— முனைவர் ச.கண்மணி கணேசன்
முன்னுரை:
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள் ஆவார். இவரது காலத்தில் தமிழகத்தில் நிலவிய பக்திநெறி காப்பியம் முழுவதிலும் பரந்து காணக் கிடைக்கிறது. இளங்கோவடிகள் சித்தரிக்கும் தமிழரின் பக்தி அக்காலச் சமுதாயநிலையைத் தெளிவாக்குகிறது. சிலப்பதிகாரம் இக்கட்டுரையின் ஆய்வெல்லை ஆகிறது. முதல்நிலைத் தரவுகள் சிலப்பதிகாரத்திலிருந்தும், இரண்டாம் நிலைத் தரவுகள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, மணிமேகலை முதலிய இலக்கியங்களிலிருந்தும் எடுத்தாளப் பட்டுள்ளன.தொகுத்தும் வகுத்தும் விளக்கும் மரபு வழிப்பட்ட பகுப்பாய்வுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
தமிழர் பக்தியில் கடவுளர் வழிபாடு:
தமிழக மக்கள் சிவன், முருகன், பலராமன், திருமால், இந்திரன், கொற்றவை, காமதேவன், நிலா, சூரியன், புறம்பணையான், நிக்கந்தன், இயக்கி, பாசண்டச் சாத்தன் முதலிய கடவுளரை வழிபட்டனர்.
புகார் நகரத்தில் சிவபெருமான், முருகன், பலராமன், திருமால், இந்திரன், காமன், நிலா, சூரியன், புறம்பணையான் (ஐயனார்), நிக்கந்தன், பாசண்டச்சாத்தன் ஆகிய கடவுளர்க்கு வழிபாடுகள் நிகழ்ந்தன.
மதுரை நகரத்தில் காலை முரசம் சிவன், திருமால், முருகன், பலதேவன் முதலிய கடவுளரை வழிபடும் இடங்களில் முழங்கின. (ஊர்.- அடி.- 7-14) கொற்றவைக்கும் வழிபாடு நிகழ்ந்தது. கண்ணகி மதுரை நகரத்தை விட்டு வெளியேறு முன் கொற்றவை வாயிலில் தன் பொற்றொடியைத் தகர்த்துச் சென்றாள். (கட்டு.- அடி.- 181-183) நகருக்குள் பிற தேவர்களும் வழிபடப்பட்டனர். கோவலன் தன் மனைவியின் சிலம்பைப் பொற்கொல்லனிடம் கொடுத்தனுப்பிய பின்னர் ஒரு தேவகோட்டச் சிறையகத்தில் காத்திருந்தான். (கொலைக்களக் காதை- அடி.- 105-126)
வஞ்சி மாநகரத்தில் சிவனுக்கும் திருமாலுக்கும் கோயில்கள் இருந்தன. செங்குட்டுவன் போருக்குக் கிளம்பும் முன்னர் சிவன் கோயிலில் வழிபட்டுப் பின்னர் திருமால் கோயிலிலிருந்து வந்த மாலையைப் பெற்றுக் கொண்டான். (கால்.- அடி.-61-63)
சங்க இலக்கியங்களில் மழுவாள் நெடியோன், முருகன், கொற்றவை, திருமால், பலதேவன், காமன் முதலிய வழிபாடுகள் சுட்டப்படுகின்றன. (மதுரைக்காஞ்சி- அடி- 455, பட்டினப்பாலை- அடி.- 35-36&154-155, பரிபாடல் திரட்டு- பா- 1& புறநானூறு- 58) மணிமேகலையிலும் சிவன், முருகன் வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன. (விழா.- அடி.- 54-55, மலர்வனம் புக்ககாதை- அடி.- 144-145)
தமிழர் பக்தியில் பூதவழிபாடு:
நகரங்களின் சதுக்கங்களில் பூதவழிபாடு இருந்தது. புகாரில் நான்குவழித் தடங்கள் சந்திக்கும் இடத்தில் சதுக்கபூதம் இருந்தமை பற்றிக் காண்கிறோம். (இந்திர.- அடி.- 63-67, கடலா.- அடி.- 7-13)
"காவல் பூதத்துக் கடைகெழு பீடிகை" என்பதால் இது காவல் தெய்வம் என்பது வெளிப்படை. இப்பூதம் இந்திரனது ஏவலின்படி சோழனுக்குத் துணை செய்து பொய்ச்சாட்சி கூறியவர்களைத் தன் பாசக்கயிற்றால் பிணைத்துப் புடைத்து உண்ணும். பட்டினப் பாலையும் (அடி- 57), மணிமேகலையும் இதே (விழா.- அடி.- 19-20) பூதத்தைச் சுட்டுகின்றன.
