Friday, November 20, 2015

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது: தொ.பரமசிவன் நேர்காணல்

என்.கௌரி


தொ.பரமசிவன் | படம்: எல்.ஸ்ரீனிவாசன்
தொ.பரமசிவன் | படம்: எல்.ஸ்ரீனிவாசன்
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில், பேராசிரியர் தொ. பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்தவை இவரது ஆய்வுகள். ‘அழகர் கோயில்’, ‘பண்பாட்டு அசைவுகள்’ போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுப் பெற்றவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...

உங்களுடைய ஆய்வுகளைக் கல்வெட்டுகள், ஓலைச்சுவடு களைத் தாண்டி நாட்டார் வழக்காறுகள் வழி அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதைப் பற்றி கூறவும்.
நாட்டார் என்கிற சொல்லால் நம்மை மாதிரி நகர்புறத்துக் காரங்க யாரை அர்த்தப்படுத்துகிறோம்? பெரும்பாலும் ‘அவுட்காஸ்ட்’ எனப்படும் ஊருக்கு வெளியே இருக்கிறவர்கள், கல்வியறிவு இல்லாதவர்கள், ஏழை மக்கள் இவர்களைத்தான் நினைக்கிறோம். நாட்டார் என்று சொன்னவுடன், ஏதோ வேடிக்கை பொருள்மாதிரி, பெரிய மீசை வைத்துக்கொண்டு, தலையில் துண்டுப் போட்டுக்கொண்டு சாமி ஆடுகிற கூட்டம் மாதிரிதான் நாம் நினைக்கிறோம். ஆனால், அப்படியில்லை. அவர்களைப் படிக்கிறதுதான் உண்மையாகவே தேசத்தைப் படிப்பதாகும். அவர்களுடைய வாழ்க்கை அசைவுகள் அர்த்தமுடையவை. இன்னும் சொல்லப்போனால், நாட்டார் என்று நாம் அடையாளங்காட்டும் ஒவ்வொருவரையும் 'படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள்’ என்று சொல்லலாம். அந்தப் புத்தகங்களைத்தான் நான் ரொம்ப விரும்பிப் படிக்கிறேன். அவர்களிடம் இருக்கும் இயல்பான ஞானம், நம்ம நகர்ப்புறத்துக்காரங்கக்கிட்ட இல்லைங்கிறதுதான் சோகமான விஷயம்.

நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் பண்பாடு குறித்த ஆய்வுகளுக்கு ஒரு சித்தாந்தம் சார்ந்த அணுகுமுறை அவசியமா?
என்னுடைய ஆய்வுகள் மற்றவர்களைக் கவர்கிற இடமே, பெரியாரியத்தையும், நாட்டாரியலையும் நான் இணைத்துப் பார்ப்பதால்தான். இந்த வியப்பு, மார்க்சியவாதிகளிடமும் இருந்தது. சாதாரணமாகச் சொன்னால், நாட்டார் வழக்காற்றியல் மீது நமது கவனத்தைக் குவித்தது இடதுசாரிகள்தான். எங்கள் ஊரைச் சேர்ந்த என் பக்கத்துத் தெருவைச் சேர்ந்த நா. வானமாமாலை போன்றவர்கள்தான் இந்தத் துறையின் முன்னோடிகள் . மார்க்சிய வெளிச்சத்தில் நாட்டார் மரபை அணுகுகிற போக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தலைப்படத் தொடங்கியது.

உங்களுக்கு முன்னர் நா.வானமாமாலை, பேராசிரியர் லூர்து போன்றவர்களும் சமகாலத்தில் நீங்கள், நா. முத்துமோகன் போன்றவர்கள் இத்தகைய ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகிறீர்கள். இன்று இத்துறையில் நம்பிக்கையளிக்கும் ஆய்வு களை யார் செய்து வருகிறார்கள்?
அப்படி நம்பிக்கையளிக்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் நம்பிக்கையிழந்து போயிருக்கிறோம் என்பதுதான் இப்போதைய சோகம். நீங்கள் சொல்வது போல், வானமாமாலை, லூர்து போன்றவர்கள் முதல் தலை முறையினர். எங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு அடுத்தத் தலைமுறை. மூன்றாவது தலைமுறைக்கு இப்போது ஆள் இல்லையென்பதுதான் உண்மை. என்னைவிட, முத்துமோகனுக்கு சித்தாந்தத் தெளிவு நிறைய இருக்கிறது. அவருடைய ‘ஏகம், அநேகம், சாதியம்’ என்ற புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘தெய்வங் களும் சமூகமரபுகளும்’ என்ற புத்தகத்துக்கு அவர் முன்னுரை கொடுத்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஒரே படகில் பயணிப்பவர்கள்.

