Monday, April 13, 2020

நாட்டார் வழக்காற்று முளைப்பாரிப் பாடலும் மாங்குடி கிழார் புறப்பாடலும்


—   முனைவர்.ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
      தாய்த்தெய்வ வழிபாட்டிற்குரிய கும்மிப் பாடல்களில் முளைப்பாரி வளர்க்கும் முறை இடம்பெறுகிறது. களஆய்வில் சேகரித்த தனிப்பாடல்,  முத்தாலம்மன் கதைப் பாடல் இரண்டிலும் முளைப்பாரிக்குரிய பயிர்கள் எவை என்பது பற்றிய செய்திகள் உள்ளன. இச்செய்தி சங்க இலக்கியத்தில் இடம்பெறும் மாங்குடி கிழாரின் புறநானூற்றுப் பாடலை நினைவூட்டுகிறது. குறிப்பிட்ட புறப்பாடலில் இடம்பெறும் பயிர்களுக்கும்; முளைப்பாரிக் கும்மிப்பாட்டில் உள்ள பயிர்களுக்கும் ஒப்புமை இருப்பதன் காரணம் காண முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். “Who Are Dravidians?” என்ற தன் ஆய்வுக்கட்டுரையில் (ப.- 1-32) முனைவர் ஆண்ட்ரே எஃப் .ஜோபெர்க் ‘திராவிட நாகரிகம் அழிந்துவிட்டது’ என்று முடிபாகக் கூறியிருப்பதால் இத்தகைய ஒப்பாய்வு தேவையாகிறது.   

      முதல்நிலைத் தரவாக முத்தாலம்மன் கதைப்பாடல் செய்தி, புறம் 335ம் பாடல் செய்தி இரண்டும் அமைய; இரண்டாம்நிலைத் தரவாகத் தனிக் கும்மிப்பாட்டுச்செய்தியும் பிற புறநானூற்றுச் செய்திகளும் அமைகின்றன.  இருவேறு காலமும் வகையும் சேர்ந்த இவ்விலக்கிய ஒப்பாய்வு தமிழ்ச் சமூகவரலாற்றில் தெளிவு காண உதவுகிறது. 

முளைப்பாரி வளர்ப்பதற்குரிய பயிர்கள்:
      புன்செய்ப் பயிர்களே முளைப்பாரிக்கு உரிய பயிர்களாகும்.  முத்தாலம்மன் கதைப் பாடலில் முளைப்பாரி வளர்ப்பதற்குரிய பயிர்களாகச் சொல்லப்படுபவை காராமணி, தட்டைப்பயறு, சிறுபயறு ஆகிய மூன்றாகும்.    
            "சின்னகொட்டான் பெட்டிகொண்டு 
            தெருக்களெல்லாம் பயிரெடுத்து 
            வாங்களம்மா தோழிமாரே அம்மாவுக்கு முளைபோட 
            என்தாயே ஈஸ்வரியே
            காரா மணிபயிறு கலந்துவைச்ச தட்டப்பயறு 
            சிறு பயறும் தானெடுத்து 
            என்தாயே ஈஸ்வரியே… [219]

(https://kanmanitamil.blogspot.com/2019/11/blog-post.html) மூன்றையும் ஒன்றாகக் கலக்கின்றனர். மண்பானை ஓட்டை எடுத்து; ஆட்டுப்புழுக்கை, மாட்டுச் சாணம் இரண்டையும் கலந்து; கம்பந்தட்டை, வைக்கோலாகியவற்றைச் சேர்த்துப் பரப்பி; அதன் மேல் பயறுகளை விதைக்கின்றனர். இப்பயறுகள் புன்செய்ப் பயிர்வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.          


      முளைப்பாரி பற்றிய தனிக் கும்மிப்பாட்டில் மேற்சுட்டிய மூன்று பயறுகள் மட்டுமின்றி இன்னும் சில சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன. அவரை, துவரை, ஐந்துவகை மொச்சை(கருப்பு மொச்சை, வெள்ளை மொச்சை, பச்சை மொச்சை, புள்ளி மொச்சை முதலியன இன்று நமக்குத் தெரிந்த வகைகள்), ஆமணக்கு, எள், சிறுபயறு, கொண்டைக்கடலை, காராமணி என்று பட்டியல் சிறிது நீள்கிறது (https://kanmanitamil.blogspot.com/2020/02/blog-post.html).  

"என்னகச்ச இடுப்பிலிட்டு வண்ணப்பொட்டி தலையிலிட்டு- அங்க 
பெரியவீடு‘ன்னு சொல்லி பிச்சை கேட்டு வந்தோம் அம்மா- அந்த
பூமியிலே வெளஞ்ச பண்டம்; புதுப் பண்டம் போடுங்கம்மா- அந்த 
நாட்டிலே வெளஞ்ச பண்டம் ;நல்ல பண்டம் போடுங்கம்மா- நம்ம 
காணியிலே வெளஞ்ச பண்டம் ; கலந்த பண்டம் போடுங்கம்மா 
அவர துவர மொச்ச அஞ்சுவகை ஆமணக்கு 
எள்ளு சிறுபயறு ஏத்த மணிப்பயறு 
கடல சிறுபயறு காரமணிப் பயறு 
வாங்கிவந்த பயறுகள வாளியில ஊறப்போட்டு 
கொண்டுவந்த பயறுகள  கொடத்துல ஊறப்போட்டு……………” 
என்ற பாடற்பகுதியைத் தொடர்ந்து செய்முறையும் நுட்பமான விவரம் கொண்டுள்ளது. எல்லாப் பயறுகளையும் ஊறப் போட்டு; மண்பானை ஓட்டில்; ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணம், கம்பந்தட்டை, வைக்கோல்; சோளத்தட்டை எல்லாம் சேர்த்துப் பரப்புகின்றனர். சாணம் கட்டியாக இல்லாதபடி பொடிக்கின்றனர். நன்கு விளைய ஏதுவாகத் தட்டைகளின் கணுக்களை நெரிக்கின்றனர். சாணத்துடன் அமுக்கி விதைக்கின்றனர். பயறுகள், எள், ஆமணக்கு அனைத்தும் புன்செய்ப் பயிர்களே.    

மாங்குடி கிழார் பாடலில் இடம்பெறும் பயிர்கள்:
            “அடலருந் துப்பின் ……………
            குரவே தளவே குருந்தே முல்லையென் 
            றிந்நான் கல்லது பூவுமில்லை 
            கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே 
            சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையோடு 
            இந்நான் கல்லது உணாவும்  இல்லை…………
            கல்லே பரவின் அல்லது 
            நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்- 335) 
இப்பாட்டு தமிழ்ச்சமூக வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. வருணத்தார் வருகைக்குப் பின் தமிழகச் சூழல் எப்படி மாறியது என்று தொகுத்துரைக்கிறார் புலவர். குரவு, தளவு, குருந்து, முல்லை முதலிய பூக்கள் தவிர்ந்த பிற பூக்களின் பயன்பாடு போர்முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது; வேந்தர்க்கும் குறுநில மன்னர்க்கும் இடையே உருவான அதிகாரப் போட்டியில் திணை மாந்தர்க்கு; வெட்சி முதலாக வாகை ஈறாகப் போரின் பல நிலைகட்குரிய அடையாளப் பூக்களின் தேவை ஏற்பட்டது. மரபு வழிப்பட்ட வரகு, தினை, கொள், அவரை முதலிய புன்செய்ப்பயிர்களின் வேளாண்மையோடு நெல் வேளாண்மையும் செய்ததைக் குறிப்பாகச் சுட்டுகிறார். கள்ளைப் படைத்து நடுகல்லை வழிபட்ட நிலைமாறிக்; கடவுளர்க்கு நெல்தூவி வழிபடும் வழக்கம் தோன்றிய மரபு மாற்றத்தையும் ஆவணப்படுத்துகிறார். இப் பாடலைச் சமூகவரலாற்று அடிப்படையில் விளக்க பதிப்பித்தவரும் உரையாசிரியரும் முற்படவில்லை. மாங்குடிகிழார் குறிப்பிடும் தமிழர் உணவு அனைத்தும் புன்செய்ப் பயிராகும். அவரை என்பது பயறு வகைகளுக்குரிய பொதுப்பெயர் ஆகும்.   திணைமாந்தரான தொல்தமிழர் புன்செய் வேளாண்மையை மரபாகக் கொண்டவர் என்பதை எடுத்துக்காட்டும் பிற புறப்பாடல்களும் உள. 

கரும்பனூர் கிழானது ஊர்; 
            “வன்பாலாற் கருங்கால் வரகின் 
            அரிகாற் கருப்பை அலைக்கும் பூழின் 
            அங்கட் குறுமுயல் வெருவ அயல 
            கருங்கோட்டு இருப்பைப் பூவுறைக்குந்து  ”- (புறம்.- 384) 
என  வருணிக்கப்படுகிறது. காட்டில் விளையும் வரகும், அரிகாலில் வாழும் எலியைப் பிடிக்க முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரமும், அதன் காரணமாக அஞ்சி ஓடும் முயலும், அதன் ஓட்டத்தில் இருப்பை மரத்துப் பூக்கள் உதிர்வதும்; அவனது புன்செய் வேளாண்மையை உறுதிப்படுத்தும் சான்றுகளாம். அவனிடம் விருந்தயர்ந்த கிணைப்பொருநன்;

            "பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் 
            அளவுபு கலந்து மெல்லிது பருகி ………….
            இருநிலம் கூலம் பாறக் கோடை"யில் (புறம்.- 381) 
            இருந்ததாகப் பாடுகிறான். ‘மன்னர் மனை சென்று ஊனுணவிற்காகக் காத்துத் துன்புற வேண்டாம்; எவ்வளவு தொலைவிலிருந்தாலும்; வறட்சிக்காலத்தில்  என்னிடம் வந்து பாலிற்கரைத்தும், பாகுடன் சேர்த்தும் வயிறார உண்டு செல்க’ என்கிறான். பாகிற் கொண்டதாவது உளுந்தங்களி ஆகும்.

       "உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை" (அகம்.- 86) 
என்று நல்லாவூர் கிழார் பாடும் உளுந்தங்களி இன்றும் கருப்பட்டிப் பாகுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு உணவுவகை ஆகும். பாலிற் பெய்த உணவு பாலுடன் கூடிய வரகரிசிச் சோறாகும்.   

ஆலத்தூர் கிழார் புன்செயில் விளைந்த வரகுச்சோற்றைப் பாலோடு உண்பதை;
            "................................புன்புல வரகின் 
            பாற்பெய்…………………………………..
            அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்" (புறம்.- 34) 
என்று விரிவாகப் பாடியுள்ளார்.

      கிள்ளிவளவன் பஞ்சகாலத்தில் பண்ணன் மக்கள் பசியாற்றிய  தன்மையைக் கூறி அவனைப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று போற்றிப்  புகழ்ந்தமைக்கும் (புறம்- 173) இப்புன்செய் வேளாண்மையே காரணம்  எனலாம். நீர்வளம் குன்றிய போதும்; அதாவது நெற்கழனி பயன்தராத போதும்;
            “வெள்ளி தென்புலத் துறைய விளைவயற் 
            பள்ளம் வாடிய பயனில் காலை……….
            வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம் 
            பெயர்க்கும் பண்ணன்” (புறம்- 388) 
என்ற அடிகள் புலவர்க்குப் புல்லின் விளைநிலத்தைத் தானமாகக் கொடுக்கக் கூடியவன் என்கின்றன.  

            வலார்கிழான் பண்ணன்;
            "பெருங்குறும் புடுத்த வன்புல இருக்கை"- (புறம்.- 181) 
உடைய  தலைவன் என்று பாடல் பெற்றுள்ளான். இங்கு வன்புலம் புன்செய் ஆகும்.   இதனால் தொல்தமிழகத்து இனக்குழுத் தலைவராகிய கிழார்கள்  புன்செய்ப்பயிர் செய்தவர் என்பதும்; வேளாளர் வந்தேறிய பின்னரே அவர் நெற்பயிர் விளைவித்தனர் என்பதும்; புன்செய் வேளாண்மை மரபின் எச்சமே முளைப்பாரி வளர்த்து வழிபடும் வழக்கம் என்பதும் புலனாகிறது.   

முடிவுரை:
      பயறுவகைகள், எள், ஆமணக்கு ஆகியவற்றை முளைப்பாரியாக வளர்த்துப் படைத்துக் கும்மியடித்து வழிபடுவது; தொல்தமிழராகிய இனக்குழுச் சமுதாயத்தின் மரபாகும். திராவிட நாகரிகம் அழிந்துவிட்டது என்ற முனைவர் ஆண்ட்ரே எஃப் .ஜோபெர்கின் முடிவு மீளாய்விற்குரியது.  


துணைநூற்பட்டியல்:
1.  அகநானூறு- களிற்றியானை நிரை- ந.மு.வேங்கடசாமி நாட்டார்& ரா.வேங்கடாசலம் பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- முதல் பதிப்பின் மறு பதிப்பு- 2009   
2.  புறநானூறு l& ll - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- 438& 598- முதற்பதிப்பின் மறுஅச்சு- 2007
3.  Symposium On Dravidian Civilization- Andre F.Sjoberg (editor)- publn. no.1- ASIAN SERIES of the Center for Asian Studies of the University of Texas, Austin- 1971 


குறிப்பு:  இது திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 24.02.2020 அன்று நடந்த ஒப்பிலக்கிய பண்பாட்டு ஆய்வுக் கருத்தரங்கிற்கு அனுப்பிய ஆய்வுக்கட்டுரை.




தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி




Sunday, April 12, 2020

உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்...



 —  வித்யாசாகர்


உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்...

          அன்பால், நம்பிக்கையால், நமது அறத்தின் வலிமையால், பண்பின் உயர்வு கருதி நாம்  இயற்கையால் மீண்டும்  நிச்சயமாக மன்னிக்கப் படுவோம். மீண்டும் அனைவருமாய் வென்றெழுந்து வருவோம். 

          மீண்டெழுவோமெனும் சமத்துவச் சிந்தனைகளோடு மேலும் ஆழ்மனத்திலிருந்து தூய தாயன்பு பெருக்கி, கருணையைக் கூட்டி, நட்பு வலுத்து, நானிலம் சிறக்க நாடெங்கும் நம்பிக்கையைப் பரப்புவோம், வாருங்கள்...

          இப்போதைக்கு நம்மிடமிருக்கும் பெரும்பலத்தின் மூலமே இந்த நம்பிக்கை தான். நற்சிந்தனைகள் தான். நன்னடத்தையும் நல்ல ஆரோக்கியத்திற்கான புரிதலையும், மண்ணின் மரபூரிய மருத்துவமென அனைத்தோடும் சேர்ந்து நாம் விரைவில் மீண்டெழ மிக அரியதொரு நல்ல வாழ்க்கையை நாமெல்லோரும் வாழ்வோமெனும் நம்பிக்கை தான் இப்போதைக்கு நம்மோடு பிறந்த சொத்து.

