Showing posts with label முனைவர். வீ. ரேணுகாதேவி. Show all posts
Showing posts with label முனைவர். வீ. ரேணுகாதேவி. Show all posts

Friday, April 26, 2019

உலகமயமாக்கல் சூழலில் தமிழில் வணிகச்சொற்கள்

——    முனைவர் வீ.ரேணுகாதேவி


          உலகமயமாக்கல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது அந்நாட்டு மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள், பேசும் மொழி ஆகியவற்றிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உலகமயமாக்கல் பற்றிய எந்த விவாதத்திலும் விவரணையிலும் பொருளாதார விவகாரங்களை விவாதித்தல் மிக முக்கியமான பகுதியாக உள்ளது. உலகமயமாக்கலின் மாறுதலுண்டாக்கும் சக்திகள் தற்காலச் சமூக வாழ்க்கையின் பொருளாதார, அரசியல், பண்பாடு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், மொழி என்னும் பரிமாணங்களுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன.

          தொழில்நுட்பத்தின் மீதும், அதன் விளைவாக உற்பத்தியாகும் வெகுஜனச் சந்தைப் பொருட்களின் மீதும் தீராத வெறி கொண்ட நிலை இன்று காணப்படுகின்றது. உலகமயமாக்கலின் காரணமாக வணிக நிறுவனங்களும், வணிகப் பொருட்களும் ஆங்கிலம் சார்ந்தே காணப்படுவதைப் பரவலாகப் பார்க்க முடிகின்றது.

          மதுரையிலிருந்து திண்டுக்கல்லை நோக்கிப் பயணம் மேற்கொண்டபோது இரு பக்கங்களிலும் கடந்து சென்ற கடைகளின் பெயர்களைப் பார்த்துக்கொண்டே செல்ல நேரிட்டது. அக்கடைகளில் காணப்பட்டப் பெயர்கள் 90 விழுக்காடு ஆங்கிலப் பெயர்களே.

          ஆட்டோ கன்சல்டிங், டூவீலர்  வாங்க விற்க, வர்ஷா டெய்லரிங், பேக்கரி ரூ ஸ்வீட்ஸ், கீர்த்தி செராமிக்ஸ், எக்ஸ்பிரஸ்  கார் வாஷ், கண்ணா காபி பார், இன்ஜினியரிங் ஒர்க்ஸ், சாய் கிரானைட், அம்மன் சிமென்ட் ஒர்க்ஸ், சரஸ்வதி மெஸ், ஹேர் ஸ்பெசாலிட்டி, சூப்பர் சிக்கன், ஜான்சிராணி காம்பிளக்ஸ், ராம்கோ சூப்பர் ஆப்டிக்கல்ஸ், ட்ரைவாஸ் எனப் பெயர்கள் ஆங்கிலத்திலும், ஒலிபெயர்ப்பிலும் எழுதப்பட்டிருந்தன.

          இன்று ஆங்கிலம் வணிகம் சார்ந்த இடங்களில்தான் மிக அதிகமாக இடம் பெற்றுள்ளது. திரைப்படங்கள் நடிகர்களுக்கு அளிக்கப்படும் பட்டங்கள், திரைத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்கள், தெருவில் காணப்படும் நிறுவனப் பெயர்கள் என அனைத்து இடங்களிலும் ஆங்கிலமே நீக்கமற நிறைந்துள்ளது.

திரைப்படப் பெயர்கள்:
          மம்மி, டாடி, யங் இந்தியா, ஜென்டில்மேன், ஒன்ஸ்மோர், பீட்சா, டூயட், லவ்பேர்ட்ஸ், மும்பை எக்ஸ்பிரஸ், பிரண்ட்ஸ் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.  தமிழக அரசு திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தல், வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ள போதும் இந்நிலைத் தொடரத்தான் செய்கின்றது.

திரையுலகில்:
          டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், வில்லன், டச் அப் மேன், டச் அப் வுமன், ஆர்ட் டைரக்டர், சினிமாட்டோகிராபர், சூட்டிங், ஸ்டோரி, டயலாக், ஸ்டார்ட், கட், மேக்கப், பிலிம், அவுட்டோர் யூனிட், என அனைத்தும் ஆங்கில மயமே.

நடிகர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற பட்டங்கள்:
          சூப்பர் ஸ்டார் ரஜினி, சூப்பர் ஆக்டர் கமல், ஆக்சன் கிங் அர்ஜுன், காமெடி கிங்,  எஸ்.வி.சேகர்

தெருவில் காணப்பெறும் நிறுவனப் பெயர்கள்:
          லாண்டரி, ஓட்டல், எலக்ட்ரிக்கல்ஸ், டைலர்ஸ், கம்பெனி, சாமில், ஷூமார்ட், டெக்ஸ்டைல்ஸ், ஜுவல்லர்ஸ், புக் ஸ்டால், பேங்க், பைனான்சியர்ஸ், ஷாப், ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், லெண்டிங் லைப்ரரி என ஏராளம்.

தமிழ் பத்திரிகைகளின் பெயர்கள்:
          ஜுனியர் போஸ்ட், இந்தியா டுடே, விசிட்டர், ஹெல்த்,  சஸ்பென்ஸ், போலீஸ் ரிப்போட்டர்,  சினிமா எக்ஸ்பிரஸ்,  குமுதம் ரிப்போட்டர்,  ஜுனியர் விகடன்.

உணவகங்களிலும் இல்லங்களிலும் பரிமாறப்படும் உணவு வகைகளின் பெயர்கள்:
          புல் மீல்ஸ், கேக், கூல்டிரிங்ஸ், ஜுஸ், ஐஸ் க்ரீம், ஸுவீட், காபி, பப்ஸ், பிரட், பட்டர், ஜாம், பிஸ்கெட்.

பணியிடங்களில்:
          பாண்ட், சர்ட், ஜுன்ஸ், ஜாக்கட், பிளவுஸ், டைட் பேண்ட், டைட் சர்ட், பெல்பாட்டம், புல்ஹேண்ட்,  ரெடிமேட், சாரி, சுடிதார்.

அலுவலகங்களில்:
          டைரக்டர், டீன், மேனேஜர், கிளார்க், டெலிபோன் ஆபரேட்டர், பியூன், அட்டண்டர், வாட்ச்மேன், அசிஸ்டெண்ட், லாக்கர், டிராயர், பைல், பேப்பர், கம்ப்யூட்டர், ஜெனரல் மேனேஜர், சூப்பிரண்டெண்ட், சூப்பர்வைசர், காண்ட்ராக்டர், ஆடிட்டர், ஆபீசர்.

கல்வி நிலையங்களில்:
          பல்கலைக்கழகம், காலேஜ், ரெஜிஸ்டார், வைஸ்-சான்சலர், புரொபஸர், லெக்சரர், பிரின்ஸிபால், டீச்சர், ஸ்டூடண்ட், பஸ்ட் இயர், பைனல் இயர், டெஸ்ட், அசைன்மெண்ட், ரிசல்ட், பாஸ், பெயில்.

தொழிலகங்களில்:
          அப்ளிகேஷன், அட்வைர்டைஸ்மெண்ட், இன்டர்வியூ செலக்சன், அப்பாயின்ட்மெண்ட், பிரமோசன், கிரேட்.

