Saturday, July 13, 2019

பச்சையப்ப முதலியார் கல்வெட்டு


——    துரை.சுந்தரம்


முன்னுரை:
            அண்மையில் திருச்சி சென்றிருந்தபோது கிடைத்த சிறிதளவு கால இடைவெளியில் திருச்சிக்கருகில் இருக்கும் திருவானைக்கா செல்ல இயன்றது. கோயிலைச் சற்றுப் பரபரப்புடன் சுற்றியபோது அதன் மேற்கு கோபுரத்தின் வாயிலில் பெண்மணி ஒருவர் கீரை விற்றுக்கொண்டிருந்ததைக் கண்டேன். அவர் அருகிலே இருந்த இரண்டு பொருள்கள் கருத்தைக் கவர்ந்தன. ஒன்று, நடுகல் சிற்பம். இன்னொன்று ஒரு கல்வெட்டு. அவற்றின் தோற்றத்தை மறைத்துக்கொண்டதாய்ச் சுற்றிலும் முருங்கைக் கீரையும் அகத்திக் கீரையும்.  அந்தப்பெண்மணியிடம் பேசிக் கீரைகளைச் சற்று அகற்றிய பின்னர் நடுகல்லின் தோற்றமும், கல்வெட்டின் முழு உருவமும் புலப்பட்டன. நடுகல் சிற்பம் ஒரு நவகண்டச் சிற்பம்.

திருவானைக்கா மேலக்கோபுரம் - ஒரு தோற்றம்

நவகண்டம்:
            கோயிலின் இறைவர்க்கு நேர்ந்து கொண்டதற்காகவோ அன்றி அரசனின் உயிர்க் காப்புக்காகவோ ஒரு வீரன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் தன் உடலை ஒன்பது பகுதிகளில் அரிந்து வைக்கும் ஒரு செயலைத் தொல்லியல் நவகண்டம் என்னும் சொல்லால் குறிக்கிறது. உடலின் ஒன்பது இடங்களில் அரிந்துகொள்வதைச் சிற்பமாக வடித்துக் காண்பிக்க இயலாததால், பொதுவாகத் தலையை அரிந்துகொள்ளும் செயலைக் காட்டும் வகையிலேயே நவகண்டச் சிற்பங்களை அமைத்தார்கள் எனலாம். நவகண்டம் கொடுக்கும் வீரன், உடம்பின் எட்டு இடங்களை வாளால் அரிந்துகொண்ட பின்னர் இறுதியாகத் தலையை அரிந்துகொள்கிறான் என்னும் கருத்து ஏற்புடையது. கண்டம் என்பது கழுத்தைக் குறிக்கும். கழுத்து, தலைக்கு ஆகுபெயராய் இங்கு அமைந்தது எனலாம். எனவே, நவகண்டச் சிற்பம், தலைப்பலி என்றும் அழைக்கப்பட்டது. பலி என்பது ஒன்றைப் படைப்பதைக் குறிப்பது. ஆனால், பரவலாகக் “காவு/சாவு”  என்னும் பொருளில் வழங்குகிறது. கோயிலில் ஸ்ரீபலி என்னும் ஒரு சடங்கு நடைபெறுதலை இன்றும் காணலாம். கோயிலின் சுற்றாலையில் ஆங்காங்கே இறைவர்க்கு அமுது (உணவு) படைத்தலே ஸ்ரீபலி எனப்படுகிறது. (எதிர்பாராத் தீமைச்சூழலில் நிகழும் உயிரிழப்பைக் குறிக்க இன்றைய நாளிதழ்ச் செய்திகளில், ”பலி”  என்னும் சொல் கையாளப்பெறுகிறது. இந்தச் சொல்லாட்சி பிழையாகவே தோன்றுகிறது. யாரும் பலி ஆவதில்லை. "பலி” என்னும் சொல்லுக்குத் தலைமாறாகச் [பதிலாக] "சாவு”  என எளிமையாக அனைவர்க்கும் தெரிந்த ஒரு சொல்லைப் பயன்படுத்தலாம். (இக்கருத்தை எழுதும் நாளிலேயே, “இந்து-தமிழ் திசை” நாளிதழில், “பலி”யைத் தவிர்த்து நல்ல தமிழில் “உயிரிழப்பு” எனச் செய்தியில் குறிப்பிட்டிருந்தமை வியப்போடு மகிழ்ச்சியைத் தந்தது.) நவகண்டம் அல்லது தலைப்பலியில் வீரன் தன்னுயிரையே கொடுக்கிறான் என்பதால் “பலி”.  