நீங்கள் பாண்டியர்களுடைய வரலாற்றில் கவனம் செலுத்தப் போவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்னும் செய்ய வேண்டியவை எவை?
களம் திறந்துகிடக்கிறது. ஆய்வாளர்களைத்தான் காண வில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆட்களும், கருவிகளும், நிறுவன வசதியும்தான் இல்லை. மீனாட்சியம்மன், பாண்டியர்களோடு நெருங்கிய தொடர்புடைய தெய்வம் என்பதோடு பழைய வரலாற்றாசிரியர்கள் நிறுத்திக்கொள்வார்கள். நான் கூடுதலாக ஒரு தகவலைத் தருகிறேன். அந்தத் தகவலை அவர்கள் கண்டுகொள்ளவும் இல்லை. கணக்கில் எடுத்துக்கொள்ளவும் இல்லை. மதுரை மீனாட்சியம்மனுக்கு நவராத்திரி திருவிழாவில் ஒரு நாள் ‘வேப்பம்பூ மாலை’ அணிவிக்கப்படுகிறது. பாண்டியர்களை அடையாளப்படுத்துகிற ஒரு மாலையை ஒரு தெய்வம் அணிகிறது. அதைப் பற்றி எந்த வரலாற்றாசிரியர்களும் இதுவரை ஆய்வுசெய்யவில்லை.

அதிகரித்து வரும் வைதீக மரபின் தாக்கத்தினால் சிறு தெய்வ மரபுகள் அழிந்துவிடுமா?
உக்கிரம் பொருந்திய கையில் ஆயுதமேந்திய, அக்னி மகுடம் சூடிய தாய்த் தெய்வங்களை வைதீக மரபால் ஏற்றுக்கொள்ள முடியாது. மீனாட்சியம்மனைப் போல சாந்தசொரூபியாய் இருக்கும் தெய்வங்களைத்தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். இதை ஒரு ‘மைக்ரோ பாலிடிக்ஸ்’ என்றுகூடச் சொல்லலாம். எல்லாப் பெருந்தெய்வங்களின் கோயில்களிலும் சிறுதெய்வங்களைக்கொண்டுவந்து குடியமர்த்துவதனா லேயே சிறுதெய்வங்களை பெருந்தெய்வங்கள் தின்று விடும் என்று அச்சப்படத் தேவையில்லை.

சமீபகாலமாக, தமிழகத்தில் சாதி அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன. மதவாத சக்திகளும் இவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கு மேலாக சாதி ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றனவே?
பெரியார் தோற்றுப்போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால், அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனிதகுலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தனையாக முன்வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே, அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்லமுடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்லமுடியாது. அந்த விடுதலைக்கான வழியாக அவர் சாதி ஒழிப்பை முன்வைத்தார். கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு அல்ல, சாதி ஒழிப்புதான். சாதி புகல்கிற கோயில்கள், சாதி புகல்கிற இலக்கியங்கள், சாதி புகல்கிற மொழி என்று அவர் அதை முன்வைத்தார்.

சாதிக்கு அங்கீகாரம் தருகிற எல்லாவற்றுக்கும் அவர் அங்கீகாரம் தர மறுத்தார். பெரியாரைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதால்தான் பெரியாரை அடுத்தத்தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஊழல், அரசியல் ஒழுக்கமின்மை காரணமாக, பெரியாரை திராவிடக் கட்சிகளால் முன்வைக்க முடியவில்லை. பெரியாரை, சமூகத்திடம் கொண்டுசெல்வதற்கான திறனை அவர்கள் இழந்துவிட்டார்கள்.

