Tuesday, February 2, 2016

கடைவெண் மலைக் கோட்டு நடுகல்

--சேசாத்திரி சிறீதரன்.


படம் உதவி: Arunkumar Pankaj
இந்தச் சிலை கச்சிராப்பாளையம் அருகில் வேடியப்பன் என்ற பெயரில் வழிபடும் நடுகல் ஆகும்.
"கடைவெண் மலைக் கோட்டு வேட்டுவரு இருவாய் தொளுக் கொண்டு பட்டான் கம்பாடரு மகன் சாமிக்கல்" - by   Arunkumar Pankaj
 நடுகல் தரும் செய்தி கடைவெண்மலைக் கோட்டு வேட்டுவருடைய இருவாய் (மலைப்பறவை) கூட்டத்தை (தொறு) கைப்பற்றி வீரசாவடைந்த கம்பாடர் என்பானுடைய படையாள் நினைவில் எழுப்பப்பட்ட வழிபாட்டுக்கல் என்பதே. தொறு அடிமைப்படுத்திய (tamed) என்ற பொருளில் இங்கு வழங்குகிறது. ஆநிரையை இச்சொல் இக்கல்வெட்டில் குறிக்கவில்லை

இந்நடுகல் இறந்தவர் நினைவில் வழிபாட்டுக் கல்லாக வைக்கப்பட்டுள்ளதால் இறந்தவர் உட்பட எவருடைய பெயரும் இதில் குறிக்கப்படவில்லை. குறிப்பாக வேந்தர், மன்னர், அதியரைசர் அவர்க்கு  சேவர் கோன் என எவர் பெயரும் இடம்பெறவில்லை. கம்பாடர் என்பது சிலம்பத்தில் வல்லவர் எனப்பொருள்படும். அது ஆள் பெயர் அல்ல  என்பது தெளிவு. சிலம்பாட்டம் > கம்பாட்டம்.

இன்று காடைக் கோழி வளர்ப்பு போல வேட்டுவர் இருவாய் எனும் பறவையை உணவு முதலானவற்றுக்கு வளர்த்திருக்க வேண்டும். அதைத் தான் வழிபடுநடுகல் மறவர் தம் கூட்டத்தாரோடு சென்று கவர்ந்து வந்துள்ளார். இவ்வினையில் ஈடுபட்டபோது இந்த நடுகல் மறவர் வேடுவரின் தாக்குதலுக்கு ஆட்பட்டு இறந்துள்ளார் என்றாலும் இவருடன் சென்ற கூட்டத்தார் தம் கொள்ளைவினையில் வெற்றிபெற்றனர்.

தமிழில் சாமி என்ற சொல் தெய்வத்தைக் குறிக்கும் ஆனால் சமற்கிருதத்தில் சுவாமி தலைவன் என்று பொருள்படும். சாமி என்ற தமிழ்ச் சொல் சுவாமி என்ற சமற்கிருத சொல்லில் இருந்து தான் வந்தது என்கின்றனர். ஆனால் எளியோரின் கல்வெட்டில் சுவாமி > சாமி என்ற சமற்கிருத சொல் இடம்பெறுவது இயலாதது. ஆதலால் 7 ஆம் நூற்றாண்டின் இக்கல்வெட்டில் இச்சொல் இடம்பெறுவது "சாமி" என்ற சொல் சமற்கிருத சுவாமி என்ற சொல்லில் இருந்து வந்ததல்ல என்று தெளிவாக்குகிறது.



___________________________________________________________
 

சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
___________________________________________________________
 




Monday, February 1, 2016

சேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


-- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.


தொல்லியல் படிவம்:
சேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

கண்டுபிடித்தவர்: 
தொல்லியல் முனைவோர்  திரு. ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

இடம்:
சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு அருகே உள்ள நத்தக்கரை கிராமம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே உள்ள வரலாற்று புகழ் மிக்க ஊர் ஆறகளூர். இந்த ஊருக்கு வடக்கு பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் நத்தக்கரை.

கல்வெட்டு:

நத்தக்கரையில் வசிக்கும் தலைமை ஆசிரியர் மனோகரன் என்பவரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் 85 செ.மீ நீளமும், 45 செ.மீ. அகலமும் உள்ள கற்பலகையில் இரு புறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது

இக்கல்வெட்டு கி.பி.1585 ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.

