Tuesday, July 25, 2017

ரொசெட்டா ஸ்டோன்

1799ல் நெப்போலியன் எகிப்தின் மேல் படை எடுக்கிறார். வரலாற்றில் மிகுந்த ஆர்வமுடைய நெப்போலியன் தன்னுடன் பெரிய வரலாற்றறிஞர்கள் குழாமை அழைத்து சென்றார். எகிப்தில் உள்ள மம்மிகள், கலைபொருட்களை அவர் ஆராய்ந்து, சித்திரங்கள் தீட்டினர். அப்போது காமிரா இல்லை என்பதால் சித்திரங்களை வைத்தே ஆராயவேண்டியிருந்தது.

1799ல் ரொசட்டா எனும் பகுதியில் ரொசட்டா ஸ்டோன் எனப்படும் கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தார் நெப்போலியன். உலக வரலாற்றின் மைல்கல்லான கண்டுபிடிப்பு ரொசட்டா ஸ்டோன். ஏனெனில் அதுநாள்வரை பண்டைய எகிப்தின் எழுத்துருவான ஹைரலோக்ரோபிக் எழுத்துருவை யாராலும் படிக்க முடியவில்லை. அதனால் ஏராளமான மம்மிகள், கல்வெட்டுக்கள் கிடைத்தும் யாராலும் அவை சொல்லும் செய்திகளை அறிய முடியாது எகிப்திய வரலாற்று ஆராய்ச்சியே ஸ்தம்பித்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் ரொசட்டா கல்வெட்டில் 

பண்டைய எகிப்திய ஹைரலோக்ரோபிக் எழுத்துரு (இது எகிப்திய புரோகிதர்களின் மொழி. இன்றைய சமச்கிருதம் போல)
மக்களின் டிமாடிக் எழுத்துரு (மக்களின் மொழி. பிராகிருதம் போல)
கிரேக்க மொழி

என மூன்று மொழிகளில் ஒரே செய்தி கல்வெட்டாக சாசனம் செய்யபட்டிருந்தது.




இந்த கல்வெட்டை செதுக்கியவர் அன்றைய மன்னர் ஐந்தாம் டாலமி. பண்டைய பாரோக்கள் ஆட்சி முடிவுக்கு வந்து கிரேக்கர்கள் எகிப்தை கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்தனர். அப்படிப்பட்ட கிரேக்க மன்னரே ஐந்தாம் டாலமி. ஆனால் கிரேக்கர்களை பாரோக்களாக ஏற்க எகிப்தியர்கள் மறுத்த நிலையில் தன் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க தன் அருமை பெருமைகள், தான் கடவுளின் அருள் பெற்றவர் மாதிரியான செய்திகளை கல்வெட்டில் செதுக்கி எகிப்தின் மூலை முடுக்கெங்கும் நாட்டினார் ஐந்தாம் டாலமி. இது செதுக்கபட்ட காலம் கிபி 2ம் நூற்றாண்டு.

ஏன் மூன்று மொழிகள்?

மன்னர் மற்றும் அதிகாரிகள் மொழி கிரேக்கம்
மக்கள் பேசிய மொழியான டிமாடிக்
புரோகிதர்கள், பூசாரிகள் பேசிய மொழியான ஹைரலோகிராபிக் எழுத்துரு

இந்த மூன்று மொழிகளிலும் ஒரே தகவலை செதுக்கியிருந்தார் ஐந்தாம் டாலமி. இதை கண்டதும் பிரெஞ்சு வரலாற்று நிபுணர்கள் ஆனந்த கூத்தாடினர். ஏனெனில் பண்டைய கிரேக்க மொழியை அவர்களால் படிக்க இயலும். அதே செய்தி எகிப்திய ஹைரலோகிராபிக் மொழியிலும் இருப்பதால் கிரேக்க மொழிபெயர்ப்பை வைத்து , எகிப்திய ஹைரலாகிராபிக் மொழி சொல்லும் சொற்கள் என்ன என எளிதில் கண்டுபிடிக்க முடியும். அதன்பின் சொற்களை வைத்து எழுத்துருவையே முழுமையாக உருவாக்க முடிந்தால் பன்டைய ஹைரலாகிராபிக் மொழியை படிக்க இயலும். அப்படி மட்டும் படிக்க முடிந்தால் 5000 ஆன்டுகால கல்வெட்டுகள், மம்மிகள், பேபிரஸ் டாகுமெண்டுகள் என எகிப்தீன் பண்டைய வரலாறு முழுக்க படிக்க முடியும்.

சுருக்கமாக சொன்னால்:

இதுமட்டும் நடந்தால் வரலாற்றியலின் மிக, மிகப்பெரும் மைல்கல்லான அரிய கண்டுபிடிப்பாக இருக்கும். நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்தது விண்ணியலில் எப்படிபட்ட சாதனையாக இருக்குமோ, அதற்கொப்பான வரலாற்றுசாதனையாக இருக்கும்.

ஆனால் "மேன் ப்ரபோசஸ், காட் டிஸ்போசஸ்"

முதல்சோதனை ஆங்கிலேயர் வடிவில் வந்தது. நெப்போலியன் எகிப்தை விட்டு பிரான்ஸ் போனதும் எகிப்தின் மேல் படை எடுத்து ரொசட்டா கல்லை திருடிக்கொண்டு போனார்கள் ஆங்கிலேயர்கள். இதை கேள்விப்பட்ட நெப்போலியன் கடுமையான கோபமடைந்தார். பிரெஞ்சு வரலாற்று அறிஞர்கள் கடும் விரக்தியில் ஆழ்ந்தார்கள். ஆனால் கல்லில் இருந்த எழுத்துக்கள் பிரதி எடுக்காப்ட்டிருந்ததால் அதை வைத்து ஆய்வை துவக்கினர். அதே சமயம் லண்டனில் ஆங்கிலேயரும் ஆய்வை துவக்கினார்கள். அப்போது நெப்போலியனின் பிரான்சு உலக வல்லரசாக ஆகியிருந்தது. ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யம் மட்டும் சளைத்ததா என்ன? அது சூரியன் மறையாத சாம்ராஜ்யமாக இருந்தது. இரு நாட்டு வரலாற்று நிபுனர்களுக்கும் உலக வரலாற்றியல் துறையை தலைகீழாக புரட்டிபோடும் அந்த மகத்தான சாதனையான ஹைரலோகிராபிக் எழுத்துருவை மீன்டும் கண்டுபிடிப்பது யார் என்பதற்கான போட்டி நடைபெற்றது. இரு வல்லரசுகளும் பணத்தை அள்ளிவீசின. 19ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வரலாற்று மேதைகள் அப்பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் எளிதாக முடிக்க முடியும் என நினைத்த பணி எத்தனை சிரமம் என பின்னர் தான் தெரிந்தது. ஹைரலாகிராபிக் எழுத்துரு சித்திர எழுத்துரு. அவற்றில் பறவைகள், சூரியன் போன்ற பல எழுத்துக்கள் காணபட்டன. நாம் சூரியன் என எழுதவெண்டுமெனில் சூ ரி ய ந் என எழுத்துக்களை பயன்படுத்துவோம். அவர்க ஒரு சூரியனையே வரைந்துவிடுவார்கள். ஆக இது படிக்ககூடிய எழுத்துருவே அல்ல என வரலாற்றறிஞர்கள் நம்ப துவங்கினர்.



(இடப்புற தாமஸ் யங், வலப்புறம் சாம்போலின்)


இந்த சூழலில் தாம்ஸ் யங் எனும் ஆங்கிலேயர் ஒரு புதுமையான படிக்கும் முறையை கண்டுபிடித்தார். அதாவது 

கிரேக்க மொழிபெயர்ப்பில் டாலமி எனும் சொல் எத்தனை முறை வருகிறது என பார்த்தார். 25 முறை வந்தது

அதேபோல ஹைரலாகிராபிக் எழுத்துருவில் 25 முறை வரும் சொல் எது என பார்த்தார். அப்படி ஒரு சொல் கிடைத்தது. அப்போது அது தானே ஹைரலாகிராபிக் எழுத்துருவில் டாலமி என்பதாக இருக்கவேண்டும்?

இப்போது டாலமிக்கு முன்பாக "மன்னர் டாலமி" என கிரேக்கத்தில் இருந்தால் ஹைரலாகிராபிக் எழுத்துருவில் இருக்கும் டாலமிக்கு முன்பாக இருக்கும் வார்த்தையும் மன்னர் என்பதாக தானே இருக்கவேண்டும்?

ஆக இப்படி கணக்குபோட்டு அவர் மொழிபெயர்க்கதுவங்கினார். நம்ப முடியாத வகையில் வெகுவிரைவில் மொழிபெயர்த்தும் விட்டார். அதன்பின்னர் அதை சகாக்களுக்கு மகிழ்ச்சியுடன் காட்டுகையில் தலையில் இடி இறங்குவதுபோன்ற கேள்வியை ஒருவர் கேட்டார்

"பன்டைய எகிப்தியர்கள் இடமிருந்து வலமாக எழுதினரா, அல்லது வலமிருந்து இடப்புறமாக எழுதினரா?"

யாருக்கு தெரியும்? இடமிருந்து வலமாக எழுதுவாக நினைத்துதான் தாம்ஸ் யங் மொழிபெயர்த்திருந்தார். வலமிருந்து இடம் என்றால் அப்படியே அது தலைகீழாக மாறிவிடுமே?

பத்தாண்டு வேலை இப்படி ஒரே கேள்வியில் தரைமட்டமானதை கண்டு தாமஸ் யங் கண்ணீர் வடித்தார்

அதே சமயம் பிரான்ஸில் ஜான் பிரான்ஸிஸ் சாம்போலின் என இன்னொரு வரலாற்று அறிஞர். அவர் மிகுந்த ஏழை. அவரது வாழ்நாள் கனவு உலகம் பிறந்தநாள் எது என கன்டுபிடிக்கவேண்டும் என்பது. அவரது காலக்ட்டத்தில் பைபிள்படி ஆதாம், ஏவாள் தான் முதல் மனிதர்கள். சார்லஸ் டார்வின் அப்போது பள்ளிமாணவன். அவரது பரிணாமவியல் கோட்பாடு உருவாகவே இல்லை. ஆக உலகம் தோன்றிய முதல் வாரத்திலேயே மனிதர்கள் தோன்றிவிட்டார்கள் என நம்பினார் சாம்போலின். இப்படி இருக்க உலகின் முதல் எழுத்துரு என கருதப்படும் எகிப்திய எழுத்துருவை படிக்க முடிந்தால் அதன் காலகட்டம் தெரியும் அல்லவா? அதை தெரிந்தால் உலகம் தோன்றிய ஆண்டு எது என கணித்துவிடலாமே?

இன்று வேடிக்கையாக இருந்தாலும் அன்று இந்த ஆர்வம் தான் சாம்போலினை உந்தியது. அவர் மிக வறிய நிலையில் பாரிசுக்கு போய் மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில் இருந்தார். அவரது சகோதரர் அந்த சூழலில் தான் உழைத்து அந்த காசில் தம்பியை படிக்க வைத்தார்.