நாளிதழில் ‘பலி”யைத் தவிர்த்து நல்ல தமிழில் “உயிரிழப்பு”

திருவானைக்கா - நவகண்டச் சிற்பம்

பூட்கை: 
            ”மனித உடம்பில் இது மோதிரம் அணிகிற இடம், இது பூ வைத்துக்கொள்கிற இடம், இது காப்புப் போட்டுக்கொள்கிற இடம் என்று அணிபவற்றுக்கும், அணிவதற்கு ஏற்பவும் பகுதிகள் இருப்பதுபோல் கொள்கைகளைப் பூணுவதற்கு இதயம் இடமாக இருக்கிறது. ”கழற்றாமல் பூணுவது” என்ற பொருள் நயம் கிடைக்கும்படி கொள்கைக்குப் ”பூட்கை”  (பூணுவது) என்று பழைய தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள்.”  என்று தமிழாசிரியரும் எழுத்தாளருமான  நா.பார்த்தசாரதி குறிப்பிடுகிறார்.  அதுபோல, ஒரு கொள்கையைப் பூண்ட வீரர்கள், தாம் பூண்ட கொள்கையைக் கடைப்பிடிக்கத் தவறிவிடும் நிகழ்வு ஏற்படுகையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் வீரச்செயலே ”பலி”  ஆகிறது.  இவ்வகையாகப் பூட்கை உடைய வீரர் பெருமக்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதைக் காணுகிறோம்.

சோழர் படைகளில் கைக்கோளர் படை:
            சோழர் படைகளில், கைக்கோளர் படை என்னும் ஒரு படைப்பிரிவு இருந்துள்ளது. அரசர்க்கு அணுக்கமாக இருந்து அரசர், அரசு இரு பாலார்க்கும் நேரும் பேரிடரிலிருந்து காப்பதாகப் ”பூட்கை” (உறுதி) பூண்டு காக்கும் வீரர்கள் கொண்ட படை கைக்கோளர் படை என்னும் பெயரால் அழைக்கப்பெற்றது. பூட்கை என்னும் கொள்கையை இவ்வீரர்கள் கைக்கொண்டதால் இவர்கள் “கைக்கோளர்”  எனப் பெயர் பெற்றனர் என்பது பொருத்தமுடையதே. கொள்ளுவது கோள் ஆகின்றது.  சங்க இலக்கியங்களிலும், தொறுப்பூசல் நடுகல் கல்வெட்டுகளிலும் ”ஆகோள்”  என்னும் சொல் ஆளப்பெற்று வருவதை இங்கு நினைவு கூரலாம். இக் கைக்கோளப்படையினர்  தம் காவல் பணியில் இணையும்போது பூணுகின்ற ஓர் உறுதி மொழி பற்றித் திருவரங்கத்துக் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இக்கல்வெட்டு, கோயிலின் நான்காம் சுற்றாலையில் (பிராகாரம்) உடையவர் திருமுற்றத்துக்கு (சந்நிதி) எதிரில் அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் 1930-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, இக்கல்வெட்டு கைக்கோளர் படை முதலி ஒருவன் பூட்கைக் கடப்பாடாக ஏற்கும் உறுதிமொழியைப் பதிவு செய்கிறது என்று குறிப்பிடுகிறது. கல்வெட்டுப் பாடம் கீழே:கல்வெட்டுப் பாடம்:
1    ஸ்வஸ்திஸ்ரீ வீற்றிருந்தாந் சேமனாந அகளங்க நாடாழ்வா(ர்)
2    ற்கு திருவரங்கத்து கைக்கோள முதலிகளில் நாயநான அழகிய ம
3    ணவாள மாராயநேந் இவற்கு பிந்பு சாவாதே இருந்தேநாகில் எந்
4    மிணாட்டியைப் பறையற்குக் குடுத்து எங்களம்மைக்கு நானே
5    …………….
 -  A.R. 267- 1930 