பாளையங்கோட்டை வரலாற்றைப் பற்றி எழுதிவருவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அந்தப் பணி முடிந்துவிட்டதா?
அந்தப் புத்தகப் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. பாளையங்கோட்டை, கிறிஸ்தவ சமய மரபுகளை உள் வாங்கிக்கொண்ட ஊர். சமய சகிப்புத்தன்மை என்பது அந்த ஊரைப் பொறுத்தவரை கெட்டவார்த்தை. ஏனென்றால், அது அங்கே இயல்பாகவே இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்வையில்லாதவர்களுக்கும், செவித்திறனில்லாதவர்களுக்கும் பள்ளிக்கூடங்களைக் கட்டிய ஊர் அது. அந்த முயற்சியில் நிறைய ஐரோப்பியர்களும் இருந்தார்கள். அதனால்தான், கால்டுவெல் போன்ற அறிஞர்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். ஹென்றி பவர் என்று ஒருவர் இருந்தார். கால்டுவெல்லுக்கு சமகாலத்தவர். பெரியார் எல்லாம் பிறப்பதற்கு முன்னாலேயே ஐரோப்பிய சமூகம் அவரை ‘திராவிட இயல் அறிஞர்’ என்றுதான் அடையாளப்படுத்தியிருக்கிறது. அவருடைய கல்லறையில் ‘எமினென்ட் டிராவிடியன் ஸ்காலர்’(Eminent Dravidian Scholar)என்றுதான் எழுதிவைத்திருக்கின்றனர். பாளையங்கோட்டை தேவாலயங்களில் இப்போது கேட்டாலும் ஹென்றி பவரின் வேதாகம மொழிப்பெயர்ப்பைத்தான் வாசிக்கிறோம் என்று சொல்வார்கள்.

முதல் அறிவியல் தமிழ் நூல் என்று சொல்லப்படுகின்ற ‘பூமிசாஸ்திரத்தை’ எழுதிய ‘சார்லஸ் தியோபலஸ் இரேனியஸ்’ என்ற அறிஞரும் பத்தொன்பது ஆண்டுகள் பாளையங்கோட்டையில் வாழ்ந்திருக்கிறார்.

பாளையங்கோட்டையைப் பற்றிய இதுபோன்ற நிறைய நுணுக்கமான சான்றுகள் அழிந்துவிட்டன. அதற்குப் பிறகுதான் நான் என் ஆய்வுகளைத் தொடங்கினேன். ஹென்றி பவரின் நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், ஹென்றி பவர் சிந்தாமணிக்கு ஒரு உரை எழுதியிருக்கிறார். சிந்தாமணியைப் பாடம் சொல்வதற்கு தமிழ் ஆசிரியர்கள் இப்போதும் பயப்படுவார்கள். ஆனால், ஹென்றி பவர் 1865-லேயே ‘நாமகள் இலம்பகம்’ பகுதிக்கு உ.வே.சாவிற்கு முன்னர் உரை எழுதியிருக்கிறார். ஆனால், உ.வே.சா அதைச் சொல்லவேயில்லை.


நன்றி: தி இந்து
http://tamil.thehindu.com/general/literature/பெரியாரைத்-தோற்கடிக்க-முடியாது-தொபரமசிவன்-நேர்காணல்/article7214606.ece









என். கௌரி

gowri.n@thehindutamil.co.in






Monday, November 16, 2015

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

--கீழை ஜஹாங்கீர் அரூஸி.


ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால் வெள்ளப்பகுதியாக்கி அங்குள்ள மக்களை மிரட்டி வருகிறது மழை.அந்த மக்கள் தான் நீர் நிலைப்பகுதிகளில் வீடு,கடைகள் போன்ற கட்டிடங்கள் கட்டி மழை நீர் ஒதுங்க முடியாத அவலநிலையை உருவாக்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் எத்தனையோ ஏரி,கண்மாய்,குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களின் சுயநல கட்டிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் மழைநீர் ஒதுங்க இடம் இல்லாவிட்டால்  மழை நீர்  வேறு எங்கு போகும்?

வேறு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் அதாவது மழை நீர் தங்கும் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்குள் தான் மழை நீர் தங்கும்.

அதன் செய்திகள் தான் தற்போதைய ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.

தான் ஓய்வெடுக்கும் நீர் நிலைப்பகுதிகளை கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் மீதான கோபத்தில் இதுவரை 113 பேரை தமிழகத்தில் கொன்று விட்டது மழை.

இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லுவேன் என்றும் கொக்கரித்து வருகிறது.இந்த மழையின் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அரசு இயந்திரங்கள்.




