Monday, October 8, 2018

இணைய ஊடகங்களில் தமிழ் - தாக்கங்களும் வளர்ச்சியும்

–  முனைவர்.க.சுபாஷிணி 



               பதிப்புத்துறை என்பது தற்சமயம் அச்சுப் பதிப்பு முறையைக் கடந்து இணையப் பதிப்பு முயற்சிகளாக, மின்பதிப்பாக்கங்களாக வலம் வரும் காலம் இது. ஓலைச்சுவடியிலிருந்து தமிழ் கற்ற காலமென்பது படிப்படியாக, அதிலும் குறிப்பாக18ம் நூற்றாண்டின் இறுதியில் குறைய, அச்சுப்பதிப்புக் கருவிகள் பெருக பதிப்பாளர்கள் பரவலாக சுவடி நூலிலிருந்து அச்சுப் பதிப்பிற்குத் தமிழ் நூல்களைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்ட அதே வேளை புதிய நூல்கள் நேரடியாக அச்சுப் பதிப்பாக அச்சகத்தார் பலரால் வெளியிடப்பட்டன. கணினி தொழில் நுட்பம்,வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில், தமிழ் நூல் பதிப்புக்கள் என்பவை அச்சுப் பதிப்பு மட்டுமே என்ற நிலையைக் கடந்து மேலும் ஒரு புதிய பரிமாணம் எடுத்துள்ளது. இணைய ஊடகத்தின் வழியாகத் தமிழ் வலம் வரும் இக்காலம் உலகளாவிய அளவில் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு பொற்காலமாகும். 




               நூல்களைப் போலவே சஞ்சிகைகள் வெளியீடு என்பதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெறும் பங்காற்றியுள்ளது. தமிழகத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சஞ்சிகைகள் பல வெளிவந்தமை பற்றி பலரும் அறிந்திருப்போம். இத்தகைய முயற்சிகள் உலகில் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகள் சிலவற்றிலும் குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்திருக்கின்றன. 



               சென்ற 20ம் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டங்களில் தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் முயற்சியாகச் செந்தமிழ்ச் செல்வன் என்ற ஒரு சஞ்சிகை வெளியிடப்பட்டது. இதன் ஒரு சஞ்சிகையின் பிரதி தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் மின்னூலாக வைக்கப்பட்டுள்ளது. அதனைத்   தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் காணலாம். இதே போல மலேசிய சிங்கையிலும் இலங்கைத் தீவிலும் சஞ்சிகைகள் பல தமிழ் ஆர்வலர்கள் சிலரால் குறிப்பிடத்தக்க வகையிலான முயற்சிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டன. 

               ஆசிய நாடுகள் சிலவற்றில், 19ம் நூற்றாண்டின் இறுதிக் கால கட்டங்களில் நிகழ்ந்த தமிழ் முயற்சிகளை அறியும் போது வியப்பில் ஆழ்கின்றோம். சிங்கையில் 1875ம் ஆண்டில் சிங்கை வர்த்தமாணி என்னும் சஞ்சிகை வெளியிடப்பட்டது. சி.கே.மஹ்தும் சாஹீப் என்பவரது முயற்சியால் இந்த இதழ் தொடர்ந்து சிங்கையில் பிரசுரிக்கப்பட்டு வந்தது. குலாம் காதீர் நாவலர் என்னும் தமிழ் ஆர்வலர் அன்றைய மலாயாவின் பினாங்குத் தீவில் 1883ம் ஆண்டில் வித்யா விசாரணி என்ற ஒரு சஞ்சிகையைத் தொடங்கியிருக்கின்றார். இதே காலகட்டத்தில் வித்யா ஷேடனன் என்ற ஒரு பத்திரிக்கை வெளிவந்தது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது. இலங்கையின் கண்டியிலிருந்து முஸ்லிம் நேசன் என்ற ஒரு பத்திரிக்கையும் அக்கால கட்டத்தில் வெளிவந்துள்ளது. உள்ளூர் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பர்மா, சைகோன், சிங்கை மலாயாவிலிருந்தும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அக்கால கட்டத்திலேயே இந்தச் சஞ்சிகையில் இடம்பெற்றன என்பதையும் அறிய முடிகின்றது. 

               பினாங்குத் தீவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத வார சஞ்சிகைகள் வெளிவந்திருக்கின்றன. 1887ம் ஆண்டில் ஹிந்து நேசன் என்ற பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது. 1912ம் ஆண்டில் சில மாதங்களுக்கு மட்டும் என்ற வகையில் ஞானாசிரியன் என்ற வாரபத்திரிக்கை வெளிவந்து பின்னர் அது தினசரி பத்திரிக்கையாக ஜனோபகாரி என்ற பெயருடன் வலம் வர ஆரம்பித்தது. மலாயாவில் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியினால் 1.1.1887ம் நாள் அதிகாரப்பூர்வமாக்கப்பட்ட Book Registration Ordinance என்ற சட்டத்தின் கீழ் மலாயா சிங்கையில் வெளியிடப்படும் அனைத்து பதிப்பாக்கங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் இப்பகுதியில் வெளியிடப்பட்ட மாத வார தினசரி பத்திரிக்கைகளோ நூல்களோ எதுவாயினும் அதில் மூன்று படிவங்கள் பிரித்தானிய அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் ஒரு படிவம் இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்தில் இடம் பெற வேண்டும் என்ற சட்டம் அப்போது இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் விளைவாக இன்று பிரித்தானிய நூலகத்தின் சேகரிப்புக்களுக்கான அட்டவணையைக் கவனிக்கும் போது 1887 தொடக்கம் 1914 வரையிலும் மலாயா சிங்கையில், தமிழ் மொழியில் இக்காலகட்டத்தில் 34 தமிழ் மாத, வார தினசரி பத்திரிக்கைகள் வெளிவந்துள்ளன என்ற தகவலை அறிய முடிகின்றது. இவை மின்னூல்களாக பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. 

               கணினி தொழில்நுட்பத்தின் வழி மின்னாக்க முயற்சிகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் ஜெர்மனியில் மிக விரிவாக வளர்ந்த ப்ரோஜெக்ட் குட்டன்பெர்க் (http://www.gutenberg.org/ ) எனப்படும் திட்டம் உலக மொழிகள் அனைத்திலும் உள்ள நூல்களை மின்னூலாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. பல நூலகங்களின் மின்னாக்கப்பணிகளுக்கு அடிப்படை கருத்தாக்கத்தை வழங்கிய ஒரு முயற்சியாக இத்திட்டம் அமைந்தது. பிரித்தானிய நூலகம் அதன் எல்லா சேகரிப்புக்களையும் மின்னாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டமையினால் அங்குள்ள ஏனைய மொழி படைப்புக்கள் மின்னாக்கம் பெற்றமையைப் போலவே இந்திய மலாயா சிங்கை நாளிதழ்களும் நூல்களும் கூட மின்னாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மின்னூல்களாகக் கிடைக்கும் இவற்றைப் பெற விரும்புவோர் பிரித்தானிய நூலகத்தைத் தொடர்பு கொண்டு மின்னூலைப் பெற வாய்ப்பும் உள்ளது. 

               பரவலான கணினி மற்றும் இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பவை ஏற்படுவதற்கு முன் பலரது தீவிர தமிழ்ப்பற்றின் காரணத்தினாலும் முயற்சிகளினாலும் வெளி வந்த படைப்புக்கள் பல சேகரிக்கப்படாமலேயே அழிந்தன. அச்சு இதழ்களாக அந்தந்த நாட்டு ஆவணப் பெட்டகங்களிலும் கிராம நூலகங்களிலும் முடங்கிக் கிடக்கின்ற நிலை மட்டுமே ஏற்படும் போது, பொது மக்கள் பார்வைக்குப் பரவலாக அவை கிடைக்கும் நிலை ஏற்படுவதில்லை. ஆனால் இணையப் பரப்பில் மின்னூலாக்கம் என்ற முயற்சிகள் பரவலாக இயங்க ஆரம்பித்த பின்னர் பல சஞ்சிகைகளை இணையத்தில் மின்வடிவத்தில் காண முடிகின்றது. 

இணையத்தில் தமிழ் நூல் மின்னாக்கம் எனும் பொழுது இவ்வகை முயற்சிகளை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: 
1. அரசாங்க நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், ஆவணப் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவை சஞ்சிகைகளை மின்வடிவத்தில் மாற்றி அவற்றை இணைய வெளியில் வெளியிடுவது . 
2. தன்னார்வக் குழுக்களும் பதிப்பகத்தாரும் இணைய வெளியில் சஞ்சிகைகளை மின் வடிவத்தில் வெளியிடும் முயற்சிகள்.
3.தனிநபர் முயற்சிகளின் வழி வெளியிடப்படும் மின்சஞ்சிகைகள் பழம் சஞ்சிகைகளின் மின்னாக்கங்கள். 

               இணைய வெளியில் மின்னூல்கள், மின்சஞ்சிகைகள் வெளியீடு என்பது மட்டுமன்றி விரிவான வகையிலும் கருத்துப் பரிமாற்றங்களும் உடனுக்குடன் பதிப்பித்தல் என்ற முயற்சிகளும் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து விரிவாகிக் கொண்டே வருகின்றன என்பதைக் காண்கின்றோம். மடலாடற் குழுக்கள் இவ்வகையில் இயங்குபவையே. கருத்துப் பரிமாற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்வகைத் தளங்கள் இவ்வகை முயற்சிகளில் ஈடுபடுவோரை மிக ஈர்ப்பதால் தட்டச்சு செய்தல், தங்கள் கருத்துக்களை ஏனையோருடன் இணைய வெளியில் பகிர்ந்து கொள்தல் என்ற முயற்சிகளில் இறங்கி தங்கள் தமிழ் அறிவை படிப்படியாக உயர்த்திக் கொண்டு எழுத்தாளர்களாகப் பரிமளித்திருக்கும் நிலையில் பலர் இன்று உதாரணங்களாக இணைய உலகில் வலம் வருகின்றார்கள். இதற்கு ஒரு படி மேலாக ஃபேஸ்புக் தளங்கள் இயங்குகின்றன. தமிழிலேயே தட்டச்சு செய்து பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் தங்கள் தமிழறிவு மேம்படும் வகையில் நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டு கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்துகின்றனர். 

               இத்தகைய முயற்சிகளினால் தமிழ் இலக்கியப் படைப்புக்களின் பரப்பும் அதன் எல்லையும் மேலும் விரிவடைந்த நிலை பெருகி வருவதைக் காண முடிகின்றது. தமிழ் இலக்கியப் படைப்புக்கள் முன்னர் படைக்கப்பட்ட இலக்கியங்களின் உட்பொருளிலிருந்து மேலும் விரிவாகி ’அயலகச் சூழலில் தமிழ்’ என்ற வகையில் தமிழ் பண்பாட்டுக் கூறுகளையும் அயலக சமூகப் பின்னணியின் சமூகக் கூறுகளையும் கலவையாகக் கொண்டு பரிமளிக்கும் நிலை உருவாகியுள்ளது என்பதைக் காண முடிகின்றது. முன்பை விட தற்காலத்தில் அதிகமான பயண இலக்கியங்கள், அயலக பின்னணி சார்ந்த இலக்கியங்கள், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை நிலையை விவரிக்கும் இலக்கியங்கள், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புக்கள் என்ற வகையில் வெளிவருகின்றன. நம் கண் முன்னே காணும் சமூக அவலங்களைப் பழகிப் போன பார்வையுடன் காணும் தன்மை மறைந்து மாறுபட்ட கோணத்தில் காணும் இலக்கியங்களும் கூட உருவாகின்றன. விரிவான வாசிப்பு, உடனுக்குடன் படைப்புக்களைச் சீர்செய்து மாற்றி தரவுகளைச் சேர்த்து வளம் மிக்க படைப்புக்களாக வழங்கும் நிலை என்பது இணைய ஊடகம் வழங்கியிருக்கும் நல்வாய்ப்பு என்றே கூறலாம். 

               இணைய ஊடகங்களில் வெளி வரும் பதிவுகள் எல்லா வேளைகளிலும் சிறப்பானவை என்றும் தரத்தில் உயர்ந்தவை என்றும் கொள்வதற்கு இல்லை என்பதும் மறுக்கப்பட இயலாது. அவசரமாகத் தட்டச்சு செய்து எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்காமலேயே, உடன் பதிலளிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் தட்டச்சுதல் என்பன போன்ற நடவடிக்கைகளினால் தட்டச்சுப் பிழைகள் நிறைந்த எழுத்துப் பதிவுகளையும் இணையத்தில் பரவலாகக் காண்கின்றோம். இது மட்டுமன்றி இணையத் தொழில் நுட்ப அறிவு கொண்டோர் எவரும் ஒரு பதிப்பாளராகலாம் என்ற நிலை சுலபமாக வாய்ப்பதால் பலரும் இணையத்தில் சஞ்சிகைகள் நடத்துவது என்பது பரவலாகி விட்டது. இதில் முக்கியக் கேள்வியாக அமைவது படைப்புக்களின் தரம் எவ்வகையில் அமைந்திருக்கின்றது என்பதே. ஆக இத்தகைய விஷயங்களை உற்று நோக்கி அதனைச் சீர் செய்து தரமான இலக்கியப் படைப்புக்களையும் தமிழ் கருத்துப் பரிமாற்றங்களையும் செய்து வருவது விரிவானால் தமிழ் இலக்கிய வளர்ச்சி கணினி மற்றும் இணைய ஊடகங்களின் வாயிலாக பலதரப்பட்டோரையும் சென்று அடைவதோடு தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த வளர்ச்சியை வழிகாட்டும் என்பது உண்மையாகும்!