            அகளங்க நாடாள்வான் என்னும் ஒரு தலைவனுக்கு வேளைக்காரனாகப் பணிசெய்யும் அழகிய மணவாள  மாராயன் என்பான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் பான்மையைக் கல்வெட்டு கூறுகிறது. கைக்கொண்ட கடமையிலிருந்து வழுவினால் கடும் பழியை எதிர்கொள்வேனாக என்று தன்னையே கடுமையாகத் தண்டித்துக்கொள்ளும் கைக்கோளனை இங்கு காண்கிறோம். கல்வெட்டில், ”இவற்கு பிந்பு சாவாதே இருந்தேநாகில்” என்னும் தொடரால், கைக்கோளன், அவனது தலைவனுக்கு ஊறு நேர்ந்து தலைவன் இறந்த பின்னர் தான் உயிர் வாழமாட்டான் என்னும் உட்பொருள் சுட்டப்படுவதை அறியலாம். ஒரு வேளை, சாவாது இருந்தால் மேற்சுட்டிய பழி தன்னைப் பற்றட்டும் என்பதாக அவன் கூற்று அமைகிறது.  (அரசர் அன்றி உயர்நிலைத் தலைவன் ஒருவனுக்கும் கைக்கோளர் படை இருந்தது என்று இக்கல்வெட்டால் அறிகிறோம்.)

சோழர் படைகளில் வேளைக்காரர் படை:
            சோழர் படைகளில் வேளைக்காரர் படை என்னும் ஒரு படைப்பிரிவும் இருந்துள்ளது.  இவர்களும் கைக்கோளப் படையினரைப்போன்றே உறுதி பூண்டவர் ஆவர். வேளைக்காரர் படையைப் பற்றிப் “பொன்னியின் செல்வன்” நூலில் கல்கி அவர்கள் வர்ணனை செய்திருப்பதை அந்நூலைப் படித்த யாரும் மறப்பதற்கில்லை. மேற்குறித்த கல்வெட்டை அடுத்து வரும் இன்னொரு கல்வெட்டில் வேளைக்காரப்படையைச் சேர்ந்த கைக்கோளன், தலைவன் இறந்துபடும் அதே வேளையில் உடன் சாவேனாகுக என்பதை அழுத்தமாகச் சொல்கிறான். தலைவன் இறக்கும் அதே வேளையில் உடன் சாவதால் இவ்வீரர்கள் “வேளைக்காரர்”  என்னும் பெயர் பெறுகிறார்கள் என்பது பெறப்படும்.  இக்கல்வெட்டின் பாடம் வருமாறு:


கல்வெட்டின் பாடம்:
ஸ்வஸ்திஸ்ரீ வீற்றி[ரு]ந்தா[ந்] சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு திருவரங்
2  கத்துக் கைக்கோளரி லரியாநாந கிடாரத்தரையனேந் இவற்கு உட
3   ந் [வே]ளையாகச் சாவக்கடவேநாகவும் இவற்கு பிந்பு சாவாதே இருந்
4  தேநாகில் எந் மிணாட்டியை பறையற்கு [கு]டுத்து எங்களம்மைக்கு நா
5  நே மிணாளநாவேந்
-  A.R. 268- 1930 

            பின்னாளில்,  இந்தக் கைக்கோள முதலிகள் படைத்தொழிலை இழந்து மாற்றுத்தொழில்களில் ஈடுபட்டனர் என்று சோழர் வரலாறு பற்றிப் படிக்கையில் அறிகிறோம். காலப்போக்கில், முதலிகள் என்னும் சிறப்புச் சொல் ஒரு குடிப்பிரிவைக் குறிப்பதாய் மாற்றம் பெறுகிறது.