பாரிசுக்கு போன சாம்போலினுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரான்சின் மிகப்பெரும் வரலாற்று அறிஞர்கள் எகிப்திய எழுத்துருவை படிக்க முடியாது, அது வீண்வேலை என்றார்கள். தாமஸ் யங்கை பாடாய்படுத்தின "இடமிருந்து வலமா, வலமிருந்து இடமா" பிரச்சனையும் அவரை தாக்கியது. ஆனால் இதற்கு தாம்ஸ் யங் கடைபிடித்ததை போல அல்லாது மிக, மிக எளிய உத்தி ஒன்றின் மூலம் தீர்வுகண்டார் சாம்போலின்.

"ஒரு மொழி அத்தனை சீக்கிரம் அழியாது. எகிப்திய மொழி இன்று இல்லை. ஆனால் அதன் சகோதர மொழிகள் உயிருடன் இருக்கும். அந்த சகோதர மொழிகளின் இலக்கணம், எழுத்துக்கள் எல்லாமே எகிப்திய ஹைரலாகிராபிக் மொழியை ஒத்து இருக்கும். ஆக சகோதர மொழிகளை படித்தால் ஹைரலாகிராபிக் மொழியை படிக்கலாம்" என மிக எளிய வழிமுறை ஒன்றை கண்டுபிடித்தார் சாம்போலின்.

இந்தியை வைத்து சமஸ்கிருதத்தை அறிவது போல இது

ஆனால் ஹைரலாகிராபிக் மொழிக்கு சகோதர மொழிகள் எதுவுமே இல்லை. இந்த சூழலில் இதற்கான விடை பாரிசிலேயே சாம்போலினுக்கு கிடைத்தது. ஆம் பாரிசில் எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களின் சர்ச் ஒன்று இருந்தது. அங்கே போன சாம்போலின் காப்டிக் மொழி எகிப்தின் மிக தொன்மையான மொழி என அறிந்தார். அம்மொழியை கற்றார்.

அதன்பின் காப்டிக் மொழியின் எழுத்துரு, இலக்கணம், வார்த்தை அமைப்பு ஆகியவற்றை வைத்து பண்டைய ஹைரலாகிராபிக் எழுத்த்ருவை ஆராய்ந்தார். அதிசயிக்கதக்க வகையில் அது பொருந்திபோனது. காப்டிக் மொழி என்பது ஹைரலாகிராபிக் மொழியின் மக்கள் பேசும் வடிவம் என கன்டுபிடித்தார் சாம்போலின்.

அதன்பின் ஹைரலாகிராபிக் எழுத்துருவை முழுக்க மீள் உருவாக்கம் செய்து பண்டைய எகிப்திய மன்னன் ராமசேஸ் என்பவரது பெயரை முதல், முதலாக பலத்த ஆரவாரத்துக்கு இடையே ஒரு கருத்தரங்கில் படித்து காட்டினார் சாம்போலின்.

அங்கே வந்த தாம்ஸ் யங் அவரை பாராட்டினார். தாம்ஸ் யங் கடைபிடித்த கணிதவியல் முறைக்கு மாற்றாக தற்கால மக்களின் வாழ்வியலை ஆராய்ந்து தீர்வுகண்ட சாம்போலினின் அறிவுகூர்மையை தாமஸ் யங் தொழில் போட்டி, தேச பக்தியை எல்லாம் தாண்டி பாராட்டினார்.


(ஹைரலாகிராபிக் எழுத்துரு)


அதன்பின் எகிப்து சென்று ஏராளமான கல்வெட்டுக்கள், பாபைரஸ் டாக்குமென்டுகளை படித்துகாட்டி தன் எழுத்துரு வேலை செய்கிறது என்பதை நிருபித்தது மட்டுமல்லாது பன்டைய எகிப்தின் முழு வரலாற்றையும் கண்டறிந்தார் சாம்போலின். 1500 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முதலாக ஹைரலாகிராபிக் எழுத்துருவை மீண்டும் படிக்க முடிந்தது. சுமார் ஐம்பது நோபல் பரிசுகள் பெறுவதற்கு ஒப்பான வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்டுபிடிப்பு இது.

வரலாற்று அறிஞர் சாம்போலின் தனி மனிதராக எகிப்து எனும் நாகரிகத்தின் 5000 ஆண்டுகால வரலாற்றை நமக்கு மீண்டும் கிடைக்க செய்தார். அதற்கு காரணம் ஐந்தாம் டாலமி எனும் 14 வயது மன்னன் எழுதிய மொக்கை கல்வெட்டு ஒன்றே. உலகின் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனை இப்படி மிக யதேச்சையாக நிகழ்ந்தது.


--

இது குறித்த மேலதிக தகவல்களை இக்கல்லை நேரில் பார்த்த முனைவர் சுபாஷினி பகிர்ந்து கொள்கிறார்




எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துருவை வாசிக்க முடியாது ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ஆய்வுலக அதிசயமாகக் கிடைத்ததுதான் ரொசேட்டா கல் (Rosetta Stone).  எகிப்தின் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் எழுத்து ஹீரோக்ளிப்ஸ். ஓவியங்களே எழுத்துக்கள் என்ற வகையில் இவை அமைந்திருக்கும்.  எத்தனையோ ஆண்டுகளாக ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களை வாசிக்க முடியாமையினால் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்றே அறியமுடியாமல் ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனைக்கு வடிகாலாக அமைந்தது இந்த ரொசேட்டா கல். பார்ப்பதற்கு அது ஒரு பெரும் பாறை போன்ற கல் தான். ஆனால் அதில் இருப்பதோ உலகின் மிக முக்கிய ஆவணம். இதில் உள்ள செய்தி மிக சாமானியமானதுதான் ஆனால் அதில் உள்ள எழுத்துருதான் சிறப்பு பெற்றது. ஏனெனில் மூன்று மொழிகளின் எழுத்துருக்கள் ஒரே கல்லில் ஒரே செய்தியை வழங்கும் வகையில் இந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 196ல் 5ம் தாலமி முடிசூடிக்கொண்ட நிகழ்வை இந்தக் கல் ஹீரோக்ளிப்ஸ், எகிப்திய டெமோட்டிக் எழுத்துரு, கிரேக்கம் ஆகிய மூன்று மொழி எழுத்துருக்களில் காட்டுகின்றது. இதில் உள்ள கிரேக்க, எகிப்திய டெமோட்டிக் எழுத்துருக்களைக் கொண்டு ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களை ஆய்வாலர்கள் உடைனே மொழிபெயர்த்து ஒலியை அறிந்தனர். இதுவே விடைகாணாது இருந்த பல எகிப்திய ஆராய்ச்சிகளுக்கு விடையளிக்கும் மந்திரக்கோலாக அமைந்தது. இந்த ரொசேட்டா கல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் தான் உள்ளது.




--

செல்வன்

Thursday, July 20, 2017

வீரக்கை என்னும் சதிக்கல்

-- து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



முன்னுரை:
இரண்டு ஆண்டுகளுக்குமுன், திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திலிருக்கும் சேவூரில் “தினமலர்”  நாளிதழின் திருப்பூர்ப் பகுதிச் செய்தியாளர் மகேஷ் அவர்கள் தாம் பார்த்திருந்த ஒரு நடுகல் சிற்பத்தைப்பற்றித் தந்த தகவலின் அடிப்படையில், கட்டுரை ஆசிரியரும் அவிநாசியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரான ஜெயசங்கரும் சேவூரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

வெட்டப்பட்ட ஒரு கையின் சிற்பம்:

சேவூர்-புளியம்பட்டிச் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு அருகில் சாலையோரம், “தினமலர்” செய்தியாளர் குறிப்பிட்ட அந்த நடுகல் சிற்பம் இருந்தது. இது 13.4.2014 அன்று வைக்கப்பட்ட நடுகல். தேதி, நடுகல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. கருங்கல்லில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பத்துடன் கூடிய நெடிய பலகைக்கல். சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவற்றின் உருவங்கள் கல்லின் உச்சிப்பகுதியில் செதுக்கப்பட்டு, அதன் கீழ்ப்புறம் இரு பெண்கள் மலர்கொண்டு பூசிக்கும் தோற்றத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் கீழாக உயர்த்திய நிலையில் ஒரு கையும் செதுக்கப்பட்டிருந்தன. 

சேவூர்  நடுகல் 

மக்களிடை வழங்கும் செய்தி:
அங்குள்ள மக்களிடம் இந்த நடுகல்லைப்பற்றிக்கேட்டபோது, அவர்கள் சொன்னதாவது: இந்த நடுகல்லில் காணப்படுவதுபோலவே சிற்பங்கள் செதுக்கப்பட்ட பழங்கால நடுகல் ஒன்று முன்பு இங்கு சாலையோரம் இருந்தது. சரக்குந்து ஊர்தியொன்றால் அது தாக்குண்டு உடைந்து போனது. உடைந்த துண்டுகளை ஆற்றில் எறிந்துவிட்டனர். பழமையான நடுகல் திப்புசுல்தான் காலற்றதாகும். வீரன் ஒருவன் கை வெட்டுப்பட்ட நிலையில் இறந்துபடுகிறான். அவன் நினைவாக, கையை முன்னிலைப்படுத்தி எழுப்பப்பட்ட நடுகல். பழங்கல்லில் இருந்தவாறே உருவங்களை அமைத்து, தற்போது இக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  மக்கள் சாமிக்கல் என்று அழைத்து வழிபடுகின்றனர். பழங்கல் பாதுகாக்கப்படவில்லையே என்னும் வருத்தம் தோன்றினாலும் அதன் நினைவைக் காக்கின்ற முயற்சியாகப் புதியதொரு கல்லையாவது பழமையின் கருத்து மறையாமல் இருக்கும் வண்ணம் நாட்டியுள்ளனர் என்பது ஆறுதல் தருகிறது. பழங்கல்லின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும்.

மீளாய்வு:
மேற்படி நடுகல்லில், வீரனின் உருவம் எதுவும் காணப்படாததும், கை மட்டுமே மையப்படுத்தப்பட்டுள்ளதும், இந்நடுகல் வழக்கத்துக்கு மாறாயுள்ள ஒரு நடுகல் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதோடல்லாமல், மீளாய்வு நோக்கில் கருத்துகளைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தையும் வலுவாக்கியது. நடுகல்லில் காணப்படும் கை ஓர் ஆணின் கையல்ல. பெண்ணின் கை. கையில் வளையல்கள் காணப்படுகின்றன. வீரர்களுக்கு எடுக்கப்படும் நடுகற்களில், குறிப்பாகக் கையை மட்டும் புடைப்புச் சிற்பமாகக் கொண்ட நடுகல் பற்றிய செய்தி கேள்விப்பட்டிராத ஒன்று. எனவே, இந்த நடுகல் வேறு வகையினதாக இருக்கவேண்டும்; இதுபற்றி மக்களிடையே வழங்கும் செய்திகள் சரியானவையாக இருக்கவாய்ப்பில்லை. இந்தக்கோணத்தில் தேடுதல் தொடர்ந்த வேளையில், 1918-ஆம் ஆண்டின் தொல்லியல் ஆண்டறிக்கையில் ஒரு குறிப்பு, மேற்படி நடுகல்லைப்பற்றிய தெளிவைத் தந்தது. 1917-ஆம் ஆண்டு, ஆந்திரப்பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் வனவோலு என்னும் ஊரில் கோட்டைக்கருகில் ஒரு சதிக்கல் கல்வெட்டு கண்டறியப்பட்டுப் பதிவானது பற்றி எழுதப்பட்டிருந்தது.  