[2014 தினமணி ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.]



________________________________________________
தொடர்பு:
முனைவர்.க.சுபாஷிணி   (ksubashini@gmail.com)




Thursday, October 4, 2018

உத்தமம் - கல்வெட்டியல் பயிலரங்கு

உத்தமம்-கே.ஜி. பொறியியல் கல்லூரி கோவை இணைந்து நடத்திய கல்வெட்டு-ஆவணப்படுத்துதல் பயிலரங்கு
(UTHTHAMAM-KCT WORKSHOP ON EPIGRAPHY)
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



உத்தமம்:
               தமிழ் மொழியையும் தமிழ் எழுத்தையும் கணினிக்குள்ளும் கணினி வழி இணையத்துள்ளும் கொண்டு சேர்க்கத் தனி ஒருவராகவும், குழுவாகவும் பல்வேறு அமைப்புகள் பணியாற்றியுள்ளனர்; பணியாற்றிக்கொண்டும் வருகின்றனர். இவ்விருவகைப் பயன்பாடுகளையும் நாம் பயன்படுத்திக்கொண்டு வருகின்றோம். கணினி யுகத்துக்கேற்றவாறு  தமிழ் மொழியைத் தகவமைக்கும் வளர்த்தெடுக்கும் பணியாகும் இது. தமிழின் தொல்லெழுத்தான “தமிழி”  அல்லது “தமிழ் பிராமி”, தமிழ் வட்டெழுத்து ஆகிய எழுத்துருக்கள் இணைய வழிப் பயன்பாட்டில் உள்ளன. ”அன்றாள் கோ”, “அன்றாடு நற்காசு”  என்னும் தொடர்களைக் கல்வெட்டுகளில் காணலாம். கல்வெட்டு எழுதப்பெற்ற காலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த அரசனையும் (கோ), அக்காலத்தே புழக்கத்திலிருந்த நாணயத்தையும் (காசு) குறிக்கும் தொடர்கள் இவை. அதுபோல, அன்றாடு தமிழ் எழுத்துகளில் நாம் எழுதுவனவற்றைத் தமிழி எழுத்து வடிவத்திலும், வட்டெழுத்து வடிவத்திலும் நாம் காணுமாறு மாற்றித்தருகின்ற கணினி நுட்பங்கள் பல நடைமுறையில் வந்துவிட்டன.

               தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைத் தகவல் தொழில் நுட்பம் வாயிலாக உயர்த்தும் ஒரு நோக்கத்தில் இயங்கிவருகின்ற “உத்தமம்” (உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – INTERNATIONAL FORUM FOR INFORMATION TECHNOLOGY IN TAMIL),  தமிழ் மொழி, எழுத்து சார்ந்த பல நுட்பங்களில் ஒன்றாகக் கல்வெட்டுகளைக் கணினிக்குள் கொணர்ந்து ஆவணப்படுத்தும்  முயற்சியில் களமிறங்கியுள்ளது.

அப்பாசாமி முருகையன்:
             
உத்தமம் அமைப்பின் தலைவரான அப்பாசாமி முருகையன் அவர்கள், 29-09-2018 அன்று, கோவை குமரகுரு பொறியியற் கல்லூரியில் நடத்திய ஒரு நாள் பயிலரங்கில் கல்வெட்டுகளின் தொகுப்பு, ஆவணப்படுத்துதல், பகுத்தாய்தல் ஆகியவற்றைப் பற்றி உரை நிகழ்த்தினார். கல்வெட்டுகளைப் பற்றிய அவரது இருபத்தைந்து ஆண்டுக்கால உழைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தியது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இரண்டையும் போற்றிக் கொண்டாடினால்தான் அவற்றின் மதிப்புப் புலப்படும். கல்வெட்டுகளை அவர் போற்றிக் கொண்டாடியதை என்னால் நன்கு உணரமுடிந்ததது. காரணம், கல்வெட்டுகளைப் படித்துத் தெரிந்துகொண்ட சில ஆண்டுகளில் எனக்குக் கிடைக்கப்பெற்ற பட்டறிவே.  அது பற்றிய ஒரு பகிர்வே இந்தக் கட்டுரை.

பயிலரங்கு:
               பயிலரங்கு நடந்த இடம் முன்னர்க் குறித்தவாறு, கோவை குமரகுரு பொறியியற் கல்லூரி. கல்லூரியின் வளாகம் மிகப்பெரியதொரு வளாகம்.  சாலையில் அதன் நுழைவுத் தோரணத்திலிருந்து வளாகத்துள் செல்லும் பாதை நீண்ட தொலைவு செல்கிறது. பாதையின் ஒரு புறம் மரங்கள் அடர்ந்த சோலை. சோலையைக் கடந்த பின்னரே கல்லூரியின் முதன்மைக் கட்டிடம் தொடங்குகிறது. ஓர் அரண்மனையை நினைவூட்டும் பழங்கால மாட மாளிகை அமைப்பில் கட்டப்பெற்ற மாபெரும் கட்டிடம். அதன் மூன்றாவது தளத்தில், விரிவுரை அரங்கு ஒன்றில் நிகழ்வு.  ஐம்பது பேர் கலந்துகொண்ட பயிலரங்கு, வருகைப்பதிவு நிறைவுற்றதும் பத்து மணிக்கு முன்னரே தொடங்கியது. அறிமுகங்கள் நடந்தேறியதும் மேல் நிகழ்வுகள் அ.முருகையன் அவர்கள் பொறுப்பில்.

               தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய ஓர் அறிமுகம், அடுத்து நடுகற்கள், அதனை அடுத்துத் தமிழ்க்கல்வெட்டுகளின் மொழியும் அதன் புரிதலும் என மூன்று அடுக்குகளாக அ.முருகையன் அவர்களின் காலை நேர விளக்கவுரை அமைந்தது.  தம் இருபத்தைந்து ஆண்டுக்கால உழைப்பின் அறிவை ஓர் ஐந்து மணிக் கூற்றுக்குள் எவ்வளவு வெளிப்படுத்தமுடியும்? கேள்வியும் இயல்பானது; அவர் முயற்சியும் இயல்பானது. அயர்வு சிறிதும் உணரப்படவில்லை.

கல்வெட்டுகளின் மொழி:
               கல்வெட்டுகளில் காணப்படுகின்ற மொழி தூய்மையானதல்ல என்று சற்றே தாழ்த்திப்பார்க்கும் பார்வை வெகு காலம் இருந்துள்ளது. ஆனால் மெய்யாக அவ்வாறில்லை. நல்ல இலக்கியத் தமிழுக்கு எவ்வாறு ஓர் இலக்கணம் உள்ளதோ அவ்வாறே கல்வெட்டுத் தமிழுக்கும் ஓர் இலக்கணம் உண்டு. உயர்வு தாழ்வு அங்கே இல்லை. ஊர்திகளின் உலகம் என்றாகிவிட்ட இன்றைய சாலைகளில் ஊர்தியில் பயணம் செய்கையில் நாம் (நமது ஊர்தி), சாலை இருவருக்குமாக ஒரு தொடர்பு மொழியும் இலக்கணமும் உள்ளன. சாலைக் குறியீடுகளும் விதிகளும் அந்த இலக்கணத்தில் அடங்கும்; அதைப் புரிந்து கொண்டால்தான் பாதுகாப்பான பொருள் பொதிந்த பயணம் அமையும். அது போலவே, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ள அவற்றின் இலக்கணம் அல்லது விதிமுறை நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.  நாம் அறிந்துள்ள தமிழ் மொழிக்கும் கல்வெட்டுகளில் பயிலும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு உண்டு.

தொல்லியல் துறை:
               தொல்லியல் துறை ஆங்கிலேயரால் முதன்முதலில் ஆசியக் கழகம் (ASIATIC SOCIETY) என்னும் பெயரில் 1784-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுப் பின்னர் சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (ALEXANDER CUNNINGHAM)  என்பவரால் தொல்லியல் ஆய்வுக் கழகமாக (ARCHAEOLOGICAL SURVEY OF INDIA), 1861-இல் இத்துறை வளர்ச்சியுற்றது. 

கல்வெட்டுகள்:
               தமிழ் நாட்டு (அரசர்) வரலாறு, மக்கள் வாழ்க்கை, மக்கள் பண்பாடு, மொழி ஆகிய பல்வேறு கூறுகளை அறிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத சான்றாதாரங்களுள் கல்வெட்டுகள் மிக முதன்மையானவை.  கல்வெட்டுகளைப் படிக்கத் தற்காலம் நிறையக் கருவிகள் உள்ளன. முற்காலம் போல் அல்ல. கல்வெட்டுகள் தவிர செப்பேடுகள் அடுத்து முதன்மையானவை. தமிழ் மொழியல்லாது அரபு மொழிக் கல்வெட்டுகளும் இங்கே உள்ளன. பெரும்பாலான செப்பேடுகள் இரு மொழி கலந்து பொறிக்கப்பட்டவை. அவற்றின் தொடக்கத்தில் சமற்கிருத மொழியும் அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியும் காணப்படுகின்றன. சமற்கிருத மொழியை எழுதக் கிரந்த எழுத்து பயன்பட்டது. தமிழ் மொழியை எழுத வட்டெழுத்தும் தமிழ் எழுத்தும் பயன்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பெற்ற கல்வெட்டுகள் மிகக் குறைவான சொற்களைக் கொண்டவை. இவற்றில், பிராகிருதம், சமற்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிச் சொற்களும் கலந்து காணப்படும். தமிழ் நாட்டின் வரலாற்றையும், தமிழ் மொழியின் வரலாற்றையும் அறிந்துகொள்ள இவை இன்றியமையாதவை.

               இந்திய நாடு முழுமையும் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல், இரண்டு நூற்றாண்டுக் காலம் பிராகிருத - இந்தோ ஆரிய மொழிகள் (PRAKRIT MIDDLE INDO ARYAN LANGUAGES - MIA) செல்வாக்குப் பெற்றிருந்தன. அசோகனின் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு அளவிலானவை. ஆனால், தமிழ் நாட்டில் தேனி மாவட்டம் புலிமான் கோம்பையில் கிடைத்த தமிழ் பிராமிக்கல்வெட்டு, அசோகனின் காலத்துக்கும் முற்பட்டது என நிறுவப்பட்டுள்ளது. எனவே, சங்ககாலம் எது என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று. 

               கல்வெட்டுகளில் காணப்பெறும் மொழி வடிவம் வேறு. கி.பி. 4 – கி.பி. 5   நூற்றாண்டு அளவில்தான் கல்வெட்டுகளில் சமற்கிருதம் நுழைகின்றது. அதுவரை, தமிழ் மொழி மட்டுமே. காரணம், இந்திய நாடு பண்பாட்டளவில் வட நாடு, தென்னாடு என்னும் அமைப்பில் மாறுபட்டிருந்தது. எனவே, கல்வெட்டுகள், இந்திய வரலாற்றுக்கும், தமிழக வரலாற்றுக்கும் மூலச் சான்றுகளாக உள்ளன. கல்வெட்டுகளை யார் எழுதினர்? யாருக்காக எழுதினர்? என்பது தெரிந்துகொள்ளவேண்டும். மக்கள் பார்க்கவேண்டும் என்னும் நோக்கத்தில், கோயில்களில் நம் பார்வை அளவில் கல்வெட்டுகள் எழுதப்பெற்றன. தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில், நம் பார்வை அளவில் நாயன்மாரின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அவை நம்மைப் பார்க்கவும் படிக்கவும் தூண்டுபவை.

               கல்வெட்டுகளைப் படிக்கையில் சமூகச் சூழல் சார்ந்த உண்மைகளின் துணையும், மொழி சார்ந்த விதிமுறைகளின் துணையும் தேவைப்படும். கல்வெட்டுகளைப் படிக்கையில் நமக்கு இயல்பாகவே ஒரு பொறையுடைமைப் (TOLERANCE) பண்பு ஏற்படுதலைக் காணலாம். கல்வெட்டுகளின் தோற்றத்தைச் சற்றே ஆய்ந்தால், கல்வெட்டுகளில் தமிழ்க்கல்வெட்டுகளே மிகத் தொன்மையானவை என்னும் உண்மை பெறப்படுகிறது. 

கல்வெட்டுகளின் தோற்றம் – காலம் ஒரு பார்வை:
மொழி தோற்றம்(காலம்)
வங்காளம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு
குஜராத்தி கி.பி. 14-ஆம் நூற்றாண்டு
மராத்தி கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டு
ஒடியா கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டு
இந்தி            ?
கன்னடம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
தெலுங்கு கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
மலையாளம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு
தமிழ் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு

              கல்வெட்டுகள், ஆட்சியிலிருக்கும் அரசருக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்பைக் குறிப்பன.  நாடு முழுதும் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில்  தமிழ்க் கல்வெட்டுகளே எண்ணிக்கையில் மிகுதியானவை. தமிழ்க் கல்வெட்டுகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு சோழர் காலக் கல்வெட்டுகளாகும்.