          மகிழ்ச்சி என்பது இம்மண்ணின் உயிர்க்கெல்லாம் பொது என்பதை மறந்ததொன்றே மனிதர் நாம் செய்த மாபெருங் குற்றம். அதைப் புரியும் தருணமிது. தெளியும் அறிவு பெறின்;அது நமக்குக் காலம் தரும் கொடை. இன்னொரு வாய்ப்பு என்பதை மகிழ்வோடு ஏற்போம்.

          அதை ஏற்கும் அறிவு நமக்குண்டு. நமக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றையும் எல்லோரும் உணர்கிறோம். எல்லாம் தெரிகிறது ஆனாலும் எதையும் எதற்கோ இன்னும் மறுக்கிறோம். 

          மனதை உடைத்துக்கொண்டு வந்து விழிகளில் நிறையும் அழையைப்போல, நம் மனச்செருக்கு குபீரென பீரிட்டு வெளியே வந்து விழுந்து விடுமானால் பிறகு பாருங்கள் நமக்கு மரணம் பற்றிய பயம் உடனே போய்விடும். வாழ்வதற்கு தன்னைத்தானே நாம் வீரியத்தோடு தயாராகி விடுவோம்.

          காரணம் நம்மில் பிரிவு எங்கே? நம்மில் உயர்ந்தோர் யார் தாழ்ந்தோர் யார்? பணமொன்றைத் தூக்கி ச்சீயென வெளியே வீசிவிட்டு பகட்டுத்தனமும் புகழின்றி மனதின் நிர்வாணத்தோடு கனவு  கண்டு பாருங்கள் யாதுமற்று நம்மை; நாம் அத்தனைப் பேரும் ஒன்றே, ஒன்றேயெனப் புரியும். 

          பிறகு இதில் யார் இறக்க? யார் பிழைக்க? பிழைத்தால் அத்தனைப் பேரும் பிழைப்போம். இறந்தால் அத்தனைப் பேரும் இறப்போம். நம்மில் பேதமில்லையென்று ஒன்றி எல்லோரும் நாதத்துள் நிறைக்க ஏற்போம்.

          அப்போது அந்த தானெனும் சுடுமண் வந்து வெளியே கொட்டிவிடும். உள்ளே அழகாகத் தெய்வீகம் மலர்ந்துகொள்ளும். எல்லோர்மீதும் இன்னும் அன்பு சுரக்கும். பிற உயிர்கள் தான் மொத்தத்தில் பெரிதாகத் தெரியும்.

          அப்படியொரு மனம் மலர்ந்த தெய்வீகத்தோடு தாய்மையோடு இவ்வுலகை நாம் காணவேண்டும். பேருவகையோடு மனதால் கட்டியணைத்து இந்த இயற்கை அன்னையை நாமெல்லோரும் கூட்டாகச் சேர்ந்து காக்கவேண்டும்.

          ஒரு இலை பறிக்க மனசு அஞ்ச வேண்டும். ஒரு பூ பறிக்கக்கூட உயிர் வலிக்க வேண்டும். உயிர்கள் எனில் வெட்டுவாயா? பெண்கள் எனில் கழுத்தை அறுப்பாயா? எண்ணவே நமது மனம் பதைபதைக்க வேண்டும். பதைக்கும் உயிர்களின் வலியது புரிந்தால் யாரை அடித்தாலும் நமக்கும் வலிக்கும். யாரை நொந்தாலும் நமக்கும் நோகும்.

          நோக வேண்டும். பிறருக்கு வலித்தால் நமக்கும் வலிக்குமே எனும் போலெண்ணி நாம் வாழவேண்டும். நாமும் மிருகம் தானே? ஆனால் அனைத்தையும் பகுத்தாராயக் கூடிய உயிரின் பச்சை வாசம் என்னவென்று புரிந்த மிருகமில்லையா? அது ஒவ்வொரு மனிதர்க்கும் பொருந்தவேண்டும். 

          பசித்தால் வேறென்ன செய்ய? காய் காய்த்தால் பறிப்போம், கனி கனிந்தால் பறிப்போம், வேர் இலை விதை உயிர் கிளை மரம் குருவி பறவை உயிர்கள் அனைத்தையும் பசித்தால் பறிப்போம், பறிப்போம், தின்போம். பசி யாரை விட்டது? பசித்தால் புசிப்போம் தான்; ஆனால் கூடவே அவைகளைக் காப்போம் என்பதே கவனத்தில் வலுக்கவேண்டும்.

          மரம் வளர்த்து உயிர் பெருக்கி காற்று மணக்க மணக்க இந்த மண்ணை பெரு வாஞ்சையோடு காப்போம். எல்லோரையும் எப்போதும் நாம் வாழ்விப்பவர்களாகவே பிறக்கிறோம். அதற்கே போராடிக் கொள்ளும் மகோன்னத தருணமிது.

          எனவே, போராட்டத்தை ஆயுதங்களால் அல்ல மனதால் கைக்கொண்டு எண்ணங்களால் வலிமைப் பூண்டு அன்பினால் ஒன்றிணைந்து உடலாகத் தனித்தும் உயிராகச் சேர்ந்தும் இப்பிரபஞ்சமென அறிவால் கனத்திருப்போம் உலகத்தீரே.

          நம்பிக்கையொன்றே வாழ்க்கை. நம்பிக்கை கொண்டே உயிர்ப்பு. நம்பிக்கையொன்றே நம்மிடம் முழுதாய் இருக்கும் எல்லாம். அத்தகைய ஆழமான நம்பிக்கை நிச்சயமாக நமைக் காக்கும். நாமிந்த பிரபஞ்சத்தைக் காக்க மட்டும் மனதளவில் தயாராவோம். 

          ஆயிரம் கரோனாவின் பிரச்சனை என்றாலும் பயமென்றாலும், அதற்கெல்லாம் அப்பாலோர் இயற்கையின் பெருஞ்சிரிப்பை நாம் இரு கண்கொண்டு காணாமல் இல்லை. இன்று இயற்கை நம் கண்ணிற்குக் காட்டும் பேரெழில் பல மனித இறப்புகளுக்கு நடுவேயும் தனித்து நின்றுகொண்டு தனக்கானதொரு நியாயத்தைப் பேசி பேசி கத்தி கதறி வெளிறிய முகத்தோடு தான் அப்பாவி மனிதர்களையும் சேர்த்தே கொன்றுகொண்டுள்ளது.

          அதன் வலியைப் புரிவோம். இயற்கை நம்மை எக்கணத்திலும் முழுதாய் கொல்லாது. புரிய வாய்ப்பு தந்து தந்தே தன்னை கோடான கோடி வருடங்களுக்கும் மேலாக நம்மோடு உயிராகவும் உடலாகவும் மரமாகவும் செடியாகவும் பூவாகவும் பறவையாகவும் கடலாகவும் மலையாகவும் வியாபித்து வைத்து நதியின் எழிலென எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

          அதன் நியாயத்தை, இயற்கையைக் காக்க வேண்டிய அவசரத்தை, அதற்கான அக்கறையை, மிகப் பெரியதாகப் புரிந்து நம் அறிவிற்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும். என்னைக் கேட்டால் இது ஒரு சபதத்திற்கான தருணம் என்றெண்ணுகிறேன். காரணம், உடல்நலமின்றி நான் மருத்துவரிடம் செல்லும் காலத்தில் 'எனக்கு ஓய்வில்லை, அதனால் உடலில் கவனம் செலுத்தவில்லை, பல வேலைகளில் இருக்கிறேன்' என்பேன், அதற்கு, மருத்துவர் கேட்பார்; உங்களைத் தூக்கி நாளை ஐ.சி.யூ.வில் வைத்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்பார். 

          அப்படித்தான் இந்த இயற்கை நமைத் தூக்கி இன்று ஐ.சி.யூ.வில் வைத்துவிட்டு இன்னபிற அனைத்தையும் உடனே மற, உன்னை நினை, உனது மண்ணை நினை, உனைச் சூழ்ந்த இந்த உலகை உனதென நினை, உனக்காக மட்டும் இந்த நானிலத்தை மாசுபடுத்தி ஒழித்து வெப்பத்தால் அலைக் கற்றைகளால் மின்னெந்திரங்களைக் கொண்டு எமை மாய்ப்பதை நிறுத்து என்று உயிர்க்கொன்று உயிர்க்கொன்று கத்தி கத்தி சொல்கிறது. இனியும் நாம் மாறாது போனால் இன்னும் எத்தனை கரோனா வருமோ என்று தெரியாதெனக் கொஞ்சம் மிரட்ட மட்டுமே செய்கிறது, அந்த நம் மருத்துவரைப் போல.

          அல்லாது இயற்கை நமை என்றும் காக்குமேயொழிய கொல்வதில்லை. எனவே அது புரிந்து ஒரு நல்ல சபதமெடுப்போம் "எப்போதுமே இனி மாறமாட்டேன் இயற்கையே, உனை நெஞ்சாரக் காப்பேன், எதன் பொருட்டும் உன்னை விட்டுத் தருகிலேனென" நாம் தனித்தனியே ஒவ்வொருவராய் சத்தியம் செய்து, நம் எதிர்கால பயணத்திற்காக உயர் பக்குவமடைய வேண்டிய வேளை இதுவென்று எண்ணியொரு இயற்கைக்கான தாய்மைப்பூண்ட சாத்தியத்தை ஒன்றாய் கூடி எடுப்போம்.

          இந்த உயிர்களின் மகிழ்ச்சி, பச்சை மரங்களின் ஆடல் பாடல், குருவி காக்கைகளின் கும்மாளம், வானத்தில் மிக ஒய்யாரமாகக் கேட்கும் காற்றின் ஒலி, கடலின் இசை, மழையின் ஆட்டமென இவை அனைத்தையும் நாம் மீண்டும் மீண்டுமாய் இனி நமது தேவைக்காகவேனும் பாதுகாக்கத் துவங்குவோம். நல்லதே எண்ணுவோம். எல்லாம் மாறும். எல்லாம் நன்றே மாறுமென்று நம்புவோம். நம்பிக்கையொன்றே வாழ்க்கை. நம்பிக்கையொன்றே எல்லாம்.

          வாழ்க மக்கள். வாழ்க உயிர்கள். ஓங்கியெழுக எனது இயற்கையின் நேசம். உள்ளார்ந்து அமர்க எம் பிற உயிர்களின் பற்று. உலகெங்கும் அமைக அமைதி நன்றே. நலமே எங்கும் விழைக நன்றே.




தொடர்பு: வித்யாசாகர்  (vidhyasagar1976@gmail.com)





பயத்துடன் வாழப் பணித்தாயோ

பயத்துடன் வாழப் பணித்தாயோ

 ——    கவியாழி. கண்ணதாசன்


மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே
மறந்ததை இழந்ததை அறிவாயோ
புகழ்ச்சியின்  உச்சத்தில் உன்னை-இன்றும்
பூமியில் தினமும் வணங்குகிறோம்

இயற்கையை மனிதன் அழித்ததனால்
இளமையில் உழைக்கத் தவறியதால்
உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின்
உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ

மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு
மானிடம் மறந்ததை அறிந்தாயோ
மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை
மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ

பிழைக்கவும் வழியே தெரியாமல்
பிணமாய் மக்கள் உயிர்வாழும்
பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே
பயத்துடன் வாழப் பணித்தாயோ

தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி
தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம்
நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று
நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ

தினம் பலபேர் மடிவதால்
தீங்கு செய்யும் மக்களுக்குப்
பணமும் பொருளும் பயனின்றி-மக்களின்
பாசம் நேசம்  பகிர்ந்தாயோ

அழிவுப் பாதையை அறிந்தாயோ
அழிக்கும் வேலையும் இதுவன்றோ
இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும்
இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே

பூமியின் சுழற்சியைப் புரிய வைக்கப்
புத்துயிர் மக்களைத்  தெளிய வைக்க
நித்தமும்  நிம்மதி இழக்கச் செய்து-மனிதன்
சித்தமும் கலங்கிடச் செய்தாயோ



தொடர்பு: கவியாழி. கண்ணதாசன் (https://www.facebook.com/kannadasanr)




தேவை அன்பெனும் மருந்து


 ——    கவிஞர் அமீர்


மனிதா
உனை ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்

"ஒரு துணையில்லா தூண் இங்கு
அளவில்லா சோகத்தில்
கருணையில்லா மனிதர்களால்
வறுமை எனும் ரோகத்தில்..."

ஏன் என்று சொல்?

"கொண்டு வந்ததென்ன
கொண்டு செல்வதென்ன
ஒன்றுமில்லை என்றானபின்
இன்னுமெதற்கு கொள்கைகள்"

என்றைக்கு இதற்கு
கொள்ளி வைப்பாய்?

"வற்றிப்போய் கிடக்கும் இந்த
முற்றிய மூதாதை
இந்த தொற்று நோய்க்கு மட்டுமிங்கு
வறுமை வந்ததில்லை"

ஏன் இதனை மட்டும் வளர்க்கிறாய்?

"ஈரமும் இறக்கமும்
கழன்று எங்கு போனது?
இந்த கொடூரம்
கொரோனாவைக்காட்டிலும் கொடியது"

இன்னும்  இதனை
நான் எப்படிச் சொல்ல?

"பசி
பட்டினி போக்க
உன்னிடம் இருந்தால்தானே
 நீ கொடுப்பாய்
பரவாயில்லை விடு"

நலமா சுகமா எனும்
வார்த்தை உனக்கு உச்சரிக்கத்  தெரியவில்லையா?

அன்பும்
அணைப்பும் மட்டுமே தேடுகிறது
இது போன்ற ஜனம்...
கிடைப்பதென்னவோ
உதாசீனம்!

தனித்தோர்க்குத் தேவையானது
அன்பெனும் மருந்து...
அதனை கிள்ளிக்கொடுத்தாவது
திருந்து!




தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)




Saturday, April 11, 2020

குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம்



—   முனைவர் தேமொழி 


          அறிவுடைமை (அதிகாரம் 43) என்றே 10  குறள்கள்  கொண்ட ஒரு அதிகாரத்தை அறிவுக்காக ஒதுக்கியுள்ளார் வள்ளுவர்.  மேலும் அறி, அறிய, அறிவு, அறிக, அறியும், அறிந்து, அறிந்த, அறிவது, அறியா, அறியாமை, அறியார், அறிந்தார், அறிவார், அறிவான், அறியான், அறியேன், அறிவுடையார், அறிவிலார், அறிவிலான், அறிவினவர் போன்ற அறிவு குறித்த 50க்கும்  மேற்பட்ட  சொற்களை (54 சொற்கள்),  100க்கும் மேற்பட்ட முறை (163 முறை) அறிவின் இன்றியமையாமை, அது இல்லாவிட்டால் ஏற்படும் துன்பம் ஆகியவற்றைக் குறித்து அறிவுறுத்தும் நோக்கில் வள்ளுவர் கையாண்டுள்ளார்.  இவற்றில் அறிந்து (39 முறை) மற்றும் அறிவு (22 முறை) ஆகிய இரு சொற்களும் அதிக முறை அதிக அளவில் குறள்களில் இடம்பெற்றுள்ளன. அறிவின் தேவை  குறித்து வள்ளுவர் அறிவுடைமை அதிகாரம் மட்டுமின்றி  மேலும் பல அதிகாரங்களிலும் தேவைக்கேற்ப குறிப்பிடுகிறார். 