மதுரை மாநகரத்தில் நான்கு வருணங்கட்குரிய பூதங்கள் இருந்தன. கண்ணகி மதுரை மாநகரத்தை எரியூட்டிய போது அரசபூதம், அந்தண பூதம், வணிக பூதம், வேளாள பூதம் என்ற நான்கும் அந்நகரை விட்டு நீங்கின என்கிறார் இளங்கோவடிகள். இப்பூதங்களை அந்தந்த வருணத்தைச் சேர்ந்த மக்கள் வழிபட்டனர். (அழற்படு காதை)
தமிழர் பக்தியில் காவல் தெய்வ வழிபாடு:
பெருநகரங்களில் மக்கள் அந்நகரின் காவல் தெய்வத்தை வழிபட்டனர். மதுரை நகரின் காவல் தெய்வம் மதுராபதி ஆகும். மதுரை நகரம் எரிந்த போது மதுராபதித் தெய்வம் அந்நகரின் அவலநிலை குறித்துக் கண்ணகியிடம் பேசுகிறது(கட்டு.). மதுரை நகரின் காவல் தெய்வம் மதுராபதி என்று மணிமேகலையும் பேசுகிறது. (வஞ்சிமா நகர்புக்க காதை) சம்புத்தீவு என்று அழைக்கப்பட்ட பண்டைத் தமிழகத்தின் காவல் தெய்வம் சம்பாபதி என்றும் மணிமேகலையிலிருந்து அறிகிறோம். (பதிகம்- அடி.- 2-32)
தமிழர் பக்தியில் இயக்கி எனும் பெண்தெய்வம்:
மனிதசக்திக்கு மேம்பட்ட இயற்கையிறந்த தன்மை படைத்த பெண் என்னும் பொருளிலேயே இயக்கி என்னும் பெண் தெய்வ வழிபாடு இருந்தது. மாதரி பூங்கண் இயக்கிக்குப் பாற்சோறு படைத்து மீண்டு வரும்பொழுது கவுந்தியை அடிபணிந்து வணங்கினாள். (அடைக்கலக் காதை) அழகு மிகுந்த பெண் உருவில் தோன்றிப் போவோர் வருவோரைத் தடை செய்யும் தெய்வம் பற்றி அழகர் மலை வருணனையில் மாங்காட்டு மறையோன் கூறுகிறான். (காடுகாண் காதை) கண்ணகியோடும் கவுந்தியோடும் புகார் நகரிலிருந்து மதுரை நோக்கி வரும் கோவலன் நீர்நிலை ஒன்றின் அருகில் மயக்கும் தெய்வம் ஒன்று தோன்ற அதை மந்திரத்தால் உணர்ந்து நீக்குகிறான்(புறஞ்.). இன்றும் பேச்சு வழக்கில் எசக்கி என்று ஒரு பெண்தெய்வத்தைச் சுட்டுவதுண்டு.
தமிழர் பக்தியில் வழிபாட்டுச் சின்னங்கள்:
கடவுளரின் படைகளும், ஊர்திகளும்,இருப்பிடமும், வழிபாட்டுச் சின்னங்களாக வழக்கிலிருந்தன.
