-- நூ.த.லோக சுந்தரம்
"கட்சி"
சங்கநூல்களில் கட்சி எனும் சொல்லின் பயன்பாடுகள் பற்றி நுண்ணிதாய் அறிய ஓர் முற்றிய தொகுப்பு இருத்தல் தகும் எனும் எண்ணத்தில் தொகுக்கப்பட்ட நிரல் இது. எல்லாவற்றிலும் கூட்டம் அல்லது ஓர் இனம் ஒன்றாய் சேர்ந்த நிலை எனத்தான் பொருள் கொள்ளுதல் சிறப்பாகும் என்பது என் கருத்து.
கள் எனும் பன்மைஈறு தொடர்புடையது (வேர்)
சங்கப்பாடல்களிலேயே ‘கட்சி' என்ற சொல் பறவைகள் (மயில், அன்றில்) விலங்குகள் (மடமா(ன்)) ஆகியவற்றிற்குப் புகலிடம் என்ற பொருளில் புழங்குகிறது என்ற கருத்து பொருந்தும். பல (மயில்கள்-குறும்பூழ்) சேர்ந்துள்ள கூட்டு நிலைதன்னை மட்டும் குறிக்கும் எனலாம்.
இந்நாளில் உள்ள இடம் எனும் பொருள் நீங்கிய நிலையில் (அரசியல்) கட்சி எனும் பொருள் மிகவும் தகுந்த வடிவத்தில்தான் பயனில் உள்ளது என்பதும் மெய்யே.
அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்
கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்
[235 மலைபடுகடாம்]
வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற்
கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
வன்புல மிறந்த பின்றை மென்றோன்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
[ 205 பெரும்பாணாற்றுப்படை]
வல்வாய்க் கவணின் கடுவெடி ஒல்லென
மறப்புலி உரற வாரணம் கதற
நனவுறு கட்சியின் நன்மயில் ஆல
மலையுடன் வெரூஉம் மாக்கல் வெற்பன்
[15 அகநானுறு 392]
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில் வளை விறலியும் யானும் வல்விரைந்து
[5 புறநானூறு 60]
எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
[10 புறநானூறு 157]
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
[1 புறநானூறு 202]
நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
[குறுந்தொகை 160]
பொய்படு அறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்
[அயிங்குறுநூறு 250]
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே
[நற்றிணை 13]
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
[நற்றிணை 117]
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாது
[நற்றிணை 276]
இதர,
"ளகர"
மெய் ஈற்று வினை வழி
வினை பிறந்த பெயர்
ஆள் ஆட்சி
மீள் மீட்சி
நீள் நீட்சி
திரள் திரட்சி
தெருள் தெருட்சி
மருள் மருட்சி
இணையான,
"ணகர"
மெய் ஈற்று வினை வழி
வினை பிறந்த பெயர்
காண் காட்சி
மாண் மாட்சி
சேண் சேட்சி
________________________________________________________
நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________
No comments:
Post a Comment