அறிவுடைமை என்பதன் விளக்கம்: 
அறிவுடைமை அதிகாரம் அறிவு என்பதைக் கீழ் வருமாறு விளக்குகிறது; 
பகைவரிடம் இருந்து நம்மைக் காக்கும் அரண் அறிவு (421), 
மனதை அலையவிடாமல் தீமையை விலக்கி நன்மையைத் தெரிந்தெடுக்க உதவுவது அறிவு (422), 
சான்றோர் அறிவுரைப்படி இன்பம் துன்பம் ஆகியவற்றை ஒரே போன்று கருதும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது அறிவு (425), 
அவர்கள் வழிகாட்டியபடி உலகவழக்கை ஒட்டி நடக்கச் செய்வது அறிவு  (426), 
தனது செயலினால் விளையக் கூடியவற்றை அறிந்திருக்க உதவுவது அறிவு  (427), 
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சி நடக்கச் செய்வது அறிவு (428), 
எதிர்கொள்ளக்கூடிய  துன்பத்திலிருந்து தடுத்துக் கொள்ளும் வகையை அறியச்  செய்வது அறிவு (429), 
இவ்வாறாக அறியும் திறன் பெற்றவருக்கு அறிவே  எல்லா செல்வத்துக்கும் இணையாக அமையும் (430) என்று அறிவின் சிறப்பை குறள்கள் வழியே கோடிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர். 

          மேலும், அந்த அறிவை எவ்வாறு அடைவது   என்பதையும்  அறிவுடைமை அதிகாரத்தின்  இரு குறள்கள் மூலமும், மெய்யுணர்தல் அதிகாரத்தின் குறள் ஒன்றின் மூலமும்  விளக்குகிறார்.  வள்ளுவர் தரும் இந்த விளக்கங்கள் பகுத்தறிவு பாசறை கூறி வந்துள்ள  கருத்துகளாக அமைந்துள்ளன. 

குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம் : 
          எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை: 423)
எந்தவொரு பொருள் குறித்து யார் என்னதான் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்  கொண்டு விடாமல்  அது உண்மைதானா என ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின்  பொருள். 

          தான் சொல்வதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை  கூறிய  சிறந்த வழிகாட்டி புத்தர். தங்கத்தின் மாற்றை உரசிப் பார்த்து ஆராய்ந்து அறிவது போல அவர் அறிவுரைகளையும் மதிப்பிட்டு,  தக்க அறிவுரையாக இருந்தால்  மட்டுமே ஏற்கச் சொன்னார்.  மற்றவர் அவர் மேல் கொண்ட அன்பினாலோ அல்லது மதிப்பினாலோ அவர் கூறியவற்றை எல்லாம் பின்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை.  அவரது இந்தக் கருத்தினால் கவரப்பட்ட இக்கால மனிதர்களுள் ஒருவர்,  சமூக சீர்திருத்தவாதி ஈ. வெ. ரா. பெரியார்.  அவரும் தனது சொற்களைப் பகுத்தறிந்து ஏற்றுக்  கொள்ள வேண்டும் என்றுதான்  வலியுறுத்தினார்.  'பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்று அறிவுரை கூறிய மற்றொருவர் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்.  'ஏன்' என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறி எதையும் கேள்வி கேட்காமல் ஏற்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.  மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு எனப் பகுத்தறிவு வழிகாட்டிய இக்குறள் சென்ற 19ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மேலை நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் இங்கர்சால் அவர்களையும்  கவர்ந்த குறளும் ஆகும். 

          உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவுடைமை என வள்ளுவர் அறிவுறுத்துவதால், வள்ளுவரின் கூற்றையும் மதிப்பிட்டே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும்  இதனால் அறிகிறோம். பகுத்தறிவு கருத்து கூறும் அறிவுடைமை அதிகாரத்தின் மற்றொரு குறள்;          
          எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
          நுண்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை: 424)
நாம் சொல்ல விரும்புவதைக் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகச் சொல்லி, பிறர் சொல்லிய கருத்தில்  அவர் நேரடியாகச் சொல்லாதவற்றின் உட்பொருளையும் (சொன்னதும் சொல்லாமல் விட்டதுமான)  நுட்பமான கருத்துகளையும் ஆராய்ந்து உணர்வது அறிவுடைமையாகும் என்று கூறுகிறது இக்குறள்.  ஆகவே,  ஒன்றைக் கூறியவரின் நோக்கத்தையும்  அவரது சொற்களின் வழியாக எடை போடுவதும்  தேவை. 

          இவ்வாறான ஒரு கருத்தை  ஒருவர் ஏன்  நம்மிடம் சொல்கிறார், அவ்வாறு அவர் சொல்ல வேண்டிய தேவை என்ன? இதனால் என்ன பயன்? யாருக்குப் பயன்? என்பது போன்ற கேள்விகள்  எல்லாம் எழுப்பி நுட்பமாக ஆராயத் தொடங்கினால் பல மூடநம்பிக்கைகளையும், அவற்றைக்  கூறுபவர்களையும் காணாமல் போக்கிவிடலாம்.  எடுத்துக் காட்டாக; இக்காலத்தில் கேட்க வேண்டிய கேள்வி, யாரோ சொன்னார்கள் என்று விளக்கேற்றி பட்டாசு வெடித்து  "கோ கொரோனா, கோ கொரோனா  கோ" என்று கைதட்டிக் கூவிக் கொண்டிருந்தால்  கொரோனா வைரஸ் மறைந்துவிடுமா? என்பதாக இருக்க வேண்டும்.  குளத்தில் போட்ட ஒரு உடைந்த சிலையை வெளியில் எடுத்துக்கொண்டு வந்து அலங்காரம் செய்து காட்சிப் படுத்தினால், நாம் அங்குப் போய் உண்டியலில் பணம் போட்டுவிட்டு வந்தோமே, அது இப்பொழுது போர்க்கால நடவடிக்கையில் கொரோனா பாதிப்பிற்கு நிதி திரட்டப்படுகையில் எந்த வகையிலாவது பரிதவிக்கும்  மக்களுக்குப் பயன்படுகிறதா?  அதனால் பயன் பெற்றவர் யார் யார்? என்று கேள்வி கேட்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதுதான் எந்த ஒரு நிகழ்வின் பின்னணியிலும்  மறைந்துள்ள நோக்கத்தை நுட்பமாகப் புரிந்து கொண்டு அறிவுடையவராக ஒருவரை மாற்றும்.  இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தர முனைந்த  மணக்குடவர்;  பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது என்று விளக்கமளிக்கிறார். 

பகுத்தறிவு கருத்து கூறும் மேலும் ஒரு குறள் மெய்யுணர்தல் அதிகாரத்தில் இடம் பெறுகிறது; 
          எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்பது அறிவு (மெய்யுணர்தல்: 355)
காட்சிப்படுத்தப்படும் ஒரு தோற்றம் கண்டு மயங்காமல், ஒரு பொருளின் உண்மையான இயல்பை அறிவதே அறிவுடைமையாகும். மாயையில் விழாமல் இருப்பது என இதற்குப் பொருள் கொள்ளலாம். இங்கு அறிவியல் நோக்கில் ஆராய்வதே உண்மையை வெளிப்படுத்தும்.  பிள்ளையார் சிலை பால் குடிப்பது, இரத்தக் கண்ணீர் விடும் மேரி மாதாவின் சிலை, வெறும் கையில் விபூதி  வரவழைப்பது என ஆன்மீகத்தின் பெயரில் மக்களை அடிமுட்டாளாக்கும் நோக்கில் செப்பிடுவித்தை மற்றும் கண்கட்டு வித்தைகள் நிகழ்த்தி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றும் உலகம் இது. இக்காலத்தில் நாசா விண்கோள் வெளிப்படுத்திய அதிசயம் என்று சமூக வலைத்தள உதவியுடன்  அறிவியல் துணை கொண்டே ஏமாற்றும் செய்திகளுக்கும் குறைவில்லை.  எப்பொருள் எத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே மெய்யுணர்தல் என்று கூறும் குறள் கருத்தே  எதிலும் உண்மைத்தன்மையை  அறிய விரும்புவோருக்கு நினைவில் நிற்க வேண்டும். 

          அறிவுடைமை அதிகாரத்தில் மட்டுமின்றி மெய்யுணர்தல் (குறள் 355, 356), அருளுடைமை (குறள் 249), இகல் (குறள் 857) ஆகிய குறட்பாக்களிலும் வள்ளுவர் "மெய்ப்பொருள் அறிவது"  குறித்துக் குறிப்பிடுகிறார்.  மேன்மை தரும் உண்மைப் பொருளை அறிய இயலாதவர்கள் அறிவு மங்கியவர்கள் என வள்ளுவர் உண்மை என்னவென்று அறிய இயலாதவரை விவரிக்கிறார் (857).   வாழ்வு குறித்த மெய்யியல் ஞானம் பெறுவதையும்  மெய்ப்பொருள் என்றுதான் குறிப்பிடுகிறார் வள்ளுவர் (குறள்கள் 249 மற்றும் 356), இதே கருத்தை 'செம்பொருள்' அறிவது என்று மற்றொரு குறளிலும் குறிப்பிடுகிறார் (358). 

          அறிவைப் பெறுவதற்குக் கல்வி தேவை, தோண்டத் தோண்ட மணற்கேணியில் நீர் ஊருவது போல, கற்கக் கற்க  அறியவேண்டியவற்றை அறிந்து கொள்ளும் அறிவும் பெருகும் (396) என்று கூறும் வள்ளுவர்,  அறிவுடையார் செயல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறத் தவறவில்லை.  அறியவேண்டியவற்றை அறிந்து,  விலக்க வேண்டியவற்றை விலக்குவது அறிவார்ந்த செயல், இவ்வாறு செய்யாவிடில் அந்த அறிவால்  பயனில்லை (175).  அற்ப எண்ணம் கொண்ட மக்களுடன் உறவு கொள்ளாமல் (சிற்றினம்  சேராமை) அவர்களின் கெடுமதியைத் தானும் தனது இயல்பாக்கிக் கொள்ளாமல் இருப்பதும் அறிவுடைமைதான். பழகும் கூட்டத்தின் அறிவே ஒருவரிடம் தாக்கம் செலுத்தும் என்பதால் குணமற்றவர் தொடர்பை விட்டொழிப்பது  இன்றியமையாதது (சிற்றினம் சேராமை குறள்கள்:452, 454) என அறிவுடையோராக இருப்பதற்கு வள்ளுவர் அறிவுரைகள்  பல  கூறியுள்ளார்.   



உதவிய தளங்கள்: 
[1] தமிழ் இலக்கியத் தொடரடைவு,  திருக்குறள் - தொடரடைவு,  முனைவர்.ப.பாண்டியராஜா.
http://tamilconcordance.in/TABLE-kuraL.html
 
[2] திருக்குறள் கலைஞர் உரை, கலைஞர் மு. கருணாநிதி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0612.html

[3] குறள் திறன் 
http://kuralthiran.com/Home.aspx



நன்றி - சிறகு. 


தொடர்பு: முனைவர் தேமொழி (jsthemozhi@gmail.com)




Saturday, April 4, 2020

மாயக்கைகள் யாதடா ?


 ——    தமிழ்மைந்தன் சரவணன்


ஒடி ஒடி உழைச்ச ஜனம்
ஓஞ்சுபோயி கெடக்குதையா!
அந்த உழைப்பின் உன்னதங்களின்
வயிறு இப்ப காஞ்சு கெடக்குதையா

உல்லாசமாய் சுத்தி வந்த
செல்வ சீமான்களின் மனம்
ஓரிடத்தில் அடங்க மறுத்து
புழுங்கி தவிக்குதய்யா !

மதம் பார்த்து ஜாதி பார்த்து
வருவதில்லை வியாதிகள்
தீர்ந்திடுமா ஒரு சிலரின்
மனவியாதிகள்?

ஊர் அடங்கு சட்டம் என்று அறிவிக்கின்றார்
ஒட்டுமொத்த உலகடங்கி போனதடா!

கலகங்கள் இல்லாத உலகம் கேட்டோம்
அமைதியான பூமியைக் கேட்டோம்
ஏகன் இறைவனிடம் கேட்டது ஏகாந்த அமைதி
மயான அமைதியல்லவா எங்கும் மண்டிக்கிடக்கிறது ?

ஓயாமல் சுழல்கின்ற பூமியின் இயக்கத்தை
நிறுத்த துடிக்கும் மாயக்கைகள் யாதடா ?
எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளே
நேரில் தோன்றி
பதிலை நீயும் எமக்கு கூறடா !



தொடர்பு:
தமிழ்மைந்தன் சரவணன் (saravananmetha@gmail.com)



சென்னையில் ஒரு நாள் – திருவொற்றியூர்




——    துரை.சுந்தரம்


          அண்மையில், மார்ச்சு, 2020 இரண்டாவது வாரத்தில் சென்னையில் இருக்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதுபோழ்து, மார்ச்சு பதினான்காம் நாள் திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலுக்குச் செல்லும் ஒரு நிகழ்வை வலிய உண்டாக்கிக் கொண்டேன். காரணம்,  திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலில் பதிவான சில கல்வெட்டுகளைப் பற்றி ஒரு சில நாள்கள் முன்பு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதிகள் மூன்று, ஐந்து, பன்னிரண்டு ஆகியவற்றில் பார்த்திருந்தேன். நேரில் காண மேற்படி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். திருவொற்றியூர் ஆதிபுரிசுவரர் கோயில் கல்வெட்டுகளைக் கண்டும், சிலவற்றைப் படித்தும் பெற்ற உவப்பைப் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.



திருவொற்றியூர்:
          வடசென்னைப் பகுதியில், கடலை ஒட்டி அமைந்த ஊர் திருவொற்றியூர்.  இங்குள்ளது சிவன் கோயில் எனினும், கோயிலில் எழுந்தருளியிருக்கும் வடிவுடை அம்மன் பேராலேயே இவ்வூர் அடையாளப்படுத்தப்படுகிறது. நான் திருவொற்றியூரைப் பேருந்து மூலம் சென்றடையும்போது, கோயிலைக் கடந்து ஒரு நிறுத்தத்தில் இறங்கி விட நேர்ந்தது. எனவே, ஒரு ‘ஆட்டோ’வில் அமர்ந்து சிவன் கோயிலுக்கருகில் என்னைக்கொண்டுவிடச் சொன்னபோது ஓட்டுநருக்குச் சிவன் கோயில் தெரியவில்லை. ’வடிவுடை அம்மனின் கோயிலுக்கருகில் கொண்டு சேர்க்கிறேன்; அங்கு கேட்டறிந்து கொள்ளுங்கள்’ என அவர் கூறியதிலிருந்து, சிவன் கோயில் என்னும் அடையாளம் வடிவுடை அம்மனின் ஆற்றலில் கரைந்து போனது புலப்பட்டது.