இந்திரனின் படைக்கலமாகிய வச்சிரமும், ஊர்தியாகிய ஐராவதமும், முருகனின் படைக்கலமாகிய வேலும் வழிபடப் பெற்றன. (இந்திர.- அடி.- 141-146, கனாத்.- அடி.- 9-12) கற்பகத்தரு, தேவலோகம், சக்கரவாளம் ஆகியன முறையே தருக்கோட்டத்திலும், ஊர்க் கோட்டத்திலும் , சுடுகாட்டுக் கோட்டத்திலும் வழிபாட்டுச் சின்னங்களாக இருந்தன. (கனாத்.- அடி.- 19-21) சக்கரவாளம் என்பது இப்பூவுலகில் உள்ள மலைகள், தீவுகள், உயிரினங்கள் முதலியவற்றின் தொகுதியாகும். (மணி.- சக்கர.- அடி.- 201-202& மணிமேகலா.- அடி.-109-115)
தமிழர் பக்தியில் வழிபாட்டிற்குரிய மன்றங்கள்:
இயற்கையிறந்த தன்மையுடன் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடிய மன்றங்கள் புகார் நகரத்திலிருந்தன. (இந்திர.- அடி. - 111-140) பொதிகள் நிறைந்த பண்டகசாலை வாயிலில் காவல் காப்பவரோ, கருந்தாழோ இல்லை. ஆனால் களவு செய்யும் வம்பமாக்களை அவர்களது கழுத்துக் கடுக்க பொதியைச் சுமக்க வைத்து; எங்கும் இறக்கி வைக்க விடாதபடி ஊரைச் சுற்ற வைக்கும் அற்புதசக்தி படைத்த வெள்ளிடை மன்றம் இருந்தது. (கடலா.- அடி.- 14-17) அதர்மம் நடந்தால் கண்ணீர் விட்டு அழுது அடையாளம் காட்டும் பாவை எழுந்தருளிய பாவை மன்றமும் புகார் நகரிலிருந்தது.
தமிழர் பக்தியில் வழிபாட்டு முறைகள்:-
உருவ வழிபாடு:
பண்டைத் தமிழகத்தில் உருவ வழிபாடு இருந்தது. மாங்காட்டு மறையோன் திருமாலின் கிடந்த கோலத்தையும், இருந்த கோலத்தையும், நின்ற கோலத்தையும் பற்றி விளக்கமாகக் கூறுகிறான். (காடு.) கண்ணகிக்குக் கோயில் எடுப்பதற்காகச் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்து செங்கோட்டுயர்வரையில் அவளுருவத்தை எழுந்தருளச் செய்தான். (வஞ்சிக்காண்டம்) திருச்சீரலைவாயிலில் எழுந்தருளிய சண்முகப் பெருமான் தோற்றத்தை நீளமாகத் திருமுருகாற்றுப்படை வருணிக்கிறது. (அடி.- 77-124).
உருவமிலா வழிபாடு:
நெடுங்கல் மன்றம் ஒன்று புகார் நகரிலிருந்தது. அங்கு நின்ற கல்லே வழிபாட்டிற்கு உரியது. (இந்திர.- அடி.- 11-140)
கோயிலும் தீமுறை வழிபாடும்:
வேதநெறிப்படி தீமுறை வழிபாடு நிகழ்ந்த கோயில்கள் தமிழகத்திலிருந்தன. இந்திரவிழா தொடங்கியபோது பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலிலும், நீலமேனி நெடியோன் கோயிலிலும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலிலும் நான்மறை மரபின் தீமுறை நிகழ்ந்தன. (இந்திர.- அடி.- 141-175) மதுரையில் காலைமுரசம் நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலில் முழங்கியது (மேலது)
திருச்சீரலைவாயிலிலும், திருவாவினன்குடியிலும், திருவேரகத்திலும் முருகனுக்கு வேதநெறிப்படி வழிபாடு நிகழ்ந்தமையைத் திருமுருகாற்றுப்படை வரிசைப்படுத்திக் காட்டுகிறது. (அடி.- 77-189)
கோட்ட வழிபாடு:
வேதமரபினின்று மாறுபட்ட கோட்டவழிபாடும் தமிழகத்திலிருந்தது. மலைநாட்டு மக்கள் கண்ணகியைத் தெய்வமாக ஏற்று வணங்கிய போது தொண்டகம் தொட்டனர்; சிறுபறை முழக்கினர்; கோடு வாய் வைத்தனர்; கொடுமணி இயக்கினர்; குறிஞ்சி பாடினர்; நறும்புகை எடுத்தனர்; பூப்பலி செய்தனர்; காப்புக்கடை நிறுத்தினர்; விரவு மலர் தூவிப் பரவினர். (குன்றக்குரவை- அடி.- 11-22).