தனது முழு ஆளுமையை கொண்டு மழையின் வன்முறையிலிருந்து மக்களை ஓரளவு காப்பாற்றி விடலாம் என நினைக்கும் அரசு அடுத்த ஆண்டு மழையின் தாக்குதலை எப்படி எதிர் கொள்ள போகிறது?

மழையின் கோரப்பிடியிலிருந்து மக்களை முழுமையாகவும் நிரந்தரமாகவும் பாதுகாக்க வேண்டுமென்று அரசு இயந்திரங்கள் நினைக்குமானால்...உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து ஏரி,கண்மாய்,குளங்களை கண்டெடுத்து அவைகளை கையகப்படுத்த வேண்டும்.

அவ்வாறு கையப்படுத்தும் நீர் நிலைப்பகுதிகளை தூர் வாரி,ஆழப்படுத்தி மழை நீர் செல்வதற்கான வழிகளையும் சீர்படுத்தி வைத்தால்...அடுத்த ஆண்டின் மழை மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தனது இருப்பிடம் சென்று அமைதியாய் உறங்கும்.

மக்களும் நிம்மதியாய் உறங்குவர்.இதை சிந்திக்க வேண்டியது அரசு மட்டுமல்ல,பொதுமக்களும் தான்.


நன்றி: முதுகுளத்தூர்  டாட்  காம்
http://mudukulathur.com/?p=38028








கீழை ஜஹாங்கீர் அரூஸி
 
jahangeerh328@gmail.com





  


கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 5

-செல்வன். 
பேரா. யூகோ: ஆனால் 1987/1988/1989 காலகட்டத்தில் தானே அவர்கள் அம்பேத்கரின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்கள்?

சன்னா: அவர்கள் மொழிபெயர்த்தது உண்மையே. ஆனால் அதற்கும் முன்பே பல குறுவெளியீடுகளில் அவரது படைப்புகள் வெளிவந்தன. சரி, இதைகூட விடுங்கள், உங்களை இன்னொரு கேள்வி கேட்கிறேன். அந்த காலகட்டத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் அம்பேத்கரின் சிலைகள் இருக்கவில்லையா?

பேரா யூகோ: இருந்தன. ஆனால் இந்த அளவு எண்ணிக்கையில் இருக்கவில்லை

சன்னா: அம்பேத்கரை பொறுத்தவரை மக்கள் அவரது கருத்துக்களை படித்தபின் போராட்டத்தில் இறங்கவில்லை. மக்களை பொறுத்தவரை அவர் பெரும்பாலும் ஒரு குறியீடு மட்டுமே. அவர் நமக்காக உழைத்தார், நமக்காக போராடினார், அதனால் அவர் நம் ரட்சகர் என்றே மக்கள் கருதுகிறார்கள். அதனால் கிராமம் கிராமமாக அம்பேத்கரின் சிலைகளை எழுப்பி போராடும் உணர்வை அதன்மூலம் வளர்த்தார்கள். பொதுமக்கள் போராட கொள்கை, தத்துவம் போன்றவை அவசியமில்லை. தலித் அல்லாத சிந்தனையாளர்கள் கருதியது என்னவெனில் போராட ஒரு தத்துவ அடித்தளம் வேண்டும் என கருதியதே. அப்படி கருதியதால் தான் இந்த இடைப்பட்ட காலத்தை அவர்கள் முற்றிலும் தவறாக புரிந்து கொண்டார்கள். ஆக நாம் 1990 அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவை தலித் அல்லாதோருக்கான விழிப்புணர்வுகாலம் என புரிந்துகொள்ளலாமே ஒழிய, அது தலித்துகளை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு மட்டுமே. இந்த கோணம் பலராலும் புரிந்துகொள்ளபடவில்லை என்றே கருதுகிறேன்

பேரா யூகோ: நல்ல பாயிண்ட், வெகு சிலரே இதைப்பற்றி பேசுகிறார்கள். பேராசிரியர்கள் நூலகங்களில் அமர்ந்தபடி அயோத்திதாசரைப்பற்றியும் தலித் இயக்கங்களின் தொடர்வரலாறு குறித்தும் பேசுவார்கள். இயக்கங்கள் ஓரிரவில் அல்லது ஒரே நாளில் எழமுடியாது என்பதும் தெளிவு. புரட்சிக்கான விதைகள் முதற்கண் ஊன்றபடல் அவசியம். நாமும் இயக்கங்களின் முந்தைய வரலாற்றை ஆராய்வதும் அவசியம். நான் இதுவரை பேசியவர்களின் உங்களைபோல தெளிவாக இதை பேசியவர்கள் யாருமே இல்லை. ஆனால் இதுவரையிலும் யாருமே 1957 முதல் 1990 வரை வாழ்ந்த தலித் தலைவர்களைப்பற்றி எழுதியதில்லை

