Wednesday, April 19, 2017

பாரிவேட்டை

- ப. பாண்டியராஜா

தமிழ்நாட்டின் சில மலையோரக் கிராமப்புரங்களில் முயல்வேட்டை என்ற ஒரு வழக்கம் இருந்துவருகிறது. இதைச் சிலர் பாரிவேட்டை என்றும் கூறுவர். அண்மையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இத்தகைய முயல்வேட்டைத் திருவிழா நடைபெற்ற செய்தி 17-4-2017 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் பக்கம் 11-இல் ‘முயல்வேட்டைத் திருவிழா – பெரம்பலூரின் வினோதம்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. [http://www.dinamalar.com/news_detail.asp?id=1753142]

இந்தச் செய்தியின் சாராம்சம் இதுதான்:
ஆண்டில் ஒருநாள், சில கிராமத்து மக்கள் கம்பு, குத்தீட்டி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்துப் பக்கம் செல்வர். அங்கு ஒரு திறந்த வெளியைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுற்றி மூன்று பக்கங்களில் முள்வேலி அமைப்பர். அதன்பின்னர், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பகுதிகளில் புதர்களைக் கம்புகளால் அடித்து அவற்றில் இருக்கும் முயல் போன்ற குறுவிலங்குகளை வேட்டைநாய்களின் உதவியுடன் விரட்டத்தொடங்குவர். ஆங்காங்கே நிற்கும் ஆட்கள் தம் பக்கம் ஓடிவரும் விலங்குகளை வேலி அமைத்த பக்கம் திருப்பி விரட்டுவர். இறுதியில் அனைவரும் ஒன்றாகக் கூடி வேலிப்பகுதியின் வாயை அடைத்து, உள்ளே மாட்டிக்கொண்ட விலங்குகளைப் பிடிப்பர். இதுவே பாரிவேட்டை. பின்னர் அவர்கள் ஊருக்குள் வந்து அந்த விலங்குகளை அடித்துச் சமைத்து ஒன்றாகச் சாப்பிடுவர்.இந்த நிகழ்வை ‘வினோதம்’ என்று தினமலர் குறிப்பிடுகிறது. ஆயினும் இப் பழக்கம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வருகிறது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

பெரும்பாணாற்றுப்படை இத்தகைய பாரிவேட்டை ஒன்றைக் குறும்படமாய் விவரிக்கிறது.

பகல்நாள்
பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கு அற வளைஇ
கடுங்கண் கானவர் கடரு கூட்டுண்ணும் – பெரும். 111-116
இதன் பொருள்: பகற்பொழுதில், பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து, குவிந்த இடத்தையுடைய வேலியில் பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி, முள்ளுள்ள தண்டுகளையுடைய தாமரையின் புறவிதழைப் போன்ற நீண்ட காதுகளையுடைய சிறிய முயல்களை வேறு போக்கிடம் இல்லாதவாறு வளைத்துப் பிடித்து, கடுமையான கானவர் காட்டில் கூட்டாகச் சேர்ந்து உண்ணும் என்பது இதன் பொருள்.

இன்றைக்கும் நடக்கும் இந்த நிகழ்வு ஈராயிரம் ஆண்டுகளாகவே இந்தத் தமிழ்மண்ணில் நிகழ்ந்துவருகிறது என்பது நமக்குத் தெரியாமற் போனதுவே வினோதம்!!!

 _________________________________________

முயல் வேட்டை திருவிழா: பெரம்பலூரில் வினோதம் 
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில், 23 கிராமங்களில் முயல் வேட்டை எனும் வினோத திருவிழா நேற்று நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில், ஆண்டுதோறும், சித்திரை முதல் ஞாயிற்று கிழமை, முயல் வேட்டை எனும் வினோத திருவிழா நடப்பது வழக்கம். எசனை, குரும்பலூர் உட்பட, 23 கிராமங்களில், முயல் வேட்டை திருவிழா, நேற்று நடந்தது. மேற்கண்ட கிராமங்களில், வீட்டுக்கு ஒரு ஆண் வீதம், அந்தந்த கிராமத்தின் மாரியம்மன் கோவில்கள் முன், நேற்று காலை, 7:00 மணியளவில் கூடினர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் பூசாரிக்கு அருள் வந்து, வேட்டைக்கு செல்லும் திசை மற்றும் வேட்டையின் போது, கிடைக்கும் முயல்களின் எண்ணிக்கை குறித்து, குறி சொல்லப்பட்டது. தொடர்ந்து, சிறுவர்கள், வாலிபர்கள், பெரியோர் என, 50க்கும் மேற்பட்டோர், குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் வேட்டைக்கு கிளம்பினர். மாலை, 4:00 மணி வரை, வேட்டையில் ஈடுபட்டு, வேட்டையாடிய முயல்களுடன், குறிப்பிட்ட பகுதியில் கூடினர். அவர்களது குடும்ப பெண்கள், அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடையுடன், அப்பகுதிக்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து, புத்தாடை அணிந்து, வேட்டையாடிய முயல்களை, குச்சிகளில் தோரணம் போல் தொங்க விட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடியபடி, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். வேட்டையில் கிடைத்த முயல்கள் மற்றும் ஆடு ஆகியவை, சாமிக்கு படையல் செய்யப்பட்டது. முயல் மற்றும் ஆட்டு கறி பங்கு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.

துறைமங்கலம் கிராமத்தை சேர்ந்த சோலை கூறியதாவது: பல ஆண்டு காலமாக, இத்திருவிழா சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டையாடிய முயலை, சாமிக்கு படையலிட்டு பூஜை செய்த பின், அதை உண்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; உடல் நோய்கள் நீங்கும், மும்மாரி மழை பொழிந்து நாடு செழிக்கும் என்ற நம்பிக்கையிலும், இத்திருவிழா காலங்காலமாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில், சாமிக்கு பலியிடப்படும் முயல் மற்றும் ஆடு ஆகியவற்றின் ரத்தத்தை பூசாரி குடித்து சாமியாடுவார். அப்போது, பெண்களும், ஆண்களும் தரையில் படுத்து, கும்பிட்டு கொள்வர். பூசாரி ஒவ்வொருவராக தட்டி எழுப்பி, அவர்களின் வேண்டுதல் குறித்தும், நிறைவேறுமா, நிறைவேறாதா என்பது குறித்தும் குறி சொல்வார்.இவ்வாறு அவர் கூறினார்.
ref: http://www.dinamalar.com/news_detail.asp?id=1753142
 
___________________________________________________________
 

Dr. Pandiyaraja
pipiraja@gmail.com
http://sangamconcordance.in/
___________________________________________________________No comments:

Post a Comment