Saturday, July 20, 2019

அசோகனின் கிர்னார் பாறைக்கல்வெட்டில் சங்ககாலத் தமிழ் அரசர்——    துரை.சுந்தரம்


முன்னுரை:
            அண்மையில் முகநூல் பகுதியில், முனைவர் பவானி அவர்கள் (கல்வெட்டியல் துறை), கிர்னாரில் அமைந்துள்ள இரண்டாம் பாறைக்கல்வெட்டு பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில், கல்வெட்டில் கூறப்பட்ட முதன்மைச் செய்திகளோடு, அதன் சிறப்புச் செய்தியாக ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். அசோகரின் இணைக்காலத்தில் சங்ககாலத் தமிழ் மன்னர் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான அகச்சான்றாகக் கல்வெட்டின் பாடம் அமைந்துள்ளது என எழுதியிருந்தார். மேற்படிப் பாறைக்கல்வெட்டு, பிராகிருத மொழியில் (அசோக)பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டின் பாடத்தைத் தமிழ் எழுத்துகளால் எழுத்துப் பெயர்ப்பு (Transliteration)  வடிவாக்கி வெளியிட்டிருந்தார்.  வடபுல மக்களின் ’வர்க்க’ எழுத்துகளின் மிகச் சரியான ஒலிப்பைத் தமிழ் எழுத்துகள் வாயிலாகக் காட்டுவது கடினம். ஆகவே, பல்லவ கிரந்த எழுத்துகளில் ‘ஸ’, ‘ஜ’, ‘ஹ’  ஆகியவற்றை மட்டிலும் கையாண்டிருக்கிறார். அசோகனின் இந்தக் கல்வெட்டினைப் பற்றிச் சற்றுக் கூடுதலாகச் செய்திகளை அறியும் தேடுதலில் கிடைத்த செய்திகளையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.முனைவர் பவானி அவர்களின் முகநூல் பகிர்வு:
அசோகரின் கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு
[முனைவர் மா.பவானி, உதவிப் பேராசிரியர், கல்வெட்டியல் துறை]

அசோகரது கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு குஜராத் மாநிலம் கத்தியவாரில் கிடைக்கப்பெற்ற முக்கியமான ஒரு கல்வெட்டாகும்.

அரசன்: அசோகன்
வம்சம்: மௌரியர்
காலம்: கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
மொழி: பிராகிருதம்
எழுத்து: அசோகன் பிராமி
நோக்கீடு : Inscriptions of Asoka by D.C. Sircar, 1957, Corpus Inscriptionum Indicarum

அசோகர் கல்வெட்டு பாடம் (தமிழில்):
1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பியதஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்

செய்தி:
            அசோகர் வழக்கம்போல் இக்கல்வெட்டிலும் தேவனுக்குப் பிரியமானவன் என கவுதம் குறிப்பிடப்பெறுகின்றார். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான சேர, சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர்யோன அரசரான அன்டியோகஸ் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகைச் சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும் பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் பரிபோக்யமாக, சுபமாக வாழவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.

முக்கியத்துவம்:
            இக்கல்வெட்டில் தமிழகத்தில் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

            இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் (பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் வாழ்ந்தது விளங்கும்.

            தமிழக வரலாற்றை குறிப்பாகச் சங்க காலத்தை பொ.ஆ.8ஆம் நூற்றாண்டு என மிகவும் பின்னோக்கிக் கொண்டு செல்லும் “டிக்கன்” போன்ற அறிஞர்களின் கருத்துக்களைத் தவறானவை என இக்கல்வெட்டு கொண்டு மெய்ப்பிக்கலாம்.

            தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி தமிழ் அரசர்களின் சிற்றரசர்களாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவு.

            அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

குஜராத்-கத்தியவார்-கிர்னார்:
            குஜராத் மாநிலத்தின் கத்தியவார் பகுதியைச் சேர்ந்த கிர்னார் (GIRNAR) என்னும் ஊரில் அமைந்துள்ள பாறைக்கல்வெட்டு அசோகனின் பாறைக்கல்வெட்டுகளில் இரண்டாவதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாறைக்கல்வெட்டின் பாடம் (வாசகம்), ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), கிர்னார் (GIRNAR), தவுலி (DHAULI), ஜவுகதா (JAUGADA)  ஆகிய ஐந்து இடங்களிலும் ஒன்றுபோல் பொறிக்கப்பட்டுள்ளது. சிறு சிறு சொற்கள் மாறுபடுகின்றன. கல்வெட்டின்  முதன்மைச் செய்தி:
            மனிதருக்கும், விலங்கினங்களுக்கும் ஒன்றுபோல் மருத்துவ உதவி அளிக்கப்படவேண்டும் என்னும் அசோகனின் முதன்மை நோக்கத்தைக் கல்வெட்டு இயம்புகிறது. எனவே, ஆதுல சாலைகள் அமைப்பதற்கான அசோகனின் ஆணை என்றே இதைக் கொள்ளலாம்.  அதற்கான மருந்துச் செடிகள் (மூலிகைச் செடிகள்), மூலங்கள் (ROOTS), பழமரங்கள் ஆகியன மருத்துவ உதவி அளிக்கப்படும் இடங்களில் அமையவேண்டும்; அவ்வாறு இவை அவ்விடங்களில் இல்லாத போது, அவை வேறிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுப் பயிரிடப்படல் வேண்டும். பெருவழிகளில், மனிதர்க்கும் விலங்கினங்களுக்கும் பயன் தருகின்ற வகையில் மரங்கள் நடப்படுதல் வேண்டும்; மேலும், அப்பெருவழிகளில் மனிதர்க்கும் விலங்குகளுக்கும் பயன்படுகின்ற கூவல்கள் (கிணறுகள்) தோண்டப்படுதல் வேண்டும். இந்த ஆணையைத் தெரிவிக்கும் அசோக மன்னன் ’பியதசி” என அழைக்கப்படுகிறான். அவன் கடவுளின் அன்பைப் பெற்றவன். 

எங்கெல்லாம் மருத்துவச் சாலைகள்?
            அசோகன் வென்றுகொண்ட நாட்டுப்பரப்புகளிலெல்லாம் இந்த மருத்துவ உதவி அமையவேண்டும் என்று கல்வெட்டு கூறுவதோடு வேறு சில நாட்டுப் பகுதிகளிலும் இம்மருத்துவ அமைப்பு செயல்படவேண்டும் என்று கூறும் வகையான் சங்ககாலத்தமிழ் மன்னர்களின் பெயர்கள், இலங்கையின் நாட்டுப் பெயர், யவன அரசன் அந்தியாகோவின் பெயர் ஆகியன இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. இக்குறிப்பில், சோடா, பாண்டாசதியபுதகேதலபுத ஆகியோர் காணப்படுகின்றனர்.

கல்வெட்டில் காணப்பெறும் பிற அரசர்கள்-
சோடா, பாண்டாசதிய புத, கேதல புத:
            இக்கல்வெட்டினை, பிரின்செப் (PRINSEP), வில்சன்  (WILSON) என்னும் மேலை நாட்டு அறிஞர் இருவர் படித்துப் பொருள் அறிந்துள்ளனர். அவர்களுள் பிரின்செப் என்பார், அசோகனின் மேற்படி அரசாணை அறிவிப்பானது அசோகன் வென்ற நாட்டுப் பரப்பு அனைத்திலும் (CONQUERED PROVINCE) மற்றும் நம்பிக்கைக்குரிய  (FAITHFUL) அரசர்களின் ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது என்பதாகக் குறிப்பிடுகிறார். நம்பிக்கைக்குரிய அரசர் வரிசையில் மேற்படி சோடா, பாண்டாசதியபுதகேதலபுத மற்றும் தொலைவில் இருக்கும் தாம்பபண்ணி (THANBAPANNI) என்னும் இலங்கை  (பிரின்செப், CEYLON  என்று குறிப்பிடுகிறார்) ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள். மேலும், ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS)  என்னும் கிரேக்க அரசனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியும் குறிப்பிடப்படுகிறது.