திருவானைக்கா நவகண்டச் சிற்பம்:
            மேற்குறித்த விளக்கங்களுடன்,  திருவானைக்கா நவகண்டச் சிற்பத்தைப் பார்க்கையில், இச்சிற்பமும் ஒரு கைக்கோள வீரனாக இருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.  அல்லது கோயிலுக்காகத் தலையை அரிந்துகொண்ட வீரனாகவும் இருக்கக்கூடும்.  இந்த நவகண்டச் சிற்பத்தில், வீரன் தன் இடது கையால் தலையை அழுத்திப்பிடித்துக்கொண்டு வலது கையால் வாளொன்றைக் கழுத்தின் பின்புறமாக வைத்து அரிந்துகொள்ளும் நிலையில் தோற்றமளிக்கிறான். உடல் அளவை ஒப்பிடுகையில் சற்றே பெரிய அளவில் முகப்பகுதி அமைந்துள்ளது எனலாம். தடித்த மூக்கும் வாயும். செவிகளும் நீண்டு தடித்துள்ளன. கழுத்தில், கைகளில், கால்களில் அணிகலன்கள் உள்ளன. ஆடை அமைப்பு முழங்காலுக்குச் சற்று மேல் பகுதியோடு நின்றுவிடுகிறது. இடைப்பகுதி ஆடையில் கச்சும் நீண்ட தொங்கலும் காணப்படுகின்றன. கச்சில் நன்கு செருகப்பட்ட குறுவாள் காணப்படுகிறது.  சிற்பம் தெளிவாக உள்ளது. சிற்பத்தின் மீது எண்ணெய் பூசி, நெற்றியில் சந்தனம்-குங்குமம்  பொட்டு வைத்துத் தலைப்பகுதியில் மலரும் இலையும் சூடி மக்கள் வழிபட்டுவருவதும் தெரிகிறது. ஒரு வகையில் வழிபடுதல் இல்லையேல், புறக்கணிப்பாலேயே இந்தத் தொல்லியல் எச்சம் காணாமல் போகும் வாய்ப்பு மிகுதி.

நவகண்டச்சிற்பம்-மற்றோர் எடுத்துக்காட்டு
கீழப்பழுவூர் காளிகோயிலில் உள்ள நவகண்டச் சிற்பம்

பச்சையப்ப முதலியார் கல்வெட்டு:
            தொடக்கத்தில் கூறப்பட்ட இரண்டாவது பொருள் கல்வெட்டு. ஒரு பெரிய பலகைக் கல்லில் பொறிக்கப்பட்டது. பலகைக் கல்லின் மேற்புறம் ஆரம்போல வளைவாக வடிக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டின் பாடம், இக்கல்வெட்டு பச்சையப்ப முதலியார் பற்றிய கல்வெட்டு எனக்கூறுகிறது. அதன் பாடம் பின்வருமாறு :

பச்சையப்ப முதலியார் கல்வெட்டு

கல்வெட்டுப்பாடம்:
1    உ
2    ஜம்புகேசுவரம்
3    காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியா
4    ருடைய தர்மம் சகலருக்கும் பிரசி
5    த்தமாய்த் தெரியும் பொருட்டும் நிர
6    ந்தரமான ஞாபகத்தின் பொருட்டு
7    ம் செய்யும் விளம்பரமாவது இற
8    ந்துபோன புண்ணிய புருஷரா
9    கிய மேற்படி பச்சையப்ப முதலி
10  யாரவர்களாலே வைக்கப்பட்
11  டிருக்கும் லக்ஷம் வராகனுக்கு வ
12  ரப்பட்ட வட்டிப்பணத்தில் நி
13  ன்றும் ஜம்புகேசுவரத்தில் ஸ்ரீஅ
14  கிலாண்டேசுவரி அம்மன் சன்னி
15  தியில் அர்த்த சாமக்கட்டளைத்தர்
16  மமானது கனம் பொருந்திய சூப்ரீ
17  ம் கோர்ட்டுக் கவர்ன்மெண்டு அதி
18  காரிகளால் தர்ம விசாரணைக் கர்
19  த்தர்களாக நியமிக்கப்பட்டு சென்
20  னபட்டணத்திலிருக்கும் இந்துச
21  பையாரவர்களுடைய உத்தரவின்படி
22  சாலிவாகன சகாப்தம் 1764ம்
23  வரு(ஷ)த்துக்குச் சரியான சுபகிருது வரு(ஷம்முத
24  ல் வரு(ஷம்) 1க்கு 120 வராகன் செலவுள்ள
25  தாக நடந்துவருகின்றது மேற்படி மூலதன
26  ம் சூப்ரிம் கோர்ட்டு அதிகாரிகளுடைய
27  உத்தரவின்படி சென்னபட்டண
28  த்திலிருக்கும் ஜென[ர]ல் திரேசரியென்
29  னும் கவர்ன்மெண்டாருடைய பொ
30  க்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கி
31  ன்றது மேற்படி தர்மம் கிரமமாக நடவாவி
32  ட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர்
33  கள் மேற்படி சபையாரவர்களு
34  க்குத் தெரிவிக்க வேண்டுவது