கல்வெட்டுகள் குறித்த ஆய்வுக்குப் பயன்பட்ட சான்று மூலங்களும், நிறுவனங்களும் கீழுள்ளவாறு:
1.  தொல்லியல் ஆய்வுத் துறை (ARCHAEOLOGICAL SOCIETY OF INDIA) 1890-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட  கல்வெட்டுத் தொகுதிகள் 37. (SOUTH INDIAN INSCRIPTIONS – VOLUMES).

2.  தொல்லியல் கழகம், தஞ்சை (ARCHAEOLOGICAL SOCIETY, THANJAVUR).

3.  தமிழ்நாடு அரசு – தொல்லியல் துறை 1961-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட நூல்கள்.

4.  கல்வெட்டியல் பேரா. எ.சுப்பராயலு அவர்களின் கல்வெட்டு அகராதி.

5.  கல்வெட்டு அகராதி – மதுரைப் பல்கலை வெளியீடு – ஆசிரியர் கோவிந்தராஜ்.

6.  தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் 110.  கி.மு. 2 – கி.பி. 4  நூ.ஆ.

7.  நடுகல் கல்வெட்டுகள் 317.  கி.மு. 3 – கி.பி. 5-15  நூ.ஆ.

8.  கோயில் கல்வெட்டுகள், செப்பேடுகள்  28,000-க்கும் மேற்பட்டவை.
கி.பி. 5 – கி.பி. 19  நூ.ஆ.

கோயில் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில்,
பல்லவர் காலம் 6 - 9 நூ.ஆ.
முற்காலப் பாண்டியர் காலம் 6 - 9 நூ.ஆ.
பிற்காலப் பாண்டியர் காலம் 12 - 14 நூ.ஆ.
சோழர் காலம் 9 - 13 நூ.ஆ.

               இவற்றில் சோழர் கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிகுதி என்பதோடு மெய்க்கீர்த்தி என்னும் கல்வெட்டுப்பகுதியின் தோற்றமும் வளர்ச்சியும் கொண்டவை.

கல்வெட்டுகளின் அமைப்பு:
கல்வெட்டுகள் மிகுந்த கட்டமைப்பைக் (STRUCTURE) கொண்டவை.  அவையாவன:
1.  இறைவழிபாடு அல்லது மங்கலத் தொடக்கம்
2.  மெய்க்கீர்த்தி
3.  விரிவான கொடைச் செய்தி – கொடையாளி, பயனாளி போன்றவை.
4.  சான்றாளர்கள், கொடையறத்தின் காப்பு

நடுகற்கள்:
               கருநாடகத்தில் “வீரகல்லு”  என்று வழங்கும் நினைவுக்கற்கள் (HERO STONES), தமிழகத்தில் நடுகற்கள் என வழங்கும். நாட்டுப்புறப் பகுதிகளில் பொது நிலை மக்களில் ஒருவராய் இருக்கும் வீரர்கள் ஒரு பூசலின்போது இறந்துபடும் நிலையில் அவர் நினைவாக  எடுக்கப்படும் நினைவுக்கற்கள் நடுகற்களாகும்.  கல் நாட்டப்படுவதால் நடுகல் (PLANTED STONES).  வடபுலத்தார் இதை “சாயா ஸ்தம்பா”  (SHADOW PILLARS) என்பர். பூசல் என்பது ஒரு சிறு சண்டை என்னும் நிலையைக் குறிக்கும். போர் என்னும் அளவில் பெரிய சூழல் இதில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள “SKIRMISH“ என்னும் சொல்லை இதற்கு இணையாகக் குறிப்பிடலாம். பெரும்பாலும் இந் நடுகற்கள் தனிப்பட்டவர் ஒருவரின் புலத்தில் இருக்கும். பூசல், பெரும்பாலும் ஆநிரை கவரும் நிகழ்வாகவோ அல்லது ஆநிரை மீட்டல் நிகழ்வாகவோ அமையும். ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் தொல்காப்பிய இலக்கண வகையில் குறிக்கப்பெறுகின்றன. சங்க இலக்கியங்களில் காணப்பெறும் “ஆகோள்”  என்னும் சொல், இவ்விருவகைப் பூசல்களையும் குறிக்கும். சங்க இலக்கியச் சொல்லான “ஆகோள்” , புலிமான் கோம்பை நடுகல்லில் கையாளப்பட்டமை கண்டறியப்பட்டதாலும், இச்சொல் தமிழ் பிராமி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி எழுத்து அசோகனின் காலத்துக்கு முற்பட்டது என்று நிறுவப்பட்டுள்ளது. இதன்வழி, சங்ககாலத்தின் தொன்மையும் அறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நடுகற்கள் ஊர் மக்கள் எடுப்பித்தவை; அமைவிடம், பெரும்பாலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள்; கருநாடகத்தையும், ஆந்திரத்தையும் ஒட்டியுள்ள பகுதிகள். சோழ நாடு மற்றும் பாண்டிய நாட்டுப் பகுதிகளில் நடுகற்கள் மிகக் குறைவு. நடுகற்கள், கருநாடகத்துத் தாக்கம் கொண்டவை எனலாம். பெரும்பாலும் ஊரின் புறத்தே காணப்படும்.

நடுகல் சிற்பம் - எடுத்துக்காட்டு


குறிப்பு: கருநாடகத்துப்பாணியில் நிறுவப்பட்ட நடுகற்கள் மூன்று அடுக்குகள் கொண்ட புடைப்புச் சிற்பங்களைக்கொண்டிருக்கும்.  கீழ் அடுக்கில் வீரன் இறந்துபடக் காரணமான சூழல் காட்டப்பெற்றிருக்கும் .  அதாவது போர் அல்லது பூசலின் சூழல். அதற்கு அடுத்த அடுக்கில், இறந்த வீரனை விண்ணுலகுக்குத் தேவ மாதர் அழைத்துச் செல்வது போன்ற குறிப்புடன் சிற்பம் இருக்கும். இறுதி அடுக்கில், விண்ணுலகை அடைந்த வீரன் சிவலிங்கத்தை வணங்கும் காட்சி வடிக்கப்பட்டிருக்கும். (வைணவத்தில் வைணவம் சார்ந்த காட்சி இருக்கும்).

நடுகற்களில் வட்டெழுத்து:
               நடுகற்களில் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகல் வட்டெழுத்துப் பொறிப்புகளில் தமிழ் மொழி மட்டுமே காணப்படுகிறது. சமற்கிருதம் முற்றாக இல்லை என்பது சிறப்பு. 9-ஆம் நூற்றாண்டு அளவில் சமற்கிருதத்தின் உள்ளீடு இந்தோ-ஆரிய மொழிகளிலும் பரவியது.  நடுகற் கல்வெட்டுகள் ஏறத்தாழ 450 கல்வெட்டுகள். இவற்றின் காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரையிலானவை. இவற்றில் தொண்ணூறு விழுக்காடு திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ளன. எண்பது விழுக்காடு பல்லவர் காலற்றவை.  நடுகற்கள், முன்னர்க் குறிப்பிட்டவாறு, ஆநிரை தொடர்பான பூசல் பற்றியன. ஆநிரை, தொறு என்னும் சொல்லாலும் குறிக்கப்பெறும். எனவே, நடுகல் கல்வெட்டுகளில், தொறுப்பூசல், தொறு கோள், தொறு மீள் என்னும் குறிப்புத் தொடர்களும், தொறுப்பூசல் அல்லாத வேறு பூசல்கள் பற்றிய கல்வெட்டுகளில் “நாடு பாவுதல்”  என்னும் குறிப்புத் தொடரும் காணப்படும்.

கல்வெட்டுகளில் சமற்கிருதக் கலப்பு:
               முன்னர்க் குறித்தவாறு 9-ஆம் நூற்றாண்டு வரை, கல்வெட்டுகளில் சமற்கிருத மொழியின் தடயம் காணப்படவில்லை. சமற்கிருத மொழியைக் கடன் வாங்கும் சூழலும் நிகழவில்லை.  9-ஆம் நூற்றாண்டுக்கு மேல் சமற்கிருதம் இந்தியாவின் வடபுலம் தென்புலம் ஆகிய இரு பகுதிகளிலும் கல்வெட்டுகளில் கலந்து வருவதைக் காண்கிறோம். அரசர்கள் தம் விருதுப்பெயராகச் சமற்கிருதப் பெயர்களை அணிந்துகொண்டனர். ‘பாண்டிய குலாசனி’, ‘பாண்டிய குலாந்தக’, “பாண்டிய குலபதி”, “பராந்தக”  என்பன போன்ற பெயர்களைக் காண்க. தமிழ்ச் சொற்களைச் சமற்கிருதச் சொற்களாக மாற்றும் சூழலும் உண்டு. நிலமடந்தை, பூமாதேவியாகிறாள். பெண்ணோர் பாகன், அர்த்தநாரி ஆகிறான். பல்லவர் கல்வெட்டுகளில் சமற்கிருதச் சொற்கள் தமிழ் ஒலிப்புடன் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டன. “மஹேந்திர” , ’மயீந்திர”  எனவும், “ஹஸ்தி கோஸ”  என்பது “அத்திகோயத்தார்”  எனவும் எழுதப்பட்டன. சமற்கிருதச் சொற்களின் ஒலிப்பைச் சரியாக எழுதும் முயற்சியில் கிரந்த எழுத்து முறை பயன்பாட்டுக்கு வந்தது. அந்த வகையில், “மஹாஸபை”, “ஸிலாலேகை”  போன்ற சொற்கள் எழுந்தன. சில போது, வடசொல்லின் ஈற்றில் தமிழ் ஒட்டுகளும் சேர்த்து எழுதப்பெற்றன. எடுத்துக்காட்டாக “ஸபையோம்”  என்னும் சொல். இதை, ஸபை + ய்  + ஓம் எனப்பிரிக்கலாம்.  இதில் ஸபை என்பது வடசொல். மற்றொரு சொல் அல்லது தொடர் “பிராப்தியினாலே”  என்பது. இதை, ப்ராப்தி + இன் + ஆல் + ஏ  எனப்பிரிக்கலாம். இதில், “ப்ராப்தி”  என்பது வடசொல். சில தமிழ்ச் சொற்கள், சமற்கிருதச் சொல்லுக்குத் தமிழ் வடிவம் கொடுத்துள்ளனர் எனக்கருதுமாறு அமைகின்றன. எடுத்துக்காட்டாக, “அதுல்” (ATUL) என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு “ஒப்பற்ற”  என்று பொருள் அமையும். ஒப்பற்ற அரசன் எனக் குறிப்பதற்கு இந்த “அதுல்” சொல்லைக் கையாண்டு, தமிழ் வடிவம் கொடுத்து “கோநேரின்மைகொண்டான்” என எழுதினர் எனலாம்.
[கட்டுரை ஆசிரியர் குறிப்பு : “துல்” என்பது “துலாம்”  என்பதன் அடிப்படையில் ஒரு பால் கோடாமல் நிறை காட்டுதலைக் குறிக்கும். துலாக்கோலின் தட்டுகள், இணைத்தட்டுகள்; எனவே, இணை அற்ற என்னும் நிலையைக் குறிக்க “அதுல்” என்று குறிப்பர். நேர்மறைச் சொற்களை எதிர்மறைச் சொற்களாக்கச் சமற்கிருதச் சொற்களில் “அ” எனும் ஒரு முன்னொட்டைச் சேர்ப்பர். எடுத்துக்காட்டாக, “நியாயம்” -> ”அநியாயம்” ;  “தர்மம்” -> “அதர்மம்”  என்பன போல், “துல்” -> “அதுல்”  (இணையற்ற, ஒப்பற்ற).]

மணிப்பிரவாளம்:
               தமிழில் சமற்கிருதக் கலப்பு மிகுந்தபோது அது, மணிப்பிரவாளம் என அழைக்கப்பட்டது. மணியும் பவளமும் கலந்தது போன்று என்று அதைப் பெருமைப்படுத்தியதுண்டு. மணிப்பிரவாளத்தைப் பற்றி வீரசோழியம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு மொழி:
               நாம் அறிந்துள்ள தமிழ் மொழிக்கும் கல்வெட்டுகளில் பயிலும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு உண்டு. கல்வெட்டுகளின் இலக்கணமும் வேறுபடும். ஒரு சில எடுத்துக்காட்டுகள் வழி இவை விளக்கப்படுகின்றன. மொழி இலக்கணத்தில், மொழியின் புறவடிவமைப்பைச் சார்ந்து பல வகைகளில் பொருள் காணல் நிகழும். இதை ஆங்கிலத்தில் (MORPHOLOGICAL CASE MARKING) எனக் குறிக்கலாம். தமிழில் உள்ள எட்டு வேற்றுமைகளில் ஒன்று இடவேற்றுமை (LOCATIVE CASE). எங்கு, எப்போது என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பது போல் அமையும் தொடர்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். “நான் கோவையில் குடியிருக்கிறேன்” என்னும் தொடரில், எங்கு என்னும் கேள்விக்கு “கோவையில்” என்பது விடையாக அமையும். இங்கு, “இல்” என்னும் வேற்றுமை இடவேற்றுமையாகும். இந்த இடவேற்றுமை, கல்வெட்டுகளில் இல்லாமல் போவதுண்டு (ABSENCE OF LOCATIVE). எடுத்துக்காட்டாக,

“தஞ்சாவூர்  எடுப்பித்த  திருக்கற்றளி” 
என்னும் கல்வெட்டுத் தொடரில், “இல்” என்னும் இடவேற்றுமை உருபு இல்லை. தஞ்சாவூர் என்னும் ஒருவர் கட்டுவித்த கோயில் என்னும் பொருள் இக்கல்வெட்டுத் தொடரில் அமைகிறதேயன்றித் தஞ்சாவூரில் கட்டுவித்த கோயில் என்னும் பொருள் நேரடியாக அமையவில்லை. அடுத்து, தமிழில் உள்ள இரண்டாம் வேற்றுமை பற்றியது. யார், எது என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பது போல் அமையும் தொடர்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.  மற்றொரு கல்வெட்டில், கோயிலில் நந்தா விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு ஆடுகளைக் கொடையாக அளித்தது பற்றிக் குறிப்பிடுகையில்,

“…… ஆடு  தொண்ணூற்றாறு”
என்னும் தொடர் உள்ளது. இதில், இரண்டாம் வேற்றுமை காட்டப்படாதது மட்டுமன்றி, எண்ணிக்கையைக் குறிக்கும் சொல் இடவல மாற்றம் பெற்றுள்ளதைக்  காணலாம். இதை ஆங்கிலத்தில், (ABSENCE OF ACCUSATIVE AND QUANTIFIER FLOATING) என்பார்கள்.  “தொண்ணூற்றாறு ஆடு”  என்றமையவேண்டிய வடிவம்,  “ஆடு தொண்ணூற்றாறு” என மாற்றமடைந்துள்ளது.

               அடுத்து, மொழி அமைப்பில், ஒரு சொற்றொடரில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை (வினை முற்று) என்னும் மரபு உண்டு. ஆங்கிலத்தில் இதை SUBJECT-OBJECT-VERB , SOV  என்பர். இந்த அமைப்பு முறை கல்வெட்டுகளில் இல்லை. இது, பின்வரும் கல்வெட்டுத் தொடர்களின் வாயிலாக அறியப்படும்;

எ-டு 1.
“யாண்டு  நந்திப்போத்தரையர்க்கு  பத்தொன்பதாவது”

எ-டு 2.
“நம்  பிராட்டியார்  கைவழி  கொடுத்த  காசு  இருநூறு”

எ-டு 3.
“திருச்சுற்று  மாளிகை  எடுப்பித்தான்  சேநாபதி  இராமன்  கிருஷ்ணன்”        

               அடுத்து, மொழி ஒலிப்புத் தொடர்பானது. இரண்டு சொற்களின் சந்திப்பில் ஏற்படும் சந்தி, கல்வெட்டுகளில் இல்லாமல் போவது (ABSENCE OF SANDHI).  கீழ் வரும் எடுத்துக்காட்டுகளைக் காண்க.

“பொற்றொக்கை  ஆர்”

“பெரும்புலி  ஊர்”

“கோ  இல்”

இவற்றைப் பழகு தமிழில், பொற்றொக்கையார், பெரும்புலியூர், கோயில் என நாம் வழங்குவோம். கல்வெட்டுகளில் அவ்வாறில்லை.

கல்வெட்டுகளின் கணினியாக்கமும் தரவு மேலாண்மையும்:
(CORPUS LINGUISTICS AND DATABASE COMPILATION)
               கல்வெட்டுகளைக் கணினிக்குள் கொணர்ந்து அதன் செய்திகளைத் – தரவுகளை -  தொகுத்தல், மேலாண்மை செய்தல், அதற்கான  தேடு பொறி அமைத்தல் ஆகிய தொழில் நுட்பம் பற்றிய கருத்துப் பகிர்வு பிற்பகல் நிகழ்வாய் அமைந்தது. ஒரு மொழி (MONOLINGUAL), ஒரு காலம் (SYNCHRONIC), வரலாற்றுப் பார்வை (DIACHRONIC) ஆகிய பல நிலைகளைப்பற்றி முருகையன் அவர்கள் எடுத்துரைத்தார்கள். கணினி மற்றும் கணினியாக்கம் தொடர்பான நுட்பமான செய்திகள். கணினித் தொழில் நுட்ப ஆய்வாளர்களைக்கொண்டு பல நிரல்களை (PROGRAMS) உருவாக்கிக் கல்வெட்டுகளின் தரவுத்தொகுப்பினை அமைத்துக் கல்வெட்டுகளின் பாடங்கள், கல்வெட்டுகளை நாம் புரிந்துகொள்ளும் நுட்பத்தைக் கணினிக்குள் புகுத்துதல் ஆகிய பல்வேறு கூறுகளை முருகையன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

               முன்னர் அவர் குறிப்பிட்டவாறு, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ள அவற்றுக்கான இலக்கணத்தையும் விதிகளையும் அறிந்திருத்தல், கணினிக்குள் பதிவு செய்யப்பட்ட தரவுத்தொகுப்பிலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல் (INFORMATION EXTRACTION) ஆகிய செயல்பாடுகளைக் கையாள என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றிய ஓர் அலசல். இலக்கியம் மட்டுமே அறிந்த தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், கல்வெட்டியல் அறிந்த என் போன்றோருக்கும் இந்தக் கணினி நுட்பங்கள் புதியன.  ஆனால், கணினிப் பொறியாளர்களுக்கு இது வழிகாட்டும் கல்விமுறை. மேற்குறித்த வெவ்வேறு மூன்று தளங்களிலும் பயிற்சியுடைய மூவகையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றும்போது கல்வெட்டுகளின் கணினியாக்கம் வரலாற்றையும் ஒருங்கிணைக்கவல்லது.

               கல்வெட்டுகளைக் கணினிக்கு எவ்வாறு புரியவைத்தல் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் விளக்கப்பட்டன. செங்கம் நடுகற்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கல்வெட்டுப் பாடம் (TEXT), பல பகுதிகளாகப் (SEGMENTATION) பிரிக்கப்படுகின்றன. முழுப்பொருள் தருகின்ற சொற்களாகவோ, இடத்தைப் பொறுத்துப் பொருள் கொள்ளும் சொற்களாகவோ பிரிக்கப்படுகின்றன. பின்னர் அவை, ஆள் பெயர், இடப்பெயர், எண்ணுப்பெயர் என்பது போன்ற அடையாளப்படுத்தும் பெயர்களாகக் குறிக்கப்படுகின்றன.

கல்வெட்டு -1
கோவிசைய   மயீந்திர   பருமற்கு   முப்பத்தெட்டாவது
        1                              2                   3                           4

1, 2, 3 -  ஆள் பெயர்  (pn.dat  PERSON NAME)
4 - 38 – எண்ணுப்பெயர்  ( 38.ord )  

கல்வெட்டு -2
வாணகோ    அரைசரு   மருமக்கள்     கந்தவிண்ணனார்     கூடல்    
          1                            2                   3                            4                               5

தொறுக்கொண்ட      ஞான்று
              6                                7

1, 2  - ஆள் பெயர்  -  (pn)
3  -  உறவு  -  (kindred)
4  -   ஆள் பெயர்  -  (pn)
5  -  இடப்பெயர்  -  (pln PLACE NAME)
6  -  ஆநிரை கொள்ளல் – (cattle-lift)
7  -  போது  -  (while)

கல்வெட்டுகள் சில:
               முருகையன் அவர்கள் சிறப்பான சில கல்வெட்டுகளின் படங்களைக் காண்பித்துச் செய்திகளைச் சொன்னார்.  அவற்றுள் சில இங்கே காட்டப்பெறுகின்றன:

கல்வெட்டு-1
1    பகாப்பிடுகு   லளிதாங்குரன்





கல்வெட்டு-2   (வல்லம் குடைவரைக் கோயில்)
1    சத்துரும் மல்லன் குணபரன்
2    மயேந்திரப் போத்தரைசரு அடியான்
3    வயந்தப்பிரி அரைசரு மகன் கந்த சேன
4    ன் செயிவித்த தேவகுலம்


குறிப்பு:  முதல் இரு கல்வெட்டுகளும் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனுக்குரியது.  மஹேந்திர என்பது மயேந்திர என்று மாற்றம் பெற்றது. அது போலவே, வஸந்த என்பது வயந்த என மாற்றம் பெற்றது. இரண்டாம் கல்வெட்டில் தேவகுலம் என்பது கோயிலைக்குறிக்கும்.


கல்வெட்டு-3   (பள்ளன் கோயில் கல்வெட்டு)
1    டுத்து விடுதகவென்று நாட்டார்க்குத் திருமுகம் விட நாட்டா
2    ருந் திருமுகங் கண்டு தொழுது தலைக்கு வைத்துப் படா
3    கை நடது கல்லுங் கள்ளியு நாட்டி நாட்டார் விடுந்த
4    அறையோலைப் படிக்கெல்லை கீழ்பா
5    லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி
6    ன் மேற்குமோமைக்கொல்லை எல்லை இன்னு
7    ம் தென்பாலெல்லை வேள் வடுகன் கேணியி
8    ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபாடி


குறிப்பு : பள்ளன்கோயில் செப்பேடு, பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும் சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது. மேலே நாம் பார்க்கும் செப்பேட்டுப் பாடத்தில் வரும் சில தொடர்களுக்கு விளக்கம்—வருமாறு: 

நாட்டார்-நாட்டுச்சபையார்
திருமுகம்-அரசனின்ஆணை எழுதப்பெற்ற ஓலை
தொழுது தலைக்கு வைத்து - நாட்டார் அரசனின் திருமுகம் வரக்கண்டு தொழுது தலைமேல் வைத்துக்கொண்டனர்.
படாகை-பிடாகை - உட்கிடை ஊர்
படாகை நடந்து  கல்லுங்கள்ளியு(ம்) நாட்டி - பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நட்டனர். சிவன்கோயிலாக இருப்பின் சூலம் பொறித்த கற்களும், திருமால்கோயிலாக இருப்பின் சக்கரம் (ஆழி) பொறித்த கற்களும் நடுவது மரபு.
விடுத்த அறையோலை - கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தனர்.

முடிவுரை:
               கல்வெட்டுகள் மெய்யானவையா? கல்வெட்டுகள் நம்பிக்கைக்குரியனவா? என்று சில கேள்விகள் எழுந்தன. கல்வெட்டுகள் எவ்வாறு பொறிக்கப்பட்டன என்பதை அறிந்தால் ஐயங்கள் அகலும். அரசன் நிலக்கொடை பற்றிய ஆணையை நேரடியாக வாய் மொழி அறிவிக்கிறான். வாய்மொழி ஆணையைக் குறிக்கும் சொல் திருவாய்க்கேழ்வி. அதைச் செவிமடுத்துக் கேட்டு எழுதும் அரசு அதிகாரி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் திருமந்திர ஓலை. எழுதப்பட்ட ஓலையின் படி (நகல்) ஒன்று கொடை நிலம் இருக்கும் ஊரின் நாட்டார் சபைக்குச் செல்கிறது. அரசனின் ஆணையாதலால் அது திருமுகம் எனப்படுகிறது. திருமுகம் கிடைக்கப்பெற்ற நாட்டார் அதனைத் தொழுது தலைமேல் வைத்துக் கொள்கின்றனர். பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  நிலத்தின் எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நடுகின்றனர். கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றனர்.  கோயில் சுவரில் அரசனின் ஆணை, கல்வெட்டாகப் பொறிக்கப்படுகிறது. கல்லின்மேல் பொறிக்கும் முன்பு கல்வெட்டு வாசகம் கல்லில் செங்காவி கொண்டு எழுதப்படுகிறது. மக்கள் பார்வைக்கு அரசனின் ஆணை எட்டுவது இவ்வகையில்தான்.



               கல்வெட்டுகள் மிக முதன்மையான சான்றாதாரங்கள்.  கல்வெட்டுகளைப் படித்தறிதல் ஓர் அருமையான கலை. கல்வெட்டுகளைக் கணினிக்கும் இணையத்துக்கும் கொண்டு சென்று தரவுத் தொகுப்பாக்கிப் பயன்படுத்தும்போது வருங்காலத்தவர் வரலாறு அறியவும் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவும் மிகப்பயன்படும்  என்றும், இலக்கியப் பேராசிரியர்கள், கல்வெட்டு அறிந்தவர்கள், கணினித் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுகோள் விடுத்தும் முருகையன் அவர்கள் கல்வெட்டியல் பயிலரங்கை நிறைவு செய்தார்.



___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.





Tuesday, October 2, 2018

வேட்டவலம் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலச் செக்கு கல்வெட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தின் பெரிய ஏரிக்கரையில் செக்கு கல்வெட்டு ஒன்று  கண்டெடுக்கப்பட்டது.  மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின்  குழுவினர் செல்லங்குப்பம் கிராமத்திற்கு சென்று பெரிய ஏரிக்கரையின்  மண்ணில் புதைந்திருந்த கல் செக்கைத்  தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்தக் கல் செக்கைச்  சுற்றி கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்ததும், அது  சோழர்  காலம் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. கூரியூரை சேர்ந்த பெருவன் என்ற சினபகையின் மகன் சேந்தன் என்பவர் இந்தச் செக்கை செய்து கொடுத்துள்ளதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தச் செக்கில் எடுக்கப்படும் எண்ணெய்யில் ஒரு ஆழாக்கு தினமும் மகாதேவர் என்ற இறைவனுக்கு வழங்க முறை செய்யப்பட்டுள்ளது என்றும்,  இறைவனுக்கு நாள்தோறும் வழங்கப்படும் எண்ணெய், தர்மத்தைக் காப்பவர்களின் கால்தூசி, என் முடிமேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதாக வரலாற்று ஆய்வு நடுவம் குழுவினர் கூறினார். மேலும், "இந்தச் செக்கு கல்வெட்டு  இவ்வூரில் கிடைத்தது அரிய கல்வெட்டு. இந்தக் கல்வெட்டில் குறிக்கப்படும் மகாதேவர் என்பது சிவனைக் குறிக்கிறது. மேலும், செல்லங்குப்பத்தில் அழிந்துபோன சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் மேலும் கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றும் கூறினார். கல்வெட்டு குறித்த மேலதிகத்  தகவலைத் தினகரன் செய்தியில் காணலாம். 


கல்வெட்டு வாசிப்பு: து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
திருவண்ணாமலை, வேட்டவலம், செல்லங்குப்பம் செக்குக் கல்வெட்டு மற்றும் பிற துண்டுக்கல்வெட்டுகளின் பாடம்:
          செக்குக் கல்வெட்டின் படம் படிக்கும்படியாய்த் தெளிவாக இல்லை. காணொளியைப் பார்த்துச் செக்குக் கல்வெட்டையும் பிற துண்டுக்கல்வெட்டுகளையும் ஓரளவு படித்தேன்.


செக்குக் கல்வெட்டின் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ கூரியூர் பெரு
2 ளான் சின்பகை மகன் செக்கு
3 மாதேவர்க்(கா)………க
4 த்தான் இது

குறிப்பு: மின்னஞ்சலில் உள்ள செய்திக்குறிப்பின்படி, சின்பகை என்பானின் மகன் செய்த செக்கு என்பது மேற்படிப் பாடத்தின் மூலமும் உள்ளது. மாதேவர் என்பதும் சிவன்கோயில் இறைவனைக் குறிப்பதே. கல்வெட்டு கிடைத்த ஊரின் பழம்பெயர் கூரியூர் என்பதாகத் தோன்றுகிறது. சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.



துண்டுக்கல்வெட்டுகள்:

துண்டுக்கல்-1   பாடம்:

1 ங்க சோழதேவ
2 லத்திற் கடியி
3 (டி) குழி நானூ
4 . . . . . .  நாட்ட

குறிப்பு: நிலக்கொடை பற்றிய கல்வெட்டாகலாம். குழி என்பது ஒரு அளவை. 144 சதுர அடிப்பரப்பு ஒரு குழி எனப்படுகிறது.



துண்டுக்கல்-2   பாடம்:

1 டிச் செங்குறை நாட்டு
2 இதன் கிழக்குத் தடியே
3 (வி)னாற் குழி ஆயிரத்தை
4 திருமஞ்சனப்புற

குறிப்பு: இந்தக்கல்வெட்டும் நிலக்கொடை பற்றிக்கூறுகிறது. செங்குறை நாடு என்னும் ஒரு நாட்டுப் பிரிவைக் கல்வெட்டு குறிக்கிறது. திருவண்ணாமலை-வேட்டவலம் பகுதி செங்குறை நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது எனலாம்.  தடி என்பது ஒரு துண்டு வயல்நிலத்தைக் குறிக்கும். கோயிலின் இறைத்திருமேனியை நீராட்டுவதற்கு (திருமஞ்சனம்) உண்டான செலவினங்களுக்காக நிலக்கொடை அளிக்கப்பட்டுள்ளது என்பதைத் திருமஞ்சனப்புறம் என்னும் தொடர் குறிக்கிறது.



துண்டுக்கல்-3   பாடம்:

1 ஷமேஷமாக விட்ட நிலம்
2 குத் தடியிரண்டு குழி இரு
3 த்தைஞ்சினால் நிலம்
4 கோலால் ஒன்றும் கூரி

குறிப்பு: இந்தக்கல்வெட்டும் நிலக்கொடை பற்றிக்கூறுகிறது.  இங்கு இரண்டு துண்டு வயல் நிலம் குறிக்கப்படுகிறது. நிலம் கூரியூரில் கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். கூரி.. என்னும் சொல் வழி இதை யூகிக்கலாம். நிலம் ஒரு வகைக் கோலால் அளக்கப்பட்டிருக்கிறது. துண்டுக்கல்வெட்டில் கோலின் பெயர் சுட்டும் எழுத்துகள் இல்லை.



துண்டுக்கல்-4   பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ  த்ரிலோகமாதேவி
2 புரத்து வியாபாரி தண்டலங்
3 கிழாந் சூரியந் பெருமாளாந சமை
4 ய சேநாபதி தந்மம் இக்கொழு
5 கை

குறிப்பு :  இக்கல்வெட்டு சற்றே முழுச் சொற்றொடரைக் கொண்டுள்ளது. திரிலோகமாதேவிபுரம் என்னும் ஊர் குறிக்கப்பெறுகிறது. ஊர்ப்பெயரில் உள்ள புரம் என்பது, இவ்வூர், வணிகர்கள் தங்கியிருந்து வணிகம் செய்த நகர் என்பதைக் குறிக்கும். அதற்கேற்ப இக்கல்வெட்டில் வியாபாரி என்னும் சொல்லைக் காண்கிறோம்.  சமையம் (சமயம் அல்ல) என்பது ஒரு கூட்டமைப்பைக் குறிக்கும் சொல். இங்கே, ஊரளவில் இயக்கிய ஒரு குழு அல்லது கூட்டமைக் குறிப்பதாகலாம். இந்த அமைப்பில் இருந்த சமைய சேநாபதி (தலைமை)ப் பொறுப்பில் இருந்த ஒரு வணிகனான சூரியன் பெருமாள் என்பவன் கொடை (தந்மம்) அளித்துள்ளான். இவன் தண்டலம் என்னும் ஊரின் கிழான் பொறுப்பையும் ஏற்றவன் என்பது தண்டலங்கிழாந்” என்னும் தொடரால் அறியப்படுகிறது. கொடைப் பொருள், கல்வெட்டின் இறுதியிற் சொல்லப்படும் “தந்மம் இக்கொழுகை” என்னும் தொடரால் அறியலாகும். கொழுகை என்னும் சொல் கல்வெட்டு அகராதியில் காணப்படவில்லை. ஆனால், “கொள்கை” என்னும் சொல், அகராதியில் “ கவசம்; லிங்கத்தின்மீது கவிக்கும் மூடி” என்னும் பொருளில் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டில் காணப்படும் ”கொழுகை” இந்தக் “கொள்கை”யின் திரிபாக இருக்கலாம். எனில், கொடையாளி சிவலிங்கத்தின் மீது கவசமாகப் பதிக்கும் கொழுகையைக் கொடையளித்துள்ளான் என்பதாகப் பொருள் கொள்ளல் பொருந்தும்.  இதனால், கோயிலும் சிவன் கோயில் எனக் கருத வாய்ப்பு மிகுதி. சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.  



துண்டுக்கல்-5   பாடம்:

1 [கூ]ரியூர் மலையமான் மலையனாயனான  வீரராக்ஷஸச் சேதியரயனுக்கு
2 ழி நாலும் தென்வடக்குப் பழந்தேவதானமான நெடு(வா)துக்கு வடக்[கு]
3 யும் திருத்துக்குழியிருநூறும் ஆகக் குழி ஆஇயரத்து நானூற்றெழுப
4 . . . . . . . .  பிடாரி கோயில் கிழக்கு வழிக்கு மேற்குக்

குறிப்பு:  இந்தக் கல்வெட்டின் மூலம், கூரியூர் மலையமான்களின் ஊர் என்பது புலனாகிறது. திருவண்ணாமலை (திருக்கோவிலூர்) பகுதி மலையமான்களின் நாட்டுப்பகுதி என்பது வரலாற்றுச் செய்தி. இராசராச சோழனின் தாயார் மலையமான் ஒருவரின் மகள் என்பதும் நாம் அறிந்த ஒன்று. கல்வெட்டு, மலையமான்களில் ஒருவனான வீரராட்சசச் சேதிராயன் காலற்றது என்பதும் புலனாகிறது. இக்கல்வெட்டும் நிலக்கொடை பற்றிக் கூறுகிறது. மொத்தம் ஆயிரத்து நானூற்று எழுபது குழி நிலம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகள் பற்றிய குறிப்பில், கோயிலுக்கு ஏற்கெனவே  தேவதானமாக ஒரு நிலம் அளிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும், சிவன் கோயிலுக்கருகில் ஒரு பிடாரி கோயில் (கொற்றவை கோயிலாக இருக்கலாம்) இருந்துள்ளது என யூகிக்கவும் எல்லைக் குறிப்பு உணர்த்துகிறது. கொடை நிலமான ஆயிரத்து நானூற்று எழுபது குழியில் இருநூறு குழி நிலம் திருத்து நிலமாக இருந்துள்ளது என்பது பெறப்படும். திருத்து (பெயர்ச்சொல்), பண்படுத்தப்பட்ட நிலத்தைக் குறிக்கும்.







___________________________________________________________

கல்வெட்டு வாசிப்பு -  து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.

தினகரன் செய்தி: 
வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலச் செக்கு கல்வெட்டு:வரலாற்று ஆய்வு நடுவம் கண்டெடுப்பு, 2018-09-07;  (http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=433813) 

காணொளி:
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமம் பெரிய ஏரிக்கரையில் கிடைத்த  செக்கு கல்வெட்டு 
காணொளி:  https://www.youtube.com/watch?v=8Dv3Xp2NTEI





இராமலிங்க விலாசம் அரண்மனை

—  சொ.வினைதீர்த்தான்


இராமேசுவரம், இராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளின் காவலர்களாக 400 ஆண்டுகள் விளங்கியவர்கள் சேதுபதி மன்னர்கள். கிபி1600 முதல் 1800 வரை மன்னர்களாகவும் பிறகு ஆங்கிலேய ஆட்சியில் நாடு சுதந்திரம் பெறுகிறவரையில் இராமநாதபுரம் சமஸ்தான அதிபதிகளாகவும் திகழ்ந்தவர்கள். அவர்களில் கிழவன் சேதுபதி (1690-1710) தங்களுடைய குலதெய்வம் பெயரில் கட்டிய அரண்மனை "இராமலிங்க விலாசம்" இன்றும் இராமநாதபுரத்தில் தமிழர் கட்டிடக்கலைக்குச் சான்றாகப் பொலிவுற விளங்குகிறது.



"சத்தியமேவ ஜெயதே. இந்திய நாட்டின் சமய பண்பாட்டுச் சிறப்பினை மேலைநாடுகளில் பரப்பி வெற்றிப் பரணியுடன் தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தரது புனித பாதத்துளிகள் பட்ட முதல் புனித இடம்" என்று பாஸ்கர சேதுபதி கல்வெட்டில் பதிந்து வைக்க 25.1.1897ல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய விவேகானந்தர் இங்கு கால் பதித்தார்.

பெருமைக்குரிய இராமலிங்க விலாசம் அரண்மனையை இராமநாதபுரத்திற்கு 27.8.2018 ஒரு பயிற்சிக்குச் சென்றபோது தரிசித்து வந்தேன். இவ்வரண்மனையில் தற்போது தொல்லியல்துறை அருங்காட்சியகம் அமைத்துப் பராமரித்து வருகிறது. தங்கத்தாலான இராஜராஜேஸ்வரி விக்ரகம் அருள்பாலிக்கிற கோவிலும், ஜமீன் வாரிசுகள் வாழும் பிற பகுதிகளும் வளாகத்தில் உள்ளன. கோவிலில் நவராத்திரி விழா பிரசித்தம்.



இவ்வரண்மனையில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையன் ஜாக்சன் துரை சந்திப்பு 1798ல் நிகழ்ந்தது.

அருங்காட்சியகத்தில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், ஓவியங்கள், செப்புக்காசுகள், சிற்பங்கள், வளரி முதலிய ஆயுதங்கள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சேதுபதிகளின் அளப்பரிய பணிகளில் சில:
1.இரேமேசுவரம், திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை கோவில் கலை.
2.நீர்ப்பாசனம், கூத்தன் கால்வாய், சேதுபதி மடை, ஏரிகள் என தீர்க்க தரிசனம்.
3.சமயப் பொறை! இந்து, இசுலாமிய, கிருத்தவ, சமண ஆலயங்களுக்குக் கொடை.
4.தமிழ்ப் புலவர்கள் ஆதரவு. பாஸ்கர சேதுபதி சகோதரர் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தல்.
5.இசை, நடனம், ஓவியக் கலைகள் வளர்த்தல். பணிகள் நீள்கின்றன!

அரண்மனை திருமலை நாயக்கர் மஹால் ஒத்த கல்தூண்கள் கொண்ட மகா மண்டபம், அர்த்த மண்டபம், இராமர் பீடம் என்னும் கருவறையுடன் கோவில் அமைப்பை உடையது. மேல்தளமும், வசந்த மண்டபம் போன்ற உப்பரிகையும் காணத்தக்கவை.



