Wednesday, December 9, 2015

பட்டணத்தில் தாய்த்தெய்வச்சிற்பம்


--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
 
நெகமத்துக்கு அருகில் அமைந்துள்ளது பட்டணம் என்னும் சிற்றூர். இவ்வூரில் கிடைத்த ஒரே ஒரு கல்வெட்டு ஆதாரத்தைக்கொண்டு இவ்வூர் இருநூற்று அறுபது ஆண்டுப்பழமை வாய்ந்தது என்றும், அது ஒரு வணிக நகரமாக விளங்கியது என்றும் அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, அங்கு ஓர் அரிய தாய்த்தெய்வ நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த, வரலாற்று ஆர்வலர் ருத்திரன் என்பவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் நேரில் சென்று அந்தச் சிற்பத்தை ஆய்வு செய்தார்.



பட்டணத்தில், நல்லட்டிபாளையம் பிரிவுச் சாலையோரத்தில் செடிகளுக்கிடையில் காணப்படுகின்ற அந்தச் சிற்பமானது, பெண்ணொருத்தி தன் வலக்கையில் குழந்தையை அணைத்துப்பிடித்தவாறு அமைந்துள்ளது. பெண்ணின் இரு புறமும், இரு எருதுமாடுகள், தம் தலைகளைக் கீழ்நோக்கிச் சாய்த்தபடி,  கொம்புகளை உயர்த்தி அந்தப்பெண்ணின் இடைப்பகுதியில் குத்துவதைப்போல் காணப்படுகின்றன. அப்பெண், தன் கூந்தலில் வலப்புறமாகக் கொண்டை போட்டிருக்கும் தோற்றம். காதுகளில், காதணிகள் உள்ளன. ஆனால், கழுத்தில் அணிகள் எவையும் காணப்படவில்லை. கைகளில் ஒன்றில் மட்டும் வளைகள் காணப்படுகின்றன. இடையிலிருந்து கணுக்காலுக்குச் சற்று மேலே வரை ஆடை, மடிப்புகளோடு காணப்படுகிறது.  சிற்பத்தின் பீடப்பகுதியில் எழுத்துகள் தெரிந்ததால், சிலையை நன்கு தோண்டி நிற்கவைத்துப் பார்த்ததில் மூன்று வரிகளில் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. எழுத்துகளைப்படித்த வாசகம் பின்வருமாறு:
குறோதி வருசம் அற்ப்பிசை மீ (மாதம்) 9 உ (தேதி)
முத்திலிவாட செட்டி உபையம்


அதாவது, தமிழ் ஆண்டான குரோதி வருடத்தில், ஐப்பசி மாதத்தில் ஒன்பதாம் தேதி, முத்திலிவாட செட்டி என்பவரால் இச்சிற்பம் உபையமாகச் செய்து தரப்பட்டது எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. எழுத்தமைதியை வைத்துப் பார்க்கும்போது குரோதி வருடம், கி.பி. 1724 அல்லது கி.பி. 1784 ஆண்டுகளோடு பொருந்தி வருகிறது. ஐப்பசி மாதம், செப்டம்பர், 1724 அல்லது அக்டோபர், 1784 என்னும் காலக்கணக்கீட்டுடன் பொருந்தி வருகிறது.

ஏறத்தாழ, இருநூற்றைம்பது ஆண்டுகள் பழமை கொண்ட இச்சிற்பம், கோவைப்பகுதியில் கிடைத்துள்ள அரிய சிற்பமாகவே கருதப்படவேண்டும். ஏனெனில், எழுத்துப்பொறிப்புகளோடு உள்ள நடுகல் சிற்பங்கள் இப்பகுதியில் காணக்கிடைப்பது மிகவும் அரிது. மேலும், இறந்துபட்ட வீரனோடு தானும் மாய்ந்துவிட்ட பெண்ணுக்கு எடுக்கப்பட்ட “மாசதிக்கல்”  என்னும் நடுகல் கோவைப்பகுதியில் காணப்பட்டாலும், குழந்தையோடு உள்ள தாய்ப்பெண்ணுக்கு எடுக்கப்பட்ட நடுகல் இதுவரை கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இவ்வூர் மக்கள், இந்தச் சிற்பத்தைப்பற்றி ஒரு செய்தி சொல்கிறார்கள். கருவுற்ற ஒரு பெண், மாடு முட்டியதால் இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது போன்ற, மக்களிடையே வழங்கும் கதை மரபும் இச்சிற்பத்தின் உண்மைப் பின்னணியைத் தெரிந்துகொள்ள உதவும் சான்றுகளில் ஒன்று. இந்தச் சிற்பத்தின் ஒளிப்படத்தைப் பார்த்த தொல்லியல்  ஆய்வாளரான,  சென்னை சு.இராசகோபால் அவர்கள், இச்சிற்பம், தாய்த்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கலாம் எனக்குறிப்பிடுகிறார்.