மாலதி பால்விக்கிச் சோர்ந்த பாலகனின் உடலோடு பல்வேறு கோட்டங்களுக்கும் சென்று உயிரை மீட்டுத்தரும்படி தெய்வங்களை வேண்டினாள். (கனாத்.- அடி.- 5-15) இறந்த குழந்தையின் உடலோடு கூடச் செல்லக்கூடியனவாகக் கோட்டங்கள் இருந்தன எனத் தெரிகிறது.
மதுரையில் காலை முரசம்,
“கோழிச்சேவல் கொடியோன் கோட்ட”த்திலும் (மேலது) முழங்கியது
விலக்கான பெண்கள் கூடக் கோட்டங்களில் ஒரு புறத்தில் தங்கி இருந்தனர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது(பா- 299). கலம் தொடா மகளிர் முருகன் கோட்டத்தில் ஒதுங்கி இருந்த காட்சி உவமையாக உள்ளது.
கோட்டங்கள் ஊரின் உள்ளும் இருந்தன. பெருநகரக் கோட்டைகளின் கிழக்கிலும் இருந்தன. பெருவழிகளின் இடையிலிருந்த சிற்றூர்களிலும் இருந்தன. ஈமப்புறங் காட்டிலும் இருந்தன. சக்கரவாளக் கோட்டம் சுடுகாட்டில் இருந்தமையை முன்னர்க் கண்டோம்.(வழிபாட்டுச் சின்னங்கள்) வஞ்சிமாநகர்க் கோட்டையின் கிழக்கில் குணவாயிற் கோட்டம் இருந்தது என்றும்; அங்கே இளங்கோவடிகள் தங்கியிருந்ததாகவும் சிலப்பதிகாரப் பதிகம் (அடி.- 1-2) கூறுகிறது. உறையூரிலிருந்து மதுரை செல்லும் பெருவழியில் சிறுகுடி என்னும் சிற்றூரில் ஐயை கோட்டம் இருந்தது.(வேட்டுவ வரி- அடி- 4)
முச்சந்தி, நாற்சந்தி, ஐஞ்சந்தி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, மலைச்சிறுகுடி முதலிய இடங்களில் எல்லாம் முருகனுக்கு வழிபாடு நிகழ்ந்ததாகத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. (அடி.- 189-226)
கோட்டம் கோயிலாவதும்; மீண்டும் கோட்டமாவதும்:
கோட்டங்களில் வேதநெறி அவ்வப்போது பின்பற்றப்படுவதுண்டு. அப்போது அவை கோயில் என்று குறிக்கப்பட்டன. மலைமக்களுடைய மங்கலமடந்தை கோட்டத்தில் செங்குட்டுவன் கண்ணகியைப் பிரதிஷ்டை செய்து கடவுள் மங்கலம் செய்தபோது; நூல்மரபின்படி வேள்விச்சாலை அமைத்தான். இவ்விடத்தில் இளங்கோவடிகள்,
"கோமகள் தன் கோயில்" என்கிறார். (வாழ்த்து.- உரைப்பாட்டு மடை) தேவந்தி கண்ணகித்தெய்வம் ஏறப்பெற்று பிறர்க்குத் தெரியாத உண்மைகளைக் கூறி அருளிய பின்னர் வேதமரபினின்று மாறி அவளை நித்தல் விழாவணி செய்ய ஏவியபோது அவ்விடத்தைப் பத்தினிக் கோட்டம் என்கிறார் இளங்கோவடிகள்.
நகர் வழிபாட்டுமுறை:
மக்களுக்காக மன்னன் கட்டிப் பராமரிக்கும் வழிபாட்டிடம் ‘நகர்’ என்று பெயர் பெற்றது.(மின்தமிழ்மேடை"சிலப்பதிகாரம் காட்டும் வழிபாட்டிடங்கள்"- காட்சி- 14- ஜூலை2018) மதுரையில் காலை முரசம் முழங்கிய இடங்களில்
“மேழி வலனுயர்த்தோன் வெள்ளை நகரமும்” (மேலது) ஒன்றாகும்.
