதனை செய்வது தடுக்கப்படுகிறது.
அரசின் நிதி உதவியைப் பெறாமல் கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்படவில்லை.
மேலும், பள்ளிக் குழந்தைகளைக் கட்டாய மத போதனைகளைக் கேட்க வேண்டுமென்று கட்டாயப் படுத்தக் கூடாது.
கலாச்சார மற்றும் கல்வி வாசகம் 29 முதல் 30 வரை:
வாசகம் 29:
(i) இந்தியாவில் எப்பகுதியில் வாழ்பவராக இருப்பினும், தனி மொழி ஒன்றை அல்லது எழுத்து முறையை அல்லது தனிக் கலாச்சாரம் ஒன்றைப் பெற்றிருக்கும் சமூகத்தினர் அம்மொழி, எழுத்து வடிவம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியலமைப்பு சட்ட உரிமையைப் பெற்றுள்ளார்கள்.
(ii) அரசுக் கல்விக் கூடங்களிலும் அல்லது அரசின் உதவி பெற்று நடத்தப்படுகின்ற கல்வியியல் சாலைகளிலும், எந்தவொரு குடிமகனுக்கும், சமயம், இனம், சாதி, மொழி அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றினால், கல்வி பெறும் வாய்ப்பை மறுக்க முடியாது.
வாசகம் 30:
மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில், சிறுபான்மையினராக உள்ள எல்லாரும், தங்கள் விருப்பப்படி கல்விக் கூடங்களை ஏற்படுத்தி அவற்றை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய முதல் உரிமையை வழங்குகிறது.
உரிமைகளைக் காப்பதில், அரசியலமைப்பு வாயிலான தீர்வு:
வாசகம் 32 (வாசகம் 226 – உயர்நீதிமன்றம்):
அடிப்படை உரிமைகளால் பாதிக்கப்பட்ட நபர், அரசியலமைப்பு மூலம் தீர்வு பெறலாம். பாதிக்கப்பட்ட நபர் நேராக உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்பதே, ஒரு அடிப்படை உரிமையாகும். ஏனெனில் அடிப்படை உரிமைகளை முழுமையாக அனுபவிக்கவும், உரிமை மீறலைத் தவிர்க்கவும், உரிமையை நிலைநாட்டவும், இவ்வாசகம் வகை செய்கிறது.
எனவே, இந்த வாசகத்தை ஒரு போதும் செயலிழக்கச் செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ முடியாது. மேலும், “இந்த அரசியலமைப்பில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஏதாவது ஒரு குறிப்பிட்ட வாசகத்தின் பெயரைக் கூறும்படி என்னிடம் கேட்கப்பட்டால், இவ்வாசகம் இல்லாமல் இருப்பின், அரசியலமைப்பே செல்லாத ஒன்றாகக் கூடிய இவ்வாசகத்தினைத் தவிர, வேறு எந்த வாசகத்தையும் நான் குறிப்பிடமாட்டேன். இது, அரசியலமைப்பின் இருதயம், ஆன்மா ஆகும்” என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்படின், உச்ச நீதிமன்றம் எவ்வகையான நீதிப்பேராணை அல்லது உத்தரவுகளைப் பிறப்பிக்குமோ, அவற்றை, வாசகம் 226-ன்படி, உயர்நீதிமன்றமும் பிறப்பிக்கலாம்.
மேலும், உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை பிறப்பிக்கும் அதிகாரமானது, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விடப் பரந்தது, என வாசகம் 226 கூறுகிறது.
ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால் தான், வாசகம் 32-ன்படி உச்ச நீதிமன்றம் ஆணை பிறக்கும். ஆனால், அடிப்படை உரிமையின்றி சாதாரண உரிமைகள் மீறப்பட்டாலும், உயர்நீதிமன்றம் அவ்வாணையைப் பிறப்பிக்கும்.
1. ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை (Habeas Corpus): சட்டத்திற்குப் புறம்பான முறையில் சிறைபிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்கும்.
2. செயலுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus): பொதுக் கடமையான ஒரு செயலை, ஓர் அதிகாரி அல்லது கூட்டமைப்பு அல்லது கீழ் நீதிமன்றம் செய்யத் தவறினால், அக்கடமையைச் செய்விக்கும்.
3. நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை (Certiorari): நீதிமுறை சார்ந்த அலுவல்களைச் செய்யும் தீர்ப்பாயங்கள், அதிகாரிகள், தம் அதிகாரவரம்பை மீறிச் செயல்பட்டாலோ, அறமுறைக்கு மாறாக நடவடிக்கை எடுத்தாலோ, அவற்றை மறு ஆய்வு செய்து நீக்கம் செய்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தமக்கு அனுப்புமாறு நீதிமன்றம் ஆணையிடும்.
4. தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition): கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ தம் அதிகார வரம்பை மீறி அல்லது சட்ட முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அவை மேற்கொண்டு நடத்தாமல் தடைசெய்யும்.
5. தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo Warranto) : பொது அதிகாரப் பதவியில் உள்ளவர், எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவி, பதில் கூற ஆணையிடும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும், பிரெஞ்சுப் புரட்சி, உலக மக்களுக்கு அளித்த பெருங்கொடைகள். இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில், சமத்துவம் என்பதற்கு முதன்மை தரப்பட்டுள்ளது. காரணம், பல்லாண்டு காலமாய் இந்தியாவில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளே.
எளியதை வலியது அடக்குவதும், எளியதிடமிருந்து வலியது பறிப்பதும் விலங்குலகில் மட்டுமல்ல, மனித சமுதாயத்தின் நெடிய வரலாற்றில், இன்றும் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளது. இனிவரும் காலங்களிலும், வெவ்வேறு வடிவங்களில், அவற்றைத் தொடர முயன்று கொண்டேதான் இருக்கும். மக்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வாலும், உரிமைகளுக்கான போராட்டங்களாலும் மட்டுமே, அம்முயற்சிகளைத் தடுக்க முடியும்.
அடிப்படைக் கடமைகள் (வாசகம் – 51 A)
• அரசியலமைப்புக்குக் கீழ்ப்படிந்து, அதன் நோக்கங்களையும், நிறுவனங்களையும் மதிப்பதுடன் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் மதித்து நடத்தல்;
• நமது சுதந்திரப் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உன்னதமான நோக்கங்களைப் பேணிக்காத்துப் பின்பற்றி நடத்தல்;
• இந்தியாவின் இறையாண்மையையும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்தல்;
• நாட்டைக் காப்பதுடன், தேவையானபோது, நாட்டு நலப்பணிகளையும் செய்தல்;
• சமய, மொழி, வட்டார, பிரிவினை வேறுபாடுகளை எல்லாம் கடந்து, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதர உணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்த்தல்; பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கின்ற செயல்களை விட்டொழித்தல்;
• பல்வேறு கூறுகளுடைய நமது பண்பாட்டின் வளமான பாரம்பரியத்தை மதித்துப் போற்றிக் காத்தல்;
• காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை மேம்படுத்திப் பாதுகாத்தல், உயிரினங்களிடையே பரிவுடன் இருத்தல்;
• அறிவியல் மனப்பாங்கு, மனிதாபிமானம், ஆராய்ச்சி உணர்வு, சீர்திருத்த மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்தல்;
• பொதுச் சொத்தைப் பாதுகாத்தல்; வன்முறையை விட்டொழித்தல்;
• தொடர்ச்சியாக நம் நாடு தன்னுடைய முயற்சியில் பல முன்னேற்றங்களைக் காணவும், சாதனைகளைப் படைக்கவும் தனிமனித மற்றும் கூட்டு முயற்சிகள் அனைத்திலும் திறமையை வளர்க்கப் பாடுபடுதல்;
• 14 – வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றோர்களும், காப்பாளர்களும் வழங்கவேண்டும் என்கிறது.
இந்த கடமைகள், 2002-ம் ஆண்டு 86-வது சட்டத்திருத்தம் வாயிலாகச் சேர்க்கப்பட்டது. இவையாவும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் (வாசகம் 368):
அரசியலமைப்பையும் அதன் செயல்முறைகளையும் திருத்துவதற்கான அதிகாரத்தை, பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது. பாராளுமன்றமானது அரசியலமைப்பினைத் திருத்தி புதிய பகுதிகளைச் சேர்க்கவோ, மாற்றி அமைக்கவோ அல்லது நீக்கவோ முடியும். ஆனால், இதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே செய்ய வேண்டும். எனினும், பாராளுமன்றமானது, அரசியலமைப்பின் “அடிப்படைக் கட்டமைப்பை மீறி திருத்தம் செய்யக்கூடாது.
நெருக்கடி நிலை (வாசகம் 352):
இந்தியா முழுமைக்கோ அல்லது குறிப்பிட்ட பகுதிக்கோ, போர் அல்லது அன்னிய ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கலகத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துவார்.
கூட்டாட்சி (Federation):
ஒப்பந்தம் என்று பொருள்படும் இலத்தீனிய ‘போடஸ் (Foedus)’ என்ற சொல்லிலிருந்து கூட்டாட்சி என்ற சொல் ஏற்பட்டது. இதற்கு, கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கிடையேயும் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொருள். தேசிய ஒற்றுமையோடு, மாநில உரிமைகளையும் பாதுகாக்க அமைக்கப்படும் அரசாங்க முறையே, கூட்டாட்சி. ஒற்றையாட்சி முறையில், மத்திய அரசாங்கம் தீட்டும் சட்டங்களை, எல்லா மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும்.
இந்தியாவின் அரசியல் சட்டம் என்பது எழுத்துப் பூர்வமான ஓர் ஆவணம்; மேலும் உலகிலேயே மிக அதிகபட்ச விரிவுடைய அரசியல் சட்டமும் இதுதான். அரசியல் சட்டத்தின் உச்சநிலையை இது நிறுவியுள்ளது. காரணம், மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டுமே, தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட களங்களில், சுதந்திரமாகச் செயல்படுவதற்குரிய அதிகாரங்களை, அரசியல் சட்டம் விளக்கமாக அளித்துள்ளது.
வாசகம் 343:
இந்தியை அலுவல் மொழியாகக் குறிக்கின்றது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இந்தித்திணிப்பை எதிர்க்கின்றன. ஏற்கனவே, இந்தியால் பல மொழிகள் அழிந்துவிட்டன. பாகிஸ்தானில், உருது தேசிய மொழியாய் இருக்கும் போதிலும், உருதும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக உள்ளன. ஏனெனில், அங்கும், உருதுவைத் தவிர, பஞ்சாபி, சராய்கி, பாஷ்டோ, சிந்தி, பலுச்சி, குஜாரி, காஷ்மீரி, இந்த்கோ, பிராஉயி, ஷீனா, பால்டி, கோவார், தத்கி, அர்யான்வி, மார்வாரி, வாகி, புருஷாகி எனப் பல மொழிகள் பேசப்படுகின்றன. எனவே, இந்த வாசகத்தை வரலாற்றுப் பூர்வமாக ஆராய்ந்து, திருத்தம் கொண்டுவர வேண்டியது எதிர்கால அவசியமாகும்.
அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூன்று பட்டியல்கள் (வாசகம் 246):
மத்திய, மாநில மற்றும் பொதுப்பட்டியல்கள். மத்திய அரசின் பட்டியலில், பாதுகாப்பு, இரயில்வேக்கள், தபால் மற்றும் தந்தி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 97 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மாநிலப் பட்டியலில், பொதுச் சுகாதாரம், காவல் போன்ற உள்ளூர் நலன் சார்ந்த 66 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மின்சாரம், தொழிற்சங்கம், பொருளாதார மற்றும் சமூக திட்டமிடல் போன்ற 47 அம்சங்கள், மத்திய மற்றும் மாநிலம் ஆகிய இருதரப்புக்குமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற வகையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ஆனால், இன்றைய சூழலில், மாநிலங்களின் நலன்களை விலையாகக் கொண்டு, மையத்திற்குச் சாதகமான விதத்தில், ஒரு சாய்வுப் போக்கு நிலவுகிறது.
மத்திய அரசுடன், மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் மாநிலங்கள் பணியாற்றியாக வேண்டும் எனும் கட்டாயம் நிலவுகின்றது.
இந்திய அரசியல் சட்டம், தனது வடிவத்தில் கூட்டாட்சித் தன்மையுடனும், உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சித் தன்மையுடனுமே அமைந்திருக்கிறது.
வாசகம் 370:
ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு நிலை வழங்கி இருந்தது.
அதன்படி இந்திய அரசியலமைப்பின் அனைத்து சட்டதிட்டங்களும் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்குப் பொருந்தாது.
இந்தியாவிலேயே இந்த மாநிலத்திற்கு மட்டும் தான் தனியாக “ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு” எனும் மாநில அரசியல் அமைப்பு இருந்தது.
இவ்வாசகம் அகற்றப்பட்டதால், இன்றைய நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பொருந்தும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தன்னாட்சி அமைப்புகள்:
வாசகம் 324: தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
eci.gov.in/வாசகம் 148: இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத்தலைவரை, குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
https://cag.gov.in/வாசகம் 338: தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்.
வாசகம் 76: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரைக் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
தன்னாட்சி அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை என்றால், மக்களின் சுதந்திரமும் பறிபோகும், எதேச்சதிகாரம் மட்டுமே மிஞ்சும் என்பது வரலாற்றுப்பாடம்.
அரசியலமைப்புச்சாரா அமைப்புகள்:
1. திட்டக்குழு
2. தேசிய வளர்ச்சிக் குழு
இறுதியாக, 2005 – ஆம் ஆண்டின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’, மிகவும் முக்கியமான சட்டமாகும். குடிமக்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவது அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையையும் - பொறுப்பேற்றுக் கொள்ளுதலையும் முன்னெடுத்துச் செல்வது, ஊழலைக் கட்டுப்படுத்துவது மற்றும் நமது ஜனநாயகத்தை, மக்களுக்காகப் பணி செய்வதை அதனுடைய உண்மையான அர்த்தத்தில் மேற்கொள்ளுமாறு செய்வது - ஆகியவையே தகவலறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.
பணியைச் சோதித்தறிவது, ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசோதிப்பது, அத்தகைய ஆவணங்களையும், பதிவேடுகளையும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளாகப் பெறுவது, அவற்றின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் பெறுவது, அவற்றிலிருந்து குறிப்புகள் எடுப்பது, மற்றும் பொது அதிகார அமைப்பு அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சான்றாதாரங்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுவது போன்ற இவையனைத்துமே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்குவனவாம்.
தகவல் அறியும் உரிமையை இச்சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ள உரிமைக்குச் சமமான விதத்தில் குடிமக்களுக்கு வழங்கி உள்ளது.
ஒரு பொது அதிகார அமைப்பிடமிருந்து, ஏதேனும் ஒரு தகவல் கோருகிற ஒரு நபர், தனது விண்ணப்பத்துடன் ரூ.10 (ரூபாய் பத்து) மதிப்புள்ள இந்திய அஞ்சலக ஆணை அல்லது வங்கி காசோலை அல்லது வங்கி கேட்போலை – ஒன்றை, அப்போது அதிகார அமைப்பின் கணக்கு அலுவலருக்கு வழங்கப்படும் வகையில், தகவல் கோருவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகச் சேர்த்து அனுப்ப வேண்டும்.
சாதாரணமான நடைமுறைப்படி, பொது அதிகார அமைப்பினால் விண்ணப்பம் பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் ஒரு விண்ணப்பதாரருக்கு அவர் கோரும் தகவல் அளிக்கப்பட வேண்டும். அத்தகவல் ஒரு குறிப்பிட்ட நபரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பானதாக இருக்கும் பட்சத்தில், 48 மணி நேர அவகாசத்திற்குள், அவ்வாறு கோரப்படும் தகவல் வழங்கப்பட்டுவிட வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அதன் வடிவத்திலும், சாரத்திலும் மிகவும் உன்னதமான படைப்பாகும். கூடவே, தகவல் அறியும் உரிமைச் சட்டமும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மிகவும் உறுதுணையானதாகும்.
ஆனால், எந்த அழகிய வண்ணமாலையும், யார் கையில் இருக்கின்றது என்பதைப் பொறுத்தே, அது அணியப்படும் அல்லது குதறப்படும்.
ஊடகமும், நீதிமன்றங்களும் சுதந்திரம் இழந்து கையறுநிலையில் இருக்கும்போது, அரசியல் அமைப்புச் சட்டம் தவறான கைகளில் இருப்பின், அது, தொடர்ந்து அவ்வாறு இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது, மக்களின் கடமையாகும்.
மக்களே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் இறுதிக் காவலர்கள்.
மேலும், ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரம், இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ஐ அடிப்படையாய் கொண்டதாகும். முதலில், அது ஆங்கிலேயரின் நலன்களையும், பின்பு, மேலாதிக்கத்தினரின் உள்நோக்கங்களையும் கொண்டதாக இருந்தது. என்னதான், அம்பேத்கரோ பிறரோ திருத்த முயன்றாலும், சில நுணுக்கமான எதிர்மறை அம்சங்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், கண்களுக்குப் புலனாகாமல் மறைந்துள்ளன. ஆழமாய் ஆய்ந்து, அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியது, எதிர்கால சந்ததியின் கடமையாகும். அதற்கான ஆய்வுகளைத் தொடரவேண்டியது இளைய சமுதாயத்தின் உடனடி பணியாகும்.
Enable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in Ginger