வீரக்கை (HERO-HAND) என்னும் சதிக்கல்:
பெனுகொண்டா என்னும் ஊரில், இராமதேவ நாயக்கன் என்பான் இறந்ததும், அவன் மனைவி கங்காசானி என்பவள் தீப்பாய்ந்தாள். அவளுடைய இச்செயலைப் பெருமைப்படுத்தும் வகையில், திப்ப நாயக்கன் என்பவன் ஒரு நந்தவனத்தை அமைத்து அதன் முன்பாக ஒரு வீரக்கை  (HERO-HAND) நடுகல்லை நிறுவினான். இச்செய்தியைக் கொண்ட கல்வெட்டு கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 1405.

குற்றாலத்தைச் சேர்ந்த சொ. சந்திரவாணன் என்பவர், தம்முடைய “தமிழகத்தில் சதி”  என்னும் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுவதாவது: உடன் உயிர் விடும் பழக்கம் மன்னரில் தொடங்கி அனைவரிடமும் பன்னெடுங்காலம் இருந்துள்ளது. தீப்பாய்ந்த அம்மன், மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி (பூவாடைக்காரி, பூ=தீ ) என்று பலவாறு வணங்கப்படும் பெண் தெய்வங்கள் இவ்வாறு உடன் உயிர் நீத்த “சதி”ப் பெண்களே. கணவனோடு சுமங்கலியாகச் சுவர்க்கம் புகுதல், சமுதாயம் ”சதி”ப்பெண்களைத் தெய்வமாகப் போற்றுதல் ஆகிய நம்பிக்கையின் அடிப்படையில் “சதி” என்னும் மரபு சமுதாயத்தில் தொடர்ந்தது.

தமிழகத்தில் பெரும்பாலும், கையில் வாள் பிடித்த நிலையில் ஆணின் உருவமும், பூச்செண்டு, கண்ணாடி, குங்குமச்சிமிழ், அல்லது பழம் போன்றதோர் உருண்டைப்பொருளைக் கையில் பிடித்த நிலையில் பெண்ணின் உருவமும் பொறிக்கப்பட்ட சதிக்கற்கள் காணப்படுகின்றன. சில சதிக்கற்களில் கல்வெட்டுப் பொறிப்பும் உண்டு. பொறிப்புகளில் ”கணவனைப் பிரியாதாள்”,  “துணைவனைப் பிரியாதாள்”  ஆகிய தொடர்கள் காணப்படுகின்றன. ஆளுருவங்களே அன்றி, ஒருசில மங்கலப்பொருள்களால் உணர்த்தியும் சதிக்கற்கள் அமைவதுண்டு. ஒரு பெண்ணின் வலது கை, தோளிலிருந்து “ட” வடிவம் போல உயர்த்திக்காட்டப்பட்டு,  பூணிடப்பட்ட கம்பத்தில் அந்தக்கை இணைக்கப்பட்டுக் காணப்படுவதுண்டு. சென்னை அருங்காட்சியகத்தில் இது போன்ற கம்பங்கள் உள்ளன. இக்கம்பங்கள் உள்ள இடங்கள், ”வீரமாத்தி” என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரு கல்வெட்டு “தோளும் கையும் கொடுத்த கம்பம்”  என்று இதைக்குறிப்பிடுகிறது.

இந்திய அளவில் சதிக் கற்கள்:



இறந்த கணவனின் காலைத் தழுவியவாறு “சதி”
 
இந்திய அளவில், இந்தியாவின் மைய மாநிலப்பகுதி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சதிக்கற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவ்விடங்களில் பெரும்பாலும், சதிக்கற்கள் ஓரிரு அடுக்குகள் கொண்டதாக உள்ளன. மேல் அடுக்கில், ஒரு பெண்ணின் கை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கும். செங்கோணத்தில் (90 பாகை) மடித்த நிலையில் தோளும், செங்குத்தாக உயர்த்திய நிலையில் முன்கையும் காணப்படும். சில போது, பெண் தன் கையில் பெருவிரலுக்கும் முன்விரலுக்கும் இடையில் எலுமிச்சம் பழமொன்றை ஏந்தியிருப்பாள். கைக்கு மேற்புறம், நிலவும், கதிரும் வடிக்கப்பட்டிருக்கும். சில போது, நிலவு, கதிர் ஆகியவற்றோடு பூச்செண்டு, தேங்காய் ஆகியன காணப்படும். அருகில் சிவலிங்கம் இருப்பதும் உண்டு. இன்னொரு அடுக்கில், வீரன் வாளொடு நின்ற நிலையிலும், அவனருகில் அவன் மனைவி (சதி) நின்ற நிலையிலும் இருப்பது போன்ற தோற்றம். சில போது, மற்றுமொரு அடுக்கில், வீரன் குதிரையின் மீது அமர்ந்த நிலையில் (போர்க்காட்சியை உணர்த்துவது) இருப்பது போன்ற தோற்றம். வீரனின் தலைக்குமேல் குடை இருந்தால், அவன் அரசனாகவோ அல்லது படைத்தலைவனாகவோ இருப்பான். இறந்துபோன கணவனின் காலைத் தழுவிய நிலையில் மனைவி இருப்பதாக வடிக்கப்பட்ட சதிக்கற்களும் உள்ளன. ”சதி”ப்பெண்ணை வணங்குகின்றவர்களுக்கு அவள் நலமும், வளமும் சேர்ப்பாள் என்பது மக்கள் நம்பிக்கை.

கருநாடகத்தில் சதிக்கற்கள்:
சாமராஜநகர் சதிக்கல்தோளும் கையும் கொடுத்த கம்பம்-கையில் ஏந்திய எலுமிச்சை

கருநாடகத்தில் வீரக்கற்கள் என்னும் நடுகற்களைப்போலவே சதிக்கற்கள் என்னும் நடுகற்கள் மிகுதியும் காணப்படுகின்றன. சென்ற ஆண்டு நண்பர்களோடு “ஹம்பி”  என்னும் விஜயநகரம் சென்றபோது, சாமராஜ நகரம் என்னும் ஊருக்கு நாலுகல் தொலைவில் சாலையோரம் ஒரு நடுகல்லைப் பார்த்தோம். மகிழுந்தை நிறுத்தி அதனை ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். அப்போது அது ஒரு நடுகல் என்ற பொதுக்கருத்து மட்டுமே மனதில் நின்றது. சேவூர் நடுகல்லை மீளாய்வு செய்கையில், சாமராஜநகரத்து நடுகல், “தோளும் கையும் கொடுத்த கம்பம்” என்ற வகையைச் சேர்ந்த “சதிக்கல்” லுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்பது உணரப்பட்டது. இந்தச் சதிக்கல் சிதைவு ஏதுமின்றித் தெளிவான புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. ”சதி” என்னும் மரபுப்படி, உயிர் நீத்த பெண்ணின் வளைகள் அணிந்த ”ட” வடிவக் கை; அக்கை பிணைக்கப்பட்ட, வேலைப்பாடுகளோடு காணப்படும் கம்பம்; இறந்து பட்ட வீரனைத் தேவமகளிர் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி; வீரன் விண்ணுலகு அடைந்ததைக் குறிப்பால் உணர்த்தும் சிவலிங்க வழிபாடு; நடுகல்லின் கீழ்ப்பகுதியில் “சதி”ப் பெண்ணை வணங்குகின்ற பெண்மக்கள் ஆகிய அனைத்துக் கூறுகளும் இச்சிற்பத்தில் உள்ளன. இந்தச் சதிக்கல்லில் ”சதி”ப்பெண் தன் கையில் பெருவிரலுக்கும் முன்விரலுக்கும் இடையில் எலுமிச்சம் பழமொன்றை ஏந்தியிருப்பது சிறப்பான கூறு.

சதிக்கற்களில் உள்ள உருவங்கள் உணர்த்தும் உள்ளுறைக் கருத்துகள்:
சதிக்கற்களில் காணப்பெறும் புடைப்புச் சிற்ப உருவங்கள் பல கருத்துகளை உணர்த்துவதாக அமைகின்றன. நிலவு, கதிர், சிவலிங்கம் ஆகியவை சுவர்க்கம் என்னும் விண்ணுலகைக் குறிப்பன. பெண்ணின் கையில் உள்ள வளை, “சதி”ப்பெண்ணை வணங்குவோருக்கு அவள் அருளும் ஆசியைக்குறிக்கும்.

சேவூர் நடுகல்லும் சதிக்கல்லே:

மேற்குறித்த செய்திகளின் அடிப்படையில், சேவூரில் காணப்படும் நடுகல், ஒரு சதிக்கல் என்பது தெளிவாகிறது. நடுகல்லில் மேற்பகுதியில் நிலவும், கதிரும் காணப்படுகின்றன. அதனை அடுத்து, இரு பெண்கள் சிவலிங்க வழிபாடு செய்யும் காட்சி உள்ளது. அதனை அடுத்து, வளை அணிந்த “சதி”ப்பெண்ணின் கை. வீரக்கை (HERO-HAND) என்னும் சதிக்கல்லின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதில் ஐயமில்லை. திப்புசுல்தான் காலத்தைச் சேர்ந்த ஒரு சதிக்கல்லின் மூல நடுகல்லான அரியதொரு தொல்லியல் சின்னத்தை நாம் இழக்க நேர்ந்தது வருத்தமளித்தாலும், வியப்பை அளிக்காது. காரணம், தொல்லியல் சார்ந்த எவ்வளவோ எச்சங்களை அவற்றின் அருமை அறியாதார் அழிப்பதும், அருமை அறிந்தவர் அவற்றை அழிவிலிருந்து காக்கும் வழியறியாது விழிப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றனவே. தொல்லியல் துறையும், அரசும் அக்கறை கொள்ளவேண்டும். சேவூரின் வீரக்கை வகைச் சதிக்கல்லின் மூலவடிவத்தை மறந்துபோகாமல் நினைவூட்டும் வண்ணம் அதே வடிவில் படியெடுத்ததுபோல் மற்றொரு நடுகல்லை மக்கள் அதே இடத்தில் வைத்து வழிபடுவதைப் பாராட்டியே ஆகவேண்டும்.


நன்றி:
1.  இணையம் வழி பார்த்த ஓர் ஆய்வுப்பதிவு.
The  iconography of Sati: An Archaeological study of sati memorial Pillars of Central Asia-by Ameeta Singh, Sarojini Naidu Govt. Girls College, Bhopal.

2.  தமிழகத்தில் சதி-ஆய்வுக்கட்டுரை-.சந்திரவாணன்.

3.  இணையத்தில் கிடைத்த படங்களுக்காக.