தாய்த்தெய்வ வழிபாடு தமிழ்நாடெங்கும் வழக்கில் உள்ள ஒன்றுதான். தாய்த்தெய்வ வழிபாட்டின் தாயகம் இந்தியா என்னும் கருத்து நிலவுகிறது. சிந்துவெளியில், கருத்தாங்கிய நிலையில் சில தாய்த்தெய்வங்களின் வடிவங்கள் கிடைத்துள்ளதாக அறிகிறோம். கருவுற்ற நிலையில் கொல்லப்பட்ட பெண் ஒருத்தி பொன்னரத்தா என்னும் அம்மன் வடிவில் தெய்வமாக, திருநெல்வேலி அருகே கடையம் ஊரில் வழிபடப்பெறுகிறாள். குமரி,நெல்லை,தூத்துக்குடி,விருதுநகர்,சிவகாசி ஆகிய மாவட்டங்களில் கிராம தேவதையாக பேச்சியம்மன்(பேய்ச்சியம்மன்), இசக்கியம்மன் ஆகிய தெய்வங்கள் வணங்கப்படுகின்றன. இவ்வகைக் கோயில்கள் சிலவற்றில், இத்தெய்வங்கள் கைகளில் குழந்தை வைத்திருப்பதைக் காணலாம். மதுரை, வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயிலில், பேச்சியம்மன் கையில் குழந்தையுடன் ஆறடி உயரத்தில் இருப்பதைக் காணலாம். பேச்சியம்மனுக்கு மரத்தொட்டில், மரப்பாச்சி பொம்மை ஆகியவற்றைக் காணிக்கையாகக்கொடுத்து, பிள்ளைப்பேற்றுக்காக வேண்டிக்கொள்கிறார்கள். இசக்கி என்பது ‘இயக்கி’ என்பதன் திரிபு என்றும், சமணத் தீர்த்தங்கரர்களின் பரிவாரத்தெய்வங்களுள் ஒன்றான ‘யக்‌ஷி’ யான அம்பிகா என்னும் தெய்வத்தையே கிராமங்களில் இசக்கியாக வழிபடுகிறார்கள் என்னும் கருத்து நிலவினாலும், கொலையுண்ட அல்லது தற்கொலை புரிந்துகொண்ட பெண்கள் இசக்கி என்னும் தெய்வமாகிறார்கள் என்னும் கருத்தும் வலுவாக உள்ளது. இசக்கியின் உறைவிடம் கள்ளிமரம் எனக்கூறப்படுகிறது.  நீலி என்று கூறப்படும் பெண்தெய்வம் இந்த இசக்கிதான் எனக்கூறப்படுகிறது.


செட்டி நாட்டில், பூமணத்தாள், அக்கினியாத்தாள்,  டைக்கம்மையாத்தாள்,   மெய்யம்மையாத்தாள் ஆகிய தெய்வங்கள்  வணங்கப்படுவதாகவும், அவற்றில் பல தெய்வங்கள்  கையில் குழந்தையுடன்   காணப்படுவதாகவும் அறிகிறோம்.

இத்தெய்வங்களுக்குப் படையல்  இட்டு  வழிபடுவதால், ஒவ்வொரு கோயிலையும் ”படப்பு”  என்னும் பெயரிலேயே குறிப்பிடுகிறார்கள்.  வழிபடப்படும் தாய் பற்றிய கதைகள், அவளை அகால மரணமடைந்தவளாகச் சொல்கின்றன. கணவனால் ஒதுக்கப்பட்டு, கர்ப்பிணியாகவோ, குழந்தையுடனோ தனித்துச் சென்றபோது நிகழ்ந்த மரணமாக இருக்கலாம். கள்ளர்களாலும், விலங்குகளாலும் மரணம் நிகழ்ந்திருக்கலாம். கருவுற்றபெண், கருக்குழந்தையோடு இறந்துபோகும் சூழ் நிலையில், வயிற்றைக்கிழித்துக் குழந்தையை எடுத்து, இரண்டு உடல்களையும் ஒன்றாகப்புதைத்தபின் அப்பெண்ணைத் தெய்வமாக வணங்குகிறார்கள் என்பது குமரி மாவட்டத்தில் நிலவும் கதை.

