Friday, May 5, 2017

இணையத்தமிழ் வளர்ச்சி பற்றிய கேபிஎம்ஜி - கூகுள் ஆய்வறிக்கை

-- தேமொழி 




"இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு" என்பது  விகடன் தந்த செய்தி.

மேலோட்டமாகக் கொடுத்த இத்தலைப்பை  அப்படியே பொருள் கொண்டால் அது தவறான முடிவுக்குக் கொண்டு செல்லும்.  இந்நாட்களில்  இணைய  உலகில் ஆங்கிலத்தை விட, ஸ்பானிஷ்  மொழியை விடவா தமிழ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் படிப்பவர் குழப்பம் கொள்ளலாம்.  உலகளாவிய முறையில் ஐரோப்பிய காலனி ஆதிக்க முறையினால்  திணிக்கப்பட்ட மொழிகள் போலன்றி,  தங்கள் நாட்டின்  அதிக மக்கள் தொகையாலும், மொழி மறுசீரமைப்புக் கொள்கையாலும்  அதிக மக்கள் பேசும் பண்டைய மொழிகளில் ஒன்றான எங்கள்  சீன மொழியைவிடவா இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ்? என்று சீனர்கள் வெகுண்டும் எழலாம்.  இணையத்தை தங்களது  முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அவர்கள் கொண்டிருக்கும் பெருமையை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார்கள்.  

விகடன் கொடுத்த தகவல் கட்டுரையின் மூலமான கேபிஎம்ஜி மற்றும் கூகுள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை*  (வழங்கிய நண்பர் முனைவர் நா. கணேசன் அவர்களுக்கு நன்றி),  தமிழர்கள்  தொழில்நுட்பம்  வழங்கிய தாய்மொழி பயன்பாட்டு வாய்ப்பிற்கு வெகு விரைவில் தங்களை தகவமைத்துக் கொண்டதைக் காட்டுகிறது.  இந்த ஆய்வு பிற இந்திய மொழியினரின் தகவமைப்பு, தாய்மொழிவழி இணையப் பயன்பாடு கொள்ளல் ஆகியவற்றையும் தருவது தமிழர்களைப் பிற இந்திய மொழியினருடன் ஒப்பிட உதவுகிறது.  



இந்த அறிக்கையில்,  இந்திய மொழிகளில் மக்கள்தொகை அடிப்படையில் அதிக அளவில் பேசப்படும் இந்தி, வங்காளம், தெலுங்கு, மராத்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மலையாளாம் ஆகிய  மொழியினர் மட்டுமே ஒப்பிடப்பட்டுள்ளனர். இந்திய மொழிகளில் தட்டச்சுவதற்கு 11 மொழிகளுக்கும், மொழிபெயர்ப்பிற்கு 22 இந்திய மொழிகளுக்கும் கூகுள் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியினர் 75 மில்லியன் எனவும் அவர்களில் 40 மில்லியன் தமிழர் ஆங்கிலத்தைவிடத் தமிழில் படிக்க, எழுத, உரையாட விரும்புகிறார்கள் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.  இது இருவரில் ஒரு தமிழர் தாய் மொழியை முதன்மை மொழியாகப் பயன் கொள்ள விரும்புகிறார் என்று காட்டுகிறது  (மராத்தி -72% ; கன்னடம் - 70%; குஜராத்தி - 57%; மலையாளம் -  55%; தமிழ் - 53%; வங்காளம்  52%; இந்தி -  49%; தெலுங்கு  - 44% ).  வணிகம், வங்கி பயன்பாடு, செய்தி, விளம்பரங்கள், அரசு சேவைகள், கேளிக்கை, தொலைத்தொடர்பு சமூக வலைத்தள பங்களிப்பு, பயனர் உருவாக்கும் பதிவுகள் ஆகியவற்றில் இந்த மொழியினர் எவ்வாறு  பங்கேற்கிறார்கள்  என்று தொகுத்தளிக்கிறது இந்த ஆய்வறிக்கை. 

