Wednesday, September 30, 2020
மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்
“பனையும் முருங்கையும்"- ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்
“பனையும் முருங்கையும்"- ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்
-- விஜயலட்சுமி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி பிரிவின் சார்பாக “பனையும் முருங்கையும் - ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்” என்ற நிகழ்ச்சியை 23.9.2020 அன்று நடத்தியது. அந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு (ஆதிந) உயர்நிலைப்பள்ளி, சங்கரலிங்கபுரம், மாணவர்கள் பனை மற்றும் முருங்கையை நட்டு வைக்கும் நேரடி நிகழ்வு நடைபெற்றது. இம்மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து இயற்கைப் பாதுகாப்புப் பணியைச் செய்கின்றனர்.இந்நிகழ்வில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.இயற்கை பற்றிய தங்கள் கருத்துக்களை மாணவர்கள் நேரலையில் பகிர்ந்து கொண்டனர்.
சங்கரலிங்கபுரம் ஆசிரியர் திருமிகு. சி.மு. பாலச்சந்தர் ஐயா அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார். முனைவர்.க.சுபாஷிணி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் ஜெர்மனியிலிருந்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் திருமிகு.ஆனந்தி நெதர்லாந்திலிருந்தும், திருமிகு.நாறும்பூநாதன் நெல்லையிலிருந்தும், திருமிகு.ராஜேந்திரம், மேனாள் தலைவர், இலங்கை பனை அபிவிருத்தி மன்றத்திலிருந்தும் கலந்து கொண்டனர். அவர்கள் பனை பற்றிய தங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும்,இந்நிகழ்வில் முருங்கை பற்றிய கருத்துக்களை டாக்டர்.தேவி மதுரையிலிருந்து இணையம் வழியாக மாணவர்களோடு பகிர்ந்துகொண்டார்.
தமிழ் என்று சொல்லும் பொழுதும் அல்லது தமிழரின் வாழ்வைப் பற்றிப் பேசும் பொழுதும், பனை மற்றும் முருங்கையை நாம் மறந்திட இயலாது. பனை அதன் வேரின் மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்கும். பனையிலிருந்து நுங்கு, பதநீர், பனங்கற்கண்டு, பனைமிட்டாய் பனம்பழம் ஆகியவற்றைப் பெறலாம். இது மட்டுமல்லாமல் பல உயிரினங்களுக்குப் பனை இருப்பிடமாக அமைகின்றது.
திருமிகு. ஆனந்தி அவர்கள் யாழ்ப்பாணத்தின் பனைமரங்கள், பனையின் வேர்கள், ஆண் பனை மற்றும் பெண் பனை அதோடு பறவைகளின் இருப்பிடமாக இருக்கிறது என்பதையும் பனையின் வேறுபட்ட பெயர்களையும் விளக்கினார்.
திருமிகு. நாறும்பூநாதன் அவர்கள் புதிர்களோடு உரையைத் தொடங்கி வெற்றுப் பனை மரங்களோடு தாம் வளர்ந்தமையையும் பனை மட்டையிலிருந்து ஓலைகளை எடுத்து அதில் எழுத்துக்களைப் பதிவிட்டு முன்னோர்கள் நமக்குத் தந்தமையையும், பனை மரத்தில் ஏறும் முறைகளையும், சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். முனைவர்.க.சுபாஷிணி அவர்கள் கம்போடியாவின் பதநீர் பற்றி சில தகவல்களைக் கூறினார்.திருமிகு. ராஜேந்திரம் அவர்கள் பனையின் உபயோகங்களையும் பனை தமிழர்களோடு அடையாளமாக இருக்கிறது என்பதையும் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதையும் மிக விரிவாக எடுத்துரைத்தார்.
திருமிகு. நடராஜ் அவர்கள் பனையானது மருந்தாகவும் நெடுங்காலத்துக்கு வைத்திருக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது என்பதை விளக்கினார். திருமிகு.வேலுப்பிள்ளை அவர்கள், பனை அபிவிருத்திக்காகச் செய்து கொண்டிருக்கின்ற பல செயல்களைத் தொகுத்துரைத்தார்.