கட்டிடத்தின் நெடிய பெரிய சுவர்கள் முழுவதும் ஓவியங்கள் பலப்பல வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளது அரண்மனையின் பெருஞ்சிறப்பு! தெலுங்கு, தமிழ் அடிக்குறிப்புகள் உள்ளன.1710ல் முத்து விசய ரகுநாத சேதுபதியின் பட்டாபிசேகம் தீட்டப்பட்டுள்ளதால் ஓவியங்களின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியெனக் கருதுகிறார்கள். அன்றைய உடை, கலை, உருவங்கள், வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றை அறியத் தருகிற ஓவியங்கள் இன்றும் பொலிவுடன் காட்சி தருகின்றன. சரியான ஒளி அமைப்பு இருந்தால் கூடுதலாகக் கண்டு மகிழலாம்.



1.தசாவதார ஓவியங்கள்.
2.பாகவதக் காட்சிகள்
3.தர்பார், அயல் நாட்டுத் தூதர் வரவேற்பு, ஆடல் பாடல் காட்சிகள்
4.போர்க்காட்சிகள், வேட்டையாடுதல்
5.மன்னரும் அரசியும் இரதி மன்மதன் போல பெண்கள் குழுவாலான யானை, குதிரை மீது அமர்ந்து மலர் அம்பு விடுதல்.
6. அகம், புறம் காட்சிகள்.
காணக் கண்கோடி வேண்டும்.








இந்த அழகிய கலைக்களஞ்சியம் வெளிநாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்படும், எப்படியெல்லாம் கொண்டாடப்படும் என்ற ஏக்கம் எழுந்தது.



___________________________________________________________
தொடர்பு: சொ.வினைதீர்த்தான்
karuannam@gmail.com






சங்க இலக்கியத்தில் சுணங்கு

—  முனைவர்.ப.பாண்டியராஜா



          அண்மையில் சங்க இலக்கியச் சொல்லான சுணங்கு என்ற சொல்லை ஆய்வுசெய்ய நேர்ந்தது. ஓரிடத்தில், சுணங்கு என்பது,
1.   பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு - இது அழகின் வெளிப்பாடு
2.   (பசலை - காதலன் பிரிவில் தோன்றும் மேனிநிற மாற்றம்) - இது மனநோயின் வெளிப்பாடு
என்ற பொருள் காணப்பட்டது.

          சங்க இலக்கியங்களில் சுணங்கு என்ற சொல் வரும் இடங்களைத் தெரிவுசெய்து பார்த்ததில், இந்தக் கருத்து ஏற்புடையதன்று என்று தெரியவந்தது.

          முதலில் சங்க இலக்கியத்தில் எந்தவோரிடத்திலும், சுணங்கு என்பது பசலை என்ற மனநோயின் வெளிப்பாடாகக் குறிப்பிடப்படவில்லை. எல்லா இடங்களிலுமே, சுணங்கு என்பது ஆளை மயக்கும் அழகின் வெளிப்பாடாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

          அடுத்து, இந்தச் சுணங்கு என்பது பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு மட்டுமே என்பதுவும் சரியல்ல என்பது தெரியவந்தது.
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என - அகம் 6/12,13
என்ற அடிகளால், சுணங்கு என்பது தாய்மைப்பேறு அடைந்த பெண்ணுக்கும் வரும் என்பது தெளிவாகிறது.

          மேலும், இது வெறும் பொலிவுமட்டும்தானா என்று பார்ப்போம்.
முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின
சுணங்கும் சில தோன்றினவே - குறு 337/1-4

இதன்பொருள்:
முலைகள் முகிழாய் முகிழ்த்தன; தலையின்
கிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன;
செறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன;
தேமலும் சில தோன்றின

          பருவமடைந்த ஓர் இளம்பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்களை இப்பாடல் குறிக்கிறது. எனினும் சுணங்கும் சில தோன்றினவே என்ற சொற்கள், இது மாற்றம் மட்டும் அல்ல, புதிதாய் தோன்றிய தோற்றம் எனவும் தெரிவிக்கிறது.
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே - புறம் 350/11
என்ற வரியால், இந்தச் சுணங்கு மேனியில் அரும்புவது என்பது உறுதிப்படுகிறது.

          மேலும், சுணங்கு அணி ஆகம், சுணங்கு அணி இள முலை எனப் பல இடங்களில் வருவதால், இது பொதுவான மேனி மாற்றம் அல்ல என்றும், புதிதாய்த் தோன்றிய ஓர் உறுப்பு என்றும் தெளியலாம். எனில், இந்த உறுப்பு எங்கே தோன்றுகிறது என்ற வினா எழுகிறது. இந்த அடிகளைப் பாருங்கள்.
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து - பொரு 35
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் - அகம் 174/12
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த - அகம் 161/12
இவற்றைப் போன்ற இன்னும் பல அடிகளைக் காணலாம். ஆகம் என்பது மார்பு. எனவே,இந்தச் சுணங்கு பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றுகிறது. மார்பு என்பது கழுத்துக்குக் கீழே, வயிற்றுக்கும் மேலே உள்ள பகுதி.

          இந்தப் பரந்த பரப்பில் சுணங்கு குறிப்பாக எங்கே தோன்றுகிறது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி - நற் 9/6
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி - நற் 319/9
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி - அகம் 87/14
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை - அகம் 343/2
என்ற அடிகள், இந்தச் சுணங்கு, பெண்களின் முலைகளின் மேல் படர்கிறது என்று தெரிவிக்கின்றன.

          இந்தச் சுணங்கு எவ்வாறு இருக்கும் என்றும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
 பொன் பொதிந்து அன்ன சுணங்கின் - நற் 26/8
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய - அகம் 279/4
என்ற அடிகளால், இது பொன்னிறமாக இருக்கும் என்று தெரியவருகிறது.

ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் - நற் 191/4
என்ற அடியால், இது புள்ளி புள்ளியாக இருக்கும் என்பதும் தெரிய வருகிறது.

தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் - கலி 57/17
என்ற அடி, சுணங்கு என்பது வேங்கை மலர் போல் இருக்கும் என்கிறது.





          எனவே, ஐயத்துக்கிடமின்றி, பெண்களின் மார்புப்பகுதியில், குறிப்பாக முலைப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் புள்ளிபுள்ளியாக வேங்கை மலர் போன்று அரும்பியிருப்பதே சுணங்கு என்பது பெறப்படும்.







___________________________________________________________
தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/






Monday, October 1, 2018

புறநானூற்றுப் பாடல்கள் குறித்து உ.வே.சா அவர்களின் கருத்து

 – தேமொழி 


எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறென்பது எட்டாவதாகும். புறநானூறு என்பது கடவுள்வாழ்த்துச் செய்யுள் முதலிய 400 அகவற்பாக்களை உடையது. பண்டைய காலத்தில் 400 பாடல்களைக் கொண்ட ஒரு தொகை நூலாக  இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாரென்று அறிய இயலவில்லை. 

உ.வே.சாமிநாத ஐயர்: 

புறநானூற்றுப் பாடல்களின் முதற்பதிப்பு 1894  இல் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டது.  அதைத் தொடர்ந்து,   1923, 1935, 1950, 1956, 1962- ஆண்டுகளிலும் மறுபதிப்புக்களாக  மொத்தம் ஆறு பதிப்புகள் அவராலும் அவரது குடும்பத்தாராலும்  வெளிவந்துள்ளன. தொடர்ந்து பின்னர் பல பதிப்புகளும்  இன்றுவரை வந்துள்ளன. பற்பல ஓலைச் சுவடிகளைப் படித்து,  அவற்றைக் கையெழுத்துப் படியாக உருவாக்கி,  பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவற்றைப் பல பிரதிகளுடனும் ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்த்துச்  செப்பனிட்டு,  சரியான வரிகளைக் கண்டறிந்து  அச்சுப் பதிப்பாக வெளியிட்ட  உ.வே.சா அவர்களின் பணியைப் போற்றாத தமிழர் இருக்க வழியில்லை.  முதல் மூன்று பதிப்புகள் உ.வே.சா அவர்களாலும்,  நான்காவது பதிப்பு  1950 இல் அவர் மகனாலும்,  பின்னர் வெளியான பதிப்பு பேரன் எழுதிய முகவுரையுடனும் வெளியாகியுள்ளது.

தமிழ் மண்ணின் வரலாறு, தமிழக அரசர்கள்  வரலாறு, அவர்களைப் பற்றி பாடிய புலவர்களின் வரலாறு, அக்கால தமிழ் மக்களின் வரலாறு எனப் பற்பல செய்திகளையும் நாம் இன்று  அறிய இயல்வது  உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் என்றால் அது மிகையன்று.    உ.வே.சா அவர்கள் புறநானூற்றுப்  பாடல்களின் வரிசை எண்களை மட்டுமே அவர் நூலில்  குறிப்பிட்டுள்ளார். இன்று  நூல்களில் காணும் பாடல்களின் தலைப்புகள் பின்னர் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பெற்ற பாடல்களின் தலைப்புகளும் இன்றைய நூல்களில் வேறுபடுவதுண்டு.  

புறநானூற்றுப் பாடல்களைப் பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, பாடல்களுக்குரிய திணைகளும் துறைகளும், பாடல் குறித்த சிறப்புச் செய்திகள், மற்றும் உரையின் இயல்பு, சொற்பொருள் விளக்கம்  முதலியவற்றின் அகராதி என அவர்  எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கிய நூல் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட புறநானூற்று நூல் என்பது குறிப்பிடத்தக்கது.  

உ.வே.சா.  சீவகசிந்தாமணிப் பதிப்பிக்கும் பணியில் இருந்த காலத்தில் புறநானூற்றுக்கு உரை ஒன்றுள்ளது என்ற செய்தியும்,  அந்த உரையின் சுவடி ஒன்றும் அவருக்குக் கிடைத்தன.  பல புறநானூற்றுச்  சுவடிகளை உ.வே.சா தேடித் தொகுத்தபோது,   புறநானூற்றுப் பாடல்களுக்கான உரைகள்  முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே உ.வே.சா. அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றது.  இருப்பினும்   அந்த உரையெழுதிய உரையாசிரியர் இன்னாரென்றும் தெரியவில்லை.   மேலும் இந்நூலுக்கு இதையும்விட மற்றொரு  பழைய உரையொன்று இருந்துள்ளதையும்  அந்த  உரையாசிரியரின் குறிப்புகள் மூலமும்  அறிய முடிகிறது.  ஆனால்,  அந்த உரையும்  நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள பழையவுரையின் ஆசிரியர் அடியார்க்குநல்லாருக்கு முற்பட்டவராக இருக்கக் கூடும் என்பது உ.வே.சா.வின் கணிப்பு.  முதல்  266 பாடல்களுக்குமான உரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது.  

உரையற்ற பாடல்களுக்கு உரை எழுத வேண்டும் என்று உ.வே.சா.  எண்ணியிருந்ததை அறிய முடிகிறது.  கீழ்க்காணும் ஆறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்  ஒன்றின் மூலம் அவர் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

"வறனான் மிக்குலர்ந்து பசி வருத்தமிக வாடுமுயிர் வருக்கஞ் செவ்வை
உற நானிலத்து முகில் மழை பொழிந்தாலென ஐங்கை ஒருகோட்டு  எந்தாய்
புறநானூற்று இருநூற்று இசையுறு அமையைந்தின் மிகைப்பொலி பாக்கட்தேர்
உற  நான் அப்பதவுரையும் குறிப்புரையும் எழுதவருள் உதவுவாயே."

உ. வே.சா. அவர்கள், புறநானூறு - இரண்டாம் பதிப்பிற்கான ஏற்பாட்டைச்  செய்தபோது பாடியது  இப்பாடல் என்றும்,  எழுதப்பட்டது 1906ஆம் ஆண்டு அக்டோபர் 13, 14 ஆம் நாட்களில் என கி. வா. ஜகந்நாதன் தாம் தொகுத்த உ. வே.சா. எழுதிய பாடல்களின் தொகுப்பான "தமிழ்ப்பா மஞ்சரி-2" என்ற நூலில் குறிப்பிடுகிறார் (பார்க்க நூலின் பக்கம் - 99).

