Sunday, April 30, 2017

தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா?

-- தேமொழி 

“ஊட்டியின் மோயாற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், அதன் வடக்குப் பகுதி கர்நாடக எல்லையிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் நீரானது கபினி மற்றும் நுகு அணைகளைச் சென்றடைகிறது. பின்னர் இரு அணையிலிருந்தும் வெளியேறும் நீரானது ஒன்றாக இணைந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் இணைந்து, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாகத் தமிழகத்திற்குள் பாய்கிறது.”

கடந்த சில நாட்களாகத் தமிழக உழவர்களுக்கு உதவும் வகையில் சிந்தித்த சிலர் வெளியிட்டுள்ள தகவல் இது. இவ்வாறு கர்நாடகாவில் பாயும் மோயாற்றின் வழியாக கர்நாடகா பலன் அடைவதாகவும், இதனால் அவர்களுக்கே நாம்தான் நீர் தருகிறோம் என்றும், அதை அவர்கள் தமிழகத்திற்குத் தரமறுக்கிறார்கள் என்றும், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்துக் கொண்டுள்ளது என்றும், மோயாற்றின் மீது நாம் ஓர் அணையைக் கட்டிவிட்டோம் என்றால் கர்நாடகா நீருக்காக நம்மைக் கெஞ்சும் நிலை உருவாகிவிடும் என்றும், இந்த உண்மை தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்கள் தன்னலத்தின் காரணமாக இத்தீர்வை எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை என்றும் பலமான கருத்துப் பரப்புரை பல சமூக வலைத்தளங்களிலும் மாறி மாறிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இணையத்தின் சில “செய்தித் தளங்களும்” கூட இவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை. ஆனால் இது உண்மையா, இதனால் தீர்வு கிடைக்குமா என்று ஒருவரும் அக்கறை இன்றி வரும் செய்திக்கு கருத்துப் பகிர்வதும் தொடர்கிறது என்பதுதான் வியப்புக்குரியது. இத்தகைய போக்கிற்கு நன்கு கற்றவர்களும் விதிவிலக்கல்ல.

மோயாறும் அது பாயுமிடங்களும்:


நீலகிரியின் வடக்குப் பகுதியில் துவங்கி காடுகளின் வழியேமட்டும் பாயும் மோயாற்றின் நீளம் 100 கிமீ.க்கும் குறைவானது. இதில் சுமார் 25 கிமீ. கர்நாடகா எல்லைக்குள் பாய்கிறது. முதுமலைக் காட்டின் வழியாகப் பாயும் இந்த மோயாறுதான் அப்பகுதியின் வனவிலங்குகளின் வாழ்வாதாரம். மோயாற்றுக்குக் கிளையாறுகள் எதுவும் கிடையாது.  மேலும் மோயாறு போல துவக்கநிலையில் உள்ள எந்த ஒரு ஆற்றிற்கும் கிளையாறுகளும் இருக்காது. இவ்வாறு நீலகிரியின் வடபகுதியில் பாயும் மோயாறும், நீலகிரியின் தென்பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியே பாயும் பவானி ஆறும் பவானிசாகர் நீர்த்தேக்கத்தைத் தங்கள் நீரால் நிரப்புகின்றன. இதற்காக சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் பவானி திட்டம் மூலம் பவானிசாகர் அணையும் கட்டப்பட்டு 33 கோடி கன அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

மோயாற்றின் பள்ளத்தாக்கில், மோயாற்றின் வடகரை சத்தியமங்கலம், தலைமலை, தாளவாடி பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப் பகுதியும்; தென்கரை கொடநாட்டுப் பகுதியும் வெவ்வேறு விலங்குகளின் இருப்பிடங்களாகத் திகழ்கின்றன. சோலைக் காடுகளைக் கொண்ட குளிர் பிரதேசமான கொடநாட்டுப் பகுதியில் வாழும் கருமந்தி, இருவாச்சிப் பறவைகள், பழுப்பு மரநாய், ஈ பிடிப்பான் பறவை ஆகியன, மோயாற்றின் வடக்கில் புதர் காடுகளைக் கொண்ட வெப்பப் பிரதேசமான சத்தியமங்கலம் பகுதியில் கிடையாது. இதுவே இப்பகுதி இயற்கைச் சூழலின் தனிச்சிறப்பு ஆகும். இருகரையின் காட்டுவிலங்குகளும் மோயாற்றினை நம்பியே வாழ்கின்றன. யானைகள், புலிகள், கழுதைப் புலி, வெளிமான் ஆகிய நான்கு விலங்குகளும் வாழும் உலகின் ஒரே இடம் மோயாற்றின் பள்ளத்தாக்கு. இது மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் காட்டுப்பகுதிகளில் ஒன்று.

