Wednesday, July 31, 2019

உ. வே. சா. வும் ஓலைச் சுவடிகளும்

உ. வே. சா. வும் ஓலைச் சுவடிகளும்

 ~ முனைவர். வீ. ரேணுகா தேவி ~


முன்னுரை:               

          வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
          வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி
          வாழிய பல்லாண்டே.
          -   பெருஞ்சித்திரனார்

          கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை தமிழ் வளர்த்த சான்றோர் பலராவர். அவர்களுள் அளப்பரியத்  தொண்டினைப் புரிந்தவர் உ.வே. சாமிநாத அய்யரேயாவார்.  ஆழிப்பேரலைகள் அடுக்கடுக்காய் குவிந்து கடல் கோளால் சமுத்திரம் விசுவரூபமாய் எழுந்து, பரந்து விரிந்து கிடந்த இலெமூரியா கண்டம் எனும் தமிழர் தாயகத்தினை ஒருமுறையல்ல இருமுறை விழுங்கியது.  இந்தப் பேரழிவால் எண்ணில் அடங்காத தமிழ்ப்  பனுவல்களை உலகின் எந்த மொழியும் ஈன்றிடாத ஈடற்ற இலக்கியங்களை தமிழ்க்குலம் இழந்தது. மீந்திருந்த பழந்தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக, ஏடுகளாக இருந்தன அவற்றை எல்லாம் தேடி அலைந்து ஆய்ந்து நூல்களாகப் பதித்து தமிழ் மொழியின் விழுமியத்தைத் தரணியில் நிலைநாட்டியவர் உ.வே.சாமிநாத அய்யரே. அவருடைய தமிழ்த் தொண்டினை இக்கட்டுரையில் காண்போம்.

உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:

நூலின் பெயர் எண்ணிக்கை
எட்டுத்தொகை 8
பத்துப்பாட்டு 10
சீவகசிந்தாமணி 1
சிலப்பதிகாரம் 1
மணிமேகலை 1
புராணங்கள் 12
உலா 9
கோவை 6
தூது 6
வெண்பாநூல்கள் 13
அந்தாதி 3
பரணி 2
மும்மணிக்கோவை 2
இரட்டைமணிமாலை 2
இதர பிரபந்தங்கள் 4
80  நூல்கள்
          இதனைத்தவிர தொல்காப்பியம் ‘இளம்பூரணர் உரை”, சிறுபிரபந்தங்கள்(42), உரைநடை (19) நூல்கள் போன்றவற்றைப்  புத்தக வடிவில் பதிப்பித்துள்ளார்.

 உ.வே.சாவின் தமிழ்ப் பற்றும் பணியும்:
          உ.வே.சாவின் திருமணம் ஒரு விழாவினைப் போன்று நான்கு நாட்கள் நடைபெற்றது. அதனைப்பற்றி அவர் கூறும் போது இதில் எல்லாம் எனக்கு நாட்டம் இல்லை எனக்கு ஒன்றே ஒன்றில் தான் நாட்டம் உண்டு அதுதான் தமிழ். அதுவே எனக்குச் செல்வம் அதுவே என் அறிவு பசிக்கு உணவு என்றார்.

          1880  பிப்ரவரி 12 -1903 வரை கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியராகவும் 1903-1919 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். பின் 1924-1932 வரை அண்ணாமலை அரசர் நிறுவிய மீனாட்சி தமிழ் கல்லூரியில் தலைவராகச் சேவை செய்தார்.

உ.வே.சா இயற்றிய நூல்கள்:
          உ.வே.சா அவர்கள் ஓலைச் சுவடிகள் ஆய்வதற்கு முன் நீலி இரட்டைமணிமாலை, கலைமகள் துதி, ஆனந்தவல்லி பஞ்சரத்தினம், திருவேரக மாலை போன்ற நூல்களை இயற்றினார்.

முதல் புத்தகப் பதிப்பு:
          செவ்வந்திபுரத்திலுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய மடாலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் அவரைப்பற்றிப் பாடப்பெற்ற 86 பாடல்களின் திரட்டையே உ.வே.சா முதல் புத்தகமாக வெளியிட்டார். பின்பு தாமோதரன் பிள்ளையின் திருக்குடந்தைப் புராணம் என்ற நூலை   வெளியிட்டார்.

          மேற்காணும் புத்தக வெளியீட்டிற்குப் பின்னரே உ.வே.சா பழமையான தமிழ் நூல்களையும் திரட்டி வெளியிட வேண்டும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார் அவருடைய முதல் ஆராய்ச்சி சிந்தாமணி ஆராய்ச்சியே.

சிந்தாமணி ஆராய்ச்சி:
          1883ஆம் ஆண்டிற்குப் பின் உ.வே.சா.   சிந்தாமணி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டார். காரணம் உ.வே.சா.   சிந்தாமணியை ஆராய்ச்சி செய்த காலத்தில் சி.வை.தாமோதரன் பிள்ளை (வழக்கறிஞர்) சிந்தாமணியை ஆராய்ச்சி செய்தார். அவர் உ.வே.சாவிடம் உங்களுடைய முயற்சியை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது ஒன்று. மற்றொன்று  அஷ்டாவதானம் சபாபதி முதலியார் ஒரு நாள் உ.வே.சாவிடம் சிந்தாமணி ஒரு சமண காப்பியம், கடினமான நடையைக் கொண்டது அதனை ஆராய்ச்சி செய்த யாவரும் அவ்வாராய்ச்சியினை இடையிலேயே நிறுத்திவிட்டனர் என்று கூறியது.

          இவற்றைக் கேட்ட பின்னரே எப்படியாவது நாம் சிந்தாமணியைப் பதிப்பித்து சரித்திரம் படைக்க வேண்டுமென்றெண்ணி தீவிரமாகச் செயல்பட்டார்.  திருவாவடுதுறை மடத்தில் சிந்தாமணியின் பழைய பிரதிகள் இருப்பதாக அறிந்து அங்கு சென்று அப்பிரதிகளைப் பெற்றார். அப்பிரதிகள் கடினமான நடைகளோடு இருந்தன.

           பின்பு தஞ்சை விருஷபதாச முதலியார் வீட்டில் ஏடுகள் இருப்பதனை அறிந்து அங்கு சென்றார். அவர் ஒரு ஜைனர் உ.வே.சா ஒரு “இந்து” என்பதால் அவருக்குத் தரமறுத்தார். பின் உ.வே.சா.  அங்கிருந்த தனது நண்பர் துக்காராம் ஹோல்கார் என்பவரது உதவியோடு அங்கிருந்த 23பிரதிகளைப் பெற்றார், அதுவும் கடினமான நடையாக இருந்தது, ஆரம்பத்தில் அந்நூலைப் படிக்கும் போது பல தடுமாற்றம் கண்டார், ஆனாலும் சிரமப்படுவதில் அவருக்கு அலுப்புத் தோன்றவில்லை.

          பல சமணசமய பெரியவர்களிடம் சென்று அம்மத கோட்பாடுகள், சாத்திரங்கள் போன்றவற்றை நன்கு கற்றுத் தெரிந்துகொண்டு அவ்வாராய்ச்சியிலேயே தன்னை முழுவதும் ஒப்படைத்துவிட்டார்.

          கல்லூரியின் விடுமுறைக் காலங்கள் அனைத்தையும் சிந்தாமணி ஆராய்ச்சிக்கே செலவிட்டார். 1886ஆம் ஆண்டு சிந்தாமணி 144 பக்கங்கள் அச்சாகியிருந்தன. சிந்தாமணி அச்சிலிருந்தாலும் கூட வேறு ஏட்டுச் சுவடிகள் கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்றெண்ணி திருநெல்வேலி, மேலகரம் பயணம் செய்தார். அங்கு பிரதிகள் கிடைக்கவில்லை.

          செங்கோட்டை கவிராச பண்டாரம் வீட்டிலிருந்த ஏடுகள், கிருஷ்ணாபுரம், கடையநல்லூர் போன்ற ஊர்களில் கிடைக்கப்பெற்ற ஓரளவு பிரதிகளுடன் கும்பகோணம் வந்தடைந்தார்.

          இவற்றிற்கிடையே பல வகையான கவலைகள், இடையூறுகள்.    யாழ்ப்பாணத்திலிருந்து சிந்தாமணி பதிப்பிக்கப்பட்டு விட்டது என்று பொய்யான செய்தி பரவியது. ஆனால் அவற்றையும் எதிர்கொண்டார் உ.வே.சா.

          நெல்லை கால்டுவெல் கல்லூரியிலுள்ள குமாரசாமி பிள்ளையின் சிந்தாமணி கையெழுத்துப் பிரதி ஒன்றை அவரிடமிருந்து பெற்று தன்னுடைய ஆராய்ச்சியினை முடித்து அவ்வாண்டிலேயே சிந்தாமணியைப் பதிப்பித்து வெளியிட்டார்.

பத்துப்பாட்டு ஆராய்ச்சி:
          சீவக சிந்தாமணியைப் பதிப்பித்துவிட்டு மறுநாள் இரவு தூங்கி விழிக்கும் போது ஒருவர் அவர் முன்னேயிருந்து இந்தாருங்கள் பத்துப்பாட்டு என்று சொல்லி ஒரு ஏட்டினை கொடுத்தார் அவர் தான் வேலூர் வீரசைவராகிய குமாரசாமி அய்யர் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க பத்துப்பாட்டு ஆராய்ச்சியினை மேற்கொண்டார் உ.வே.சா.

          பத்துப்பாட்டு பிரதிகளைத் தேடி திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றார் உ.வே.சா அங்கிருந்த பழஞ்சுவடிக் கட்டுகளைப் புரட்டிப்பார்த்தார். ஏடுகளெல்லாம் மிகப்பழமையானவையாக இருந்தன. அங்கு பத்துப்பாட்டோடு எட்டுத்தொகை பிரதிகளும் கிடைத்தன. மேலும் புரட்டிப்பார்த்ததில் பதிணென்கீழ்கணக்குச் சுவடிகளும் கிடைத்தன.

          பத்துப்பாட்டின் பிரதிகளைத் தேடி நெல்லை மாவட்டத்திற்குச் சென்ற போது திருபாற்கடனாத கவிராயர் வீட்டில் ஏடுகளைத் தேடினார். அங்கு பத்துப்பாட்டு முழுவதற்குமான ஏடுகள் கிடைத்தன.

          ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில் லட்சுமண கவிராயர் வீட்டில் பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படையின் முதல் 7 பாடல்கள் இருப்பதனை தேடியெடுத்துப் பெற்றார். பத்துப்பாட்டின் மூலம் இல்லாத குறை மாத்திரம் நிரம்பாமலே இருந்தது. சென்னையிலுள்ள அரசு நூலகத்தில் 2 பிரதிகள் மட்டுமே இருந்தன. பின்பு மூலங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

          அவ்வாராய்ச்சியின் இடையிலேயே எட்டுத்தொகை ஆராய்ச்சியையும் மேற்கொண்டிருந்தார். குறிஞ்சிப்பாட்டில் 96 வகை மலர்களில் 4 மலர்களின் பெயர்கள் மற்றும் இல்லாமலிருந்து அவற்றைத் தேடி தருமபுர மடாலயத்திற்குச் சென்று அங்குள்ள சுவடிகள் மூலம் அதனைத் தீர்த்துக் கொண்டார்.

          பத்துப்பாட்டு மூலம் முழுவதினையும் தேடி அச்சுவடிகளையெல்லாம் தொகுத்து 1889 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்துப்பாட்டு முழுவதையும் புத்தக வடிவில் பதிப்பித்து வெளியிட்டார்.

          பின்பு இடைப்பட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1894ஆம் ஆண்டு எட்டுத்தொகை, புறநானூறு ஆராய்ச்சி தொகுப்புகளை வெளியிட்டார்.

வளையாபதி, குண்டலகேசி பற்றிய ஆராய்ச்சிகள்:
ஐம்பெருங்காப்பியங்களைத் தேடி புத்தகமாக்கிக் கொண்டிருந்த உ.வே.சா தன்னுடைய இளமைக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் வளையாபதி காப்பியம் அடங்கிய பழைய ஏட்டினை பார்த்திருக்கிறார். அப்போது அவருக்கு அதன்மீது நாட்டமில்லை. ஆனால் அவர் பத்துப்பாட்டு ஆராய்ச்சிக்குப்பின் அச்சுவடியினைத் தேடிச் சென்ற போது அம்மடத்தில் அச்சுவடியில்லை. அச்சுவடியை இழந்த துன்பத்தைப் பின்வருமாறு கூறினார் உ.வே.சா,

“கண்ணிலான் பெற்றிழந்தானென்வுயுந்தான்
கடுந்துயரம்”

தமிழ்நாடு முழுவதும் தேடியும் வளையாபதி, குண்டலகேசியைப் பற்றிய ஓலைச்சுவடிகள் உ.வே.சாவுக்குக் கிடைக்கவில்லை எனினும் வைசிகபுராணம், தக்காய பரணி போன்ற நூல்களில் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களை வைத்து இவ்விரு நூல்களைப்பற்றிய கருத்துகளைப் பின்வருமாறு உ.வே.சா விளக்கினார்.

வளையாபதி ஆசிரியர் பெயர் தெரியாத காப்பியம் நவகோடி நாராயணன் என்னும் வணிகனுடைய கதையை விளக்கக் கூடிய சமணக் காப்பியம். இது சோழர் காலத்தில் தோன்றியது என்றார்.

குண்டலகேசியின் 19 பாக்கள் மட்டும் கிடைக்கப்பெற்றிருந்த  காப்பியமாகும். இதன் ஆசிரியர் நாதகுத்தனார். இது பத்தரை (குண்டலகேசி) என்னும் பெண்ணின் வாழ்க்கையை உணர்த்தக் கூடிய காப்பியமாகும் என்றார்.

சிலப்பதிகார ஆராய்ச்சி:
1890ஆம் ஆண்டிலிருந்து சிலப்பதிகார ஆராய்ச்சியில் உ.வே.சா. ஈடுபட்டார். சிலப்பதிகார ஓலைச்சுவடிகளைத்தேடி உ.வே.சா நெல்லை, சேலம் முழுவதும் அலைந்தார். சேலம் இராமசாமி முதலியார் சிலப்பதிகார மூலமும் உரையுமடங்கிய கடிதப்பிரதி ஒன்று கொடுத்தார். பின்பு தாமோதரம் பிள்ளையவர்களுடைய மூலமும், உரைப்பிரதியும் கிடைத்தன.

கிடைத்த ஏடுகள் அவ்வளவையும் சேகரித்துப் பார்த்தார் அடியார்க்கு நல்லார் உரை ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தது. இயலிசை நாடகம் என்னும் முத்தமிழிலுள்ள பல நூல்களையும் மணியிலக்கணம், யோகம் முதலிய கலைநூல்களையும் அவர் அங்கங்கே மேற்கோள் காட்டுகிறார். நச்சினார்க்கினியாரிடம் காணப்படாத ஒரு நல்ல குணத்தை அடியார்க்கு நல்லாரிடம் கண்டார் மேற்கோள் காட்டும். நூலின் பெயரையும் சில இடங்களில் அதைப் பற்றிய வரலாற்றையும் அவர் எடுத்துச்சொல்கிறார். இது உ.வே.சாவின் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