தியாகேசர் கோயில்:
          கோயில் கோபுரத்தின் நுழைவு வாயிலில் “அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்” என்னும் பெயரே காணப்பட்டது. இணையப்பக்கம் ஒன்றில், இறைவன் பல பெயர்களில் குறிக்கப்படுவதைக் கண்ணுற்றேன். படம்பக்க நாதர், ஒற்றீசுவரர், ஆதிபுரீசுவரர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர் எனப் பல்வேறு பெயர்கள். இவற்றில், தியாகேசர் திருமுன் (சன்னதி), ஆதிபுரீசுவரர் திருமுன், ஒற்றீசுவரர் திருமுன் ஆகிய மூன்று திருமுன்கள் கோயில் வளாகத்தில் இருந்தமை உள்ளே சென்றபின்னர் தெரியவந்தது. கூடுதலாக, மீனாட்சி சுந்தரேசுவரர் திருமுன்னும் இருந்தது. ஒரே கோயில் வளாகத்தில் பல திருமுன்கள். வளாகமும் பெரிதாகவே இருந்தது. இக்கோயில், சைவக் குரவர் மூவர் பாடிய பெருமை பெற்றது குறிப்பிடத்தக்கது. வள்ளல் பெருமானும், தமிழறிஞர் மறைமலை அடிகளும் இங்குள்ள இறைவன் மேல் பாடல் இயற்றியுள்ளனர் என்பது கூடுதல் செய்தி. சென்னையில் வள்ளல் பெருமானார் வாழ்ந்த சில ஆண்டுகளில் அவர் இக்கோயிலின் தாய்த்தெய்வமான வடிவுடையம்மனை ஏறத்தாழ நாளும் கண்டு வழிபட்டுள்ளார் எனக் கூறலாம்.

நுழைவாயில் கோபுரம்:
          இக்கோயிலுக்கு வரும் எண்ணம் நன்கு திட்டமிடப்படாமல் தோன்றி, நிகழ்வாக மாற்றமுற்றது என்னும் காரணத்தால் தகுந்த போர்க்கருவிகளின்றிக் களத்தில் நிற்கும் கையறு நிலையில் இருந்தேன். நுண்ணறிவு ஆற்றலைப்பெற்ற ஒரு கைப்பேசி கையில் இருந்தும் பயனற்ற சூழ்நிலை. பழுது காரணமாகக் கைப்பேசியின் நினைவுப்பண்டாரத்தில் இடமில்லை. தொலைவிலிருந்து கோயிலின் கோபுரத்தையும், கோபுர நுழைவுப்பகுதியில் அதிட்டானத்து ’உபபீடத்தில்’  (கோயிலின் அடித்தளம், கோயில் கட்டிடக்கலையில் ’அதிட்டானம்’ என்றும், கோபுரத்தின் உயரத்தைக் கூட்டவேண்டிக் கூடுதலாகக் கட்டப்பெறும் பகுதி ‘உபபீடம்’ என்றும் அழைக்கப்பெறும்) ஓர் அடிக்குள் அமையுமாறு  வடிக்கப்பட்ட குறுஞ்சிற்பம் ஒன்றையும் ஒளிப்படம் எடுத்தவுடன்,  கைப்பேசியின் ஆற்றல் மறைந்து ஒளிப்படம் எடுக்க இயலாது போயிற்று.

ஆதிபுரீசுவரர் கருவறை விமானம்
          மேற்கொண்டு கோயிலுக்குள் சென்று ஆதிபுரீசுவரர் கருவறை விமானத்தைச் சுற்றிலும் கொட்டிக்கிடந்த கல்வெட்டுப் புதையலைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவ்வளவு கல்வெட்டுகள்.  சிலரின் கையெழுத்து பொடி எழுத்துகளாக இருக்கும்.  நுணுக்கி நுணுக்கி எழுதுவது என்று இதைக் குறிப்பிடுவார்கள். அதுபோன்றே இங்கிருக்கும் கல்வெட்டு எழுத்துகளும் நுணுக்கி எழுதப்பட்டிருந்தன; ஆனால் அழகுற எழுதப்பட்டிருந்தமைதான் சிறப்பு. சோழர் காலத் தமிழ் எழுத்து. கருவறை ‘கஜ பிருஷ்டம்’ என்னும் வகையைச் சேர்ந்தது. ‘கஜ பிருஷ்டம்’ என்பது எளிதில் பொருள் விளங்கா வட சொல். ‘தூங்கானை மாடம்’ என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பிட்டால் சற்றுப் புரிந்துகொள்ளலாம். ஆனாலும், இச்சொல்லும் கோயிற்கட்டிடக்கலை அருஞ்சொற்களுள் ஒன்று என்னும் காரணத்தால் எல்லாருக்கும் பொருள் விளங்கும் எனக் கூறவியலாது. ஆனையின் (யானையின்) பின்புறத்தைப் போன்று அரைவட்ட வடிவில் கருவறையும் அதைத் தொடர்ந்து ஒரு நீள் சதுர வடிவில் அர்த்த மண்டபமும் அமைந்த அமைப்பு ‘தூங்கானை மாடம்’ எனப்படும். (நினைவில் வந்தது: கருவறையின் வட்டப்பகுதி, கேரளக் கோயில்களில் முக்கால் வட்டமாக இருப்பதால் கேரளக்கோயிலை ‘முக்கால் வட்டம்’ என்றே கேரளக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.)  இந்தத் தூங்கானை மாடம் முழுதும் கல்வெட்டுகள். தூங்கானை மாடமும், அதைச் சுற்றிலும் உள்ள சிறிய சுற்றுப்பாதையும் நாம் வெளியில் சுற்றிவருகின்ற சுற்றாலைப் பகுதியிலிருந்து (பிராகாரம்) சற்றே கீழிறங்கிய பள்ளத்தில் அமைந்துள்ளன. சுற்றாலை முழுதும் உருண்டை வடிவிலான தூண்கள்.  ஏறத்தாழ ஐம்பது அறுபது தூண்கள் இருக்கலாம். அவற்றுள், சுற்றாலையின் தென்சிறகில் இருக்கும் தூண்களில், உருண்டைப்பகுதியில் உருளும் வட்டப்பரப்பு முழுதும் எழுத்துப் பொறிப்புகள் உருள்வது அழகோ அழகு. எழுத்துகளைப் படிக்க நாமும் தூணைச் சுற்றி வட்டமிடவேண்டும்.

மீண்டும் கோபுர நுழைவாயில்:
          கல்வெட்டுகளின் அழகை எடுத்துச் சொல்லும் ஆர்வத்தால் கோபுர வாயிலில் இருந்து நேரே ஆதிபுரீசுவரர் கருவறைக்குச் சென்றுவிட்டதில் கோயிலின் தொடக்கப் பகுதி விளக்கப்படாமல் நின்று போனது. எனவே, மீண்டும் கோபுர நுழைவாயில். கோபுரத்தின் வலப்பக்க உபபீடத்தில் (நம் பார்வையில் நம் இடப்பக்கம்) இருக்கும் குறுஞ்சிற்பம் கொற்றவையின் சிற்பம். எட்டுக்கைகளுடன், அசுரன் ஒருவனைக் கொன்றழிக்கும் கொற்றவை. வாள் கொண்டு அசுரனை முன்புற வலது கையால் குத்திய நிலை. கொற்றவையின் வலது கால் மடித்தும், இடதுகால் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில், அன்னை தன் அனைத்துக் கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியவாறு வடிக்கப்பெற்றிருக்கிறாள் எனலாம். நாள் பட்ட தூசும், எண்ணெய்ப்பற்றும் சிற்பத்தின் நுண்ணிய வடிவக்கூறுகளை மழுங்கச் செய்துவிட்டன. நின்ற நிலையில் இச்சிற்பத்தைக் காண இயலாது. கீழே குனிந்து பார்க்கவேண்டும்.

கொற்றவை-குறுஞ்சிற்பம்

கோபுரத்தின் அதிட்டானம் – அமைப்பு:
          கோபுரத்தின் அதிட்டானம் முன்னர்க் குறித்தவாறு, உயரம் கூட்டிய நிலையில் உபபீடத்தில் தொடங்குகிறது. அதன் அடுத்த நிலையில் கர்ணகூடுகள் என்னும் அமைப்பு. கூடுகளின் நடுவில் மனித முகங்கள், அநுமன், மகிஷாசுர மர்த்தனி ஆகிய சிற்றுருவங்களைச் செதுக்கியிருகிறார்கள் சிற்பிகள். அதற்கு அடுத்த நிலையில் தாமரை இதழ்கள் மடிந்திருப்பது போல் சிற்பச் செதுக்கல்கள். இவற்றைக் கோயில் கட்டிடக்கலை பத்மம் எனக் குறிப்பிடும். அதனை அடுத்து நீள் சதுரத்தில் ஒரு சம தளப்பரப்பு -  கல்வெட்டுகளைப் பொறிப்பதற்கென்றே அமைந்தவாறு, பள்ளிச் சிறுவனின் ‘சிலேட்டுப் பலகை’  நீண்டு கொண்டு போவதைப்போல -  நீள்கின்றது. இது ‘ஜகதி’  என்று குறிப்பிடப்பெறும். ஓரிடத்தில், பலகை வடிவில் அல்லாது பெரிய தாமரை இதழாக விரிந்திருந்தது. இந்த வடிவம் ‘பத்ம ஜகதி’ எனப்படும். ஒரு கலவையான ஜகதி அமைப்பு. ஜகதிக்கு மேல்,  ‘குமுதம்’ என்னும் அமைப்பு உள்ளது. இந்தப் பகுதியையும் பலவாறு அமைப்பார்கள். முப்பட்டை வடிவம், எண்பட்டை வடிவம், உருண்டு திரண்ட உருள் குமுதம், சிலம்பு உருவமுடைய குமுதம் ஆகிய பல்வேறு வடிவங்கள். இங்கு, சிலம்பு, எண்பட்டை, உருள் குமுதம் ஆகிய மூன்று வடிவங்கள் கலந்த கலவை காணப்படுகிறது. குமுதத்துக்கு மேலே அகன்ற சுவர்ப் பரப்பு. அதில், ’கும்ப பஞ்சரம்’  என்னும் அமைப்பு. இரண்டு கும்ப பஞ்சரங்கள் இருந்தன. கும்ப பஞ்சரம் ஒரு பூச்சாடியை நினைவு படுத்தும். பூச்சாடியில் பூக்களை அடுக்கி வைத்தது போல, கும்ப பஞ்சரத்தின் மேல் பகுதியில் கொடி கொடியாய்த் தோரண வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

நுழை வாயில்:
          கோபுர நுழைவாயில், எல்லாக் கோயில்களிலும் உள்ளவாறு, உயர்ந்த வாயிலையும், நிலைக்கால்களில் கொடிகள் சுற்றிய இரு பெண்களின் சிற்பங்களையும் கொண்டுள்ளது. நுழைவாயிலைக் கடந்து கோயிலின் பெரிய வளாகத்தின் தொடக்கத்தில் நிற்கின்றோம். வழக்கமாக இந்த இடத்தில் நின்று பார்க்கையில் நம் பார்வைக்கு நேரே புலப்படுவன கோயிலின் கொடிக்கம்பமும், அடுத்துள்ள  பலிபீடமும், நந்தியுமாகவே அமையும். ஆனால், இங்கு ஒரு மாற்றம். நாம் நிற்குமிடத்துக்கு இடப்புறம் சற்றுத் தள்ளியே கொடிக் கம்பமும், பலி பீடமும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளன. கொடிக்கம்பம் பித்தளையால் வேயப்பட்டிருந்தது. நந்தி மண்டபத்தில் இருக்கும் நந்திச் சிற்பம், மற்ற கோயில்களிலிருந்து மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருந்தது. தரையில் அமர்ந்த தோற்றம் அல்ல. ஒரு தூணின் மீது அமர்ந்த தோற்றம். தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. சரியாகப் படிக்க இயலவில்லை. (இங்கு தொடங்கிக் கோயிலை விட்டு வெளிவரும் வரை, பார்க்கின்ற கல்வெட்டுகள் அனைத்தையும் படிக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கோயில் நிருவாகத்தாரிடம் முறையாக ஒப்புதல் பெற்றுக் கல்வெட்டுகளின் மீது வெண்ணீற்றையோ, வெள்ளை மாவையோ பூசியும், ஒளிப்படம் எடுத்தும் படிக்கவேண்டும் என்னும் அவா எழுந்தது. நிறைவேறுமா என்று தெரியாது. கல்வெட்டுகளைப் படிக்க ஒரு நாள் போதாது. ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போது வந்து படிக்கவேண்டும்.) 

கோயில் – உள் வளாகம்:
          நாம் நிற்குமிடத்தின் வலப்பக்கம் தெற்கு நோக்கி வடிவுடை அம்மன் திருமுன். நமக்கு எதிரே சிறியதொரு மண்டபத்தில் அம்மனை நோக்கிய நிலையில் சிம்மச் சிற்பம். அம்மனுக்குரியது. அம்மன் திருமுன்னிலிருந்து தொலைவில் சிம்ம ஊர்தியை அமைத்திருப்பது ஒரு மாறுதலாக உள்ளது. நம் இடப்பக்கம் கொடிக்கம்பத்தை அடுத்து, ஜெகதாம்பிகை உடனமர் ஜெகந்நாதர் திருமுன். கிழக்குப் பார்த்து. அதை அடுத்து இடப்பக்கம், அமிர்த கடேசுவரர் திருமுன். இதுவும் கிழக்குப் பார்த்து. அமிர்த கடேசுவரர் திருமுன்னுக்கு எதிர்ப்புறம் மேற்கு நோக்கிய நிலையில் சூரியன், தேவார முதலிகள் நால்வர், சகஸ்ரலிங்கம், இராமநாதர் ஆகியோரின் சிறு திருமுன்கள். இவற்றைக் கடந்து மேற்கு நோக்கிச் சென்றால், ஒரு நீண்ட கோயில் முகப்பு. தென்கோடியில் தியாகேசர் திருமுன். அடுத்து முருகன் திருமுன். அதை ஒட்டிக் குழந்தை ஈசுவரர் திருமுன். சூரியன் திருமுன்னைக் கடந்து தெற்கே, கோயிலின் திருச்சுற்று மதிலை ஒட்டியவாறு வடக்கு நோக்கி வரிசையாக எழுந்தருளப்பெற்ற இருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகள். இவை, பண்டு வெட்ட வெளியில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். தற்போது இவை அனைத்தையும் உள்ளடக்கியவாறு கூரையோடு கூடிய நீண்ட அறையாகக் கட்டியிருக்கிறார்கள். இருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகளுக்கு மேல், கூரையில் விமானக்கூடு அமைத்திருக்கிறார்கள். இவ்விருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகளும் இருபத்தேழு நாள்மீன்களுக்குரியவை. அதாவது இருபத்தேழு நட்சத்திரங்கள்.  அவரவர் அவரவர்க்குரிய (இ)லிங்கத்திருமேனியை வணங்கலாம்.