புதிய கண்டுபிடிப்புகள் மக்களிடையே ஊடுருவிப் பரவுவதை விளக்கும் கோட்பாடு மிக முக்கியமான ஒன்று. அந்த  புதிய கண்டுபிடிப்பு, அதனை அடைய உதவும் வழிமுறை, காலம், ஏற்றுக் கொள்ளும்  சமூக மனப்பான்மை ஆகியன  ஒரு கண்டுபிடிப்பின் பரவலின்   வேகத்தை நிர்ணயிக்கின்றன. ("Diffusion of innovations" is a theory that seeks to explain how, why, and at what rate new ideas and technology spread. Rogers proposes that four main elements influence the spread of a new idea: the innovation itself, communication channels, time, and a social system. இதற்குக்  கூகுள் கொடுக்கும்  மொழிபெயர்ப்பு: "புதிய கண்டுபிடிப்புகளின் பரவல் ஒரு கோட்பாடாகும், அது எவ்வாறு, ஏன், புதிய விகிதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரவியுள்ளன என்பதை விளக்க முற்படுகிறது. நான்கு முக்கிய கூறுகள் ஒரு புதிய யோசனை பரவலை பாதிக்கும் என்று ரோஜர்ஸ் முன்மொழிகிறது: புதுமை தன்னை, தொடர்பு சேனல்கள், நேரம், மற்றும் ஒரு சமூக அமைப்பு".   கணினி செய்த இந்த  மொழி பெயர்ப்பு சிறப்பாக இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கடந்த ஆண்டுகளைவிடப் பொருளை புரிந்து கொள்ள உதவும் விதத்தில் நல்ல  முன்னேற்றம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்).




மூன்றில் இருவர் வட்டார மொழியில் கிடைக்கும் தகவல் நம்பிக்கைக்குரியது என்று கருதுகிறார்கள்.  பிற இந்திய மொழியினருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்கள் அதிக அளவில் இணையத்தில் தங்களது   தாய்மொழிப் பயன்பாட்டிற்கு தங்களை தகவமைத்துக் கொள்வதில் முதன்மையிடத்தில் (42%) இருக்கிறார்கள். இதனைப் பல பிரிவுகளில் விளக்குகிறது இந்த ஆய்வறிக்கை.




பெரும்பான்மையானவர்  ஆங்கிலத்தைவிட  தங்கள் தாய்மொழியில் வரும் விளம்பரங்களைப் படித்து வினையாற்றுகிறார்கள்.  இது இந்தி மொழியில் அரசு செய்திகளை, சேவைகளைக் குறித்து விளம்பரம் செய்யும் நடுவண் அரசு தனது  கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவல். இவ்வாறு தாய்மொழி விளம்பரங்களுக்குச் செயலாற்றுபவர்களில் தமிழர் முன்னணியில் (97%) இருக்கிறார்கள்.  பெரும்பாலும் அனைத்துத் தமிழரும் தமிழில் படிக்க விரும்புகிறார்கள் என்பதை இது  காட்டுவதால், ஆங்கிலத்தில்  தங்கள் கருத்துகளை முன்வைக்க விரும்புபவர் அதற்கு ஏற்ற மறுமொழி கிட்டாவிட்டால் வருந்திப் பயனில்லை (So, the lesson is: if you want to reach out, going native is the way to go, obviously).  



இது போன்ற தகவல்களின் அடிப்படையில், அடுத்த நான்காண்டுகளில் தாய்மொழி வழி இணையவழிப் பயன்கொள்வதில் நால்வரில் மூவர் என்ற அளவில் தமிழர் தம்மை தகவமைத்துக் கொண்டு முன்னணியில் இருப்பர் (கன்னடரும் அவ்வாறே  - 74%; தமிழர் போலவே தகவமைப்பில் முன்னேறி முன்னணியில்  இருப்பர்) என்று இந்த ஆய்வறிக்கை கணிக்கிறது. 




பிற இந்திய மொழியினருடன் ஒப்பிடும் பொழுது,  இப்பொழுதும் அதிக அளவு தமிழர்  செய்திகளைத் தாய்மொழியில் படிப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள்,  அடுத்த நான்காண்டுகளுக்குப் பிறகும் தமிழரில் அதிக விழுக்காட்டினர் தாய்மொழியிலேயே செய்திகளைப் படிப்பதில் முன்னணியில் இருப்பர் எனக் கணிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக  இந்தியாவின் வட்டார மொழிகளில் செய்தி பெறுவது ஆங்கிலத்தில் பயன் பெறுபவர் அளவையும்  மிஞ்சிவிடப் போகிறது.  இது மிகவும் நல்லதொரு செய்தி.  நிறைய வாசகர்கள் என்பது நிறைய எழுத்தாளர்கள், நிறையத் தமிழ் இணையத் தளங்கள், அதிக தமிழ்ப் பதிவுகள், உரையாடல்கள் என்று விரிவடையும் நிலையை எட்டும். வரும் ஆண்டுகளில் 24 மில்லியன் இணையவழி தமிழ்ப் பயனர் இருப்பார் என எதிர்பார்த்தால் அதன் தேவைக்கேற்ப பல இணையத் தமிழ் பதிவுகள் நூல்களாகவோ, கட்டுரைகளாகவோ, பல வித வாசகர்களின் தேவைக்கேற்ப அதிகரிக்கவும் செய்யும், இணையவழி கலந்துரையாடல்களும் அதிகரிக்கும். 



அனைத்து மொழியினருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்  அரசியலில் அதிக ஆர்வம் காட்டி முன்னணியில் இருக்கிறார்கள். இந்தி மொழியினருக்கு வட்டாரச் செய்திகளிலும், வங்காளிகளுக்கு விளையாட்டுச் செய்திகளிலும், குஜராத்திகளுக்குத் திரைப்படம் கேளிக்கை செய்திகளிலும் அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. இன்றைய பயன்பாட்டின்படி  வட்டாரச் செய்திகள் (63%), அரசியல் (61%), விளையாட்டுச் செய்திகள்(45%)  என்ற வரிசையில்  தமிழர்களின் விரும்பி வாசிக்கும் செய்திகள் இருக்கின்றன. கேளிக்கை திரைப்படம் ஆகிய செய்திகளில் 44% தமிழர் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்.   

இந்த அறிக்கை கொடுக்கும் தகவலைப்  பயன்படுத்தி அதற்கேற்ப அரசுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், கல்வியாளர்கள் என யாவரும் தங்கள் சேவைகளை மக்களிடம் கொண்டு செல்லத் திட்டமிட வேண்டும்.  பல அலைபேசி செயலிகளையும் உருவாக்க வேண்டும்.

---
* Indian Languages –Defining India's Internet - KPMG
https://assets.kpmg.com/content/dam/kpmg/in/pdf/2017/04/Indian-languages-Defining-Indias-Internet.pdf





______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________

மூன்றாம் குலோத்துங்கன்

 -- முனைவர் கி. காளைராசன்

திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன் (காலம் கி.பி. 1178-1218)

கும்பகோணம் அருகே திருபுவனத்திலிருந்து கிழக்கே நான்கு கல் தொலைவிலுள்ள ஓர் ஊர் திருவாலங்காடு ஆகும்.  இத்திருவாலங்காட்டில் உள்ள சிவாலயம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்றம் பெற்று திகழ்ந்ததாகும்.  இது இம்மன்னனால் பல திருப்பணிகள் செய்யப்பட்டு சிறப்படைந்தது.

ஸ்ரீ வடவாராண்யேசுவரர் எனும் இத்திருக்கோயில் திருவாடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோவிலினுள் இடம் பெற்றுள்ள குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக மதிக்கப்படுவதாகும். 


திருவாலங்காட்டுப் படிமத்தில் மாமன்னன் தன் கூப்பிய கரங்களால், மார்பில் வீரவாள் ஒன்றினை அனைத்துள்ளான்.  எழில்மிகு இச்சிலைக்கு மகுடமாகத் திகழ்வது முடிபோட்ட கொண்டைக்கு மேல் திருவடிகள் இரண்டினைச் சுமந்து நிற்பதே ஆகும். தாடி மீசைகள் திகழ, மார்பில் உத்திராக்க மாலைகள் அணி செய்ய பல மடிப்புகளுடன் நீண்ட ஆடை உடுத்தி நிற்கிறான்.  மாவீரன் ஒருவன் சைவ செம்மலாய் கயிலைநாதனின் திருவடிகளைச் சுமந்து நிற்கும் இக்கோலக் காட்சியில் இதுவரை வேறு எந்த ஒரு மன்னனது சிலையும் நமக்குக் கிடைக்கவில்லை.  திருவாலங்காடு ஆலயத்தில்  குலோத்துங்கனின் இடதுகைக் கக்கத்தில் உடைவாள் உள்ள அமைப்பு  சிறப்புடையது.

இத்தகைய கோலத்தில் தனது சிலையைப் படைத்துக் கொண்ட குலோத்துங்கனின் பெருமை சாதாரண ஒன்றா?  பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பாவினை வகுத்த கண்டராதித்த சோழர் சிவபாதசேகரன் எனத் தன்னைக் கூறிக் கொண்ட முதலாம் இராசராசசோழன் திருத்தொண்டர் மாக்கதை எழுதச் செய்து தில்லையம்பலக் கூத்தனின் பொற் பாதங்களாகிய தாமரைமலரை மொய்க்கின்ற வண்டு தான்தான் எனக் கூறிக் கொண்ட இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய மாமன்னர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றியவன் அல்லவா இவன்?

அதனால்தான் தனது உருவச்சிலையில் சிவனடிகளை தன்னுடைய தலையால் தாங்கும் கோலம் பெற்றான். பா தொடுப்பவராகவும் பாதசேகரராகவும், பாதகமலங்களை மொய்க்கும் வண்டுகளாகவும் தங்களை பெருமைப் படுத்திக் கொண்ட சோழர்களின் வழிவந்த இம்மன்னன் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலைமேல் சூடிக் கொண்டு சிலையாக திருவாலங்காட்டில் நிற்பதைக் காணும் போது....
“நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தாய்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே“
என்ற அப்பர் பெருமானின் நல்லூர் பதிகமும், திருச்சிராப்பள்ளி வலிதாங்குர பல்லவேசுவர கிருகத்தில் சிவபெருமானின் திருவடிகளை தன் தலையால் தாங்குகிறேன் என்று கல்வெட்டுப் பாக்களால் கூறி அவ்வாறே தாங்கிச் சிலையாக நிற்கும் மகேந்திர போத்தரையனின் சிற்பமும் நம்முன் தோன்றி தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவும் ஒரு பண்பு நலனை நம் நினைவிற்குக் கொணர்கின்றன.

(திருவாலங்காட்டுக் கோயிற்சுற்றில் உள்ளபடி)

குருசாமி ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடை வீட்டிற்கான பாதயாத்திரை சென்ற போது துன்முகி வைகாசி 2ஆம் நாள் (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை திருவாலங்காட்டில் வழிபாடு செய்யும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  அப்போது பார்த்து வணங்கியதை இப்போது பதிவு செய்கிறேன்.




மேலும், மூன்றாம் குலோத்துங்கனின் சிலைகள் தமிழகத்தில்,
கீழக்குறுக்கையிலும்
(http://aalayamkanden.blogspot.com/2012/03/where-short-hands-grew.html)



திருவிடை மருதூரிலும்
(https://www.quora.com/How-did-the-Chola-dynasty-meet-its-doom)

காணக் கிடைக்கின்றன.





__________________________________________________________
முனைவர் கி.காளைராசன்
kalairajan26@gmail.com
__________________________________________________________

Sunday, April 30, 2017

தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா?

-- தேமொழி 

“ஊட்டியின் மோயாற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், அதன் வடக்குப் பகுதி கர்நாடக எல்லையிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் நீரானது கபினி மற்றும் நுகு அணைகளைச் சென்றடைகிறது. பின்னர் இரு அணையிலிருந்தும் வெளியேறும் நீரானது ஒன்றாக இணைந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் இணைந்து, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாகத் தமிழகத்திற்குள் பாய்கிறது.”

கடந்த சில நாட்களாகத் தமிழக உழவர்களுக்கு உதவும் வகையில் சிந்தித்த சிலர் வெளியிட்டுள்ள தகவல் இது. இவ்வாறு கர்நாடகாவில் பாயும் மோயாற்றின் வழியாக கர்நாடகா பலன் அடைவதாகவும், இதனால் அவர்களுக்கே நாம்தான் நீர் தருகிறோம் என்றும், அதை அவர்கள் தமிழகத்திற்குத் தரமறுக்கிறார்கள் என்றும், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்துக் கொண்டுள்ளது என்றும், மோயாற்றின் மீது நாம் ஓர் அணையைக் கட்டிவிட்டோம் என்றால் கர்நாடகா நீருக்காக நம்மைக் கெஞ்சும் நிலை உருவாகிவிடும் என்றும், இந்த உண்மை தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்கள் தன்னலத்தின் காரணமாக இத்தீர்வை எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை என்றும் பலமான கருத்துப் பரப்புரை பல சமூக வலைத்தளங்களிலும் மாறி மாறிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இணையத்தின் சில “செய்தித் தளங்களும்” கூட இவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை. ஆனால் இது உண்மையா, இதனால் தீர்வு கிடைக்குமா என்று ஒருவரும் அக்கறை இன்றி வரும் செய்திக்கு கருத்துப் பகிர்வதும் தொடர்கிறது என்பதுதான் வியப்புக்குரியது. இத்தகைய போக்கிற்கு நன்கு கற்றவர்களும் விதிவிலக்கல்ல.

மோயாறும் அது பாயுமிடங்களும்:


நீலகிரியின் வடக்குப் பகுதியில் துவங்கி காடுகளின் வழியேமட்டும் பாயும் மோயாற்றின் நீளம் 100 கிமீ.க்கும் குறைவானது. இதில் சுமார் 25 கிமீ. கர்நாடகா எல்லைக்குள் பாய்கிறது. முதுமலைக் காட்டின் வழியாகப் பாயும் இந்த மோயாறுதான் அப்பகுதியின் வனவிலங்குகளின் வாழ்வாதாரம். மோயாற்றுக்குக் கிளையாறுகள் எதுவும் கிடையாது.  மேலும் மோயாறு போல துவக்கநிலையில் உள்ள எந்த ஒரு ஆற்றிற்கும் கிளையாறுகளும் இருக்காது. இவ்வாறு நீலகிரியின் வடபகுதியில் பாயும் மோயாறும், நீலகிரியின் தென்பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியே பாயும் பவானி ஆறும் பவானிசாகர் நீர்த்தேக்கத்தைத் தங்கள் நீரால் நிரப்புகின்றன. இதற்காக சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் பவானி திட்டம் மூலம் பவானிசாகர் அணையும் கட்டப்பட்டு 33 கோடி கன அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

மோயாற்றின் பள்ளத்தாக்கில், மோயாற்றின் வடகரை சத்தியமங்கலம், தலைமலை, தாளவாடி பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப் பகுதியும்; தென்கரை கொடநாட்டுப் பகுதியும் வெவ்வேறு விலங்குகளின் இருப்பிடங்களாகத் திகழ்கின்றன. சோலைக் காடுகளைக் கொண்ட குளிர் பிரதேசமான கொடநாட்டுப் பகுதியில் வாழும் கருமந்தி, இருவாச்சிப் பறவைகள், பழுப்பு மரநாய், ஈ பிடிப்பான் பறவை ஆகியன, மோயாற்றின் வடக்கில் புதர் காடுகளைக் கொண்ட வெப்பப் பிரதேசமான சத்தியமங்கலம் பகுதியில் கிடையாது. இதுவே இப்பகுதி இயற்கைச் சூழலின் தனிச்சிறப்பு ஆகும். இருகரையின் காட்டுவிலங்குகளும் மோயாற்றினை நம்பியே வாழ்கின்றன. யானைகள், புலிகள், கழுதைப் புலி, வெளிமான் ஆகிய நான்கு விலங்குகளும் வாழும் உலகின் ஒரே இடம் மோயாற்றின் பள்ளத்தாக்கு. இது மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் காட்டுப்பகுதிகளில் ஒன்று.

மோயாற்றின் கிளையாறு வழியாக கபினி ஆற்றிற்கு நீர் கிடைக்கிறதா என்பதில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்தி கிடைக்கும் பொழுது அது உண்மைதானா என ஆராய்ந்து பார்க்க அதே இணையமும் நமக்குப் பலவழிகளில் உதவுகிறது. கூகுள் இணையத்தேடலும், கூகுள் புவிவரைபடமும் ஒரு சொடுக்கில் கணினித் திரையில் தரவுகளை அள்ளித்தருகிறது.

கூகுள் புவிவரைபடத்தில் மோயாறு பாயும் தடத்தைத் தொடர்ந்து சென்றால் மோயாற்றுக்குக் கிளையாறு இல்லை என்பதும், இல்லாத ஒரு கிளையாற்றின் வழியாக கபினியாறும் நீர் பெறவில்லை என்பதும், மோயாற்றில் அணைகட்டுவதால் கர்நாடகாவை நாம் அடிபணியவைக்கமுடியாது என்பதும் தெளிவாகிறது. கொடுக்கப்பட்டுள்ள படங்கள் வழி உண்மை அறியலாம்.



கட்டுரைக்கான தகவல் தந்து உதவிய தளங்கள்:
[1] Moyar River — https://en.wikipedia.org/wiki/Moyar_River
[2] மோயாறு — https://ta.wikipedia.org/s/h7k
[3] ஒரு நதியின் வாக்குமூலம்: சத்தி, கொடநாடு வனங்களின் ஆதாரம் மோயாற்றின்! [தி இந்து தமிழ் நாளிதழ்] — http://tamil.thehindu.com/opinion/columns/ஒரு-நதியின்-வாக்குமூலம்-சத்தி-கொடநாடு-வனங்களின்-ஆதாரம்-மோயாற்றின்/article7312241.ece
[4] கருவூலம்: ஈரோடு மாவட்டம்! [தினமணி] — http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/feb/18/கருவூலம்-ஈரோடு-மாவட்டம்-2651269.html
***
பொய்த்தகவல் வெளிவந்த இணையத்தளங்கள்:
[1] மோயாற்றில் அணை கட்டி, கர்நாடகாவுக்கு ஆப்பு வைக்கலாம்! — http://www.channel42.in/tamil/tamilnadu-will-build-dam-in-moyar-river
[2] ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..! — http://www.manithan.com/news/20170406126217?ref=youmaylike1%7Cஊட்டியில்
[3] தமிழக விவசாயிகள் தண்ணீர், குடிநீர் பிரச்சனை தீர: கட்டப்படுமா மோயாற்றின் அணை ? — http://tamilvarthamaani.in/2017/04/தமிழக-விவசாயிகள்-தண்ணீர்/
[4] இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி! — http://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-about-moyar-river-001082.html



நன்றி: சிறகு 



______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________ 

மேல்பாடி பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு

--- சேசாத்திரி சிறீதரன் 


மேல்பாடி கல்வெட்டு. இவ்விடம் பொன்னை (அ) நிவா ஆற்றின் கரைமேல் அமைந்துள்ளது. இது 'அரிஞ்சய சோழனின் படைவீடு'. அரியூர் துஞ்சிய தேவர் என்றும் குறிக்கப்படுபவர். அவர் நினைவில் இராசராசன் இங்கொரு கோவிலைக் கட்டினான் (படங்கள் தமிழ்வாணன் தளத்தில் இருந்து).






கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை  சுந்தரம், கோவை:

கல்வெட்டுப் படம் அழகாக உள்ளது. ஆற்றூர்த்துஞ்சிய தேவரான  அரிஞ்சய சோழருக்கு முதலாம் இராசராசன் எடுப்பித்த 'பள்ளிப்படைக் கோயிலாகும்'. செய்தியில் குறிப்பிட்டதுபோலப் படைவீடல்ல.

கல்வெட்டின் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ திருமக்ள்போலப் பெருநிலச்செல்வியுந்த
2 னக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சா
3 லை கல்மறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியும் னு ளம்ப
4 பாடியுந்தடிகைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
5 எண்டிசை புகழ்தர வீழ மண்டலமுமிரட்ட பாடியேழரையிலக்கமுந்திண்டி
6 றல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளர் வுழியெல்லா
7 யாண்டுந்தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொ
8 ள் ஸ்ரீ  கோராஜராஜ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு
9 ...ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணப்பாடித் தூஞாட்டு
10 மேற்பாடியான ராஜாச்ரயபுரத்து ஆற்றூர்த்துஞ்சின தேவற்குப் பள்ளிபடை
11 யாக உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்தருளின திருவறிஞ்சீச்வரத்து
12 மஹாதேவற்கு வெண்குன்றக்கோட்டத்து மருதாட்டு வெள்ளாளன் அ...வாக்
13 கி (மு)த்தி கண்டனேன் வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றினுக்கு
14 (வைத்த) சாவா மூவாப்பேராடு தொண்ணூற்றாறுங் கைக்கொண்டு
15 நி(சதம்) உழக்கு நெய் ராஜ கேசரியால் சந்திராதித்தவற் அட்டு....நேன் 
                                                               இராசாச்ரயபுரத்து 
16 இடையன் ஏணி கெங்காதிரநேன்
குறிப்பு:
1.  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

2. முதல் ஏழு வரிகள் முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி வரிகள். முதலாம் இராசராசனின் கல்வெட்டு என்பதனால், தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் உள்ளது போலவே மிக அழகாக வெட்டப்பட்ட எழுத்துகளைக்  காண்கிறோம். தஞ்சையைக் காட்டிலும் சற்று மிகையான வளைவுகளை எழுத்துகள் கொண்டுள்ளன. வடசொற்கள் வரும் இடங்கள் மட்டுமே என்றில்லாமல் ”ந்த”, ”ந்தா”, ”ந்தொ”, “க்க”, “க்கே”, “க்கு” , “க்கோ”  என ஒற்றெழுத்துச் சந்திகள் வருமிடங்களிலும் கிரந்தக் கூட்டெழுத்துகளை நிறையப் பயன்படுத்தியுள்ளனர்.  தமிழ் எழுத்துகளைத் தவிர்த்துள்ளனர். இது அரிதாகக் காணப்படுவது. “வூழி” (ஊழி)  என்பது பிழையாக ”வுழி” என எழுதப்பட்டுள்ளது.

3. இராசராசனின் ஆட்சியாண்டு கல்வெட்டில் தெளிவாகக் காணப்படவில்லை.

4. தொண்டை மண்டலம் முழுதும் ஜயங்கொண்ட சோழ மண்டலம் எனக் கருதுகிறேன். தூஞாட்டு என்பது தூ(ய்)நாட்டைக் குறிக்கும். மேற்பாடி, இந்தத் தூய் நாட்டில் இருந்தது. மேற்பாடிக்கு “ராஜாச்ரயபுரம்”  என்னும் சிறப்புப் பெயர் இருந்தது. சாளுக்கியரை வென்றதால் இராசராசன் பெற்ற சிறப்புப் பெயர் “ராஜாச்ரயன்”  என்பதாகலாம்.

5. கொடை, நந்தாவிளக்கு. கொடைக்கு வேண்டும் முதலாகத் தொண்ணூற்றாறு ஆடுகள் வைக்கப்படுகின்றன. கொடையாளி வெண்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த  மருதாடு நாட்டைச் சேர்ந்த முத்திகண்டன் என்ற வெள்ளாளன். ஆடுகள்,  கெங்காதிரன் என்னும் இடையன் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அவன், நாள்தோறும் (நிசதம்) ஓர் உழக்கு நெய் கோயிலுக்கு அளிக்க(அட்டுதல்)வேண்டும். இவ்விடையன் மேல்பாடி ஊரினன்.

6 ”ராஜகேசரி”  என்னும் பெயரால் அமைந்த முகத்தல் அளவுக் கருவி இருந்தது.