ஆறகளூரில் உள்ள காமநாகேஸ்வரர் கோயிலில் உள்ள பெரியநாயகிக்கு, நத்தக்கரை கிராமம் நாயக்க மன்னர்களால் ஆற்றூர் (தற்போதைய ஆத்தூர்) நட்டவாரிடம் தானமாக தாரை வார்த்து வழங்கப்பட்டது என கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேலும், இக்கல்வெட்டு குறிப்பிடும் தானத்தை அழிவு செய்வோர் கங்கை கரையிலே சினைப் பசுவை கொன்ற பாவத்திற்கு உள்ளாவார்கள் என கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டை நாட்டவர்கள் சொல்ல ஆற்றூரை (தற்போதைய ஆத்தூர்) சேர்ந்த நாட்டு கணக்கணான காமீஸ்வரன் பொறித்துள்ளார் என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

தலைவாசலுக்கு கிழக்கு, நாவல்குறிச்சிக்கு தெற்கு, பெரியேரிக்கு மேற்கு, இடைப்பட்ட நத்தகரை கிராமம் என கிராமத்தின் நான்கு எல்லைகளையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

11 ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஆறகளூர் மகதை நாடு என்ற குறுநில நாட்டின் தலைநகராய் இருந்தது.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் தளபதியாய் இருந்த பொன் பரப்பின வாணகோவரையன் என்பவர் ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளார். சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு, நாயக்கர்கள் கீழ் ஆட்சி நடந்துள்ளது.

எனவே, ஆறகளூரை சுற்றி உள்ள பகுதிகளில் இன்னும் புதிய கல்வெட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆய்வாளர்கள்:
கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், மங்கை வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு இந்த கல்வெட்டை ஆய்வு செய்தது

படங்கள்:  




___________________________________________________________
 

தொல்லியல் முனைவோர்
திரு. ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
ponvenkatesan64@gmail.com
___________________________________________________________
 



காந்தித்தாத்தா

-- கவிஞர் ருத்ரா. 


 ஓவியம்: ஓவியக் கவிஞர் ரவி சுப்பிரமணியன் 

 
காந்தித்தாத்தா
என்ற சொல்
முள்ளுமுனையில் கூட‌
மூணு குளம் வெட்டும்.
மூணு குளமுமே
பாழ் என்றாலும்
வெட்டிய இடம் எல்லாம்
அவர்
ரத்தமும் வேர்வையும் தான்.
சுதந்திரத்தை வாங்க‌
அடிமைத்தனத்தை
பண்டமாற்றம் செய்யச்சொன்னார்.
அப்படி மாற்றப்பட்டதை விடவும்
மாட்டிக்கிடந்ததே 
நமக்கு பரம சுகம்.

கத்தியின்றி ரத்தம் இன்றி
யுத்தம் புரிவதன் உருவகமே
அந்த அண்ணல்!
உருவமே 
மூளியாய் நின்றவர்களுக்கு
கத்தியும் புரியவில்லை
ரத்தமும் புரியவில்லை.
அதனால்
நம் ரத்தமே நமக்கு 
தர்பூஸ் ஜூஸ்.
நம் அன்னையர்களே
நம் அண்ணன்களே
நமக்கு கைமா.
கள்ளு வேண்டாம் என்று
தென்னைகளை வெட்டிச்சாய்த்த‌
சினத்தின் எரிமலைகள் தான் நாம்.
இப்போது 
ஃபாக்டரியும்
ரசம் நுரைக்கும்
கலர் கலர் கண்ணாடி பாட்டில்களுமே
நம் சாம்பல் மேடுகள்.
மூடி கடித்து கழற்றி யெறி.
சீசாவை கூசாமல் 
வயிற்றுக்குள் கவிழ்.
சைடு டிஷ்?
அதோ
வாக்காளர் பட்டியலில்
வெயிட்டாக‌
"காந்தியின் புன்னகை"
அமரர் ஆனவர்
ஏன் கொச்சைப்படுத்தினீர்
என்று
கோர்ட்டுக்குப் போனாலும் போகலாம்.
கோடிக்கணக்கான‌
நம் நிலுவை கேஸ்களில்
ஆவியாக போனவற்றில்
இந்த ஆவியும் ஒன்றாக இருக்கலாம்.
எழுந்து நில்லுங்கள்.
அந்த "மகான் கேட்கவில்லை"
கேட்பது
அந்த பீரங்கிக்குண்டுகள்!
தந்தையே
உனக்கு சிரம் தாழ்த்துகிறோம்.
அப்போது தான் மண்ணின் அடியில்
நீ 
இன்னும் அந்த 
புழுக்களுக்கு உன்னை
புசிக்கக்கொடுப்பதை
பார்க்க முடிகிறது.
எங்கள் கண்கள் கசிகின்றனவே!
 