முனைவர். தேவி அறிவுச் செல்வம் அவர்கள் கடந்த வருடம் சங்கரலிங்கம் பள்ளியில் நடத்தப்பட்ட அருங்காட்சியகம் பற்றியும் முருங்கையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் 32 வகைகளையும் பயன்களையும் அதில் அடங்கியுள்ள சிறப்புகளையும் எளிமையான முறையில் எடுத்துரைத்தார். முனைவர். கட்டளை கைலாசம் அவர்கள் மரங்களோடு தம் வாழ்க்கைமுறை அமைந்தமையையும் மரங்களை வழிபடுவதையும் முருங்கை கோயிலின் தல விருட்சமாக அமைந்திருப்பதையும் கிராமப்புற பாடல்களில் முருங்கையின் குறிப்புக்கள் வந்திருப்பதையும் முருங்கையைப் பற்றிய புத்தகங்கள் பற்றியும் , பள்ளிக்கு முருங்கை இவருக்கு வருமானம் தரக்கூடியதொன்றாக அமைந்தது என்பதையும் கூறினார். பங்கேற்பாளர்கள் பலரும் அவரவர் கருத்துக்களைப் பகிர்ந்தனர் இவ்வாறாக இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
or reload the browser
or reload the browser
மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்!
Tuesday, September 29, 2020
கவிதை என்ன செய்யும்!!!
Wednesday, September 23, 2020
பனை மரமே ! பனை மரமே !
- 12 இயல்களில் பனையின் பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
- 5000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பனை மரம் என்பது, தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது.
- தமிழக வரலாற்றின் தொன்மை தொடங்கி, கல்வெட்டு,சங்க இலக்கியங்கள், சைவம், கிறிஸ்தவம் காலனியம் ஊடாக, இன்றைய உலகமயம் வரை பனை பற்றிய செய்திகளை முழுமையாய் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
- 800க்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக்கொண்ட பனைக்கு, நூற்றிற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.
- தமிழகத்தில் 5.19 கோடி பனைமரங்கள் உள்ளன.
- இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் இது 50 விழுக்காடு.
- தமிழ்நாட்டிலும், தென்மாவட்டங்களில் தான் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முதலிடம்.
Monday, September 21, 2020
முருங்கை
முருங்கை
—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
தாவரவியல் பெயர் - மொரிங்கா ஒலிபெரா (Moringa oleifera)
குடும்பப் பெயர்- மொரிங்கேசியே (Moringaceae)
இக்குடும்பத்தில் 33 வகைகள் உள்ளன. அதில் 13 வகைகள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. முருங்கை மரமானது பூத்துக் காய் காய்க்கும் இருவித்திலைத் தாவரம் ஆகும். இம்மரமானது சுமார் 12 மீட்டர் உயரம் வரை விரைவில் வளரக் கூடியதாகும்.
முருங்கை பெயர்க் காரணம்:
முறி என்பது ஒடிதல், உடைதல் முறிப்பது எளிதில் உடையக் கூடியதாக இம்மரம் இருப்பதால் முருங்கை எனப் பெயர் வந்ததாகத் தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.இம்மரமானது எளிதில் முறியக் காரணம் இம்மரத்தில் நார் திசுக்கள் காணப்படுவதில்லை. இம்மரத்தின் பூர்வீகம் இந்தியா, இமயமலை அடிவாரத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. முருங்கை மரமானது 2000 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களிலும் கூட வளரக்கூடியது. இம்மரத்திற்குக் குறைந்த அளவு நீரே தேவைப்படுகிறது. இவை விதை மற்றும் குச்சியை ஊன்றி வைப்பதன் மூலம் வளர்கிறது.
வேறு பெயர்கள்:
முருங்கை (தமிழ்) , நுக்கே (கன்னடம்), முனகா (தெலுங்கு), முரிங்கா (மலையாளம்).
முருங்கை மரத்தில் உள்ள வேதிப்பொருள்கள்:
பீனாலிக் அமிலங்கள், பிளேவனாய்டுகள், குளுக்கோசினோலேட், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A,B,C,D,E , கரோட்டினாய்டுகள், ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து கொண்டுள்ளது.
குறிப்பாக பென்சைல் குளுக்கோசினோலேட் அதிக அளவில் வேரிலும், குளுக்கோ மோரிஜினின் அதிக அளவு தண்டு, பூ மற்றும் விதையில் காணப்படுகிறது. டேனின் என்ற வேதிப்பொருள் அதிக அளவு முருங்கை மரத்தின் இலையில் காணப்படுகிறது. விந்தணு வளர்ச்சிக்கு உதவும் ஜிங்க் ஆனது 31 மில்லிகிராம் வரை இருக்கிறது. குளுக்கோசினோலேட், ஐசோ தாயோ சயனேட் , கிளைசிரால்_1-9- ஆக்டடிகனோஏட் போன்ற புற்றுநோய்க்கு எதிரான வேதிப்பொருட்களும் முருங்கையில் நிறைந்து காணப்படுகின்றன.