தியாகேசர் திருமுன்:
          தியாகேசர் திருமுன்னின் முக மண்டபத்திலேயே வடக்கே ஒரு நுழைவாயில். அதற்குள் சென்றதும் நேர் எதிரே ஆடவல்லான் (நடராசர்) மண்டபம். நாம் வாயிலின் இடப்பக்கம் நடந்து வடப்பக்கமாகத் திரும்பியவுடன் கிழக்கு நோக்கி ஒரு வாயிலும், வாயிலின் இருபுறமும் இரு வாயிற்காவலர் (துவார பாலகர்) சிற்பங்களும் காணப்படுகின்றன.  துவாரம் என்பது வாயிலைக் குறிக்கும் வட சொல். ’பாலக’  என்பது, பாலகர் எனத் தமிழில் நாம் கருதும் இளம் பருவத்தினர் பொருளைத் தராது. ‘PALAKA’  என்னும் ஆங்கில ஒலிப்புடைய சொல். ‘பால்’ என்பது காத்தல் என்னும் பொருளமைந்த வடசொல். இந்தி மொழி அறிந்தோர் ’பால் போஷக்’  என்னும் தொடரைத் தெரிந்திருப்பர். ‘பால்’ -  காத்தல்; ‘போஷ்’ -  வளர்த்தல். போஷ்->போஷாக்கு. மேற்படி வாயிலும், வாயிற்காவலர் சிற்பங்களும்  ஆதிபுரீசுவரர் திருமுன்னுக்குரியவை.

ஆதிபுரீசுவரர் திருமுன்:
          ஆதிபுரீசுவரரின் வாயிற்காவலர் சிற்பங்கள் காண மிகவும் அழகானவை. நல்ல உயரமும் பருத்த வடிவமும் கொண்ட இச்சிற்பங்கள் சோழர் காலக் கலைப்பாணிக்கு எடுத்துக்காட்டாய் நிற்பவை. இச்சிற்பங்களின் இருபுறமும்  சுவர்களில் கல்வெட்டுகள். படிக்க இயலாதவாறு நிழலும் இருளும் உள்ள சூழல். நம் வலப்பக்கக் காவலர் சிற்பத்தை அடுத்து, வெளியேறும் வாயில் ஒன்று. வாயிலுக்கு அருகில் வலக்கையில் மழு ஏந்திய சிவனின் சிற்பத் திருமேனி. மழுவாள் நெடியோன் என்னும் பெயர் நினைவுக்கு வந்தது. சிவனின் செவிகள் இரண்டிலும் ஒன்று போல் அணிகலன் இல்லை. வலது செவியில், மகர குண்டலமும், இடது செவியில் ஓலை அணியும் காணப்படுகின்றன. உடலில் வெள்ளை ஆடை அணிவிக்கப்பட்டிருந்ததால் இச்சிற்பம் சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் எது என்பதை அறியவில்லை. அறுபத்து நான்கு திருவடிவங்களையும் இனம் காணும் சிற்ப அறிவும் நமக்கில்லை. இந்த வாயிலைக் கடந்ததும் உள்ள சுவரின் மேல், வெயில் பட்ட பரப்பில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்தன. பல முறை முயன்று ஒரு முயற்சியில் ஒளிப்படம் எடுக்க இயன்றது.

தூங்கானை மாடம்:
          ஆதிபுரீசுவரர் கருவறையும், விமானமும்  தூங்கானை மாட வடிவிலானவை. அதிட்டானம், கோட்டச் சிற்பங்கள் அனைத்தும் அழகானவை. கோட்டச் சுவர்களில் கல்வெட்டுகள். சுற்றுப்பாதையில் உள்ள தூண்களிலும் கல்வெட்டுகள். இவை முன்னரே மேலே வண்ணிக்கப்பட்டுள்ளன. சுற்றுப்பாதையில், கற்கூரையில் சிறு சிறு திறப்புகளை அமைத்திருக்கிறார்கள். வெயிலின் ஒளி உள்ளே பாய்வதற்கான அமைப்பு. வெயிலின் ஒளி, மெல்லிய வெண்திரைச் சீலையை விரித்துத் தொங்கவிட்டதைப் போலச் சிறு திறப்புகளின் அருகில் குறுகிச் சிறுத்தும், தரையைத் தொடுகின்ற நிலையில் அகன்று விரிந்தும் பாய்ந்து இழிந்து பரவியது ஓர் அழகான காட்சி.  மேற்குச் சுவரில் மாலவனின் சிற்பம் அழகு. அடுத்துக், கருவறையின் வடக்குப் பகுதியில் நிலவறை போன்ற பகுதியில் கருவறை அமைப்போடு கொற்றவை எழுந்தருளியிருத்தல் இக்கோயிலின் ஒரு சிறப்புக்கூறு...

கோட்டச் சிற்பம் -  பிள்ளையார்

கோட்டச் சிற்பம் -  மாலவன்

வட்டப்பாறை அம்மன்:
          மேற்படி அம்மன் (கொற்றவை), வட்டப்பாறை அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். கருவறைக்கு முன்புறம் பாறைத்தரையில் வட்டவடிவச் சக்கரம் வடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தாந்திரிக வழிபாட்டு மரபு போலத் தெரிகின்றது. அசுரனைக் கொன்ற துர்க்கையின் சினம் குறையா உள்ளத்தைக் குளிர்வித்துத் தணிக்கும் வழியாய் தாந்திரிக எந்திரத்தை நிலை நிறுத்தம் (தாபனம்) செய்திருப்பதாகப் பூசையாளர் கூறினார். வட்டக்கல் இருக்கும் இடத்தில் கிணறு இருந்ததாகவும் எந்திரத் தாபனம் செய்த பின்னர் கிணற்றை மூடி வட்டக்கல்லை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். இக் கொற்றவைத் தாயைக் குலதெய்வமாக விசுவகர்ம மக்கள் வழிபடுகிறார்கள் என்பதும், ஒவ்வொரு மாதமும் முழுநிலாக் காலத்தே இம்மக்கள் இந்த வட்டப்பாறை அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்துகிறார்கள் என்பதும் கூடுதல் செய்தி.

வட்டப்பாறை அம்மன் அல்ல – இவள் வட்டப்பிறைப் பிடாரி:
          வட்டப்பாறை அம்மன் என்று இன்று மக்கள் வழிபடும் சக்தி அன்னை, கல்வெட்டில் வட்டப்பிறைப் பிடாரியார் என்று குறிக்கப்பெறுகிறாள். இடைக்காலத்திலும் அதற்குச் சற்று முன்னரும் கொற்றவைக் கடவுளைப் ’பிடாரியார்’   என்று பெயரிட்டு அழைக்கும் வழக்கு இருந்தது. சோழர் காலக் கல்வெட்டுகளில் ‘பிடாரியார் கோயில்’ என்று பல இடங்களில் வருவதைக் காணலாம். பிடாரி என்னும் இச்சொல், சமணம் வழங்கியது எனக் கருதலாம். ‘படாரர்’  (ஒலிப்பு : BHATARAR)  என்னும் சொல் சமணத்தில், துறவிகள், கல்வி கற்பிக்கும் ஆசான்கள், கடவுளர்  ஆகியோரைக் குறிக்கும். அதன் பெண்பாற்பெயர் ‘படாரி’  என்பதாம். இப்பெயர், கொற்றவைக் கடவுளுக்கு வழங்கியது. இப்பெயரே, ‘பிடாரி’  என மருவியது கண்கூடு. கொடியோரைக் கொல்லச் சினம் கொண்ட உருவுடன் திகழும் கொற்றவையை ஒத்த, சினம் காட்டும் பெண்களைப் ’அடங்காப் பிடாரி’  என்று மக்கள் வழங்கியது இக்காரணம் கொண்டே எனலாம். தமிழகத்தின் தென்கோடி மற்றும் கேரளக் கல்வெட்டுகள், அரசனையும், கடவுளையும் ‘படாரர்’ என்று குறிப்பதைக் காணலாம். (‘பழாரர்’ என்று திரிந்து வழங்குவதும் உண்டு)

          சைவ சமயப் பெரியார் சங்கரர் இக்கோயிலுக்கு நேரில் வருகை தந்ததாகவும் கொற்றவைக் கடவுளின் சினத்த ஆற்றலை எந்திரத் தாபனம் செய்து கட்டுப்படுத்திக் கிணற்றுள் ஒடுக்கியபின்னர் கிணற்றின் வாய்ப்புறத்தைக் கல் கொண்டு மூடியதாகவும், கடுஞ்சினம் மறைந்து அன்னை அமைதியான முகம் காட்டினாள் என்றும் ஒரு செய்தி கூறுகிறது. (SOUTH INDIAN SHRINES – by P.V. JAGADISA AYYAR)

கௌளீசுவரர் கோயில்:
          தியாகேசர் திருமுன்னுக்குப் பின்புறம் ஒரு சிறிய திருமுன். கௌளீசுவரர் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. முதலில், கௌளீசுவரர் என்பதன் பொருள் புலப்படவில்லை. பின்னர், தொல்லியல் நண்பர் கூறியபிறகே பொருள் விளங்கியது. கௌளீசுவரர் என்பது லகுளீசர் என்பதன் மருவிய வடிவம். கருவறைக்குள் இருப்பது சிவ உருவம் அன்று. லகுளீசர் சிற்பம் என்கிறார்கள். இருளில் இறையுருவத்தைப் பார்க்கவில்லை. இந்தத் திருமுன்னின் அதிட்டானப் பகுதியில் ஒரே ஒரு கல்வெட்டு காணப்பட்டது.  வெயிலின் காரணமாக நின்று நேரமெடுத்துச் செய்யவேண்டிய பணி.  முன்னர்க் குறிப்பிட்டவாறு, கல்வெட்டுகளைப் படித்துச் செய்திகள் அறிந்துகொள்ள ஒரு நாள் போதாது. இந்த லகுளீசர் சைவ சமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகிய பாசுபத சமயத்தைத் தோற்றுவித்தவர்.

          கௌளீசுவரர் கோயிலை அடுத்து வளாகத்தில் சிறிது தொலைவு நடந்தால் மீனாட்சி சுந்தரர் திருமுன் உள்ளது. இடப்பக்கத்தில், கோசாலை. கோசாலையை ஒட்டிச் சற்றுக்கிழக்கே முன்னர்க் குறிப்பிட்ட இருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்பட்ட பகுதி. இதன் அருகில் கம்பிகளால் அடைக்கப்பட்ட நீள் சதுர வளாகம். அதனுள், ஆங்காங்கே மரங்களுக்கிடையில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட பலகைக் கற்களை மேடையிட்டுப் பதித்து வைத்துள்ளனர். இந்தத் தனிக்கல்வெட்டுகள் பல்லவர் காலக் கல்வெட்டுகள் என்று அறிகிறோம். (கீழே, ‘கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பைக் காண்க).

ஒற்றி ஈசுவரர் கோயில்:
          கோயிலின் பெரிய வளாகத்தில் தியாகேசர் – ஆதிபுரீசுவரர் கோயில்களுக்குப் பின்புறம், வடமேற்குப்பகுதியில் ஒற்றி ஈசுவரர் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலின் காலம் சோழர் காலம் அன்று எனக் கேள்விப்படுகிறோம். இங்கு கல்வெட்டுகளும் இல்லை. பிற்காலக் கட்டுமானம். நகரத்தார் கட்டுவித்த கோயிலாக இருக்கக் கூடும்?  பட்டினத்தாரின் உருவச் சிலை, வள்ளலாரின் உருவச் சிலை ஆகியன தூண்களில் காணப்படுகின்றன.

கல்வெட்டுகள்:
          முருகன் திருமுன்னில் கருவறையின் தெற்கு அதிட்டானக் குமுதத்தில் (முப்பட்டைக் குமுதம்) நான்கு வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டும், நந்திச் சிற்பத்தூணில் ஒரு கல்வெட்டுப் பொறிப்பும் நீக்கி,  இக்கோயில் வளாகத்தில் ஆதிபுரீசுவரர் கோயிலில் மட்டுமே கட்டுமானப் பகுதியில் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. இவை தவிர, இருபத்தேழு (இ)லிங்கத்திருமேனிகள் அமைந்துள்ள பகுதியில்,  கம்பி வேலியிட்ட இடத்தில், மேடையிட்டுச் சிமெண்ட்டுப் பூச்சுகளில் பதித்த பத்துப்பன்னிரண்டு பலகைக் கற்களில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.  இவை, வானிலைச் சூழல் கேடு காரணமாகவோ, அன்றித் திருப்பணியின் பெயரால் நிகழும் கேடு காரணமாகவோ தேய்ந்தழிந்த நிலையில் உள்ளன. இவற்றின் பாடங்களை ஆங்கிலேயர் காலத்துப் பதிவு நூல்களில் மட்டுமே காண இயலும். நேரடியாகக் கல்வெட்டுகளைப் படித்து மகிழும் சூழல் இல்லை.   வருங்காலத்தில், கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கக் கற்றுக்கொண்ட  ஆர்வலர்களும் பயிற்சிக்குக் கூடக் கல்வெட்டுகளைக் காண இயலாது போகுமோ என்னும் அச்சம் எழுகிறது. கோயில்களைப் புதுப்பிக்கிறோம் என்று திருப்பணி செய்யும் சேவையாளர்கள் கல்வெட்டுகளைத் தொடர்ந்து அழித்து வருதல் கண்கூடாக நிகழ்கிறதே.