___________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________



Sunday, July 16, 2017

தமிழர் மரபுவளத்தை மீட்போம்



Image may contain: 1 person, sitting and indoor 
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை 2001ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. தொடக்கம் முதல் படிப்படியாகத் தமிழர் வரலாறு, தமிழ் மொழி சார்ந்த ஆய்வு, ஓலைச்சுவடிகள் மற்றும் பழம் நூல்கள் பாதுகாப்பு எனத் தொடர்ந்து பல்வேறு உலகளாவிய தமிழ் நடவடிக்கைகள் இந்த அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நீண்ட நாட்களாகத் தமிழகத்தின் இஸ்லாமிய விழுமியங்களையும், வரலாற்றுச் செய்திகளையும், ஆவணங்களையும் பதிவு செய்யும் ஒரு முயற்சி தொடக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இருந்து வந்தாலும் அதற்குத் தகுந்த வாய்ப்பும் கால அவகாசமும் அமையப்பெறாமல் இருந்து வந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான வரலாற்று ஆவணப்பதிவு நடவடிக்கைகளில் தமிழக கிராமப்புற சடங்குகள், நாட்டார் தெய்வங்கள், நாட்டார் செவ்வியல் பாடல்கள், சைவ வைஷ்ண ஆலயங்களின் பதிவுகள், சமண வரலாற்றுப் பதிவுகள், கிறித்துவ தேவாலயங்கள் குறித்த பதிவுகள், ஐரோப்பியர்களின் தமிழக வரலாற்று ஆவணங்கள் தொடர்பான ஆய்வு, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், வாய்மொழிப்பதிவுகள், இந்திய வரலாற்றில் ஐரோப்பிய அறிஞர்களின் ஆய்வுப் பங்களிப்புகள் உள்ளிட்ட பரந்து பட்ட வரலாற்றுப் பதிவுகளின் தொடர்ச்சியில், இப்பொழுது தமிழக இஸ்லாமியர்களின் பண்பாட்டுப் பதிவுகளையும் இணைத்துள்ளோம். இந்த முயற்சி தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர்ச்சியான தமிழர் வரலாற்று மின்னாக்க முயற்சிகளில் சிறப்பிடம் பெறுவதாக அமைகின்றது. இந்தச் சிறப்பு வலைப்பக்கத்தினை மே மாதம் தொடங்கினோம். http://thf-islamic-tamil.tamilheritage.org/. 



இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள் போன்றவற்றின் பங்கு இல்லாமல் தமிழக வரலாற்றுப் பதிவுகளுக்கான முயற்சிகள் முழுமைபெறாது. இந்தியாவில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் அரபு, பர்சியன் கல்வெட்டுக்களும் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய விழுமியங்கள் எனும் போது பள்ளிவாசல்கள், தர்காக்கள், உணவு, வாழ்வியல் சடங்குகள், மொழிவளம் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழில் எழுதப்பட்ட பல இஸ்லாமிய நூல்கள் உள்ளன. பிரித்தானிய நூலகத்தின் ஆசிய நூல்கள் பகுதியில் கிடைக்கின்ற தமிழ் நூல்களில் இஸ்லாமியத் தமிழ் நூல்களும் அடங்கும் என்பதனை பலரும் அறியாது இருக்கலாம். இந்த நூல்களும் மின்னாக்கம் செய்யப்பட்டு அவற்றையும் தமிழ் ஆய்வாளர்களின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே நம் அவா.


கடந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களின் தென்னிந்திய வருகையின் போது அவர்கள் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்ற அரிய விலைமதிக்க முடியா அரும்பொருட்களில் ஏராளமான தமிழ் நூல்களும் அடங்கும். அப்படிக் கொண்டு செல்லப்பட்ட நூல்கள் ஐரோப்பாவின் சில குறிப்பிடத்தக்க நூலகங்களிலும், ஆர்க்கைவ்களிலும் மிகப் பாதுகாப்பாக இருக்கின்றன. அத்தகைய ஒரு முக்கிய ஆவணப் பாதுகாப்பகம் தான் பாரீசில் இருக்கும் பிரான்ஸ் தேசிய நூலகம். அங்குள்ள நூல்களில் அரியத் தமிழ் நூல்களைப் பார்வையிட சிறப்பு அனுமதி பெற்று பதினைந்து சுவடி நூல்களை மின்னாக்கம் செய்துள்ளோம். தமிழர்கள் எழுதிய பனை ஓலைச்சுவடிகள் என்பதோடு தமிழகம் வந்த பிரஞ்சுக்காரர்கள் அவர்கள் பார்த்த விடயங்களை தாமே தமிழ் கற்று தமிழிலும் பிரஞ்சிலும் எழுதிய நூல்களும் இவற்றுள் அடங்கும்.

ஓலைகளை தீயில் எரித்துக் கொளுத்தியும், ஆற்றில் விட்டு அழித்த தமிழ் மக்களில் சிலரது செயல்பாட்டோடு ஒப்பிடுகையில் தமிழகம் வந்த கிறுத்துவ பாதிரிமார்கள் சிலரது தமிழ் நூல்கள் மீதான ஆர்வமும் சிந்தனையும் பாராட்டுதலுக்குரியது. அந்த வகையில் தமிழகத்துக்கு வெளியே அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நூலகங்களில் பாதுகாக்கப்படும் இத்தகைய நூல்களைப் பற்றிய செய்திகளை பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை எமது முயற்சிகளைத் தொடர்வோம் எனத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றோம். 

Image may contain: 1 person, smiling
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Friday, July 7, 2017

கட்சி எனும் தூய தமிழ்ச் சொல்

-- நூ.த.லோக சுந்தரம்
"கட்சி"


சங்கநூல்களில் கட்சி எனும் சொல்லின் பயன்பாடுகள் பற்றி நுண்ணிதாய் அறிய ஓர் முற்றிய தொகுப்பு இருத்தல் தகும் எனும் எண்ணத்தில் தொகுக்கப்பட்ட நிரல் இது.  எல்லாவற்றிலும் கூட்டம் அல்லது ஓர் இனம் ஒன்றாய்  சேர்ந்த நிலை எனத்தான் பொருள் கொள்ளுதல் சிறப்பாகும் என்பது என் கருத்து. 

கள் எனும் பன்மைஈறு தொடர்புடையது (வேர்)

சங்கப்பாடல்களிலேயே ‘கட்சி' என்ற சொல் பறவைகள் (மயில், அன்றில்) விலங்குகள் (மடமா(ன்)) ஆகியவற்றிற்குப் புகலிடம் என்ற பொருளில் புழங்குகிறது என்ற கருத்து பொருந்தும். பல (மயில்கள்-குறும்பூழ்) சேர்ந்துள்ள கூட்டு நிலைதன்னை மட்டும் குறிக்கும் எனலாம். 
இந்நாளில் உள்ள இடம் எனும் பொருள் நீங்கிய நிலையில் (அரசியல்) கட்சி எனும் பொருள் மிகவும் தகுந்த வடிவத்தில்தான் பயனில் உள்ளது என்பதும் மெய்யே.

அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்                   
கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்
[235 மலைபடுகடாம்]

வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற்
கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்          
வன்புல மிறந்த பின்றை மென்றோன்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
[ 205 பெரும்பாணாற்றுப்படை]

வல்வாய்க் கவணின் கடுவெடி ஒல்லென          
மறப்புலி உரற வாரணம் கதற
நனவுறு கட்சியின் நன்மயில் ஆல
மலையுடன் வெரூஉம் மாக்கல் வெற்பன்
[15 அகநானுறு 392]

உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில் வளை விறலியும் யானும் வல்விரைந்து
[5 புறநானூறு 60]       

எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
கட்சி காணாக் கடமான் நல்லேறு                          
மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
[10  புறநானூறு 157]            

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்                    
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
[1 புறநானூறு 202]

நெருப்பி னன்ன செந்தலை யன்றில்                         
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
[குறுந்தொகை 160]

பொய்படு அறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்    
[அயிங்குறுநூறு 250]                   

வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே    
[நற்றிணை 13]                  

வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
[நற்றிணை 117]
        
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாது  
[நற்றிணை 276]           


இதர,

"ளகர"
மெய் ஈற்று            வினை வழி
வினை                    பிறந்த பெயர்

ஆள்                         ஆட்சி
மீள்                           மீட்சி
நீள்                            நீட்சி
திரள்                        திரட்சி
தெருள்                   தெருட்சி
மருள்                      மருட்சி

இணையான,

"ணகர"
மெய் ஈற்று          வினை வழி
வினை                  பிறந்த பெயர்

காண்                     காட்சி
மாண்                    மாட்சி
சேண்                    சேட்சி 



________________________________________________________ 








நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  
       

Thursday, July 6, 2017

எம் சி ராசா அவர்கள் எழுதிய Kinder Garden Room நூலுக்கு எழுதிய மதிப்புரை

எம் சி ராசா அவர்கள் எழுதிய Kindergarten Room  நூலுக்கு எழுதிய மதிப்புரை

எம்.சிmc raja.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ் பரவி இருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக வரலாற்றின் ஏடுகளிலிருந்து அவரது பெயர் மங்கிப்போகும் அளவிற்கு ஒர் இருட்டடிப்பு நடந்தது ஏன் என்பதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலமிது.

எம்.சி.ராஜா அவர்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, சமுகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர் என்று ஏற்றுக்கொள்வதற்கு பழையத் தலைமுறைக்கும், அதனை பின்தொடர மறுக்கும் இன்றைய தலைமுறைக்கும்கூடத் தயக்கம் இருக்கலாம். ஏனெனில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முன்னர் அரசியல் பணிகளைத் தொடங்கி, பின்னர் அவரோடு சமகாலத் தலைவராய் அறியப்பட்டதால் இந்த குழப்பமான வரலாற்று மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தீர்க்கும் விதமாக கிடைத்துள்ளச் சான்றுகளில் ஒன்றை இங்கே தருகிறேன்..

தலைவர் எம்.சி.ராஜா அவர்களைப் பற்றி Pioneer Allahabad  என்ற இதழ் 12.02.1930 அன்று பின்வருமாறு எழுதியது :

'எம்.சி.ராஜா அவர்கள் தாழ்வு மனப்பான்மையின் எதிரி.. சமூதாயப் புரட்சிm-c-raja 2யாளர்.. அவர் தம் இனத்தைக் காப்பற்ற வந்த வீரர். தாழ்த்தப்பட்டோரின் தலைசிறந்த வழிக்காட்டி. அழுத்தப்பட்ட தம் மக்களுக்காக அயராது போராடியவர். தடுமாறும் சமுதாயத்தின் ஒப்பற்ற நண்பர். தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புற வைத்த முதன்மையானத் தலைவர்''

அலகாபாத்தில் வெளியிடப்பட்ட செய்திகள் மட்டுமல்ல இப்படி பலவிதமானச் செய்திகள் அக்கால இதழ்களில் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. ஆய்வாளர்களின் பார்வைக்குக் காத்துக் கிடக்கின்றன.
1858ஆம் ஆண்டு நடந்த புரட்சியில் பங்கேற்ற மயிலை சின்னத்தம்பி அவர்கள், 1887இல் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபையின் செயலாளராக இருந்தவர். இந்த முன்னோடித் தலைவரின் மகனாக பிறந்ததினால் தானோ என்னவோ ராஜா அவர்கள் தம் தந்தையை மிஞ்சினத் தலைவராக, அகில இந்தியாவும் போற்றும் தலைவராக உயர்ந்தார். தம் கடின உழைப்பால் நிலைத்தார்.