மேலே கூறப்பட்ட நாட்டார் வழக்குகள் எல்லாம், கருவுற்ற நிலையில் அகால மரணம் எய்திய பெண், தெய்வமாக வழிபடப்பெறுகிறாள் என்பதை உறுதி செய்வதால், பட்டணத்தில் நாம் புதிதாகக் கண்டறிந்த தாய்-குழந்தை சிற்பமும், ஊர் மக்கள் வழங்கும் கதை மரபோடு சேர்த்து ஆய்வு செய்யும்போது, கருவுற்ற பெண் அகால மரணம் ( இங்கே விலங்கால் மரணம்) அடைந்ததால் நினைவுக்கல் ( நடுகல் ) எடுக்கப்பட்டுள்ளது எனக்கருதலாம்.

கருவுற்ற  நிலையைச் சிற்பத்தில் குறிப்பாகக் காட்டவே, கையில் குழந்தையைச் செதுக்கியுள்ளார்கள் எனக் கருதுவதில் தவறில்லை.

சிலையை ஒரு செட்டி உபையமாக அளித்திருப்பதால், வணிக நகரமாக இருந்த பட்டணத்தில் வணிகரின் குலதெய்வ வழிபாட்டின் எச்சமாக இச்சிற்பத்தைக் கருதவாய்ப்புண்டு. இது போன்ற பல வரலாற்று யூகங்களுக்கு இடமளிக்கும் இச்சிற்பத்தைத் தொல்லியல் துறையினர் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் புதிய செய்திகள் கிடைக்கக்கூடும்.





ஆசிரியரின் நன்றி :
தாய்த்தெய்வ வழிபாடு பற்றிய பல செய்திகள் தந்த திரு சு.இராசகோபால், தொல்லியல் துறை அறிஞர்,  சென்னை  அவர்களுக்கு.


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
 
 
 

சேவலும் ஒரு துறவியும்


-செல்வன்.