சன்னா: அவர்கள் அத்தலைவர்களைபற்றி கொஞ்சமும் அக்கறை காட்டியதில்லை

பேரா யூகோ: ஆம். இவர்கள் அத்தலைவர்களை புறக்கணித்தது மட்டுமின்றி அவர்களைப்பற்றி எழுதவும் இல்லை

சன்னா: ஆமாம். சிவராஜ் (குடியரசு கட்சி தலைவர்) ஒரு முக்கியமான தலைவர். அவர் அம்பேத்கருக்கு அடுத்த நிலையில் அவருடன் இருந்தவர். ஆனால் அவரைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை சொல்லுங்கள்? அவர் அம்பேத்கரை விட ஒரு வருடம் மட்டுமே மூத்தவர், ஆனால் அவரைப்பற்றி எழுதுபவர்கள் யாருமே இல்லை. அம்பேத்கரின் மறைவுக்கு பின் அவர் அமைக்க விரும்பிய குடியரசுக் கட்சியை என் சிவராஜ் அமைத்தார். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியை அமைக்க விரும்பி அதற்கான விதிகளையும், கொள்கைகளையும் எழுதினார். ஆனால் அக்கனவு நனவாகும் முன்னரே மறைந்தார்.  குடியரசுகட்சியை உருவாக்கி அகில இந்திய அளவில் கொண்டு சென்றதில் பெரும்பங்கு என். சிவராஜுக்கு உண்டு. அப்போது அதிகம் புகழ் பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் பலர் இருந்தார்கள். அம்பேத்கர் 1956ல் இறந்தார். குடியரசுக்கட்சி 1957ல் உதயமாகிறது. 1962 தேர்தலில் திமுக குடியரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்கிறது. கூட்டணி உருவாகும் சமயத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய தலித் தலைவர் ஆர்ய சங்கரன் ஆவார். அவருக்கு பின் பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, ஜி.மூர்த்தி, சக்திதாசன், சேப்பன், எல். இளையபெருமாள், வை.பாலசுந்தரம் மற்றும் பல தலைவர்களும் பிற்காலத்தில் வந்த இயக்கங்களுக்கு வழிகோலினார்கள். இந்த தலைவர்களை யாருமே அங்கீகரிக்கவில்லை. திமுகவுடன் கூட்டு சேரும் அளவுக்கு அக்காலகட்டத்தில் குடியரசுக்கட்சி வலுவானதாக இருந்தது. என்.சிவராஜ் வேலூரில் போட்டியிட்டு இரண்டாமிடத்தை பிடித்தார். (அவர் இதற்குமுன் 1957ல் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தார்). சிவராஜ் வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டார். அதே சமயம் வேலூரில் இருந்த ஆறு தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இரு கட்சியினரும் ஒரே கூட்டணி என்பதால் இருவரும் வென்றிருக்க வேண்டும். திமுக ஆறு தொகுதியிலும் வென்றிருந்தால் குடியரசு கட்சியும் எம்பி தேர்தலில் வென்றிருக்க வேண்டும். ஆனால் அதிர்ச்சியளிக்கும் முறையில் ஆறு திமுக வேட்பாளர்களும் வெற்றிபெற்றும், குடியரசு கட்சி வேலூர் எம்பி தேர்தலில் தோற்கடிக்கபட்டார். இது யார் குற்றம்? திமுகவினர் அவருக்கு ஓட்டு போட்டிருக்கவேண்டும் இல்லையா? கூட்டணிகட்சிக்கு துரோகம் செய்த திமுக தலித்களின் உரிமைக்கும்,அடையாளத்துக்கும் போரிடுவதாக எப்படிக்கூற முடியும்?