மோயாற்றின் கிளையாறு வழியாக கபினி ஆற்றிற்கு நீர் கிடைக்கிறதா என்பதில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்தி கிடைக்கும் பொழுது அது உண்மைதானா என ஆராய்ந்து பார்க்க அதே இணையமும் நமக்குப் பலவழிகளில் உதவுகிறது. கூகுள் இணையத்தேடலும், கூகுள் புவிவரைபடமும் ஒரு சொடுக்கில் கணினித் திரையில் தரவுகளை அள்ளித்தருகிறது.

கூகுள் புவிவரைபடத்தில் மோயாறு பாயும் தடத்தைத் தொடர்ந்து சென்றால் மோயாற்றுக்குக் கிளையாறு இல்லை என்பதும், இல்லாத ஒரு கிளையாற்றின் வழியாக கபினியாறும் நீர் பெறவில்லை என்பதும், மோயாற்றில் அணைகட்டுவதால் கர்நாடகாவை நாம் அடிபணியவைக்கமுடியாது என்பதும் தெளிவாகிறது. கொடுக்கப்பட்டுள்ள படங்கள் வழி உண்மை அறியலாம்.



கட்டுரைக்கான தகவல் தந்து உதவிய தளங்கள்:
[1] Moyar River — https://en.wikipedia.org/wiki/Moyar_River
[2] மோயாறு — https://ta.wikipedia.org/s/h7k
[3] ஒரு நதியின் வாக்குமூலம்: சத்தி, கொடநாடு வனங்களின் ஆதாரம் மோயாற்றின்! [தி இந்து தமிழ் நாளிதழ்] — http://tamil.thehindu.com/opinion/columns/ஒரு-நதியின்-வாக்குமூலம்-சத்தி-கொடநாடு-வனங்களின்-ஆதாரம்-மோயாற்றின்/article7312241.ece
[4] கருவூலம்: ஈரோடு மாவட்டம்! [தினமணி] — http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/feb/18/கருவூலம்-ஈரோடு-மாவட்டம்-2651269.html
***
பொய்த்தகவல் வெளிவந்த இணையத்தளங்கள்:
[1] மோயாற்றில் அணை கட்டி, கர்நாடகாவுக்கு ஆப்பு வைக்கலாம்! — http://www.channel42.in/tamil/tamilnadu-will-build-dam-in-moyar-river
[2] ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..! — http://www.manithan.com/news/20170406126217?ref=youmaylike1%7Cஊட்டியில்
[3] தமிழக விவசாயிகள் தண்ணீர், குடிநீர் பிரச்சனை தீர: கட்டப்படுமா மோயாற்றின் அணை ? — http://tamilvarthamaani.in/2017/04/தமிழக-விவசாயிகள்-தண்ணீர்/
[4] இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி! — http://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-about-moyar-river-001082.html



நன்றி: சிறகு 



______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________ 

மேல்பாடி பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு

--- சேசாத்திரி சிறீதரன் 


மேல்பாடி கல்வெட்டு. இவ்விடம் பொன்னை (அ) நிவா ஆற்றின் கரைமேல் அமைந்துள்ளது. இது 'அரிஞ்சய சோழனின் படைவீடு'. அரியூர் துஞ்சிய தேவர் என்றும் குறிக்கப்படுபவர். அவர் நினைவில் இராசராசன் இங்கொரு கோவிலைக் கட்டினான் (படங்கள் தமிழ்வாணன் தளத்தில் இருந்து).






கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை  சுந்தரம், கோவை:

கல்வெட்டுப் படம் அழகாக உள்ளது. ஆற்றூர்த்துஞ்சிய தேவரான  அரிஞ்சய சோழருக்கு முதலாம் இராசராசன் எடுப்பித்த 'பள்ளிப்படைக் கோயிலாகும்'. செய்தியில் குறிப்பிட்டதுபோலப் படைவீடல்ல.