எனினும் கிடைத்தச் சான்றுகளை ஒருக்கிணைத்துப் பார்க்கும் போது தமது முப்பதாவது வயதிற்குள்ளாகவே தென்னகம் முழுதும் அறியப்பட்டத் தலைவராக ராஜா அவர்கள் விளங்கினார். 1916 முதல் அவரது அரசியல் முயற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருந்தன. ஏனெனில் மாபெரும் தலைவராக இருந்த அயோத்திதாசப் பண்டிதர் 1914ல் மறைந்துவிட்டிருந்தார். மற்றொரு மாபெரும் தலைவரான ரெட்டமலை சீனிவாசம் அவர்கள் இன்னும் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்தார். எனவே அந்த இடைவெளியை சமூக அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த ராஜா அவர்கள் நிரப்பினார் என்றால் அது மிகையாகாது.

ராஜா அவர்கள் 1916ல் ஆதிதிராவிடர் மகாசன சபைக்குத் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்த 1917ல் மாண்டேகு செம்ஸ்போர்டு அரசமைப்புக் குழுவிடம் ஒடுக்ககப்பட்டோருக்கான உரிமைகளை வலியுறுத்தி ஒரு மனுவை அளித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அதனால் தொடர்ந்து வந்த அனைத்து அரசியல் மாற்றங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் குரலை ஒலிக்கும் தலைவராக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். அதன்பலனாக 1919 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணச் சட்டசபையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் தீண்டத்தகாத மக்களின் தலைவராக சட்டசபையில் அடியெடுத்து வைத்த முதல் தலைவர் ராஜா அவர்கள்தான், அதுவுமின்றி நீதிகட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில் பங்கேற்ற தீண்டத்தகாத சமூகத்தின் முதல் தலைவரும் ராஜா அவர்கள்தான். இந்தப் பொறுப்புகளில் நின்று அவர் ஆற்றியச் சாதனைகளை பட்டியலிட்டால் அவர் எவ்வளவு தூரம் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பது விளங்கும்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனம் அமைக்கப்பட்டதுடன் அதன் முதல் செயலாளராகவும் ராஜா அவர்கள் விளங்கினார். அதனால் நாடு முழவதும் பயணம் செய்து ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத மக்களை அரசியல் படுத்தி அவர்களை அமைப்பாக்கினார். அவரின் பணி பெருகியக் காரணத்தினால் 1930ல் மையச் சட்டசபையான நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனவே நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் தலைவர் மட்டுமல்ல 1934ல் தற்காலிக சபா நாயகராக இருந்தவரும் ராஜா அவர்கள்தான். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தீண்டாமைத் தொடர்பான மசோதா ஒன்றினை 1933ல் கொண்டு வந்தார். ஆனால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனது என்பது அவரின் கால சாதி இறுக்கத்தை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இப்படி விரிவான தளத்தில் தமது பணிகளை முன்னெடுத்தக் காரணத்தினால் நாடு முழுதும் அறியப்பட்டத் தலைவராக அவர் விளங்கியது மட்டுமின்றி அவரது காலத்தில், பரந்த அடித்தளத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் இசுலாமியக் கட்சிகளுக்கு இணையாக தம்முடைய அரசியல் பயணத்தை அவர் கட்டமைத்திருந்தார்.
ஆனால், வரலாறு அப்படியே போகவில்லை. அவர் முரண்பட வேண்டியக் காலத்தையும் அவருக்கு அளித்தது. 1930 ஆண்டு தொடங்கிய வட்ட மேசை மாநாடுகளில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிட்டாமல் போனது. ராஜா அவர்களை விட இளையவரான டாக்டர்.அம்பேத்கருக்கும், மூத்தவரான ரெட்டமலை சீனிவாசம் அவர்களுக்கும் கிட்டியது. இது ராஜா அவர்களின் மனதில் பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது. இதனால் அம்பேத்கர் அவர்களுடன் முரண்பட்டார். முரண்காட்சி என்னவென்றால் மாநாடு தொடங்கும் வரை தனிவாக்காளர் தொகுதி பற்றினக் கோரிக்கையை ராஜா அவர்கள் முன்வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அம்பேத்கர் அதில் உடன்பாடு கொள்ளமலிருந்தார். ஆனால் அரசியல் போக்கின் தீவிரத்தை உணர்ந்த அம்பேத்கர் தனிவாக்காளர் தொகுதி கோரிக்கையில் தேவைப்பட்ட மாறுதல்களை கொண்டுவந்து ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக மாற்றினார். ஆனால் அதுவரை இக்கோட்பாடுகளை வலியுறுத்தி வந்த ராஜா அவர்கள் தாம் ஆதரித்த கருத்தை மாற்றிக்கொண்டு, எதிர்க்கத் தொடங்கிவிட்டார். இதனால் தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல் களம் கடுமையாக சூடுபிடித்தது. மாபெரும் இரண்டுத் தலைவர்களின் மோதலாக அது உருவெடுத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பார்ப்பனீயச் சக்திகள் மோதலைக் கூர்மைப்படுத்தி, இருவருக்கும் இடையிலான இடைவெளியினைப் பெரிது படுத்தினார்கள். பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல அரசியல் களத்திற்கும் அன்றைக்கு நல்ல தீனியாக இருந்தது.

இரண்டாம் வட்ட மேசை மாநாடு முடிந்த பிறகு, இரட்டை வாக்குரிமை அம்பேத்கராலும் அவருக்குத் துணையாக இருந்த ரெட்டமலை சீனிவாசம் அவர்களாலும் பெறப்பட்டப் பிறகு, அதை ஒழிப்பதற்கு காந்தி மேற்கொண்ட முயற்சிகளால் நாடே வன்முறைச் சூழலில் சிக்கித் தவித்தது. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் உருவானதுதான் பூனா ஒப்பந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். இரட்டை வாக்குரிமையை கைவிட அம்பேத்கர் மறுத்தக் காரணத்தினால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வை மட்டுமல்ல, ஐரோப்பாவின் பார்வையும் அவர் மீது விழுந்தது. அம்பேத்கர் எடுக்கப்போகும் முடிவுதான் இந்தியாவின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் என்பதால் உலகம் அவரையே உற்று நோக்கியது. அம்பேத்கர் முடிவெடுத்தார். பூனா ஒப்பந்தம் உருவானது.

இந்நேரத்தில் எழுந்த கொந்தளிப்புகளில் கடும் மனஉளைச்சலில் ராஜா அவர்கள் இருந்தார். காங்கிரசாலும் பார்ப்பனீயச் சக்திகளாலும் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவராய் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். அவரது கோட்பாடுகளுக்கு எதிராக அவரே நின்ற கோலம்தான் அவரை மிகவும் தாக்கியிருக்க வேண்டும். அவரது அமைதி அவருக்கு வரலாற்றில் ஒரு மோசமான பாத்திரத்தை அளிக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். தன்னுடைய சொந்த முயற்சியினால் அகில இந்தியாவிலும் இருக்கும் தீண்டத்தகாத மக்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர் விரும்பியது நிறைவேறாமல் போனது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தாலும். விரைவிலேயே தம்மை அவர் மாற்றிக்கொண்டார். ஆனால் இந்த முரண்பாடு நிறைந்த அந்தக் காலத்தில் ராஜா அவர்கள் டாக்டர். அம்பேத்கருடன் முரண்பட்டக் காரணத்தினால் வரலாற்றிலிருந்தே புறக்கணிக்கப்படும் அளவிற்கு அவர் மறக்கடிக்கப்பட்டார். உண்மையில் இந்த மறக்கடிப்பும் இருட்டடிப்பும் அந்த மாபெரும் தலைவருக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுக் குற்றம்.

ஏனெனில், ராஜா அவர்கள் அம்பேத்கரோடு நீண்டகாலம் முரண்படவில்லை, விரைவிலேயே இருவரும் சந்தித்து, மனம்விட்ட பேசி தமது கருத்து வேற்றுமைகளைச் சரி செய்துக் கொண்டார்கள். அதன் பயனாக இருவரும் இணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்தனர். அந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் வந்து மிளிர்ந்தத் தலைவர்கள் எல்லோரையும் மங்கச் செய்து விட்டது. அதில் ராஜாவும் மங்கித்தான் போனாரென்றாலும், தன்னுடைய மறைவு வரை அம்பேத்கரோடு இணைந்து பணியாற்றினார் என்பதற்கு அம்பேத்கரின் எழுத்துக்களும் பேச்சுக்களுமே சாட்சி. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் நாள் எம்.சி.ராஜா என்ற மாபெரும் விடுதலைத் தலைவர் மறைந்த பிறகு..தலித் வரலாற்றுக் களம் அவரை மறந்துவிடவில்லை. தொடர்ந்தது என்பதே உண்மை. ஆனால் அவரை நினைவுக் கூர்வது வீச்சாக நடைபெறவில்லை, மாறாக, அம்பேத்கரின் தத்துவத்தால் உத்வேகம் பெற்ற இயக்கங்களின் எழுச்சியினால் மங்கிப் போனது என்பதே உண்மை.

ராஜா அவர்களைப் பற்றின இந்த அறிமுகம் மிகச்சிறியது என்பதை நாம் குற்ற உணர்வோடு ஒத்துக் கொள்கிறேன். எனவே அவர் விரிவாக வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இங்கே அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அவர் மேற்கொண்டப் பணிகளை விரிவாக மதிப்பிடக்கூடியத் தளம் இதுவல்ல என்றக் காரணத்தினால் இதாடு நிறுத்திக் கொண்டு, இந்த நூல் கையாளும் உள்ளடக்கத்தினைப் பற்றியும் அதன் வரலாற்று பாத்திரத்தைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ராஜா அவர்கள் களத்ததிலே இறங்கி மக்களை அணிதிரட்டிய தலைவரும் போராளியும் மட்டுமல்ல, அவர் சிறந்த கல்வியாளர். கற்றறிந்த அறிஞர், எழுத்தாளர், கவிஞர் என பன்முக ஆற்றல் பெற்றவர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லியன் மிஷன் பள்ளிக்கு கண்காணிப்பாளராக இருந்தார். பின்பு சென்னை கிறித்தவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் என்பதெல்லாம் அவர் சிறந்த கல்வியாளர் என்பதை காட்டும் சான்றுகளாகும்.

1997ல், தலித் சமூக அரசியல் வரலாற்றைப் பற்றி நான் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது, அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்களை அவரது இல்லத்தில் சந்திப்பது வழக்கம். அப்படியான ஒரு சந்திப்பில் அவர் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட செய்தியில் 'எம்.சி.ராஜா பல பள்ளிக்கூடப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்' என்று சொன்னார். ஆனால் அப்போது அந்த நூல்கள் பற்றி குறிப்பாக எதையும் அவர் சொல்லவில்லை. ஆனால், 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த அறவுரை எனும் மாத இதழில் அவற்றைப் பற்றினக் குறிப்பை பொன்னேவியம் அவர்கள் எழுதியிருக்கிறார்.

**'ராஜா அவர்கள் பல பள்ளிப் புத்தகங்களின் ஆசிரியராவார். சமூதாயத்தையொட்டி அவர் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற நூல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கோர் வழிக்காட்டியாக அமைந்தது என்றால் மிகையாகாது. நம்மை பீடித்தக் கெட்ட வேளையால் அவர் எழுதியக் கவிதைகள் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், அவர் ஒரு கவிதா உள்ளம் படைத்தவர் என்பதை அவரது வரலாற்றிலிருந்து அறிகிறோம்''

பொன்னோவியம் அவர்களின் இந்தக் குறிப்பு ஒர் ஒளியை ராஜா அவர்களை ஆய்வு செய்ய விரும்புவோருக்கு வழங்கும். அந்த அடிப்படையில்தான் Kindergarten Room என்ற தலைப்பிடப்பட்டு, எம்.சி.ராஜா அவர்களாலும் ஆர்.ரங்கநாயகி அம்மாள் அவர்களாலும் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த மழலையர் பள்ளிப் பாடநூலின் நம்பகத் தன்மையை உணர்ந்துக்கொள்ள முடிகிறது. எனவே, இனி, இந்த நூலின் கவிதைகளில் உள்ள சில அம்சங்களைப் பார்ப்போம்.

முதலில் இந்தக் கவிதைகளைப் படித்தவுடன் எனக்கு உருவான மனவெழுச்சியை என்னவென்று சொல்வது. விவரிக்க முடியாத மகிழ்ச்சி என் உள்ளத்தை ஆட்கொண்டது. ஏனெனில் இதிலுள்ள பல பாடல்கள் நான் சிறுவனாக இருந்தபோது நானும் என்னையொத்தவர்களாலும் பாடப்பட்ட பாடல்கள். எங்களுக்கு எப்படி அந்த பாடல்கள் கிடைத்தனவென்றால் எங்களுக்கு முன்பிருந்த தலைமுறை எங்களுக்குச் சொல்லித் தந்தவை. அப்படி வழிவழியாக வந்தப் பாடல்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவை மாபெரும் தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் வழங்கியப் பாடல்கள் என்று நினைக்கும்போது உள்ளம் உவகைக் கொள்கிறது.

இதில் சிறப்பு என்னவென்றால். மிக முக்கியமாக இரண்டுப் பாடல்கள் ஒரு குழந்தையாய் பேசத் தொடங்குவதற்கு முன்பே சொல்லித் தரப்பட்டப் பாடல்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக 'கை வீசாம்மா கைவீசு' (பாடல் .1), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (பாடல் .6) 'அகத்திக்கீரைப் புண்ணாக்கு'(பாடல் .19) அதிலே கொஞ்சம் நெய்வாறு' ஆகியப் பாடல்கள். இந்த பாடல்கள் குழந்தைகளை எளிய பயிற்சிகளை செய்யத் தூண்டுபவை மட்டுமின்றி, மறக்க இயலாதப் பாடல்களும்கூட. இன்றும்கூட தாய்மார்களால் தம்முடைய குழந்தைகளுக்கு வழியவழியாய் கற்றுக் கொடுக்கப்பட்டுவரும் பாடல்களாக பரிணமித்துள்ளவை. அதற்கு காரணம் என்வென்றால் அப்பாடல்களில் உள்ள எளிமையும் இசைநயமும்தான்.

நூலில் உள்ள பாடல்கள் பல இன்றளவும் நகர்புறச் சேரிப்பகுதிகளிலும் கிராமங்களின் அனைத்துப் பிரிவு மக்களிடையேயும் புழக்கத்தில் இருக்கும் பாடல்கள். அதுவுமின்றி இன்றைய பாட நூல்களில் சிறிய பெரிய மாற்றங்களுடன் நிலைத்துவிட்டவையும் இருக்கின்றன. குறிப்பாக சிலவற்றைப் பட்டியலிடலாம்..

'நிலா நிலா ஓடிவா ! (பாடல்.2),

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா ! (பாடல்.20) ஆகியப் படல்களை இன்றும் பாட நூல்களில் நாம் பார்க்க முடியும்.

சின்ன சின்ன கை (பாடல்.3),

உங்கம்மா என்னென்ன கேட்டாள் (பாடல்.8),

ஏழாங்காய் ஆட்டம் (பாடல்.10),

ஒரு புட்டம் திருப்புட்டம் (பாடல்.12),

பூ, பூ புளியாம்பூ (பாடல்.13)

நீ எங்கே போனாய் (பாடல்.14),

புல்லே புல்லே ஏன் மறைந்தாய் (பாடல்.22),

காக்கா காக்கா எங்கே போனாய் (பாடல்.23), சொட சொடாப் பழம் (பாடல்.28)'' ஆகியப் பாடல்களை இன்றளவும் குழந்தைளிடம் கேட்க முடியும். அவர்கள் விளையாடும் இடத்திற்குப் போனால் கூட்டிசைப் பாடல்களாய் அவை பாடப்படுவதை நீங்கள் அறிந்துக் கொள்ள முடியும்.

சில பாடல்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை, ஒரு முறை படித்தால் உடனே மனதில் பதிய கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவை. ஞாபகத்திறனை சோதித்து அறிய விரும்புகிறவர்களுக்கு அவற்றை பரிந்துரைக்க விரும்புகிறேன். குறிப்பாக.

'பனை மரமே ! பனை மரமே! (பாடல்.26),

தம்பி ! என்ன செய்தாய் (பாடல்.27),

ஈ – ஓ கொழுத்தக் கன்றே ! என் பேரைச் சொல்லு ?(பாடல்.29)'' இந்தப் பாடல்கள் மிகுந்த இசை நயம் வாய்த்தவை மட்டுமல்ல, தொட்டுத் தொடர வைக்கும் எளிமை நிறைந்தவை, அதனால் சட்டென மனதில் பதிந்துவிடுகின்றன. குழந்தைகள் சிலர் இந்த பாடல்களின் உள்ளடக்கத்தை மாற்றி, ஆனால் அதே ஓசை நயத்துடன் பாடுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்போதும்கூட..!

சில பாடல்கள் திரை இசைக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளன, குறிப்பாக – 'ஆராரோ ஆரிரரோ ! ஆராரோ ஆரிரரோ ! முத்தே பவழமே, முக்கனியே சர்க்கரையே! (பாடல்.21)'' என்ற தாலாட்டு பாடல் இளையராஜா அவர்களின் இசையில் பாடலின் சில பல்லவிகள் பாடப்பட்டுள்ளன, அதுவுமின்றி

'அரச மரத்துக் கிளி.. புன்னை மரத்துக் கிளி என்ற (பாடல்.24),''பாடலும் திரை இசையில் பயன்படுத்தப்பட்ட பாடல்தான். எனவே எம்.சி.ராஜா அவர்களுக்கு இசையில் நல்ல பரிச்சம் இருந்திருக்க வேண்டும் என்றுத் தெரிகிறது. நூலின் இறுதியில் வரும் பல பாடல்கள் எப்படி பாடப்பட வேண்டும் என்பதற்கு உதவியாக தமிழிசை ராகங்களை உடன் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்படி இந்த நூலின் சிறப்பைப் பற்றி விரிவாக பேசுவதற்கு மனம் விரும்பினாலும், வாசகர்களை ஒரு குழந்தை அனுபவத்தோடு படியுங்கள். ஒரு மாபெரும் அரசியல் தலைவர் குழந்தைகளுக்கான நூலினைப் படைக்கும்போது எவ்வளவு கவனத்துடன் இருந்திருக்கிறார் என்பது புரியும். அவரது மேதமையும் விளங்கும். இந்த நூல் மிகச்சிறியதுதான், தலித் குழந்தைகளுக்கு மட்டும் என்ற குறுகிய நோக்கத்திலன்றி ஒட்டுமொத்த குழந்தைகளை நோக்கி எழுதப்பட்டது என்பதை கூடுதலாக வலியுறுத்த விரும்புகிறேன்.

இறுதியாக இந்த நூலின் சிறப்பைப் பற்றி சொல்வதெனில்.. குழந்தையின் கல்வி என்பது இயற்கையை புரிந்துக் கொள்ளவும், இயற்கையை நேசித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், தமது சுற்றத்தின் மீது அன்பு கொள்ளவுமான ஒரு பரந்த பார்வையை குழந்தைகளுக்கு கற்றுத் தரும் என்பதே இந்நூலின் சிறப்பு. எனவே பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு வீட்டில் சொல்லித் தரவும் ஏற்ற நூல். சிறிய நூலானாலும் கீர்த்தியில் குறைவற்ற இந்நூலிற்கு அணிந்துரை எழுதுவதில் பெருமை கொள்கிறேன்.

இந்நூலைக் கண்டுபிடித்து, அதை இன்றையத் தலைமுறைக்குக் கொண்டுவந்துச் சேர்க்க பெரும் முயற்சியெடுத்து உழைத்துள்ள பாலாஜி அவர்கள் பாராட்டுக்குரியவர். மேலும், தலித் வரலாற்று ஆய்வில் சிகரங்களைத் தொடவும், சாதிகளற்ற சமத்துவ சமூதாயம் படைக்க அவரது முயற்சிகள் துணை நிற்கும். எனவே பாலாஜி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

அன்புடன்
ஜா. கௌதம சன்னா
05.01.2013, சென்னை.



Wednesday, July 5, 2017

நம்பியூர்-கோபி-பகுதியில் தொல்லியல் தடயங்களைத்தேடி ஒரு பயணம்

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

முன்னுரை:
அண்மையில், திருப்பூருக்கு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு என் நெருங்கிய உறவுக்கார இளைஞர் - என்னுடைய கல்வெட்டுகள் தொடர்பான தேடல்களை நன்கு அறிந்தவர் - தாம் கோபியிலிருந்து பயணப்பட்டுத் திருப்பூர் திரும்பும் வழியில் நம்பியூருக்கு அருகில் போத்தம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் கல்வெட்டு ஒன்றைப் பார்த்ததாகத் தகவல் தெரிவித்தார். உடனே அதனைப் பார்க்கும் ஆவல் மிகவே, கோவையிலிருந்து நம்பியூர் செல்ல முடிவாயிற்று. பயணத்தில் தொல்லியல் ஆர்வலர்களான நண்பர்களையும் உடன் அழைத்துச்செல்ல எண்ணி ஓரிரு நண்பர்களுக்குத் தகவல் தந்தேன். கோவைப்பகுதியில் இருக்கும் நண்பர்கள் இருவருக்கு வர இயலவில்லை. அவர்களில் ஒருவர் அவினாசியில் ஆசிரியப்பணியில் இருக்கும் இரமேஷ் அவர்கள். அவர், ஏற்கெனவே இந்தக் கல்வெட்டை நேரில் பார்த்து ஆய்வு செய்திருக்கிறார். எழுத்துகளின் தெளிவின்மை காரணமாகக் கல்வெட்டுச் செய்தியை முழுமையாகப் படிக்கவில்லை என்று அவர் படித்த அளவில் கல்வெட்டு வரிகளை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார் (அவற்றின் துணை கொண்டு கல்வெட்டு மீளாய்வு செய்யப்பட்டது.)