விளையாட்டுகள்:
          கிரிக்கெட், பேஸ்பால், புட்பால், டென்னிஸ், ஹாக்கி, செஸ், பாக்ஸிங்.

நோய் வரின்:
          பீவர், டாக்டர், நர்ஸ், சிஸ்டர், இன்ஞ்செக்ஷன், டிரிப், ஆபரேசன்,  ஹார்ட் அட்டாக், குளுகோஸ், டிரிப்ஸ்.

பேருந்துகளில்:
          ஸ்டாப், ஹோல்டான், ரைட், டிக்கெட், டிரைவர், பஸ்ஸ்டாண்ட், செக்கிங், கண்டக்டர், இன்ஸ்பெக்டர், மார்க்கெட், ஜங்சன், ஏர்போர்ட், பஜார், மெயின் ஸ்டிரீட்.

என எங்கெங்கு காணினும் ஆங்கிலம், பல சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இருப்பினும் ஆங்கில மோகத்தின் காரணமாக ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு எங்கும் காணப்படுகின்றது. நல்ல தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும், பெயரிடப்பட வேண்டும். இல்லையெனில் பாரதியின் தமிழன்னை கூறுவது போல்
                    மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
                    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
                    என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
                    இந்த வசையெனக் கெய்திடாலோ?
என்பது உண்மையாகும்.

          எனவே நாம் தான் நல்ல நல்ல மொழி பெயர்ப்புகளையும், கலைச் சொற்களையும் ஆக்கித் தரவேண்டும்.







தொடர்பு:
முனைவர் வீ.ரேணுகாதேவி
(prof.renuga@gmail.com)
தகைசால் பேராசிரியர்
மேனாள் துறைத்தலைவர்
மொழியியல் துறை
மேனாள் புலத்தலைவர்
மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 625 021.

Wednesday, February 7, 2018

உலகமயமாக்கலும் வாழ்வியல் மொழியியல் மாற்றங்களும்



—  முனைவர். வீ. ரேணுகாதேவி      
                 

    உலகமயமாக்கல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது அந்நாட்டு மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள், பேசும் மொழி ஆகியவற்றிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உலகமயமாக்கல் பற்றிய எந்த விவாத்திதிலும் விவரணையிலும் பொருளாதர விவகாரங்களை விவாதித்தல் மிக முக்கியமான பகுதியாக இருந்தாலும், அதை மட்டுமே உலகமயமாக்கல் என்பதாகக் குறுக்கி விடமுடியாது. உலகமயமாக்கல் என்பது எந்தவொரு தனித்த கருத்தமைவிலும் முடக்கப்பட்டு விட முடியாத பல பரிமாணமுள்ள சமூக நிகழ்வுகளின் தொகுதி ஆகும். உலகமயமாக்கலின் மாறுதலுண்டாக்கும் சக்திகள் தற்காலச் சமூக வாழ்க்கையின் பொருளாதார, அரசியல், கலாச்சார, தொழில் நுட்பம், சுற்றுச்சூழல், மொழி பரிமாணங்களுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன.

    தொழில் நுட்பத்தின் மீதும், அதன் விளைவாக உற்பத்தியாகும் வெகுஜனச் சந்தை பொருட்களின் மீதும் தீராத வெறி கொண்ட நிலை இன்று காணப்படுகின்றது. ‘உலகமயமாக்கல்’ என்ற சொல் 1960களில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. மரபுவழிப்பட்ட அரசியல், பொருளாதாரம், கலாச்சார, புவியியல் எல்லைகளை மீறுகின்ற, மேலும் ஏற்கனவே இருந்து வருகின்ற, சமூக வலைப்பின்னல்களையும் செயல்பாடுகளையும் மென்மேலும் ‘பெருக்குவதையும்’ ‘படைப்பதையும்’ உலகமயமாக்கல் உள்ளடக்கியிருக்கிறது (மான்ஃப்ரெட் பி.ஸ்டெகர், 2006:13).

    உலகமயமாக்கல் பல்வேறு பரிமாணங்களையும், பல்வேறு தாக்கங்களையும் உள்ளடக்கியதாக இருந்த போதிலும் இக்கட்டுரை மக்களின் அன்றாட வாழ்க்கை முறைமையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும், அதன் விளைவாக அம்மக்கள் பேசும் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    சமீபத்தில் சென்னை நகர நட்சத்திர விடுதி ஒன்றில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்த்து. கருத்தரங்கு முடிவுற்ற பின் பின்னிரவு வரை அந்த விடுதியில் தங்கும் சூழல் ஏற்பட்டது. அந்த நட்சத்திர விடுதியின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். சுமார் இரவு 10 மணியளவில் பதின்ம வயது பெண்களும் ஆண்களும் வரிசையாக வர ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் காதை கிழிக்கும் இசையின் ஓசையுடன் ஆட்டமும் பாட்டமும் ஆரம்பித்த்து. அது நள்ளிரவையும் தாண்டி 1.00 மணி வரை நீடித்தது என்னவென்று கேட்டதற்கு அங்கு ‘pub’ என்று அழைக்கப்படுகின்ற கேளிக்கை அரங்கு இருக்கின்றது. வார இறுதி நாட்களில் இவ்வாறான பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் என்றார்கள். அந்த இசை நம் பாரம்பரிய இசை அல்ல, அவர்கள் அணிந்த உடை நம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இல்லை, அங்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் நம் பாரம்பரிய உணவுகள் அல்ல. நமக்கும் இரவு நேரக் கேளிக்கைகள் இருந்தன கதாகலாட்சேபங்கள், நாடகங்கள், பாட்டு, வீர விளையாட்டுகள் என. ஆனால் இன்றைய இந்த இரவு நேர கேளிக்கைகள் மேலை கலாச்சாரத்தின் தாக்கமாகவே காணப்படுகின்றது.

    விழாக்களுக்குப் பதிலாக கொண்டாட்டங்களே உலகமயமாக்கலின் விளைவுகளாகின்றன. தமிழர் திருநாள், பொங்கல், தீபாவளி, காரமடையான் நோன்பு போன்றவை மெல்ல விடைபெற, மகளிர் தினம், காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் என வரிசையாக பல்வேறு தினங்கள் தான் இன்று வெகு சிறப்பாக இளையோர்களாலும், ஊடகங்களாலும் கொண்டாடப்படுகின்றன. ஊடகங்கள் இக்கொண்டாட்டங்களை பிரத்யோகமாக நாள் முழுவதும் காட்சிப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. கலாச்சாரம் என்ற பெயரில் வணிகத்தைப் பெருக்கும் ஒரு முயற்சியே இக்கொண்டாட்டங்கள்.

    நம் உணவு பழக்க வழக்கங்களும் மிக விரைவாக மாறி வருகின்றன. இளைய தலைமுறையினரின் விருப்ப உணவாக நூடுல்ஸ், பிரைடுரைஸ், பர்க்கர், பிரஞ்சு பிரைஸ், சிக்கன்65, கே.எப்.சி, நான், மேக்டொனால்ட்ஸ், சாப்ஸ்டிக்ஸ், கோகோ கோலா, தம்ஸ் அப். பெப்சி, ஆப்பிள் பை, சீஸ், பன்னீர் என்னும் மேலை நாட்டு உணவு வகைகளே இருக்கின்றன. அவையும் அமர்ந்து உண்ணப்படுவதில்லை நின்று கொண்டே உண்ணும் ‘பப்பே’ முறையே பெரிதும் காணப்படுகின்றது.