            இப்பெயர்களின் சரியான பாடம்  சோழா, பாண்டியா, சதியபுத்ரகேதலபுத்ர ஆகிய அரசர் என்றும், தாம்பபனி நாடு என்றும் கன்னிங்காம் (CUNNINGHAM) குறிப்பிடுகிறார். இவ்வரசர்கள், அசோகனின் ஆட்சி எல்லையில் அமைந்த நாடுகளின் தலைவர்கள் என்பதும் அவர் தருகின்ற குறிப்பு.  முதலிரண்டு பெயர்கள், இந்திய நாட்டின் தென்கோடியில் அமைந்த ஆட்சிப்பகுதிகள்தாம்பபனி என்பது ’சிலோன்’ தீவு; கிரேக்கர் இதைத் ’தாப்ரொபனே’  (TAPROBANE) என்று அழைப்பர். கேதலபுத்ர என்பது மேலைக்கடற்கரையின் கேரளாவைக் குறிக்கும். சதியபுத்ர என்னும் பெயர் யாரைக் குறிக்கும் என்பது உறுதியாகவில்லை.  ஆனால், லாசன் (LAASSEN) என்பார் சதியபுத்ர என்னும் பெயர் பிடா/பிதா (PIDA) எனப்படும் பாண்டியனின் பௌத்தப்பெயராகும் எனக்கருதுகிறார். கோதாவரி ஆற்றுப்பகுதியில் அமைந்திருந்த பைத்தான் (BAITHANA or PAITHAN)  பகுதிக்கு மேற்குக் கரையிலிருந்த சாதினி (SADINI) என்பவரைக் குறிக்கும் என்பது கன்னிங்காம் (CUNNINGHAM) அவர்களின் கருத்தாக உள்ளது. இதற்குச் சான்றாக அவர் சுட்டுவது தாலமியின் வரைபடமாகும் (PTOLEMY’s MAP).  

            இவர்கள் கடற்கொள்ளையர் என்னும் கருத்தும் உள்ளது. கோதாவரிப்பகுதியில் வழங்கும் ஆந்த்ரி பைரேட்டி (ANDRI PIRATAE) என்னும் பெயரையும் நோக்குகையில், சாதினி (SADINI), சாதவாகனர் (SADAVAHANS), சாதகர்னி (SATAKARNIS) ஆகிய மூன்று பெயர்களும் ஆந்த்ரி (ஆந்திரர்) என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் எனலாம். அசோகன் காலத்தில் ஆந்திரர் ஒரு வலுவான நாட்டை ஆண்டவர்கள் என்பதைக் கன்னிங்காம், தாம் படித்த ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI) கல்வெட்டுகள் (அசோகனின் 13-ஆம் பாறைக் கல்வெட்டு) வாயிலாக நிறுவியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். நாசிக் கல்வெட்டு ஒன்றில், சாதகர்னி என்பது சாதவாகன என்று எழுதப்பட்டுள்ளது.  சாதகர்னி என்பதே தாலமியின் நூலில் சாதனி என மருவி வந்துள்ளது. ’பெரிப்ளூஸ்’  (PERIPLUS) நூலில் காணப்படும் ’சரகனோஸ்’ (SARAGANOS)  என்னும் சொல் சாதவாகனரையே குறிக்கும்.

சதியபுத -  அதியமான்:
            சதியபுத என்பது மேற்குறித்தவரையெல்லாம் சுட்டாது என்பதும், அதியமான் என்னும் குறுநில மன்னனையே குறிக்கும் என்பதும் பின்னாளில் நிறுவப்பட்டுள்ளது. ”அதிய” என்னும் தமிழ்ச் சொல் வட இந்தியச் சாயல் பெறும்போது “சதிய” என மாற்றம் பெறுவது இயல்பு. அதியமான், தொண்டைமான், மலையமான் போன்ற தமிழ்ச் சொற்களில் காணப்பெறும் ”மான்” என்னும் சொல் “மகன்” என்னும் பொருள் ஏற்றுப் பிராகிருத மொழியில் “புத” என்று வழங்கியிருத்தல் வேண்டும். இச்சொல் சமற்கிருத வடிவம் பெறும்போது “புத்ர” என அமையும். பிராகிருதச் சொல்லான “தம்ம” என்பது சமற்கிருதத்தில் “தர்ம” என அமைவதை ஒப்பிடுக. சமண->ஸ்ரமண, சுத்த->சூத்ர ஆகிய சொற்களையும் இவ்வகையில் ஒப்பீடு செய்யலாம். விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் அமைந்த குகைத்தளத்தில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகளால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று அதியமானைப் பற்றியதாகும். 1987-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பயிற்சி மாணவரான  கே.செல்வராஜ், தனது கள ஆய்வின்போது இக்கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அப்போதைய துறை இயக்குநர் இரா. நாகசாமியால் இது படிக்கப்பட்டுத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படத்துடன் கட்டுரையாக நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறப்பு வாய்ந்த அரிய கல்வெட்டு இது.” வரலாற்றை வரையறை செய்யத் துணை நின்ற சிறப்புடைய கல்வெட்டு இந்த ஜம்பைக்கல்வெட்டாகும்.  ஜம்பை-அதியமான் கல்வெட்டு:
கல்வெட்டுப்பாடம்:
சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி


            அசோகனின் கல்வெட்டில் இடம்பெறும் சதியபுத என்பது மேற்படி ஜம்பைக் கல்வெட்டில் ’சதியபுத’ அடைமொழியோடு கூறப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சியையே குறிக்கிறது என்னும் செய்தி நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியருக்கு இணையாக ஒரு குறுநில மன்னனான அதியனும் அசோகன் போன்றதொரு பேரரசனால் சுட்டப்பெறுகிறான் என்பது அதியனின் சிறப்பு நிலையைக் காட்டுகிறது.