சத்தியிலிருந்து, ஆசிரியர் பணியிலிருக்கும் ஃபவுசியா வந்திருந்தார். இவர், வரலாறு, தொல்லியல் புலங்களில் மிகுந்த ஈடுபாடும் கற்றல் விருப்பும் கொண்டவர். தனியே, தமக்குத் தெரிந்த இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வைத்திருப்பவர். இவருடைய நண்பர் கோபியைச் சேர்ந்த சிவக்குமார் என்னும் இளைஞர்; தொழில் முறையில் வணிகத்தை ஏற்றிருந்தாலும் வரலாற்று ஆர்வமுடையவர். இத்துறையில் ஈடுபட்டுத் தம்மை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவருக்குச் செயல்வடிவில் ஒரு தொடக்கமாக இப்பயணம்  அமைந்தது. நம்பியூரில் நாங்கள் மூவரும் சந்தித்துப் போத்தம்பாளையம் பயணப்பட்டோம்.

போத்தம்பாளையம் பெருமாள் கோயில்:

கோயிலின் தோற்றம்


வரலாற்று ஆர்வலர்கள்-கோயில் நிர்வாகியுடன்

போத்தம்பாளையம், அவினாசி-கோபி சாலையில் நம்பியூருக்கும் சேவூருக்கும் இடையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். சாலையிலிருந்து மேற்கே பிரியும் ஒரு சிறிய சாலையில் பத்து நிமிடப்பயணத்தில் பெருமாள் கோயிலை அடையலாம். கோயிலின் பெயர், வேணுகோபாலசாமி கோயில். பாமா, ருக்குமணி ஆகிய இறைவியரை இருபுறமும் கொண்டுள்ள வேணுகோபாலன். அகன்றதொரு வளாகத்தைப் பெற்றிருந்த கோயில்  வடிவில் சிறியது. ஒரு சிறிய கருவறையும் அதையடுத்து ஓர் அர்த்தமண்டபமும் உள்ளன. கருவறை கல்கட்டுமானத்தால் ஆனது. கருவறையின்மேல் ஒருதள விமானம். கோயில் கட்டிடக்கலையில் நாகர விமானம் எனக் குறிக்கப்படும் சதுர வடிவம் கொண்டது. விமானத்தின் தளப்பகுதியில் நான்கு புறமும் நடுவில் கோட்டமும், அதன் இருபுறமும் சில புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. அவற்றில், மனித உருவங்களும் , யானை போன்ற விலங்கு உருவங்களும் காணப்படுகின்றன. விமானத்தின் நான்கு புறச்சரிவுகளிலும் மகர தோரணங்கள் உள்ளன. விமானத்தின் உச்சியில் கலசம். வழக்கமாகச் செங்கல்லால் அமையும் விமானம் போலன்றி, இது காரையால் மட்டுமே கட்டப்பட்டது எனக் கோயில் தானத்தார் கூறினார். கோயில் முழுதும் காவி வண்ணப் பூச்சு. அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள முன்மண்டபம், சுற்றுச் சுவரால் மூடப்பட்ட மண்டப அமைப்பைக் கொண்டுள்ளதல்ல; தற்கால அமைப்பில், இரும்புக்குழல் கம்பங்களும், மேலே வேயப்பட்ட உலோகக் கூரையும் கொண்டது.

நினைவுக்கல் சிற்பம்

முன்மண்டபத்தில் அர்த்தமண்டப வாயிலின் வலப்புறமாக, வடக்கு நோக்கிய நிலையில் ஒரு நினைவுக்கல் சிற்பம் காணப்படுகிறது. சிறிய மேடையொன்றில் இச்சிற்பம் நிறுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆணின் உருவமும், ஒரு பெண்ணின் உருவமும் கொண்ட சிற்பம். கோயில் கட்டுவித்தவராயிருக்கக் கூடும்; அல்லது கோயிலில் திருப்பணி செய்தவராய் இருக்கக் கூடும். மனைவியருடன் உள்ளார். ஆணின் சிற்பத்தில், ஆணின் வலக்கையில் சேகண்டி எனப்படும் இசைக்கருவியும், இடக்கையில் சங்கும் காணப்படுகின்றன. பெண் சிற்பம், இரு கைகளைக் கூப்பி வணங்கும் நிலையில் காணப்படுகிறது. வைணவச் சிறப்புச் சின்னங்களான சங்கும், ஆழியும் (சக்கரம்) ஆண், பெண் இருவரின் தோள்ப்பகுதிகளில் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண், பெண் இருவரும் கழுத்து, கைகள், கால்கள் ஆகியவற்றில் அணிகலன்கள் பூண்டிருக்கிறார்கள். இருவருமே கால்கள் வரை ஆடை அணிந்துள்ளனர். ஆடை மடிப்புகள் கோடுகளால் புலப்படும்படி செதுக்கப்பட்டுள்ளது. இருவரின் கால்களுக்கு நடுவில் அமைந்த இடைவெளியில், ஒரு காளை மாட்டுச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் வடிக்கப்பட்டவர், கால்நடைச் சமுதாயத்தைச் சேர்ந்த இடையராய் இருக்கலாம் என்ற கருத்தை இக்காளை மாட்டுருவம் சுட்டுகிறது. புடைப்புச் சிற்பமாக இருப்பினும், பலகைக் கல்லில், சிற்பங்களின் கழுத்துப்பகுதியிலும், இடைப்பகுதியிலும் சிறு சிறு துளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிற்பங்களின் வடிவமைப்பு பிற்காலத் தோற்றம் கொண்டிருப்பதால், சிற்பத்தின் காலம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று கொள்ளலாம்.


பலகைக்கல் கல்வெட்டு

அர்த்தமண்டபத்தினுள், தென்மேற்கு மூலையில், ஒரு பலகைக் கல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில்தான் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல் பாதிப்பகுதியில் புடைப்பு உருவங்களும், கீழ்ப்பாதிப் பகுதியில் எழுத்துகளும் உள்ளன. நாயக்கர் ஆட்சிக்காலத்திலிருந்து கல்வெட்டுகளில் கதிரும், நிலவும் செதுக்கப்படும் வழக்கம் உள்ளது. செய்யப்பட்ட தன்மம் (கொடை), கதிரும் நிலவும் உள்ளவரை அழியாது, இடைநிறுத்தம் இல்லாது தொடரவேண்டும் என்னும் கருத்தின் குறியீடாகவே இது கொள்ளப்படுகிறது. கல்வெட்டு வாசகத்திலும் “சந்திராதித்தியவரை”  என்ற தொடர் இதைக்குறிக்கும். இவ்வழக்கத்தையொட்டி, இக்கல்வெட்டின் தலைப்பகுதியில் இரு ஓரங்களில் கதிரும் நிலவும் செதுக்கப்பட்டுள்ளன. நடுப்பகுதியில், வைணவக் குறியீடான திருமண் (நாமம்) உருவம் உள்ளது. அடுத்த நிலையில், ஆழியும் சங்கும் ஒரு பீடத்தின் மீது நிறுத்தப்பட்டதுபோல் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களுக்குக் கீழ், பத்து வரிகள் கொண்ட எழுத்துப்பொறிப்பு உள்ளது. எழுத்து மொழியும், சொற்களைச் சரியாகக் கையாளும் திறமையும் இல்லாத ஒரு கல்தச்சர் எழுத்துகளைப் பொறித்திருக்கவேண்டும். காரணம், பிழையான சொற்கள். எழுத்துகளின் வரிவடிவமும் திருத்தமாக இல்லை. கல்வெட்டு வரிகளில் காலக் குறிப்பு எதுவுமில்லை, சர்வதாரி வருடம் என்பதைத் தவிர. கல்வெட்டின் எழுத்தமைதி, சர்வதாரி என்னும் ஆண்டுக்குறிப்பு ஆகியன கொண்டு, கல்வெட்டின் காலம் கி.பி. 1888 ஆகலாம் எனக் கருத வாய்ப்புள்ளது. எனவே, நினைவுக்கல்லின் பழமையும், கல்வெட்டின் பழமையும் இருநூறு ஆண்டுகளுக்குள் அமைகின்றன. கோயிலின் பழமையையும் இருநூறு ஆண்டுகள் அளவில் நிலைநிறுத்தலாம். கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு :

கல்வெட்டுப்பாடம்:

1     சுமணயன சிலை (சபை?)
2     சறுவதரி வருச
3     ம் அப்பிசை மதம்
4     15 தேதி செல்லி
5     ன குப்பயி மள்
6     பாகாயி சி
7     (லை?) வய்த ன்ம
8     முதல் பெரு ம்
9     த(க)ன கொபால்
10   ...............ப்பட


முன்னரே குறித்தவாறு, கல்வெட்டை எழுதியவர் மொழியறிவுக் குறைபாடு கொண்டவராக இருக்கவேண்டும் ஏனெனில், சொல்லவந்த சேதி என்ன என்பதைச் சரியாக எழுதத் தெரியவில்லை என்பதை மேலே கல்வெட்டின் வாசகம் தரும் குழப்பத்திலிருந்து உணரலாம். சர்வதாரி என்னும் சொல் தமிழ் ஆண்டைக்குறிக்கும் வடசொல். அதனை தமிழ்வடிவத்தில் “சருவதாரி” என எழுதலாம். ஆனால், இங்கே, இடையின “ரி” எழுத்து, வல்லின “றி”  என்பதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், “தாரி” என்னும் நெடில், “தரி”  என எழுதப்பட்டுள்ளது. முதல் வரியில் ”சு ம ண ய ன”  ஆகிய எழுத்துகள் எந்தப்பொருளையும் தரவில்லை. முதல் வரியின் இறுதிச் சொல், “சபை” என்றும், “சிலை”  என்றும் படிக்கும் வகையில் குழப்பமாக எழுதப்பட்டுள்ளது. “மாதம்”  என்பது “மதம்”  என எழுதப்பட்டுள்ளது. ”குப்பயி”, “பாகாயி”  ஆகிய சொற்கள் காணப்படுகின்றன.  மீண்டும் ”சிலை”  என்று பொருள்படும்படி ஒரு தெளிவற்ற சொல். “வைத்த”   என்னும் சொல்லை “வய்த” என்று எழுதியிருப்பதாக நாம் யூகம் கொள்ளுமாறு ஒரு சொல் மயக்கம். இதேப்போன்று,  “முதல் பேரு”  என்பதன் பொருள் தெளிவாகவில்லை. “கொபால” (கோபால)  என்னும் சொல், இறைவனின் பெயரான “வேணுகோபால”  என்பதைக் குறிக்கிறதா, இல்லை, “தனகோபால்”  என்னும் வேறொரு ஆள் பெயரைக் குறிக்கிறதா என்பதும் மிகுந்த ஐயத்தை எழுப்புகிறது. முதல் வரி, “சுவாமி சிலை” என்று ஊகிக்கும்படியாகவும் உள்ளது. முடிவாக, கல்வெட்டு, இறைவனின் சிலையைச் செய்து கொடுத்தது பற்றியோ, கோயிலுக்குச் செய்த ஏதோவொரு தன்மத்தைப்பற்றியோ கூறுகிறது எனக் கொள்ளலாம். அந்தச் செயல் நடைபெற்ற ஆண்டு சர்வதாரி என்பது மட்டும் தெளிவாகிறது. அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழாண்டுகளின் சுழற்சியில், கி.பி. 1888, கி.பி. 1828 ஆகிய இரு ஆண்டுகளில் சர்வதாரி ஆண்டு அமைகிறது. இவ்விரு ஆண்டுகளில் ஓர் ஆண்டினைக் கல்வெட்டின் காலமாகக் கொள்ளலாம்.