    நம் பாரம்பரிய  உணவு வகைகளான இட்லி, தோசை, சோறு, சாம்பார், கூட்டு, பொரியல், அவியல், புட்டு, களி, கூழ், அப்பம், வற்றல், பொரிவிளங்காய், சிறுதானிய வகைகளைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு உணவு வகைகள் நம் உணவுப் பண்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல விடைபெற்று சென்று கொண்டிருக்கின்றன.

    ஆதிக்க நாடுகளின் ஒரே மாதிரியாதலின் வெளிப்பாடுகள் இங்கு புலப்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் துரித உணவகங்கள் ஆதிக்கம் பெற்று வருகின்றன. இவற்றின் பரவலுக்கு வீச்சுமிக்க சமூகக் கலாச்சாரப் போக்குகள் உறுதுணையாக உள்ளன. இவற்றைக் குறிக்க அமெரிக்கச் சமூகவியலாரான ஜார்ச் ரிட்டர் ‘மேக்டொனால் டைசேஷன்’ (Mc Donaldization) என்ற சொல்லை உருவாக்கினார். மேம்போக்காகப் பார்த்தால் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நம்பகமான வழிகளை அளிக்கும் முயற்சிகளுக்குத் துணை நிற்பவை என்ற அளவில் இவை தர்க்க ரீதியாகவே தொன்றுகின்றன. ஆனால் திரும்ப திரும்ப ‘உங்களை மகிழ்விப்பதே எங்கள் இலட்சியம்’ எனக் கூறும் பகற்றுத் தோற்றத்துடன் நம்மீது திணிக்கப்படும் வணிக விளம்பரங்களின் பகற்றுத் தோற்றத்தினைக் கிழித்துப் பார்த்தோமானால் தீவிரப் பிரச்சனைகள் இருப்பது தென்படுகின்றன. எடுத்துக்காட்டாக துரித உணவுகளின் மிகக் குறைந்த ஊட்டச்சத்தும், குறிப்பாக அவற்றில் கொழுப்பு சக்தி மிகுதியும், இதய சம்பந்தமான நோய்கள், நீரிழிவு, புற்றுநோய், சின்னஞ்சிறு வயதில் ஊளைச் சதை போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டலாம்.

    உடல் நலம் பேணுவதற்கு விளையாட்டுகள் தேவைப்படுகின்றன. அவ்விளையாட்டுகளில் கூட நம் பண்பாட்டுடன் இணைந்து இருந்த கபாடி, பல்லாங்குழி, தட்டாங்கல், மல்யுத்தம், வாட்போர், பாண்டி, சிலம்பம், பச்சைக் குதிரை, குலை குலையா முந்திரிக்காய், பரமபதம், தாயம், ஆடுபுலி போன்ற விளையாட்டுகள் அரிதாகி விட்டன. இன்று எங்கெங்கு காணினும் கையில் மட்டையுடன் நின்று கொண்டிருக்கின்றனர். கிரிக்கெட் மோகம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. நம்பாரம்பரிய வீர விளையாட்டுகள் மெல்ல மெல்ல காணமல் போய்க் கொண்டிருக்கின்றன.

    உடைகளும் அவ்வாறே நாட்டின் சீதோச நிலைக் கேற்ற உடைகளான சேலை, தாவாணி, வேட்டி, துண்டு என்பவற்றை காண்பது அரிதாகிவிட்ட்து. சல்வார், குர்தா, சூட், கோட், டை, ஸ்கார்ட், ஜீன்ஸ், நைட்டி, லெக்கின்ஸ் என்ற உடைகளே பரவலாக அணியப்படுகின்றது.

    இசையிலும் மாற்றத்தை உணர முடிகின்றது. நம் இசை மெல்லிசை, வீணை, தம்பூர், ஹார்மோனியப் பெட்டி, மிருதங்கம், நாதஸ்வரம், தபேலா, பறை என்னும் இசைக் கருவிகள் எங்கே? அவற்றிற்குப் பதிலாக பாப், ராக், சிம்பனி என்னும் இசை வடிவங்களே இளைஞர்களால் இன்று பெரிதும் விரும்பப்படுகின்றன.

    அன்றாடம் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களும் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட பொருள்களாகவே உள்ளன.

    குடும்ப அமைப்பு முறையிலும் அந்நிய கலாச்சாரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கிறது. கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாகி தனிமனித குடும்பமாகிக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளும், முதியோர்களும் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. கூட்டுக் குடும்ப சிதைவின் நீட்சியாக இன்று நிறைய முதியோர் இல்லங்களையும், சிறுவர்களைப் பாதுகாக்கும் பாலர் இல்லங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. வீட்டிற்கு ஒரு குழந்தை, தனித்து வளரும் குழந்தை முரட்டு பிடிவாதத்துடன் தான் எனது என்ற மனப்பான்மையுடன் வளர்கின்றது. பகிர்ந்து உண்ணும் மனப்பான்மை அறவே இல்லை. மழலையர் மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    உலகமயமாக்களின் விளையாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு தொழில் விவசாயம். உழவு மாடுகள், நெல் வகைகள், சிறுதானிய வகைகள் போன்றன ஏறக்குறைய அழிந்து விட்டன் எனலாம்;  92 வகை நாட்டு மாடு வகைகள் நம்மிடம் இருந்தன. அவற்றில் எத்தனை வகை மாடுகள் இன்று நம்மிடம் உள்ளன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு அதை மீட்டெடுக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பாலைத்தரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஜெர்சி மாடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு

ஏறக்குறைய 120 நெல் வகைகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன, அவையும் எங்கே சென்றன எனத் தெரியவில்லை. இப்போது நமக்குத் தெரிந்த நெல் வகைகள் ஐ.ஆர்.20, கர்நாடக பொன்னி, ரப்பர் போன்றவைதான்.
1. அன்னமழகி
2. அறுபதாங்குறுவை
3. பூங்கார்
4. கேரளா ரகம்
5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
6. குள்ளங்கார்
7. மைசூர்மல்லி
8. குடவாழை
9. காட்டுயானம்
10. காட்டுப்பொன்னி
11. வெள்ளைக்கார்
12. மஞ்சள் பொன்னி
13. கருப்புச் சீரகச்சம்பா
14. கட்டிச்சம்பா
15. குருவிக்கார்
16. வரப்புக் குடைஞ்சான்
17. குறுவைக் களஞ்சியம்
18. கம்பஞ்சம்பா
19. பொம்மி
20. காலா நமக்
21. திருப்பதிசாரம்
22. அனந்தனூர் சன்னம்
23. பிசினி
24. வெள்ளைக் குருவிக்கார்
25. விஷ்ணுபோகம்
26. மொழிக்கருப்புச் சம்பா
27. காட்டுச் சம்பா
28. கருங்குறுவை
29. தேங்காய்ப்பூச்சம்பா
30. காட்டுக் குத்தாளம்
31. சேலம் சம்பா
32. பாசுமதி
33. புழுதிச் சம்பா
34. பால் குடவாழை
35. வாசனை சீரகச்சம்பா
36. கொசுவக் குத்தாளை
37. இலுப்பைப்பூச்சம்பா
38. துளசிவாச சீரகச்சம்பா
39. சின்னப்பொன்னி
40. வெள்ளைப்பொன்னி
41. சிகப்புக் கவுனி
42. கொட்டாரச் சம்பா
43. சீரகச்சம்பா
44. கைவிரச்சம்பா
45. கந்தசாலா
46. பனங்காட்டுக் குடவாழை
47. சன்னச் சம்பா
48. இறவைப் பாண்டி
49. செம்பிளிச் சம்பா
50. நவரா
51. கருத்தக்கார்
52. கிச்சிலிச் சம்பா
53. கைவரச் சம்பா
54. சேலம் சன்னா
55. தூயமல்லி
56. வாழைப்பூச் சம்பா
57. ஆற்காடு கிச்சலி
58. தங்கச்சம்பா
59. நீலச்சம்பா
60. மணல்வாரி
61. கருடன் சம்பா
62. கட்டைச் சம்பா
63. ஆத்தூர் கிச்சிலி
64. குந்தாவி
65. சிகப்புக் குருவிக்கார்
66. கூம்பாளை
67. வல்லரகன்
68. கௌனி
69. பூவன் சம்பா
70. முற்றின சன்னம்
71. சண்டிக்கார் (சண்டிகார்)
72. கருப்புக் கவுனி
73. மாப்பிள்ளைச் சம்பா
74. மடுமுழுங்கி
75. ஒட்டடம்
76. வாடன் சம்பா
77. சம்பா மோசனம்
78. கண்டவாரிச் சம்பா
79. வெள்ளை மிளகுச் சம்பா
80. காடைக் கழுத்தான்
81. நீலஞ்சம்பா
82. ஜவ்வாதுமலை நெல்
83. வைகுண்டா
84. கப்பக்கார்
85. கலியன் சம்பா
86. அடுக்கு நெல்
87. செங்கார்
88. ராஜமன்னார்
89. முருகன் கார்
90. சொர்ணவாரி
91. சூரக்குறுவை
92. வெள்ளைக் குடவாழை
93. சூலக்குணுவை
94. நொறுங்கன்
95. பெருங்கார்
96. பூம்பாளை
97. வாலான்
98. கொத்தமல்லிச் சம்பா
99. சொர்ணமசூரி
100. பயகுண்டா
101. பச்சைப் பெருமாள்
102. வசரமுண்டான்
103. கோணக்குறுவை
104. புழுதிக்கார்
105. கருப்புப் பாசுமதி
106. வீதிவடங்கான்
107. கண்டசாலி
108. அம்யோ மோகர்
109. கொள்ளிக்கார்
110. ராஜபோகம்
111. செம்பினிப் பொன்னி
112. பெரும் கூம்பாழை
113. டெல்லி போகலு
114. கச்சக் கூம்பாழை
115. மதிமுனி
116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
117. ரசகடம்
118. கம்பம் சம்பா
119. கொச்சின் சம்பா
120. செம்பாளை


பாரம்பரிய விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டு விளையாடப்பட்டன.
சிறுவர் (பையன்கள்) கைத்திறன்:
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு (எல்லா வயதினரும், ஆண், பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

அணி விளையாட்டு:
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

நீர் விளையாட்டு:
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி:
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

இருபால் இளைஞர்   உடல் திறன்:
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உத்தித் திறன்:
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்):
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு:
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்:
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்:
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்:
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..  கலை விளையாட்டு:
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்
   
கால் திறன்:
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

குழு விளையாட்டு:
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

உல்லாசம்:
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா
6. இதென்ன மூட்டை
7. கிளி செத்துப்போச்சு
8. ஊதாமணி
9. என் உலக்கை குத்து குத்து
10. ஒருபத்தி இருபத்தி
11. ஒளிதல்
12. குச்சு குச்சு ரங்கம்மா
13. குறிஞ்சி வஞ்சி
14. கொடுக்கு
15. சிறுவீடு விளையாட்டு
16. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
17. ராட்டு பூட்டு
18. தவிட்டுக் குஞ்சு
19. பிஸ்ஸாலே பற
20. பூசனிக்காய் விளையாட்டு
21. பூப்பறி விளையாட்டு
22. பூப்பறிக்க வருகிறோம்
23. பூப்பூ புளியம்பூ
24. மச்சிலே யாரு
25. மத்தாடு
26. மோரு விளையாட்டு
27. வேடிக்கை விளையாட்டு
28. ஊஞ்சல்
29. ஈசல் பிடித்தல்
30. உப்பு விற்றல்
31. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
32. கரகர வண்டி
33. கள்ளன் போலீஸ்
34. காற்றாடி
35. கிய்யா கிய்யா குருவி
36. கிழவி விளையாட்டு
37. கிறுகிறு மாம்பழம்
38. குலையா குலையா முந்திரிக்காய்
39. சங்கிலி விளையாட்டு
40. தட்டான் பிடித்தல்
41. தட்டை
42. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
43. பந்து, எறிபந்து
44. பந்து, பிடிபந்து
45. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
46. பூக்குதிரை
47. வண்டி உருட்டல்

பாப்பா விளையாட்டு:
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு (ஐலேலம் ஐலகப்பல் விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

தெய்வ ஆடல்கள் மக்கள் ஆடல்கள் விழா விளையாட்டு:
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு:
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

    மேற்கூறப்பட்டவை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இளைய தலைமுறையினர் நம் பண்பாடு, உணவு, உடை, விளையாட்டு, தொழில், கலை ஆகிய அனைத்திலிருந்தும் விலகிச் செல்கின்றனர். இந்த மாற்றங்கள் தமிழர்களின் வாழ்வியலில் மட்டுமல்லாமல் அவர்கள் பேசும் மொழியிலும் மாற்றங்க்ளை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மொழி வளர அம்மொழியின் சொற்களஞ்சியம் விரிவடைய வேண்டும். ஆனால் நம் சொற்களஞ்சியம் மேலே கூறப்பட்ட அத்தனை சொற்களையும் இழந்து விட்டது. சொற்கள் இன்றைய பயன்பாட்டில் இல்லை அதற்கு பதிலாக சொற்களஞ்சியத்தில் ஏராளமான கடன் வாங்கப்பட்ட சொற்கள் சேர்ந்துள்ளன. அதனால் தமிழ் மொழியின் கட்டமைப்பில் மாற்றங்கள் காணப்படுகின்றது. அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் கூட தமிழ் சொற்களாக இல்லை. ஆங்கிலச் சொற்களே ஆட்சி செய்கின்றன. அரிசி ரைஸ் என்றும், உப்பு ‘சால்ட்’ என்றும், வேம்பு ‘நீம்’ என்றும், கற்றாழை ‘ஆலிவோரா’ என்றும், மஞ்சள் ‘டர்மரிக்’ என்றும், பால் ‘மில்க்’ என்றும், தண்ணீர் ‘வாட்டர்’ என்றும் கையாளப்படுகின்றது.

    ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அவர்களின் மொழியை முதலில் அழிக்க வேண்டும். மொழியின் அழிவு ஒரு பண்பாட்டிற்கு முற்று புள்ளி வைக்கும். உலகமயமாக்கல் என்னும் பொருளாதார கோட்பாடு நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது மக்களின் வாழ்விலும் அவர்களின் மொழியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை அன்றாட நிகழ்வுகளில் பார்த்துக் கொண்டு நிற்கின்றது தமிழ் சமுதாயம்.

துணைநூற்பட்டியல்
மான்ஃபிரட் பி. ஸ்டெகர், 2006, உலகமயமாக்கல், அடையாளம், பூதநத்தம்.
Renuga devi, V., 2010, Globalization and Cultural Genocide, Aayukkoovai, Madurai, Vol.4, pp. 2436 - 2442.
   



தொடர்பு:
முனைவர். வீ. ரேணுகாதேவி
தகைசால் பேராசிரியர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கழை கழகம்
மதுரை – 62502.

Monday, January 15, 2018

தொல்காப்பியமும் மொழியியலும்

 தொல்காப்பியமும் மொழியியலும்

— முனைவர். வீ. ரேணுகாதேவி
  
    இலக்கணம் என்பது மொழியை மொழியால் விளகுகின்ற ஒரு கலை. நடனம்,  நாடகம், பொறியியல், விலங்கியல் போன்ற படைப்புக்களை மொழியால் விளக்குகின்றோம். இங்கு மொழிவேறு, அந்த படைப்புக்கள் வேறு. மொழியால் மொழிக்குப் புறத்து இருப்பவற்றை விளக்கலாம். மொழியை விளக்க வேண்டுமானால் என்ன செய்வது, மொழியை மொழியால் தான் விளக்க வேண்டும். அதுவே  இலக்கணம் எனப்படும். இந்தப் பணியை ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர் மிகச் செம்மையாகச் செய்திருக்கிறார்.

    மொழியை அறிவியல் நோக்கோடு ஆராய முற்படுவது ஆகும். மொழியைப்   பற்றிய உண்மைகளைக் கண்டறிவதையே தன் நோக்கமாகக் கொண்டுள்ள மொழியியலாளன் தன் ஆய்வின், எல்லையை இலக்கண இலக்கியங்களோடு சுருக்கிக் கொள்வதில்லை. எங்கெங்கு மொழி பயன்படுகின்றதோ அங்கெல்லாம் இவன் ஆய்வு நோக்கம் மொழியைப் பின்பற்றி ஊடுருவிப் பாய்கிறது என்கிறார் பொற்கோ (1973:128).

    நாம் பெற்ற அறிவையெல்லாம் வெளிப்படுத்த உதவும் ஒரு கருவி மொழி. அந்த மொழியைப் பற்றிய எல்லா உண்மைகளையும் கண்டறிந்து வாங்கிப் பல்வேறு பயன்களைத் தருவதாக அமைவது மொழியியல்.
   
    மொழியியலாளர்கள் எல்லோரும் இலக்கண இலக்கியங்களுக்கு மிகச் சிறந்த இடமளித்து, அதற்கு மேலும் குழந்தை மொழி, பேச்சு மொழி, கிளை மொழி ஆகியவற்றிற்கும் இடமளிக்கின்றார்கள்.
   
    மொழியியலாளன் ஆய்வு இலக்கண இலக்கியங்களோடு நின்று விடுவதில்லை. மொழி எங்கெல்லாம் பயன் படுகின்றதோ அங்கெல்லாம் மொழியியலாளளின் ஆய்வு நோக்கம் மொழியைப் பின்பற்றி அமையும்.

    ஒளியும், சொல்லும், தொடரும் இவற்றால் உண்டாகும் பொருண்மையும் உலக மொழிகள் எல்லாவற்றுக்கும் பொதுவானவை. மொழியியலில் இவைதான் இன்றியமையாத இடம்  பெறுகின்றன. இவற்றின் துனைகொண்டுதான் மொழியியல் பல்வேறு படிப்பியல்களோடு (Disciplines) தொடர்பு கொண்டு செழித்து வளருகின்றது.

    ஒலி, ஒலியமைப்பு, சொல், சொல்லமைப்பு, தொடர், தொடரமைப்பு, பொருண்மை ஆகிய இவையெல்லாம் ஒவ்வொரு மொழியிலும் காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் மாறிக் கொண்டிருக்கின்றன. இடத்திற்கு இடம் ஒரு மொழியிலேயே ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், காலத்திற்குக் காலம் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் மொழியியல் விளக்கம் அளிக்கின்றது.

    திராவிட மொழிகளில் காணப்படும் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூல் கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் தோன்றியது என அறிஞர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள், என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. தமிழ் மொழிக்கு இலக்கணம் கூறவந்த  தொல்காப்பியர் அம்மொழியின் இலக்கணத்தை எழுத்து, சொல், என்னும் இரண்டு அதிகாரங்களில் விளக்கிச் சொல்லிப் பின்னர் பொருள் அதிகாரம் என்னும் ஒன்றைப் பற்றி விளக்கிக் கூறுகிறார்.

    மொழியியல் மொழியின் அமைப்பை அக அமைப்பு புற அமைப்பு என்னும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் ஒலியியலும், பொருண்மையியலும் புற அமைப்பிலும், ஒலியன்யியல், இலக்கணம் (உருபனியல், தொடரியல்), உருபொலியனியல் அக அமைப்பிலும் அமையும். ஒலியியலையும்  பொருண்மையையும் விளங்கிக்கொள்ள புற உலகின் அறிவும் தேவைப்படும். எனவே அவை புற அமைப்பில் அமைந்துள்ளன. ஒலியனியல், இலக்கணம், உருபொலியனியியல் இவை பற்றி அறிந்து கொள்ள மொழிபற்றிய அறிவு மட்டுமே போதுமானது. எனவே அவை அக அமைப்பில் அமைந்துள்ளன.

    ஒரு மொழியின் அமைப்பினை அறிய ஒலியியல் அறிவு மிகத் தேவை. இதை பண்டை இலக்கண ஆசிரியர்களும் நன்கு உணர்ந்திருந்தனர். எழுத்துக்களைப் பற்றிக் கூறப் புகுந்த தொல்க்காப்பியர் பிறப்பியல் என்ற இயல் ஒன்றை வைத்து அவ்வியலில் பல்வேறு எழுத்துக்களின் பிறப்பைப் பல்வேறு நூற்பாக்களின் வழி விளக்கிச் செல்கிறார்.

    ஒரு மொழியில் காணப்படும் பல்வேறு ஒலிகளை எழுப்பப் பல்வேறு மனித உறுப்புகள் உதவுகின்றன என்று இலக்கண ஆசிரியர்களும் மொழியியலாளரும் கூறுகின்றனர். ஒலியுறுப்புகளில் (Speech Organs)  வயிற்றுப்பகுதியும், தொண்டைப்பகுதியும், தலைப்பகுதியும், சிறந்த பங்கினை வகுக்கின்றன. இதனை தொல்காப்பியரும்
    உந்தி முதலா முந்து வளி தோன்றித்
    தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலை இ
                 (தொல். )
என்று கூறுகின்றார். இன்றைய ஒலியியலாளர்கள் கூறுகின்ற அளவிற்குத் தொல்காப்பியத்தில் தெளிவு இல்லாமல் இருந்த போதிலும் கூடப் பல்வேறு ஒலிகளின் பிறப்பைச் சிறந்த முறையில் கூறிச் சென்ற பெருமை தொல்காப்பியரைச் சாரும்.