 

___________________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
___________________________________________________________
 

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 9

-செல்வன். 





பேரா யூகோ: வெற்றிபெற மற்ற சாதியினரின் ஓட்டுக்களும் வேண்டும். அது விடுதலைச் சிறுத்தைகள் அல்லது புதிய தமிழகம் என எக்கட்சியாக இருப்பினும் சரி. நீங்கள் இப்போது தமிழ் தேசியத்தைப் பற்றி அதிகம் பேசி தலித் அல்லாதவர்களைக் கட்சியில் சேர்த்துப் பொறுப்புக்களை வழங்குகிறீர்கள். இது குறித்து கொஞ்சம் கூறமுடியுமா?

சன்னா: நீங்கள் சொன்னதுபோல தமிழகத்தில் மக்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் என்றால் தலித் கட்சி என மட்டுமே நினைக்கிறார்கள். அம்பேத்கரின் எழுத்தைப் பார்த்தால் அவர் தலித்துகளை "பெரும்பான்மை, ஆனால் சிதறிய பெரும்பான்மை" எனக் குறிப்பிடுகிறார். நாடு முழுக்க பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் (தொகுதி, ஊர், நகரம்) என்பது போன்ற சிறிய வட்டங்களில் பார்த்தால் அவர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். ஆகத் தொகுதி என வருகையில் அவர்கள் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். இந்திய அளவில் தலித்துகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் சிறிய கட்சிகளாகவே இருக்கமுடியும். இத்தகைய ஒட்டுவங்கியை வைத்துக்கொண்டு தலித் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இது நடக்கவேண்டுமெனில் மேலும் பல வேலைகளை நாம் செய்யவேண்டும். அதே சமயம் தலித்துகள் பெரும்பான்மை சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்றால் அவர்கள் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உதாரணமாக அம்பேத்கர் துவக்கிய "சுதந்திர தொழிலாளர் கட்சியில்" தலித்துகளும், தலித் அல்லாதவர்களும் இருந்தார்கள். அதன்பின் அவர் அதை "எஸ்.சி தொழிலாளர் அமைப்பாக" மாற்றுகிறார். எஸ்.சி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தவுடன் அவர் தலித்துகளை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியபின்னரே மற்றவர்களுடன் அவர்களை இணைந்து பணியாற்றவைக்க முடியும் என நம்பினார். இதன்பின் இந்திய குடியரசுக் கட்சிக்கான ஆலோசனையை அவர் முன்வைக்கிறார்.

இந்த வேறுபாடுகளைப் பார்க்கவும்: முதலில் சுதந்திர தொழிலாளர் கட்சி. அதன்பின் எஸ்.சி தொழிலாளர் அமைப்பு, அதன்பின் இந்திய குடியரசுக்கட்சி. ஆக அவர் முதலில் ஒரு பொதுவான அடையாளத்தை அமைக்க முயன்றார். அது வெற்றியடையவில்லை. அதன்பின் சாதி அடையாளத்தை உருவாக்குகிறார். அது ஒரு அளவு வெற்றியும் பெறுகிறது. ஆனால் சாதிய அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் அதுவே ஒரு தடைக்கல்லாக மாறும் என்பதை உணர்ந்து இந்திய குடியரசுக்கட்சி எனும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறார். இதுபோன்ற சிந்தனைகளை அனைத்து இந்திய கட்சிகளிலும் காணலாம். பலவிதங்களில் அவர்கள் இதேபோன்ற உத்திகளைக் கையாண்டார்கள். தமிழ்நாட்டில் முதலில் ரிபப்ளிக்கன் கட்சி உருவானது, அதன்பின் ஆதிதிராவிடர் கட்சிகள் உருவாகின, அதன்பின் பள்ளர்களுக்கான இயக்கம், பறையர்களுக்கான இயக்கம், அருந்ததியினருக்கான இயக்கம் ஆகியவை உருவாகின. இப்படி உருவானபின் கொஞ்ச காலம் இயக்கங்களாக அவை தொடர்கின்றன. ஆனால் சாதி அடிப்படையும் மட்டுமே அவற்றால் இயங்கமுடியாது என வருகையில் அவை விடுதலைச் சிறுத்தைகள். புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி என்பது போன்ற கட்சிகளாக உருவெடுக்கின்றன. பொதுவான பெயர்களில் கட்சிகளைத் துவக்கி, பொதுமக்களைத் திரட்ட முயலுகையில் பொதுவான ஒரு காரணியை வைத்தே அணுக முடிகிறது. இதுவே நல்ல வாய்ப்பு என்பதால் தமிழ் தேசியம் என்பது மக்களைத் திரட்டும் மிக நல்ல ஒரு அடித்தளமாக அமைகிறது. இதனால் பல தலித் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை முன்வைக்கின்றன. பொதுவான அடையாளத்தைத் தேடும் முயற்சியின் ஒரு பகுதியே இது எனக் கூறலாம். அதே சமயம் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட போது அனைவரும் அவர்களுக்காகக் குரல் கொடுத்தாலும், ஒடுக்கப்பட்டவர்கள் எனும் அடிப்படையில் தலித்துகள் அவர்களுக்குக் குரல் கொடுத்தபோது அதில் இருந்த உணர்ச்சிகரமான பிணைப்பு மற்ற கட்சிகள் குரல் கொடுத்தபோது இல்லாமல் போனது. இங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தலித்துகள், அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தமிழர்களில் 80% எனக் கூறலாம்.புலிகள், புலிகள் அல்லாதவர்கள் என அனைத்துத் தமிழருமே அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தார்கள்.

சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்வைத்தபோது அதேபோன்ற ஒரு பொதுவான அடையாளத்தை தமிழ்த்தேசியம் இங்கேயும் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தலித்துகள் தமிழ் தேசியத்தைக் கையில் எடுக்கிறார்கள். தமிழ்த் தேசியம் தலித்துகளுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமா என்ற கேள்வி இருந்தாலும் அது பொதுவான அடையாளத்தை நோக்கி நகரும் ஒரு முயற்சியே ஆகும். இது ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால் சாதி உணர்வுகள் குறைந்து, சாதிய அரசியலும் குறைந்து உண்மையான ஜனநாயகம் மலரும். இந்த அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

இதைச் சொல்கையில் தமிழ்த் தேசியம் பேசும் பிற அமைப்புகளைச் சந்தேகத்துடன் பார்த்து அவை எந்த அளவு இதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டி உள்ளது. அவ்வமைப்புகள் அரசியலில் இறங்கியபின்னரும் தமிழ் தேசியம் பேசுகிறார்கள். அரசியலில் இறங்கியபின்னர் தமிழ்த் தேசியம் பேசும் அவசியம் இல்லை எனும் நிலையிலும் அவர்கள் இதைப் பேசுவது நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ்த் தேசியம் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு அங்கீகாரத்தையும் மக்களின் ஏற்பையும் பொதுவான அரசியல் தளத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இது அங்கீகாரமும் பெற்றுள்ளது.

1998ல் இருந்து 2008ம் ஆண்டுவரை அவர்கள் தமிழ்த்தேசியத்துடன் ஒடுக்கப்பட்டவருக்கான தலைமையைக் குறித்தும் பேசினார்கள். தொழிலாளர் இயக்கங்கள் எப்படிப் பிற தொழிலாளரைத் தலைமை தாங்க அழைத்தார்களோ அதே போல ஒடுக்கப்பட்டவரே ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவராக இருந்து தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும். அந்தக் காலகட்டத்தில் சில இடைநிலை சாதிகளும் இவ்வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தலித் தலைமையை பற்றிப் பேசினாலும் கட்சியில் தலித் அல்லாதவர்கள் இல்லை. இதைப்பற்றிப் பேசினாலும், பேசாவிட்டாலும் கட்சியில் தலித்துகளே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கட்சியை ஜனநாயகப்படுத்தி, தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ள தலித் அல்லாதவர்களைக் கட்சிக்கு கொண்டுவந்தாலே தலித்களின் தலைமை என்பது சாத்தியப்படும். இந்த அடிப்படையில் தான் அவர்கள் 2008ம் ஆண்டு ஒரு கொள்கையை முன்வைக்கிறார்கள்

பேரா யூகோ: வேளச்சேரி (விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைமையகம்) பிரகடனமா?

---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---
 
 
 

___________________________________________________________

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________