இனி புறநானூறு குறித்து உ.வே.சா. வின் அறிமுகத்தில் அறிவோம்  ...   
[குறிப்பு: உ.வே.சா. வின் பாடல் பொருள் விளங்கும் வகையில் சொல் பிரித்து இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது, அவரது பாடலை அவர் எழுதிய வகையிலேயே இங்கே  http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=603 படிக்கலாம்]

"பண்டைக் காலத்தே இத்தமிழ் நாட்டிலிருந்த சேர சோழ பாண்டியர்களாகிய முடியுடை வேந்தர், சிற்றரசர், அமைச்சர், சேனைத்தலைவர், வீரர் முதலிய பலருடைய சரித்திரங்களும், கடையெழு வள்ளல்களின் சரித்திரங்களும், கடைச்சங்கப் புலவர் பலருடைய வரலாறுகளும், அக்காலத்துள்ளாருடைய நடை முதலியனவும், இன்னும் பற்பலவும் இந்நூலால் நன்கு புலப்படும். இந்நூற்செய்யுட்களாற் பாடப்பட்டவர்கள் ஒரு காலத்தாரல்லர்; ஒரு குலத்தாரல்லர்; ஒரு சாதியாரல்லர்; ஓரிடத்தாருமல்லர். பாடியவர்களும் இத்தன்மையரே. இவர்களில் அந்தணர் சிலர்; அரசர் பலர்; வணிகர் பலர்; வேளாளர் பலர்; பெண்பாலாரும் உளர்.
முன்னாளிடையே இந்நாடாண்ட
காவலர் பல்லோர் பாவலர் பல்லோர்
மாசரிதத்தை ஆசற விளக்கிச்
சொற்சுவை பொருட்சுவை துவன்றி எஞ்ஞான்றும்
ஒப்புமை இல்லாத் திப்பிய நடையுடைத் [5]
திறப்பாடமைந்த இப் புறப்பாட்டுக்கள்
தெய்வ வணக்கம் செய்யுமின் என்பவும்
அறத்தின் பகுதியை உறத்தெரிப்பனவும்
பாவ வழியை நீவல் நன்று  என்பவும்
இம்மைப் பயனொடு  மறுமைப் பயனைச்  [10]
செம்மையின் வகுத்துத் தெரிவிப்பனவும்
அந்தணர் இயல்பைத் தந்து உரைப்பனவும்
அரச நீதியை உரை செய்வனவும்
வணிகர் இயல்பைத் துணிவுறுப்பனவும்
வேளாண் மாக்களின் தாளாண்மையினை  [15]
இயம்புவனவும் வயம்புரி போர்க்கு
முந்துறும் அரசரைச் சந்து செய்வனவும்
ஒற்றுமைப் பயனைச் சொற்றிடுவனவும்
வீரச் சிறப்பை ஆரத் தெரிப்பவும்
இல்லறமாகிய நல்லறம் உரைப்பவும் [20]
துறவறமதனத் திறவிதின் தெரிப்பவும்
மிடித் துன்பத்தை எடுத்துரைப்பனவும்
வண்மையும் தண்மையும் உண்மையும் திண்மையும்
என்னும் இவற்றைப் பன்னுகின்றனவும்
அளியையும் ஒளியையும் தெளிவுறுப்பனவும் [25]
தம்மைப் புரந்தோர்தாம் மாய்ந்திடவே
புலவர்கள் புலம்பி அலமரல் தெரிப்பவும்
நட்பின் பயனை நன்கு இயம்பனவும்
கல்விப் பயனைக் கட்டுரைப்பனவும்
நீர்நிலை பெருக்கென நிகழ்த்துகின்றனவும் [30]
மானந்தன்னைத்தாம் நன்குரைப்பவும்
இளமையும் யாக்கையும் வளமையும் நிலையா
என்றே இசைத்து நன்றேய்ப்பனவும்
அருளுடைமையினை மருளறத் தெரிப்பவும்
தரமறிந்து ஒழுகென்று உரனுற விதிப்பவும் [35]
அவாவின் கேடேதவாம் இன்பென்பவும்
இனியவை கூறல் நனிநலன் என்பவும்
உழவின் பெருமையை அழகுற உரைப்பவும்
நன்றி அறிக என்று இசைப்பனவும்
கொடுங்கோன்மையினை விடுங்கோள் என்பவும் [40]
தவத்தின் பெருமையைத் தவப்பகர்வனவும்
மடியெனும் பிணியைக் கடிமின் என்பவும்
கொலையெனும் பகையைத் தொலைமின் என்பவும்
நல்லோர்ப் புணர்ந்து புல்லோர்த் தணந்து
தாழ்வு ஒன்றின்றி வாழ்மின் என்பவும் [45]
சுற்றம் புரக்கும் நற்றிறம் உரைப்பவும்
கற்பின் திறத்தைக் கற்பிப்பனவும்
மக்கட்பேற்றின் மாண்பு உரைப்பனவும்
கணவனே இழந்த மணமலி கூந்தலார்
தீப்பாய் செய்தி தெரிவிப்பனவும் [50]
கைம்மை விரத வெம்மை விரிப்பவும்
இன்னும் பற்பல பன்னுவனவுமாய்ச்
செப்புநர் எவர்க்கும் எய்ப்பிடை வைப்பாய்
அரும்பெறன் மரபில் பெரும்பயன் தருமே. [54]
என்று ஒருவாறு பொதுப்படத் தொகுத்துக் கூறுவதன்றி இன்ன பாடல் இத்தன்மையது இன்ன பாடல் இத்தன்மையதென்று தனித்தனியே எடுத்துக்காட்டி இவற்றின் அருமை பெருமைகளைச் சீராட்டிப் பாராட்டுதற்கு ஒரு சிறிதும் வல்லேனல்லேன்."

புறநானூறு முதல் பதிப்பு (1894 ன்) முகவுரையில் நூலை அறிமுகப்படுத்தும் முகமாக உ.வே.சா.  இவ்வாறாக உரைநடை வடிவில்  கூறியுள்ளார். (http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/religion/puran-aanuurumuulamum_uraiyum.pdf#page=11)   

இதே கருத்துகளைப்  பின்னர் பாடல்  வடிவிலும் அடுத்து வெளியிட்ட இரண்டாம் பதிப்பு முதற்கொண்டு கொடுத்துள்ளார்.  (http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/purananooru%20mulamul%20uraiyum.pdf#page=16

இப்பாடலின்வழி தமிழின் பண்டைய இலக்கியம் ஒன்று எத்தனை எத்தனைக் கருத்துகளை வாழ்வியல் முறைகளை நமக்குச் சொல்கிறது என்பதை நூலைத் தொகுத்த  உ.வே.சா.  சுட்டுகிறார் என்பதை நாம் அறியலாம்.  ஆனால் இந்நாட்களில் பெரும்பாலோர் பண்டைய இலக்கியங்கள் தமிழரின் பண்புகளாக "காதலையும் வீரத்தையும்" கூறுகின்றன என்று மட்டுமே  குறுக்கிவிடும்  நிலையும் வழக்கத்தில் உள்ளது. 

இக்கருத்தையே; 
"சங்ககால இலக்கியங்கள் காதலையும் போர்த்திறத்தையும் மட்டுமே சொல்லி இருப்பதாகப் பரவலாக உள்ள ஓர் கருத்து கற்றறிந்தவர்களால் வன்மையாக மறுத்துக்   கூறப்படவில்லை.   புறநானூற்றை மட்டுமே பார்த்தால் கூட, மனித மாட்சி, நீர் மேலாண்மை, கற்றவர் சிறப்பு, மழலையர் போற்றல், கல்வியின் மேன்மை, முறையாக அரசாளும் நெறிமுறைகள் என்ற பல கோட்பாடுகள் குறிப்பிடப் பெற்று இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாய், அனைத்துலகும் அனைத்து மானிடரும்  எம் அங்கம் என்று உணர்ந்து தெளிந்ததும் அற்றைத் தமிழர்தம் போக்காய், வாழ்வியல் நெறிமுறையாய் இருந்ததுவும் கூறப்பட்டிருக்கிறது,"  என்று கோ. பாலச்சந்திரன்,​ இ. ஆ. ப. (ஓய்வு) "தனது அற்றைத் தமிழர் நோக்கும் இற்றைத் தமிழர் போக்கும்" என்ற உரையில் குறிப்பிடுகிறார். 

இந்தப் பாடலில் கவனத்தைக் கவர்வது என்னவெனில், "இவர்களில் அந்தணர் சிலர்; அரசர் பலர்; வணிகர் பலர்; வேளாளர் பலர்" என்று முன்னுரையிலும்;  தொடர்ந்து மீண்டும் பாடலில் "அந்தணர் இயல்பைத் தந்து உரைப்பனவும், அரச நீதியை உரை செய்வனவும், வணிகர் இயல்பைத் துணிவுறுப்பனவும், வேளாண் மாக்களின் தாளாண்மையினை  இயம்புவனவும் [12-16 வரிகள்] என்று வர்ணாசிரம பிரிவு முறையில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகளின் அடிப்படையில்  உ.வே.சா. சிந்தித்துள்ள முறை.  

இன்று எண்ணிம வடிவத்தில் புறநானூறு இணையத்தில் உலாவருகிறது என்றால் அதன் மூல காரணம் உ.வே.சாமிநாத ஐயர்  அவர்களே. 




________________________________________________

சான்றாதாரங்கள்:
[1]
புறநானூறு, மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகள் கொண்டது; ஆறாம் பதிப்பு, 1962. இந்நூலில்  'மூன்றாம் பதிப்பின்' முகவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது 

[1.1]முதற்பதிப்பு:
புறநானூறு மூலமும் உரையும் - உ. வே.சாமிநாதையர் - உ.வே.சா - முதற்பதிப்பு - 1894

[1.2]இரண்டாம்பதிப்பு:
புறநானூறு மூலமும் உரையும் - உ. வே.சாமிநாதையர் - உ.வே.சா - இரண்டாம்பதிப்பு - 1923

[2] 
உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் இயற்றிய  'தமிழ்ப்பா மஞ்சரி-2', கி. வா. ஜகந்நாதன், உ. வே. சாமிநாத ஐயர் நூல் நிலையம், 1962. 

[3]
அற்றைத் தமிழர் நோக்கும் இற்றைத் தமிழர் போக்கும்; கோ. பாலச்சந்திரன்,​ இ. ஆ. ப. (ஓய்வு), மின்தமிழ்மேடை - 14, தமிழ் மரபு அறக்கட்டளை காலாண்டிதழ், ஜூலை 15, 2018 - பக்கம்-5.

________________________________________________


நன்றி: 'சிறகு' இணைய இதழ் 

________________________________________________
தொடர்பு:
முனைவர். தேமொழி (jsthemozhi@gmail.com)







கலிங்கத்துப்பரணி காட்டும் கொற்றலை

 –  மு.முத்தரசு


கொற்றலை ஆறு வரலாறு:
பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படுகிறது. இந்த ஆறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கி.மீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கி.மீ தொலைவும், தமிழகத்தில் 222 கி.மீ தொலைவும் பாய்ந்து சென்னைக்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலுள்ள வயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதற்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன. அவற்றுள் செய்யாறு முதன்மையானதாகும். வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, மேல்மொணவூர், வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை இந்த ஆற்றின் கரை பகுதியில் அமைந்துள்ளன.

பாலாற்றிலிருந்து பிரிந்த கிளை ஆறுதான் கொற்றலையாறு. பாலாற்றிற்குப் பழைய வழித்தடம் ஒன்று இருந்தது. அது நாளடைவில் தடம் மாறித் தற்பொழுது புதிய வழித்தடத்தில் பாய்கிறது எனப் புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

கொற்றலை ஆறு அல்லது கொசஸ்தலை எனப்படும் ஆறு திருவள்ளூர், சென்னை போன்ற வடதமிழகத்தில் பாயும் ஆறாகும். வட ஆற்காடு மாவட்ட பகுதிகளே இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகும். ஆற்றின் மொத்த நீளம் 136 கி.மீ தொலைவு. சென்னை நகருக்குள் 16 கி.மீ பாயும் இந்த ஆறு ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து சென்னை வழியாகப் பாய்ந்து எண்ணூர் வங்கக்கடலில் கலக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேலே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, மீஞ்சூர் அருகே உள்ள வள்ளூர் அணைக்கட்டு ஆகியன பாசனத்திற்குப் பயன்படுகிறது.

கொற்றலை என்ற பெயர் மருவி இன்று கொசஸ்தலை ஆறு என வழங்கப்படுகிறது. இப்பெயர் மாற்றத்திற்குக் காரணம் அன்றைய காலச் சமூக அரசியல் மாற்றமே எனலாம். அது கொற்றலையாறு, குயத்தலை ஆறு, கொசஸ்தலை, குசைத்தலை, குறல்தலை ஆறு, குறத்தியாறு எனப் பல பெயர்களில் மருவியுள்ளதை அந்தந்தக் காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதிவுசெய்கின்றன.

ஆற்றின் ஒவ்வொரு பெயர்களும் பல வரலாற்றுக் கதைகளைத் தாங்கி நிற்கின்றன. இந்த வரலாற்றுப் புராணக் கதைகள் ஆறு பாயும் பகுதிகளில் வாழக்கூடிய மக்களால் சொல்லப்பட்டு வருகிறது. கதை சொல்லக்கூடிய மக்கள் தங்கள் வாழ்வியலோடு சில நாட்டுப்புறத் தெய்வங்களான நீர்நிலை சார்ந்த ஏழு கன்னித் தேவதைகள் பற்றியும் ஆறு உருவான வரலாற்றைப் பற்றியும் குறிப்பிடுகின்றனர் என்பதைக் கௌதம சன்னாவின் குறத்தியாறு என்ற நூலின் வழி அறியலாம். பொதுவாக, தமிழகத்தில் நீர்நிலை சார்ந்த தெய்வங்களாக ஏழு கன்னிமாரைக் குறிப்பிடப்படுவதை நாட்டுப்புற இலக்கியங்கள் பதிவுசெய்கின்றன.

கலிங்கத்துப்பரணி பாடல் வழி அறியலாகும் கொற்றலை ஆறு:

கலிங்கத்துப்பரணி பாடிய ஆசிரியர் செயங்கொண்டார் சோழநாட்டில் உள்ள தீபங்குடி என்ற ஊரில் பிறந்தவர். இவரது காலம் கி.பி பதினோராம் நூற்றாண்டாகும். பரணி இலக்கியம் அபயன் என்கிற குலோத்துங்கச் சோழன் கலிங்க நாட்டைத் தன்னகப்படுத்த வேண்டி தன்னிடம் முதன்மந்திரியாகவும், தளபதியாகவும் இருந்த வண்டைநகர் கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கப்போருக்கு அனுப்பினான். கலிங்கப் போரைச் சிறப்பித்துப் பாடுவது கலிங்கத்துப்பரணியாகும்.