    ஒலிகள் பிறப்பதற்குக் காரணமான உறுப்புக்களாக நெஞ்சு (Lungs), மிடறு (Larynx),  தலை (Buccal Cavity), மூக்கு (Nasal Cavity),   என்ற நான்கையும் பல், இதழ் போன்றவற்றையும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    பொதுவாக ஒலிகளை (Sounds)  இரண்டு வகையாகப் பிரிக்கல்லாம். அதன் அடிப்படையில் ஒரு மொழியில் காணப்படும் ஒலியன்களையும் உயிர், மெய் என இருவகையாகப் பிரிக்கலாம். இப்பிரிவினை தொல்காப்பியத்திலும் காணமுடிகின்றது. மொழியியலாளர்கள் உள்ளேயிருந்து வரும் காற்று எவ்விதமான தங்கு தடையின்றி வாயின் வழியாக வெளிப்படும் பொழுது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன என்பர். எனவே காற்று எவ்வாறு புறப்பட்டதோ அவ்வாறே தங்கு தடையின்றி வருவதால் உருவானவை உயிரொலிகள் என்பது மொழியியல் கொள்கை. இதனை தொல்காப்பியர்;  
    பன்னீ ருயிரும் தந்நிலை திரியா
    மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்
                ( தொல். எழுத்து. 84)
எனக் குறிப்பிட்டுள்ளார். எழுத்துக்கள் முப்பது எனக் கூறிய தொல்காப்பியர் அவற்றை
    ஒளகார இறுவாய்ப்
    பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப
                (தொல். எழுத்து. 8)
எனவும்
    னகர விறுவாய்ப்
    பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப
                (தொல். எழுத்து. 9)
எனவும் கூறித் தமிழ் எழுத்துக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.

    பன்னீருயிரும் தந்நிலை திரியா எனக் கூறுவதிலிருந்து உயிர் எழுத்துக்கள் எவ்வித தடையுமின்றி, குறுக்கீடுமின்றி எனப் பொருள் கொள்ளலாம். இக்கருத்து உயிர்களின் பண்பு பற்றி  இன்றைய மொழியியலாளர் கொண்டுள்ள கருத்துடன் பொருந்தி நிற்கிறது என்கிறார் அகத்தியலிங்கம் (1977:18).
அவற்றுள்;
    அ ஆ ஆயிரண்டங்காந் தியலும்
    இ, ஈ, எ, ஏ ஐ யென விசைக்கு
    மப்பா லைந்து மவற்றோ ரன்ன
    அவைதா
    மண்பன் முதனா விழிம்பு லுடைய
    உ, ஊ, ஒ, ஓ, ஒளவென விசைக்கு
    மப்பா லைந்து மிதழ் குவிந் தியலும்

    உயிர் எழுத்துக்களை தொல்காப்பியர் மூன்று வகைகளாகப் பிரிக்கின்றார். அவை ‘அ’ ‘ஆ’ என்பவை ஒரு வகையாகவும், ‘இ’,  ‘ஈ’, ‘எ’, ‘ஏ’, ‘ஐ’ என்பனவற்றை வேறு ஒரு வகையாகவும், ‘உ’, ‘ஊ’, ‘ஒ’, ‘ஓ’, ‘ஒள’ என்பனவற்றை மூன்றாவது வகையாகவும் பிரிக்கின்றார். இவற்றை முறையே Open unrounded, Front unrounded, Back rounded    எனக்கூறலாம். இவற்றுள் உ, ஊ, என்பவை பின்னுயிர் (Back Vowels)  என்றும், இ, எ போன்றவை முன்னுயிர் (Front Vowels)  என்றும், அ, ஆ போன்றவை நடுவுயிர் (Central Vowels) என்றும் இன்றைய மொழியியலில் அழைக்கப் பெறுகின்றன.


  
    மெய்யெழுத்துக்களை வல்லெழுத்து, மெல்லெழுத்து இடையெழுத்து எனத் தொல்காப்பியர் மூன்று வகையாகப் பிரிப்பார். வல்லெழுத்துக்கும், மெல்லெழுத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை குறைவு. இரண்டும் பிறக்கும் இடங்கள் (Point of articulation) ஒன்றே. இவற்றை ஓரிட மெல்லினம் (Homorganic nasal)  என்று அழைப்பர் க, ச, ட கரங்களின் பிறப்பினைக் கூறும் சூத்திரத்திலேயே ங, ஞ, ண காரங்களின் பிறப்பினையும் கூறுகிறார் தொல்காப்பியர்.
    மெல்லெழுத் தாறும் பிறப்பின் ஆக்கம்
    சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
    மூக்கினம் வளியிசை யாப்புறத் தோன்றும்
                (தொல். எழுத்து. 100)

    தொல்காப்பியர் தம்முடைய நூலில் தமிழ் எழுத்துக்கள் எனக்குறிப்பிடுவது தமிழ் ஒலியன்களை (Phonemes)  என்கிறார் அகத்தியலிங்கம் (1977:19). பல்வேறு மாற்றொலிகளை உள்ளத்தில் கொண்டு அவை தனி ஒலியன்களாகாத தன்மையை முன்னிறுத்தியே எழுத்துக்கள் முப்பது என்றார்.

    மொழியியல் கருத்துக்கள் வளராத நிலையில் போன்ற ஒலிகள் எல்லாம் தமிழில் இருக்கின்றது. ஆனால் க, ங, த போன்றவற்றை மட்டுமே தமிழ் இலக்கண ஆசிரியர்கள்  குறித்துள்ளனர் என்ற வினாவிற்கு விடையிறுக்க முடியாத நிலையினையும் இதனை உள்ளத்தே நிறுத்தி அவை ஒலியன்கள் ஆகா என்ற எண்ணத்தில் தமிழ் எழுத்துக்கள் முப்பது என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தொல்காப்பியர் கூறிச் சென்ற  நிலயினையும் நோக்கின் தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தின்  பெருமை நன்கு விளங்கும். கடல்,  தங்கம், அகம், போன்ற சொற்களின்  ‘ககரம்’ வருவதும் அவற்றுள் முதல் சொல்லில் ஆங்கில எழுத்தாகிய ‘k’ என்பதைப் போன்று மொழிக்கு முதலில் ககரம் மிக வல்லொலியாகவும் ‘தங்கம்’ என்பதில் ஙகரத்திற்குப் பின்னால் வருகிற நிலையில் ‘g’  என்ற ஆங்கில ஒலியைப் போன்று இசைஒலியாகவும்   (Voiced) அகம் என்ற சொல்லில் ஆங்கில ஒலியான ‘h’  போன்று இரண்டு உயிர் எழுத்துக்களிடையே உரசொலியாக (Fricative)  வும் உச்சரிக்கப்படுகின்றது. இவ்வாறு இவ்வொலிகள் தம்முள் ஒன்றி வருகின்ற இடத்தில் மற்றொன்று வராத நிலையைத் துணை நிலை வழக்கு (Complementary Distribution) என்பர் மொழியியலாளர். இவ்வாறு வரும் ஒலிகள் அனைத்தையும் ஒரே ஒலியனாகக் கொண்டே இல்க்கணம் அமைப்பர் (அகத்தியலிங்கம் 1977:20).