திராவிட கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்களின் இயல்பே இதுதான். தலித் தலைவர்களின் குரலை ஒலிக்க அனுமதிக்கபடாததால் தலித் இயக்கமே இல்லை என நாம் முடிவுகட்ட முடியாது. ஆக, அம்பேத்கர் மறைந்து 1990 வரையிலான 30 ஆண்டு காலகட்டத்தில் குறிப்பிடதக்க இயக்கங்கள் தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் இயங்கியே வந்துள்ளன. அவற்றை ஏற்றுகொள்ள மனமில்லாத நிலையாலேயெ இவ்வகை விவாதங்கள் தோன்றுகின்றன. 1990ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னரே தலித அல்லாத சிந்தனையாளர்கள் கண்ணில் தலித் செயல்பாடுகள் தெரிய துவங்கின

பேரா யூகோ: குடியரசுகட்சி போன்ற கட்சிகள் தம் சொந்த சின்னத்தில் போட்டியிடவில்லை என்பதும் திமுக அல்லது அதிமுக போன்ற கட்சிகளின் சின்னத்திலேயே போட்டியிட்டன என்பதும் சரியான தகவல் தானே?

சன்னா: ஆம். துவக்க நிலையில் (1952 மற்றும் 1957 தேர்தல்களில்) குடியரசுக்கட்சி சொந்தமாக யானை சின்னத்தில் நின்றது. சட்டசபை தேர்தலில் காமன்வீல் கட்சியுடன் உதயசூரியன் சின்னத்தில் (இதை பின்பு திமுக சுவிகாரம் எடுத்தது) நின்றது. அதன்பின் தலித் கட்சிகள் தனித்துபோட்டியிடும் அளவு ஓட்டுவங்கியை திரட்ட முடியாததால் அவர்களால் சொந்த கட்சி சின்னத்தில் நிற்க முடியவில்லை. அவர்களுக்கு கொடுக்கபட்ட தொகுதிகள் 1 அல்லது 2 எனும் அளவிலேயே இருந்ததால் திமுகவுடன் கூட்டணி வைத்தால் உதயசூரியன் என்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இரட்டை இலை என்ற நிலையிலேயே அவர்கள் போட்டியிட நேர்ந்தது. இப்படித்தான் அவர்களின் இயக்கங்கள் ஒடுக்கபட்டன.

(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்..)
 



 

  செல்வன்

 
holyape@gmail.com





 

மறைந்துப் போன மயிலாப்பூர் ஏரி...

- கோ.செங்குட்டுவன்.


சென்னையின் பாரிமுனையில் இருந்தோ மற்ற இடங்களில் இருந்தோ பேருந்துகளில் மயிலாப்பூர் செல்பவர்கள் “மயிலாப்பூர் டேங்க்” என்று டிக்கெட் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

கபாலிசுவரர் கோயில் குளத்தின் அருகில் உள்ள நிறுத்தம் இப்படி வழங்கப்படுகிறது. உண்மையில், மயிலாப்பூர் டேங்க், “ஏரி” ஒன்றிருந்தது. அது இருந்த இடம், தேனாம்பேட்டை.

இதுபற்றி தமிழ்த் தென்றல் திரு.வி.க. இப்படிச் சொல்வார்:
“இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் முதலிய ஊர்கள் ஒரு சிறு கோட்டமெனத் திகழ்ந்தன. இவைகளின் பேரூர் மயிலாப்பூர். இவ்வூர்களின் ஒருமைப்பாட்டுக்கு உயிர் நாடியாயிருந்தது ஒரு சிற்றேரி. அதன் இடம் தேனாம் பேட்டை. ஆனால் அது மயிலாப்பூர் ஏரி என்றே வழங்கப்பட்டது. அவ்வேரி மயிலைக் கோட்டத்தை ஓம்பியது.”

வன்னியர் தேனாம்பேட்டைக்கும் தியாகராயநகருக்கும் இடையேயுள்ள ஆலமர்ந்தாள் எனப்படும் காளி கோயில் குறித்து ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி மிகவும் ஆய்வு செய்தார். அவரது ஆய்வின் முடிவு, ஆலமர்ந்தாள் என்பது ஆலமரத்தடியின் அமர்ந்தவள் என்பதல்ல, ஆலின் (நீரின்) கரையின் அமர்ந்தவள் என்பதாக இருந்தது.

