Monday, July 27, 2015

வழுதாவூர் கோட்டை


வழுதாவூர் –

செஞ்சி, புதுச்சேரி வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்த ஊர்.

இந்தப் பகுதியின் கில்லேதாராக இருந்தவர் சயீத்கான். மும்பையில் இருந்து புதுச்சேரிக்குக் குடியேறியிருந்த இவர், வழுதாவூரை விலைக்கு வாங்கிக் கோட்டைக் கொத்தளங்களுடன் ஆட்சி செய்து வந்தார். இவரது மகன் மகமத்கான். சயீத்கானின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் சொரூப்சிங். இராஜாதேசிங்கின் தந்தை.

இராஜா தேசிங்குடனானப் போரில் மகமத்கான் மறைந்த பின், வழுதாவூர் கோட்டை ஆற்காடு நவாப் கைகளுக்குச் சென்றது. 1742 வாக்கில் ஆற்காடு சுபாவில் நிலவிய குழப்பமான நிலைமையால் அங்கிருந்து வெளியேறிய நவாப் மீர்அசத், வழுதாவூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார். இவரதுப் படையணிகள் பிரெஞ்சு வசமிருந்த அபிஷேகப்பாக்கம் வரை சென்று கொடியேற்ற முனைந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.

1748 செப்டம்பரில் பிரெஞ்சுப் படைகள் சென்னையைக் கைப்பற்றின. இந்த நடவடிக்கைக்கு ஆற்காடு நவாபான அன்வருதீன்கான் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதுபற்றி ஆலம்பரை நிசாமுக்குக் கடிதம் எழுதிய பிரெஞ்சு கவர்னர் டூப்ளே, “ஆற்காடு நவாப் பிரதேசத்தில் இருக்கும் வில்லிய நல்லூரையும் (வில்லியனூர்), வழுதாவூரையும் தந்தால் சென்னையை விட்டு விடுவதாக”த் தெரிவித்திருந்தார்.

புதுச்சேரியை ஆட்சி செய்து கொண்டிருந்த டூப்ளேவுக்கு, அருகில் உள்ள வழுதாவூர் மீது கண் இருந்து வந்ததற்குக் காரணம், மற்றெந்த ஜாகீரிலும் இல்லாத அளவுக்கு இந்த ஜாகீரில் இருந்து மட்டும் குத்தகைப் பணமாக வருடத்திற்கு ரூ.ஒரு லட்சம் வந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே 1750இல் செஞ்சியை வெற்றி கண்டார் டூப்ளே. அப்போது தக்காண சுபேதராக இருந்த சலபத் சங் என்பவர், வழுதாவூர் உள்ளிட்ட நூறு கிராமங்களை பிரெஞ்சியருக்கு வழங்கினார். டூப்ளேவின் கனவும் நனவானது.

அடுத்த 10ஆண்டுகளில் நிலைமை மாறியது. கர்னல் அயர்கூட் தலைமையிலான ஆங்கிலேயேப் படை திண்டிவனம், பெருமுக்கல் வழியாக புதுச்சேரியை நோக்கி முன்னேறியது.

1760 மார்ச் மாதவாக்கில் புதுச்சேரியில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. புதுச்சேரியில் உயர் பதவியில் இருந்தவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் போரில் ஈடுபட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் உத்தரவுப் போட்டது. இதனை எதிர்த்தவர்கள் காலில் சங்கிலி பூட்டப்பட்ட நிலையில், கால் நடையாகவே புதுச்சேரியில் இருந்து வழுதாவூர் கொண்டு வரப்பட்டு, இங்கிருந்தக் கோட்டையில் அடைக்கப்பட்டனராம்.

இதனிடையே 1760 ஏப்ரல் 16இல் அயர்கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படை வழுதாவூர் கோட்டையைப் பிடித்தது. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். தொடர்ந்து கோட்டையும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. அடுத்த சிலநாட்களில் புதுச்சேரி அவர்கள் வசம் சென்றதை வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள்.

வழுதாவூரில் மேடாகத் தெரியும் அந்தப் பகுதியை உள்ளூர்க்காரர்கள் கோட்டை மேடு என்றழைக்கின்றனர். நீண்ட அகழியும், நாற்புறமும் நிற்கும் காவற் கோபுரங்களும், அங்குக் கோட்டை இருந்ததற்கான முக்கியத் தடயங்களாக நிற்கின்றன.

மேலும் செங்கல்லால் ஆன நீண்ட கட்டடம் ஒன்றும், கோட்டைமேடுப் பகுதியில் காட்சியளிக்கிறது. இது, கோட்டை களஞ்சியம் என்றழைக்கப்டுகின்றது.

வழுதாவூர் கோட்டை இருந்தப் பகுதியைப் பார்ப்பதற்கும், பிரெஞ்சு அரசு குறித்த ஆய்வை மேற்கொள்ளவும் வெளிநாட்டவரும் வருகின்றனர். அவர்களுக்குத் தகவல் அளிக்கவும் இங்கு யாரும் கிடையாது. இந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அடையாளங்களும் அங்கில்லை.


எஞ்சி நிற்கும் களஞ்சியத்தைக் கூட, அப்பகுதியினரின் துணையின்றி நாம் நெருங்க முடியாது. சுற்றிலும் கரும்பு வயல்கள். நடுவில் காணப்படும் இந்தக் கட்டடத்தை அடைய நான் கடும் பிரயத்தனப்பட்டேன். 


 ________________________________________________________ 
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________ 

3 comments:

  1. அருமை ஐயா! தங்கள் கட்டுரையை படித்துவிட்டு நானும், என் தோழரும் அங்கே சென்று பார்க்க முயன்றோம். எங்களைக் கண்ட அந்த உள்ளூர்வாசிகள் அரசு அலுவலர்களாக எங்களை பாவித்து நிலத்தை அபகரிக்க வருபவர்களாக நினைத்து ஒத்துழைப்பு தரவில்லை.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete