Friday, July 15, 2016

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மொழியும் பண்பாடும் சார்ந்த விழாக்கள்

 தேமதுரத் தமிழோசை உலகமெலாம்  பரவும் வகை செய்தல் வேண்டும்

--  முனைவர் சுபாஷிணி 

தமிழர்கள் பெருவாரியாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், கோடைக்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது போல தமிழ் மொழி சார்ந்த கருத்தரங்க நிகழ்வுகளும் ஆய்வு நிகழ்வுகளும் நடந்த வண்ணமிருக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் நான் கலந்து கொண்ட விழாக்களாக மூன்றினைக் குறிப்பிட விரும்புகின்றேன். ஜெர்மனியில் எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் விழா,டோர்ட்முண்ட் நகரில் நடைபெற்ற திருக்குறள் ஆய்வரங்கம், வட அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ப்பேரவையின் 29வது ஆண்டு விழா ஆகியனவே இவை மூன்றும்.

கண்டங்கள் மாறுபடினும், இந்த மூன்று நிகழ்வுகளின் அளவு அமைப்பு ஆகியன மாறுபடினும், இவற்றின் அடிநாதமாக ஒலிக்கும் இரண்டு கூறுகளை நான் அவதானிக்கின்றேன்.

முதலாவது, வளரும் தலைமுறையினருக்கு தமிழ் மொழியைச் சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம். அடுத்தது, தமிழ் மொழியுடன் பாரம்பரிய இசை, கலை, வாழ்வியல் கூறுகளை தமிழர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாட்டில் மறந்து மறைந்து விடாமல் தக்க வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள்.

தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற நாடுகளான தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கை ஆகிய நாடுகளில் ஒரு தமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்வதை விடப் புலம்பெயர்ந்த நாடுகளில் அவ்வாறு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் என்பன அதிகமே. பொருளாதார அடிப்படை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனை தான். அதுமட்டுமின்றி, தமிழ் மக்கள் பற்பல தூரப் பகுதிகளிலிருந்து வந்து தங்கியிருந்து நிகழ்வில் கலந்து கொண்டு செல்வது என்பதும் ஒரு சிக்கல்தான்.

இவை முக்கியப் பிரச்சனைகள் தாம் என்றாலும், இவற்றைச் சமாளித்து அயலகத்திலும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி காண முடியும் என்று நிரூபித்திருக்கின்றன இங்கு நான் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள். இவற்றின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது இச்சங்கங்களின் ஏற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்புத்தன்மையும், தீவிர தமிழ்ப்பற்றும் தான் என்பது கூடுதல் புகழ்ச்சி அல்ல!

தாயகத்தில் மட்டுமல்லாமல், அயல் நாடுகளிலும் கூட பொதுவாகத் தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது நம் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கோ, ஆய்வுக் கருத்தரங்குகளுக்கோ, அல்லது மொழி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கோ தங்கள் ஈடுபாட்டை வெளிக்காட்டுவதில்லை, வந்து கலந்து கொண்டு ஊக்குவிப்பதில்லை என்பதே. இது மறுக்கப்பட முடியாத உண்மை. நான் தமிழன் என உணர்ச்சி பொங்க கூக்குரலிட்டு தமிழ்ப்பற்றை வெளிக்காட்ட நினைப்பதில் ஆர்வம் காட்டுவோர் கூட, நிறைவான தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளைப் புறம் தள்ளி ஒதுக்கிச் செல்வதுதான் யதார்த்தமாக இருக்கின்றது.

பெரிய அளவில் தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் தமிழ்த்திரைப்படப் பிரபலங்களை வரவழைக்க வேண்டிய நிர்பந்தம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அமைந்து விடுகின்றது. பொது மக்களின் ஆர்வம் என்பது கலைகளில், அதிலும் குறிப்பாக திரைப்படம் தொடர்பான அம்சங்களில் தான் அதிகமாக இருக்கின்றது. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குமுன் பெற்றோர்கள் தரும் சர்க்கரைபோல, இப்படி தமிழ் விழாக்களுக்குப் பொது மக்களைக் கவர்ந்திழுக்க திரைப்பட பிரபலங்கள் தமிழ் நிகழ்ச்சிகளில் தரிசனம் தருவதும் நிகழ்கின்றது. ஆக, ஏதோ ஒரு வகையில் பல சாமர்த்தியங்களையும் உத்திகளையும் கையாண்டு தான் அயல் நாடுகளில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை ஆர்வமுள்ளோர் நடத்தி வருகின்றனர்.

தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் இப்படி தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தமிழ் மொழியும் பண்பாடும் சார்ந்த நிகழ்வுகளுக்கு அர்ப்பணிக்கும் ஒவ்வொரு தமிழ்த்தொண்டரையும் போற்ற வேண்டியதும் நம் கடமை. அத்தகையோரின் சேவைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை நினைத்துப் பார்ப்பது பெருமை கொள்கின்றது.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி









___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________

Wednesday, July 13, 2016

காலச்சக்கரம்

-- காசுமி




யார் பேச்சையும்
கேளாமல் ஓடினால்
அது காலம்!

விளிம்பில் நின்று
கொண்டு
ஓட்டமோ ஓட்டமென
ஓடுகிறது
வாழ்க்கை!

மெல்லக் கழண்டு
மையப் பகுதிக்கு
வந்த போது
ஓட்டமில்லை.

காலம் நின்று விட்டது!

காத்திருக்கும் வேளையில்
கடலாய் பரந்திருக்கும்காலம்
கூடிப்பிணையும் போது
 காணாமல் போய் விடுகிறது!


அடிப் போடி!
வேலைக்கு ஓடும் போது
ஈதென்ன பேச்சு?

காலம் சுழல்கிறது!
 




___________________________________________________________
  
காசுமி
kasume.chan@gmail.com
https://kasumichan.wordpress.com/
___________________________________________________________

Tuesday, July 12, 2016

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 18

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு – 1             
 
கல்லின் முன்புறம்


கல்வெட்டின் பாடம் :
1 யுவ வரு சித்
2 திரை மீ
3 ஸ்ரீ ராமப்ப
4 அய்யனவ
5 ர்கள் காரிய
6 த்துக்குக்கற்த
7 ரான சிதம்
8 பரநாத பிள்ளை
9 பாரபத்தியத்தில்
10 வடபரிசாரநா
11 ட்டு ஒத்தனூரா
12 ன பெரும்பழ
13 னத்துக் காணி
14 யுடைய வெள்
15 ளாழர் மூலர்க
16 ளில் வேலப்ப
17 னும் பாளந்தை
18 களில் உத்தமனு
19 (ம் மேற்படியூர்ச்)
20 ..................................


                                                                 கல்லின் பின்புறம்


கல்வெட்டின் பாடம் :
1 இ நித்த தன்ம
2 ம் பரிபாலன
3 மாக நடத்தின
4 பேரெல்லா
5 ங் காசிராமே
6 சுரம் சேவித்தா
7 பலன் பெறுவ
8 ராகவும் இந்த
9 த்தன்மம் வில
10 கினவர்கள் கெ
11 ங்கைக் கரையி
12 ல்க்காராம்பசு
13 ப்பிராமணன் 
14 மாதாபிதாகுரு
15 இவர்கள் அஞ்
16 சுபேரையுங்
17 கொன்ற தோ
18 ஷத்திலே
19 போகக்கடவ
20 தாகவும் 


குறிப்பு : 
கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலின் குறிப்புகளில், ராமப்பய்யன் அலுவலராகிய சிதம்பரநாதபிள்ளை காலத்தில் வெளியிடப்பெற்ற அரசு ஆணை என்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு என்று தரப்பட்டுள்ளது.
 
ராமப்பய்யன் என்பவர் திருமலை நாயக்கரின் படைத்தளபதி ஆவார். எனவே இக்கல்வெட்டு, திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1623-1659. கல்வெட்டில் வரும் யுவ வருடம்  (அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு வட்டத்தில் ஒரு ஆண்டின் பெயர்)  என்னும் குறிப்பு  கி.பி. 1635-ஆம் ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, கல்வெட்டின் காலம் சரியாகக் கி.பி. 1635 எனலாம். இங்கே தரப்பட்டுள்ள கல்வெட்டின் படத்தில் 20-ஆம் வரியிலிருந்து மேலும் ஒன்பது வரிகள் நிலத்தில் புதைந்து போயுள்ளன.
 
மேற்படி நூலின் குறிப்புப்படி, கொங்கு நாட்டின் வடபர்ரசார நாட்டுப்பிரிவைச் சேர்ந்த ஒத்தனூரான பெரும்பழனத்து உத்தமசோழீசுவரர் கோயிலுக்கு அபிஷேகம்,  நைவேத்தியம், நந்தாதீபம், சந்தியா தீபம் ஆகியவற்றுக்காக ஊர்ச்சந்தையின் மகமை வருமானத்தைக் கொடையாக அளித்துள்ள செய்தி தெரியவருகிறது. 
 
காரியத்துக்குக் கர்த்தரான என்னும் தொடர் நாயக்கர் காலக் கல்வெட்டுகளில் பெரும்பாலும் காணப்படுகின்ற ஒன்று. வெள்ளாளர்களில், மூலர்கள், பாளந்தைகள் ஆகிய கூட்டப்பிரிவினர் இருந்துள்ளனர் என்பது அறியப்படுகிறது. 
 