திருப்பரங்குன்றத்து முருகனைப் பாடுங்கால் நகர் என்றே புலவோர் பலரும் சுட்டுகின்றனர்.(பரிபாடல்- பா- 8, 18, 19) மதுரையில் ஆதிசேஷனுக்குரிய நகர் இருந்தமை; பரிபாடல்திரட்டு- பா-1 மூலம் தெரிகிறது. மதுரை மட்டுமின்றி; காஞ்சி, மருங்கூர்ப்பட்டினம் முதலிய இடங்களிலும் நகர் இருந்ததெனச் சங்க இலக்கியம் சான்று பகர்கிறது. (பெரும்பாணாற்றுப்படை- அடி.- 404-405, கலித்தொகை- பா- 84,அகநானூறு- பா.- 22, 99, 136, 227)
முருகனுக்குரிய நகர்களில் வழிபாட்டின்போது ஆண்டலைக்கொடி ஏற்றினர்; நெய்யோடு ஐயவி அப்பினர்; கொழுமலர் சிதறினர்; தம் வாயினின்று ஒலி எழாதவாறு வழிபட்டனர்; தம்முள் மாறுபட்ட நிறத்தை உடைய இரண்டு உடையை உடுத்தினர்; சிவந்த நூலைக் கையில் காப்பாகக் காட்டினர்; வெண்பொரி சிதறினர்; கொழுவிய கிடாயினை வெட்டி அதன் குருதியோடு தூய வெள்ளரிசியைக் கலந்து பலியாக இட்டனர்; பல பிரப்பு இட்டனர்; பசுமஞ்சளோடு மணப்பொருட்களைத் தெளித்தனர்; செவ்வலரி மாலையையும், குளிர்ச்சி பொருந்திய பிற நறுமலர் மாலைகளையும் இணை ஒக்க அறுத்துத் தொங்க விட்டனர்; மலைப்புறத்து ஊர்களையெல்லாம் வாழ்த்தினர்; நறும்புகை காட்டினர்; குறிஞ்சி பாடினர்; பல இசைக்கருவிகளையும் முழங்கினர் என்று நக்கீரர் நகரில் நிகழும் வழிபாட்டுமுறையைத் திருமுருகாற்றுப்படையில் (அடி.- 227-249) விளக்கி உள்ளார்.
நியமத்தில் வழிபாட்டு முறை:
அந்தணரும் அரசரும் அல்லாதாரால் பராமரிக்கப்படும் வழிபாட்டிடம் நியமம் என்று அழைக்கப்பட்டது.(மின்தமிழ்மேடை- மேலது) மதுரையில் காலைமுரசம்,
“உவணச் சேவல் உயர்த்தோன் நியம”த்தில் முழங்கியது என்கிறார் இளங்கோவடிகள்.(மேலது) அரங்கத்திலிருந்து காவிரி ஆற்றைக் கடந்த கவுந்தி முதலிய மூவரும், (நாடு.- அடி- 217)
“தீதுதீர் நியமத் தென்கரை எய்தி”யதாகவே இளங்கோவடிகள் பாடுகிறார். மதுரைக்காஞ்சி மதுரையில் இருபெரு நியமங்கள் இருந்தன என்கிறது. (அடி.- 365&366) கோசர் செல்லூரில் கட்டிய நியமம் பற்றி மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ளார்.(அகநானூறு- பா- 90) நியமத்தில் வேள்வித்தூண் நாட்டி வழிபாடு நிகழ்வதுண்டு.(அகநானூறு- பா- 220).
கல்வியும், அறமும், தவமும், வழிபாடும் ஒருங்கிணையும் பள்ளி:
சமணர் பள்ளி, பௌத்தப்பள்ளிகளில் கல்வியும், அறமும், தவமும், வழிபாடும் ஒருங்கு நிகழ்ந்தன. அந்தணர் பள்ளியில் கல்வியும் தீமுறை வழிபாடும் ஒருசேர நிகழ்ந்தன.