சத்துக்கள்:
ஆரஞ்சில் இருப்பதைவிட ஏழு மடங்கு அதிக அளவு விட்டமின் C யும், கேரட்டில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிக அளவு விட்டமின் A யும், பாலில் இருப்பதை விட 17 மடங்கு கால்சியமும், தயிரில் இருப்பதை விட 9 மடங்கு புரதமும், வாழைப்பழத்தில் இருப்பதை விட 15 மடங்கு பொட்டாசியமும், ஸ்பினாச்சில் இருப்பதை விட 25 மடங்கு இரும்புச் சத்தும் முருங்கையில் உள்ளது. மேலும்; ஒரு தேக்கரண்டி அளவுள்ள முருங்கை இலை பொடியில் 14 சதவீதம் புரதம், 40 சதவீதம் கால்சியம், 23 சதவீதம் இரும்பு மற்றும் சிறிதளவு விட்டமின் A உள்ளது.
முருங்கையைப் பற்றிய பழமொழிகள்:
1. வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி.
2. பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்
3. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
இலக்கியத்தில் முருங்கை:
அகநானூற்றில் முருங்கை பற்றிய குறிப்பு வருகிறது.
"சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்குசினை
நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலம் கடுவளி எடுப்ப"
- மாமூலனார், அகநானூறு.
பொலிவற்ற பாதைகளை உடைய வறண்ட நிலத்தில், முருங்கை மரத்தில் ஆடும் கிளைகளிலுள்ள வெள்ளைப் பூக்களைச் சுழற்றியடிக்கும் கடுமையான காற்று மேலெழும்புகிறது.
"நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை"
- சீத்தலைச்சாத்தனார்
முருங்கை பூக்கள் கடும் காற்றில் அடித்து கடலலையின் நீர்த்துளிகள் சிதறுவது போல உதிர்வதாக என்று தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலங்கட்டி மழைத்துளி போலப் பூக்கள் உதிரும் எனவும், நீரில்லா வறண்ட நிலத்தில் உயர்ந்த முருங்கை மரம் வெள்ளிய பூக்களோடு நிற்கும் எனவும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்களில் முருங்கை மரம் குறிக்கப்படுவதால் பாலை நிலத்திற்குரிய மரம் என்பது தெரிய வருகிறது. மேலும், முருங்கை பாலை நிலத்து மரம் என்பதைக் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது நூலின் மூலமும் அறிய முடிகிறது.
கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நண்ணியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)
இருந்துறங்கி வீயும் இடம்.
- திணைமாலை - 91
மருத்துவப் பயன்கள்:
இம்மரத்தின் பூ, விதை, வேர், இலை, பட்டை, தண்டு என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. மருந்தாக்கியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்ட முருங்கையின் மருத்துவப் பயன்களில் சில:
1. இலையில் இருக்கும் பிளேவனாய்டுகள் டைப் 1 டைப் 2 சர்க்கரை நோயைச் சரி செய்வதற்கும் ஆஸ்துமா, மலேரியா, ரத்தக்கொதிப்பைச் சரி செய்யவும், ஐசோதயோ சயனேட் , குவார்செட்டின் என்ற வேதியியல் பொருள் புற்றுநோயை எதிர்த்தும்
2. வேர், பட்டையில் இருக்கும் ஆல்கலாய்டுகள் மற்றும் மோரிஜினைன் உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் இதயத்தை வலு சேர்ப்பதாகவும்
3. பூவில் இருக்கும் அமினோ அமிலங்கள் கொழுப்பைக் குறைக்கவும் சிறுநீரக பிரச்சனையைச் சரி செய்யவும்
4. விதையில் இருக்கும் பென் எண்ணை ஹைப்பர் தைராய்டு மற்றும் கவுட் நோயைச் சரி செய்யவும்
5. விதை நெற்றில் இருக்கும் நார்ச்சத்து, ஒலியிக் அமிலம் லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்றவை கல்லீரல் மற்றும் மண்ணீரலை வலுப்படுத்தவும்
6. முருங்கையில் தனித்துவமிக்க வேதியியல் மூலக்கூறாக குளுக்கோசினோலேட் உள்ளது. இது ஐசோ தயோசயனேட் ஆக மாறி நரம்பு சம்பந்தமான குறைபாட்டினை தீர்க்கவும்