தன்மத்தைக் காப்பவர், காசி-இராமேசுவரம்  சென்றுவழிபட்ட நன்மையையும்,  தன்மத்தை விலக்கினவர் கங்கைக் கரையில், பசு, பிராமணன், தாய்,தந்தை, குரு ஆகிய ஐவரைக்கொன்ற தோஷத்தை அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
 
பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ்ச்சொற்கள் பயின்றதைப் போலன்றி,  நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், காரியகர்த்தர், பாரபத்தியம், அபிஷேகம், நைவேத்தியம், பரிபாலனம், சேவித்தல், தோஷம்  ஆகிய வடமொழிச் சொற்கள் மிகுதியும் காணப்படுவது சிந்தனைக்குரியது. ஆட்சியாளர்களைச் சார்ந்தே மொழி  வளர்வதும் தேய்வதும் நடைபெற்றுவந்துள்ளது என்பது வரலாற்றுச் சான்றாகும்.
 
கல்வெட்டில் வரும் பெரும்பழனம் (பெரும்பழன நல்லூர்) தற்போது பெருமாநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.




___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

விண்ணிலிருந்து வரும் விருந்தாளிகள்

-- சிங்கநெஞ்சம் சம்பந்தம். 

இன்று   (30.06.2016)    ASTEROID /METERORITE WATCH DAY. பொதுவாக விண்கற்கள் நாள் எனச் சொல்லலாம். இவை செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே சூரியனைச் சுற்றி வரும் துகள்கள். ASTEROID  என்பவை தமிழில் “சிறுகோள்” எனப்படுகின்றன. சில மீ. முதல் சில ஆயிரம் கி.மீ. வரையிலான குறுக்களவு கொண்டவை. METERORITE- விண்கற்கள் எனப்படுகின்றன. சில மீ. முதல் மைக்ரோ மி.மீ. வரையிலான அளவுள்ளவை. 

விண்கற்கள் அண்டவெளியிலிருந்து வரும் மிக முக்கிய விருந் தாளிகள். இவை வெளியூர் அல்ல, வெளிகோள்களுக்கிடையே சுற்றுபவை. இதுவரை எந்த விண்கலமும் இவற்றைக்  கொண்டுவரவில்லை. அவையாக வந்தால்தான் உண்டு. இவற்றை ஆய்வு செய்வதின் மூலம் பேரண்டத்தின் ஆதிகால நிலை பற்றிய செய்திகளை அறிய வாய்ப்புண்டு. ஆதலின் இவை கவனமாகப் போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியவை. கடந்த 150 ஆண்டுகளாக இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GSI) விண்கற்கள் பற்றிய விபரங்களைச் சேமித்து வருகிறது. அண்மையில் INDIAN METEORITES எனும் படநூல் (COFFEE TABLE BOOK) ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

நம் நாட்டில் விண்கற்கள் விழுந்த இடங்களின் வரைபடமும் வெளியாகியுள்ளது.



பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் நுழையும் போது அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக  விண்கற்கள் சிறு சிறு துண்டுகளாக  சிதறிப் போகின்றன அல்லது தீப்பிடித்து எரி நட்சத்திரங்களாக சாம்பலாகி விழுந்துபோகின்றன. இதுவரை நாம் அறிந்த விண் கற் களிலேயே பெரியது , நமீபியாவில் விழுந்த “ஹோபா” விண்கல்-சுமார் நூறு டன் எடையுள்ளது.


கடந்த  12.09.2008இல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் விழுந்த விண்கல்தான், இந்தியாவில்  விழுந்த விண்கற்களில் பெரியது. மொத்த எடை 150 கிலோ. பூமியை நெருங்கும்போது சிதறிய இந்த விண்கல் இடி இடிக்கும் ஓசையுடன் விட்டு விட்டு சுமார் ஒரு மணி நேரம் எரிமழையாய் பெய்தது.


 சுமார் ஆறு ச.கி.மீ. அளவிற்கு விண்கல் துண்டுகள் பரவிக் கிடந்தன. சாலையில் விழுந்த கற்கள்160 x 143 X 90 செ.மீ. அளவிற்குக்  குழிகளை ஏற்படுத்தின. சில இடங்களில் வீடு  மீது விழும் கற்கள்  கூரையில்  ஓட்டைப் போடுவதும் உண்டு.  


கடந்த காலங்களில் அளவிற்பெரிய விண்கற்கள் விழுந்து அதனால் ஏற்பட்ட பள்ளங்கள் இப்போது ஏரிகளாக மாறியுள்ளன.அரிசோனாவில் 1.2 கி.மீ. விட்டமுள்ள ஏரி , ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விழுந்த விண்கல்லின் தாக்கத்தால் ஏற்பட்டது என்றும், மகாராஷ்ட்ராவில் உள்ள  1.8 கி.மீ. விட்டமுள்ள லூனார் ஏரியும்
 அவ்வாறே உருவானது என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்


15.02.2008 இல் ரஷ்யாவில் பனி ஏரியில் விழுந்த செளியாபின்ஸ்க் எனும் .விண்கல் மழையின் போது 7000 வீடுகள் சேதமடைந்தன, 1500 பேர் காயமடைந்தனர்.




இந்தியாவில் விழும் விண்கற்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு  GSI இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் விழுந்த விண்கற்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.






 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________