இதற்குக் காரணம், அந்தக் கோயில் மயிலாப்பூர் ஏரிக்கரையின் மீது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏரியின் கரைகளில் பலமுறை மயிலையார் நடந்திருக்கிறார். “என்னுடைய வாழ்க்கையிலே நான் கண்ணாரக் கண்ட மயிலாப்பூர் ஏரி. மயிலாப்பூரைச் சேர்ந்த நிலபுலங்களுக்கு நீர்ப் பாய்ச்சிய மயிலாப்பூர் ஏரி” என அவர் சிலாகித்துச் சொல்கிறார்.

ஆம். சென்னை நகரின் பழைய வரைபடங்களில் இந்த ஏரியின் ஒரு பகுதி “லாங் டேங்க் (LONG TANK)” என்றும் இன்னொருப் பகுதி “நுங்கம்பாக்கம் ஏரி” என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதன் அமைப்பை “மதராசபட்டினம்” நூலாசிரியர் கே.ஆர்.நரசய்யா பின்வருமாறு விவரிப்பார்:
“இந்தப் பெரிய, நீள ஏரியின் வடக்கில் நுங்கம்பாக்கமும், தெற்கில் சைதாப்பேட்டை யும், கிழக்கில் தேனாம்பேட்டையும், மேற்கில் செங்கல்பட்டு ஜில்லாவின் ஒரு பகுதியும் இருந்தன. இந்த ஏரி ஒரு அரை பிறை வடிவைக் கொண்டதாய் இருந்தது. இதன் வடமேற்குப் பகுதி நுங்கம்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. மவுண்ட் ரோடு இதனையொட்டி வளைந்து சைதாப்பேட்டையை அடைந்தது.”

1920லும் அதற்குப் பின்னும் வெளியான சென்னையின் வரைபடங்களில், லாங் டேங்க் என்றழைக்கப்பட்ட மயிலாப்பூர் ஏரி இடம்பெற்றிருந்தது.

“பின்னர் அது மறைந்தது. மயிலைக் கோட்டத்தின் கட்டுங்குலைந்தது” என வருத்தப் படுகிறார் திரு.வி.க. “என் வாழ்க்கைக் காலத்திலேயே மாடமாளிகைகள் நிறைந்து மக்கள் வாழும் நகரமாக மாறிப்போனதைக் கண்டேன்” என்கிறார் மயிலையார்.

என்ன நடந்தது?
நகரத்தின் வளர்ச்சி எனும் பெயரில் மயிலாப்பூர் ஏரி மறைக்கப்பட்டது.

இன்று, சென்னை வணிகத்தின் இதயமான பிரம்மாண்டமான நகர் அந்தப் பரந்த ஏரியின் மீது விளைந்து, வளர்ந்து, செழித்து நிற்கிறது!

ஆமாம். இன்றைய தியாகராய நகர்தான் அன்றைய மயிலாப்பூர் ஏரி.

“நீரின்றி அமையாது உலகு” என எழுதியதோடு மட்டுமல்லாமல், மழை நீரின் போக்கினையும், இவற்றைக் கட்டுப்படுத்தும் நீர் மேலாண்மைக் குறித்தும் நன்கு அறிந்தவர்கள் தமிழர்கள்.

ஆறுகளையும் ஏரிகளையும் குளங்களையும் வெட்டினார்கள். வெட்டியதோடு நிற்காமல், “இதனைக் காப்பவர் அடி தன் முடி மேலன” என பணிவுடன் கேட்டுக் கொண்டனர்.

அந்த மூத்தோர்ச் சொல் மதிக்கப்படவில்லை.

இதற்கு ஒரு உதாரணமாக மயிலாப்பூர் ஏரி காட்டப்பட்டுள்ளது.




மூத்தோர்ச் சொல் மதிக்கப்படாததன் ஊழ்வினைதானோ என்னவோ, இன்று சென்னை உள்ளிட்ட நகரங்கள் ஓரிருநாள் மழைக்கே தண்ணீாில் தத்தளிக்கின்றன!

இன்னும் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கப் போகிறோமோ எதிர்காலத்தில்?



உதவியவை:
சங்ககால வரலாற்று ஆய்வுகள் – மயிலை சீனி.வேங்கடசாமி.
திரு.வி.க.வின் வெற்றிப் படிகள் – திருவாரூர் வி.கல்யாணசுந்தரனார்.
மதராசபட்டினம் – கே.ஆர்.நரசய்யா.






கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com