புகார் நகரில் சமணர் பள்ளியும், பௌத்தப் பள்ளியும் இருந்தன. கண்ணகி கோவலனுடன் மதுரைக்குப் புறப்படும் பொழுது சமணர்களின் சிலாத்தலத்தைத் தொழுது வலங்கொண்டு சென்றனர். (நாடு.- அடி.- 15-25) கவுந்தி மாதரிக்குக் கதை கூறத் தொடங்கும் போது புகாரிலிருந்த,
“உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதலம்”
பற்றிப் பேசுகிறாள். (அடைக்.- அடி.- 151-154) மணிமேகலை புகார்நகரத்துச் சமணர் பள்ளியை ‘அராந்தாணம்’ என்கிறது. (மணிமேகலா.- அடி.- 23)
கண்ணகியும் கோவலனும் இநதிரவிகாரம் ஏழுடன் போகித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். (நாடு.-11-14) இந்திர விகாரம் ஏழு என்பது பௌத்தப் பள்ளியையே குறிக்கும்.
இந்திரவிழாவின் போது அறவோர் பள்ளியில் 'அறனோம்படை' நிகழ்ந்தது. (இந்திர.- அடி- 179) அறவோர் பள்ளி சமண பௌத்தப் பள்ளிக்குரிய பொதுப்பெயர் ஆகும். மணிமேகலை புகாரிலிருந்த பௌத்தப் பள்ளியை 'மாதவர் உறைவிடம்' என்கிறது. (ஊரலர் உரைத்த காதை.- அடி- 59)
மதுரையில் சமணர் பள்ளி, பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி மூன்றும் இருந்தன. மதுரையில் காலை முரசம் சங்கொடு முழங்கிய இடங்களில்,
”அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்” உண்டு (மேலது)
மதுரைக்காஞ்சி மதுரையிலிருந்த சமண பௌத்தப் பள்ளி பற்றி விரிவாகப் பேசுகிறது. பெண்கள் தம் மக்களோடு பூவும் புகையும் ஏந்திக் கொண்டு பௌத்தப் பள்ளிக்குச் சென்றனர். (அடி.- 461-467) குளிர்ச்சி பொருந்திய அருகக் கடவுளின் திருக்கோயிலில் செம்பால் செய்தாலொத்த சுவர்களில் ஓவியம் தீட்டப்பெற்று இருந்தது. உயர்ந்த மேடையும், நறிய பூஞ்சோலைகளும் உடையதாய் அமண்பள்ளி அத்துடன் சேர்ந்திருந்தது. பூவும் புகையும் ஏந்திச் சாவக நோன்பிகள் அருகனை வாழ்த்தி நின்றனர். முக்காலத்தையும் உணர்ந்து, அறிவு முதிர்ந்து, விரதங்களை மேற்கொண்டும், இளைக்காத மேனியை உடையவராய்க் கல்வி மிகுந்த சான்றோர்கள் அங்கிருந்தனர். (அடி.- 475-487)
கோவலனும் கண்ணகியும் மதுரையை நெருங்கிய போது நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும் கேட்டனர் (புறஞ்.- அடி.- 141-150) மாங்குடி மருதனாரும் மதுரையிலிருந்த அந்தணர் பள்ளியை ஆவணப்படுத்தி உள்ளார். வேதங்களைப் பொருள் புரிந்து ஓதி, அவை கூறும் ஒழுக்கங்களைச் சரிவர உணர்ந்து; எவ்வுயிரிடத்தும் செந்தண்மை பூண்டொழுகும் பெரியோர் அந்தணர் பள்ளியிலிருந்தனர். அது குன்றைக் குடைந்தாலொத்துக் காணப்பட்டது. (அடி.- 468-474)
தமிழர் பக்தியில் ஆடலும் பாடலும்:
ஆடல்பாடலோடு கூடிய வழிபாட்டு முறை தமிழகத்திலிருந்தது. பல்வேறு சமுதாய மக்களும் தத்தமக்குரிய பாணியில் ஆடிப்பாடினர். வேட்டுவர் கொற்றவையை வழிபட்ட போது வேட்டுவவரி பாடினர். ஆய்ச்சியர் திருமாலை வழிபட்ட போது ஆய்ச்சியர் குரவை பாடி ஆடினர். குறிஞ்சி மகளிர் குன்றக்குரவை பாடி ஆடி முருகனை வழிபட்டனர்.