நேரில் படித்த கல்வெட்டுகள்:

(அ)  ஆதிபுரீசுவரர் கோயிலில், தென் சுற்றில், தென்முகக் கடவுள் சிற்பத்துக்கருகில் ஆர்வலர் ஒருவர் வெண்ணீற்றால் பூசியிருந்த ஒரு துண்டுப்பகுதியைப் படித்தேன். அதன் பாடம் வருமாறு :

தென்சுவரில் கல்வெட்டு – பட்டிகைப்பகுதி – பாடம்:
          1     ழ இளங்கோ வேளார் இத்தேவர் பண்டாரத்து ஒடுக்கின அன்றாடு நற்காசு இருநூற்று நாற்பது இக்காசு இருநூற்று நாற்
          2     னையூர் ஊரோங் காசு அறுபது கொண்டு விற்றுக்குடுத்த நீர் நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை பனிச்சை புலத்துக்கு (இ) சிறு கண்
          3     யாலுங் குளங்களாலும் மடுக்களாலும் வாய்க்கால்களாலும் கிணற்றுகளாலும் (நீரழியாத) வண்ணம் பாச்சியும் எறிச்சுங்
          4     சு நூற்று நாற்பத்து நாலு இக்காசு நூற்று நாற்பத்து நாலும் ஆட்டாண்டு தோறும் (நின்றிறை)யாக இறுப்பதாக இக்காசுக்கு நிவந்தஞ்செய்

கல்வெட்டுச் செய்தி:
          முழுமையாகப் படிக்காத இக்கல்வெட்டின் துண்டுப்பகுதிலிருந்து மிகுதியான செய்திகள்  கிடைக்காதெனினும், கல்வெட்டின் இந்த வரிகள் தெரிவிக்கும் செய்திகளைப் பார்ப்போம். கோயிலுக்கு நிலம் கொடையளித்த செய்தி பெறப்படுகிறது. வீரசோழ இளங்கோ வேளார் என்பவர் கோயில் பண்டாரத்தில் (கருவூலத்தில்)  இருநூற்று நாற்பது காசுகள் ஒடுக்கியது (செலுத்தியது)  அறிகிறோம். இவர், சோழ நாட்டு உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரமூர் நாட்டு நடார் கிழார் ராஜராஜன் பரநிருபராக்ஷஸநாரான வீரசோழ இளங்கோ வேளார் என்பதாகத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-3, க.வெ. எண் : 64 வாயிலாக அறிகிறோம். ’அன்றாடு’ என்னும் சொல் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுகளில் காணப்படும் இச்சொல், “கல்வெட்டு குறிக்கின்ற காலத்தில் வழக்கில் உள்ள” என்னும் பொருளைத்தரும்.  இவரிடம் பெற்ற காசின் ஒரு பகுதி (அறுபது காசு)  காசினைக் கொண்டு ஊர்ச்சபையினர் ஊர் நிலம் ஒன்றை விற்றுக் கொடுத்துள்ளனர் எனக்கருதலாம். இந்த நிலத்தை இளங்கோ வேளார் கோயிலுக்குக் கொடையாக அளித்தார் எனக்கொள்ளலாம். கொடை நிலம், நன்செய்ப் பயிர் விளையும் நல்ல நீர் நிலம் என்பது அறியப்படுகிறது. நிலத்தின் எல்லையும் கல்வெட்டில் விளக்கப்படுகிறது. ஊரார், நூற்று நாற்பத்து நாலு காசினை அரசுக்கு இறையாகச் (வரியாக)  செலுத்துகிறார்கள்.  இந்த வரி, நின்றிறை (மாறாத வரி – fixed tax) எனத் தீர்மானம் ஆகிறது.

(ஆ) முருகன் கருவறை – தெற்கு அதிட்டானக் குமுதத்தில் உள்ள கல்வெட்டு

கல்வெட்டுப்பாடம்:
          1        ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு ஆறு வீரநரஸிம்ஹ தேவனான யாதவராயன் ஓலை ஜெயங்கொண்டசோழ மண்டலத்து புழற்கோட்டமான விக்கிரம சோழ வளநாட்டு உடையார்
          2        திருவொற்றியூருடைய நாயனார் கோயிற்தானத்தார் கண்டு திருவொற்றியூருடைய நாயனார் கோயிற் திருச்சுற்றாலையில் நாம் எழுந்தருளுவித்த நாயனார் வீரநரஸிம்ஹ ஈச்வரமுடைய நாயனாற்கு தேவதான இறையிலியாக விட்டுக் கொடுத்தது
          3        நாயறு நாட்டுப் பெரியமுல்லைவாயில் நாற்பால் எல்லையும் உள்பட்ட  வேலி நிலம் …… நிலம் முப்பதிற்று வேலியும் நன்செ(ய்) புஞ்செ(ய்) (உட்பட) எப்பேற்பட்டமையும் வெட்டியுஞ் சிறுபாடிகாவல் அரிமுக்கையுங் கண்காணி எடுத்துக்கொ. . . . . .
          4        யுட்பட்ட நெல்லாயமும் (காசாயமும்) உட்பட்ட . . . . . .  சந்திராதித்தவரை செல்வதாக . . . . .  இப்படிக்குக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள் . . . . . . .       

கல்வெட்டுச் செய்தி:
          இக்கல்வெட்டு, சோழ அரசன் மூன்றாம் இராசராசன் காலத்தது. அவனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. அவனது ஆட்சிக் காலம் கி.பி. 1216-1246. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 1222 ஆகும். கல்வெட்டைப் பொறித்தவன் வீரநரஸிம்ஹ தேவனான யாதவராயன் என்பவன். இவன் மூன்றாம் இராசராசன் காலத்தில் சோழரின் மேலாண்மையின் கீழ் இப்பகுதியில் ஆட்சி செய்த குறு நில அரசன் அல்லது தலைவன் ஆவான். இவன் தன் பெயரில் வீரநரஸிம்ஹ ஈச்வரமுடைய நாயனாரை ஒற்றியூர்க் கோயில் சுற்றாலையில் எழுந்தருளுவித்தான் என்று கல்வெட்டு கூறுகிறது. அதாவது வீரநரசிம்ஹ ஈச்வரம் என்னும் பெயரில் சிறு கோயிலை எடுப்பித்தான். கோயிலை எடுப்பித்த இக்கல்வெட்டின் இருப்பிடம் தற்போது சுப்பிரமணியர் கோயில் என்று வழங்குவதால், இக்கோயிலே வீரநரசிம்ஹ ஈச்வரம் ஆகும் என்றும், கோயிலில் எழுந்தருளப்பெற்ற இறைவன் சிவலிங்கம் என்றும் உறுதியாகக் கூறலாம். காலப்போக்கில் முருகன் கோயிலாக மாற்றம் பெற்றது எனலாம்.  இந்தக் கல்வெட்டு இல்லையெனில் இச்செய்தி தெரியவராமல் போயிருக்கும். அரசன் நேரடியாகத் தன் ஆணையைத் தெரிவிக்கும் ஓலை மற்றும் கல்வெட்டுகளில்தாம் “நம் ஓலை” என்று வரும். இந்தக் கல்வெட்டிலும் அவ்வாறு வருகிறது.

          தான் எடுப்பித்த வீரநரசிம்ம ஈசுவரம் கோயிலுக்கு மேற்படிச் சிற்றரசன் பெரியமுல்லைவாயில் ஊரிலிருக்கும் முப்பது வேலி நிலத்தைத் தேவதான இறையிலியாக (வரிகள் நீக்கி) அளிக்கிறான். பெரியமுல்லைவாயில் என்னும் இவ்வூர், நாயறு நாட்டில் அமைந்திருந்தது. நாயறு நாட்டில் நாயறு, மீஞ்சூர், திருக்காட்டுப்பள்ளி, புதூர், வல்லூர், பெரியமுல்லைவாயில் ஆகிய ஊர்கள் இருந்தன. பெரியமுல்லைவாயில் என்னும் ஊர், திருமுல்லைவாயிலினின்றும் வேறுபட்டது. ’கூகுள்’ வரைபடத்தில் மீஞ்சூரைச் சுற்றி நாயறு, புதூர், வல்லூர் ஆகிய ஊர்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் பெரியமுல்லைவாயில் காணப்படவில்லை.

          தேவதான நிலத்துக்கு, நெல்லாயம், காசாயம், வெட்டி, பாடிகாவல், அரிமுக்கை ஆகிய வரிகள் விலக்களிக்கப்பட்டிருந்தன.

          இக்கல்வெட்டு, இந்தியத் தொல்லியல் அளவீட்டு ஆய்வுத்துறையின் 1912-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில் பதிவாகியுள்ளது. ஆனால், கல்வெட்டின் பாடம் எந்த நூலில் உள்ளது எனத் தெரியவில்லை.

ஒளிப்படத்தில் கண்ட கல்வெட்டுகள்:
          ஆதிபுரீசுவரர் கோயில் வாயிற்காவலர் சிற்பத்தை ஒட்டியுள்ள வெளிவாயில் சுவரில் தெரிந்த கல்வெட்டுப்பகுதியை முன்னர்க் குறித்தவாறு வெயிலின் வெளிச்சத்தில் மொத்தமாக ஓர் ஒளிப்படமாக எடுத்திருந்தேன்.  இப்படத்தில் ஐந்து கல்வெட்டுகள் கலந்து காணப்பட்டன. முழுக்கல்வெட்டாக இரு சிறு கல்வெட்டுகளும், முழுமையாகப் புலப்படாத பெரிய கல்வெட்டுகள் மூன்றின் பகுதிகளும் இருந்தன.  முழுக்கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது மூன்றாம் குலோத்துங்கனின் முப்பத்தொன்றாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும். அடுத்த முழுக்கல்வெட்டு, விசயநகர அரசர் தேவராயரின் காலத்தது.

(அ) மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுப்பாடம் (முழுக்கல்வெட்டு)
          1    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையுமீழமுங் கருவூரும் பாண்டி
          2    யன் முடித்தலையுங் கொண்டருளி வீர அபிஷேகமும் பண்ணியருளின 
          3    ஸ்ரீதிரிபுவன(வீர்) தேவற்கு யாண்டு முப்பத்தொன்றாவது உடையார்
          4    திருவொற்றியூருடைய நாயனாற்குச் சந்தி விளக்கு எரிப்பதற்கு வெண்கு
          5    ன்றக்கோட்டத்துக் குளத்தூரில் குளந்தையாண்டார் மட
          6    த்திலிருக்கும் பெற்றான் மகன் . . . . . . முகத்தான்  விட்ட பசு ஒன்று
          7    நாகு ஒன்று கன்று ஒன்று
 பசு-நாகு கன்று  கொடை

மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு

கல்வெட்டுச் செய்தி:
          இக்கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தது. அவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 1178-1218.  கல்வெட்டு அவனுடைய முபத்தொன்றாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகையால் கல்வெட்டின் காலம் கி.பி. 1209. திருவொற்றியூர் கோயிலில் சந்திவிளக்கெரிக்க பசு ஒன்றும் அதனுடன் கன்றுகள் இரண்டும் கொடையாக அளிக்கப்பட்டன. கன்றுகளில் ஒன்று பெண் கன்று. நாகு என்று கல்வெட்டுக் குறிக்கிறது. ஆண்கன்று, கன்று என்னும் பொதுப்பெயராலேயே குறிக்கப்படுகிறது. கொடையாளி, குளத்தூரில் இருக்கும் குழந்தையாண்டார் மடத்தைச் சேர்ந்த பெற்றான் என்பவனுடைய மகன் என்று கல்வெட்டு கூறுகிறது. குளத்தூர் இன்றும் சென்னைப்பகுதியில் உள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் வெண்குன்றக்கோட்டம் என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. வெண்குன்றம் என்னும் பெயரில் தற்போது ஊர் காணப்படவில்லை. திருவொற்றியூர் புழல் கோட்டத்தில் இருந்தது. புழல் தற்போதும் உள்ள ஊர்.

(ஆ) விஜயநகரர் காலத்துக் கல்வெட்டுப்பாடம் (முழுக்கல்வெட்டு)
          1    வீரஸ்ரீப்ரதாப தேவராயற்குச் செல்லாநின்ற க்ரோதி வருஷம் கும்ப நாயற்று
          2    பூர்வ பக்ஷத்து பௌர்ணையும் சனிக்கிழமையும் பெற்ற மகத்து நாள் ஜயங்கொண்
          3    ட சோழமண்டலத்து புழற்கோட்டத்து நாயினார் திருவொற்றியூர் உடைய நாயினார்
          4    ஸ்ரீபண்டாரத்துக்கு புழல் நாட்டில் மணலியில் ஊரவரோம் கல்வெட்டிக் குடுத்தபடி
          5    ஸ்ரீபண்டாரம் படம்பக்கநாயகப் பேரளத்தில் எல்லைக்கல்லுக்கு மேற்க்கு எங்கள் எல்
          6    லையில் அளங்கட்டி உப்புப்பயிற் செய்யலாந மட்டு இத்தனையும் குடிநீங்காத் தேவதா
          7    நம் ஆக உடையவற்கு நாங்கள் குடுத்த அளவுக்கு இந்த எல்லை உப்புப்பயிற்(ச்) செய்யலாந மட்டு இத்தனை
          8    யும் திருச்சூலத்தாபனம் பண்ணிக்கொண்டு  இந்த உப்புப்பயிற்ச் செய்து குடிவாரமளங்களுக்கு விட்
          9    டு மேல்வாரம் முத[ல்] கைகொண்டு னாயினார் திருமாசித் திருநாள் ஏழாந்திருநாள் குறவறுப்ப உள்ள
          10   து எங்கள் உபயம் (ஆக) சந்திறாதித்தவரைக்கும் குடி நீங்கா தேவதாநமாக கல் வெட்டிக் குடுத்தோம் மணலியில் ஊரவரோம் உ-

விஜய நகரர் தேவராயர் கல்வெட்டு

கல்வெட்டுச் செய்தி:
          இக்கல்வெட்டு, விஜயநகர அரசர் முதலாம் தேவராயர் காலத்தைச் சேர்ந்தது.  இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1406-1422. கல்வெட்டில் குரோதி வருடம் குறிக்கப்பட்டுள்ளது. குரோதி வருடம் அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சியில் கி.பி. 1424-ஆம் ஆண்டு அமைகிறது.  தேவராயரின் ஆட்சிக்காலத்துள் குரோதி ஆண்டு அமையவில்லை. எனவே, தமிழ் ஆண்டுக்குறிப்பு பிழையாக இருக்கலாம். கும்ப நாயறு என்பது கும்ப ஞாயிறு என்பதன் திரிந்த வடிவம். இது மாசி மாதத்தைக் குறிக்கும். (மேஷ இராசி முதல் மீன இராசி வரை உள்ள பன்னிரண்டு இராசிப்பெயர்களைச் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களுக்குச் சூட்டும் வழக்கு இடைக்காலத்தில் இருந்தது. கல்வெட்டில் வானிலைக் குறிப்புகள் உள்ளன. ’பூர்வ பக்ஷம்’ என்பது வளர்பிறைக்காலம். பௌர்ணை என்பது முழுநிலாக்காலம் (பௌர்ணமி). மகத்து நாள் என்னும் தொடர், மக நட்சத்திரத்தைக் குறிக்கும்.