கல்வெட்டின் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ திருமக்ள்போலப் பெருநிலச்செல்வியுந்த
2 னக்கே யுரிமை பூண்டமை மனக்கொக் காந்தளூர்ச்சா
3 லை கல்மறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியும் னு ளம்ப
4 பாடியுந்தடிகைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
5 எண்டிசை புகழ்தர வீழ மண்டலமுமிரட்ட பாடியேழரையிலக்கமுந்திண்டி
6 றல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளர் வுழியெல்லா
7 யாண்டுந்தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொ
8 ள் ஸ்ரீ  கோராஜராஜ ராஜகேஸரி வர்மரா ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு
9 ...ஆவது யங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணப்பாடித் தூஞாட்டு
10 மேற்பாடியான ராஜாச்ரயபுரத்து ஆற்றூர்த்துஞ்சின தேவற்குப் பள்ளிபடை
11 யாக உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்தருளின திருவறிஞ்சீச்வரத்து
12 மஹாதேவற்கு வெண்குன்றக்கோட்டத்து மருதாட்டு வெள்ளாளன் அ...வாக்
13 கி (மு)த்தி கண்டனேன் வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றினுக்கு
14 (வைத்த) சாவா மூவாப்பேராடு தொண்ணூற்றாறுங் கைக்கொண்டு
15 நி(சதம்) உழக்கு நெய் ராஜ கேசரியால் சந்திராதித்தவற் அட்டு....நேன் 
                                                               இராசாச்ரயபுரத்து 
16 இடையன் ஏணி கெங்காதிரநேன்
குறிப்பு:
1.  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

2. முதல் ஏழு வரிகள் முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி வரிகள். முதலாம் இராசராசனின் கல்வெட்டு என்பதனால், தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் உள்ளது போலவே மிக அழகாக வெட்டப்பட்ட எழுத்துகளைக்  காண்கிறோம். தஞ்சையைக் காட்டிலும் சற்று மிகையான வளைவுகளை எழுத்துகள் கொண்டுள்ளன. வடசொற்கள் வரும் இடங்கள் மட்டுமே என்றில்லாமல் ”ந்த”, ”ந்தா”, ”ந்தொ”, “க்க”, “க்கே”, “க்கு” , “க்கோ”  என ஒற்றெழுத்துச் சந்திகள் வருமிடங்களிலும் கிரந்தக் கூட்டெழுத்துகளை நிறையப் பயன்படுத்தியுள்ளனர்.  தமிழ் எழுத்துகளைத் தவிர்த்துள்ளனர். இது அரிதாகக் காணப்படுவது. “வூழி” (ஊழி)  என்பது பிழையாக ”வுழி” என எழுதப்பட்டுள்ளது.

3. இராசராசனின் ஆட்சியாண்டு கல்வெட்டில் தெளிவாகக் காணப்படவில்லை.

4. தொண்டை மண்டலம் முழுதும் ஜயங்கொண்ட சோழ மண்டலம் எனக் கருதுகிறேன். தூஞாட்டு என்பது தூ(ய்)நாட்டைக் குறிக்கும். மேற்பாடி, இந்தத் தூய் நாட்டில் இருந்தது. மேற்பாடிக்கு “ராஜாச்ரயபுரம்”  என்னும் சிறப்புப் பெயர் இருந்தது. சாளுக்கியரை வென்றதால் இராசராசன் பெற்ற சிறப்புப் பெயர் “ராஜாச்ரயன்”  என்பதாகலாம்.

5. கொடை, நந்தாவிளக்கு. கொடைக்கு வேண்டும் முதலாகத் தொண்ணூற்றாறு ஆடுகள் வைக்கப்படுகின்றன. கொடையாளி வெண்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த  மருதாடு நாட்டைச் சேர்ந்த முத்திகண்டன் என்ற வெள்ளாளன். ஆடுகள்,  கெங்காதிரன் என்னும் இடையன் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அவன், நாள்தோறும் (நிசதம்) ஓர் உழக்கு நெய் கோயிலுக்கு அளிக்க(அட்டுதல்)வேண்டும். இவ்விடையன் மேல்பாடி ஊரினன்.

6 ”ராஜகேசரி”  என்னும் பெயரால் அமைந்த முகத்தல் அளவுக் கருவி இருந்தது. 




Monday, April 24, 2017

தொட்ட மளூர்க் கோவில் கல்வெட்டு

--- சேசாத்திரி சிறீதரன்




தொட்ட மளூர் (Dodda Mallur) கருநாடகத்து இராமநகர மாவட்டத்தின் சன்னப்பட்டண வட்டத்தில் அமைந்த ஒரு சிற்றூர். மளூர் கண்வ ஆற்றோரம் அமைந்துள்ளது. இவ்வூர் இராமபிரமேய சுவாமி, அரவிந்தவல்லித் தாயார் அதோடு அம்பேகளு நவநீத கிருஷ்ணன் கோவில்களுக்குப் புகழ்பெற்றது.  பெங்களூருவில் இருந்து 60 கி.மி. தொலைவில் பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.  சன்னபட்டணாவில் இருந்து 3 கி.மி. தொலைவுதான்.

