Sunday, July 26, 2015

நினைவலைகளில் கொடுமுடி சண்முகனார் ...

-- கோ.செங்குட்டுவன். 
90களின் தொடக்கம் அது. நான், தினப்புரட்சி நாளேட்டின் செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒருநாள், பொதுப்பணித்துறை அலுவலகத் திலிருந்து உதவியாளர் என்னிடம் வந்தார். “ஐயா உங்களை வரச் சொன்னார்””. உடனடியாக அந்த அலுவலகத்துக்குச் சென்ற நான், செயற்பொறியாளரின் அறைக்குள் சென்றேன். “வாங்க உட்காருங்க” என்று சொன்னவர், “என்னங்க ஏரியில பேருந்து நிலையம் கட்டப் போறாங்களாம்” என பதை பதைத்தார். “இதுக்கு எதிர்ப்ப பத்திரிகையிலப் பதிவு செய்யுங்களேன்” என்றார்.
அரசின் உத்தரவுகளை செயல்படுத்தக்கூடிய அதிகாரி, அப்படி நடக்கக் கூடாது என்று கருதுகிறார். வித்தியாசமான மனிதராக இருக்கிறாரே? என யோசித்தேன். ஆம், அவர்தான் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த வரலாற்று ஆய்வாளர் பொறியாளர் நினைவில் வாழும் கொடுமுடி ச.சண்முகனார்.
அவர் மக்களை நேசித்தார். மனிதகுலம் கடந்து வந்தப் பாதையை அவற்றின் வரலாறுகளை நன்கு வாசித்தார். மாமன்னர்கள் ஏரிகளையும் குளங்களையும் கண்மாய்களையும் வெட்டினார்கள். இப்போது இருப்பவர்கள் அதை அழிக்கிறார்களே என வேதனைப்பட்டார். இதன் வெளிப்பாடுதான் ஒரு ஏரி பேருந்து நிலையமாக மாறுவதை கொடுமுடி சண்முகனாரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
தமிழனின் பெருமைகளைப் பேசுவதோடு நில்லாமல் நம்முடைய வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அவர் அயராது உழைத்தார். தான் வகித்து வந்தப் பதவியை இதற்குச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கல்வெட்டுகளைப் படியெடுப்பதில், படிப்பதில் தேர்ந்திருந்த கொடுமுடி சண்முகனார், அந்தக் கலை தனக்குப்பின் வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக விழுப்புரம், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கல்வெட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தினார். அவரால் பயிற்றுவிக்கப்பட்ட பலர். இன்று அத்துறையில் வல்லோராக வலம் வருகின்றனர். தான் பணியாற்றிய இடங்களில் வரலாற்று முத்திரைகளைப் பதித்தவர் கொடுமுடியார். தருமபுரி அகழ்வைப்பகம், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகங்கள் இன்றும் அவர் பெயரைச் சொல்லும்.
ஆர்க்காடு நவாபுக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே அடையாற்றுப் போர் நடந்த இடம் (சென்னை) தரமணி எனக் கண்டறிந்தது, கிருஷ்ணகிரி அணைப் பூங்காவில் ஆதிமனிதனின் கல்வீடு மாதிரி வடிவம் அமைத்தது, மேட்டூர் அணையின் 16 கண் பாலத்தில் பொறியாளர் எல்லீஸ் சிலையமைத்தது, திருச்செங்கோட்டில் கண்ணகிக்குக் கோட்டம் அமைப்பதற்கும், சிலப்பதிகாரம் மணிமேகலை காவியப் பாடல்கள் முழுவதும் கருங்கல்லில் பொறித்து மண்டபத்தில் அமைக்கவும், 200 அடி கோவலன் கண்ணகி சிலை அமைக்கவும் அரசுக்கு மதிப்பீடு அனுப்பியது, திருச்செங்கோடு மலைப் படிகளில் உயர்மட்டக் கருவிகள் மூலம் உயரம் கணித்து எழுதி வைத்தது, இராச வாய்க்கால் வெட்டிய அல்லாள இளையா நாயகர் பற்றிய கொங்கு மண்டல சதகப் பாடலும் வரலாற்றுக் குறிப்பும் கருங்கல்லில் பொறித்து சேலம் வேலூர் அருகில் உள்ள சோடர்பாளையம் அணைக்கட்டில் பதித்தது என கொடுமுடியார் அவர்களின் எண்ணற்றப் பணிகளின் பட்டியல் தொடர்கிறது.
விழுப்புரத்தில் அவர் பணியாற்றிய காலக்கட்டங்களில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் இருந்த விருந்தில்லங்களுக்கு திருமுடிக்காரி இல்லம், நல்லியக் கோடன் இல்லம், கவிகாளமேகம் இல்லம் என பெயர் சூட்டினார். சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீடூர் அணை முகப்பில் 10 அடி உயரத் தூண் எழுப்பி அதில் தோகை விரித்தாடும் மயிலின் சிற்பத்தைப் பொறித்து, வான் மழை குறித்துத் தமிழ் இலக்கியங்கள் கூறும் பாடல்களை கல்லில் பதிக்கச் செய்தார். அப்பர் பெருமான் பிறந்த திருவாமூர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த திருநாவலூர் ஆகிய ஊர்களுக்கிடையே கல் நடப்பட்டு அதில் அவர்களைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்தார். எண்ணாயிரத்தில் கவிகாளமேகம் பிறந்த ஊர், நாலடியார் பாடியோர் வாழ்ந்த ஊர் எனும் திசைக் கற்களை நடச்செய்தார். மாமன்னர் இராசேந்திரன் கல்வெட்டினைத் தாங்கிய கீழ்எடையாளம் ஏரியில், கல்வெட்டு வாசகம் இடம்பெறச் செய்தார். திருச்சி நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் கிராமத்தில் காடவராயன் தலைநகரம் எனும் தகவலை கல்லில் பொறிக்கச் செய்தார். திருக்கோவலூர் அணைக்கட்டில், திருமுடிக்காரியின் புகழ்பாடும் புறநானூற்று வரிகளை எழுதி வைத்தார். கடலியில், இராஜா தேசிங்கு வீர மரணம் எய்திய இடம் என கல் நட்டார்.
கொடுமுடியார் அவர்கள் கள ஆய்வுக்காகச் செல்லும் இடங்களில் கிடைக்கும் நடுகற்கள், கல்வெட்டுகள், ஏரித் தூம்புகள் போன்றவற்றை கொண்டுவந்து விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகங்களில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்தார். “இதை எடுத்து வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிட்டதுங்க” என்பார்.  காரணம், இவற்றில் பல காணிக் கல்லாகவும், துணி துவைக்கவும், வழிபாட்டிற்குரி யதாகவும் பயன்படுத்தப்பட்டவை. இவற்றை எடுப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால்தான் மிகுந்த சிரமம்-எதிர்ப்புகளுக்கிடையே அவை பொதுப்பணித்துறை ஈப்பில் எடுத்துவரப்பட்டன.

பழந்தமிழர் தொழில்நுட்பத் திறன், குமரிக்கண்டம் கடலுள் மூழ்கவில்லை, தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ள கொடுமுடி ச.சண்முகனார், வரலாறு மற்றும் இலக்கியத் தகவல்களை நேரிடையாக எடுத்துச் சொல்வதில் ஆர்வம் காட்டினார். விழுப்புரத்தில் அனைத்து இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, “விழுப்புரம் இலக்கியக் கழகம்” எனும் அமைப்பினை ஏற்படுத்தி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் கூட்டங்கள் நடத்தியப் பாங்கினை விழுப்புரம் மண் மறந்திடாது.
கொடுமுடி சண்முகனார் அவர்கள் பார்ப்பதற்கு எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். தன்னில் வயதில் எவ்வளவு இளையோராக இருந்தாலும் அவர்களுக்கும் மதிப்பு கொடுத்தார். மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்கும் ஜனநாயக மாண்புடையவர். இதற்கு உதாரணம் ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கலாம் என நினைக்கிறேன்.
பொதுப்பணித் துறையின் சார்பில் 01.06.1991இல் தேசிய நீர்வள நாள் கவியரங்கம் கவிஞர் த.பழமலய் அவர்களின் தலைமையில் நடந்தது. அதில் பங்கேற்ற நான் முதன் முதலாக கவிதை என்று ஒன்றைப் படித்தேன்.
அதில், “பிறக்காதக் குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா நடத்துவதைப் போல் இல்லாத வளத்துக்கு விழா கொண்டாடுகிறோம்” எனத் தொடங்கி, “வீட்டுக்கு ஒரு யூக்லிபட்ஸ் மரம் வளர்ப்போம் காட்டுக்கு ஒரு வீரப்பனை வளர்ப்போம்” என்று முடித்தேன்.
அங்கு வந்திருந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. என்ன இந்தப் பையன் இப்படி படிக்கிறானே? என்று. ஆனால், கொடுமுடியார் புன்முறுவலுடன் அமைதியாக இருந்தார்.
அடுத்த சில நாள்களில் கவியரங்கக் கவிதைகள் ரோனியோ போடப்பட்டு புத்தக வடிவில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் என்னுடைய கவிதை(?)யும் வரிக்கு வரி மாறாமல் அப்படியே இருந்தது. என்னுடைய எழுத்து கொடுமுடியார் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
தான் செய்தப் பணிகள் தனக்குப் பின்னும் நிலைத்திருக்க வேண்டும் என கொடுமுடியார் விரும்பினார். பொதுப்பணித்துறை அலுவலகங்களில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்தபோது, அவை தொடந்து காப்பாற்றப்பட அரசாணைகளையும் வெளியிடச் செய்தார்.
ஆனால் அவர் மறைவுக்குப் அந்த நினைவுச் சின்னங்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்களாலேயே போற்றிப் பாதுகாக்கப்பட வில்லை என்பதுதான் வேதனை தரத்தக்கதாகும்.
மக்களிடம் வரலாற்றைக் கொண்டுச் செல்லும் மகத்தானப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொறிஞர் கொடுமுடி ச.சண்முகனார் 19.03.2005இல் மறைந்தார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற நினைவஞ்சலிக் கூட்டமொன்றை, 01.04.2005இல் கல்வெட்டாய்வாளர் திரு.வீரராகவன் அவர்களும், நானும் முன்னின்று நடத்தியதை இங்குப் பணிவுடன் பதிவு செய்கிறேன்.
தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகிறேன். கொடுமுடியார் எதற்காகப் பதை பதைத்தாரோ அந்த இடத்தில்,
118.54 ஏக்கரிலான விழுப்புரம் பூந்தோட்டம் ஏரியில், 1998இல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தினை உள்ளடக்கிய பெருந்திட்ட வளாகமும், 2000ஆம் ஆண்டில் பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு விட்டது.
இனி நாம் ஏரிகளை, கொடுமுடியார் போன்றவர்கள் சேகரித்து வைத்தத் தூம்புக் கற்களில் மட்டுமே பார்க்க முடியும்! அதுவும் அந்தக் கற்கள் இருந்தால் மட்டுமே...


 ________________________________________________________ 
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________ 
 

No comments:

Post a Comment