கல்வெட்டுச் செய்திகள்:
            கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு சாலிவாகன ஆண்டு 1764. இதற்குச் சமமான கிறித்தவ ஆண்டு கி.பி. 1842-ஆம் ஆண்டாகும். கல்வெட்டில் குறிக்கப்பெற்ற தமிழ் வியாழ வட்ட ஆண்டான சுபகிருது ஆண்டு 1842 ஏப்ரல் மாதத்தில் பிறக்கிறது. எனவே, கல்வெட்டில் குறிக்கப்படுகின்ற காலக்கணக்கு மிகவும் சரியாக அமைகிறது.  திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மனின் அர்த்தசாமப் பூசை வழிபாட்டுக்கென பச்சையப்ப முதலியார் ஒதுக்கியுள்ள நூறாயிரம் வராகன் முதலீட்டிலிருந்து பெறுகின்ற வட்டிப்பணம் 120  வராகன் செலவழிக்கப்படும் வகையில் நடைபெற்றுவருகின்ற இந்தத் தன்மம் சரியாக நடக்கவில்லை எனில், பச்சையப்ப முதலியார் அறக்கட்டளை சார்பாக இயங்கிவரும் இந்து சபையாரிடத்தில் தெரிவிக்கவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. பச்சையப்ப முதலியார் ஒதுக்கியுள்ள நூறாயிரம் வராகன் பணம் முதலீடாகச் சென்னையிலிருக்கும் “GENERAL TREASURY”  என்னும் அரசுக் கருவூலத்தில் வைப்புக் கணக்கில் உள்ளது. “GENERAL TREASURY”  என்னும் ஆங்கிலச் சொல் தமிழில்  ” ஜெனரல் திரேசரி”   என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அக்காலத்து மொழிப் பயன்பாட்டினைக் காட்டுகிறது.

வராகன்:
            தமிழகம் விஜயநகரர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், திருமலைதேவராயர் காலத்தில்  (கி.பி. 1570-ஆம் ஆண்டளவில்) வெளியிடப்பெற்ற பொன் நாணயமே வராகன். வராகம், விஜயநகரரின் ஆட்சி முத்திரையாகும். இந்நாணயம் வராக உருவம் பொறித்த காசு ஆகும். இது முப்பத்திரண்டு குன்றிமணி எடையுள்ளதாகவும், மூன்றரை ரூபாய் மதிப்புள்ளதாகவும் குறிக்கப்படுகிறது. பச்சையப்ப முதலியார் அறக்கட்டளை சார்பில் நூறாயிரம்  வராகன் பணம் அரசுக் கருவூலத்தில் மூலதனமாக வைக்கப்பட்டு அதனின்றும் பெறப்படுகின்ற வட்டிப் பணம், கோயில்களுக்கும், கல்விச்சாலைகளுக்கும் செலவழிக்கப்பட்டது.

பகோடா என்னும் வராகன் நாணயம்

பச்சையப்ப முதலியார்- 1754-1794:
            பச்சையப்ப முதலியார் பற்றி ஓரளவு அனைவர்க்கும் தெரியும். ஏழைக்குடும்பத்தில் பிறந்து, சென்னை வணிகச் செல்வரான நாராயண பிள்ளையின் அரவணைப்பில் வளர்ந்து துபாஷியாக உயர்ந்தவர். ”துபாஷ்” என்னும் சொல் “த்வி பாஷ்”  என்னும் வடசொல்லின் திரிபு. இரண்டு மொழிகள்  என்னும் பொருளுடையது. ஆங்கிலேய வணிகருக்கும் தமிழ் நாட்டு வணிகருக்கும் பாலமாக ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் தெரிந்த ஒருவர் செயல்பட்டமையின் அவர் “துபாஷி” (இரு மொழிகள் அறிந்தவர்) என அழைக்கப்பட்டார். நார்ட்டன் நிகோலஸ் என்னும் வணிகருக்குப் பச்சையப்ப முதலியார்தாம் “துபாஷி”.  காலப்போக்கில், வணிகம் பற்றிய கூர்ந்த அறிவுகொண்ட பச்சையப்ப முதலியார் வணிகத் தரகராகச் செயல்பட்டுப் பெரும் செல்வராகத் திகழ்ந்தார். கோயில் சார்ந்த கொடைகளுக்கு நானூற்றைம்பது ஆயிரம் ரூபாயும், இந்துக்குழந்தைகளும், இளைஞரும் ஆங்கிலக் கல்வி பெற எழுநூறு ஆயிரம் ரூபாயும் வழங்கி வள்ளல் எனப்பெயர் பெற்றார்.  "உயில்” எழுதிய முதல் தமிழர் அவரே என்று கருதப்படுகிறார். அவரைபற்றிய விரிவான செய்திகளை உள்ளடக்கி அவரது அறக்கட்டளையான “PACHAIYAPPAS TRUST BOARD”  என்னும் நிறுவனம் அவர்களது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.  அதன் சுட்டியாவது : http://pachaiyappastrustboard.org/index.php/founder/pachaiyappa-mudaliar   