தமிழர் பக்தியில் வெறியாடல்:
இறைப்பொருள் பற்றி முரண்பட்ட கருத்துடையோர் அஞ்சும் படியாக குறமகள் தன்மேல் முருகன் அருள் வந்து ஆடும் அகன்ற வழிபாட்டிடங்களை
"முருகாற்றுப்படுத்த உருகெழு வியன்நகர்" என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் (அடி.- 227-249) விளக்கியுள்ளார்.
கோட்டங்களில் தெய்வமேறப் பெற்று ஆடி வருவதுரைத்தனர். ஐயை கோட்டத்தில் சாலினி என்னும் வேட்டுவர்குலப் பெண் அருளுற்று ஆடுவதை வேட்டுவவரி விரிவாகப் பேசுகிறது. முருகனை வழிபட்ட கோட்டங்களில் வேலன் வெறியாட்டு நிகழ்ந்தமை திருமுருகாற்றுப்படை மூலம் தெரியவருகிறது.(அடி.- 220-226)
தமிழர் பக்தியில் பெண்களும் தெய்வக்கோலமும்:
கன்னிப் பெண்களுக்குத் தெய்வக் கோலம் புனைந்து வழிபாடு நிகழ்த்தும் முறை தமிழ்ச் சமுதாயத்திலிருந்தது. கண்ணனாகவும்,பலராமனாகவும், நப்பின்னையாகவும் கன்னியரை அலங்கரிக்க; அவர்கள் யமுனைக்கரை கோபியர்களுடன் சேர்ந்து ஆடித் திருமாலைத் தொழுதனர். (ஆய்ச்சியர் குரவை) கொற்றவை வழிபாட்டின் போது வேட்டுவர்கள் தம் குலத்தைச் சேர்ந்த கன்னிப்பெண் ஒருத்திக்குச் சிவனை ஒரு பாகத்தில் கொண்ட உமையவளின் வடிவத்தைப் புனைந்து வழிபட்டனர் என வேட்டுவவரி விளக்குகிறது.
தமிழர் பக்தியில் புனித நீராடல்:
குமரி முனையிலும், கங்கையிலும், சில குளங்களிலும் புனித நீராடும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்தது. புனித நீராட்டு பாவத்தைப் போக்கும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் நிலவியது.
மாடலமறையோன் குமரிமுனை சென்று புனித நீராடி மீண்டபோது மதுரையில் தங்கினான். அங்கே கோவலன், கண்ணகி, மாதரி, கவுந்தி முதலியோரின் அவல முடிவு கண்டு புகார் நகரம் சென்றான். அவன் கூறிய செய்திகளைக் கேட்டுக் கண்ணகியின் தாயும், கோவலனின் தாயும் உயிரை விட்டனர். அதனால் ஏற்பட்ட பாவம் தீரக் கங்கைக்குப் புனிதநீராடச் சென்றான்.
புகார் நகரத்துக் காமவேள் கோட்டத்தின் முன்னர் இருந்த சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய துறைகளில் மூழ்கி எழுந்து காமனை வழிபட்டால் பிரிந்த கணவனை மீண்டும் பெறலாம் என்னும் நம்பிக்கை இருந்தது. தேவந்தி கண்ணகியை தாழைப்புதர் மிகுந்த நெய்தலங்கானல் பகுதிக்குச் சென்று அவ்வாறு நீராட அழைக்கிறாள். (கனாத். - அடி.- 57-60) பட்டினப் பாலையும் இவ்விரு ஏரிகளை,
"இருகாமத்து இணையேரி" (அடி. -39) என்கிறது. காமத்து எனும் அடைமொழி இவ்வேரிகள் காமன் கோட்டத்தின் முன்னர் இருந்தமையைத் தெளிவுறுத்துகின்றன.