            கல்வெட்டில் வரும் பாண்ட என்னும் சொல்லை வில்சன்  (WILSON), பலய (பழய?) என்று படித்துள்ளார். ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் பெயர் யோன என்கிற யவன ராஜா என்று குறிக்கிறார். கல்வெட்டிலும் “அந்தியகோ (நாம) யோன ராஜயே”  என்னும் தொடர் உள்ளது.  இந்திய நாட்டிலிருந்த சேர, சோழ, பாண்டிய, அதிய அரசரை அசோகன் சுட்டுவது எதற்காக? தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாட்டுப்பரப்பு மட்டுமல்லாது தன் எல்லையில் தனியாட்சியில் இருக்கும் இந்தத் தமிழரசர் நாட்டிலும் மருத்துவம் சார்ந்த பணிகள் நடக்க வேண்டும் என்று அசோகன் விழைந்தான் என்று கொள்ளலாமா? அவ்வாறெனில், அசோகன் தமிழரசர்களோடு ஒரு பிணைப்பை ஏதோ ஒரு வகையில் கொண்டிருந்தான் எனக் கொள்ளலாம்.  அந்தத் தொடர்பு, அவன் அனுப்பிய தூது வழி ஏற்பட்டிருக்கக் கூடும். இத்தொடர்புக்கான சான்றுகள் எங்கேயும் கிடைத்துள்ளனவா? தெரியவில்லை.

ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) - கிரேக்க அரசன்:
            அசோகனின் கல்வெட்டில் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் கிரேக்க அரசனின் பெயர் இடம்பெறக் காரணம் என்ன? அசோகனின் மருத்துவம், மரம் நடுதல் ஆகிய பணிகள் எவ்வாறு கிரேக்க நாட்டுப்பகுதியோடு தொடர்புள்ளவை? இக்கேள்விகளுக்கு, கல்வெட்டில் இடம்பெறும் சில சொற்றொடர்களிலிருந்து விளக்கம் பெறுகிறோம். அசோகனின் ஆட்சிக்காலம் கி.மு. 268 – கி.மு. 232.  இக்காலத்திலிருந்த கிரேக்க அரசன் இரண்டாம் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) ஆவான். (கி.மு.261-கி.மு.246) இவனது ஆட்சிக்காலத்தில் கிரேக்க ஆட்சியின் ஒரு பகுதியாக ’கிரீக்கோ பாக்ட்ரியா’ (GRECO BACTRIA) என்னும் நாட்டுப்பகுதி விளங்கியது என அறிகிறோம். இப்பகுதியை  இரண்டாம் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) சார்பில் அவனுடைய சாமந்தர்கள் ஆட்சி செய்தனர் என அறிகிறோம். இந்த சாமந்தரின் ஆளுகையிலிருந்த ’கிரீக்கோ பாக்ட்ரியா’ (GRECO BACTRIA) தற்போதைய வடக்கு ஆப்கானிஸ்தான் ஆகும். இது அசோகனின் ஆட்சிப்பகுதியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளதால் கல்வெட்டில் இந்தப் பகுதியையும் அசோகன் சேர்த்திருக்கிறான் எனலாம். அசோகன் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் கிரேக்க அரசனுடன் உறவு/தொடர்பு கொண்டிருந்தான் என்னும் கருத்து காணப்படுகிறது.  இதற்குச் சான்றாகக் கல்வெட்டில் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) பெயரும் தொடர்ந்து இப்பெயரோடு சாமந்தர் அரசர் பற்றியும் குறிப்பிட்டுள்ளதைக் கொள்ளலாம்.கல்வெட்டு வரிகள்:
அந்தியகோ (நாம) யோன ராஜயே வாபித ஸ  அந்தியக ஸ சாமினம் ராஜனோ சவத

            இவ்வரிகளில் உள்ள  ”அந்தியக ஸ ஸாமினம் ராஜ” என்னும் தொடர் சாமந்தரின் ஆட்சியைக் குறிக்கிறது எனலாம். ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), ஜவுகதா (JAUGADA) ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுப் பொறிப்புகளில் ‘சாமந்த’  என்னும் சொல்லே எழுதப்பட்டுள்ளமை உன்னுதற்குரியது.