7. விதை நெற்றில் உள்ள நியசிமிசின் மற்றும் குளுக்கோமொரிஜின் என்ற வேதிப் பொருள் புற்றுநோயின் வீரியத்தைக் குறைப்பதாக மருந்தாக்கவியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
8. விதையில் உள்ள 7 ,12 டைமீத்தைல் பென்ஸ் ஆந்ரசீன் சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கும்
9. இலையில் உள்ள பைட்டோ ஸ்டீரால் எனப்படும் ஸ்டிக்மா ஸ்டீரால், சிட்டோ ஸ்டிரால், கேப்ஸ்டீரால் போன்றவை பிரசவத்திற்கு பின்னான பால் சுரப்பை அதிகப்படுத்துவதாகவும்
10. விதையில் இருக்கும் ஈபாக்சைடு ஹைட்ரோலேஸ் என்சைம் ஆனது பாலுணர்வைத் தூண்டவும், ஆண்மை குறைபாட்டைச் சரி செய்வதற்காகவும் பயன்படுவதாக மருந்தாக்கியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
முருங்கையின் வேறு பயன்கள்:
சத்துப் பயிராகவும், இலை மற்றும் விதை விலங்கு தீவனமாகவும், மரப்பட்டையானது நீல நிறச் சாயம் தயாரிக்கவும், வேலியாகவும், உரமாகவும், எரிவாயுவாகவும் பயன்படுகிறது. விதையானது நீரினை சுத்தம் செய்வதற்காகவும், விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது உணவு மற்றும் கேச தயாரிப்பு பொருள்களில் மணமூட்டியாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm
or reload the browser
Wednesday, September 16, 2020
உன் சிரிப்பு
Monday, September 14, 2020
தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்
இனவாதம், இனத்தூய்மைவாதம்: நூரம்பெர்க் நகர நாசி கால அடையாளங்கள் சொல்லும் செய்திகள்!
Saturday, September 12, 2020
காலதேவன் வழிபாடு
Wednesday, September 9, 2020
ஆ. கார்மேகக் கோனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து
ஆ. கார்மேகக் கோனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து
- தேமொழி
'அறிவு நூல் திரட்டு' (இரண்டு தொகுதிகள்), 'ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்', 'இதிகாசக் கதாவாசகம்' (இரண்டு தொகுதிகள்), 'கார்மேகக் கோனார் கட்டுரைகள்', 'கார்மேகக் கோனார் கவிதைகள்', 'கண்ணகி தேவி', 'காப்பியக் கதைகள்', 'செந்தமிழ் இலக்கியத் திரட்டு' போன்ற நூல்களையும்; மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் ஆராய்ச்சி, மூவருலா ஆராய்ச்சி போன்ற ஆராய்ச்சி நூல்களையும்; நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவரும்; பேராசிரியர் என்றும், ஆசான், செந்நாப்புலவர், சிறப்புரை வித்தகர் என்றும் போற்றப்பட்டவருமான; அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கார்மேகக் கோனார்.
கீழுள்ளது பேராசிரியர் கார்மேகக் கோனார். அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து:
தென்னருயிர் போல் வளர்த்த செந்தமிழ்த்தா யேயுனது
பொன்னடியை யாம்வணங்கிப் புகழ்ந்துநனி வாழ்த்துதுமே
உலகிலுள்ள மொழிகளுள்ளே உயர்தனிச்செம் மொழியாக
இலகிமிகச் சீர்படைத்த இருந்தமிழ்த்தாய் வாழ்த்துதுமே
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே மொழிகளுள்ளே
முன்றோன்றியும் மூவா மொழியரசி! வாழ்த்துதுமே
பல்மொழிகள் தமையீன்றும் பகரும்இளம் பருவநலம்
அல்காத தமிழ்க்கன்னி அன்னையுன்னை வாழ்த்துதுமே!
உதவிய தளம்:
கார்மேகக் கோனார் கவிதைகள், பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார், பக்கம் 9
https://upload.wikimedia.org/wikipedia/commons/0/03/கார்மேகக்_கோனார்_கவிதைகள்.pdf
மற்றும் கருத்து- சி. பா. சே
or reload the browser
or reload the browser