குன்றக்குடி ஆதீனத்திலிருந்து மிதிலைப்பட்டி என்னும் ஊரிலிருந்து மணிமேகலை, சிலப்பதிகார மூலம் முழுவதும் அடங்கிய பழமையான ஓலைச்சுவடிகளை உ.வே.சாவுக்கு அனுப்பினர். அது அவருக்கு மேலும் பேருதவியாக அமைந்தது. மிதிலைப்பட்டி பிரதியை வைத்துக் கொண்டு பார்த்ததில் சிலப்பதிகாரம் பல இடங்களில் திருத்தமடைந்தது, பல இடங்களில் பாடல்களுக்குத் தலைப்புகள் இருந்தன. அந்தப் பிரதியை ஆராய ஆராய மிதிலைப்பட்டியின் சிறப்பும் உயர்ந்தது. அப்பிரதியை வைத்தே 30 காதைகளுடைய சிலப்பதிகாரத்தை உ.வே.சா பதிப்பித்து வெளியிட்டார். இது 1891இல் வெளியிடப்பட்டது.

மணிமேகலை ஆராய்ச்சி:
சென்னையில் அச்சாகிக் கொண்டிருந்த சிலப்பதிகார ஆராய்ச்சிக்குப் பின் உ.வே.சா. மணிமேகலை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்நூலில் பலவிதமான சிக்கல்கள் அவருக்கு உண்டாயிற்று இது எச்சமயநூல் என்பதே அவருக்கு முதலில் தெரியவில்லை. பின்பு ஒரு ஆசிரியர் மூலம் பௌத்த சமயநூல் என்பதைத் தெரிந்து கொண்டார்.

பின்பு பௌத்த மத ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழ் இலக்கியங்களில் வரும் பௌத்த மதக் கருத்துக்களைத் தேடிக் கொடுத்தார்.

வீரசோழியம், மானியர்வில்லியம்ஸ், மாக்ஸ்முல்லர், ஒல்டன்பர்க், ரைஸ்டேவிஸ் முதலியோர் இயற்றிய புத்தகங்களை எல்லாம் படித்து புத்தமதக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் தெரிந்துகொண்டார். பின் மணிமேகலை பிரதிகளைப் படிக்கத் தொடங்கினார்.

மணிமேகலையின் மூலம் மாத்திரம் 1891ஆம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையால் அச்சிடப்பெற்றது அந்தப்பிரதியையும் மிதிலைப்பட்டியில் கிடைத்த சுவடிகளையும் வைத்து மணிமேகலை ஆராய்ச்சியினை முடித்தார்.

பின்பு 1896ஆம் ஆண்டு (5.6.1896) அன்று வெ.நா. ஜூபிலி அச்சுக் கூடத்தில் அச்சிட்டு மணிமேகலையைப் பதிப்பித்து வெளியிட்டார் உ.வே.சா.

பிறநூல்கள்:
பத்துப்பாட்டு ஆராய்ச்சி முடிவடைந்தபோது ஆனன்தருத்திரேசர் இயற்றிய வண்டுவிடுதூது என்னும் பிரபந்தத்தையும் மாயூரம் ராமையர் இயற்றிய மயிலையந்தாதி என்பதையும் பதிப்பித்து வெளியிட்டார்.

குமாரசாமி செட்டியாருடைய விநாயகபுராணம், பூண்டி அரங்கநாத முதலியாரின் கச்சிக்கலம்பகம் போன்றவை அரங்கேறப் பேருதவி செய்தார் உ.வே.சா.

திருச்சிற்றம்பலக் கோவையின் உரையாசிரியரின் பேராசிரியர் என்ற உண்மையை வெளிக் கொணர்ந்தவர் உ.வே.சா.