    தொல்காப்பியர் ஒலியன், மற்றொலி, துணைநிலை வழக்கு என்றெல்லாம் விளக்கிப் பொதுவான ஒரு மொழிக் கொள்கையை உருவாக்கவில்லை எனினும், இக்கொள்கைகளை உள்ளத்தே கொண்டு தமிழ் எழுத்துக்களைப் பற்றிக் கூறுவதில் அவருடைய ஒலியியல் (Phonetics) ஒலியனியல்  (Phonemics)  அறிவு நன்கு விளங்குகின்றது.

    எழுதப் படுதலின் எழுத்து என மரபிலக்கணத்திலிருந்து அறிய முடிகின்றது. இது மட்டும் தான் எழுத்தின்  இலக்கணமா? பல், கல் என்பவை வேறுபட்ட பொருள் உடையவை எப்படி அறிந்து கொள்ள முடிகின்றது. இரண்டு சொற்களிலும் அல் என்பது ஒன்றாகவே இருக்கின்றது.
    பல்   ப் அ ல்
    கல்   க் அ ல்
இங்கு பொருள் வேறுபாட்டை உணர்த்த ப், க் என்னும் இரு ஒலிகளே காரணமாக இருக்கின்றன. இலக்கணத்தில் இக்கோட்பாடு இருந்த போதிலும் மொழியியலே இதனைத் தெளிவாக விளக்குகின்றது. மொழியியல் கோட்பாட்டின் படி எவை பொருள் வேறுபாட்டிற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றனவோ அவை ஒலியன்கள் எனப்படுகின்றன. இலக்கணத்தில் அவை எழுத்துக்கள் எனப்படுகின்றன.

    ஒரு மொழியில் பல ஒலிகள் இருக்கலாம். அவை அனைத்தும் பொருள் வேறுபாட்டைத் தருவதில்லை. குறிப்பிட்ட சூழலில் வரும் போது பொருள் வேறுபாட்டிற்கு அடிப்படையான ஒலியன் மாற்றொலியாக மாறுகின்றது.
மொழியில் ஒட்டு மொத்தமாகக் காணப்படுபவை ஒலிகள்  (Phones)
பொருள் வேறுபாட்டைத் தருபவை  ஒலியன்கள் (Phonemes)
சூழலால் கட்டுண்டு திரிபவை மாற்றொலிகள் (Allophones)

    மரபிலக்கணத்தில் ஒலிகள், ஒலியன்கள், மாற்றொலிகளுக்குச் சான்றுகள் காணப்பெறுகின்றன. குறில் இகரம், குற்றியலிகரம், குறில் உகரம், குற்றியலுகரம் என நான்கு ஒலிகள் காணப்படுகின்றன.

    இவற்றில் ஒரு மாத்திரை அளவுடைய குறில் இகரமும், உகரமும் பொருள் வேறுபாட்டைத் தந்து தனித்தனி எழுத்து (ஒலியன்) ஆகின்றன. குற்றெழுத்து அல்லாத நெட்டெழுத்து மற்றும் பிறவகை எழுத்துத் தொடர்ச்சியோடு மொழியீற்றில் வல்லெழுத்தை ஊர்ந்து வரும் குறில் உகரம் குற்றியலுகரம் என்ற சார்பெழுத்து (மாற்றொலி) ஆகத்திரிகின்றது.

    இதே போன்று அசைச் சொல் மியாவில் மகரத்தை ஊர்ந்து வரும் (ம்+இ) இ குறுகி ஒலிக்கின்றது. இவ்வாறு குறுகும் குற்றியலிகரம் என்ற சார்பெழுத்து (மாற்றொலி) ஆகின்றது.

    மரபிலக்கணங்களில் குறிப்பாகச் சொல்லப்பட்டவை எல்லாம் மொழியியல் விளக்கிக் கூறுகின்றது. சொல் இலக்கணத்திலும் மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் சில விளக்கங்களைப் பெறலாம்.
   
    சொல்லதிகாரம், 1. கிளவியாக்கம் 2. வேற்றுமையியல் 3. வேற்றுமை மயங்கியல் 4. விளிமரபு  5. பெயரியல் 6. வினையியல் 7. இடையியல் 8. உரியியல் 9. எச்சவியல் என ஒன்பது இயல்களைக் கொண்டது. அவற்றுள் முதல் நான்கு இயல்கள் தொடரியல் பற்றியும், எஞ்சிய ஐந்து இயல்கள் உருபனியல் பற்றியும் விளக்குகின்றது. சொற்களின் வருகை  (External distribution of words)  பற்றி  முதல் நான்கு இயல்களிலும், சொற்களின் கட்டமைப்பு (Internal structure of the word) பற்றி கடைசி ஐந்து இயல்களிலும் விளக்கப்பட்டுள்ளன.

    தமிழில் சொல், கிளவி என்றால் ஒரே ஒரு பொருளை உணர்த்தக் கூடியதையும் (வா, போ) ஒன்றிற்கு மேற்பட்ட பொருண்மைகளைக் குறிக்கும் உருபுகளைக் கொண்ட சொல்லையும், (வா+ந்+ஆன்>வந்தான்) குறிக்கும். இங்கு ‘வா’ என்பது ஒரு பொருள் தரக்கூடிய ஒர் உருபு, வந்தான் என்பது பொருள்த் தரக்கூடிய மூன்று உருபுகளைக் கொண்டது.
    வா    -      அடிச்சொல்
    ந்    -     இறந்தகால இடை நிலை
    ஆன்    -     எண், பால், இடம் காட்டும் விகுதி
    தொல்காப்பியர் குறிப்பிடும் பல வினைமுற்று விகுதிகள் ஒன்றிற்கு மேற்பட்ட பொருண்மைகளைச் சுட்டுவனவாக உள்ளன. ஒலி, ஒலியனியலில் ஒலி, ஒலியன், மாற்றொலி என காணப்படுவதைப் போன்றே உருபனியலில் உருபு, உருபன், மாற்றுருபன் என்னும் பாகுபாடுகள் காணப்படுகின்றன.