இந்த அப்பிரமேயர் கோவில் 11 ஆம் நூற்றாண்டில் சோழ வேந்தன் இராசேந்திர சிம்மனால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு. படை நடத்திய சோழப்  படைத்தலைவன் அப்பிரமேயன் நினைவில் இப்பெயர் சூட்டப்பட்டது.

இங்கத்து நம்பிக்கை - பிள்ளைப்பேறு இலா இணையர் இங்கு வந்து உண்மையான தொழுதலோடு வேண்டுதலை வைத்தால் அவர் வேண்டுதல் நிறைவேறும் - விரைவில் அவர் ஒரு பிள்ளை பெறுவர். அதற்கு நன்றியறிதலாகத் திருவுண்ணாழியில் வெள்ளித் தொட்டில் கட்டித் தொங்கவிடுவர். அவர்கள் குழந்தைக் கண்ணனுக்கு வெண்ணெய்க் காப்பும்  இடுவர். இது ஒரு கண்கொள்ளாக்காட்சி.

அண்மையில் இக்கோவிலில் எடுத்த படத்தில் தமிழ் எழுத்தில் அமைந்த இரு கல்வெட்டு. இது இவ்வூர் ஒருகாலத்தே தமிழ்ப் பகுதியாய் இருந்ததற்குச் சான்று.






கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை, திரு துரை  சுந்தரம்:

கல்வெட்டின் ஒளிப்படம் சற்றும் தெளிவில்லை, ஒரு சில சொற்களை இனம் காண முடிந்தது.

கோயிலில், அமுதுபடிக்காக நிலம் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி உள்ளது. நிலத்தின் நான்கு பக்க எல்லைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

கல்வெட்டின் காலம், அரசன் பெயர், கொடையளித்தவன் பற்றிய செய்தி ஆகியன இல்லை.

கல்வெட்டில் படித்த சொற்கள்:
வரி 2  (வாய்க்)காலுக்கு கிழக்கும்
வரி 3  நிலத்து இந்நாற்பாற்கெல்லைக்கு
வரி 4  ..........................மேல்பாற்கெல்லை
வரி 5 ....   குழி............
வரி 6 ....................அமுதுபடிக்கு விட்ட....
வரி 7  வாய்)க்காலுக்கு 


-=o0O0o=-

முனைவர் காளைராசன் அளித்த தொட்ட மளூர்க்  கோவில் கல்வெட்டுப் படங்களும் அவற்றுக்கு  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை, திரு துரை  சுந்தரம்,  அளித்த கல்வெட்டுப் பாடங்களும்:

23


கல்வெட்டுப்பாடம்  (கல்வெட்டு படம் 23)
1 ஸ்வஸ்திஸ்ரீ .... (அதி) ராஜேந்த்ர...
2 ....அப்பிரமேய விண்ணகர்...
3 ....அப்ரமேய விண்ணகர்....
4 க்கு ணாங்கள் விற்றுக்குடுத்த நி(லம்)
5  த்து......................
6 .....லிக்கு மா .........அறுமாவும்


24


கல்வெட்டுப்பாடம்  (கல்வெட்டு படம் 24)
 
1 அப்பிரமேய .......கோயில்லும் பெருமாள்..
2 ..ல் பொலியூட்டாலே  சந்திராதித்தவற் செல்லக்கடவ
3 ...ணாண்டாநேன் யித்தருமத்துக்கு (அ)ழிவு நிநைப்பவ(ர்)
4 ஊரார் இத்திருநந்தாவிளக்கு ......
5 .லத்தால் .......(அறம்) .........
 
25


கல்வெட்டுப்பாடம் (கல்வெட்டு படம் 25)
 
1 ...........காணியா .... ல்ல
2 டியார் கையில்லும் குடுத்
3 ..............யிந் நம்பிமார் கைய்(யிலும்)
4 ..........கெங்கைக்கரையி(ல்) குராற்பசு...
5 ..........டாந் யிட்ட தி(ரு)க்க.......
6 .........................(துணையில்லை)
குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

செய்திகள்:
1. கோயிலின் பெயர் அப்பிரமேய விண்ணகரம் என்பது உறுதியாகிறது.