தம்பபண்ணி:
            அடுத்து, ”தம்பபண்ணி”  என்னும் சொல் இலங்கையைக் குறிக்கிறது என்று கன்னிங்காம் (CUNNINGHAM) சுட்டுகிறார்.  தம்பபண்ணி அல்லது தாம்பபண்ணி என்னும் சொல் தாமிரவர்ணி என்னும் சொல்லின் பாலி வடிவமாகும். தாம்ரபர்ணிதாம்பபண்ணி எனத் திரிந்தது. தாமிரம் அல்லது செம்புக் கனிமத்தின் நிறத்தைக் குறிக்கும் இச்சொல், பழங்கால இலங்கையில் அமைந்த முதல் அரசைக்குறிக்கும். ராஜரதா அரசு என்னும் பெயரும் இதற்கிருந்தது. இவ்வரசின் தலை நகரின் பெயரும் தாம்ரபர்ணியாகும். இவ்வரசின் அரசன் விஜயன் என்பானின் ஆட்சிக்காலம் கி.மு. 543 – கி.மு. 505 என்றும், ஓர் அரசன், ஓர் அரசு என்பதோடு இவ்வரசு முடிந்தது எனவும் ஒரு வரலாற்றுக் குறிப்புள்ளது.
கல்வெட்டில் காணப்பெறும் சில பிராகிருதச் சொற்கள்:
விஜிதம் -   அசோகன் வெற்றி கொண்ட பரப்பைக் குறிப்பதாகக் கொள்ளலாம். பிரின்செப் CONQUERED PROVINCE எனப் பொருள்கொள்ள இச்சொல்லையே அடிப்படையாகக் கையாண்டிருக்கலாம். ஆனால், அவர் குறிப்பிடும் FAITHFUL என்னும் சொல்லுக்கு நேரான பிராகிருதச் சொல் எது எனத் தெரியவில்லை. அதுபோலவே அவர் ‘countries bordering on the dominions of Asoka’  என்று தமிழகத்தைச் சுட்டுகின்ற பொருளுக்குரிய பிராகிருதச் சொல் கல்வெட்டில் எது எனவும் தெரியவில்லை.

சோடா -  சோழா என்பதன் வடமொழிச் சாயல். சிறப்பு ‘ழ’கரம் வடவர் ஒலியில் ‘ட’  என ஒலிப்பதுண்டு. இச்சொல் அனைத்துக் கல்வெட்டுகளிலும் ‘சோடா’ என்றே பொறிக்கப்பட்டுள்ளது.

பாண்டா -   பாண்டா என்பது பாண்டியரைக் குறிப்பதாகப் பிரின்செப் எழுதுகிறார். இரண்டாம் பாறைக்கல்வெட்டின் பாடம் (வாசகம்), ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), கிர்னார் (GIRNAR), தவுலி (DHAULI), ஜவுகதா (JAUGADA)  ஆகிய ஐந்து இடங்களிலும் ஒன்றுபோல் பொறிக்கப்பட்டுள்ளது; சிறு சிறு சொற்கள் மாறுபடுகின்றன என முன்னரே குறிப்பிட்டுள்ளோம். பாண்டா அல்லது பாண்ட என்னும் சொல் அவ்வகையானது. கிர்னார் கல்வெட்டில் ‘பாண்டா’ என்று எழுதப்பட்டிருப்பினும் தவுலியைத் தவிர்த்து மற்ற மூன்று இடங்களில் ‘பாண்டிய’  என்றே எழுதப்பட்டுள்ளது. 

கேதலபுத -  சேர அரசரைக்குறிக்கும் இச்சொல் அனைத்துக் கல்வெட்டுகளிலும் ஒன்றுபோலவே பொறிக்கப்பட்டுள்ளது. கேரளபுத என்பதன் மருவிய வடிவமே கேதலபுத.

சதியபுதோ -  ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI) கல்வெட்டில் மட்டும் ’ஸதியபுத்ர’  என எழுதப்பட்டுள்ளது. மற்றவற்றில் சதியபுதோ.