          திருவொற்றியூர் கோயிலுக்கு உப்பளம் இருக்கும் ஊர்ப்பகுதியை குடிநீங்காத் தேவதானமாகக் கொடை அளிக்கிறார்கள் மணலி ஊரவர். உப்பளம் மூலமாகப் பெறும் வருவாயில் மேல்வாரம் என்னும் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியைக் கோயில் ஸ்ரீபண்டாரத்தில் (கருவூலத்தில்) செலுத்துவதாகவும், உப்பளக் குடிகளுக்குக் குடிவாரம் என்னும் வருவாய்ப் பகுதியை அளிப்பதாகவும் கோயில் ஸ்ரீபண்டாரத்துக்கு ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கிறார்கள் ஊரவர். ஏற்கெனவே, ’படம்பக்க நாயகப் பேரளம்’ என்னும் உப்பளம் மணலி அல்லது திருவொற்றியூர்ப் பகுதியில் இருந்துள்ளமை கல்வெட்டில் குறிக்கப்பெறுகிறது. உப்பளங்கள் பெரும்பாலும் அரசர் பெயர்களால் அழைக்கப்படும். இங்கிருந்த உப்பளம் திருவொற்றியூர்க் கோயிலின் இறைவன் பெயரால் அழைக்கப்படுகிறது.

          உப்பினை ‘உப்புப் பயிர்’ என்று கல்வெட்டு குறிப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அக்காலத்தே, நெல்லுக்கு நிகரான மதிப்பை உப்பும் பெற்றிருந்தது. நெல் போலவே, உப்பையும் ஒரு பயிராகவே கருதினார்கள். வேளாண் கூலியாக நெல்லும் (சம்பு) உப்பும் (அளம்) கொடுக்கப்பட்டன என்பதிலிருந்து இதை உணரலாம். இதற்குச் சான்றாக, தமிழ் ஆய்வறிஞர் தேவநேயப் பாவாணரின் கூற்றைக் காண்க :

          "பழங்காலத்தில் சம்பளம் கூலமும் (கூலமாகக் கொடுக்கப்படுவது கூலி.) உப்புமாகக் கொடுக்கப்பட்டது. கூலம் என்பது  தானியம் . கூலத்திற் சிறந்தது நெல்லாதலின், நெல்வகையிற் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும், சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர்.

          ஓங்கிவளர்ந்த சம்பா நெற்பயிரும் சம்பங்கோரையும் ஒத்த தோற்றமுடையனவா யிருத்தல் காண்க.நெல்லைக் குறிக்கும் சம்பு என்னும் பெயர் இன்று சம்பா என வழங்குகின்றது. உகரவீற்றுச் சொற்கள் ஆகார வீறு பெறுவது இயல்பே.
எ-டு: கும்பு - கும்பா, தூம்பு - தூம்பா, குண்டு - குண்டா. கும்புதல் = திரளுதல்.”

          திருவொற்றியூர் கோயிலில் மாசி மாதம் ‘திருமாசித்திருநாள்’  என்னும் பெயரில் ஏழு நாள்கள் பெரியதொரு விழாக் கொண்டாடியுள்ளனர் என்பது அறியவருகிறது. இவ்விழாவுக்கான செலவினங்களுக்கு மேற்படி உப்பள வருவாயைப் பயன்படுத்தியுள்ளனர்.  குடி நீங்காத் தேவதானம் என்னும் தொடரும் கருதுதற்குரியது.  மணலி ஊரவர் தங்கள் உப்பளத்தைக் கோயிலுக்குக் கொடை அளித்தாலும், அங்கு பணிபுரிந்த குடிகள் தொடர்ந்து பணியில் நீடிப்பார்கள் என்றும் அவர்கள் அப்பணியிலிருந்து நீங்காமல் இருக்கலாம் என்று உறுதி அளிப்பதையே ‘குடி நீங்காத் தேவதானம்’ என்னும் தொடர் குறிக்கிறது.

(இ) பெரிய கல்வெட்டு – முழுக்கல்வெட்டையும் காட்டாத ஒளிப்படம் பகுதி - 1
கல்வெட்டின் பாடம்:
          1  கோவிராசகேசரிபன்மரான த்ரிபுவனச் சக்கரவத்(தி)கள் ஸ்ரீராஜாதிராஜதேவர்க்கு யாண்டு ஒன்பதாவது ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோட்டத்து
          2 (ஸ்ரீ)காரியம் அரியபிரான் ப(ட்)டனும் சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச்வர பண்டிதனும் காலும் பிடாருஞ்செய்துகொண்ட சோழமண்டல பிடாரனு
          3 பங்குனியுத்திரத்து ஆறாந்திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலையத்தன்று படம்பக்கநாயக தேவர் திருமகிழின் கீட் திருவோலக்கஞ்செய்தெழுந்தரு
          4 (வி)ண்ணப்பஞ்செய்ய நம்மூர்களில் இகணையூர் அமுதந் கிழவன் பெரியான் சோமனுக்குத் தண்டீசன் விலையாக விற்றுக் காணியாகக் கொடுக்கவென்று திருவாய்மொழி
          5 (பெரியா)ன் சோமனுக்கு ஸ்ரீபண்டாரத்திறையிறுக்கவும் இவநுக்குமிவன் வம்சத்தார்க்கும் விற்றொற்றி ப்ரதிக்ரயத்துக்குரித்தாவதாக விற்றுக் கொடுத்தோம் இப்படிக்கு இவை ம
          6 (இ)ப்படிக்கு இவை சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச்வர பண்டிதன் எழுத்து ||-  இப்படிக்கு இவை காலும் பிடாருஞ் செய்துகொண்ட சோழமண்டல பிடாரன் எழுத்து||- இப்படிக்
          7 (க்கினான்) எழுத்து ||-

பங்குனியுத்திரத்து ஆறாந்திருநாள்:

ஸ்ரீராஜாதிராஜதேவர்க்கு யாண்டு ஒன்பதாவது 

கல்வெட்டுச் செய்தி:
          இக்கல்வெட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி ஐந்தில் காணப்படுகிறது. (க.வெ. எண் : 1359) இரண்டாம் இராசாதிராசன் காலத்தது. ஆட்சியாண்டு ஒன்பது. இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1166-1178 என்பதனால், கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 1175 ஆக அமையும்.

          திருவொற்றியூர்க் கோயிலில் கொண்டாடப்பட்ட பங்குனி உத்திரத்திருநாள் விழாவின்போது ஆறாந்திருநாளில் அரசன், திருவோலக்கம் செய்தருளினான் என்கிறது கல்வெட்டு. (ஸ்ரீ)காரியம் அரியபிரான் ப(ட்)டன், சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச்வர பண்டிதன், காலும் பிடாருஞ்செயங்கொண்ட சோழமண்டல பிடாரன் ஆகியோர் விண்ணப்பம் செய்ய, அரசன், இகணையூர் அமுதந் கிழவன் பெரியான் சோமனுக்குத் தண்டீசன் விலையாக (நிலம்) விற்றுக் காணியாகக் கொடுக்கவென்று திருவாய் மொழிந்தருளுகின்றான். பயிரிடப்படாமல் கிடந்த நிலங்களைப் பயிர் செய்துகொள்ளுமாறு செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டின்படி, நிலத்தை விலைக்குப் பெற்றுக்கொண்ட அமுதன் கிழவன் பெரியான் சோமன் பொறுப்பேற்றுக் கொண்டு கோயில் ஸ்ரீபண்டாரத்துக்கு (கோயில் கருவூலம்) வரி செலுத்த ஒப்புக்கொள்கிறான். மேற்படி நிலம் பெரியான் சோமனுக்கும் அவன் சந்ததியாருக்கும் உடைமை என்றும் அவர்கள் விற்கவும், அடைமானம் (ஒற்றி) வைக்கவும் உரிமையுள்ளவர் என்று விற்பனை ஆவணம் குறிக்கிறது. சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச்வர பண்டிதன், காலும் பிடாருஞ் செயங்கொண்ட சோழமண்டல பிடாரன் ஆகியோர் சான்றொப்பம் இடுகிறார்கள். இக்கல்வெட்டைப் படித்தபோது தெரிந்துகொண்ட ஒரு சுவையான செய்தி கீழ் வருமாறு:

          இக்கல்வெட்டில், மூன்றாம் வரியின் சில எழுத்துகளை நான் பிழையாகப் படித்தேன்.  அவ்வெழுத்துகள் ஆவன:
                    தி  ரு  ம  கி  ழி  ள  கி  ட

          கல்வெட்டுகளில்,  எழுதப்பட்ட முறைப்படி நான் படித்தது சரியே. பிழையன்று. ஆனால், கல்வெட்டு எழுத்துகள் எழுதும்போது மெய்யெழுத்துக்குப் புள்ளியிடல் இருக்காது. சில போது எழுத்தமைதி, “ள”, “ன”  வேறுபாடு காட்டாது. அந்த வகையில், நான் “ன்”  எழுத்தைப் புள்ளியின்றியும் “ள” கரமாகவும் படித்தது ஒரு பிழை. ”கி”  எழுத்தை நெடிலாகப் படிக்காதது மற்றொரு பிழை. அது போலவே, “ட” கர எழுத்தைப் புள்ளியிடாது படித்ததும் பிழை.  இப்பிழைகளால்,  “திருமகிழிளகிட”  எனப் படித்ததால் பொருள் விளங்கவில்லை. திருமகிழ்+ இளகிடக எனக்கொண்டு சரியான பொருளை உணர இயலவில்லை.  பின்னர், சுந்தரர் கதையும், மகிழ மரமும் பற்றி அறிந்த பின்னரே கல்வெட்டுச் சொல் ”திருமகிழின் கீட்” (மகிழின் கீழ்) என்பதும் அதன் சரியான பொருளும் தெரியவந்தது. குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் அண்மையில் கோவையில் ‘வாணவராயர் அறக்கட்டளை’ சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவொன்று ஆற்றும்போது, கோயிற் சிற்பங்களின் அழகையும் உள்ளுறையாய் அமைகின்ற சிறப்பையும் புரிந்து கொள்ளப் புராணக் கதைகளைப் பற்றிய அறிவு மிகத்தேவையான ஒன்று என்பதாகக் குறிப்பிட்டார்.  அதுபோலவே, கல்வெட்டுப் படிக்கையிலும் சில பின்னணிகள் – சற்று நல்ல மொழியறிவு, சற்றே இலக்கியங்கள் பற்றிய அறிவு, கல்வெட்டு சொல்லவரும் செய்தியின் இடம், பொருள், ஏவல் ஆகிய சூழல்கள் - நமக்குத் தெரிந்திருக்கவேண்டும் என உணர்ந்தேன்.

          கல்வெட்டு மகிழ மரத்தை “மகிழ்”  என்று கூறுவது மனங்கொள்ளத்தக்கது. இதுபோலவேதான்,  “ஊனமிலி”  என்னும் இறைவனைக் குறிக்கும் தேவாரச் சொல்லை அடையாளம் காண்பதும்.

(ஈ) பெரிய கல்வெட்டு – முழுக்கல்வெட்டையும் காட்டாத ஒளிப்படம் பகுதி - 2
கல்வெட்டுப் பாடம்:
          1 தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச் சக்கரமுஞ் செங்கோலுந் திக்கனைத்துஞ் செல நடப்ப கெற்பகாலம் புவிகாக்கப் பொற்பமைந்த முடி புனைந்து வாழ வேங்கை
          2  (டின்பம்) வடதிசையில் மாமேருவில் மடங்கடிப்பத் திக்கானை யிருநாலையுஞ் செய(ஞ்) செய்து கொடு கொண்டு விக்கலனைத் தலையரிந்து செழு முத்தின் குடைநிழற்கீழ் முறைமை
          3 யூருடையான் திருஆனித்திருநாள் ஆறாந்திருநாளில் ராஜராஜந் திருமண்டபத்து திருவோலக்கஞ் செய்தருளி (விநோதங்)கண்டருளாநிற்க மடபதியும் தாநத்தாரும் ஸ்ரீமாஹேச்வர கண்காணி செய்வாநும்
          4 செய்யப் பண்ணுகவென்று திருவாய்மொழிந்தருள இவ்வூர்க்குத் தண்டேச்வர விலையாகத் திருவாஞ்சியமுடையான் ஆட்கொண்டான் மல்லகோவுக்கு இவ்வூரில் ஐஞ்சில் ஒன்றும் பருத்திக்குடையான் (அரு)
          5 (வையம் புக்)கானுக்கு இருபதில் ஒன்றும் (இ . . தம) பொன்மலை(க்)  குன்றமுடையானுக்கு இருபதில் ஒந்றும் நன்மாங்கிழவன் உய்யவந்தான் மலையாழ்வாநுக்குப் பத்தில் ஒன்றும் சாத்தந்தை சிவக்(கொ)
          6 (த்தோம்) இப்படிக்கு இவை (மடமுடைய ஸரஸ்வதி) பண்டிதன் எழுத்து ||- இப்படிக்கு இவை ஸ்ரீமாஹேச்வர கண்காணி திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து ||-  இவை ஸ்ரீகாரியம் வயல்நாட்டரையன் எழுத்து ||-

திருஆனித்திருநாள் ஆறாந்திருநாளில்

          இக்கல்வெட்டும், தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி ஐந்தில் காணப்படுகிறது. (க.வெ. எண் : 1359) மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தது. ஆட்சியாண்டு பத்தொன்பது.  இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1178-1218 என்பதனால், கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 1197 ஆக அமையும்.  கல்வெட்டின் முதற் பகுதி அரசனது மெய்க்கீர்த்திப் பகுதியாகும். மெய்க்கீர்த்தி என்பது ஒருவகையில் அரசனை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். அவனுடைய பெயர், பீடு, போர்களில் பெற்ற வெற்றி ஆகிய சிறப்புச் செய்திகளைக் கொண்டது.

          திருவொற்றியூர்க் கோயிலில் ”இராஜராஜன்” என்னும் பெயரில் அமைந்த திருமண்டபத்தில் அரசன், கோயிலில் கொண்டாடப்பட்ட ஆனித்திருநாள் விழாவின்போது ஆறாந்திருநாளில் திருவோலக்கம் செய்தருளினான் என்கிறது கல்வெட்டு. திருவோலக்கம் என்பது அரசன் காட்சி தந்து வீற்றிருத்தலைக் குறிக்கும். அரசு அதிகாரிகள், மக்கள் சார்பாக நிற்கும் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆட்சி நடப்பை அறிந்து கொள்ளுதல் மற்றும் மக்கள் குறைகளை விண்ணப்பம் மூலம் தீர்த்துவைத்து ஆணைகள் பிறப்பித்தல் ஆகியன இந்தத் திருவோலக்கத்தின் போது நிகழ்வன எனலாம். இக்கல்வெட்டிலும் அவ்வாறு விண்ணப்பம் ஒன்று செய்யப்படுகிறது. திருவொற்றியூரில் இருக்கும் மடபதி, தானத்தார்,  ஸ்ரீமாஹேச்வர கண்காணி செய்வான் ஆகியோர் அரசனிடம் விண்ணப்பம் செய்கின்றனர். புலியூர்க் கோட்டத்து ஆதன்பாக்கத்துக் காணியாளர்கள்  (உழுது பயிர் செய்யும் உரிமை பெற்றவர்கள்) சந்ததியில்லாமல் பயிர் செய்யாதொழிய, பயிர் நிலம் நெடுங்காலம் பாழ் பட்டுக் கிடந்ததென்று ஆவன செய்ய அரசனிடம் விண்ணப்பம் செய்கிறார்கள். அரசன், “பயிர் செய்யப்பண்ணுக” என்று திருவாய் மொழிந்தருளுகின்றான். அதற்காகத் திருவாஞ்சியமுடையான் ஆட்கொண்டான் மல்லகோ,  பருத்திக்குடையான், பொன்மலைக்குன்றமுடையான், நன்மாங்கிழவன் உய்யவந்தான் மலையாழ்வான், சாத்தந்தை சிவக்(கொழுந்து) ஆகியோரைக் கோயில் தானத்தார் நியமித்து அவர்களுக்குச் சில பங்குகள் தருகிறார்கள். இந்த ஏற்பாட்டுக்குக் கல்வெட்டி ஆவணப்படுத்துகிறார்கள். மூல ஓலை ஆவணத்தில் எழுதி, (மடமுடைய ஸரஸ்வதி) பண்டிதன், ஸ்ரீமாஹேச்வர கண்காணி திருச்சிற்றம்பலமுடையான், ஸ்ரீகாரியம் வயல்நாட்டரையன் ஆகியோர் சான்றொப்பம் இடுகிறார்கள்.