2. அரசன் பெயர் கிரந்த எழுத்துகளில் உள்ளது. “ராஜேந்த்ர”  என்பது தெளிவு. ஆனால், ”ராஜேந்த்ர”  என்பதன் முன்னர்  உள்ள கிரந்த எழுத்துகள் “அதி”  என்பதாகப் புலப்படுகிறது. உறுதி செய்ய இயலவில்லை. எனவே, சோழ அரசன் முதலாம் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், அதிராசேந்திரன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோருள் ஒருவர் ஆகலாம். சோழப்படைத்தலைவன் அப்பிரமேயன் எந்த அரசனின் கீழ் பணி புரிந்தான் எனத்தெரிந்தால் அரசனின் பெயரையும் உறுதிப்படுத்தலாம். ஆனால், சோழ அரசருள் இராசேந்திர சிம்மன்  யார்?

3.  முதல் கல்வெட்டில், கோயிலுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்ட செய்தி உள்ளது. கொடை நிலத்தின் ஒரு பகுதி ஆறு மா அளவுடையது. ஊரார், ஊர் நிலத்தை விற்றுக் கொடுத்திருக்கிறார்கள் எனக் கருதலாம். விலை கொடுத்து வாங்கிய  கொடையாளி அதைக் கோயிலுக்குக்  கொடையாக அளிக்கிறார்.

4.  இரண்டாம் கல்வெட்டில், கோயிலுக்கு நந்தாவிளக்கெரிக்க, ஒரு முதல் (CAPITAL)  வைக்கப்படும் செய்தி உள்ளது. முதல் வாயிலாகப் பெறக்கூடிய  வட்டி (பொலியூட்டு)  யிலிருந்து, விளக்கு எரிக்கப்படுகிறது. இந்த நந்தாவிளக்கு எரிதலை ஊரார் கண்காணிக்கவேண்டும் என்று கொள்ளலாம். இந்த தருமத்துக்கு அழிவு நினைப்பவர் பாவத்தை அடைவர் எனக் கல்வெட்டு சுட்டுகிறது.

5. மூன்றாம் கல்வெட்டில், கோயிலுக்கு ஒரு கொடை அளிக்கப்படும் செய்தி உள்ளது. கொடை இன்னதெனத் தெரியவில்லை. ஆனால், கொடைக்கான பொருள் கோயிலின் நம்பிமார் கையில் கொடுக்கப்படுகிறது. சிவன் கோயில் பூசைப்பணியில் இருப்பவர் சிவப்பிராமணர் எனவும், விண்ணகரக் கோயில் பூசைப்பணியில் இருப்பவர் நம்பிமார் எனவும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. “கெங்கைக் கரையில் குராற்பசு”  என்னும் தொடர், கொடைக்கு ஊறு செய்பவர், கங்கைக்கரையில் குரால் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் (குரால் பசு=கபிலை நிறப்பசு) எனக்குறிப்பிடுகிறது.  கல்வெட்டின் இறுதியில் “துணையில்லை”  என்றொரு தொடர் காணப்படுகிறது. “அறத்தை மறவாதீர்; அறமல்லது உயிர்க்குத் துணையில்லை”  என்பதாக இதைப் பொருள்கொள்ளலாம். “அறமறவற்க”  என்னும் தொடரைச் சில கல்வெட்டுகளில் கண்டிருக்கிறேன். சரியான எடுத்துக்காட்டு கிடைக்கும்போது மேலும்  பகிரலாம். 
 

Sunday, April 23, 2017

கிராதன்

 -- முனைவர் கி. காளைராசன்


 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அடியார்களால் சிறப்பித்துப் பேசப்படும் கோயில்.

இத்திருத்தலத்தில், சமயக்குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் குருவாக வந்து குருந்தை மரத்தின் அடியிலிருந்து உபதேசம் வழங்கியருளினான் என்கிறது புராணம்.  இத்தலத்தில் உள்ள ஆத்மநாதர் (ஆவுடையார்) கோயில் தெற்குப் பார்த்தது.  சிவலிங்கம் இருக்காது. பீடம் (ஆவுடை) மட்டுமே இருக்கும்.  இதனால் இக்கோயிலை ஆவுடையார் கோயில் என்கின்றனர்.  அன்னை யோகாம்பாளுக்கு உருவம் இல்லை.  பாதங்கள் மட்டுமே உண்டு.  இவ்வாறு பார்வதி பரமேசுவரர் அருவமாகவே காட்சியருளுகின்றனர்.  மாணிக்கவாசகப் பெருமானே உற்சவராக உள்ளார்.  எல்லாத் திருவிழாக்களும் மாணிக்கவாசகப் பெருமானுக்கே நடக்கின்றன.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மிகவும் நுணுக்கமானவை.  அதி அற்புதமானவை.  இச்சிற்பங்களுள் மிகவும் அபூர்வமான சிற்பமாக அதீதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இரண்டு சிற்பங்கள் உள்ளன.   இச்சிற்பங்கள் இரண்டையும் கம்பிவலை கட்டிப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.  அதில் “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதப்பட்டுள்ளது.