கலிங்கத்துப்பரணி கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடுபாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திரசாலம், இராசபாரம்பரியம், பேய்முறைப்பாட்டு, அவதாரம், காளிக்குக் கூளி கூறியது, போர் பாடியது, களம் பாடியது ஆகிய உறுப்புகளைக் கொண்டு பாட்டுடைத்தலைவனின் இயல்பு, சிறப்பு, வெற்றி முதலியவற்றைப் புகழ்ந்து அளவடி முதலாக அனைத்துச் சீரானும் ஈரடித் தாழிசைகளால் புறப்பொருள்கள் தோன்ற பாடுவது ‘பரணி’ இலக்கியத்தின் இலக்கணம் ஆகும்.

காளிக்குக் கூளி கூறியது என்ற பகுதியில் ஆறு பல கடந்தனர் என்ற தலைப்பில் கருணாகரத் தொண்டைமான் தன் படைகளோடு கடந்து சென்ற வழியில் ஆறுகள் பல கடந்து கலிங்க நாட்டுடன் போர் செய்யச் சென்றுள்ளனர் என்ற குறிப்பு இடம்பெறுகிறது. இதனை,
பாலா றுகுசைத் தலைபொன் முகரிப் பழவா றுபடர்ந் தெழுகொல் லியெனும்
நாலா றுமகன் றொருபெண் ணையெனும் நதியா றுகடந் துநடந் துடனே.

வயலா றுபுகுந் துமணிப் புனல்வாய் மண்ணா றுவளங் கெழுகுன் றியெனும்
பெயலா றுபரந் துநிறைந் துவரும் பேரா றுமிழிந் ததுபிற் படவே.

கோதா வரிநதி மேலா றொடுகுளிர் பம்பா நதியொடு சந்தப்பேர்
ஓதா வருநதி யொருகோ தமையுடன் ஒலிநீர் மலிதுறை பிறகாக.
(கலிங்க. காளிக்குக் கூளி கூறியது, ஆறு பல கடந்தனர், பா.56 - 58)
என்ற பாடலின் வழியாகப் பண்டைய சமூகத்தில் பாய்ந்த ஆறுகளைப் பற்றி நன்கு அறியமுடிகிறது.

பாலாறு - மைசூர் பீடபூமிக்கு அருகில் தோன்றி, வட ஆற்காடு செங்கற்பட்டு வழியாக ஓடுகிறது. குசைத்தலை - வட ஆற்காட்டில் உள்ள காவேரிப்பாக்கத்தில் தோன்றி திருவள்ளூர் பொன்னேரியில் கடலில் கலக்கிறது. பொன்முகரி - திருகாளத்தியில் பாயும் ஆறாகும். வடபெண்ணை - மைசூர் பீடபூமியில் தோன்றி அனந்தபுரம், கடப்பா, நெல்லூர் வழியாகப் பாய்கிறது. கோதாவரி மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப்பிரதேச்தை வளப்படுத்தி, பின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் வழியாகக் கலிங்கத்துப் பரணி இலக்கியம் தோன்றிய அன்றைய காலகட்டத்தில் பாய்ந்த பல ஆறுகள் இன்றும் இருக்கின்றன என்பது தெளிவுற முடிகிறது.

செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி அடியொற்றி அறிஞர் அண்ணா கலிங்கராணி எனும் நூலைப் படைத்துள்ளார். அந்நூலில் ஆறுகளைப் பற்றிப் பின்வருமாறு,
“குலோத்துங்கனின் படைகள் பூங்காவுக்குள் புகுவதுபோல் இங்கு வந்து சேருமோ! இடையே பாலாறு, குசைத்தலை, முகரி, கொல்லி, பெண்ணை, வயலாறு, மண்ணாறு, பேராறு, கோதாவரி, கம்பை, கோதமை ஆகிய பல நதிகளைக் கடக்க வேண்டும். கலிங்கத்தின் மீது பாயுமுன் அந்தப் படைகள் களைத்துப்போகும். ஆகவே, அவற்றை முறியடித்தல் எளிது என்பேன். மேலும் சோழ மண்டலம் சுபீட்சமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படுகிறது. அரசே! அந்தச் சுபீட்சமே போர்த்திறனை மாய்த்துவிட்டிருக்கும், மங்கச் செய்வதாயிருக்கும். எனவே சோழனின் சூரப்புலிகளுக்குக் கலிங்கம் அஞ்சத் தேவையில்லை. அஞ்சுவோருக்கு நாம் வளைகள் பரிசு தருவோம்! வாளேந்தும் கரங்களுக்குக் கலிங்கத்தில் பஞ்சமில்லை”
எனப் பதிவு செய்துள்ளார். வளம் நிறைந்த சோழ நாட்டை மறந்து கலிங்கநாட்டுடன் போர் செய்யப் பல ஆறுகளைக் கடந்து செல்கிறான். கடந்து செல்லும் ஒவ்வொரு ஆறும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. ஆற்று வளம் நிறைந்த நாடான சோழ நாட்டின் பெருமையைப் பேசுவதை அறிந்து கொள்ளமுடிகிறது.

கொற்றலை ஆறு அன்றைய காலகட்டத்தில் குசைத்தலை என்ற பெயராக மருவி வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இதன் வாயிலாக அறியலாம். குசைத்தலை ஆறு பல்வேறு ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட மொழிக்கலப்பால் பிற்காலத்தில் கொசஸ்தலை ஆறாக மாறியிருக்கும் என்பது புலனாகிறது. கொசஸ்தலை என்ற பெயரே தற்காலத்திலும் புழக்கத்தில் இருக்கின்றன.

கொற்றலை ஆறு உருவானதற்கான வாய்மொழிக் கதைகள்:
கொற்றலை ஆறு உருவானதற்கான வாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு குறத்தியாறு என்ற காப்பிய நாவல் தோன்றியிருக்கிறது. இதில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. கொற்றலை ஆறு பாயும் திருவள்ளூர் மாவட்டம் மொண்ணவேடு என்ற கிராமத்தில் ஆறு உருவானதற்கான வாய்மொழிக் கதைகள் நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அந்தக் கதைகள் இன்றைய காலகட்டத்திலும் மக்கள் சிலரால் சொல்லப்படுகின்றன. அவை பின்வருமாறு

“குறத்தி தன் குழந்தையுடன் வெயில் மிகுந்த காலகட்டத்தில் ஆற்றைக் கடக்கும் பொழுது வெம்மையின் காரணமாகக் குழந்தையைக் கீழே போட்டுக் குழந்தை மீது ஏறி நின்று விட்டதாகக் கதை அம்மக்களால் வழங்கப்பெறுகின்றன” குழந்தையை திண்ண ஆறு குசைத்தலை ஆறு என்று அந்தக் கிராமத்து மக்களின் வாய்மொழியாக வழங்கப்படுகின்றன என்பதைத் தமிழ்ப் புதின வரலாறு கௌதம சன்னாவின் குறத்தியாறு என்ற ஆய்வேட்டின் வழி அறியமுடியும்.

மற்றொரு வரலாற்றுக் கதை திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகில் உள்ள ஒதப்பை என்ற கிராமத்தில் உள்ள மக்களால் சொல்லப்படுகின்றன. அவை “சிவ பெருமான் பார்வதியைக் குறத்தி வேடம் அணிந்து குறை கூடையுடன் சென்று கொசஸ்தலை ஆறு பாயும் ஒதப்பை கிராமத்தில் தண்ணீர் வாங்கிக் கொண்டு வரச் சொன்னாராம் அதை ஏற்ற பார்வதி குறத்தியாக மாறி தண்ணீர் வாங்கிக்கொண்டு திரும்பும் அந்த நேரத்தில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியதால் மறு கரைக்குச் செல்ல முடியாத பார்வதியைச் சிவபெருமான் அந்தக் கிராமத்திலிருந்து அங்கு வாழும் மக்களைத் தரிசிக்க வேண்டும் என்பதாகவும் வருடத்திற்கு ஒருமுறை உற்சவம் நடத்த வேண்டும் என சிவபெருமான் கூறியதாக” அந்த மக்களால் புராணக்கதை சொல்லப்படுகிறது. குறத்தியம்மனுக்கு இந்தக் கிராமத்தில் சிலை வைத்துக் கோயில் எழுப்பப்பட்டிருப்பது மேலும் சிறப்பாகும். இதுபோன்ற பல்வேறு கதைகள் ஆறு பாயும் பகுதிகளில் வாழக்கூடிய மக்களால் சொல்லப்பட்டு வருகின்றன.

கொற்றலை ஆறு காட்டும் தமிழர் வாழ்வியல்:
இந்தியத் தொல்லியல் துறை வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தைக் கொற்றலையாறு பிடித்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வேலூர் மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றிலிருந்து கிளை ஆறாகப் பிரிந்து செல்லும் ஆறு கொற்றலையாக மாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

கொற்றலை ஆறு பாயும் பூண்டிக்கு அருகில் தொல் மனிதர்கள் வாழ்ந்த பழமைவாய்ந்த பகுதிகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிகளில் பழைய கற்கால ஆயுதங்கள் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் பழைய கற்காலப் பண்பாட்டை, ‘சென்னைக் கைக் கோடாரி தொழிற்கூடம்’ (MADRAS HAND AXE INDUSTRY) எனக் குறிப்பிடுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

தொல்பழங்கால மனிதர்கள் வாழ்ந்திருப்பதும் ஆறு ஓடும் பகுதிகளில் கற்காலக் கருவிகள் கிடைப்பதும் மேலும் கொற்றலையாற்றுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைகிறது.

FATHER OF THE PRE- HISTORY OF INDIA எனப் போற்றப்படும் ROBERT FOOTE தனது நினைவேட்டில் (GSI MEMOIR - 1873) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அவை,

“இந்தக் கொற்றலை ஆற்றின் கழிமுகப் பகுதி, சிற்றாறுகளால் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. முற்காலத்தில் ஓச்சேரி பகுதியிலிருந்து, பாலாறு வடகிழக்காகப் பாய்ந்து புலிகாட் ஏரியில் சங்கமித்திருக்க வேண்டும். இன்றைய ஆரணியாறு, கொற்றலை ஆறு, கூவம், அடையாறு போன்றவை பாலாறு மற்றும் கிளை நதிகளின் தொல் தடங்களாக இருக்கக் கூடும்” எனும் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்தினை அடியொற்றி ‘பாதை மாறிய பாலாறு’ எனும் தலைப்பில் சிங்கநெஞ்சன் எழுதிய கட்டுரை   தினமணியில்  (23.07.2005) அன்று வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாக,
தமிழ்ச் சிற்றிலக்கிய வகையான கலிங்கத்துப்பரணியில் அன்றைய காலகட்டத்தில் பாய்ந்த பாலாறு, குசைத்தலை, முகரி, கொல்லி, பெண்ணை, வயலாறு, மண்ணாறு, பேராறு, கோதாவரி, கம்பை, கோதமை போன்ற ஆறுகளைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆற்றுவளம் நிறைந்த நாடாகத் தமிழகம் திகழ்ந்ததை இதன்வழி அறியலாம். குசைதலை ஆற்றைக் கடந்து குலோத்துங்கன் கலிங்க நாட்டோடு போர் புரியத் தனது படைகளோடு செல்கிறான் என்ற பதிவு இடம்பெறுகிறது. குசைத்தலை எனும் ஆறு கொற்றலை ஆறு, குறில்தலையாறு, குறத்தியாறு என மருவியதை அறியலாம். தற்காலத்தில் தோன்றிய குறத்தியாறு எனும் காப்பிய நாவலில் கொசஸ்தலை ஆறு தோன்றிய வரலாற்றை மக்கள் வாழ்வியலோடு பல நாட்டுப்புறக்கதைகளை இணைத்துக் கூறுகின்றனர் என்பது புலனாகிறது. கொற்றலை ஆறு பாய்கின்ற பகுதியில் தொல் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் காணப்படுவதோடு ஏராளமான கற்கருவிகள் கிடைப்பது தொல்லியல் ஆராய்ச்சியில் கொற்றலை ஆறு நீங்காத இடம்பிடித்திருப்பதை உணரலாம். கலிங்கத்துப்பரணி காட்டும் கொற்றலையாறு செழிப்பு வாய்ந்ததாக விளங்கியதோடு அக்காலத்தில் பல ஆறுகள் ஓடின. இன்றும் அந்த ஆறுகள் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன. இயற்கையைப் போற்றி, நீர் மேலாண்மையை முறையாகப் பராமரித்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, தமிழகத்தில் பாய்கின்ற ஆறுகளை முறையாகப் பாதுகாக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.


துணை நின்ற நூல்கள்:
1. புலியூர்க் கேசிகன், கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை, முதற்பதிப்பு - 2014.
2. கௌதம சன்னா, குறித்தியாறு, கிழக்கு பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை, இரண்டாம் பதிப்பு – 2014.
3. இரா. சந்திரசேகரன், தமிழ்ச் சிற்றிலக்கியங்கள், நாம் தமிழர் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை, முதற்பதிப்பு – 2012.

ஆய்வேடு:
1. மு.முத்தரசு, தமிழ்ப் புதின வரலாறு : கௌதம சன்னாவின் குறத்தியாறு, ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 2018.



 ________________________________________________________________________
தொடர்பு:
மு.முத்தரசு
ஆய்வியல் நிறைஞர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை – 600 005