பச்சையப்ப முதலியாரின் உருவச் சிலை - சிதம்பரம் கோயில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பச்சையப்ப முதலியார் கல்வெட்டு:
            தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1970-ஆம் ஆண்டு, முனைவர் இரா.நாகசாமி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்ட ”சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்”  நூலில் (இரண்டாம் பதிப்பு 2009), திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒரு தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பதிவாகியுள்ளது. அக்கல்வெட்டின் பாடம், திருவானைக்கா கல்வெட்டின் பாடத்தையே கொண்டுள்ளது. கொடைச் செய்தி மட்டிலும் வேறுபடுகிறது. நூலில் காணப்படும் கல்வெட்டின் படங்கள் கீழே காண்க.

திருவல்லிக்கேணி கோயிலில் பச்சையப்ப முதலியார் கல்வெட்டு 

            இந்தக் கல்வெட்டில், 120 வராகன் வட்டிப்பணம், பார்த்தசாரதி கோயிலுக்கு வருகை தரும் வெளியூர்ப் பயணிகளுக்கு உணவு வழங்குவதற்கும், நூறாயிரம் வராகன் பணத்துக்கு மேல் இருக்கும் பணத்தின் வாயிலாகக் கிடைக்கும் வட்டிப்பணம், இந்துப் பிள்ளைகளுக்கு இந்நாட்டுச் சாத்திரங்களையும் ஆங்கில மொழியையும் கற்பிப்பதற்குக் கொடையாக அளிக்கப்படுகிறது என்னும் செய்தி கூறப்படுகிறது.  ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஐந்து வராகன் ஊதியம் பெறுவதும், மற்ற கல்வியைக் கற்பிக்கும் (தமிழ்) ஆசிரியர் பத்து வராகன் ஊதியம் பெறுவதும் குறிப்பிடத்தக்கவை.

திருவையாற்றில் காணப்படும் பச்சையப்ப முதலியரின் கல்வெட்டு:ஆவுடையார் கோயில் கல்வெட்டு:
            ஆவுடையார் கோயிலிலும் பச்சையப்ப முதலியாரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இணையத்தில் கிடைக்கப்பெற்ற அக்கல்வெட்டின் பாடமும் மேற்கண்ட கல்வெட்டுகளின் பாடத்தையே கொண்டுள்ளது. ஆவுடையார் கோயிலின் மாலைச் சந்தி வழிபாட்டுக்காக இக்கொடை அளிக்கப்பட்டுள்ளது. கொடைப்பணம் அதே 120 வராகன்.

ஆவுடையார் கோயில்-கல்வெட்டுப் பாடம்:
இறந்துபோன புண்ணிய புருஷராகிய மேற்படி பச்சையப்ப முதலியார் அவர்களால் வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட வட்டிப் பணத்தினின்றும் ஆவுடையார்கோயிலில் சாயரக்ஷ கட்டளைத் தர்மமானது கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764-ஆம் வருஷத்து சரியான சுபகிருது முதல் வருஷம் 1க்கு 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மேற்படி மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி (General Treasury) என்னும் கவர்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் மேற்படி சபையாரவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது. 

கல்விக்கொடையாளர்நன்றி : இணைய தளங்கள்.  பச்சையப்பர்  தொடர்பான படங்கள், வராகன் படம் , ஆவுடையார் கோயில் கல்வெட்டுச் செய்தி ஆகியவற்றுக்கு.தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.

                 No comments:

Post a Comment