கிராதன்



கிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர்.  நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.  நெற்றியில் நீரு இல்லை.  நெற்றிக் கண் உள்ளது.  மீசை உள்ளது.  காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன.   உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும்.  கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும்  பூணூலும் உள்ளன.  இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.



இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்).  பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும்.   இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை(?)த் தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை.


கிஞ்சுகவாய் அம்மன்
"கிஞ்சுக வாயவள்" - முருக்கம்பூப்போன்ற உதட்டையுடைய உமாதேவி என்பது பொருள். சர்வ அலங்காரத்துடன் கொண்டை.  நெற்றியில் அழகாக நாமம்.  கண் புருவத்திற்கு மேல் புருவத்திற்கு மை தடவிய ஒப்பனை.  ஒவ்வொரு காதிலும் மூன்று பெரிய தோடுகள்.  கழுத்தே தெரியாமல் ஆபரணம், மணிமாலைகள்.  மாராப்பு அணியாத மார்புகள்.  வலதுகையில் பனையோலைக் கூடை. விரல்களில் நீண்ட  நகங்கள்.



இடது கையில் காப்புகளும் வளையல்களும், விரல்களில் மோதிரம்,   இடுப்பில் ஒட்டியாணம், சர்வ அலங்கார ஆடை,  முழங்காலுக்குக் கீழே பட்டை,  காலில் தண்டை,   கால்விரல்களில் மிஞ்சி.



சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர்  என்று பொருள் கூறுவர்.   ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு.  "கிராதன்" என்பதுவே  சரி. சிவனின் இருபத்தைந்து மஹேசுவர மூர்த்தங்களுள் ‘கிராத’ மூர்த்தமும் ஒன்று  (இருபத்தைந்து மஹேசுவர மூர்த்தங்கள்: சந்திரசேகரர், உமாமகேசர், ரிஷபாரூடர், ஸபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, த்ரிபுராரி, ஜலந்தராரி, மாதங்காரி, வீரபத்ரர், ஹரி அர்த்தர், அர்த்தநாரீசுரர், "கிராதர்", கங்காளர், சண்டேசாநுக்ரஹர், நீலகண்டர், சக்ர ப்ரதர், கஜமுகாநுக்ரஹர், ஸோமாஸ்கந்தர், ஏகபாதர், ஸுகாசீனர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்).  இந்த்ரகீல பர்வதத்தில் தவம் புரிந்த அர்ஜுனருக்கு சிவபெருமான் கிராத வடிவில் தோன்றிப் பாசுபத அஸ்த்ரம் அளித்தார் என்பது மஹாபாரதச் செய்தி.

கோயிலில் இச்சிற்பத்தின் அருகே “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிராதனிடம் பாசுபத ஆயுதம் போன்றதொரு ஆயுதம் எதையும் காணவில்லை.  மேலும், கிராதன் அருகில் அர்ச்சுனன் போன்று யாரும் காட்டப்பட வில்லை. 

அர்ச்சுனனுக்குப் பாசுபத ஆயுதம் வழங்க வந்த சிவபெருமான் பன்றிமேல் அம்பு  எய்திருப்பார்.  ஆனால் இச்சிற்பத்தின் அருகே பன்றியேதும் காட்டப்பட வில்லை.  மேலும் வாளால் ஒரு மனிதனையே கொன்றிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த அரியச் சிற்பம் கிராதன் அல்ல என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், கோயிலில் இருந்த நிருவாகிகளுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை.


-=o0O0o=-




திருவைக்குண்டம் 
அருள்மிகு கள்ளபிரான் திருக்கோயிலில் கிராதன் சிற்பம்






இந்தக் கோயிலின்  அரியச் சிற்பங்களை வாழ்வில் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்க்க வேண்டும்.

__________________________________________________________
முனைவர் கி.காளைராசன்
kalairajan26@gmail.com
__________________________________________________________