தம்பபண்ணி -  இச்சொல் ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI) கல்வெட்டில் தம்பபனி எனவும், கால்சி (KHALSI) கல்வெட்டில் ’தம்பபன்னி’ எனவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கிர்னார் (GIRNAR) கல்வெட்டில், தம்பபண்ணி என ‘ட’ண்ணகரத்தில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இச்சொல்லின் ‘பண்ணி’  என்னும் எழுத்துச் சேர்க்கை,  ”ப + அனுஸ்வாரம் + ணி” என்னும் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.  அனுஸ்வாரம் என்பது எழுத்தல்ல. வடமொழி எழுத்துகளில் ‘ட’கர வர்க்க எழுத்துகளில் இரண்டாவதான ‘ட’  எழுத்தின் சிறிய வடிவமே அனுஸ்வாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ‘ட’கரம் ஒரு பெரிய வடிவ வட்டம் என்றால், அனுஸ்வாரம் என்பது ஒரு சிறிய வடிவ வட்டமாகும். ஓர் எழுத்தின் முன்னொட்டாக அது எழுதப்பெறும்போது அவ்வெழுத்தின் இரட்டிப்பாகவோ, அல்லது மெல்லோசையாகவோ ஒலிக்கும். அவ்வாறே, ”ப + அனுஸ்வாரம் + ணி” என்பது “பண்ணி”  என அமைந்தது. தமிழில் க-ங,  ச-ஞ, ட-ண த-ந ஆகிய இசைவெழுத்துகளைப் போல அனுஸ்வாரம் பயன்படுகிறது எனவும் கூறலாம். எடுத்துக்காட்டாக “ச + அனுஸ்வாரம் + கு”   என்பது ”சங்கு”  என அமையும்.

த்வெ -  இரண்டு என்னும் பொருளுடைய சொல்; இரண்டு வகையான மருத்துவம் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவது. மனிதர்க்கும், விலங்குகளுக்கும் ஆனது.

சிகீச்ச -   நாம் தற்போது தமிழிலும் பரவலாகப் பயன்படுத்தும் ‘சிகிச்சை’ என்னும் வடசொல்.

மநுஸ -  மனித(ன்)  என்பதன் மாற்று வடிவம்.  மனுசன் என்று நாட்டுப்புறங்களிலும் வழங்கும் எளிய சொல்.

பஸு -  பசு என நாம் வழங்கும் மற்றோர் எளிய சொல்.  ஆனால், விலங்கு என்னும் பொருளுடையது. முனைவர் பவானி அவர்கள் தம் கட்டுரையில் ”பஸீ”  என எழுதியுள்ளார்.

ஒஸுதாநி -  ஔஷத என்னும் வடசொல்லின் பிராகிருத வடிவமாகலாம். முனைவர் பவானி அவர்கள் தம் கட்டுரையில் “ஔஸீதானி”  என எழுதியுள்ளார். அசோகன் பிராமியில் ‘ஔ’ எழுத்து இல்லை எனத்தோன்றுகிறது. உறுதி செய்யவேண்டும்.

மூலாநி -  மூலம் – நிலத்தடியில் இருக்கும் வேர் அல்லது கிழங்கைக் குறிக்கும் சொல்.  இங்கே மருத்துவ வேரைக் குறிக்கிறது எனலாம்; பிரின்செப் அவர்களும் ‘ROOTS’ என்றே குறிப்பிடுகிறார்.

கூபா -   பிரின்செப் ‘WELL’ -  கிணறு எனக்குறிக்கிறார்.  கூவல் என்பது தமிழிலும் கிணற்றைக் குறிக்கும் ஒரு சொல் என்பது கருதுவதற்குரியது.  (கொங்கு நாட்டில் காஞ்சிக்கோவில் என்றோர் ஊர் உள்ளது.  இப்பெயர் ‘காஞ்சிக்கூவல்’  எனபதன் திரிபாகலாமோ என்னும் ஐயம் எழுகிறது.)

யோன ராஜா -   யோன என்பது ‘யவன’  என்பதன் இன்னொரு வடிவம். கிரேக்க, ரோம நாட்டாரை ‘யவனர்’ என்று பழங்காலத்தில் தமிழர் அழைத்தனர். சங்ககால  நூல்களில் ‘யவனர்’ பற்றிய குறிப்புகள் உள்ளன.

துணையாக  நின்றவை:
1      CORPUS INSCRIPTIONUM INDICARUM – Vol-I by A. CUNNINGHAM
2      தமிழ் - பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை; முதல் பதிப்பு-2006.
3      இணையம் - விக்கிப்பீடியா

தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.


---

No comments:

Post a Comment