தமிழர் பக்தியில் திருவிழாக்கள்:
திருவிழாக்கள் கோயில்களிலும், கோட்டங்களிலும் ஒருங்கு கொண்டாடப் பெற்றன. முதலில் விழாவை முரசறைந்து அறிவித்தனர்.விழாவிற்குரிய தூணை நாட்டிக் கொடியும் ஏற்றினர். கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இந்திரவிழா தொடங்கியவுடன் வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசினைக் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றினர். விழாவை அறிவித்தனர். வால்வெண் களிற்றரசு என்ற ஐராவதக் கோட்டத்தில் விழாத்தூணை நாட்டினர். கற்பகத்தரு கோட்டத்தில் மங்கல நெடுங்கொடியை வானுற ஏற்றினர். பின்னரே சிவன், திருமால், முருகன், பலராமன், இந்திரன் கோயில்களில் வேதமரபின்படி வேள்வி செய்தனர். (இந்திர.- அடி.- 141-175) இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முடிவுரை:
இளங்கோவடிகள் காலத்தில் தமிழர் கோயில்கள், கோட்டங்கள், நகர்கள், நியமங்கள் அமைத்துப் பல்வேறு கடவுளரையும், வருணபூதங்களையும், காவல்பூதங்களையும், ஊர்க்காவல் தெய்வத்தையும், இயக்கியையும் வணங்கினர். கடவுளரின் படைகளும், ஊர்தியும், இருப்பிடங்களும், தொன்மப் பொருட்களும் வழிபாட்டுச் சின்னங்களாயின. உருவ வழிபாடும் உருவமற்ற கல் வழிபாடும் இருந்தன. கோயில்களில் வேதமரபின்படி வழிபாடு நிகழ்ந்தது. கோட்டங்களிலும், நியமங்களிலும் அவ்வப்போது வேதமுறை பின்பற்றப்பட்டது. ஆடிப்பாடியும், அருளேறி ஆடியும், புனித நீராடியும், திருவிழாக்கள் நிகழ்த்தியும், கன்னிப் பெண்களைத் தெய்வமாக அலங்கரித்தும் பக்தி செலுத்தினர். அந்தணர் பள்ளியில் கல்வியும், வழிபாடும் நிகழ்ந்தன. சமண பௌத்தப்பள்ளிகளில் அறம், தவம், கல்வி, வழிபாடு அனைத்தும் ஒருங்கிணைந்திருந்தன. திருவிழாக்களில் சாற்றுவதும், விழாத்தூணை நாட்டுவதும், கொடியேற்றுவதும், வழிபாடும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சுருக்கக் குறியீட்டு விளக்கம்:
அடைக்.- அடைக்கலக் காதை
இந்திர.- இந்திரவிழவு ஊரெடுத்த காதை
ஊர்.- ஊர்காண் காதை
கட்டு.- கட்டுரை காதை
கடலா.- கடலாடு காதை
கனாத்.- கனாத்திறம் உரைத்த காதை
சக்கர.- சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
நாடு.- நாடுகாண் காதை
மணி.- மணிமேகலை
மணிமேகலா.- மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
விழா.- விழாவறை காதை
துணைநூற் பட்டியல்:
சிலப்பதிகாரம்- பொ.வே.சோமசுந்தரனார்(உ.ஆ.)- கழக வெளியீடு- 372- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 1975
மணிமேகலை- ந.மு.வேங்கடசாமி நாட்டார்& ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- பாகனேரி த.வை.இ.தமிழ்ச்சங்க வெளியீடு- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 1964
சங்க இலக்கியத் தொகுப்பு- பாகம் 1&2- வையாபுரிப் பிள்ளை (தொ.ஆ.)- முதற்பதிப்பு- 1974
(குறிப்பு: ரிஷிகேசம் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமமும், திருப்பனந்தாள் காசித் திருமடமும், களம்பூர் கோவிந்தசாமி அடிகளார் அறக்கட்டளையும் இணைந்து 5-7மே 2005ல் நடத்திய ‘தமிழ் உணர்த்தும் பக்தி’ ஆய்வு மாநாட்டில் வாசித்தளித்த ஆய்வுக் கட்டுரை. தமிழ் உணர்த்தும் பக்தி ஆய்வு மாலை என்ற நூலின் 2ம் பகுதியில் பதிப்பிக்கப்பட்டது. 14ஆண்டுக்கால இடைவெளியின் கருத்தாக்கங்கள் சேர்த்து மேம்படுத்தப்பட்டது.)
தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)