    மரபிலக்கணங்கள் இறந்த காலத்தை உணர்துவதற்கு நான்கு இடைநிலைகளை தொகுத்துக் கூறுகின்றன.
    தடற வொற் றின்னே ஐம்பால் மூவிடத்து
    இறந்த காலந் தருந் தொழில் இடைநிலை  
                (நன். 142)
த், ட், ற், இன் என்பன இறந்த காலத்தை உணர்த்தும் என்பது விளக்க மொழியியல் ஆகும்.
-த்-    செய்தான்    செய் + த் + ஆன்
    கொய்தான்    கொய் + த் + ஆன்
-ட்-         உண்டான்    உண் + ட் + ஆன்
    கண்டான்    காண் + ட் + ஆன்
-ற்-        சென்றான்     செல் + ற் + ஆன்
    தின்றான்    தின் + ற் + ஆன்
-இன்-    பேசினான்    பேசு + இன்+ ஆன்
    வருந்தினான்  வருந்து +இன்+ஆன்
     இந்நான்கு இறந்தகால இடைநிலைகளில் அடிப்படையானவை  த், இன் என்ற இரண்டே. த் என்னும் இறந்த கால இடைநிலையின் வேறுபட்ட வடிவங்களே -ட்-, -ற்- என்பன. மரபிலக்கணங்கள் இறந்த கால வினைமுற்றுகளில் இருப்பவற்றைப் பகுத்து விளக்குகின்றார்கள். மொழியியலாளர்கள் இவற்றிற்கு மேலும் சில விளக்கங்களைக் கூறுகின்றார்கள்.

    -த்-, -ட்-, -ற்- என்பன ஒர் அமைப்பிலும் -இன்- என்பது வேறோர் அமைப்பிலும் இடம் பெற்றாலும் அவை உணர்த்தும் பொருள் ஒன்றே, அஃது இறந்த காலம் என்பதாகும். இங்கு அடிப்படை வடிவமான (தீணீsமீ யீஷீக்ஷீனீ) -த்- குறிபிட்ட வினை அடிச்சொற்களோடு இணையும் பொழுது சூழலுக்கு ஏற்ப வடிவ மாற்றம் பெறுகின்றன.
    த்        > ட்    / {ண்,  ள்}
    உண் +த்+ ஆன்        >  உண்டான்
    ஆள் + த்+ ஆன்       >   ஆண்டான்
      
    த்        > ற்     / { ள்,  ல்}
    தின் + த் + ஆன்       >  தின்றான்
    கொல் + த் +ஆன்     > கொன்றான்
    அடிப்படை வடிவமான -த்- அடுத்து வரக்கூடிய ஒலியன் காரணமாக வடிவமாற்றம் பெறுவதை ஒலியன்னால் கட்டுண்ட மாற்றுருபு (Phonologically conditioned allomorph)  என மொழியியலார் குறிப்பிடுவர்.

    -இன்- என்னும் உருபும் இறந்த காலத்தைக் காட்டக் கூடிய ஒர் இடைநிலையே. இது பெரும்பாலும் குற்றியலுகர ஈற்று வினையடியோடு வருவதால் இதை உருபனால் கட்டுண்ட மாற்றுருபு (Morphologically conditioned allomorph) எனக் குறிப்பிடுவர். மரபிலக்கணத்தில் விளக்க நிலையில் குறிப்பிடப்பட்டுள்ள த், ட், ற், இன் என்னும் இறந்த கால இடைநிலைகளை மொழியியல் அடிப்படையில் அவற்றின் வடிவ மாற்றத்திற்கானக் காரணங்களை விளக்கிக் கூறலாம்.

    தொல்காப்பியத்தில் உருபு, உருபன், மாற்றுருபு என்பனவற்றிற்கான விளக்கங்களும், கலைச் சொல் பயன்பாடும் காணப்பட வில்லையெனினும் அவை பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
   
    தொல்காப்பியத்தில் சொல்லதிகாரம் சொல்லியலை மட்டுமல்லாது தொடரியல் பற்றிய பல கருத்துக்களையும் விளக்குவதாகவே அமைந்துள்ளது.
   
    கிளவியாக்கத்தில் உள்ள 61 நூற்பாக்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டவை தொடரியல் விளக்கங்களை அளிக்கின்றது என்பது அகத்தியலிங்கனார் (1977 : 29) கருத்து.
   
    கிளவியாக்கம் என்ற தொடர் பல கிளவிகளால் அதாவது சொற்களால் ஆக்கப்படும் தொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பேசுவது எனப் பொருள் தரும். கிளவியது ஆக்கம் என விரிந்து சொல்லினது தொடர்ச்சி எனப் பொருள் உணர்த்தும்.

    எழுவாய்- பயனிலையை ஏற்கும் போது பயனிலை என்னென்னெ விகுதிகளை ஏற்கும் என்பனவற்றைத் தொல்காப்பியர் ,
    “ னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்”         (488)
    “ ளஃகான் ஒற்றே மகடூஉ   அறிசொல்”       (489)
    “அ ஆ வ என வரூஉம் இறுதி
     அப்பால் மூன்றே பலவறி சொல்லே”         (492)
போன்ற நூற்பாக்களால் விளக்குகின்றார். இதனை தொல்காப்பியர் ‘இயைபு’ என்று கூறாமல் ‘விகுதி’ என்றே சுட்டியிருக்கிறார். எழுவாய்- பயனிலைக்குமிடையே காணப்படும் தொடர்பினை ‘இயைபு’ என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.

முடிவுரை:
    ஒரு துறை பற்றி துல்லியமாக அறிந்து கொள்ள இன்னொரு துறை பற்றிய அறிவும் தேவைப்படுகின்றது. சார்ந்து ஆய்வு செய்யும் போது பல செய்திகளை மிக நுட்பமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முடிகின்றது. பல விளக்கங்களைப் பெற முடிகின்றது. அந்த வகையிலே மொழி ஆய்விற்கும் இரு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று மரபு இலக்கணம் மற்றொன்று அறிவியல் பூர்வமாக மொழியை ஆராயும் மொழியியல். ஒரு மொழியின் அமைப்பினை மட்டுமே விளக்குவது மரபிலக்கணம். ஒட்டுமொத்த மொழிகளின் அமைப்பை விளக்குவது மொழியியல். மொழியியல் நோக்கோடு மரபிலக்கணங்களையும் உரைகளையும் நோக்கும் போது பல அரிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றாது. பல விளக்கங்களைப் பெற முடிகின்றது. இலக்கணம்  முழு பழம். மொழியியல் தோல் உரித்துக் கொடுக்கின்றது. இலக்கணத்தால் உணர்த்த முடியாத சில கருத்துக்களை முழுமையாக விளக்க மொழியியல் துணை நிற்கின்றது.


துணைநூற்பட்டியல்:
1.   ச. அகத்தியலிங்கம்,1977      
மொழியியல் - வாழ்வும் வரலாறும்
க. புஷ்பவல்லி, அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலை நகர்
2.   ச. சுபாஷ் சந்திரபோஸ், 2000      
சொல்லியல் ஆய்வுகள்
மெய்யப்பன் தமிழாய்வகம், சென்னை
3.  வீ. ரேணுகா தேவி, 2010      
சாஸ்திரியாரின் சொல்லதிகார அணுகுமுறையும்
உருபனியல் கோட்பாடும்
செந்தமிழ், (தொகுதி :52, பகுதி : 2, & தொகுதி : 53, பகுதி : 3) பக். 7-12.
4.  கோதண்டராமன் பொன், 1973      
இலக்கண உலகில் புதிய பார்வை
 
முனைவர். வீ. ரேணுகாதேவி
தகைசால் பேராசிரியர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைகழகம்
மதுரை-21.
<prof.renuga@gmail.com>