(உ) பெரிய கல்வெட்டு – முழுக்கல்வெட்டையும் காட்டாத ஒளிப்படம் பகுதி - 3
கல்வெட்டின் பாடம்:
          1      கு யாண்டு . . வது திருப்பங்குனி உத்திரத் திருநாளில் ஐந்தாந்திருநாள் இரவு இராஜராஜன் திருமண்டபத்திலே பெருமாள் திருவோலக்கம் செய்தரு(ளினபடி)
          2      (டை)ப் பெருமாள் திருமடைப்பள்ளிப் புறத்துக்கு வேண்டுவன குறைவறுத்துப் போதக்கடவனாக தேவமண்டலத்து ஊர்களில் ஜயங்கொண்டசோழ ம
          3      (லே) பையூர் நாடாழ்வான் வளையமழகியான் ஒற்றியாழ்வான் விலைகொண்டு (ப/ய ற)  அனுபவித்துப்போந்த இவ்வடுகப் பெரும்பாக்க
          4      அருமொழிதேவ வளநாட்(டு) . . [ம்ப)லக்கூற்றத்துப் பனங்குடிப் பனங்குடையான் அழகிய மணவாளன் கண்ணுடைப் பெருமாள் பையூர் நாடாழ்வான்
          5      . . . . . .  வேணுமென்று  விண்ணப்பஞ்செய்ய திரு(வன்ன)மாயருளி நங்கோவணவரும் தானத்தாரும் கோயில் முதற்கணக்குத் திருவொற்றியூருடையா
          6      பொன்னும் . . . . . (லும்) இப்படிக்கு சிலாலேகை செய்துகொள்வதென்று திருவாய் மலர்ந்தருளுகையாலே இவ்வடுகப்(பெரும்பா)க்கம் செம்பியன் (பனங்குடியேன்)
          7      . . . . . . .  கற்கடக நாயற்று அமரபக்ஷத்துப் பன்னிரண்டாந்(தேதி)யும் ப. . யும் உத்திரட்டாதியும் பெற்ற வெள்ளிக்கிழமை
          8      (தோம் நிலவிலையான) கையெழுத்து தேவமண்டலத்து . . .(னில்) ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோத்தமான விக்கிரம
          9      . .  லைக்கு வடக்கும் இவ்வூர் எல்லைக்கு கிழக்கும் வடுகப்பெரும்பாக்கமான செம்பியன் (பனங்)குடி எல்லைக்குத் தெற்கும் தெனாற்பாலெ[ல்]லைக்கு
          10     கோயிற்தானத்தோம் இவூனமிலி விளாகத்துக்கு நிலவிலை நிச்சயித்த . . . (ப)லக் கூற்றத்துப் பனங்குடிப் பனங்குடையான் அழகியமணவாளன் கண்ணுடைப் பெருமாளேன்  இத்திருனாமத்துக்காணியான  (ஊன)மிலி வி
          11     அன்றாடு நற்பழங்காசு 67 இப்பழங்காசு அறுபத்தே(ழு)
          12     னங்குடையான் கண்ணுடைப்பெருமாளுக்கும் இவந் வம்ஸத்தாற்கும் விற்றொற்றி ப்ரதிக்ரயங்களுக்குரித்தாவதாக(வும் பெய)
          13     டைப்பெருமாளுக்கு விற்றுச் சிலாலேகை பண்ணச் சொன்னோம் இக்கோயிற் தானத்தோம் இப்படிக்கு இவை (மட)

திருப்பங்குனி உத்திரத் திருநாளில் ஐந்தாந்திருநாள்

கல்வெட்டுச் செய்தி:
          ஒளிப்படம் காட்டும் பகுதியில் அரசனின் பெயர் காணப்படவில்லை. ஆனால், அரசன், பங்குனி உத்திரத்திருநாள் விழாவின்போது ஐந்தாம் நாள்  திருவொற்றியூர்க் கோயிலில் இருந்த “இராஜராஜன்”  திருமண்டபத்தில் வீற்றிருந்து ஆணை பிறப்பிக்கிறான் என்பதை அறிகிறோம். நிலக்கொடை பற்றியும், கொடை நிலத்தின் எல்லைகள் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. கொடை நிலம் கோயிலின் மடைப்பள்ளிப்புறத்துக்காகக் கொடுக்கப்படுகிறது. மடைப்பள்ளி என்பது உணவு சமைக்கும் அடுக்களையைக் குறிக்கும்.  கொடை நிலம் “விற்றொற்றி”  உரிமையுடன் பனங்குடையான் கண்ணுடைப் பெருமாளுக்கு விற்கப்படுகிறது.  கொடை நிலம் “ஊனமிலி விளாகம்” என்று கல்வெட்டில் குறிக்கப்பெறுகிறது.  ஊனமிலி என்பது இறைவனைக் குறித்த ஓர் அடைமொழியாகும் (ஏழாந்திருமுறைத் தேவாரப்பதிகம்-திருநனி பள்ளி) . இறைவன் பெயரால் அமைந்த நிலவளாகம். ’கோவணவர்’  என்னும் சொல் கோயிலில் பணிசெய்யும் ஊழியருள் ஒரு வகையினரைக்குறிக்கும். புழல் கோட்டம் என்னும் சொல் சற்றுப்பிழையாகப் ‘புழற்கோத்தம்’ எனக் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.

பொதுச் செய்திகள்:
ஒற்றியூர் பெயர்க்காரணம்
          ஒற்றியூர் பெயர்க் காரணம் பற்றி,  “மூத்த மொழி தமிழ்” என்னும் இணையப்பக்கத்தில்  கண்ட செய்தியை இங்கே தந்துள்ளேன்.

          "ஒரு காலத்தில் தலங்கள் உள்பட எல்லா ஊர்களுக்கும் இறை விதித்து அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது அவனுக்கும் ஓலை நாயகத்திற்கும் தெரியாதபடி வரி பிளந்து ``இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க`` என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து அவ்வூர்க்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்றும் பெயர் ஆயிற்று. ``ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும் நாட்ட மலரும் திருநுதலார்`` என்னும் பெரியபுராணச் செய்யுளும் காண்க. "

படம்பக்க நாயகன் – பெயர்க்காரணம்:
          வாசுகி என்னும் பாம்பு இறைவனை வழிபட, இறைவன் தன் திருமேனியில் வைத்துக்கொண்ட காரணத்தால் திருவொற்றியூர் இறைவனுக்குப் படம்பக்க நாயகன் என்னும் பெயர் அமைந்ததெனக் குறிப்புண்டு.

காபாலிகம்:
          திருவொற்றியூர்ப்பகுதியில் காபாலிகம் என்னும் ஒரு சைவப்பிரிவு  பரவியிருந்துள்ளது. காபாலிகத்தைச் சேர்ந்த “மயானமுடைய” சதுரானன பண்டிதர்  என்பவரின் காபாலிக மடம் திருவொற்றியூர்க் கோயிலில் இருந்தது என்று அறிகிறோம். காபாலிகரது சோமசித்தாந்தத்தை விரித்துப் படித்த வாகீச பண்டிதர் திருவொற்றியூரில் இருந்தமை மேலே கல்வெட்டொன்றில் குறிக்கப்பட்டதை நோக்குக. சோழ அரசன் முதலாம் பராந்தகனின் மகன் இராசாதித்தன் போரில் இறந்துபட, அவனுடைய சேனைத்தலைவனான வெள்ளன் குமரன் என்பான் மனமுடைந்து துறவறம் மேற்கொண்டு திருவொற்றியூர்ச் சதுரானனர் மடத்தில் சேர்ந்தார் என்று வரலாற்றுக் குறிப்புண்டு.

திருவொற்றியூர்க் கோயிலில் தேவரடியார்கள்:
          கோவில்களில் ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந்து சமயப் பணியாற்றினர். இவருள் 'பதியிலார்' ஒரு வகையினர்; ரிஷபத் தளியிலார்' (சிவன் கோவிற் பெபண்டுகள்) மற்றொரு வகையினர்; திருவொற்றியூர்க் கோவிலில் சொக்கம், சந்திக்குணிப்பம் என்னும் நடன வகைகளைப் பதியிலார் ஆடும்போது, ரிஷபத்தளியிலார் மிழற்றுப் பாடலை வழங்கினர். ரிஷபத்தளியிலார் அகமார்க்கம், வரிக்கோலம் என்னும் நடன வகைகளை நடித்துக் காட்டினர். பதியிலார் திருப்பதிகக் கருத்துகட்கும், திருவெம்பாவைக் கருத்துகட்கும் ஏற்றவாறு நடித்தனர் என்பது திருவொற்றியூர்க் கல்வெட்டால் தெரிகின்றது.
(சைவசமயம் – டாக்டர் மா. இராசமாணிக்கனார் நூலிலிருந்து).

சுந்தரரும் மகிழ்(மகிழ) மரமும்:
          சைவக் குரவர் நால்வரில் சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை இங்குள்ள மகிழ மரத்தடியில் உறுதியளித்து மணந்தார். இந்நிகழ்வை நினைவு படுத்தும் வகையில் திருவொற்றியூர்க் கோவிலில் ”மகிழடித் திருவிழா”  நடைபெற்றுவருகிறது. மேலே இ)  எனக்குறிப்பிட்ட கல்வெட்டுப்பகுதியில்,  இவ்விழா பண்டுதொட்டு நிகழ்ந்தமை பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்க. பங்குனி உத்திரம் ஆறாந்திருநாள் அன்று இந்நிகழ்வு நடைபெற்றது. இறைவர் திருப்படம்பக்க நாயக தேவர் மகிழமரத்தடியில் எழுதருளப்பெற்று வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் அரசனே நேரடியாக வந்திருந்து கண்டு மகிழ்ந்தான் எனக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். “திருமகிழின்கீட்”   என்பது கல்வெட்டுத் தொடராகும்.

திருவொற்றியூரின் பெருமை:
          இவ்வூர்க்கோயிலில் கல்வெட்டுகள் பொறிப்பித்த மன்னர்களின் பட்டியல் பெரிது.

சோழமன்னர்கள்:
முதலாம் பராந்தகன்
உத்தமசோழதேவன்
முதலாம் இராஜராஜ சோழன்
முதலாம் இராஜேந்திரசோழன்
முதலாம் இராஜாதிராஜ சோழன்
முதலாம் குலோத்துங்கசோழன்

கங்க பல்லவமன்னர்கள்:
விஜய அபராஜித போத்தரையர்
கோவிஜய நிருபதுங்கவர்மர்
கோவிஜய கம்பவர்மர்

பாண்டியர்கள்:
சடையவர்மன் சுந்தரபாண்டியன்

இராஷ்டிரகூட மன்னர்கள்:
கன்னர தேவன்

விசயநகர வேந்தர்கள்:
சாயண்ண உடையார்
தேவராய மகாராயரின் குமாரர் புக்கண்ண உடையார்
வீரப்பிரதாப தேவராய மகாராயர்

சம்புவராய மன்னர்கள்:
ராஜ நாராயண சம்புவராயர்

          கல்வெட்டுகளின் எண்ணிக்கையும் நூற்றுக்கும் மேல் எனலாம்.  இத்தனை மன்னர்கள் இத்தனைக் கல்வெட்டுகளைப் பொறித்துள்ளனர் எனில் பண்டு, திருவொற்றியூர் மிக முதன்மையான ஒரு கோயில்-ஊராக இருந்திருப்பதில் ஐயமில்லை. கடற்கரைக்கு அண்மையில் இருந்த காரணத்தால் ஒரு வணிக நகரமாகவும் சிறப்புற்றிருந்தமை அறியலாகும்.  வணிகர்கள் இருந்த பெருந்தெருக்கள் பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளில் உள்ளன. அரசர்கள் நேரில் வந்து சென்ற நிகழ்வுகள், கோயிலில் நடைபெற்ற சிறப்பு விழாக்கள், சமயங்களின் மைய இடமாக இருந்தமை  ஆகிய பலவேறு காரணங்களால் திருவொற்றியூரின் பெருமை அறியப்படுகிறது.  இக்கட்டுரையில் சுட்டப்பெற்ற சில கல்வெட்டுகள் அன்றி, மற்ற கல்வெட்டுகள் அனைத்தையும் ஆய்வு நோக்கில் பார்த்தால் எண்ணற்ற செய்திகளைத் தரவல்லதாகத் திருவொற்றியூர் கோயில்  திகழும் என்பதில் ஐயமில்லை.

இரவில் ஒளிரும் கோபுரம்



துணை நின்றவை
பார்வை நூல்கள் :
1.   கல்வெட்டில் தேவார மூவர்
2.   தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவத்தலங்கள்
3.   திருஅருட்பா (மூல நூல் அல்ல- இணையவழி)
4.   ஆய்வுப்பேழை – கா.ம. வேங்கடராமையா
5.   சைவ சமயம் – கட்டுரைகள் – டாக்டர் மா. இராசமாணிக்கனார்
6.   SOUTH INDIAN SHRINES -  P.V. JAGADISA AYYAR
7.   SOUTH INDIAN INSCRIPTIONS Vol-III
8.   SOUTH INDIAN INSCRIPTIONS Vol-V

இணையப்பக்கங்கள் :
http://tamilmoli4u.blogspot.com/p/1.html
thevaaram.org
https://groups.google.com/forum/#!topic/mintamil/KlpMANzXmls
(அண்ணாமலை சுகுமாரன்)

நன்றி கூறல் :
கல்வெட்டறிஞர் முனைவர் பூங்குன்றன் அவர்களுக்கு.



தொடர்பு:
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.