பெர்னான்டோ லோபஸ்: உலகின் முதல் ராபின்சன் க்ருசோ
இந்த வரலாறு இந்தியாவில் துவங்குகிறது.
கிபி 1512ம் ஆண்டு. போர்ச்சுகீசியர் இந்தியாவில் நுழைந்து கொச்சியை தம் கட்டுபாட்டில் கொண்டு வந்திருந்தாலும் ஒரே துறைமுகத்தை நம்பியிருக்க முடியாது என சொல்லி மராட்டிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிஜபூர் சுல்தான் ஆதிக்கத்தில் இருந்த கோவா எனும் ஊரை பிடித்தார்கள்.
இதனால் கோபம் அடைந்த சுல்தான் அதில்ஷா பவுலூத் கான் எனும் தளபதி தலைமையில் ஒரு படையை அனுப்பினார். பவுலூத் கானும் கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள பனஸ்டாரிம் எனும் சிற்றூரை பிடித்து கோட்டையை கட்டினார். அதன்பின் "இத்தனை கஷ்டபட்டு கோட்டையை கட்டிவிட்டு போர் எதுக்கு? நாம் இந்த ஊருக்கு ராஜாவாகிடலாம்" என சொல்லி அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.
இதனால் மேலும் கோபமடைந்த சுல்தான் அதில்ஷா ரசூல்கான் எனும் தளபதி தலைமையில் இன்னொரு படையை அனுப்பினார். ரசூல்கான் "துரோகியை விட எதிரியே மேல்" என சொல்லி போர்ச்சுகிசிரியரிடம் "எங்களுக்கு பனஸ்டாரிமை பிடிக்க உதவுங்கள். உங்களுக்கு கோவாவை வைத்துகொள்ள அனுமதிக்கிறோம்" என பேரம் பேசி போர்ச்சுகீசியர் உதவியுடன் பவுலூத்கானை அடித்துவிரட்டி பனஸ்டாரிமை பிடித்தார்.
அதன்பின் உதவிக்கு வந்த போர்ச்சுகிசிய தளபதி பெர்னார்ன்டோ லூபாஸ் தலைமையிலான படை பனஸ்டாரிமில் தங்கியது. எதிர்பாராவிதமாக பெர்னார்டோ லூபாஸ் இஸ்லாமை தழுவ அதன்பின் போர்ச்சுகிசிய படை முழுக்க ரசூல்கான் தலைமையில் சேர்ந்து உள்ளூர் முஸ்லிம் பெண்களை மணந்து அதில் பலர் மதம் மாறியும் விட்டார்கள். இதன்பின் பெர்னார்டோ லூபஸ் உதவியுடன் ரசூல்கான் கோவா மேல் படை எடுத்தார். கோவாவில் படைகளே சுத்தமாக இல்லை எனும் நிலையில், கோவா கோட்டை தடுமாறிக்கொண்டிருந்தது. உணவு சப்ளை துண்டிக்கபட்டு கோட்டை கடும் முற்றுகைக்கு ஆளானது.
இந்த சூழலில் கொச்சினில் இருந்த போர்ச்சுகிசிய தளபதி அல்பான்சோ ஆல்பர்கிகிக்கு தகவல் பறக்க அவர் கப்பலேறி கோவா வந்தார். அவரிடம் 30 காலாட்படை வீரர்களே இருந்தார்கள். ஆனால் ஏதோ மிகப்பெரும் படை வருகிறது என அஞ்சி ரசூல்கான் முற்றுகையை கைவிட்டுவிட்டு பனஸ்டாரிம் கோட்டைக்கு ஓடினார். மீதமிருந்த கோவா படைகளை அழைத்துகொண்டு பனஸ்டாரிம் கோட்டையை முற்றுகை இட்டார் அல்பான்சோ. ஆனால் கோட்டையை கைப்பற்றும் அளவு அவரிடம் படைபலம் இல்லை. "சரி நாளை காலை கோவாவுக்கு போய்விடலாம்" என அவர்கள் முடிவெடுக்கையில் வெள்ளைக்கொடியை ஏந்தி சரணடைய தூதனுப்பினார் ரசூல்கான். அவரிடம் மங்களூரில் இருந்து மிகப்பெரும் போர்ச்சுகிசிய படை வருவதாக தவறான தகவல் போயிருந்தது. சுல்தான் அதில்ஷாவிடன் உதவி கேட்டு அனுப்பியிருந்தபோதும் அது குறித்து எத்தகவலும் இல்லை. அதனால் சரண்டைய முடிவெடுத்தார் ரசூல்கான்.
"கோட்டையை ஒப்படைத்துவிட்டு, உங்களுக்கு உதவிய போர்ச்சுகிசிய துரோகிகளை ஒப்படைத்தால் ரசூல்கான் மற்றும் படைகளை எதுவும் செய்வதில்லை" என்றார் அல்பான்சோ
"அவர்கள் எங்களை நம்பி வந்தவர்கள். அவர்களை கொல்லமாட்டோம் என ஆணையிடுங்கள்" என்றார் ரசூல்கான்
"சரி" என வாக்குறுதி கொடுத்தார் அல்பான்சோ
கோட்டை, ஆயுதம், பீரங்கிகளை எல்லாம் ஒப்படைத்துவிட்டு ரசூல்கான் வெளியேறி பீஜாபூர் நோக்கி போகையில் வழியே சுல்தான் அதில்ஷா அனுப்பிய மிகப்பெரும் படை வந்தது. ஆனால் இனி என்ன பலன்? சரணடைந்த செய்தியை அறிந்து கோபம் கொன்ட பீஜாபூர் படை ரசூல்கானை பிடித்து பிஜாபூருக்கு இழுத்து சென்றது
அதன்பின் கோட்டையில் துரோகம் செய்த பெர்னார்டோ லூபஸையும் பிற போர்ச்சுகிசியரையும் பிடித்து வந்து விசாரணை செய்தார்கள். கொல்லதானே மாட்டோம்?சித்தரவதை செய்யலாம் அல்லவா என சொல்லி மிக, மிக கடுமையான சித்ரவதைகள் அவர்களுக்கு நிகழ்த்தாப்ட்டது. பெர்னார்டோ லோபஸை கட்டி வைத்து மூக்கு, காது, ஒரு விரலை விட்டு இன்னொரு விரல் என வெட்டினார்கள். தலைமுடி மற்றும் தாடியை கடல் சிப்பிகளை வைத்து உரித்து எடுத்தார்கள். சித்ரவதை தாங்கமுடியாத போர்ச்சுகிசியர் பலரும் "எங்களை கொல்லுங்கள்" என கேட்டு உயிரை விட்டார்கள்.
ஆனால் பெர்னார்டோ லோபஸ் எப்படியோ சிதரவதைக்கு பின்னரும் உயிருடன் இருந்தார். வாக்குறுதிக்கு ஏற்ப அவர் கொல்லபடவில்லை. இதன்பின் போர்ச்சுகிசிய கப்பல் ஒன்றில் ஏறி போர்ச்சுக்கல் நோக்கி சென்றார் லோபஸ்.
நடுவே அட்லாண்டிக் கடலில் ஆப்பிரிக்காவுக்கு மேற்கே  உள்ள செயின்ட் ஹெலெனா (300 ஆண்டுகள் கழித்து நெப்போலியன் கைதியாக வைக்கபட்டு இருந்த இடம்) எனும் தீவில் கப்பல் நின்றது. அப்போது அந்த தீவில் யாருமே இருக்கவில்லை. 1502ம் ஆண்டுதான் அந்த தீவு கண்டுபிடிக்கபட்டு இருந்தது.
போர்ச்சுக்கல் போக விரும்பாத பெர்னார்டோ லோபஸ் செயின்ட் ஹெலெனா தீவில் இறங்கி வாழத் துவங்கினார். அத்தீவில் அவர் மட்டுமே 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராபின்சன் க்ருசோ போல வாழ்ந்தார். ஊனமுற்ற கைகளை வைத்து எப்படி வேட்டையாடினார், வீடு கட்டினார் என்பதே பெரும் வியப்புகுரிய விஷயம். அவருக்கு துணையாக அந்த 10 ஆண்டுகளும் கப்பலில் இருந்து அவருடன் வந்த ஒரு சேவல் மட்டுமே இருந்தது.


​
இதனிடையே தீவில் அடிக்கடி வந்து போன கப்பல்களில் இருந்தவர்கள் பெர்னார்டோ லோபஸை ஒரு சாமியார் எனக் கருதினார்கள். இத்தனை துன்பத்துக்கு ஆளாகியும் ஒரு மனிதன் போராடி வாழமுடியும் என்பதற்கு அவர் உதாரணமாக கருதபட்டார். வயது ஆக, ஆக பெர்னார்டோ லோபஸுக்கு இப்போது போப்பிடம் மதம் மாறியதற்கு பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கடைசி ஆசை மட்டுமே மீதமிருந்தது. அக்காலத்தில் மதம் மாறுவது பெரும்பாவமாக கருதபட்டு அதை மன்னிக்கும் அதிகாரம் போப்பிடம் மட்டுமே இருந்தது. போப்பும் அப்பாவத்தை ஈஸ்டர் திருநாள் அன்றுமட்டுமே மன்னிப்பார்.
அதனால் பயணிகள் சிலர் லோபஸை ரோமுக்கு அழைத்து சென்றார்கள். அவரது கதையை கேட்டு மனம் இறங்கிய போப் ஈஸ்டர் திருநாள் அன்று பொது இடத்தில் வைத்து பகிரங்கமாக அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என அறிவித்தார். அதன்பின் போர்ச்சுக்கல் மன்னருக்கு அத்தகவலை சொல்லி அனுப்பி அவரை தேசதுரோக குற்றத்துக்கு தண்டிக்கவேண்டாம் எனவும் லோபஸின் கடைசி ஆசைப்படி அவரை செயிண்ட் ஹெலெனா தீவில் வாழ அனுமதிக்கும்படியும் கடிதம் அனுப்பினார் போப்.
அதன்பின் செயிண்ட் ஹெலெனா சென்ற லோபஸ் அங்கே தனியாக 20 ஆண்டுகள் வசித்து உயிர்துறந்தார். அவர் இப்போது அத்தீவின் புனித துறவியாக கருதப்படுகிறார். அவர் நினைவிடம் சுற்றுலாதளமாகியுள்ளது.
படம்: சேவலுடன் செயின் ஹெலெனா தீவில் மூக்கு, கைவிரல்கள் இல்லாத
 பெர்னார்டோ லோபஸ்...... தபால் தலை



 

   
செல்வன்

 
holyape@gmail.com