தும்பிக்கை ஆழ்வார்:
தும்பிக்கை ஆழ்வார் என்னும் விநாயகரைப்பற்றி இணையத்தில் (விக்சனரி) காணப்பட்ட செய்தி இங்கு தரப்படுகிறது.

"இந்து சமயக் கோட்பாடுகளில் விநாயகரை வணங்காமல் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிய விநாயகரை வழிப்பட்டேயாகவேண்டும். விநாயகர் சிவபெருமானின் மகன். தீவிரமாகத் திருமாலை வழிபடும் வைணவர்கள் சிவன் தொடர்புடைய எதையும் கொண்டாடமாட்டார்கள். ஆனால் இந்து சமய நெறியின்படி ஒரு காரியத்தை தொடங்கும்போது விநாயகரை வழிபடுவது கட்டாயம். இந்த நிலையில் வைணவர்கள் விநாயகரையே வைணவ சமய சம்பந்தப்பட்டவராக்கி, விநாயகர், கணபதி என்றெல்லாம் அழைக்காமல் ' தும்பிக்கை ஆழ்வார்' என்று வைணவப் பெயரிட்டே வணங்கினார்கள். பெரும்பாலும் விநாயகரின் திருவுருவத்தை வழிபடாமல் சொல்லும் மந்திரங்களில் அவரை வேறு பெயர்களால் கொண்டாடுவர். சில சந்தர்ப்பங்களில் திருவுருவம் தேவையென்றால் விநாயகருக்குத் திருநீறு (விபூதி) அணிவிக்காமல் வைணவ முறைப்படி திருமண் (நாமம்) இட்டு வணங்குவார்கள். சில வைணவக் கோயில்களில் விநாயகரை இந்தக் கோலத்தில் மிக அரிதாக இன்றும் காணலாம்..எனினும் இந்த வழக்கம் தற்காலத்தில் வைணவர்களிடையே பெரிய அளவில் நடைமுறையில் இல்லை என்றே கொள்ளலாம்..”


தும்பிக்கை ஆழ்வார்

இத்தகைய பிள்ளையாரின் சிற்பம் இக்கோயிலில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு தனிச் சன்னதியைக் கட்டி அதில் வைணவப்பிள்ளையாரை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். பிள்ளையாருக்கு இரு கைகள் மட்டுமே உள்ளன. ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் ஆழியும் ஏந்தியிருக்கிறார்.


ஒண்டி முனியப்பன் கோயில்

அடுத்து, நாங்கள் செல்ல வேண்டிய இலக்கு, கோபி-சத்தி சாலையில், பங்களாப்புதூர், தூக்கநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள மத்தாளக்கோம்பு என்னும் இடம். போகும் வழியில் பங்களாப்புதூர்ச் சாலையின் ஓரத்திலேயே ஒரு முனியப்பன் கோயில். ஒண்டிமுனியப்பன் என்னும் பெயருடைய இந்தக் காவல் தெய்வம் நாட்டார் வழிபாட்டு மரபில் நீண்ட காலமாக இங்குள்ளது. கிராமத்து மக்களின் நம்பிக்கைத் தெய்வமும் கூட. அவருக்கு  ஏன் ஒண்டி முனியப்பர் என்று பெயர்? காரணம் தெரியவில்லை. ஒற்றையாய் இருப்பது காரணமாகலாம். பல கோயில்களில், ஒன்றுக்கு மேற்பட்ட முனியப்பன் சிலைகளைக் காண்கிறோம். இப்பகுதி மக்கள் தம் உள்ளக்கிடக்கையை வேண்டுகோளாக முனியப்பனிடம் வைக்கிறார்கள். வேண்டுவதை நிறைவேற்றித்தரும் ஆற்றல் பெற்றவர் முனியப்பன் என்று மக்களுக்கு அசையாத நம்பிக்கை.

உருவாரம்

கிராமத்து எளிய மக்கள் தம் எளிய விருப்பங்கள் நிறைவேறவும், தம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் இடர்கள் நீங்கவேண்டியும் முனியப்பனிடம் நேர்ந்துகொண்டு, நேர்த்திக் கடன் கழிக்கும் பாங்கில், மண் பொம்மைகளைச் செய்து கோயில் வளாகத்தில் வைத்து வழிபடுகிறார்கள். இப்பொம்மை உருவங்களை உருவாரம் என்று அழைக்கிறார்கள். நிறைய மனித உருவங்கள்; பெரியவர்கள், சிறார் ஆகியோரின் உருவங்கள். கால்நடைகள், நாய்கள் ஆகியவற்றின்  உருவங்களும் உள்ளன. அவற்றின் ஊறுகளையும் முனியப்பன் களைகிறார். பாம்பைக் கண்ட அச்சம் விலகப் பாம்புப்பொம்மைகள். கால்களின் ஊறு களையத் தனியே பொம்மைக் கால்கள். படிப்பு வரவேண்டிப் புத்தகத்துடன் மாணவன் பொம்மை. ஒரு மரத்தில் இரும்புச் சங்கிலிகள். அவை எதைக்குறிக்கின்றன எனத் தெரியவில்லை.

மத்தாளக்கோம்புப் பிள்ளையார்:
 
விநாயகர் கோயில்


மத்தாளக்கோம்பு விநாயகர்
மத்தாளக்கோம்பில் ஒரு புதுமையான பிள்ளையார் கோயில் கொண்டிருக்கிறார். பழமையான அரசமரத்தடியில். மத்தாளக்கோம்பு விநாயகர் என்னும் பெயருடன் விளங்கும் இந்த விநாயகர் சிற்பம் புதுமையானது; மாறுபட்டது. இரு கைகளுடன் திகழும் விநாயகர் தம் இடது கையால் ”ட” வடிவில் உள்ள தும்பிக்கையைத் தாங்கிப்பிடித்திருக்கிறார். நீள்வட்ட வடிவில் தலை; ஆனைமுகத்தில், ஆனைச்செவியைக் காணவில்லை. செவிப்பகுதியிலிருந்து சரியும் தோள்பட்டைகள் இரண்டும் பருத்தும், கைகள் இரண்டும் மெலிந்தும் காணும் முரணிய தோற்றம். உருண்டும் திரண்டும் வழக்கமாய்க் காணப்படும் “குண்டு வயிற்”றைக் காணவில்லை. சதுரவடிவில் புடைத்த வயிற்றுப்பகுதி. வயிற்றை ஒட்டி, மடித்த குள்ளக் கால்கள். தும்பிக்கை இல்லையெனில் அது ஒரு பிள்ளையார் சிற்பம் என நம்ப இயலாது. சிற்ப வேலைப்பாடுகள் எவையுமின்றி வடிக்கப்பட்ட ஒரு பழங்கற்சிலை. அழகு இங்கு முதன்மையல்ல; “நான் தும்பிக்கையைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறேன். அதை மட்டும் பார்; நீ நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொள்”  என்று சொல்லாமல் சொல்லும் குறிப்பின் உருவம்தான் இந்தப் பிள்ளையார்.

மத்தாளக்கோம்புச் சுனைநீர்க் குளம்

மத்தாளக்கோம்பு நீரூற்று- நாளிதழ்ச் செய்தி

மத்தாளக்கோம்பில், பிள்ளையார் கோயிலுக்கருகில் ஒரு சிறிய குளம் உள்ளது. உண்மையில், இது குளமல்ல. இயற்கையாய் அமைந்த ஒரு நீரூற்று. ஐந்நூறு ஆண்டுகளாய் வற்றாமல் ஊற்றெடுத்து வரும் நீர் நிலை. குளம் போல் தேங்கிப் பின்னர் வழிந்து அடுத்துள்ள வாய்க்கால் வழியே வெளியேறி, வாநி (பவானி)யாற்றுடன் கலக்கிறது. இந்த நீரூற்று பற்றி, தூ.நா. பாளையம் வரலாற்று ஆராய்ச்சியாளர் இராமசாமி அவர்கள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நாளிதழொன்றில் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் அவர், அங்கே படிக்கட்டுகளில் கல்வெட்டு காணப்படுவதாகவும், கல்வெட்டு படிக்கப்படும்போது மேலும் சில செய்திகள் தெரியவரும் என்றும் குறிப்பிடுகிறார். ஆசிரியர் பவுசியா அவர்களும் முன்பு இங்கு வந்திருந்தபோது கல்வெட்டைக் கண்டிருக்கிறார். கல்வெட்டைப் படிக்கும் ஆவலிலேயே நாங்கள் தற்போது இங்கு வந்தோம்.

குளத்துப் படிக்கற்களில் கல்வெட்டு

குளத்தின் படிக்கட்டுகளில் உள்ள இரண்டு கற்களில் எழுத்துகள் காணப்பட்டன. கற்களின் மேற்பரப்பு செம்மைப்படுத்தப்படாமல், கரடு முரடாக இருந்த நிலையிலேயே அவற்றின்மீது எழுத்துகளைப் பொறித்திருக்கிறார்கள். எனவே, கற்களில் இயல்பாய் இருக்கும் பள்ளங்களினூடே எழுத்துகளும் இருப்பதால், எழுத்துகள் புலப்படவில்லை. சுண்ணப்பொடியை நீரில் குழைத்து, கற்களின்மீது பூசிக் காயவிட்டபின், ஓரளவு எழுத்துகள் புலப்பட்டாலும் கல்வெட்டு வாசகங்களை முற்றாகப் படிக்க இயலவில்லை. சில சொற்களை மட்டும் படிக்க இயன்றது. நீரூற்றைச் சுற்றியும் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்துக் குளம்போல் கட்டிக்கொடுத்தவர் யார் என்பதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. தூக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மூக்கண்ண கவுண்டர் என்பவர் இந்தப் பணியைச் செய்துள்ளார்.

முடிவுரை:
மத்தாளக்கோம்பு பிள்ளையார் கோயிலையும், நீரூற்றையும், கல்வெட்டையும் பார்த்து முடித்ததும், இப்பகுதியின் தொல்லியல் தடயங்களைத் தேடி மேற்கொண்ட  எங்கள் பயணம் நிறைவுற்றது. பயண இறுதியில், தூ.நா. பாளையத்தில், வரலாற்று ஆராய்ச்சியாளர் இராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினோம். அவர், மத்தாளக் கோம்பு பற்றி அவர் வெளியிட்ட நாளிதழ்ச் செய்தியைக் காண்பித்தார்.


___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________