ஆழ்வார்திருநகரியில் பெறப்பட்ட திருப்பூவன நாதருலா, மிதிலைப்பட்டியில் ஒரு கவிராயரிடமிருந்து பெறப்பட்ட பயங்கரமாலை மூவருலா போன்ற நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.

உ.வே.சா பழைய சுவடிகள் மூலம் தொகுத்த கொங்குவேள் மாக்கதையே “பெருங்கதை" என்பதையும் அது உதயணன் என்பவனது வரலாற்றைக் கூறும் நூல் என்பதையும் அடியார்க்கு நல்லான் உரையின் மூலம் தெரிந்துகொண்டு அதனைத் தொகுத்து ஒரு நூலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

பின்பு சுப்பிரமணிய தம்பிரான் இயற்றிய திருப்பெருந்துறை கட்டளை விசாரணை  என்னும் அத்தல வரலாற்றைப் பதிப்பித்து வெளியிட்டார். திருப்புகழ் பதிப்புக்கு பெரும் உதவி செய்தார் உ.வே.சா.

அகராதி:
அரும்பதங்களையெல்லாம் தொகுத்து அகராதியாக எழுதினார் உ.வே.சா. அரிய விஷயங்களை எல்லாம் ஒன்றாக்கி விஷய சூசிகை என்ற தலைப்பிட்டு தனியே ஓர் அகராதி சித்தம் செய்தார்.

இப்படியே நூலாலும் உரையாலும் தெரிந்த அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள் பெயர்களுக்குத் தனித்தனியே அகராதியும் அடியார்க்கு நல்லார் உரையில் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும் அபிதான விளக்கமும் எழுதி முடித்தார்.

உ.வே.சா. உரையாசிரியருங் கூட பழுத்துமுதிர்ந்த தன்னுடைய பிராயத்தில்(1937) குறுந்தொகைக்கு விரிவான உரை எழுதினார்.

1885ஆம் ஆண்டு திருவிடைமருதூர் தலவரலாற்றைச் சுருக்கி மத்தியார்ஜூன மான்மியம் என்ற பெயரில் எழுதினார்.

1906ஆம். ஆண்டு அரசியலார் இவருக்கு மகாமகோபாத்தியாயர் என்னும் பட்டத்தையும் 1932ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியும் சிறப்பித்தன.

உ.வே.சா. தன்னுடைய வரலாற்றை ‘என் சரிதம்’ என்ற பெயரிட்டு 1940 ஆண்டு ஆனந்த விகடனில் வெளியிட்டார். அது 122 அத்தியாயங்கள் வரை வெளியானது. அது அவருடைய 44 ஆண்டுக்கால அனுபவத்தை வெளிக்கொணர்ந்தது.

முடிவுரை:
இருளிலே நின்று ஒளியை நோக்கிச் சென்றது போலவும், அடர்ந்த காட்டிலே வழி தெரியாமல் தத்தளித்துப் பின்பு வழிகண்டு அமைத்தது போலவும், ஆழப்புதைந்து மண்ணோடு மண்ணாக மறைந்திருந்த தங்கத்தை வெட்டியெடுத்துக் கலப்பை அகற்றி எழிலணிகளை அமைத்து தமிழ்த் தாய்க்கு அணிந்தது போலவும் ஆயிற்று உ.வே.சாவின் தமிழ்த் தொண்டு.

1880 ல் தொடங்கிய தன்னுடைய ஓலைச்சுவடி ஆராய்ச்சியைத் தன்னுடைய இறுதிநாளான 1942 ஏப்ரல் வரை தொடர்ந்தார் என்பதில் ஐயமில்லை.முனைவர். வீ. ரேணுகா தேவி
மேனாள்  துறைத்தலைவர்
மொழியியல் துறை மேனாள் புலத்தலைவர்
மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-21.

No comments:

Post a Comment